உத்தராயணம் 
லா. ச. ராமாமிருதம்

உத்தராயணம்
லா. ச. ராமாமிருதம்

மாஸு

மாஸு, நினைவிருக்கிறதா? நாம் சந்தித்த புதுசு. எனக்கு ராயப்பேட்டையில் ஜாகை. நீங்கள் டவுன். இரவு எட்டுமணி வாக்கில் வருவீர்கள் – நீங்கள், தாத்து, செல்லம், ரங்கநாதன். எல்லோரும் பேசிக்கொண்டே மரீனா வழியே நடந்து, தங்கசாலைத் தெருவில் ஒரு குஜராத்தி பவன் – பூரி, பாஜி; சேறாட்டம் பால், அதன்மேல் கணிசமாக மிதக்கும் ஏடு. அப்படியே பேசிக் கொண்டே கோவிந்தப்ப நாய்க்கன் தெரு: விளக்கு வெளிச்சத்தில், இரவு பகலாகியிருக்கும். மார்வாரிப் பெண்டிர், வளையல்களும், பாதங்களில் தண்டையும், கொலுசும் குலுங்க, விதவிதமான வர்ணங்களில் மேலாக்குகள் சுழல, தெருவில் கும்மியடிக்கையில் – இது சௌகார்பேட்டையா, பிருந்தாவனமா?

அப்படியே பேசிக்கொண்டே, கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்குக் குறுக்கே வெட்டி, காந்தி – இர்வின் சாலை வழியே பேசிக் கொண்டே மீண்டும் மரீனா பீச்; நள்ளிரவில் பட்டை வீறும் நிலா. பேசிக்கொண்டே, பைக்ராப்ட்ஸ் ரோடு, விவேகானந்தர் இல்லம், ஐஸ்ஹவுஸ் ரோடு, பெஸண்ட் ரோடில் என் வீட்டில் என்னை விட்டுவிட்டு, மணி இரண்டாகிவிடும். பிரியாவிடையில் டவுனுக்குத் திரும்புவீர்கள். நம் அத்தனை பேருக்கும் அதென்ன பைத்யக்காரத்தனமோ?

ஞாயிறு, சிந்தாதிரிப்பேட்டையில் ‘பீஷ்மன்’ வீட்டுக்குச் செல்வோம். அடை டிபன். அதன் விறைப்பான மொற மொறப்பின் மேல் எண்ணெயின் நக்ஷத்திர மினுக்கு. நல்ல உணக்கை; காரம் சற்று கூடத்தான்.

பேசுவோம். பேசுவோமோ என்னதெல்லாம் பேசுவோம், இலக்கியம், சினிமா, ஆண்டாள், நியூ தியேட்டர்ஸ், ஸெய்கல். கம்பன், ‘துனியா ரங்க ரங்கே’, ஆழ்வாராதிகள், தேவகி போஸ் தேவதாஸ், வித்யாபதி, பாரதி, ராஜாஜி, நேரு, அத்வைதம், வசிஷ்டாத்வைதம். ஆவாரா – பேச்சு எங்கெங்கோ தாவி, நம்மை இழுத்துச் செல்லும் தன் வழியில். பலகணிகள் ஏதேதோ திறக்கும். புது வெளிச்சம், புது திருஷ்டிகள். புதுக் கூச்சங்கள் வியப்பாயிருக்கும், ஆனந்தமாயிருக்கும், சில சமயங்களில் – –

பயமாயிருக்கும்.

ஆதியப்ப நாயக்கன் தெருவில் ஒரே வீட்டில், பதினெட்டு குடித்தனங்களில், உங்களதும் ஒன்று. “அது ஒரு Community life; நன்றாய்த்தானிருந்தது” என்பீர்கள். உங்களுடைய சுபாவமே அப்படி. ஆயிரம் சோதனைகளுக்கு நடுவில், எனக்குத் தெரிந்து நீங்கள் உங்களை வெறுத்துக்கொண்டோ, பிறரைச் சுளித்தோ ஏதும் சொன்னதில்லை.

மாஸு, நினைவிருக்கிறதா, ஆதியப்ப நாய்க்கன் தெருவில், நீங்கள் இலவசமாக நடத்திய ஹிந்தி வகுப்புக்கள் நடந்த, ஓலைக்கூரை வேய்த மொட்டை மாடியில் தான் ஜனனி – என் முதல் கதைத் தொகுதிக்கு வித்திட்டவர் நீங்கள்தான்.

நானும் முப்பது வருடங்களில் பார்க்கிறேன், உங்களிடம் அசைக்க முடியாத சில திடங்களும் கொள்கைகளும் இருக்கின்றன. உடல் பூஞ்சையானாலும், நீங்கள் பலவான்தான். உங்கள் செயல்படலில் ஓசை கேட்பதில்லை. ஆனால் காரியம் முடிந்தபின், அதைவிடச் செவ்வென அது இருக்க முடியாது.

நம் ‘ஜமா’ எப்பவோ கலைந்துவிட்டது. அவரவர் எங்கெங்கேயோ. ‘பீஷ்மனை’ அபூர்வமாகச் சந்திக்கிறேன். ஆனால், தருமபுத்ரனின் சத்யரதம்போல், பூமியில் பாதம் பாவாத அந்தப் பரவச நாட்களின் அடையாளமாக நீங்கள் எனக்குத் திகழ்கிறீர்கள்.

மாஸு, நினைவிருக்கிறதா? – இந்த அடியெடுப்பு என் சமுத்ரம் தாண்டலுக்கு எனக்கு ஹனுமத் பலம்; என் ககனத்துக்கு என் இறக்கை விரிப்பு: மாஸு –

லா. ச. ராமாமிருதம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

இணைப்பை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!