கடலில் நடந்தது வல்லிக்கண்ணன்

கடலில் நடந்தது வல்லிக்கண்ணன்

இந்தக் கதைகள்

ரஷ்ய இலக்கியத்தில் – உலக இலக்கியத்திலும் கூடத் தான் மகத்தானதொரு ஸ்தானம் பெற்றுள்ள மாக்ஸிம் கார்க்கியைப் பற்றித் தமிழ் அன்பர்கள் அறிவார்கள்.

கார்க்கியின் கதைகள் கட்டுரைகள் பல தனித்தனியாகவும் புத்தக உருவிலும் தமிழில் வந்துள்ளன; வருகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

கார்க்கியின் மேதையை உணர்த்தும் சிருஷ்டிகள் பலவற்றிலும் சிறந்தவை, தனித்தன்மை வாய்ந்தவை கருத்தும் கலைநயமும் நிறைந்தவை, அவர் எழுதியுள்ள ‘டேல்ஸ் ஆவ் இட்டலி’யில் காணக் கிடக் கின்றன.

சிருஷ்டியிலே மனிதன் உயர்ந்தவன்; மனித வாழ்விலே உழைப்பு உயர்ந்தது; தாய்மை புனிதமானது; மனித நலன்கள் போற்றுதலுக்குரியவை; வாழப் பிறந்தவர்கள் மனிதர்கள்; மனித குலத்திற்கு நல்லது எண்ணி, சக மனிதர்கள் வாழ ஒத்துழைத்து அன்பு காட்டுவதன் மூலம் எல்லோர் வாழ்விலும் இனிமையும் வெற்றியும் நிலவச் செய்யலாம்; மனிதன் மகிழ்வுடன் வாழ மக்களிடத்திலும் உண்மை உழைப்பிலும் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம் இத்தகைய எண்ணங்களை வலியுறுத்தும் அழகிய சிறு கதைகள் இவை.

கார்க்கி ஒரு கதையிலே குறிப்பிட்டிருக்கிறார்; ‘மக்களுக்கு நன்மை செய்வதைப் பார்க்கினும் மகத்தான் இன்பம் வேறெதுவுமில்லை. என்னை நம்புங்கள்; அதை விட இனியதும் அழகானதும் வேறு எதுவுமே கிடையாது, செப்புக் காசுகள், வெள்ளிக் காசுகளை விட மிக முக்கியமானது உழைப்பு. அதற்காக நீங்கள் பெறக் கூடிய ஊதியத்தை விட அதிக மதிப்பு வாய்ந்தது உழைப்பு. பணம் மறையும்; உழைப்பின் பலன் நிலைத்து நிற்கும்.’

இவ்விதம் மனித மாண்புகளை அழகுபடுத்திக் காட்டும் – வாழ்வின் வளர்ச்சிக்கு ஒளி சிந்தும் – சில கதைகளை இங்கு தமிழாக்கி இருக்கிறேன்.

இதனால் உலகரீதிக் கதைகளையோ, ‘பஞ்ச தந்திரக் கதை’ வாரிசுகளையோ தான் இப்புத்தகத்தில் எதிர்பார்க்க முடியும் என்று எண்ண வேண்டியதில்லை.

இப் புத்தகத்தில் உள்ளவை கார்க்கியின் சிறந்த சிறுகதைகளில் சில. அழகும் உணர்வும் இனிமை யும் உயிர்ப்பும் கலைநயமும் காம்பீர்யமும் நிறைந்த எழுத்துக்கள் இவை உண்மையான இலக்கியத்திற் குச் சரியான எடுத்துக்காட்டுமாகும்.

‘பெப்பி’ கதையைப் படித்ததுமே இதை நீங்கள் உணர முடியும், புத்தகம் பூராவையும் படித்த உடன் என் கூற்றை நீங்கள் ஆமோதிப்பீர்கள். இதில் எனக்குச் சந்தேகமே கிடையாது.

வல்லிக்கண்ணன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !