

சித்த மார்க்கம்
திரு. வி. கலியாணசுந்தரனார்
உயிர்கள் தாங்கும் பிறவிகள் பல. அவைகளுள் விழுமியது
மனிதப்பிறவி. “மனிதப்பிறவி விழுமியது” என்று சொல்லாத
சான்றோரில்லை.
மனிதப்பிறவியில் உள்ளொளி அதாவது ஆத்மசக்தி
பெருகுதற்குரிய வாய்ப்பு உண்டு. மற்றப் பிறவிகளில் அவ்
வாய்ப்பு இல்லை. அதனால் மனிதப்பிறவி விழுப்பமுடைய
தாகிறது.
மக்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தக்கவழியில்
பயன்படுத்தல் வேண்டும். உள்ளொளிகாலும் முறையில் மக்கள்
வாழ்வை நடத்துவது சிறப்பு. இல்லையேல், மக்கள் வாழ்வு
விலங்குவாழ்வினும் கொடியதாகும்.
பண்டை மக்கள் வாழ்வு உள்ளொளியைக் குறிக்கொண்டு
நின்றது. உள்ளொளி அவர்கள் வாழ்வில் அரும்பி மலர்ந்து
வந்தது. உலக வாழ்வும் கடவுள் வழிபாடும் அவ்வொளிக்கென்றே
அந்நாளில் கொள்ளப்பட்டன. உள்ளொளிக்கென்று அந்
நாளில் கொள்ளப்பட்டன. உள்ளொளிக்கென்று பண்டை
மக்கள் கடைப்பிடித்தொழுகிய மார்க்கம் சித்த மார்க்கம்
என்பது ஆராய்ச்சியால் விளங்குகிறது.
சித்தமார்க்கமே சமயம் என்பது சமய நோக்கு நாளடைவில்
சிதையலாயிற்று. சிதைவால் விளைந்துள்ள கேடுகள் பல. பல
தெய்வ வழிபாடு, பல சமய உணர்வு, சமயவெறி, சமயப்போர்,
அடக்குமுறை முதலிய கொடுமைகட்கு உலகம் இரையாகி
வருதல் கண்கூடு.
இந்நாளில் மன்பதைக்குச் சித்தமார்க்கப் பிரசாரம் தேவை.
மக்கள், சித்தமார்க்கத்தில் நின்று, உலக வாழ்வையும் கடவுள்
வழிபாட்டையும் உள்ளொளி எழுச்சிக்கெனப் பயன்படுத்தப்
புகுவார்களாயின், அவர்களிடை ஒரு தெய்வ வழிபாடு,
சமரசநோக்கு, சகோதரநேயம் முதலிய நல்லியல்புகள் நிலவுதல்
ஒருதலை.
சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் வாயிலாகச் சித்த
மார்க்கத்தைப் பற்றிப் பேசும் பேறு எனக்குக் கிடைத்தது. சைவ
சித்தாந்த மகாசமாஜத்தின் 29-வது ஆண்டுவிழா (23, 24, 25-12-
7934) திருவதிகையில் நடைபெற்றது. தலைமைப்பதவி எனக்கு
வழங்கப்பட்டது. தலைமையுரையில் சித்தமார்க்கத்தைப் பற்றிப்
பிரஸ்தாபஞ் செய்யலானேன்.
அத்தலைமை உரையைக் கொண்டது இந்நூல். நூலின்
உள்ளுறைக்கேற்ப நூலுக்குச் “சித்தமார்க்கம்” என்னும் தலைப்புச்
சூட்டப்பட்டது.
நூற்கண், சித்தமார்க்க வரலாறு, அதன் தொன்மை,
அதனால் விளையும் பயன், அதன் முற்கால தற்கால நிலை, ஓரு
தெய்வ வழிபாடு, சமரச நோக்கு, சகோதரநேயம் முதலியன
ஓதப்பட்டுள்ளன. சமய உலகில் இது காலத்துக்குரிய நூலாக
நின்று பயன் தருமென்று நம்புகிறேன் பிழை பொறுக்க.
திருவாரூர் வி.கலியாணசுந்தரன்



