சித்த மார்க்கம்
திரு. வி. கலியாணசுந்தரனார்

மகா சமாஜம்

சிவபுரியிலிருந்து சைவ சித்தாந்த மகா சமாஜத்துக்கு
வருகிறேன். சிவபுரிச் செல்வம் பெறுதற்குப் பழைய காலத்தில்
பலதிறச் சாதனங்களிருந்தன. இப்பொழுது அவைகளிற் பல –
ஏறக்குறைய எல்லாம், சிதறுண்டும் – பழுதுபட்டும் – போயின.
தற்காலத்துக்குச் சைவ சித்தாந்த மகா சமாஜம் போன்ற
சாதனங்கள் தேவை.

ஒன்றுக்கு ஆக்கந் தேட ஒருவர் இருவர் சேர்ந்து
உழைப்பதினும் பலர் சேர்ந்து உழைப்பது நலம். அப்பலரும்
ஒழுங்குபட்ட ஓர் அமைப்புள் நின்று தொண்டு செய்தால்
பெருநலன் விளையும். அமைப்புக்களாகிய சபைகளின் இன்பத்தைத் தற்கால உலகம் நன்கு நுகர்ந்துவருகிறது. பெரும்பெரும் ஆட்சிமுறைகளெல்லாம் சபைகளின் வாயிலாகவே நடந்துவருகின்றன. “நான்குபேர் கூடுகிற இடத்தில் நான் இருப்பேன்”என்று கிறிஸ்து பெருமான் கூறியருளினர். “வாயாரத்
தன்னடியே பாடுந்தொண்டர் இனத்தகத்தான்” என்று
அப்பரும், “இணங்கத்தன் சீரடியார் கூட்டமும் வைத்து” என்று
வாதவூரடி களும், “நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும்” என்று
பட்டினத்தாரும், “தொண்டரொடு கூட்டுகண்டாய்’ என்று
தாயுமானாரும் சங்கச் சிறப்பைச் சாற்றியருளினர். “திருக்கூட்டச்
சிறப்பு’ பெரிய புராணத்தில் திகழ்கிறது. எதற்கும் ஒருவித
அமைப்பிருத்தல் முறை என்பது பெரியோர் உட்கிடக்கை.
ஆகவே, சிவநெறி வளர்ச்சிக்கெனத் தோன்றியுள்ள சபைகளுக்
கெல்லாம் தாயகமாகச் “சைவ சித்தாந்த மகா சமாஜம்’ என்று
ஒன்றிருத்தல் போற்றற்குரியதே.

சைவ சித்தாந்த மகா சமாஜம் தோன்றி இருபத்தொன்பது
ஆண்டுகளாகின்றன. சமாஜம் அவ்வப்போது ஒவ்வொருவிதத்
தொண்டை ஆற்றி யிருக்கிறது. இப்பொழுது – திருமிகு – மயிலை

பாலசுப்பிரமணிய முதலியார் அமைச்சரா யமர்ந்த நாள்
தொட்டு – சமாஜம், சில நற்காரியங்களை நிகழ்த்தி வருகிறது.
அவைகளுள், பன்னிரு திருமுறையையும் – பதினான்கு
சாத்திரத்தையும் – அடக்கவிலையில் சமாஜம் வெளியிட்டது
சிறப்பாகக் குறிக்கத்தக்கது. இம்முறையில் சமாஜச் சார்பில்
இன்னும் பல நூல்கள் வெளிவருமென்று உலகம் எதிர்பார்க்
கிறது.

சமாஜம் ஆற்றத்தக்க தொண்டுகள் இன்ன இன்ன என்று
பலபடக் கூறலாம். அவைகள் பெரிதும் ஒவ்வோராண்டும்
மேடையில் பேசப்பட்டன. அவைகள் என் காதில் ஒலித்துக்
கொண்டிருக்கின்றன. அவைகளை மீண்டும் இங்கே விரித்துக்
கூறுதற்கு மனம் எழவில்லை. பொதுவாகச் சிலவற்றையும், வரும்
ஆண்டில் செய்யத்தக்க சிலவற்றையும் குறிக்கவே மனம்
எழுகிறது.

சமாஜத்துக்கு ஆக்கந் தேடல் வேண்டும். எவ்வழியில்
சமாஜத்துக்கு ஆக்கந் தேடுவது? நிதிமேல் சிலர் கருத்துச்
செல்லும். நிதி, சில சமயம் நீதிமன்றத்தை நாடும். குறிப்பிட்ட
ஒன்றற்கெனப் பொருள் சேர்த்து, அவ்வொன்றற் கென்றே
அப்பொருளைச் செலவு செய்தல் வேண்டும். பொருளைச்
சேமித்துவைத்தல் கூடாது. அன்புநிதி சேர்த்தல் சிறப்பு. அன்பு
எல்லாஞ் செய்யும். நாயன்மார்கள் அன்புச் செல்வத்தைச்
சேர்த்தே வாழ்வு நடத்தினார்கள். “செல்வன் கழலேத்துஞ்
செல்வம் செல்வமே” என்றார் பிள்ளையாரும். அழுக்காற்றால்
புழுங்காமை, புறங்கூறாமை, பிறர்குற்றம் பாராட்டிக் களியாமை,
தன்னலம் பாராட்டாமை, பொறுமை, ஓப்புரவு, தியாகம்,
சகோதரநேயம், பொதுத்தொண்டில் ஆர்வம் முதலிய
இயல்புகள் சைவ உலகில் ஆக்கம் பெறின், சமாஜம் தானே
ஆக்கம் பெறும். சமாஜ அங்கத்தவரும் நேயரும், நாடோறும்
துயிலெழும் போதும் துயிலப் புகும்போதும், தூயமனங்
கொண்டு, சமாஜ நலன் கருதியும் உலக நலன் கருதியும், கருணைக்
கடவுளை நினைந்து வாழ்த்திவரின், சமாஜம் நலம்பெறும். சைவ
இளைஞர்கள் முயன்று தொண்டாற்றினால், சமாஜ
அங்கத்தவர் தொகை பெருகும். சைவ மங்கையர் அங்கத்தவர்
தொகையைப் பெருக்கச் சமாஜம் உழைக்கும் என்று நம்புகிறேன்.

சைவத்தைச் சிறக்கச் செய்தவர் நால்வர். அவர்களால்
பாடப்பெற்ற கோயில்களே திருக்கோயில்களெனப் போற்றப்
படுகின்றன. அந்நால்வரையும் – அவர்தம் அருள்மொழி
களையும் – சைவவுலகும், கோயில் அதிகாரிகளும் போற்றும்
அளவை ஈண்டு விரித்துக்கூற வேண்டுவதில்லை. மற்ற உலகில்
குருமார் போற்றப்படுவது போலச் சைவ உலகில் குருமார்
போற்றப்படுவதில்லை. ஆதலால், நால்வர் விழாவும், திருமுறை
விழாவும், திருமுறைப் பாராயணமும், பிரசாரமும் நன்முறையில்
திருக்கோயில்களில் நிகழ்த்துவிக்கச் சமாஜம் பெருங்கிளர்ச்சி
செய்வது அறம்.

நால்வர் மொழிகள் அண்டவன் அருள்நாதக் காரியப்
பாடாதலால், அவைகளில் என்றும் தெய்வத் திருவருட்சக்தி
திகழ்ந்துகொண் டிருக்கும். அச்சக்தியைப் பயன்படுத்த
வேண்டுவது மக்கள் கடமை. நால்வர் நன்மொழி, வாழ்வு நலன்
களைத் தரும்; நாள்கோள் கொடுமைகளைப் போக்கும்; பிணி
அறுக்கும். இத்துணை ஆற்றல் வாய்ந்த அருண்மொழி களை
நாம் பெற்றும் பெறாத வறியர்களாக வருந்துகிறோம். நம்பிக்கை
அற்றுவிட்டது. நம்பிக்கைக்குள்ள வல்லமை அதிகம். அஃது
எல்லாஞ் செய்யும். நம்பிக்கையால் மேல்நாட்டன்பர் சிலர்
மருந்தின்றிக் கொடிய நோய்களைத் தீர்த்து வருகிறார். அவர்
களுடைய நம்பிக்கை அவர்களைச் சித்தி பெறச் செய்கிறது.
தெய்வத் திருவருட்சக்தி இடையீடின்றி ஓடிக்கொண்டிருக்கும்
நால்வர் மொழியில் உறுதிகொள்ளுமாறு பொதுமக்களிடைச்
சமாஜத்தார் பிரசாரஞ் செய்தல் வேண்டும்.

பொதுவாகத் திருமுறைகளை ஓதுவது நல்லது. அற்புதப்
பதிகங்களை அடிக்கடி ஓதுவது சிறப்பு. நாடோறும், திருநீற்றுப்
பதிகம், கோளறுபதிகம், திருமுருகாற்றுப்படை, கந்தர நுபூதி
முதலியவற்றை ஓதி உணவுகொள்ள ஓவ்வொரு வரும்
உறுதிகொள்ளல்வேண்டும். இவ்வுறுதி வாழ்வு நலத்துக்கு
வேண்டற்பாலது.

திருக்கோயில்களிலும் பிற இடங்களிலும் வழிபாடுகள்
நடைபெறுகின்றன. ஆனால் அவைகளில் ஒழுங்குமுறை
இல்லை. வழிபாட்டில் ஒழுங்குமுறை இருத்தல் வேண்டும்.
பலரும் ஒன்றி வழிபடுதல், மறை ஓதல் முதலிய நற்பயிற்சிகள்
நம்மிடம் இல்லை. பலரும் ஒன்றித் தொண்டாற்றுதற்குச்
சமாஜம் வழிகாட்டலாம்.

மிகச் சில இடங்களில், விழாக்காலத்தில், பல அன்பர்கள்
ஒன்றுசேர்ந்து, திருவாசகத்திலுள்ள சிவபுராணத்தை ஓதி
வருகிறார்கள். திருப்பதிகளிலெல்லாம் சிவபுராணத்தை
அவ்வாறு ஓதும்படி ஆங்காங்குள்ள சமாஜ நேயர்கள் முயற்சி
செய்வார்களாக.

சைவ உலகம் உறக்கத்தி லிருப்பது உண்மை. உறக்கத்தைப்
போக்கப் பல வழிகள் சொல்லப்படுகின்றன. தற்போது சிறப்பாக
இரண்டு வழிகளைக் கடைப்பிடிக்கலாம். ஒன்று தல
யாத்திரையை உயிர்ப்பிப்பது; மற்றொன்று புராணப்
பிரசங்கத்தைப் பெருக்குவது. இரண்டும் முறைப்படி நடை
பெறின், சைவ உலகில் ஒருவிதக் கிளர்ச்சி உண்டாகும்.

அருணகிரிநாதரின் அருள் நூல்களைப் படிப்போர்
தொகை நாளுக்குநாள் பெருகுகிறது. அத்நூல்களை ஒருங்கே
கொண்ட ஓரு பதிப்பு அடக்க விலையில் வெளிவரின்
ஏழைமக்கள் நலம் பெறுவார்கள். அப்பனுவல்களை வெளி
யிடும் தொண்டில், திருமுறைகளை வெளியிட்டுப் பேரும் புகழும்
பெற்ற சமாஜம் ஈடுபடலாம்.

சாதிமதச் செருக்கும் வேற்றுமையும் நாளுக்கு நாள் அருகி
அருகிப் பொன்றுமாறும், சுத்தசிவமார்க்கம் எங்கெங்குந்
தழைத்து ஓங்குமாறும், சகோதரநேயம் எங்கணும் பெருகு
மாறும் எல்லாம்வல்ல சித்தனாகிய சிவகுருநாதனை நினைந்து
திங்களுக்கு ஒருநாளாதல் அன்பர்கள் தவங்கிடக்க உறுதி
கொள்வார்களாக. அத்தவம் விளம்பரம் அற்றதா யிருத்தல்
வேண்டும்.

வரும் ஆண்டில் இத்தொண்டுகளிற் சிலவற்றையாதல்
நிகழ்த்தச் சமாஜம் விரதம் பூண்பது நல்லது.
இதுகாறும் எனது புன்மொழியைக் கேட்பதில் உங்கள்
அரிய காலத்தைச் செலவழித்தீர்கள். உங்கள் பெருந்தகைமைக்கு
எனது வணக்கம் உரியதாக, பிழை பொறுக்க.

சைவசித்தாந்த மகா சமாஜம் வாழ்க; சைவம் வாழ்க; உலகம் வாழ்க.

திரு.வி.க

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம் அர தாமமே
கூழ்க வையக முத்துயர் தீர்கவே”

முற்றும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *