
சித்த மார்க்கம்
திரு. வி. கலியாணசுந்தரனார்
சைவ சித்தாந்தம்
பெயரும் பொருளும்
முதலாவது “சைவ சித்தாந்தம்” என்பதன் மீது கருத்துச்
செலுத்துவோம். சைவ சித்தாந்தம், “சைவம்” என்றும், “சித்தாந்தம்”
என்றும் வழங்கப்படுகிறது. “சைவமும்” “சித்தாந்தமும்” ஒன்றே.
உலகில் எத்துணையோ சித்தாந்தங்கள் இருக்கின்றன.
அவைகளை இன்ன இன்ன சித்தாந்தமென்று அடை மொழி
யால் அணி செய்தல் வேண்டும். இல்லையேல், அதன் பெயரும்
தத்துவமும் விளங்குதல் அரிதாகும். அடை அணியின்றிச் சைவம்
மட்டும் “சித்தாந்தம்” என்று அழைக்கப் படுவது உலகறிந்த
தொன்று. “சித்தாந்திகள்” “சித்தாந்த சாத்திரம்” என்னும்
ஆட்சிகள், முறையே சைவர்களையும் சைவ சாத்திரத்தையும்
உணர்த்தல் ஈண்டுச் சிந்திக்கற்பாலது. இச் சித்தாந்தம்,
உலகிலுள்ள எல்லாச் சிந்தாந்தங்களிலும் கலந்தும், கடந்து
தனித்தும் நிலவுதலால், இஃது அடை அணியின்றிச் “சித்தாந்தம்”
என்று வழங்கப்படுகிறதென்க.
“சித்தாந்தம்” என்பதற்குப் பல பொருள்கள் சொல்லப்படு
கின்றன. அப்பொருட்களுள் ஓன்று ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கத்
தக்கது. அஃது எது? அது மிகவுந் தொன்மையது; ஆனால்
பெரிதும் வழக்காறற்றது. சரித்திரக் கண்ணர்க்கு அதன்
தொன்மையும், வழக்காற்றற்மையும் இனிது புலனாகும்.
வழக்காரறற்ற ஒன்றைக் கூறுதலால் சில இடர்கள் உண்டு என்பது
எனக்குத் தெரியும். தெரிந்தே அதனிடைத் தலைப்படுகிறேன்.
“சித்தாந்தம்” என்பதற்குச் “சித்தர் கண்ட முடிவு” என்பது
பொருள். சித்தமார்க்கம் சித்தாந்தம். சித்தர், சிவசம்பந்த
முடையவ ராதலால், அவர் கொண்ட மார்க்க மாகிய
சித்தாந்தம், சைவ சித்தாந்தம் என்றும் வழங்கலாயிற்று. “சித்தர்
சிவலோகம் இங்கே தெரிசித்தோர்” “சித்தர் சிவத்தைக்
கண்டவர்” என்றார் திருமூலர்.
சைவம், சிவசம்பந்தம், சிவம் என்பது இறைவனுக்குரிய பல
பெயர்களுள் ஒன்று. அப்பெயர், தொன்மை வாய்ந்தது.
அதனாலும் அது சிறந்தது. ஒருகாலத்தில் அப்பெயரை உலகமே
ஏற்றுப் போற்றியது.
சிவ வழிபாடு ஒருபோது உலகம் முழுவதும் பரவியிருந்தது.
இதற்குச் சான்றுகள் பல உண்டு. அவைகளை இம்முன்னுரை
யில் விரித்துக் கூறுவது அநாவசியம். பால்டிக் கடல், அயர்லாந்து,
நீலநதிக்கரை, துருக்கிஸ்தானம் முதலிய இடங்களில் இன்னும்
சிற்சிலபோழ்து சிவலிங்கங்கள் கண்டு எடுக்கப்படுகின்றன.
இஃது எதைக் குறிக்கிறது? சிவ வழிபாட்டின் பரப்பையன்றோ
குறிக்கிறது?
சிவம் என்பது பல பொருள் ஒரு சொல். அதற்குச் சித்தர்
காலத்தில் கொள்ளப்பெற்ற பொருள் “சுத்தம்” என்பது. இதனை
ஜைன சகஸ்திரநாம வியாக்கியானத்திற் காணலாம். சிவம்
அசைவற்றது; போக்குவர வில்லாதது; எங்கும் நீக்கமற நிறைந்
திருப்பது; எல்லாவற்றிலுங் கலந்தும் கடந்தும் நிற்பது; எல்லா
வற்றிலுங் கலந்தாலும் தனது இயல்பினின்றும் திரியாதது;
சித்தத்தைத் தன்பால் வைத்தோர் உள்ளத்தில் ஒளிர்வது.
மார்க்க வரலாறு
சித்த மார்க்கம் முதன் முதல் கால்கொண்ட இடம் நாவலந்
தீவு. “நாவலந் தீவு’ என்னும் பெயர் நமது நாட்டுக்குரிய பெயர்
களுள் ஓன்று. அப்பெயர் ஒருபோது உலகுக்கும் வழங்கிவந்தது.
“பரத கண்டம்’ என்னும் பெயர், “நாவலந் தீவு” என்னும்
பெயருக்குப் பிற்பட்டது. நமது நாடு “பரத கண்டம்’ என்னும்
பெயர் பெறுதற்கு முன்னரே, அதன்கண் சித்தமார்க்கம் நிலவிய
தெனில், அம்மார்க்கத்தின் தொன்மையை என்னென்று
கூறுவது?
சித்தமார்க்கம், நாவலந் தீவினின்றும் நானா பக்கங்
களிலும் பரவிப் பரவி, ஆங்காங்குள்ள மொழியில் ஓவ்வொரு
விதப் பெயர் பெறலாயிற்று. நானடைவில் ஒவ்வொரு பெயர்
ஓவ்வொரு சமயமாகக் கொள்ளப்பட்டது. இப்பொழுது பல
வேறு பெயர்களால் பல வேறு இடங்களில் நிலவி வரும்
சமயங்கள் யாவும், சித்தமார்க்கம் என்னும் ஓன்றினின்றும்
பிறந்தனவே யாகும். “சமயங்களெல்லாம் சித்த மார்க்கத்தி
னின்றும் பிறந்தன” என்னும் உணர்வே பல இடங்களில் மாண்டு
விட்டது. இந்நாளில் “எல்லாச் சமயங்களும் சித்த மார்க்கம்”
என்று சொல்வதும் எள்ளப்படும் போலும்!
சித்தர்
சித்தர் யாவர்? சித்தர் சித்தி பெற்றவர்; சித்தையுடையவர்.
சித்தாவது, ஆத்ம சக்தியினின்றும் எழுவது. சித்தத்தைச்
சிவன்பால் வைத்துச் சிந்தனையில் மூழ்க மூழ்கச் சித்தவிகாரம்
ஓடுங்கும். அஃது ஒடுங்க ஒடுங்க ஆத்ம சக்தி எழும். “ஊனினைச்
சுருக்கி உள்ளொளி பெருக்கி” என்றார் வாதவூரடிகள்.
ஆத்ம சக்தியில் பலதிறப் படிகளுண்டு. முழு ஆத்ம சக்தி
எல்லாவிதச் சித்துக்களையும் கூட்டும். அச்சக்தியால் ஆகாத
தொன்றில்லை. அதைப் பெற்றவர் எல்லாஞ் செய்யவல்லவ
ராவர். இயற்கை, அவர்கட்கு ஏவல் செய்யும். அவர் செயற்கருஞ்
செயல் செய்வர். அவர்தந் திறங்களைத் தாயுமானார் “வித்தகச்
சித்தர்கணம்’ என்னும் பகுதியில் விளக்கியுள்ளார்.
சித்தர், சிவத்தை நினைந்து நினைந்து, சிவமானவ
ராதலால், அவர், நரை திரை மூப்பு சாக்காடு முதலியவற்றைப்
பெறுவதில்லை. அவர் என்றும் ஓரு பெற்றியராய்ச், சிவந்த
மேனியராய், என்றும் இளைஞராய், அழகராய் வாழ்பவர்.
“சுழற்றிக் கொடக்கவே சுத்தி கழியுங் – கழற்றி மலத்தைக்
கமலத்தைப் பூரித் – துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க் –
கழற்றி தவிர்ந்துடல் அஞ்சன மாமே”, “மூன்று மடக்குடைப்
பாம்பிரண் டெட்டுள – வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றவிம் முட்டை யிரண்டையுங் கட்டியிட் – டூன்றி யிருக்க
உடம்பழி யாதே”, “உந்திச் சுழியின் உடனே பிராணனைச் – சிந்தித்
தெழுப்பிச் சிவமந்திரத்தினால் – முந்தி முகட்டின் நிறுத்தி
அபானனைச் – சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே”, “நில
நிறனுடை நேரிழை யாளொடஞ் – சாலவும் புல்லிச் சதமென்
றிருப்பார்க்கு – ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் – பாலனு
மாவர் பராநந்தி ஆணையே” எனவரூ௨ம் திருமூலர் திருவாக்கு
களை நோக்குக. இத்தன்மையோர் சித்தரெனப்படுவர்.
தென்னாடும் சித்த மார்க்கமும்
தென்னாட்டில் சித்த மார்க்கம் நன்கு வளர்ந்து வந்தது.
இடையில் அதற்குச் சிதைவு நேர்ந்தது. அப்போது, சமய குரவர்
நால்வர் தோன்றி, அம்மார்க்கத்தை ஓம்பினர். அந்நால்வரும்
சித்தரே. அவர் அறிவுறுத்தியதும் சித்தமார்க்கமே. தங்களை
ஆட்கொண்ட மூர்த்தியைச் “சித்தனே திருவாலவாய் மேவிய –
அத்தனே” என்றும், “சித்த னைத்திரு வண்ணா மலையனை”
என்றும், “சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே” என்றும், “சித்த
னைச்சிவ லோகனை’ என்றும் அப்பெருமக்கள் போற்றி
இருத்தல் காண்க.
சிவன் எல்லாம் வல்லவனாதலால், அவன் சித்தன்
என்னப்பட்டான். அவன் தொடர்புகொண்டு வாழ்வோருஞ்
சித்தரெனப்பட்டனர். “சித்தர் வந்து பணியுஞ் செல்வச் சிரபுர
மேயவனே”, “சித்தராய் வந்து தன்னைத் திருவடி. வணங்கு
வார்கள். “சித்திசெய் பவர்கட் கெல்லாஞ் சேர்விடம், “ சித்தர்
சித்தம் வைத்தபுகழ் சிறுவன் ஊரன்” என வரூஉந் தமிழ்மறை
மொழிகளை உன்னுக.
நால்வர் வரலாற்றை நோக்குழி, அவர்தம் உடல் இவ்
வுலகில் இறந்துபடவில்லை என்பது நன்கு விளங்கும்.
ஞானசம்பந்தர் திருநல்லூர்ப் பெருமணத்திலே சிவசோதியிற்
கலந்தார். நாவரசர் சிவானந்த ஞானவடி வில் ஒன்றினார். அவர்,
“சிங்கத்தால் விழுங்கப் பெற்றார்” என்னும் பொய்க்கதை பின்னே
புனையப்பட்டது. நம்பியாரூரர் யானைமீதிவர்ந்து நொடித்தான்
மலை நோக்கிச் சென்றார். மாணிக்கவாசகனார் மன்றில் புகுந்து
ஒளியானார். இவர்கள் அருளிய தமிழ் மறையில் சாகா
நிலைக்குரிய சான்றுகள் மலிந்து கிடக்கின்றன. ஈண்டுத்
தாலிபுலாக நியாயம் பற்றி ஒன்றை மட்டும் எடுத்துக்
காட்டுகிறேன். “சொல்லுவ தறியேன் வாழி முறையோ – தரியேன்
நாயேன் தானெனைச் செய்தது – தெரியேன் ஆஆ செத்தேன்
அடியேற் – கருளிய தறியேன் பருகியும் ஆரேன் – விழுங்கியும்
ஒல்ல கில்லேன் – செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து –
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப – வாக்கிறந்து அமுதம்
மயிர்க்கால் தோறும் – தேக்கிடச் செய்தனன் கொடியேன்
ஊன்தழை – குரம்பை தோறும் நாயுட லகத்தே – குரம்பை
கொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய – அற்புத மான அமுத
தாரைகள் – எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ –
துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக் – கள்ளூ
றாக்கை அமைத்தனன் ஒள்ளிய – கன்னற் கனிதேர் களிறெனக்
கடைமுறை – என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற் –
கருணை வான்தேன் கலக்க – அருளொடு பராவமு
தாக்கினன்” – இது திருவாசகத்தில் – திருவண்டப் பகுதியில் –
இருப்பது. இதன்கண் மாணிக்கவாசகனார் தாம்பெற்ற இறவா
நிலையை இனிது விளக்கியிருத்தல் காண்க.
இப் பெருநிலையை அடைய முன்னைநாளில் முயன்றவர்
பலர்; பின்னை நாளில் முயன்றவர் சிலர். இவருள் இராமலிங்க
சுவாமிகளைச் சிறப்பாகக் குறிக்கலாம். இராமலிங்க
சுவாமிகளுக்குத் திருவாசகத்தில் பொதுவாகத் தணியாக் காதல்
உண்டு. சிறப்பாக அவர்தம் உள்ளத்தைக் கவர்ந்தது திருவண்டப்
பகுதி. திருவண்டப் பகுதியில் உள்ள “என்னையும் இருப்ப
தாக்கினன்”’ என்னும் பெருமொழி, சுவாமிகள் உள்ளத்தைக்
கோயில் கொண்டது. சுவாமிகள் அதில் படிந்து படிந்து
அதுவாக முயன்றார். தம்மை இருப்பதாக்கிக் கொள்ள வேண்டு
மென்ற வேட்கை அவருள் முருகி எழுந்தது. அவ்வேட்கையைத்
தணித்துக்கொள்ள இராமலிங்க சுவாமிகள் மாணிக்கவாசக
னாரை அடைந்து அழுத அழுகை அளவிடற்பாலதன்று.
“அழுதால் உன்னைப் பெறலாமே” என்னும் வாசகத்தின் நுட்பம்
இராமலிங்க சுவாமிகளுக்குத் தெரியும். இராமலிங்க சுவாமிகள்,
மாணிக்கவாசகனாரை நோக்கி, “உருவண்டப் பெருமறையென்
றுலகமெலாம் புகழ்கின்ற – திருவண்டப் பகுதி யெனுந்
திருவகவல் வாய்மலர்ந்த – குருவென்றெப் பெருந்தவருங்
கூறுகின்ற கோவேநீ – இருவென்ற தனியகவல் எண்ணமெனக்
கியம்புதியே’ என்று வேண்டுதல் செய்தார். இவ்வேண்டுதலின்
நுட்பத்தை உன்ன உன்ன உண்மை விளங்கும். திருவண்டப்
பகுதியில் உள்ளது இறவா நிலை. அந்நிலை பெற்றோர் சித்தராவர்.
“சித்தன்? என்னுஞ் சொல்லுக்கு உலகில் பல பெயர்கள்
வழங்கப்படுகின்றன. அவைகளுள் சில வருமாறு :- நந்தி, நாதன்,
அருகன், புத்தன், குமரன், தீர்த்தங்கரன், தீர்க்கதரிசி, கிறிஸ்து,
நபி, குரு, ஆச்சாரியன் முதலியன. இப்பெயர் வேற்றுமையைக்
கருதாது, பொருள் ஒற்றுமையில் கருத்துச் செலுத்துவது சிறப்பு.
சித்தர் திருக்கூட்டம்
சித்தத்தைச் சிவன்பால் வைத்துச் சித்தி பெற்றவர் பலர்
உளர். அவருள் மிகமிகப் பழமையானவர் சிலர். அச்சிலரே
உலகுக்கு வழிகாட்டிகளாக நிற்கிறார். அவர் வழி உலகம்
இயங்குகிறது. அவர் சேர்ந்த ஓரு தனித் திருக்கூட்டமும்
இருக்கிறது. அத்திருக்கூட்டம், இமயத்தின் முடியிலுள்ள
கைலாயத்தில் வீற்றிருக்கிறது. அக்கைலாயம் இராப்பகல்
அற்றது. அது வேறு. இமயத்தடியிலுள்ள கைலாயம் வேறு.
முன்னையது நுண்ணியது. பின்னையது பருமையது. இஃது
அதை நினைவூட்டுவது. சமயம் நேரும்போதெல்லாம் அத்
திருக்கூட்டத்தினின்றும் சிலர் போந்து, சித்தமார்க்கமென்னுஞ்
சித்தாந்தத்தை ஓம்பிச் செல்வது வழக்கம்.
குருமார் திருக்கூட்டத்தை நம்பாத சமயத்தவர் இல்லை.
அவர்தம் வருகையைச் சொல்லாத சமய வேதமும் இல்லை.
இதனால் சமயங்களின் தாயகம் ஒன்றே என்பது நனி விளங்கு
கிறது. அத்தாயகத்தின் பெயரைப்பற்றி உலகில் வாதங்கள்
நிகழ்ந்து வருகின்றன. பொருள் ஒருமை புலனாகும்போது,
வாதங்களெல்லாம் ஞாயிறு முற்பட்ட பனிப்படலம் போல
இரிந்து ஒழியும்.
‘சித்தாந்த’ ஆட்சி
சித்த மார்க்கம், தொடக்கத்தில் “சித்தாந்தம்” என்னும்
பெயர் பெற்றிருந்தது. பின்னே அதற்கு வெவ்வேறு மொழியில்
வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டன. எனக்குத் தெரிந்தவரை
இன்னும் இரண்டு சமயங்கள் சித்தாந்தப் பெயரை நெகிழ
விடாம லிருக்கின்றன. ஒன்று சைவம்; மற்றொன்று ஜைனம்.
சைவம், “சித்தாந்தம்” என்று வழங்கப்படுவது வெள்ளிடைமலை.
ஜைனம், சித்தாந்த மென்னும் வழக்குடைய தெனில்,
இந்நாளைய சைவ உலகத்துக்கு ஓரு வித வியப்பே தோன்றும்.
ஜைன தத்துவங்களைக் கொண்ட வேதத்துக்குச் சில பெயர்கள்
சொல்லப்படுகின்றன.அவை, சதுர் அநுயோகம், பராமாகமம்,
சித்தாந்தம் முதலியன. “சித்தாந்தம்” என்னும் வேதப் பெயரைச்
சமயத்துக்கும் வழங்கலாமன்றோ? “சித்தாந்த பூசை’ என்னும்
வழக்கு இன்னும் ஜைன உலகத்திலிருத்தல் கண்கூடு. ஆகவே,
“சித்தாந்தம்” என்னும் தனி ஆட்சி ஜைனத்திலும் இருப்பது
கவனிக்கத்தக்கது.
கால மூவர்
ஒவ்வொருபோதும் சித்த மார்க்கத்தை ஓம்பச் சிலர்
போதருவர். அவ்வப்போது போந்தவர்களின் பெயர்களை
ஈண்டு விரிக்கிற் பெருகும். அணித்தே தோன்றிய சிலர் மீது
எனது எண்ணம் செல்கிறது. அவருள் குறிக்கத் தக்கவர்,
சுவீடன்பர்க், பிளவட்ஸ்கி அம்மையார், தாயுமானார் ஆவர்.
சுவீடன்பர்க், சித்தர் நிலை அடைந்து அதி அற்புதச்
செயல்களை நிகழ்த்தினார். அவைகளைக் கூறும் நூல்களும்
இருக்கின்றன. அந்நூல்களின் சாரத்தைத் திரு. கோபால்
செட்டியார் வடித்து உதவியுள்ளார். அவருக்கு எனது
நன்றியறிதல் உரியதாக.
பிளவட்ஸ்கி அம்மையார் சித்தர் கூட்டத்தின் பல
நுட்பங்களை விளக்கியுள்ளார். அவர், ஒருவரைச் சித்தர்
கூட்டத் தலைவரென்று குறிப்பிடுகிறார். அத்தலைவரை
அம்மையார் “மோனமூர்த்தி’ (சைலன்ட் வாச்சர் – Silent Watcher)
என்று சொல்கிறார். அம்மூர்த்திக்குரிய இயல்கள் சில,
அம்மையாரால் விளக்கப்பட்டிருக்கின்றன. அவ்வியல்களை
நோக்குழி மோனமூர்த்தி என்பவர் நம் தட்சணாமூர்த்தியாகக்
காணப்படுகிறார். அம்மையார் கண்ட “தியாசாபிகல் சங்கக்”
கோயில் ஒன்றில் தட்சணாமூர்த்தி உருவம் முன்னணியில்
பதிக்கப்பட்டி ருக்கிறது.
தட்சணாமூர்த்தியை ஜைனர் விருஷப தேவர் என்றும்,
பெளத்தர் ஆதி புத்தர் என்றுங் கூறப.
“மாக்கயிலை மிசைநாப்பண் மூவிலையொரு நெடு வேலின் – மேவாத
வினையவுணர், குன்றுபட நூழிலாட்டி – வென்றட்ட விறல்
வெகுளியை, மூவெயிலின் முரண் முருக்கி – மூவர் சரணடைய
நின்றனை, கருப்புநாண் வில்லிபட – நெருப்புமிழ் நெடு
நோக்கினை, கோள்வலிய கொடுங் கூற்றைத் – தாள் வலியின்
விழவுதைத்தனை, பரிவில்கே வலக்கிழத்தி – பிரிவில்லா ஒரு
பாகனை, ஆன்றமெய் அறம் வளர்க்கும் – மூன்று கண்
முனித்தலைவனை, ஆல நெடுநிழல் அமர்ந்தனை – கால
மூன்றுமுடன் அளந்தனை, தாழ்சடை முடிச் சென்னிக் – காசறு
பொன்னெயிற் கடவுளை, மன்னியபே ர௬லகனைத்தும் –
நின்னுள்ளே நீயொடுக்கினை, நின்னின்று நீவிரித்தனை –
நின்னருளின் நீகாத்தனை, எனவாங், காதிபகவனை அருகனை,
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே’ எனவரூஉந் திருக்
கலம்பகத்தில் உள்ள அருகனுக்கும், சைவ நூல்கள் கூறும்
தட்சணாமூர்த்திக்கும் ஏதாயினும் வேற்றுமை உண்டா என்று
சிவநேயர்களைக் கேட்கிறேன். காய்தல் உவத்தல் அகற்றி,
எதையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுக்கு அழகு.
தாயுமானார், குருமரபு வணக்கத்தில் முதன் முதல் “துய்ய
கரமலரால் சொல்லாமல் சொன்ன உண்மை – ஐயனைக்கல்
லால்அரசை யாம் அணைவ தெந்நாளோ” என்று தட்சணா
மூர்த்தியைப் போற்றி யிருக்கிறார்; வேறிடங்களில் “வித்தகச்
சித்தர் கணம்’ என்றும், “நவநாத சித்தர்” என்றும் அருளி
யுள்ளார். அவரே, “சைவ சமயமே சமயம்” என்றும், “சித்தாந்த
வீதிவருந் தேவே’ என்றும், “சித்தாந்த முத்திமுதலே சிரகிரி
விளங்கவரு தட்சணா மூர்த்தியே” என்றும் திருவாய் மலர்த்
திருக்கிறார். இத்திருவாக்குகளை முறை முறையே ஆராய்ந்து
பார்த்தால், தாயுமானார், சித்த மார்க்கத்தையே சைவமென்றும்
சித்தாந்த மென்றும் உலகுக்கு அறிவுறுத்தினார் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனிபோல உணரக் கிடக்கிறது.
இனித் தாயுமானாரது உபதேச மரபை நோக்குவோம்.
அவர், தங்குருவை, “மூலன் மரபில்வரு மெளன குருவே” என்று
போற்றுகிறார். மூலன் மரபு எது? அது திருமந்திரத்தில்
விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திருமந்திரம்
சித்தமார்க்கத் திறங்களைக் கொண்ட ஒரு பெருங் கருவூலம்;
தமிழ்ச் சித்த வேதம்.
சித்த வேதம்
“தமிழ்ச் சித்தவேத “மெனில், “வேறு மொழியிலும்
சித்தவேதம் உண்டோ?” என்னும் ஐயம் பிறக்கும். சித்தவேதம்
பல மொழியில் வெளிவந்திருக்கிறது. வேதம் ஒன்றே. அது
சித்தரால் வெளிவருதலால் “சித்தவேதம்” எனப்பட்டது. “சித்தர்
செழுமறைசேர் நாவராய்’ என்பது ஞானசம்பந்தர் திருமொழி.
உலகில் ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் பெரியோர்
அருளியதை “வேதம்” “வேதம்” என்று சொல்லிக்கொள்கிறார்.
வேதம் ஓன்றா? பலவா? வேதத்தின் காரணத்தை நோக்கும்
போது அதை ஓன்று என்றும், அதன் காரியத்தை நோக்கும்
போது அதைப் பல என்றும் சொல்லலாம். ஒன்றிலிருந்து பல
தோன்றுதலும், பல, ஓன்றில் அடங்குதலும் இயல்பு.
வேதத்தின் காரணம் எது2, காரியம் எது?, காரணம் ஓலி;
காரியம் எழுத்து. மொழிகளின் எழுத்துக்களெல்லாம் எங்கே
யிருந்து பிறக்கின்றன? அவை, ஒலியிலிருந்து பிறக்கின்றன என்று
எவருங் கூறுவர். ஒலி, நாதம் எனப்படும்.
நாதம் இருவகை. ஒன்று மாயா நாதம்; மற்றொன்று
அருள்நாதம். மாயாநாதம் எல்லார்க்குங் கேட்பது. அருள் நாதம்
அமல யோகிகட்கு மட்டுங் கேட்பது. வேதம் அருள் நாத
வடி வாயிருப்பது. அமல யோகிகள் அருள்நாதங் கேட்கப்
பெறுவது ஒரு நிலை.அதற்கு மேற்பட்டது அருட்சோதி. அருட்
சோதியைக் கண்டு அதில் ஈடுபட்ட பெரியோர்வழி
அருள்நாதங் காரியப்படும்.
நாதவடி வாயுள்ள வேதம், வரி வடிவாய்ப் பெரியோர்கள்
வாயிலாகப் பலமொழியில் காரியப்படுகிறது. நந்தமிழ்
மொழியிலும் வேதம் காலத்துக்கேற்ற முறையில் அவ்வப்போது
சான்றோர்கள் வழியே வெளிவந்திருக்கிறது. அவ்வாறு
வெளிவந்த அருள்நூல்களில் திருமந்திரமும் ஓன்று. திரு
மந்திரத்தின் வாயிலாகப் பல நுட்பங்களை உணர்தல் கூடும்.
திருமுலர்
திருமந்திரத்தை அருளிய திருமூலர், சித்தர் கூட்டத்தைச்
சேர்ந்தவர்; தமிழில் வேதத்தை அருளுதற்கு இராப்பகலற்ற
கைலையினின்றும் மண்ணுலகு நோக்கினவர்; சித்தமார்க்கம்
சித்தாந்தம் என்பதைத் தெளிவு செய்தவர். இவைகளை
அகச்சான்று கொண்டே நிறுவிக் காட்டலாம். அச்சான்றுகளிற்
சில வருமாறு:- “விளக்கிப் பரமாகும் மெய்ஞ் ஞானச் சோதி,
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி, துளக்கறும் ஆனந்தக்
கூத்தன்சொற் போந்து, வளப்பில் கயிலை வழியில்வந் தேனே”
“இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி, இருந்தேன்
இராப்பகல் அற்ற இடத்தே, இருந்தேன் இமையவர் ஏத்தும்
பதத்தே, இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே” – * சித்தத்தின்
உள்ளே சிறக்கின்ற நூல்களில், உத்தம மாகவே ஓதிய வேதத்தின்,
ஓத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி, அத்தன் எனக்கிங்
கருளால் அளித்ததே: – “மாலாங்க னேயிங்கு யான் வந்த
காரணம், நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு, மூலாங்க மாக
மொழிந்த திருக்கூத்தின், சீலாங்க வேதத்தைச் செப்ப
வந்தேனே” – “ பின்னைநின் றென்னே பிறவி பெறுவது,
முன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர், என்னைநன் றாக
இறைவன் படைத்தனன், தன்னைநன் நாகத் தமிழ்ச் செய்யு
மாறே” – “பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட், டி.தமுற்ற
பாச இருளைத் துரந்து, மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே,
இதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே” – “சித்தர் சிவத்தைக்
கண்டவர் ருடன், சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ
யாதவர், முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச், சத்தர் சதாசிவத்
தன்மையர் தாமே’ – * ஆகமம் ஒன்பானதிலான நாலேமழு,
மோகமி னாலேமழு முப்பேத முற்றுடன், வேகமில் வேதாந்த
சித்தாந்த மெய்மையொன், றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே”
“உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து, மடலான மாமாயை
மற்றுள்ள நீவப், படலான கேவல பாசந் துடைத்துத், திடமாத்
தனையுற்றல் சித்தாந்த மார்க்கமே” – “தானான வேதாந்தந்
தானென்னுஷஞ் சித்தாந்த, மானாத் துரியத் தணுவன் றனைக்
கண்டு, தேனார் பராபரஞ் சேர்சிவ யோகமாய், ஆனா மலமற்
றருஞ்சித்தி யாதலே”’ – “நித்தம் பரனோ டுயிருற்று நீள்மனம்,
சத்தம் முதல்ஐந்துந் தத்துவத் தால்நீங்கிச், சுத்த மசுத்தந்
தொடரா வகைநினைந், தத்தன் பரன்பால் அடைதல்சித்
தாந்தமே” – “தானவனாகுஞ் சமாதி தலைப்படில், ஆன
கலாந்தநா தாந்தயோகாந்தமும், ஏனைய போதாந்தம் சித்தாந்த
மானது, ஞானமெனஜேோய ஞாதுரு வாகுமே: – சிவமாதல்
வேதாந்த சித்தாந்த மாகும், அவமவ மாகு மவ்வவ் விரண்டுஞ்,
சிவமாஞ் சதாசிவன் செய்தொன்றா னானால், நவமான
வேதாந்த ஞானசித் தாந்தமே’ – “சித்தாந்தத் தேவன்
முத்திசித்தித்தலாற், சித்தாந்தத் தேநிற்போர் முத்திசிச்
இத்தவர், சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலால்,
சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே”. இத் திருமந்திர
மொழிகளால், இராப்பகலற்ற கைலையில் சித்தர் கூட்டம்
இருத்தல், சித்தருட் சிலர் சமயம் நேரும்போது உலகிடைப்
போதரல், அவர் வாயிலாக நாதவடிவாயுள்ள வேதம் காரியப்
படல், சித்தமார்க்கம் சிவநெறியாகிய சித்தாந்தம் என்பது
முதலிய உண்மைகளைப் பெறுகிறோம்.
காலம்
சித்தமார்க்கம் உண்டாகிய காலத்தை அறுதியிட்டுக்
கூறுதல் இயலாது. அது காலவரையில் அகப்படாமையால்
அதனை அநாதி என்றுங் கூறுப. “ஒப்பில் எழுகோடி யுகமிருந்
தேனே” எனவும், “இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி”
எனவும், “ஊனமில் ஓன்பது கோடி யுகந்தனுள் – ஞானப்பா
லாட்டி நாதனை அர்ச்சித்து – நானும் இருந்தேன் எனவும் வரூஉந்
திருமூலர் திருவாக்குகள் சித்த மார்க்கத்தின் தொன்மையை
உணர்த்துவன. சித்த மார்க்கம் மிக மிகத் தொன்மையது என்று
கூறும் அளவில் யான் நின்றுவிடுகிறேன்.
சித்தாந்தத்தின் சமரசம்
சித்தாந்தம், உலகு உயிர் கடவுள் என்னும் மூன்றற்கும்
அநாதி நித்தியங் கூறுவது. “பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் –
பதிபோல் பசுபாசம் அநாதி’ என்றார் திருமூலர். உலகு உயிர்
கடவுள் என்னும் மூன்றனுள் ஓவ்வொன்றைப் பொருளாக்
கொள்வோருமுளர்; இரண்டிரண்டைப் பொருளாகக் கொள்
வோருமுளர். மூன்றையும் பொருளாகக் கொள்வோருமுளர்.
எல்லாக் கொள்கையும் எவ்வழியிலாதல் இம்மூன்றனுள்
அடங்கும். இம்மூன்றில் அடங்காத கொள்கை இல்லையென்றே
கூறலாம். சித்தாந்தம் முப்பொருளுக்கும் உண்மை கூறுதலால்,
அதன் கலப்பில்லாத கொள்கை இருத்தற்கு இடம் ஏது?
சித்தாந்தத்தை விடுத்துத் தனியே நிற்கும் கொள்கை இல்லை
என்க.
முப்பொருளை வெவ்வேறாகக் கொள்வோரு மிருக்கிறார்;
ஓன்றாகக் கொள்வோரு மிருக்கிறார். சித்தாந்தம் இருசாரா
ரிடத்தும் மாறுபடுவதில்லை. சித்தாந்தம் பொருட்டன்மையில்
மூன்றையும் வெவ்வேறாகவும், கலப்புத் தன்மையில் மூன்றையும்
ஒன்றாகவும் கொண்டிருக்கிறது இதனால், சித்தாந்தம்
எக்கொள்கையிலும் எவ்விதத்திலாதல் தொடர்பு கொண்டு
நிலவும் தன்மையது என்பது அறியக் கிடக்கிறது.
சித்த மார்க்கம் என்னும் சித்தாந்தம் ஒன்றே முன்னை
நாளில் எங்கும் பரவியிருந்தது. பற்பல காரணங்களால் அதற்குச்
சிதைவு நேர்ந்தது. சிதைவால் பொருள் அழிவதில்லை என்பது
அறிஞர் கூற்று. சிதைவால் நேர்ந்த கூறுபாடுகள் ஆங்காங்கே
நிலவிக்கொண் டிருக்கின்றன. அவைகள் யாவும் சித்தாந்தத்தின்
உறுப்புகளே யாகும்.
இப்பெற்றிவாய்ந்த சித்தாந்தம் எவருடைமை? சித்தாந்தம்
இன்னாருடைமை என்று யாண்டாயினும் பதிவு செய்யப்
பட்டிருக்கிறதா? அதனை ஓம்பவந்த பெரியோர் அனைவரும்,
அதனை உலகுக்குரிய பொது உடைமை என்றே வலியுறுத்திச்
சென்றனர்.
சித்தாந்தம் ஒரு சாதியார்க்கோ, ஒரு மதத்தார்க்கோ, ஓரு
நாட்டார்க்கோ, ஓரு மொழியார்க்கோ, ஒரு நிறத்தார்க்கோ
மட்டும் உரியதன்று. அது மன்பதைக்கே உரிய ஒன்று. ஒன்றது
பேரூர் வழியா றதற்குள – என்றது போல இருமுச் சமயமும் –
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள் – குன்று குரைத்தெழு
நாயையொத் தார்களே” (இருமந்திரம்), “ஓதுசம யங்கள் பொரு
ளுணரு நூல்கள் ஓன்றோடொன் றொவ்வாமல் உளபலவும்
இவற்றுள் – யாதுசம யம் பொருள் நூல் யாதிங் கென்னில்
இதுவாகும் அதுவல்ல எனும்பிணக்க தின்றி – நீதியினால்
இவையெல்லாம் ஓரிடத்தே காண நிற்பதுயா தொருசமயம்
அதுசமயம் பொருள் நூல்” (சித்தாந்தசாத்திரம்), “வேறுபடுஞ்
சமயமெலாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளேநின்
விளையாட் டல்லால் – மாறுபடுங் கருத்தில்லை (தாயுமானார்)
எனவரூஉம் ஆன்றோர் மொழிகளைச் சிந்தித்துச் சித்தாந்தத்தின்
சமரசத்தை உணர்க. இதுகுறித்துச் “சைவத்தின் சமரசம்”
என்றொரு தனி நூல் எழுதியிருக்கிறேன். விரிவு அதிற் காண்க.
திருநாவுக்கரசர் திருவருள் பெற்ற இடத்தில் நாம் கூடி
யிருக்கிறோமாதலால், அவர்தம் வாழ்வினின்றும் சமரசத்துக்கு
ஒரு குறிப்பை இங்கே எடுத்துக் காட்டலாமென்று கருதுகிறேன்.
திருநாவுக்கரசர் தொடக்கத்தில் சைவ நெறியில் நின்றா
ரென்றும், பின்னே சமணசமயம் புகுந்தாரென்றும், மீட்டும்
சைவ சமயம் நோக்கினா ரென்றும் புராணம் கூறுகிறது.
திருநாவுக்கரசர் ஆண்டவன் அருள் பெற்றதும் வாய்
மலர்ந்த பதிகத்தில் “நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையா தொருபோதும் இருந்தறியேன்’ என்றும், “சலம்
பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்
தறியேன் – நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம்
என்நாவில் மறந்தறியேன்” என்றும் அருளியுள்ளார். இம்மொழி
களால் அவர் எப்பொழுதும் சிவபெருமானை மறக்கவில்லை
என்பது தெளிவாகிறது.
இதைக் காணுஞ் சிலர், “அப்பர் சமணராயிருந்தபோது
சிவபெருமானை மறந்திருந்தவ ரல்லவோ? அவர் எப்பொழுதும்
சிவபெருமானை “மறந்தறியேன்; மறந்தறியேன், என்று பாடி
யிருக்கிறாரே. இஃதென்ன! முரண்பாடாயிருக்கிறது!” என்று
வியப்புறலாம். உண்மை விளங்கினால் வியப்புக்கு இடமிராது.
அப்பர் காலத்தில் சாதிமத வேற்றுமைகள் மலிந்திருந்தன.
அவர்தந் தாய் தந்தையர் அந்நாள் வழக்கிலிருந்த சைவநெறி
பற்றி ஒழுகினார். பெற்றோர் வழியே அப்பரும் நிற்கலானார்.
அவ்வேளையில் ஆண்டவன் அருள் அப்பருக்கு விளங்கித்
தோன்றவில்லை. அவர் நூலாராய்ச்சியில் தலைப்பட்டார்.
அவ்வாராய்ச்சியின் பயனாக அவருக்குச் சமண சமயம்
மெய்ச்சமயம் என்று தோன்றிற்று. அவர் சமண சமயம்
புகுந்தார். அங்கும் அவருக்கு ஆண்டவன் அருள் விளங்கித்
தோன்றவில்லை. அவர் கலைஞானியாகவே வாழ்ந்தார்.
பின்னை அவருக்கு ஆண்டவன் அருள் கூடிற்று. கூடியதும்,
அப்பருக்குச் சமரச ஞானம் பிறந்தது. அவர், “யான்
தொடக்கத்தில் தாய் தந்தையர் வழி நின்று “சிவன்” என்ற
பெயரால் செய்த வழிபாடும், பின்னே சமணனாகி “அருகன்”
என்ற பெயரால் நிகழ்த்திய வழிபாடும் ஒரு பரம் பொருளையே
சார்ந்திருக்கின்றன. உள்ள பரம்பொருள் ஓன்றே. அவ்வுண்மை
இப்பொழுது விளங்குகிறது. ஆகவே, எப்பொழுதும்
ஆண்டவனை “யான் மறந்தறியேன்” என்று பாடியருளினார்.
இதில் என்ன வியப்பு?
தெய்வம் ஒன்றே. அதை அடையும் நெறியும் ஒன்றே.
இந்நெறிக்குப் பல பெயர்கள் உலகில் வழங்கப்படுகின்றன.
திருநாவுக்கரசர், தாம் திருவருளால் உணர்ந்த சமரசத்தைப் பல
இடங்களில் அழகிய தமிழால் பாடி உலகுக்கு உபகரித்துள்ளார்.
அவைகளில் சில வருமாறு – “வாது செய்து மயங்கு மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் – யாதோர் தேவர் எனப்படு
வார்க்கெலாம் – மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே;
விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயம் செய்தே –
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்ற தாகும்” –
ஆறொன் றியசம யங்களின் அவ்வவர்க் கப்பொருள்கள் –
வேறொன் றிலாதன’; “ஆறு சமயத் தவரவரைத் தேற்றுந்
தகையன’ – “சமயமவை ஆறினுக்குந் தலைவன் தான்காண்.” இத்
திருவாக்குகள் அப்பர் கொண்ட சமயத்தின் சமரசத்தை
விளங்கச் செய்வனவாம்.
சமயத்தின் தற்கால நிலை
“சித்தாந்தம்” என்னும் பெயர்மீது மட்டுங் கருத்துச்
செலுத்திச் சிலர் அதை வெறுக்கிறார். பெயர்மீதுமட்டுங்
கருத்துச் செலுத்தி ஓன்றை வெறுத்தல் கூடாது. பொருள் மீதும்
நாட்டஞ் செலுத்துவது அறிவுக்கு அழகு. சித்தாந்தம் எப்பெய
ரால் அழைக்கப்பட்டா லென்ன? வெவ்வேறு பெயர்களால்
அஃது இப்பொழுது அழைக்கப்படாமலா இருக்கிறது? அதற்கு
எத்துணையோ பெயர்கள் இப்பொழுது புனையப்பட்டுள்ளன.
பெயரைப் பற்றிய கவலையே வேண்டுவதில்லை. சித்தாந்தத்தின்
தத்துவம் – உண்மைப் பொருள்- சிதைய அதைக் கோடலாகாது.
தமிழ் நாட்டில் “சித்தாந்தம்” என்னும் பெயருக்கு இன்னும்
பெரும்பழுது நேரவில்லை. ஆனால் அதன் பொருளுக்கு
ஒரு வழியில் பழுது நேர்ந்து வருகிறது. தமிழ் நாட்டில்
சித்தாந்தப் பொருளுக்குச் சாதி, மதம், நாடு, மொழி, நிறம்
முதலிய தளைகள் இடப்பட்டிருக்கின்றன. அத்தளைகள்
சித்தாந்தத்தின் சொரூபத்தைக் குலைத்து வருதல் கண்கூடு.
“சைவ சித்தாந்திகள்” என்று தங்களை நினைந்து கொண்
டிருப்போர் பலர், “சைவ சித்தாந்தம் எல்லார்க்கும் உரிய ஓர்
அகண்டம்” என்னும் உணர்வின்றிக், கட்டுப்பட்ட கண்மூடி
வழக்க ஓழுக்கங்களைச் “சைவ சித்தாந்தம்” என்று கொண்டு
வாழ்வு நடத்துகிறார். இது தவறான கொள்கை. இதைக்
களைந்தெறிதல் வேண்டும். இதற்குச் சைவசித்தாந்த
நுண்ணறிவாளர் சேவை தேவை.
“சித்தாந்தம் தொன்மை வாய்ந்ததாயின் ஆக; சமரசம்
உடையதாயின் ஆக; பிறநலன் உடையதாயின் ஆக. இவை
களைப் பற்றிய ஆராய்ச்சி வேண்டுவதில்லை. சித்தாந்தம் உலக
வாழ்வுக்கு இயைந்ததா? தற்காலத்துக்கு ஏற்றதா?” என்று
கேட்பவர் இருக்கிறார். சைவ சித்தாந்தம் உலக வாழ்வுக்கு
இயைந்தது; தற்காலத்துக்கும் ஏற்றது. இங்கே சித்தாந்த
முறைபற்றிச் சில நுட்பங்களைக் குறிக்க விரும்புகிறேன். விரிவு
சித்தாந்த நூல்களிற் பார்க்க.
உலக வாழ்வும் சித்தாந்தமும்
சித்தாந்தம், உலகு உயிர் கடவுள் என்னும் மூன்றுக்கும்
அநாதி நித்தியம் கூறுவது என்பது மேலே காட்டப்பட்டது.
உலகம், சடம்; அறிவில்லாதது. உயிர், அறியாமை விரவிய
அறிவுடையது. கடவுள், அறியாமையே இல்லாதவர். முற்றறி
வுடையவர்.
அறிவுக்கு அறிகுறி இரக்கம். அறிவுடைய ஒன்று இரக்க
முடையதா யிருத்தல் இயல்பு. கடவுள் முற்றறிவுடையவ
ராதலின், அவர் முழு இரக்கமுடையவரா யிருக்கிறார்.
இரக்கத்தின் இயல் என்னை? அதன் இயல் பிறர் துன்பங்
களைந்து நலஞ் செய்ய எழுவது என்று சுருங்கச் சொல்லாம்.
துன்பத்துக்குப் பிறப்பிடம் அறியாமை. உயிர் அறியாமை
யுடையதாகலின், அது துன்பமுடையதாயிருக்கிறது. உயிர்
துன்பமுடைமையான், அதன் துன்ப நீக்கத்துக்குக் கடவுளின்
இரக்கம் பயன்படுகிறது. உயிரினிடத்துத் துன்பம் இல்லையேல்,
கடவுளின் இரக்கம் பயன்படாது கிடக்கும்.
கடவுள், உயிரின் துன்பத்தை எப்படிப் போக்குகிறார்?
அவர், உயிரை மாயாகாரியமாகிய தனுகரணபுவனபோகபங்
களில் – அதாவது உலக வாழ்வில் – செலுத்தி, அதைத் தன்னைப்
போல் ஆக்கமுயல்கிறார். மாயாகாரியமாகிய உலகம் இல்லை
யாயின், கடவுள், உயிர்த்துன்பத்தை எவ்வழியில் களைய
வல்லார்? கடவுளின் இரக்கம் உயிருக்குப் பயன்படுதற்கு உலகம்
துணையாக நிற்கிறது. ஆகவே, ஓன்றற் கொன்று இன்றியமை
யாத முறையில் மூன்றும் இருத்தல் கவனிக்கத் தக்கது. உலகுயிர்,
கடவுளுக்குத் தேவை. கடவுள், உலகுயிர்க்குத் தேவை.
உலகுயிரின்றிக் கடவுளில்லை. கடவுளின்றி உலகுயிரில்லை.
“தானலா துலகமில்லை சகமலா தடிமையில்லை,” “சகமலா
தடிமையில்லை தானலால் துணையுமில்லை”’ என்பன அப்பர்
திருவாக்குகள.
உயிர், மாயாகாரியமாகிய உலகவாழ்வால், அறியாமை
நீங்கி, அறிவு விளக்கம் – பெறுவதாகிறது. அறியாமை
அழுக்கைக் கழுவும் ஆற்றல் மாயைக்கு உண்டு. அஃது அதன்
இயல்பு. “மாயா தனுவிளக்கு” என்று சித்தாந்த சாத்திரங்
கூறுகூதை நோக்குக.
மாயை சடமாதலின், அது, தானே உயிரை அணுகாது.
உயிர் அறியாமையுடையதாதலின், அதுவும் தானே மாயை
யுடன் சேராது. இரண்டையுங் கூட்டுதற்குத் துணை
செய்வோரே கடவுள் அவர். இரண்டையுங் கூட்டுவது படைப்பு
என்பது. படைப்பு என்பது, இல்லாத ஒன்றை உண்டு பண்ணுவ
தன்று. உள்ள ஒன்றை உள்ள ஒன்றுடன் சேர்ப்பது படைப்
பென்று சொல்லப்பட்டு வருகிறது. கடவுள், அறியாமையே
இல்லாதவராய், முற்றறிவுடையவராதலின், அவர் மாயையை
யும் உயிரையும் ஒன்று சேர்க்கும் இயல்புடையவரா யிருக்கிறார்,
அவ்வியல்பு அவர்மாட்டுள்ள இரக்கமென்க.
உயிர், கடவுள் துணையால் மாயாகாரியமாகிய
தனுகரணபுவன போகங்க ளென்னும் உலகவாழ்வைப்
பெறுகிறது. கடவுள், மாயையைக்கொண்டு உயிருக்குப் பலவகை
உடலை நல்கி நல்கி, இறுதியில் பகுத்தறிவுக்கு நிலைக்களனாக
நிற்கும் மனிதப்பிறவியை நல்குகிறார். பகுத்தறிவு பெற்ற மனிதர்
என் செய்தல் வேண்டும்? அவர், முழு அறிவு விளக்கம் பெற்றுக்
கடவுளை அடைய முயலுதல் வேண்டும்.
“உலகவாழ்வைத் துறந்தால் முழு அறிவு பெற்றுக்
கடவுளை அடையலாம்” என்றொரு போலிக் கொள்கை
எப்படியோ உலகில் நுழைந்துவிட்டது. அதனால் உலகம் படும்
பாட்டை எம்மொழியால் விளக்க வல்லேன்! உயிரின்
அறிவுவிளக்கத்துக்கெனக் கடவுளால் அருளப்பெற்ற தனுகரண
புவன போகங்களையா துறப்பது? அந்தோ! நன்றி கொன்ற
பாவம் சூழ்ந்துவிடுமே!
கடவுள் எங்கும் இருக்கிறார். அவரில்லாத இடமில்லை.
அவர் உலகில் உலகாக இருக்கிறார்; உயிரில் உயிராக
இருக்கிறார். “எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும்
அவ்வுயிராய் – அங்கங் கிருப்பதுநீ அன்றோ பராபரமே”
என்றார் தாயுமானார். எங்குமுள்ள இறையைக் காண
ஒண்ணாதவாறு மறைத்திருப்பது அறியாமை. அறியாமை நீங்க
நீங்க, அவ்வவ்வளவில் இறையிருப்பும் விளங்கிக்கொண்டே
போகும். முழு அறியாமை நீக்கத்தில், இறை எங்குமுள்ள
உண்மை புலனாகும். எங்கும் இறையைக் காண உலகிடைப்
போந்த உயிர்கள், உலகைத் துறப்பது எனில், அப்பகுதியிலுள்ள
இறையை அவைகள் காணா தெொழிவதாகும். ஆகவே,
“உலகவாழ்வைத் துறத்தல்” என்னும் உணர்வுக்கே இடந் தருதல்
கூடாது. “உலகவாழ்வு, நம்பொருட்டுக் கடவுளால் அருளப்
பெற்ற கொடை” என்னும் உறுதியில் நிற்றல்வேண்டும்.
பகுத்தறிவால், “உலகவாழ்வு கடவுள்கொடை’ என்பதை
உணர்ந்து வாழ்வதே சிறப்பு. அவ்வுணர்வின்றி வாழ்வது
வாழ்வாகாது. அது விலங்கு வாழ்வாகும். விலங்கு வாழ்வு
துன்பத்தைப் போக்காது; கடவுளை அடையச் செய்யாது. அது
பிறவித் துன்பத்தைப் பெருக்கிக்கொண்டே போகும். இங்கே,
“கண்ணுதலோன் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி –
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி – விண்ணிறைந்து
மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் – எண்ணிறந்
தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் – பொல்லா வினையேன்
புகழுமா றொன்றறியேன் – புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்
மரமாகிப் – பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் – கல்லாய்
மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் – வல்லசுர ராகி
முனிவராய்த் தேவராய்ச் – செல்லா அநின்ற இத் தாவர
சங்கமத்துள் – எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
“மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்” என்று
வாதவூரடிகள் அருளியுள்ள அமுத வாக்கை நோக்குக; அதைப்
பருகுக; பருகிப் பருகி ஆண்டவன் சீரைப் பாடுக. பிறவித்
துன்பம் நீங்கும்.
“உலகவாழ்வு கடவுள் கொடை” என்னும் உணர்வுடன்
வாழ்ந்து, பிறவிப்பெருங்கடல் நீந்தி, இறைவனடி. சேர்தலாகிய
இறவாத இன்பநிலை பெற உயிர்கள் உழைத்தல் வேண்டும்.
அவ்வுழைப்பு முறைகள் பெரியோர்களால் அருளப்பட்டுள்ளன.
அவைகளிற் சிலவற்றையாதல் பின்னே விளக்குவன். உலகு –
உயிர் – கடவுள் என்னும் முப்பொருட்கும் உண்மை கூறும்
சித்தாந்தம் – “தனு கரண புவன போகங்களால் உயிர் அறிவு
விளக்கம் பெறுதல் வேண்டும்” என்று அறிவுறுத்தும் சித்தாந்தம்
உலகுக்கு இயைந்ததா அன்றா என்பதை அறிஞர்கள்
ஆராய்வார்களாக
தற்காலமும் சித்தாந்தமும்
இனிச் சித்தாந்தம் காலத்துக்கு ஏற்றதாகுமா என்பதைச்
சிந்திப்போம். மூன்று பொருட்கும் உண்மை கூறும் சித்தாந்தம்
அவ்வக்காலத்துக்குரிய முறையில் பயன்பட்டு வரும் என்பதில்
ஐயமில்லை. “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்
பொருளே – பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே”
என்று மாணிக்கவாசகனாரும், “காலமொடு தேசவர்த்த மான
மாதி கலந்துநின்ற நிலைவாழி கருணை வாழி” என்று
தாயுமானாரும் அருளியிருத்தலை ஊன்றிப் பார்க்குமாறு
அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். புதுமைக்குப்
புதுமையாகவும், காலதேசவர்த்தமானமாகவும் இருக்கும்
இறையைக் கூறுஞ் சித்தாந்தத்தை, எக்காலத்துக்கும் உரிய
ஓன்று என்று சொல்லுதல் மிகையாகாது. காலத்துக்கேற்றவாறு
பயன்படச் சித்தாந்தம் சித்தமாயிருக்கிறது. அதை அவ்வாறு
பயன்படுத்தத் தற்காலச் “சித்தாந்திகள்” சித்தமா யிருக்
கிறார்களா? காலத்துக் கேற்ற முறையில் அகண்ட சித்தாத்
தத்தைப் பயன்படுத்த முயலவேண்டுவது அறிஞர் கடமை.
தற்கால வாழ்வுக்கு வேண்டப்படுவன பல. அவைகளின்
உயிராக உள்ளன சில. அச்சில – ஒரு தெய்வ வழிபாடு, உரிமை
உணர்வு, சமரச நோக்கு, பிறர்க் குழைத்தல், சகோதர நேயம்,
இன்ப வாழ்வு முதலியன.
ஒரு தெய்வ வழிபாடு, சித்தாந்தத்துக்கு உடன்பாடு.
இஃது உலகில் நாலாபக்கங்களிலும் தோன்றிய பெரியோர்
பலராலும் அறிவுறுத்தப்பட்டது. நந்தமிழ் நாட்டுப் பெரியோர்
களும் ஒரு தெய்வ வழிபாட்டையே அறிவுறுத்தினார்கள்.
தெய்வம் ஓன்றாயிருக்கும்போது, உண்மை கண்டவர் எங்ஙனம்
பல தெய்வ வழிபாடு கூறுவர்? “உலகுக்கு ஒருவனாய் நின்றாய்
நீயே (அப்பர்) என்றும், “ஓன்றென் றிருதெய்வம்
உண்டென்றிரு: (பட்டினத்தார்) என்றும், “ஒன்றே குலமும்
ஒருவனே தேவனும்” “ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்”
(திருமூலர்) என்றும் எழுந்த திருவாக்குகள் பல. பெரியோர்
அனைவரும் ஒருமுகமாக ஓரு தெய்வ வழிபாட்டை
வலியுறுத்தியிருப்பப், பல தெய்வ வழிபாடு எப்படிக்
கால்கொண்டது? இதற்குப் பலர் பலவாறு கூறுப. அப்
பலவற்றில் தலைப்பட வேண்டுவதில்லை. இரண்டொன்றை
ஈண்டுப் பொறித்தல் சாலும்.
கடவுளுக்குப் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப்
பட்டன. அவருக்குப் பல இயல்களுஞ் சொல்லப்பட்டன. பெயர்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வம் என்றும், இயல்
ஓவ்வொன்றும் ஓவ்வொரு தெய்வம் என்றும் கல்வி யறிவுத்
தெளிவில்லாதவர்களால் கொள்ளப்பெற்றன. சமயவாதிகளும்,
மடாதிபதிகளும், புரோகிதர்களும், குறுகிய நோக்குடையவர்
களும், இவரனைய பிறரும், தங்கள் நலங் கருதி, ஏழைமக்கள்
கல்வியறிவுத் தெளிவின்றிக் கொண்ட பொய்க் கொள்கையை,
வாதப் போர்களாலும், பிறவாற்றாலும் நிலைபெறுத்தி
விட்டார்கள். இவ்வாறு, பலதெய்வ வழிபாடு உலகிடைக் கால்
கொண்டது.
கடவுள் நாமரூப மில்லாதவர். அவரை எம்மொழிப்
பெயரால் அழைத்தாலென்ன? “ஒரு நாமம் ஓருருவம் ஒன்று
மிலாற்கு ஆயிரம் – திருநாமம் பாடிநாம் தெள்ளேணங்
கொட்டாமோ: என்று மாணிக்கவாசகனார் அருளியுள்ளார்.
ஆயிரம் திருநாமத்துக்கும் ஆயிரம் தெய்வம் கொள்ளவேண்டு
மென்பதா அப்பெரியார் கருத்து? ஆண்டவன் இயல்களும்
பலவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வோர் இயலையும்
ஒவ்வொரு தெய்வமாகவா கொள்வது?
ஆண்டவன் இயல்களுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது
ஓன்று. இவ்வியலை விஷ்ணு என்று விளம்புகிறோம். விஷ்ணு
என்னுஞ் சொல் வியாபகம் என்னும் பொருளுடையது.
ஆண்டவன் என்றும் இளையனாய் அழகான யிருத்தல்
மற்றுமோரியல். இவ்வியலை முருகு (முருகன்) என்று
சொல்கிறோம். முருகு என்னுஞ் சொல்லுக்கு இளமை அழகு
முதலிய பொருள்களுண்டு. ஆண்டவனது பிரணவாகாரம்
விநாயகமூர்த்தம் என்றும், எல்லாவற்றையும் இயக்குதல்
நடராஜமூர்த்தம் என்றும், மங்களமாய் நன்மையாய்த்
தூய்மையாயிருத்தல் சிவம் என்றும் கொள்ளப்பட்டன. மற்றும்
பல இயல்களுக்கும் மற்றும் பல பெயர்கள் சூட்டப்பட்டன.
இவ்வாறு இயல்களை ஓட்டியும் ஆண்டவனுக்குப் பல
பெயர்கள் பிறந்தன. பெயர்களின் பொருள் ஒன்றே. இந்நுட்பந்
தேறாது, ஓவ்வொரு பெயரை ஓவ்வொரு தெய்வமாகக்
கொண்டு, வாதப்போர் நிகழ்த்துவது அறியாமை.
சித்தாந்த நுட்பங்கள் பரவாத இந்நாளில் கல்வி அறிவு
இல்லாதவர்களிடைப் பல தெய்வ வழிபாட்டுணர்வு வழி
வழியே படிந்து படர்ந்து வருகிறது. அதைப் போக்க அறிவும்
அன்புமுடைய ஒப்புரவாளர் உழைத்தல் வேண்டும்.
ஒரு தெய்வ வழிபாடு, உரிமை உணர்வை வளர்த்துவரும்.
பல தெய்வ வழிபாடு, அடிமை உணர்வைப் பெருக்கும். உரிமை
உணர்வு வாழ்வுக்கு இன்றியமையாதது. அவ்வுணர்வு வாழ்வுக்கு
ஓளி போன்றது. ஒளி காலாத இடம் சாக்கடையாகும்; நரகக்
குழியாகும். தற்காலச் சைவ உலகம் எப்படி யிருக்கிறது?
தற்காலச் சைவ உலகில் உரிமை உணர்வு அருகி வருதல் கண்கூடு.
சைவ நூல்களில் மட்டும் உரிமை ஒளி கான்றிக் கொண்டிருக்
கிறது.
சிவம் கட்டில்லாதது. கட்டில்லா ஒன்றே உரிமை மயமா
யிருப்பது. சிவம் உரிமை மயமாய் எங்கும் வீற்றிருக்கிறது.
உரிமைச் சிவம், உயிர்களைத் தன்னைப்போலாக்க அருள்
சொரிகிறது. அதனால் உயிர்கள், தனு கரண புவன போகங்
களைப் பெற்றுச் சிறிது கட்டவிழப்பெறுகின்றன; உரிமை
ஊற்றுக் கண் சிறிது திறக்கப்பெறுகின்றன; மேலும்மேலும்
உரிமை உணர்வைப் பெருக்கவல்ல வாழ்வுத் துறைகளில்
உயிர்கள் நண்ணுதல் வேண்டும். உயிர்கள் உரிமைச் சிவத்துடன்
தொடர்பு கொள்ளக்கொள்ள, அவைகளிடம் உரிமை உணர்வு
பெருக்கி கொண்டே போகும். உயிர்கள் சிவத்துடன் தொடர்பு
கொள்ளாது, வெறுங் கர்மத்துடன் தொடர்பு கொள்ளக்
கொள்ள அடிமை உணர்வு வளர்ந்துகொண்டே போகும்.
“கர்மம்”, கர்மம்” என்று, கர்மத்தையே நினைந்து நினைந்து,
இந்நாடு பலவழியிலுங் குலைந்து வருகிறது. கடவுளை மறந்த
இடத்திலேயே கர்மம் தன் ஆணை செலுத்தும். மற்ற இடத்தில்
அதன் ஆணை செல்லாது. “தன்னை யறிந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் – பின்னை
வினையைப் பிடித்துப் பிசைவர்கள் – சென்னியில் வைத்த
சிவனரு ளாலே” என்பது திருமூலர் திருமொழி; “நாளென்
செயும்வினை தானென் செயும்எனை நாடிவந்த, கோளென்
செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசர்இரு, தாளுஞ்
சிலம்புஞ் சதங்கையுங் தண்டையுஞ் சண்முகமும், தோளுங்
கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே’ என்பது
அருணகிரிநாதர் திருவாக்கு. நாளின் மீதும் கோளின்மீதும்
கருத்தை இருத்தாது, அவைகளை இயக்கும் எல்லாம்வல்ல
இறைவன்மீது கருத்தை இருத்தினால் அவைகள் என் செய்யும்?
ஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தை நாடோறும் ஓதி
உய்க.
உரிமை, உயிரின் நீர்மை, உரிமை, உயிரின்மாட்டு
இயல்பாய் அமைந்திருப்பது. உயிர் கல்லன்று; பந்தன்று.
கர்மத்தைத் தகர்த்தெறியும் உரிமை, உயிருக்கு இருக்கிறது.
இயல்பில் அமைந்துள்ள உரிமை உணர்வை மேலும் மேலும்
ஓம்ப வேண்டுவது உயிரின் கடமை மார்க்கண்டேயர்
வரலாற்றை ஆராய்ந்து பார்க்க. அது நமக்கு அறிவுறுத்துவ
தென்னை? விதியை மதியால் வெல்லலா மென்பதன்றோ?
மார்க்கண்டேயர் விதியை எப்படி, வென்றார்? அவர் சித்தத்தைச்
சிவன்பால் வைத்தே விதியை வென்றார். சிவத்தில் தொடர்பு
கொண்டு உறுதியில் நிற்போரை விதி ஒன்றுஞ் செய்யாது.
அதன் ஆற்றல் தானே குன்றி ஓழியும். உரிமை உணர்வுக்குச்
சிவத்தின் தொடர்பு இன்றியமையாதது. அத்தொடர்பால்
அஞ்சாமை உதிக்கும் . அஞ்சாமை உதிக்குமிடத்தில் உரிமைக்
கதிரொளி எழுந்து, அடிமை இருளை அகற்றும்.
அப்பர் சுவாமிகள் சரித்திரத்தை நாம் படிக்கிறோம்;
கேட்கிறோம். அவர்தம் வாழ்வு அஞ்சாமைக்கும் உரிமை
உணர்வுக்கும் ஓர் இலக்கியமாக நிற்கிறது. அவர், அஞ்சா
நெஞ்சையும் உரிமை உணர்வையும் எவ்வாறு பெற்றார்?
“தாமார்க்குங் குடியல்லா” ஒருவர் திருவடியைப் பற்றியே
அவ்வியல்புகளை அவர் பெற்றார். அவர் திருவாக்கினின்றும்
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”. “என்றும் நாம்
யாவர்க்கும் இடைவோ மல்லோம் இருநிலத்தில் எமக்கு
எதிராவார் யாரும் இல்லை. “அஞ்சுவது யாதொன்றுமில்லை
அஞ்ச வருவதுமில்லை” முதலிய வீரமொழிகள் பிறந்தன.
இம்மொழிகளில் அஞ்சாமையும் உரிமையும் தாண்டவம்
புரிகின்றன. இம்மொழிகளில் தோய்வோமாக; தோய்ந்து
தோய்ந்து உரிமை உணர்வு பெறுவோமாக.
மங்கையர்க்கரசியார் உரிமை உணர்வை என்னென்று
சொல்வேன்! அம்மையாரை உரிமைச் செல்வம் என்று யான்
போற்றுகிறேன். அவர், நெடுமாறனுக்கு வாழ்க்கைத் துணையாக
நின்றவர். நெடுமாறன் தழுவிய ஒரு சமயத்தைத் தழுவ
அம்மையார் உடன்படவில்லை. அவர், நாயகன் கொள்கையைத்
தழுவி நடக்க மனங்கொள்ளாது, தமது மனதுக்கினிய ஒரு
கொள்கையில் உறைந்து நின்று, அவனுடன் வாழ்ந்தார்.
அம்மையாரது உரிமை உணர்வைக் கருதுங்கள். நாயகனைத்
தம்வழித் திருப்பவும் அம்மையார் முயன்றார். அவர்,
அரசனுடன் பிணங்காது, அவனுடன் வாழ்ந்தே, திருஞான
சம்பந்தரை வரவழைத்துச் செயற் கருஞ் செயல்களைச்
செய்வித்தார். அச்செயல்களின் நிகழ்ச்சிக்கு ஊற்றாயிருந்தது
எது? அம்மையாரது உரிமை உணர்வன்றோ? மங்கையர்க்
கரசியார் வாழ்வில் உரிமை மணம் கமழ்ந்துகொண்டிருந்தது.
இத்தகை உரிமை, பின்னே பெண்ணுலகினின்றும்
பிடுங்கப்பட்டது. பெண்ணடிமை எங்கணும் மல்கிவிட்டது.
பெண்ணொரு பாகனை – அம்மையப்பனை – வணங்கும்
உலகிலும் பெண்ணடிமை நுழைந்தது வியப்பே. பெண்ணடிமை
கொண்ட உலகுக்குப் பெண்ணாகிய பெருமான் திருவருள்
எப்படிக் கிடைக்கும்?” பெண்ணுரிமையின் வீழ்ச்சி ஆணுரிமையின் வீழ்ச்சி’ என்பதைத் தெளிந்து இனியாதல் ஆணுலகம் நடப்பதாக. யான் எழுதிய “பெண்ணின் பெருமை’ என்னும் நூலில் பெண்ணுரிமையை விரித்துக் கூறியுள்ளேன்.
உரிமை நமது உயிர். அதை எக்காரணம் பற்றியும் இழந்து
வாழ்தல் கூடாது. உரிமையற்ற வாழ்வு வாழ்வாகாது. உரிமை
வாழ்வே வாழ்வாகும். இதற்கு உரிமைச் சிவத்துடன் இயைந்த
வாழ்வு வேண்டற்பாலது..
சமரச நோக்கு, உரிமை உணர்வின் சேய். உரிமை உணர்வு
இல்லாத இடத்தில் சமரச நோக்குப் பிறத்தல் அரிது. சைவம்
சமரசமுடையது என்பது உண்மை. அச்சமரசம் இப்பொழுது
எங்கே இருக்கிறது? அஃது ஏட்டில் இருக்கிறது; வாக்கில்
இருக்கிறது; செயலில் இருக்கிறதா? சாதி மதம் நிறம் மொழி
நாடு. முதலியவற்றைக் கடந்த சிவம் வீற்றிருந்தருளும்
திருக்கோயில்களிலாதல் சமரசம் உண்டா? சாதியற்ற சிவத்தைச்
சாதிமயமாக்கிய நாட்டுக்கு எங்கிருந்து உய்வு வரும்?
“எவ்வுயிரும் நீங்கா துறையும் இறை சிவன் என்று –
எவ்வுயிர்க்கும் அன்பா யிரு” என்பது “சைவ சமய நெறி. பாட்டு
நன்றாயிருக்கிறது! பாட்டுக்கேற்ற நடை உண்டா?
சாதி முதலிய பேய்கள் தலைவிரித்தாடியபோது,
நாயன்மார்கள் தோன்றி, அப்பேய்களை ஓட்ட முயன்றார்கள்.
“சாத்திரம்பல பேசும் சழக்கர்காள் – போத்திர முங்குல
முங்கொண்டென் செய்வீர்” என்று அப்பர் இடித்துரைத்தார்.
“சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும், ஆதமிலி
நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு, பேதைகுணம் பிறருருவம்
யானெனதென் னுரைமாய்த்துக், கோதிலமுதானானைக்
குலாவுதில்லை கண்டேனே” என்று வாதவூரர் அழுதார்.
அப்பருக்கும் வாதவூரருக்கும் திருவிழாக்கள் செய்யப்படு
கின்றன. அவர்கள் வாக்குக்கோ? வெட்கம்! வெட்கம்!
திருநாளைப்போவார், அப்பூதியடிகள், திருநீலநக்கர்,
திருநீலகண்ட யாழ்ப்பாணர், நமிநந்தியடிகள் முதலியோர்
வரலாறுகள் படிக்கப்படுகின்றன. ஆனால் நடக்கையோ?
எல்லா மரபினரையும் அடியவராகக் கருதி அவர்கட்கெல்லாம்
“அடியேன்” “அடியேன்” என்று நம்பியாரூரர் பாடினார்.
அவ்வடியவர் திருவுருவங்களும் திருக்கோயில்களில் வைக்கப்
பட்டுள்ளன. திருத்தொண்டத் தொகை பாராயணமும்,
திருக்கோயில் வழிபாடும் பெருமிதமாக நடைபெறுகின்றன.
ஆனால், வாழ்வில் சாதிப்பித்து மாய்ந்ததா? மரம், பாம்பு,
சிலந்தி, யானை, பறவை, விலங்கு முதலியவற்றிற்கு முத்தி
கொடுத்த கருணைவள்ளல் எழுந்தருளியுள்ள இடத்திலுமா
சாதி வேற்றுமை? கொடுமை! கொடுமை! சாதிவேற்றுமை
தொலைந்து சமரசம் பரவும் வரை, சைவம் ஓங்கி வளராது. சாதிச்
சைவத்துக்குச் சிவனருள் துணை செய்யாது. மனிதரை
மனிதராகப் பாவியாத இடத்தில் சிவனருள் எங்ஙனம் நிலவும்?
மனிதரை மனிதராக நினையாத ஒருவன் எங்ஙனஞ்
சைவனாவன்? சாதி முதலிய களைகளைக் களைந்து, சைவ
வான்பயிரை ஓம்ப இளைஞர்கள் ஊக்கங் கொண்டெழுதல்
வேண்டும். இளைஞர்களே! சைவ இளைஞர்களே! சைவ
உலகை நோக்குங்கள்; சைவ உலகம் சவலையுற்றிருப்பதை
உணருங்கள்; “உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம்
யோனிபேதம் – நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
அங்கங்கே நின்றான்கோயில்” என்று இளங்குழந்தை –
ஞானமூர்த்தி – அருளிய மொழியை உன்னுங்கள்; எங்குஞ் சிவம்
கோயில்கொண்டிருத்தலைத் தெளியுங்கள்; எங்குமுள்ள
சிவத்துடன் சம்பந்தம் பெறுவதன்றோ சைவம்? அச்சிவ
சம்பந்தம் இப்பொழுது எந்நிலையிலிருக்கிற து? சாதி
சம்பந்தமன்றோ இப்பொழுது உலவுகிறது? சைவம் எங்கே?
அனலிடை நின்ற சைவம் – புனலிடை நின்ற சைவம் – எங்கே?
நீற்றறையில் நின்ற சைவம் – கடலில் நின்ற சைவம் – எங்கே?
அச்சித்த சைவம் எங்கே? எங்கே? சாதிச் சைவமன்றோ
இப்பொழுது நெளிந்துகொண் டிருக்கிறது? நினைக்க நினைக்க
உள்ளம் உருகுகிறது; ஊன் குழைகிறது; கண்ணீர் பெருகுகிறது.
சாதி மதம் மொழி நாடு முதலிய அஞ்ஞானப் புற்றுக்கள்
சைவத்தின் மீது – அன்பின்மீது – எழும்பிப் படர்ந்துவிட்டன.
அவைகளைத் தகர்க்க எழுங்கள்; “சைவம் சமரசமுடையது;
அஃது எவர்க்கும் உரியது; அன்பே சிவம்” என்னும்
உண்மையைப் பறைசாற்ற எழுங்கள்; ஞானசம்பந்தர்
மறைக்காட்டினின்றும் வீறு கொண்டு மதுரைக்கு எழுந்ததை
நினையுங்கள்; மங்கையர்க் கரசியார் ஞானசம்பந்தரை
எதிர்நோக்கிய வேட்கையை எண்ணுங்கள்; குலச்சிறையார்
விரதத்தையும் வீரத்தையும் கருதுங்கள்; உங்கட்கு எழுச்சி தானே
பிறக்கும். முதலாவது திருக்கோயில் சாதிப்பேயை ஓட்ட உறுதி
கொள்ளுங்கள்; பிற இடங்களிலுள்ள மற்றப் பேய்கள் தாமே
ஓடும். “என்றும் நாம் யாவர்க்கும் இடைவோமல்லோம்
இருநிலத்தில் எமக்கு எதிராவார் யாருமில்லை” என்று அஞ்சா
நெஞ்சங் கொண்டு எழுங்கள்; “அப்பாநான் வேண்டுதல்கேட்
டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்பு
செயல் வேண்டும் – எப்பாரும் எப்பதமும் எங்கணுநான் சென்றே
எந்தை நின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் – செப்பாத
மேனிலைமேற் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட் சோதி
செலுத்தியிடல் வேண்டும் – தப்பேது நான்செயினும்
நீபொறுத்தல் வேண்டும் தலை நினைப் பிரியாத நிலைமையும்
வேண்டுவனே” என்று வேண்டுதல் செய்து எழுங்கள்; சிவசோதி
உங்களுக்கு வழிகாட்டும்; நால்வர் துணை உங்களுக்குக்
கிடைக்கும்; அஞ்சாது எழுங்கள்; எழுங்கள்.
சமயத்தவர் உணர்வில் சமரசம் பதிந்தால், உலகில் பிற
சமரச துறைகள் தாமே வளம்பெறும். ஆதலால், சமரசத்துறை
களின் கூறுபாடுகளை ஈண்டு விளக்கவேண்டுவதில்லை.
சமரச நோக்கு வளர வளரப் பிறர்க்குழைக்கும் பேறு
கிடைக்கும். பிறர்க்குழைப்பதன்றோ பிறவிப்பயன்?” நான் பெற்ற
இன்பம் பெறுகஇவ் வையகம்” என்றார் திருமூலர். தன்னலம்
நாடாது பிறர்க்கு உழைக்கும் உள்ளம் சிவத்துக்குரிய சிறந்த
கோயில். பிறர்நலம் நாடி உழைத்தல் சிறந்த சிவத்தொண்டு.
சைவம் ஓங்கவேண்டுமானால், சைவர் பிறர் நலம் நாடிச் சமரச
நோக்குடன் உழைப்பவராதல் வேண்டும்.
முன்னைப் பெரியோர்கள் தங்கள் உடல் பொருள் ஆவி
மூன்றும் பிறர் உடைமை என்று கருதி வாழ்வதையே பிறவிப்
பேறாகக் கொண்டார்கள். “யாதும் ஓன்றும் என் பக்கல்
உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை’ என்று
பெரியபுராணம் அறிவுறுத்துகிறது. இப்பொன்மொழியின்
உள்ளக்கிடக்கையைத் துருவித் துருவிச் சிந்தித்துச் சிந்தித்து
அதன் பொருளாழத்தை உணர முயல்வோமாக.
இக்காலச் சைவப் பெரியார் வாழ்வினுள் ஆறுமுக
நாவலர் வாழ்வு சைவ உலகுக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது.
சிவத்தொண்டுக்கெனத் தமது வாழ்வையே அர்ப்பணஞ்
செய்தவர் நம் நாவலர் பெருமான். காலத்துக்கேற்ற தொண்டுகள்
பல அவரால் செய்யப்பட்டன. நாமும் இக்காலத்துக்கேற்ற
முறையில் தொண்டு செய்தல் வேண்டும்.
விஞ்ஞானகலர் பிரளயாகலரைத் தம்மைப்போலாக்கவும்,
பிரளயாகலர் சகலரைத் தம்மைப்போலாக்கவும் முயன்ற
வண்ணமா யிருக்கிறார் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.
இக்கூற்றின் உட்கிடக்கை என்னை? அறிவால் உயர்ந்தோர்
அறிவால் தாழ்ந்தோரைத் தமது நிலைக்குக் கொண்டுவர
உழைத்தல் வேண்டுமென்பதன்றோ? இச்சீரிய உண்மையை
உணர்ந்து சைவப்புலவர்கள் நடப்பார்களாக.
தில்லைக்கூத்தன் ஐந்தொழில் புரிகிறான்? எவர்
பொருட்டு அவன் ஐந்தொழில் புரிகிறான்? தன்பொருட்டா?
இல்லை. அவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்.
உயிர்கள் பொருட்டே அவன் ஐந்தொழில் புரிகிறான். அவனை
வணங்கி அவனை அடைய விரும்புவோரும், தம்பொருட்டு
வாழாது பிறர்பொருட்டு வாழ உளங்கொள்ளல் வேண்டும்.
பிறர் பொருட்டு வாழ்தலாவது பிறர்நலன் நாடிக்
காலத்துக்கேற்ற தொண்டு செய்வது. தமது நலங் கருதாது
பிறர்க்கு உழைக்குந் தொண்டர் கூட்டம் பெருகப் பெருக உலகம்
பல வழியிலும் சீர்திருத்தம் பெறும்.
பிறர்க்கு உழைக்க உழைக்கச் சகோதரநேயம் பெருகும்.
அவ்வுழைப்பால் உயிர்க்கும் உயிர்க்கும் உள்ள தொடர்பு
விளங்கும். அத்தொடர்பைக் கூறிட்டிருப்பது அஞ்ஞானம்.
அஞ்ஞானத்தை ஆண்டவனருளால் போக்க முயலல்வேண்டும்.
இதுபற்றியே அப்பரெம்பெருமான், “கூற்றாயின
வாறுவிலக்ககிலீர்? என்று இறைவனை வேண்டித் தமது
தமிழ்மறையைத் தொடங்கினார் போலும்! கெடிலநதிக்
கரையில் பிறந்த ௮ச் செம்மொழி வாழ்க; வாழ்க.
“கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன
நானறியேன், ஏற்றா யடிக்கே இரவும் பகலும் பிரியாது
வணங்குவன் எப்பொழுதும், தோற்றாதென் வயிற்றின்
அகம்படியே குடரோடு தொடக்கி முடக்கியிட, ஆற்றேன்
அடியேன் அதிகைக் கெடில வீரட்டா னத்துறை அம்மானே”
என்பது திருவாக்கு. இத்திருவாக்குக்கு விரிவுரை கூறப்
புகுகிறேனில்லை. எடுத்த சகோதர நேயத்துடன் இதனை
இயைபுபடுத்தும் அளவில் நின்று மேற்செல்வேன்.
“அதிகைக் கெடில வீரட்டானத் துறைஅம்மானே!
கொடுமை பல செய்தன நான் அறியேன்; தோற்றா
தென்வயிற்றின் அகம்படியே குடரோடு தொடக்கி முடக்கியிட
அடியேன் ஆற்றேன்; ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
எப்பொழுதும் பிரியாது வணங்குவன்; கூறு ஆயினவாறு
விலக்ககிலீர்” என்று நாவுக்கரசர் ஆண்டவனை நேக்கி
வேண்டுதல் செய்திருத்தலைக் காண்க.
சிவம் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமா யிருப்பது.
சிவம் இல்லாத இடம் இல்லை. எவவுயிர்க்கும் உயிராயிருப்பது
சிவம். சிவம் எல்லா உயிரிலும் இருத்தலால், எல்லா உயிரும்
சகோதரம் என்பதில் ஐயமில்லை.
சிவத்தை வழிபட ஒருவன் புகுகிறான். சிவமோ, தன்னை
வழிபடப் புகும் ஒருவனையும் பிறவுயிரையும் தொடர்புபடுத்தி
யிருப்பது. அச்சிவத்தை எப்படி. வழிபடுவது? ஒருவன் தன்னைப்
பிறவுயிர்களினின்றும் வேறுபடுத்திச் சிவத்தை வழிபடப்
புகுவானாயின் அவனது வழிபாடு துவிதத்தின்பாற் படுவதாகும்.
துவிதவழிபாடு பிறவித்துன்பத்தைப் போக்காது. தன்னிடத்தும்
பிறவுயிரிடத்தும் விளங்குவது சிவமேயாதலால், தன்னையும்
பிறவுயிரையும் வேறுபடுத்தாது, அதாவது கூறிடாது, அவன்
சிவத்தை வழிபாடு செய்தல் வேண்டும். இதுவே அத்துவித
வழிபாடு எனப்படும். அத்துவித வழிபாடு பிறவித் துன்பத்தைப்
போக்கும். “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊன
மில்லை’ என்பது அப்பர் அருண்மொழி.
மதவாதிகள் துவிதம் என்றும் அத்துவிதம் என்றும்
உலகை மருட்டுவது வழக்கம். ௮ம் மருட்டல்கண்டு அன்பர்கள்
மலைவுற வேண்டுவதில்லை. துவிதம் பிரிவை உணர்த்தலால்,
அது சகோதரநேயத்துக்குத் தடை செய்வது. அத்துவிதத்தில்
பிரிவின்மையால், அது, சகோதரநேயத்துக்கு இடந்தருவது.
சகோதரநேயத்துக்கு அத்துவிதமென்றும், மற்றதைத்
துவிதமென்றுங் கொள்க.
ஒருவன் தன்னைப் பிறவுயிர்களினின்றும் வேறுபடுத்தாது,
இரண்டு சார்பிலும் ஒன்றித் தொடர்பு கொண்டுள்ள சிவத்தை
வழிபடுவதென்பது, தன்னைப்போலப் பிறவுயிரையுங் கொண்டு
வாழ்வதாகும். இதுவே சகோதரநேயம் என்பது. தன்னிலும் பிற
உயிரிலும் உள்ளது சிவம் என்று உணரும் எவனும், தன்னைப்
போலவே பிறவுயிரையுங் கருதுவன்; எவ்வுயிர்க்குந் தீங்கு
செய்யான்; நலமே செய்வன். எவ்வுயிரையுந் தன்னைப் போல்
கருதித் தங்கு செய்யாது நலஞ் செய்வது சகோதரநேயத்தின்
இயலாகும். இதுவே சிறந்த சிவவழிபாடு. எவ்வுயிரும்
என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின், தெய்வ அருட்கருணை
செய்யாய் பராபரமே” என்றார் தாயுமானார்.
“கூற்றா யினவாறு’ என்னுந் திருப்பாட்டை நோக்குவோம்.
“கொடுமைபல செய்தல்” என்பது அப்பர் ஒருபோது தம்மையும்
பிறவுயிரையும் வேறாகக் கருதியதை உணர்த்துவது. வேற்றுமைக்
கருத்து எல்லாக் கொடுமைகட்குங் காரணமாக நிற்றலான்,
அதன பயனைக் “கொடுமைபல” என்றார்; தம்மையும்
பிறவுயிரையும் வேறாக நினைத்தது அறியாமை யாதலின், “யான்
அறியேன்” என்றார். “தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு தொடக்கி முடக்கியிட ஆற்றேன்” என்பது
கொடுமையின் விளைவு அல்லது விரிவு என்க. இனிப் பிரிந்து
வணக்கஞ் செய்யாது, பிரியாது வணக்கஞ் செய்வேன் என்பார்
“ஏற்றா யடிக்கே இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது
வணங்குவன்” என்றார். பிரியாது வணங்குவதாவது பிறவுயிரை
யும் தன்னுயிரெனக் கருதும் சகோதர நேயமாகும். நீண்ட
காலமாகச் சகோதரநேயம் பெறாதவாறு தடை செய்துவரும்
பிரிவை விலக்குமாறு, நம் பெருமான், “கூறுஆயினவாறு
விலக்ககிலீர்” என்று ஆண்டவனையே வேண்டுதல் செய்தார்.
இதனால் பிரிவின் ஆற்றலை (அதாவது அறியாமைத் திறத்தை)
ஒருவாறு விளக்கியவாறாம்.
“கூற்றாயினவாறு” என்னுந் திருப்பாட்டின் உள்ளுறை
சகோதரநேயம். இவ்வாறு எனது சிற்றறிவுக்கு விளங்குகிறது.
அப்பர் சகோதரநேயத்தைப் பெற்றார் என்பதற்குச் சான்றுகள்
பல உள. ஈண்டைக்கு “அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ, ஒப்புடைய மாதரும்
ஒண்பொருளும்நீ ஒருகுலமும் சுற்றமும் ஒரூரும்நீ, துய்ப்பனவும்
உய்ப்பனவும் தோற்றுவாய்நீ துணையாய்என் நெஞ்சந்
துறப்பிப்பாய்நீ, இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும்நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன்நீயே” என்னுந் திருத்தாண்டகச்
சான்று ஓன்று சாலும்.
அப்பர், தம்மிலும் பிறவுயிரிலும் உள்ளது சிவம் ஒன்றே
என்ற உண்மை உணர்ந்து, சகோதரநேயத்தில் நின்றவராதலால்,
அவரை நஞ்சமுதம் கொல்லவில்லை; நீற்றறை எரிக்கவில்லை;
யானை பணிந்து சென்றது; கடல் தாங்கிற்று. எங்கும்
அன்பாகிய சிவத்தைக் கண்டோர்க்கு எங்கணும் அன்பாகிய
சிவமே விளங்கும். இது சகோதரநேயம்.
சகோதரநேயம் தற்காலச் சைவ உலகில் எந்நிலையிலிருக்
கிறது? சாதி வேற்றுமைக்கு இரையாகுஞ் சைவ உலகில்
சகோதரநேயம் எவ்வாறு நிலவும்? சைவத்தின் உயிராகிய
சகோதரநேயம் சைவ உலகில் இல்லை எனில், சைவம் வளர்தற்கு
இடம் ஏது? சகோதரநேயம் சைவத்தை வளர்க்கும் உயிர்ப்பு
என்பதை உணர்ந்து, சைவஉலகம் இனியாதல் நடப்பதாக.
நூலுரைகளைக் காட்டும் அளவில் சைவ உலகம் நிறைவு
கொள்ளுதலாகாது.
புறங்கூறல், பொறாமை, இகல், தன்னலம் முதலியன
சகோதரநேயத்தை அரிக்கும் விஷப்பூச்சிகள். இவைகளுக்
கிரையாகாதவாறு பொதுவாக எல்லாரும், சிறப்பாகச் சைவப்
புலவர்களும் தங்களைக் காத்துக்கொள்வார்களாக.
சகோதரநேயம் இன்ப வாழ்வைக் கூட்டுதல் ஒருதலை.
சகோதரநேயத்தில் உறைந்துநின்ற திருநாவுக்கரசர், “எந்நாளும்
இன்பமே துன்பமில்லை” என்றார். அப்பர், அழியா இன்பத்தை
இவ்வுலகிலேயே பெற்றமை கவனிக்கத்தக்கது. “இறைகளோ
டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு” என்று
வன்தொண்டரும் தமது வாழ்வின் அநுபவத்தை வெளியிட்
டுள்ளார். இன்ப வாழ்வைச் சகோதர நேயத்தால் இவ்வுலகிலேயே
பெறுதல் கூடும்.
இன்பம், “இவ்வுலகி லில்லை அவ்வுலகி லுண்டு’ என்று
கருதுவது சித்தவிகாரமாகும். இன்பம் எங்குமிருப்பது. சிவமே
இன்பம். “ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்து இன்பமே”
என்றார் வாதவரடிகள். சகோதரநேயம் பெருகப் பெருக, மாயை
தானே மறைந்து மறைந்து மாயும்; இன்பம் தோன்றும். இன்ப
வாழ்வுக்குச் சகோதரநேயம் வேண்டும்.
முறைகள்
நாம் பிறந்தோம்; வளர்கிறோம்; இறக்கப்போகிறோம்.
இறந்தபின் மீண்டும் பிறப்போம். இவ்வாறு பிறவிச் சகடம்
சுழன்று சுழன்று வருகிறது. இச்சுழல் ஓழிதல் வேண்டும். இது
பற்றியே பெரியோர்கள் இறவாமையை வேட்டு நின்றார்கள்.
மனிதப் பிறவி விழுமியது. இப்பிறவி இறவாத இன்பநிலை
பெறுதற்குத் துணைசெய்யும் வாய்ப்புகளை யுடையது.
இப்பிறவியிலேயே இறவாமை பெற முயலுதல் வேண்டும்.
இறவாமை என்பதும், மீண்டும் பிறவாமை என்பதும் ஒன்றே.
இறக்கும் ஒருவன் மீண்டும் பிறப்பன். இறவாத ஒருவன் மீண்டும்
பிறவான். “யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கு என்
கடவேன்” என்பது திருவாசகம். “இக்காயம் நீக்கி இனிஒரு
காயத்தில் – புக்குப் பிறவாத போம்வழி தேடுமின்’ என்பது
திருமந்திரம். இத் திருமொழிகளை உற்றுநோக்குக.
இறவாமைப் பேறு இருவிதம். ஓன்று பருவுடல்
நிலையிலேயே அப்பேறு பெறுவது. இஃது அருமை.
மற்றொன்று பருவுடல் நீத்த நுண்ணுடல் நிலையில் அப்பேறு
பெறுவது. எந்நிலையிலாதல் இறவாமை பெறுவது ஈண்டுக்
கருதற்பாலது. மனிதப் பிறவியின் நோக்கம் இறவாத
இன்பத்தைப் பெறவேண்டுமென்பது. அந்தோக்கத்தை நிறை
வேற்றுதற்கென்றே பெறுதற்கரிய மனிதப் பிறவி நமக்கு
ஆண்டவனால் அருளப்பட்டது. இப் பிறவியிலேயே இன்பப்
பேற்றை அடைய முயலுதல் வேண்டும். இதற்குரிய முறைகள்
ஆன்றோர்களால் கோலப்பட்டன. அவைகளை விரித்துக்
கூறுதல் என்னால் இயலாது. மிகச் சிலவற்றை இங்கே குறிக்க
விரும்புகிறேன்.
இளைஞர்கள் பெற்றோர்வழி நின்று கற்பன கற்கப்
புகுவது ஒழுங்கு; ஏதாவது ஒருவித நியமத்தில் குறிவைத்து,
அதனை வழாது செய்யப் பயில்வது சிறப்பு; உலகியல், உயிரியல்,
கடவுளியல் முதலியவற்றை ஆராய்வதில் தலைப்படுதல்
விழுப்பம். இதற்குத் துணையாக மேல்நாட்டுக் கலைகளையும்
நாடுவது நல்லது. தற்போது மேல்நாட்டுக் கலைகள் உரிமை
உணர்வினின்றும் பிறத்தலால், அவைகளும் வாழ்வுக்கு
வேண்டற்பாலன. நமது பண்டைக் கலைகளின் நுட்பங்கள் பல,
தற்கால மேல்நாட்டுக் கலைகளால் விளக்கம் பெறும் என்பதில்
ஐயமில்லை. பொருளுண்மை, சத்காரியம், மனோவசியம்,
யோகக் காட்சி, நுண்ணுடற் காட்சி, இளமை காத்தல் முதலிய
வற்றைத் தற்கால மேல்நாட்டுக் கலைகள் தெளிவாக விளக்கஞ்
செய்து வருகின்றன. இவை சித்தமார்க்க விளக்கத்துக்குத்
துணை செய்வனவாம்.
மேல்நாட்டில் பொதுவாகத் தேகாத்ம உணர்வு பெருகி
நின்றாலும், சிறப்பாகச் சில இடங்களில் ஆத்மசக்திக்குரிய
(சித்தமார்க்கத்தின் அடிப்படையாகவுள்ள) சில துறைகள்
காணப்பட்டுவருகின்றன. ஸர். ஆலிவர் லாட்ஜ் போன்றாரது
ஆராய்ச்சி மேல்நாட்டில் என்றாதல் ஒரு பெரும் மாறுதல்
செய்யாமற் போகாது. ஆதலால், இளைஞர்கள் கலை
ஆராய்ச்சியில் மேல்நாடு கீழ்நாடு என்னும் வேற்றுமை பாராட்ட
வேண்டுவதில்லை.
இளமையில் கற்றனவற்றை வாழ்வில் பெறுதற்கு முயல்வது
அறம். இதற்கு முதலாவது உடம்பை நன்முறையில் ஓம்புதல்
வேண்டும். நேரிய முறையில் உலக இன்பத்தை நுகர உளங்
கொளல் வேண்டும். இல்லையேல், பிறவிநோக்கம் நிறை
வேறாது. உயிர் விளக்கத்துக்கென உடம்பும் உலகும் ஆண்டவ
னால் கொடுக்கப்பட்டன. அவைகளைத் துறக்க வேண்டு
மென்று சிலர் கூறுவர். இஃது இயற்கைக்கு மாறுபட்ட கொள்கை,
இக் கொள்கையுடையார் சேர்க்கை இளைஞர் வாழ்வைப்
பாழ்படுத்தும்.
உடலோம்புதற்கும், உலக இன்பத்தை நுகர்தற்கும்
இல்வாழ்வில் நண்ணுதல் வேண்டும். இல்வாழ்வு அன்பைப்
பெருக்குவது. தனித்த வாழ்வு அன்பைப் பெருக்கல் அரிது.
பெண் ஆண் கூட்டுறவில் அன்பெனும் அமிழ்தம் பிறத்தல்
இயல்பு.
இல்வாழ்விற் பிறக்கும் அன்பை இல்லத்தளவில் சிறைப்
படுத்தலாகாது. அதை ஓடவிடுதல் வேண்டும். அன்பு
வளர்ச்சிக்கு ஒப்புரவுக் கழகங்களில் சேர்ந்து ஒல்லும்வகை
தொண்டு செய்வது நல்லது.
இல்வாழ்வாலும் – தொண்டாலும் – அன்பைப் பெருக்க
முயல்வதுடன், சிவ வழிபாட்டாலும் அன்பைப் பெருக்க
முயலலாம். சிவமும் அன்பும் ஒன்றே. “அன்பே சிவம்’. சிவ
சிந்தை அன்பைப் பெருக்கும்.
சிவ வழிபாட்டுக்கெனத் திருக்கோயில்கள் அமைக்கப்
பட்டன. பண்டைக் காலத்தில் திருக்கோயில்கள் ஓவியக்
கூடங்களாக விளங்கின. ஓவியங்கள் சிவத்தின் இயல்களை
உணர்த்தும் அறிகுறிகள். ஓவியக்கூறுகளில் படிவது சிவத்தை
வழிபடுவதாகும். ஓவிய நுட்பத்தை உணராது, கோயில்
வழிபாடு செய்வது விக்கிர ஆராதனையாக முடியும். காவியங்
களும் சிவத்தின் இயல்களைத் தெரிப்பன. அவைகளுடன் உறவு
கொள்வதும் சிவ வழிபாடாகும்.
சிவ வழிபாட்டுக்குரிய பூக்கள் எட்டு என்று சிவாகமங்கள்
சொல்கின்றன. அவை:- கொல்லாமை, புலனடக்கம், பொறுமை,
இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு என்பன. இவைகளைக்
சிலங்களென்று பெரியோர் கூறுப. சீலம் வாழ்வுக்கு விழுப்பந்
தருவது. சிலமில்லா வாழ்வில் சிவம் விளங்காது. ஆகவே,
சிலத்தையும் ஓம்புதல் வேண்டும்.
நாம் தமிழர்கள். தமிழ்மொழியிலும் மறைகள் பிறந்
துள்ளன. அவைகளிற் கலந்து, பொருளுணர்ந்து ஓதினால்,
கன்னெஞ்சுங் கரைந்துருகும். “உருகுஞ் செயல்” முதிர முதிர
உள்ளொளி பெருகும். உருகுஞ் செயலும் உள்ளொளிப்
பெருக்கத்துக்குத் துணை செய்யும்.
சிவம், உயிரையும் இயற்கையையும் உடலாக்கொண்டது.
உயிரையும் இயற்கையையும் வழிபடுவதும் சிவவழிபாடாகும்.
உயிர் வழிபாடாவது உயிர்க்குத் தொண்டு செய்வது. இது
முன்னே சொல்லப்பட்டது.
இயற்கை வழிபாடு உள்ளொளியை எழுப்பும் ஆற்றல்
வாய்ந்தது. இயற்கையோடியைந்து வாழ்வது இறையோ
டியைந்து வாழ்வதாகும். இயற்கை வாழ்வைப்பற்றியும்
வழிபாட்டைப்பற்றியும் என்னுடைய நூல்களிலெல்லாம்
விரிவாக விளக்கியுள்ளேன். இங்கே இரண்டோர் உரை கூறும்
அளவில் நின்று மேற்செல்வேன்.
காலையில் இளஞாயிறு எழுவதைக் காண்பதும்,
மாலையில் அதன் ஒளியில் மூழ்குவதும், இரவில் திங்கள் நிலவு
படர நீலவானில் படிவதும் வாழ்வுக்குரியன. ஓய்ந்த நேரத்தில்
மலைக்குச் சென்று சோலைப் பசுமையையும், ஏரியின்
நிறைவையும், ஆற்றோடத்தையும், கடல் நீலத்தையும் காண்டலும்
வண்டின் பண்ணையும், பறவைப் பாட்டையும், அருவியின்
முழக்கையும் கேட்டலும் – ஒளியிலும், காற்றிலும், தோய்தலும் –
வாழ்வுக்கினியன. இவ்வியற்கை வழிபாடு முதிர முதிர
இயற்கையின் நானாபேதங்கள் படிப்படியாக மறையும். அவை
யாவும் ஓலியாகத் தோன்றும். அந்நிலையில் சிவம் ஒலியாகத்
இகழும். பின்னே ஒலியும் மறைந்து ஒளி தோன்றும். இங்கே
சிவம் ஒளியாக விளங்கும்.
ஒலிமறைந்து ஒளிதோன்றும் நிலையில், குருநாதன்
காட்சிதந்து, நீறளித்து, உண்மைப்பொருளை அறிவுறுத்துவன்.
ஞானசம்பந்தர் அருளிய நீற்றுப் பதிகத்திலுள்ள நீறு இதுவே.
இந் நிற்றைப் பிற்காலச் சித்தர் “முப்பு” என்றனர். “முப்பு”
என்பது சிவநீறு. அது குருவருளால் கிடைப்பது. சிவநீற்றை
உண்டு அணிபவர்க்கு மாற்றமனங் கடந்த மேல்நிலை விளங்கும்.
அந்நிலை பெற்றோர்க்கு நரை ஏது? திரை ஏது? பிணி ஏது?
மூப்பு ஏது? சாக்காடு ஏது? “சித்தி தருவது நீறு”, “கவினைத்
தருவது நீறு”, “ துயிலைத் தடுப்பது நீறு”, “வெந்துயர் தீர்ப்பது
நீறு”, “ ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பத் தருவது நீறு” எனவரூஉந்
திருநீற்றுப் பதிக மொழிகளைப் பார்க்க.
ஓளிக்குமேலுள்ள நிலையைச் சொல்லால் சொல்லுதல்
இயலாது. அது வாக்கு மனங் கடந்தது. அதைத் தெளிதற்குக்
கல்லாலின் கீழமர்ந்த கருணை வடிவை – ஆனந்த அமுதை – சித்த
குருவை – அடைவோம்; சிந்திப்போம்; தியானிப்போம்;
அமைதி – அமைதி – அமைதியில் நிற்போம். அமைதி எங்கே?
யான் எங்கே? அமைதியே! பேசா நிலை எதுவோ! சொல்லாமற்
சொல்லும் பொருள் எதுவோ! நினையாமல் நினைக்கும் வகை
எதுவோ! அறியேன்; அறியேன்; அறியேன். அகந்தையில்
அழுந்திக் கிடக்கும் நாயேன் – பேயேன் – எதை அறிவேன்! எதை
உணர்வேன்! சாந்தம் சாந்தம் சிவம்!
சாந்த உலகில் – சிவபுரியில் – சிங்கமும் புலியும் பசுவும்
மயிலும் பாம்பும், சகோதரநேயத்தில் மூழ்கி, ஆனந்தத்தில்
திளைத்து நிற்கின்றன. உலகம் அச் சிவபுரியாதல் வேண்டும்;
அச்சிவபுரியில் யான் வாழ்தல் வேண்டும். அமைதியே!
அடைக்கலம்; அடைக்கலம். சாந்தம் சாந்தம் சிவம்!



