ஆண் சிங்கம் வல்லிக்கண்ணன்

ஆண் சிங்கம்
வல்லிக்கண்ணன்

நான் எழுத்தாளன் ஆகி இருபத்தைந்து வருஷங்கள் முடியப் போகின்றன. நடப்பது ‘வெள்ளி விழா வருஷம்’. இதன் நிறைவை எப்படிக் கொண்டாடுவது என்று நான் சுவையான பல கனவுகள் கண்டது உண்டு. ‘எனது கதைத் தொகுதி ஒன்றை உயர்ந்த பதிப்பாக வெளியிடுவது’ என்பது அவற்றில் இடம் பெற்றதில்லை. ஆனால், நண்பர் செல்லப்பா எனது கதைகளே ‘எழுத்து பிரசுரம்’ ஆக வெளியிட்டு என்னுடைய வெள்ளி விழா அனுபவத்துக்குச் சிறப்பு தருகிறார் மிகவும் மகிழ்ச்சிகரமான இந்த ஏற்பாட்டுக்காக நான் ஆரம்பத்திலேயே அவருக்கு என் நன்றியை அறிவித்தாக வேண்டியது அவசியம்.

‘ஆண் சிங்கம்’ எனது நான்காவது கதைத் தொகுதி. முதல் தொகுதி ‘கல்யாணி’ முதலிய கதைகள் 1945-ல் பிரசுரமாயிற்று. அடுத்து, 1946-ல் ‘நாட்டியக்காரி’ வெளிவந்தது. 1954-ல் ‘வல்லிக்கண்ணன் கதைகள்’ என்ற பெயரில் ஒரு தொகுப்பு பிரசுரிக்கப்பட்டது. இவை எல்லாமே, புத்தகம் வெளியிடுவதைத் தொழிலாகக் கொள்ளாத வெவ்வேறு நண்பர்களால் தான் பிரசுரிக்கப் பட்டன. இப்போதும் நண்பர் செல்லப்பா என்னிடம் கொண்ட அன்பு காரணமாக எனது கதைகளே ஒரு தொகுதியாக வெளியிட முன் வந்திருக்கிறார். ‘எழுத்து பிரசுரம்’ எனக்கு அளிக்கிற கெளரவம் ஆகவே இதை நான் கருதுகிறேன்.

எழுத்து, எண்ணம், சொற்கள் ஆகியவற்றை வைத்து விளையாடியதின் விளவுகள் என் கதைகள், இப்படித்தான் எழுதவேண்டும், இன்ன விஷயங்களைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று நான் வரம்பு வகுத்துக் கொள்ளவில்லை. பல ரகமான கதைகள்-பல நூறு கதைகள்-எழுதியிருக்கிறேன். அவற்றில் பதிமூன்று தான் இத்தொகுதியில் அடக்கம். எனது கதைகளின் தன்மைகளை எடைபோட்டு முத்திரை குத்தி, முடிவு கட்ட இந்த ஒரு தொகுதி போதாதாது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்கிற சாப்பாட்டுராமத்தனத்தை எழுத்து முயற்சிகள் விஷயத்தில் கையாள்கிறவர்கள் சரியான முறையை அனுஷ்டிப்பவர்கள் ஆகார்.

இத் தொகுப்பில் உள்ள கதைகள் ஹனுமான், சரஸ்வதி, புதுமை, ஆனந்தவிகடன், கல்கி, எழுத்தாளன் சிறப்பு மலர் ஆகியவற்றில் வெளியானவை. அப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு என் நன்றி உரியது.

வல்லிக்கண்ணன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *