சித்த மார்க்கம்
திரு. வி. கலியாணசுந்தரனார்

(திருவதிகையில் (23, 24, 25-12-1934) கூடிய சைவ சித்தாந்த மகா
சமாஜத்தின் 29-வது ஆண்டு விழாத் தலைமை உரை)

முத்த னேமுதல் வாமுகி ழும்முளை
ஒத்த னேஒரு வாவுரு வாகிய
சித்த னேதிரு வீழி மிழலையுள்
அத்த னேஅடி யேனைக் குறிக்கொளே

– அப்பர்

தோற்றுவாய்

சகோதரிகளே! சகோதரர்களே!

சைவ சித்தாந்த மகா சமாஜத்துக்கு யான் புதியவனல்லன்;
யான் ஒரு பழைய தொண்டன். இங்கே ஈண்டியுள்ள சமாஜத்
தின் இருபத்தொன்பதாவது ஆண்டு விழாக் கூட்டத்துக்கு
என்னைத் தலைவனாக நீங்கள் தெரிந்தெடுத்தீர்கள். உங்கள்
உழுவல் அன்புக்கு எனது நன்றியறிதலான வணக்கத்தைச்
செலுத்துகிறேன்.

சமாஜத்தின் ஆண்டு விழாக் கூட்டம், இம்முறை, தென்
னார்க்காட்டிலே, திருவதிகை என்னும் இப்பழம்பெரும்பதியிலே
குழுமியிருக்கிறது. சமாஜத்துக்கும் தென்னார்க்காட்டுக்கும்
அன்பார்ந்த தொடர்பு உண்டு. சமாஜத்தின் தாயகம் தென்
னார்க்காடு. இவ்வுறவு, சமாஜத்தை அடிக்கடி இந்த ஜில்லா
விற்கு ஈர்க்கிறது போலும்!

சைவ சித்தாந்த மகா சமாஜம் பிறந்த இடம் திருப்பாதிரிப்
புலியூர். அதன் முதல் ஆண்டுவிழா பெரும்பற்றப்புலியூரில் நடை
பெற்றது; வெள்ளிவிழா கிழக்குமருதூரில் நிகழ்ந்தது; பல
ஆண்டு விழாக்கள் கூடலூர், திருப்பாதிரிப் புலியூர், திரு
வெண்ணெய்நல்லூர் முதலிய பதிகளில் நடந்தேறின. இம்முறை,
சமாஜத்தின் ஆண்டுவிழா திருவதிகையில் கொண்டாடப்
பெறுகிறது. ஆகவே, தென்னார்க்காடு சைவ சித்தாந்த மகா
சமாஜத்தின் ஈன்ற தாயாகவும், செவிலித் தாயாகவும் விளங்கு
கிறது என்று சுருங்கச் சொல்லலாம்.
தென்னார்க்காடும் சிவநெறியும்

தென்னார்க்காடு, சிவமயமாகப் பொலிதரும் வாய்ப்
புடையது. இதன்கண், எல்லாத் திருப்பதிகட்கும் உயிர்நாடியா
யுள்ள தில்லையம்பதி திகழ்கிறது; வேறுபல தொண்மைப்
பதிகளும் ஆங்காங்கே ஒளிர்கின்றன. சமய குரவருள்
இருவரையும், சந்தான குரவரையும், திருநீலகண்டர் – மெய்ப்
பொருளார் – நரசிங்கமுனையர் முதலிய நாயன்மாரையும் ஈன்ற
பெருமை தென்னார்க்காட்டுக்கு உண்டு. பெரிய புராணம்,
சிவஞானபோதம் முதலிய சிவ நூல்கள் எங்கே பிறந்தன?
தென்னார்க்காட்டி லல்லவோ? கம்பரை வளர்த்தது எது,
அங்கவை சங்கவையரை ஆட்கொண்டது எது? தென்னார்க்கா
டென்று சொல்லவும் வேண்டுமோ? இராமலிங்கசுவாமிகள்
அருளறம் ஓம்பியதும் தென்னார்க்காடேயாகும். தென்னார்க்
காட்டுப் பாடலிபுரத்தில் எழுந்த கலைப்பெருக்கை விரித்துக்
கூறவேண்டுவதில்லை. தென்னார்க்காட்டிலே தோன்றிய
அறவோர் பலர்; அந்தணர் பலர்; பாவலர் பலர்; நாவலர் பலர்;
வீரர் பலர்; கலைஞர் பலர்; தத்துவர் பலர்; ஞானிகள் பலர்.
தென்னார்க்காட்டைச் சிவம் பெருக்கும் ஒரு சக்தி பீடம் என்று
கூறுதல் மிகையாகாது.

தென்னார்க்காட்டின் இயற்கை வளத்தில் என்றுஞ்
சிவமணங் கமழ்ந்துகொண் டிருக்கும். தவத்துக்கும் அமைதிக்கும்
உரிய இயற்கை அமைப்புகள் தென்னார்க்காட்டில் பலபடக்
கிடக்கின்றன. இங்கே ஓன்று நினைவிலுறுகிறது. அதன்
வனப்பை என்னென்று கூறுவேன்! அது “கைபுனைந் தியற்றாக்
கவின்பெறு வனப்பு!” இயற்கைச் சிவம் அங்கே நடம்புரிகிறது.
அந்நடத்தைக் கண்ணுள்ளோர் காணலாம். அவண், எரிவாயி
னின்றும் கல்லடுக்கு உருகி உருகி, வழிந்து வழிந்து, தேங்கித்
தேங்கிக், குவிந்து குவிந்து, பாறையாய் இறுகி இறுகி
ஓங்கலாயிற்றோ என்னத்தக்க ஓர் அழகிய குன்றோவியமும்,
அவ்வோவியத்தினின்றும் மற்றுமோர் ஓவியம் முகிழ்த்து
எழுந்தாலெனப் பொலியும் ஒரு பூங்கோயிலும், அக்கோயிலைத்
தன்னகத்தே காட்டும் பளிங்கென விளங்கும் ஒரு சுனையும்,
வெண்ணெய்ச் சடையன் அருளோ என்னப் பெருகிக்
குன்றோவியத்தை அணைந்து அணி செய்யும் பெண்ணையும்,
பெருக்கு – பாட்டென ஓழுங்காயோடுதற்கு அரணாக
இருபுறமும் நிற்கும் பசுஞ்சோலை மலைத்தொடர்வும், இன்ன
பிறவும் காட்சியளிக்கும். அக்காட்சி கண்ணையுங் கவரும்;
கருத்தையுங் கவரும்; தவங் கூட்டும்; அமைதியில் நிறுத்தும்;
சிவமாக்கும். அக்குன்றில் அமர்ந்து இயற்கைச் சிவத்தில்
ஈடுபடும் ஒருவன் சிவனடி யனாதல் ஒருதலை.

திருவதிகை

இன்னோரன்ன சிறப்புக்கள் பலவுடைய தென்னார்க்
காட்டிலே, வற்றாது மணிகொழிக்குங் கெடிலநதிக்கரையிலே,
அன்பர்கள் பணி கொழிக்குந் திருவதிகையிலே, சைவ சித்தாந்த
மகா சமாஜச் சார்பிலே நாம் அனைவரும் கூடியிருக்கிறோம்.
திருவதிகை நினைவு தோன்றும்போது, நமது சைவச் செல்வம் –
தவ விளக்கு – திலகவதியார் நினைவும் தோன்றுகிறது.
திலகவதியாரை நினைப்போமாக. “அனைத்துயிர்க்கும் தாங்கிய”
அருளினின்றும் மலர்ந்த சிவப் பொலிவும், தவக் கோலமும்,
திருவலகும், திருமெழுக்குத் தோண்டியும் கொண்ட ஓர் அற்புதத்
தெய்வ வடிவம் புலனாகிறது. அத் தெய்வ வடிவை உன்னுவோம்;
வாழ்த்துவோம்; வணங்குவோம்.

திலகவதியாரது “தயா” அன்றோ அப்பர் அருந்தமிழாகி
நமக்குத் துணை செய்கிறது? அவர்தம் வேண்டுதலன்றோ
ஆண்டவன் அருளாய் அப்பரை ஆண்டது? அம்மையார்
உள்ளொளித் திறத்தை என்னென்று கூறுவது? ஒரு பெண்
தெய்வத்தின் வேண்டுதல் எவ்வளவு காரியங்களை நிகழ்த்தியது!
பெண்மையின் பெருமை என்னே! என்னே!

திருவதிகை, அட்டவீரட்டத்துள் ஓன்று. சிவபிரான்
முப்புரம் எரித்த இடம் திருவதிகை என்று புராணம் புகல்கிறது.
“முப்புர மாவது மும்மல காரியம்” என்று திருமூலர் கூறுவறார்.
“அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் – முப்புரம் செற்றனன்
என்பர்கள் மூடர்கள் – முப்புர மாவது மும்மலகாரியம் – அப்புரம்
எய்தமை யாரறி வாரே் எனவரூஉம் அவர்தம் திருமந்திரத்தை
ஓர்க.

திருவதிகை, முப்புரமென்னும் மும்மல எரிவுக்கு
அறிகுறியா யிருப்பது. திருவதிகையில் ஆண்டவன் அப்பருக்குச்
சூலைநோய் தீர்த்து அருள் புரிந்ததும், நம்பியாரூரருக்குத்
திருவடி. தீக்கை செய்ததும் முப்புரமென்னும் மும்மல எரிவை
உணர்த்துவனவாம். வேறு பல அற்புதச் செயல்களும் திரு
வதிகையில் நிகழ்ந்துள்ளன. திலகவதியாரது திருத்தொண்டை
ஏற்ற திருவதிகையில் வீற்றிருந்தருளும் வீரட்டப் பெருமான்
திருவருளை முன்னிட்டுச் “சைவ சித்தாந்த மகா சமாஜம்”
என்னும் பெயரையே பொருளாக் கொண்டு பேசப் புகுகிறேன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *