கண்ணகி கதை 
அ. குமாரசாமிப் புலவர்

கண்ணகி கதை
அ. குமாரசாமிப் புலவர்

சோழ மண்டலத்திலே காவிரிப்பூம்பட்டினம் என்னும் நகரத்திலே மாநாய்கன் என்னும் பெயருடைய செட்டியொருவன் இருந்தான். அச் செட்டியின் மகளாகிய கண்ணகியென்பவள் பொற்பினால் இலக்குமியென்றும், கற்பினால் அருந்ததி என்றும் கண்டோ ரெல்லாங் கொண்டாடிக் கை குவித்து வணங்கத்தக்க மிக்க மேன்மையும் நற்குண நற்செய்கைகளும் பெற்றவளாய்ச் சிறப்புற்று வளர்ந்து பன்னிரண்டாம் வயசென்னும் பருவத்தை யடைந்தாள். இவளுக்குத் தேவந்தி என்னும் பிரா மணப் பெண்மணி பாங்கியாக விளங்கினாள்.

அக்காலத்திலே அக்காவிரிப்பூம் பட்டினத்திலே பெருஞ் செல்வனும் பெருங் கொடையாளனுமாயிருந்த மாசாத்துவான் என்னுஞ் செட்டிக்கு மகனாய் வந்த கோவலன் என்பவனும் அழகு, கல்வி, அறிவு, பொறை, ஆண்மை , கீர்த்தி முதலியவைகளிற் சிறந்து வளர்ந்து பதினாறாம் வயசென்னும் பருவத்தை யடைந்தான்.

இப்படி வயசடைந்து யாவரும் மதிக்கும்படி கண்ணகிக்கு நாயகனாதற்குத் தக்கவன் இக் கோவலனே யென்று தந்தையும் பிறரும் நிச்சயித்துப் பின்னொரு மங்கல நாளிலே இவர்கள் இருவருக்கும் விவாகஞ் செய்துவைத்தார்கள்.

கண்ணகியுங் கோவலன் மேலே அன்புடையவளாய்த் துறந்தார், வறியோர், சுற்றத்தார், விருந்தினர் முதலியவர்களை யெல்லாம் பேணிப் பெரிது முபசரித்து மனையற நெறியைச் சிறிதும் வழுவாது நடத்தி வந்தாள். கோவலனுங் கண்ணகி மேலே அளவில்லாத அன்புடையவனாய் அளவளாவி,

மாசறு பொன்னே, வலம்புரி முத்தே,
காசறு விரையே, கரும்பே, தேனே,
அரும்பெறற் பாவாய், ஆருயிர் மருந்தே,
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே,
மலையிடைப் பிறவா மணியே யென்கோ ?
அலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ?
யாழிடைப் பிறவா விசையே யென்கோ?
தாழிருங் கூந்தற் றையால் நின்னை

என்பன முதலியவாக அவள் நலங்களைப் பாராட்டி மகிழ்ந்து வாழ்ந்தான். இப்படியே இவ் விருவருங் கலந்து வாழுநாள்களிலே சில வருடங்கள் சென்றன.

அந்நாட்களிலே ஆடல் பாடல்களிலும் அரங்கேறி, அழகிலுஞ் சிறந்தவளாய், அவ்வூரிலிருந்த நாடகக் கணிகையாகிய மாதவி யென்பவளிடத்திலே கோவலன் காதல்கொண்டு தன் பொருள்களையெல்லாம் நாளுக்குநாள் அவளுக்கே கொடுத்துச் சில நாள் அவளோடிருந்து, பின்னர் அவளையும் விடுத்து, வீட்டில் வந்து தன் பிரிவினால் வாட்டமுற்றிருந்த கண்ணகியைக் கண்டு, “பெண்ணே, பொய்யெல்லாம் மெய்யாகப் பொருந்தும் பரத்தைக்குப் பொருளெல்லாங் கொடுத்து மிக வறியனாய்விட்டேன்” என்று சொல்லி இரங்கினான்.

அதுகேட்ட கண்ணகி இவன் மாதவிக்குப் பின்னுங் கொடுக்க விரும்பி இப்படி இரங்குகின்றானென்றெண்ணி, “இன்னும் இரண்டு சிலம்புகள் என்பாலுள்ளன ; அவைகளையுந் தருகிறேன் ; ஏற்றுக்கொள்ளுக” என்றாள். கோவலன் கண்ணகியை நோக்கி, “பெண்ணே , இச் சிலம்புகளை மதுரையிற் கொண்டுபோய் அங்கே விற்று வாங்கும் பொருளை முதலாகக்கொண்டு வாணிகஞ்செய்து, பரத்தையோடு கூடிப் பாழாக்கிய பொருள்களை யெல்லாம் இப்போது தேடிக்கொள்ள எண்ணுகிறேன். என்னோடு கூட நீயும் வா” என்றான். கண்ணகியும் வருகின்றேன்’ என உடன் பட்டாள்.

பின்னர் இருவரும் அன்றிரவிற்றானே விடியற் சாமத்தி லெழும்பி, வெளியிற் புறப்பட்டு, மேற்குத் திசையை நோக்கிக் காவேரியின் வடகரையாக வழிக்கொண்டு போய், ஒரு காததூரஞ் சென்று, சோலையொன் றெதிர்ப்படக் கண்டு, சற்றே இளைப்பாறக் கருதி, அச் சோலையினுள்ளே போய்க் கவுந்தி யென்னுந் தவப்பெண்ணினைக் கண்டு வணங்கினார்கள். கவுந்தியுங் கண்ணகி கோவலன் என்னும் அவ் விருவரையும் உற்றுநோக்கி, “நீவிரோ குடிப்பிறப்பும் ஒழுக்கமும் பிறவுங் குறைவற்ற சிறப்புடையர் போலக் காணப்படுகின் றீர்! இடுக்கணுடையவர் போல இங்கே வந்த காரணம் யாதோ ?” என்று வினாவினாள். கோவலன் வேறொன்றுங் கூறானாய்த் “திரவியம் தேடு தற்கெண்ணித் தெற்கேயுள்ள மதுரைக்குச் செல்கின்றேன்” என்பது மாத்திரஞ் சொன்னான். அதுகேட்ட கவுந்தி அறிஞரிடத்திலே அற நூற் கேள்விகளைக் கேட்டறி தற்கும், அறிவனைத் தொழுதற்குமாக மதுரைக்குப் போக எண்ணியிருக்கிறேன். ஆதலால் யானும் வருகின்றேன்” என்றெழுந்தாள்.

பின்னர்க் கண்ணகி, கோவலன், கவுந்தி என்னும் மூவருஞ் சேர்ந்து வழிக்கொண்டு, சீரங்க மடைந்து, அங்கு வந்த சில சாரணரைப் பணிந்து போந்து, ஓடமேறிச் சென்று காவிரியாற்றின் தென் கரையிலே போய், அங்கேயுள்ள ஒரு சோலையிலே தங்கினார்கள். அப்பொழுது குட்டினியாயுள்ள ஒரு தூர்த்தமங்கையும் ஒரு தூர்த்தநாயகனும் அங்கே வந்து, கோவலனையுங் கண்ணகியையும் பார்த்துக் காமனும் இரதியும் போலக் கலப்புடையவராய் இங்கே யாவரோ இருவர் இருக்கின்றனர் ? இவ் விருவரும் யாவர்?” என்று கவுந்தியை வினாவினார்கள், அவர்களுக்குக் கவுந்தி “இவர்கள் என் மக்கள் ; காமனும் இரதியு மல்லர்; மானுடசரீர முடையவர் ; வழிநடையால் வருந்தினர் ; நீவிர் அவரை அணுகாமல் அப்பாற் செல்லுதிர்” என் றாள். அவர்கள் உடனே கவுந்தியை நோக்கி, “நூற்கேள்வி யுடையீர் ; ஒரு வயிற்றிலே பிறந்த இருவர் நாயகனும் நாயகியுமாகக் கூடிவாழுங் கொள்கை எங்கேயாவதுண்டோ ?” என்று நகையாடினார்கள்.

அத் தீமொழியைக் கேட்டுச் செவிகளைப் பொத்திக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க, நந் தலைவியாரை நிந்திப்பாரோ இவரென்று கவுந்தி கோபித்து “நீவிர் இருவரும் நரிகளாகக் கடவீர்” என்று சபித்தாள். அக்கணமே அவ் விருவருங் குறுநரிகளாய்க் குரல்காட்டினார்கள், அக் குரல் கேட்ட கோவலனுங் கண்ணகியும் அஞ்சி நடுநடுங்கி அவர்கள் மேலே இரங்கி, அறிவில்லார் பிறரை இகழுதல் அறிவின்மை என்றும், அவ் விகழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ளுதல் அறிஞராயுள்ளார்க் கெல்லாம் அழகாகும் என்றுஞ் சொல்லி, அவ் விருவருக்குஞ் சாபநிவர்த்தியையுங் கவுந்தி வாயாற் சொல்லுவித்தார்கள்.

பின்னர் மூவரும் எழுந்து புறப்பட்டுப் போய் உறையூரை யடைந்து, அங்கே ஒருநாளிருந்து, மறு நாளெழுந்து சிறிது தூரம் போய் ஒரு சோலையிலே இளைப்பாறி யிருக்கும்போது, பாண்டியன் கீர்த்திகளையெல்லாம் பாடிக்கொண்டு பிராமணன் ஒருவன் அங்கே வந்தான். அவர்கள் அவனோடு கலந்துபேசி மதுரைக்குப் போகும் வழிகளை அவன் சொல்லக் கேட்டுக்கொண்டு சோலையை விடுத்து அப்பாற் போகும்போது பலரைக் கண்டு பேசியும், பல சிறப்புகளைப் பார்த்தும், வழிகளை விசாரித்தும், காடுகளையும் ஊர்களையும் கடந்துபோய், வைகை யாற்றையுங் கடந்து, மதுரை நகர்க்கருகிலே முனிவர்கள் வசிக்கும் ஒரு மடத்திலே தங்கினார்கள்.

அற்றைநாள் கழிந்து மற்றைநாட் காலையிலே கோவலன் எழுந்து கவுந்தியைக் கைகுவித்து வணங்கித் தவமுடையீர், ஒழுக்கந் தவறினர்போல என்னிருக்கையையுங் கைவிட்டு முன்னொருகாலும் அறியாத தேசங்களிலே வந்து அரிய வழிகளிலே நடந்து சிறுமையுற்றேன். இந் நகரிற் போய் இடம் பார்த்து வரும்வரையும் இவளைக் காத்துக் கொள்ளவேண்டும்” என்றான், அவன் துயரினைக் கவுந்தி அறிந்து மனமிரங்கி அவனை நோக்கி, “நீ ஏன் வருந்துகின்றாய் ? முன் செய்த தீவினை காரணமாக வருந் துயர்க்குப் பெரியோரும் வருந்துவாரா? நாடும் நகரும் விட்டு மனை வியோடு காடும் பிறவும் புகுந்து திரிந்து வருந்தினவன் நீ ஒருவன் மாத்திரம்தானோ? அயோத்திநகர்க் கரசனாயிருந்த ஸ்ரீராமச்சந்திரன் தந்தைசொன் மிக்க மந்திரமில்லை” என்றவாறே காதலியாகிய சீதையோடுங் காட்டிற் போய் அளவிறந்த துயர்களெல்லாம் அனுபவிக்க வில்லையா ? நிடததேச ராசனாயிருந்த நளனும் மனை வியோடுங் காட்டிற்போய்க் கணக்கில்லாத துயர்களை அநுபவிக்க வில்லையா ?” என் றிவ்வாறு சொல்லித் தேற்றக், கோவலன் ஒருவாறு தேறிக் கண்ணகியைக் கவுந்தியிடம் வைத்து விட்டு மதுரை நகருள்ளே போய் இடம் பார்த்துக் கொண்டு வந்தான்.

வந்தபின் அந் நகர்ச் சிறப்புகளைக் கவுந்திக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், அங்கே வந்த மாடலன் என்பவனாற் பல செய்திகளையு மறிந்தான். மாடலனுங் கவுந்தியும் “துறவிகளாகிய முனிவர்களிருக்கும் இவ்விடத்திலே இல்லாச்சிரமிகளாகிய நீங்கள் இருத்தலாகாது” என்று விலக்கினார்கள். அப்போது மாதரி என்னும் பேருடைய ஓரிடைச்சி அங்கே வந்து சேர்ந்தாள். அவள் குணங்களையுஞ் செயல்களையும் ஆராய்ந்து நன்கறிந்த கவுந்தி, அவளுக்குக் கோவலன் கண்ணகி என்னும் இருவர் பெருமைகளையும் எடுத்துக் கூறி, அடைக்கலம் புகுவோரைப் பாதுகாப்போர் அடையும் பயனையும் அறிவித்துக், கண்ணகியைச் சிலநாள் வைத்துக் காக்கும்படி அவளிடத்தே அடைக்கலமாகக் கொடுத்தாள்.

மாதரி யென்பவளும் ஆதரவோடுங் கோவலன் கண்ணகி என்னும் இருவரையுந் தானிருக்கும் இடைச்சேரிக்குக் கூட்டிக் கொண்டு போய், ஒரு புது வீட்டிலே வைத்து வேண்டிய உபசாரங்களுஞ் செய்து, தன் மகளாகிய ஐயை யென்பவளையும் அக் கண்ணகிக்குத் தொண்டு செய்யும்படி வைத்தாள். இடைக்குலப் பெண்களும் மாதரி சொற்படியே கண்ணகிக்கு உண்டி யமைத்தற்கு வேண்டுவன வெல்லாங் கொடுத்தார்கள். அவைகளைப் பெற்றுக் கண்ணகி செவ்வே பாகஞ் செய்து உண்பிக்கக் கோவலன் உண்டு மகிழ்ந்தபின் கண்ணகியை அருகிலே அழைத்துப் பெண்ணே, எம்முடைய பெற்றார் இவ்வரிய வழியிலே நீ வந்ததற் கிரங்கி யாது துயருற்றாரோ? நாம் இங்கே வந்தது மாயமோ? தீவினைப் பயனோ? நல்லொழுக்கந் தவறிய எனக்கு நற்கதியு முண்டோ ? உனக்குஞ் சிறுமை செய்தேனே!” என்று பலவாறு பரிந்து கூறி, “இனி நின் காற்சிலம்புகளுள்ளே ஒன்றைக் கொண்டு போய் விற்று வருகிறேன், யான் வரும் வரையுந் தனிமையால் வருந்தா தொழிக” என்று சொல்லி ஆறுதல் செய்து சிலம்பினை வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

புறப்பட்டுப் பல தெருக்களைக் கடந்து அவன் மதுரைமாநகர்க் கடைத் தெருவிற் போனான். போகும்போது காலதூதன்போலத் தட்டான் ஒருவன் வந்து தலைப்பட்டான். அந்தத் தட்டானை அவன் அணுகி, “அரசன் தேவிக்கே அணிகலமாகத் தக்க சிலம்பொன்று யான் வைத்திருக்கின்றேன். இச் சிலம்பினை விலை மதித்தற்கு நின்னா லியலுமா?” என்று வினாவிச் சிலம்பினை யுங் காட்டினான். தட்டான் சிலம்பிலுள்ள சித்திரச் செய்கைகளை யெல்லாம் உற்றுநோக்கி இராசாவின் பெருந்தேவிக்குத் தான் இப் பெருவிலைச் சிலம்பு பொருத்தமாகும். இதனை யான் போய் அரசனுக்குத் தெரிவித்து வருகிறேன். அவ்வளவும் நீர் இவ்விடத்தே இருத்திர்” என்று சொல்லிச் சென்றான்.

செல்லும்போது, தான் முன்னரே அரசனை யறியாமல் அபகரித்து வைத்திருக்குஞ் சிலம்பு தன்னிடமுள தென்று வெளிப்படுமுன் இச் சிலம்பையும் இவனையுங் காட்டிக் கொடுத்தால், அக் களவு தன் மேல் வாராது நீங்கி இவனையே சாருமென்றெண்ணி, விரைந்து போய்க், கோப்பெருந்தேவி கோயிலை நோக்கிக் காப்புடை வாயிலின் கடைபோய் நின்ற பாண்டியனைக் கண்டு பணிந்து, “அரசனே, கன்னக் கோலில்லை! கவைக்கோலில்லை! சுவரிடிக்க வில்லை! சிலம்பு கவர்ந்த வகையை என்னென்று சொல்வேன்! மந்திரத்தாலே வாயிற் காவலரை மயக்கிக் கோயிற் புகுந்து சிலம்பினை ஒருவன் அபகரித்தான்! அக் கள்வனும் இங்கே தான் என் குடிலிலே இருக்கின்றான்” என்று விண்ணப்பஞ் செய்தான்,

அரசனோ இவ்வாறு விண்ணப்பஞ் செய்த தட்டான் தன்ன ரண்மனையிலுள்ள ஒரு சிலம்பினை முன்னரே கவர்ந்து மறைத்து வைத்திருக்கும் ஒரு கள்வன் என்பதையும் ஆராய்ந் தறியவில்லை! அச் சிலம்பு வெளியாகி ஒருபோது தன் மேல் அரசதண்டம் வருமென்றஞ்சி அது வருமுன்னர் அதனை நீக்குதற்கு உபாயமாக இச்சிலம்பினையும் இவனையுங் கொண்டு வந்து பொருத்துகிறான் என்பதனையும் ஆராய்ந்தறியவில்லை! ஒன்றும் ஆராயாமல், உடனே “என் மனைவி சிலம்பு அக்கள்வனிடமிருக்குமாயின், இக்கணமே அவனைக் கொன்று விட்டுச் சிலம்பினை இங்கே கொண்டு வருக” என்று காவலாளர்க்குக் கட்டளை யிட்டான். தட்டானுந் தன் கருதது வாய்த்ததென்று மகிழ்ந்து காவலாளரை அழைத்துக் கொண்டு போய்க் கோவலனைக் காட்டினான். காவலாளர் கோவலனை உற்றுப் பார்த்தபின், “இவன் கள்ளன் போலக் காணப்படவில்லை. கொல்லப்படத் தக்கவனு மல்லன்” என்றார்கள் அவர்களைத் தட்டான் இகழ்ந்து நகைத்துக் கள்வர்கள் துணையாகக் கொள்ளும் மந்திரம், தெய்வம், மருந்து முதலிய கருவிகளின் வலிமைகளையும் பிறவற்றையும் எடுத்துக் கூறி இவன் கள்ளன் தான் என்று சாதித்தான். அப்போது அவருள்ளே கொலைக்கஞ்சாதவன் ஒருவன் வாளினை வீசிக் கோவலன் தலையை வெட்டினான்.

இவ்வாறு கோவலன் கொலைக்களத்திலே கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட ஒரு பெண் ஓடிவந்து கண்ணகிக்கு முன்னே நின்று சொல்லவு மியலா தவளாய் மெல்ல மெல்ல இடைப் பெண்களுக்குச் சொல்லிப், பின்னர் “அரசன் மனைவியுடைய சிலம்பினை அபகரித்தானென்று காவலாளர்கள் கோவலனைக் கொன்றார்களே!” என்றாள். என்றவுடனே கண்ணகியுந் துயரிலே மிகுந்தாள்!

தன் வசமிழந்தாள்! பின்னர் எழுந்தாள்! விழுந்தாள்! “ஐயோ! என் கணவா! என் கணவா !” என்றாள், “எங்கே போயினை ! எங்கே போயினை!” என்றாள். “ஆ !” என்றாள், அழுதாள் ; புலம்பினாள் ; அடுத்த பெண்களை நோக்கினாள். ”எல்லீருங் கேளுங்கள் ! எல்லீருங் கேளுங்கள்!” என்றாள். அப்பாற் சூரியனை நோக்கினாள். சூரிய தேவனே, நீ அறியாத காரியமு முண்டோ ? என் கணவன் கள்வனோ ? கள்வனோ?” என்றாள். அப்போது பின் கணவன் கள்ள னல்லன்; கள்ளனென்ற இவ்வூர் எரிக்குணவாகும்” என ஒரு குரல் சூரியன் வாயாலே தோன்றிற்று.

கண்ணகி அதனையும் கேட்டுக்கொண்டு மிக்க கோபதாப முடையவளாய் மற்றச் சிலம்பினையும் எடுத்தாள். எடுத்துக்கொண்டு உடனே புறப்பட்டு மதுரைமா நகர வீதியிற் போய்க் கற்புடை மகளிர்களை யெல்லாம் பார்த்து, பத்தினிப் பெண்டிர்காள், என்காற் சிலம்புக ளிரண்டுள்ளே ஒன்றினை இங்கே விற்கக் கொண்டு வந்த என் கணவன் கள்ளன் தானோ? பாருங்கள்! இது மற்றச் சிலம்பு! அரசன் மனைவியுடைய சிலம்பு திருடினானென்று கொண்டுபோய் என் கணவனைக் கொன்றார்களே! இஃதென்ன ஆச்சரியம்! அந்தோ! படாததுயரெல்லாம் பட்டேனே! முன்போல என கணவனை இன்னுங் காண்பேனே?” என்று பலவாறு சொல்லி வருந்தி அழுதாள். இப்படியே அழுகின்ற கண்ணகியைக் கண்ட மதுரைமா நகரத்தார் எல்லாரும் அவள் படுந்துயரை ஆற்றும் வழி ஒன்றுங் காணாது தாமுமிரங்கி “இப் பெண்ணுக்கு மரணபரியந்தம் நீங்காத பெருங் கவலையை உண்டாக்கி இவ்வரசன் அநியாயஞ் செய்துவிட்டான்! சிலம்பொன்று கையிலே ஏந்திக்கொண்டு வந்து இங்கே நிற்பது ஒரு பெருந் தெய்வம்! இதனால் யாது சம்பவிக்குமோ அறியேம்” என்று சொல்லிப் பின் கொலைக்களத்திலே கிடக்குங் கோவலனைக் கண்ணகிக்குக் காட்டினார்கள். கண்ணகி கோவலனைக் கண்டு புலம்பி அழுது, கையாலே தழுவக், கோவலன் உயிர்பெற்றெழுந்து பெண்ணே நின் முகம் வாடியதே” என்று கண்ணீர் துடைத்துக் கண்ணகியை இரு என்று சொல்லி விண்ணுலகம் போயினான். கோவலன் போதலைக்கண்ட கண்ணகி “இங்கே தோன்றி நின்றது யாதோ? மாயமோ? மற்றொரு தெய்வமோ? ஒன் றுந் தெரியவில்லை! எங்கும் போய் என் கணவனை த தேடுவேன். என கோபந் தணிந்த பின் கூடுவேன். அரசனைக் கண்டே என் கணவனைக் கொன்ற காரணம் யாதென்று வினாவி என் கோபம் தணிவேன்” என்று சொல்லி, அாசனைக் கண்டு கேட்கப் போனாள். இவையெல்லாம் இவ்வாறு நிகழப், பாண்டியன் மனைவி பற்பல தீக் கனவுகளைக் கண்டு பயந்து பாண்டியனுக்கு அவைகளைச் சொல்லிக்கொண் டிருந்தாள். அச் சமயத்திலே கண்ணகி போய் அரசனைக் கண்டாள். அரசன் கண்ணகியை நோக்கி பெண்ணே நீ யார்?’ என்றான். கண்ணகி அரசனை நோக்கி, “அரசனே, என் காற் சிலம் பொன்று விற்கும்படி இங்கே கொண்டுவந்து நின்பா லடைந்து கொலைக்களத் தீர்ப்புற்ற கோவலனுக்கு நான் மனைவி; என் பெயர் கண்ணகி; என்னூர் காவிரிப்பூம் பட்டினம்” என்று சொன்னாள். அரசன் கண்ணகியை நோக்கி, ‘கள்ளனா யுள்ளோனைக் கொல்லுவித்தல் காவலரா யுள்ளோர்க்குக் கடனாயுள்ள நீதியன்றோ?” என்றான். கண்ணகி, கோவலன் கள்ளனல்லனென்று சாதிக்கக் கருதித் தன் காற்சிலம்பின் உள்ளிடு மணி மாணிக்கமே என்ன, அரசன் தன் மனைவி சிலம்பின் உள்ளிடு மணி முத்தே என்ன, இருவரும் மாறா வழக்காடிப், பின்னர்க் கண்ணகி சிலம்பினை யுடைத்தபோது உள்ளிட்ட மணி மாணிக்கமாய்க் தெறித்தது. இது கண்ட அரசன் அஞ்சி நடுநடுங்கி கட்டான் சொற் கேட்டுத் தவறு செய்த நானோ அரசன்? நானோ அரசன் ? நானே கள்வன்! என்னாயுள் கெடுக” என்று சொல்லிச் சிங்காசனத்திற்றானே விழுந் திறந்தான்.

பின்னர்க் கண்ணகி பாண்டியன் மனைவி பணிந்து வேண்டவுங் கோபந் தணியாளாய் “இங்குள்ளார் யாவருங் கேளுங்கள், தேவருங் கேளுங்கள், முனிவருங் கேளுங்கள் ; என்பால் யாதொரு குற்றமும் இல்லை. என் கணவனைக் கள்ளனென்று கொல்லுவித்த இவ்வரசன் நகரியை இப்போ தழிக்கின்றேன் பாருங்கள்” என்று சொல்லி வலக்கையாலே தன் இடமுலையைப் பிடுங்கி நகரியைச் சுற்றி வந்து வீதியிலே எறிந்தாள். எறிந்தபோதே அக்கினி தேவன் தோன்றிக் கண்ணகி கட்டளைப்படி பார்ப்பார், அறவோர், பசு, மூத்தோர், பத்தினிப் பெண்டிர், குழந்தைகள் என்னும் இவர்களை எரியாது விட்டுத் தீக்குள்ளாரையும் அக்நகரியையும் எரித்தான். எரியும்போது மதுராபதி என்னும் அதி தெய்வங் கண்ணகி முன் சென்று, கோவலன் இறத்தற்குங், காவலன் இறத்தற்குங், நகரியை எரித்தற்குங், காரணமாய் முன்னே நிகழ்ந்த செய்திகளையெல்லாம் விரித்துச் சொல்லிக் கண்ணகியின் கோபத்துடன் அக்கினியின் தாபத்தையுந் தணிப்பித்துச் சென்றது, சென்றபின் கண்ணகி நான் கணவனைக் கண்டபின் அன்றி இருக்கவுமாட்டேன், நிற்கவுமாட்டேன்” என்று சொல்லித் துர்க்கை கோயில் வாயிலிலே தன் வளையலை உடைத்தெறிந்துவிட்டு, மதுராபுரியை நீங்கி, வைகையாற்றங்கரை வழியாக மேற்கே போய், மலைநாட்டுள்ள சுப்பிரமணிய ஸ்தலமாகிய திருச்செங்குன்றிலே நின்ற ஒரு வேங்கைமர நிழலை யடைந்து பதினான்குநாள் சென்ற பின் அங்கே கோவலன் வரக்கண்டு தேவர்கள் வாழ்த்தொலி கூற அவனோடு விமானத்திலேறித் தேவுலகம் போயினாள்.

போதற்கு முன்னரே கண்ணகியைக் கண்டு நீவிர் யாவிரென்று கேட்டறிந்தவராய அம் மலையினின்ற வேட்டுவர்கள் இவ்வாறு கண்ணகி செல்வதை எதிரே கண்டு பெரிதும் அதிசயமடைந்து “நங்குலத்துக் கெல்லாம் இவள் போலத் தெய்வமில்லை; இவளைத் தெய்வமாகக் கொள்ளுங்கள் என்று பலவுஞ் சொல்லிக் கைகோத்து விளையாடலாகிய குரவைக் கூத்து விளையாடி, அந்நாட்டரசனாகிய செங்குட்டுவனுக்கு இச் செய்தியை அதிசயத்தோடும் அறிவித்தார்கள். செங்குட்டுவன் கண்ணகி செய்தியை வேட்டுவர் வாயாற் கேட்டுப் பேரதிசயமடைந் திருந்தான், அப்போது மதுரைச் சங்கப் புலவருள் ஒருவராகிய சீத்தலைச் சாத்தனார் சென்று, செங்குட்டுவனைக் கண்டு பணிந்து, கோவலன் சிலம்பு விற்க வந்தது முதலாக நடந்த சம்பவங்களை யெல்லாம் நன்றாக அவனறியும்படி விரித்துச் சொன்னார். இவைகளை யெல்லாஞ் செங்குட்டுவன் கேட்டுச் சாத்தனரை உபசரித்தான். அப்போது செங்குட்டுவன் மனைவி “நம்முடைய நாடு தேடி வந்த பத்தினிக் கடவுளாகிய கண்ணகியை நாம் தாபித்து வழிபடவேண்டும்” என்றாள் அதற்குச் செங்குட்டுவன் சம்மதித்துக் கண்ணகியைப் பிரதிட்டை செய்யக் கருதிக் கோயில் கட்டுவித்து, இமய மலையினின்றும் வருவித்த சிலையாலமைத்த விக்கிரகத்திலே பத்தினிக் கடவுளாகிய கண்ணகியைப் பிரதிட்டை செய்து, நித்திய பூசை முதலியன நியமமாக நடக்கும்படி கட்டளை யிட்டான்.

கோவலன் கொலைக்களத் திறந்த செய்தியை மாடலன் போய்ச் சொல்லக்கேட்ட மாசாத்துவானாகிய கோவலன் பிதாவும் மன மயங்கி உலகம் பொய்யென்று துறந்தான்; அவன் மனைவியும் இறந்தாள். மற்றைக் கண்ணகியின் தோழியாகிய தேவந்தியும், செவிலித்தாயும், அடித்தோழியும் மிகப் பெருந் துயரிலமிழ்ந்து, கண்ணகியைக் காண்போமென்று கருதிக் காவிரிப்பூம் பட்டினத்தினின்றும் புறப்பட்டு வழிக்கொண்டு மதுரைமா நகரிற் போய், மதுரை எரிந்தது கேட்டு மாதரி வீட்டிற் போய்க் கண்ணகியாகிய அடைக்கலப் பொருளை இழந்ததனால் மாதரி யிறந்ததையுங் கேட்டு, மாதரிமகளாகிய ஐயை என் பவளை அழைத்துக்கொண்டு வைகையாற்றங்கரை வழியாக மலை நாட்டிற் போய்க் கண்ணகி கோயிலையுஞ் செங்குட்டுவனையுங் கண்டார்கள். செங்குட்டுவனுக்குத் தமக்குங் கண்ணகிக்குமுள்ள தொடர்புகளைச் சொல்லிப் புலம்பினார்கள். அப்போது கண்ணகி தெய்வ வடிவத்தோடும் வெளிப்பட்டுச் செங்குட்டுவனுக்குக் காட்சி கொடுத்து வாழ்த்தினாள். செங்குட்வன் பத்தினிக் கடவுளாகிய கண்ணகிக்கு நித்திய பூசையுந் திருவிழாவுஞ் செய்யும்படி தேவந்திக்குச் சொல்லிக் கண்ணகியை மும்முறை வலம்வந்து வணங்கி நின்றான்.

“அப்போது சிறையினின்றும் நீங்கிய ஆரியதேச வரசரும் பிறரும் அங்கே வந்து கண்ணகியை வணங்கித் தேவி, இந்நாட்டிலே இச் செங்குட்டுவன்போல எம் நாட்டிலே யாங்கள் செய்யும் வேள்வியிலும் இப்படி எழுந்தருளிவந்து கிருபை செய்தல் வேண்டும்” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது “அவ்வாறு வரந்தந்தேன்” என்றொரு சத்தந் தோன்றிற்று. பின்னர் மதுரை மா நகர்க் கரசனாய் வந்த இளஞ்செழியன் என்பவனும் ஆயிரந் தட்டாரைக் கொன்று பலியிட்டுக் கண்ணகிக்கு விழாவுஞ் சாந்தியுஞ் செய்து, கோவலன் இறந்தநாள் தொடங்கிப் பெய்யாதுவறந்த மழையும் வரப்பெற்று, வறுமைநோய் முதலிய சிறுமைகளுந் தன்னாட்டி னின்று நீங்கப்பெற்றான். அவ்வாறே இளஞ்செழியன் செய்து பெற்றதனைக் கேள்வியுற்ற கொங்க தேசத் திளங்கோ வாகிய கோசரும் கண்ணகிக்கு விழாவுஞ் சாந்தியுஞ்செய்து தந்நாட்டிலே எந்நாளும் மழை பெய்யப் பெற்றார். அவ்வாறே இலங்கைத் தேசவரசனாகிய கயவாகு என்பவனுங் கண்ணகிக்குத் தன்னாட்டிலே கோயில் கட்டுவித்துத் திருவிழாச் செய்து மழைமிகுந்து தன்னாடு சிறக்கப் பெற்றான். அவ்வாறே சோழன் பெருங்கிள்ளி என்பவனுந் தன்னுடைய இராசதானியாகிய உறையூரிலே “இவள் ஒரு பத்தினிக் கடவுள்; யாம் விரும்பியவாறே எமக்கு வரந் தருவாள் ” என்று கருதிக் கண்ணகிக்குக் கோவிலும் கட்டுவித்து நித்திய விழாவணியும் நடத்தினான்.

முற்றிற்று.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *