
உத்தராயணம்
லா. ச. ராமாமிருதம்
7. ஆஹூதி
குபீரென்று தாழம்பூ மணம் அறையைத் தூக்கிற்று. நள்ளிரவில் யோசனையின் அரை மயக்கத்திலிருந்து – என் வயதில் எதைத் தூக்கம் என்று சொல்வது? ஆயிரம் கவலை நானாக விலைக்கு வாங்கிக் கொண்டது, பிறர் எனக்குத் தந்து அதற்கும் பழி என்மேல் சுமத்துவது… கொடுத்த கடன்கள் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையை ஆட்டுகின்றன.
(“கொடுக்க மாட்டேன்னா சொல்லுறேன்? வாங்கினதை இல்லேன்னா நாக்குப் புழுத்துப் போயிடும். ஆனால் நீங்கள் கொஞ்சம் பொறுக்கணும். எப்போன்னு கேட்டால் எப்படிச் சொல்லுவது? காலம் போற போக்கு உங்களுக்குத் தெரியாதில்லே. பொண்ணுக்குப் போன மாதம் ஆபட்ஸ்பரியில் பூப்பு கொண்டாடினேன். அழைப்பு வந்திருக்குமே. பார்த்தீங்களா? ஒண்ணே அடக்கம் ரூ. மூணு ஆவுது. ஊரே திரண்டு வந்தது. ஷேக் சின்ன மௌலானா வெச்சிருந்தேன். சாமிதான் வரல்லே. சாமிக்குக் கோவம். ஒண்ணு வெச்சுக்கங்க. ஒங்களது செல்லிக்காசு ஒண்ணு போவாது. கொஞ்சம் முன்னே பின்னே! அவ்வளவுதான்.”
அவனுக்குப் பூப்புக்கு அழைப்பு ஒண்ணு ரூ.3/- எனக்கு அரிசிக்காரனுக்கும், பால்காரனுக்கும் நாளை சால்ஜாப்பு சொல்லியாகணும். இவன் வட்டியை அளக்கவே இவ்வளவு பேச்சு. முதல், முள்மேல் போட்ட துணி. அம்மா, உன் காப்பிக்கொட்டைச் சங்கிலிக்குத் தலை வலிக்கிறது. நீ காலமாகி வருடம் பன்னிரண்டு. உன் கழுத்திலிருந்த மகிமைக்கு இத்தனை நாள் காப்பாற்றி வைத்திருந்தேன். இனி என் செய்வேன், ஒண்ணும் புரியல்லியே)
மையிருளில், நள்ளிரவில், குபீரென்று தாழம்பூ மணம் அறையைத் தூக்கிற்று. இது ஒரு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. திடீரென்று வேளையில்லாத வேளையில் தார், ரப்பர், வறுத்த காப்பிக்கொட்டை – இதுபோன்ற வாடைகள், பிறகு நாற்றங்கள் – நான் செந்தமிழ் பேசவில்லை, நாற்றம் என்றால் நாற்றத்தைத்தான் குறிக்கிறேன். கிளம்பும். ஆனால் வழக்கமாக தாழம்பூ மணத்தைப் பாம்பின் நடமாட்டத்தோடு இணைத்துப் பேசுவார்கள். என் அறைச்சுவர் வெடிப்பில் சுகமாகப் படுத்துக் கொண்டிருக்கிறதோ….? ‘குப்’பென்று வேர்த்து விட்டது. விளக்கைப் போட பயம்.
முதலில் இருக்கிறதோ இல்லையோ? மணங்கொண்டு மனம் சிருஷ்டித்தது தானே என்று மனத்தைத் தாண்டி துணிச்சல் வரவில்லை. மேலே ஊறும் வரை (சில்லென்று அல்லித் தண்டு மாதிரியிருக்குமாமே! அல்லித்தண்டைப் பார்க்கவோ, பார்த்திருந்தாலும் அதைத் தொடவோ நேர்ந்ததில்லை) அல்ல…. வெடுக்கென்று பிடுங்கி அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருக்கும் வரை விளக்கைப் போடத் துணிச்சல் இல்லை. முதலில் கைகால்களில் செயலில்லை. பயமா? மண மயக்கமா? அதுவும் இதுவுமாய் என்னைப் பழைய வாசனைகளில், படகாய் இழுத்துச் சென்றன.
மஞ்சள் குங்குமத்துடன் அம்மா வாழ்ந்த நாளில் கூந்தல் முடிச்சில் சமயங்களில் தாழம் மடல், சொருகிய கத்திபோல் சின்ன பேனாக்கத்தி – எட்டிப் பார்க்கும். எந்தப் பூவுமே அப்படித்தான். மல்லியானால் சும்மா இரண்டு பூ. சாமந்தி ஒண்ணே ஒண்ணு. ரோஜா வைத்துக்கொண்டு பார்த்ததேயில்லை. அம்மா பூவைச் சரமாக அணிந்தே நாங்கள் பார்த்ததில்லை. பின்னிப் பூ முடிக்கும் நாளிலேயே அம்மா பின்னிக்கொள்வதை விட்டாச்சு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏதோ சச்சரவு. நான் கைக்குழந்தையோ – கையைப் பிடித்துக் கொள்கிற குழந்தையோ, தாழம்பூ ஜடை தைத்துக்கொண்டு அம்மா பெருமையாக அப்பாவிடம் காட்ட வர அப்பா நோயாளி. பல கவலைகள், ஏதோ கொடுமையாகச் சொல்ல. (என்னென்று எனக்குத் தெரிந்தாலும் சொல்ல மாட்டேன்)
அம்மா ரோஷக்காரி. அன்றிலிருந்து பின்னிக் கொள்வதையே விட்டுவிட்டாள். பிறகு மாமியார் மருமகளுக்குப் பரிந்து கொண்டு பிள்ளையைக் கடிந்து கொள்ள அப்பாவே பச்சாத்தாபங் கண்டு அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும், பிறகு மாமியார், நாட்டுப் பெண்ணைக் கடிந்து கொண்டு, “நன்னாயிருக்குடி நீ வஞ்சம் கொண்டாடறது. என் பிள்ளை ஏற்கெனவே சீக்காளியா இருக்கான்!” ஊ….. ஹும்.
கடைசியில் சமாதானச் சின்னமாக, பகவான் தாழம் பூவை மன்னித்த மாதிரி அம்மாவின் கூந்தல் முடிச்சில் சமயங்களில் சொருகிய சின்ன பேனாக்கத்தி போல் தாழம்பூ மடல் தகதகவென கமகமக்கும். அல்லது கமகமவென தக தகக்குமா? கம கம தக தக… சிந்தனையின் ஸ்வரம் எப்படி மணக்கிறது!
அப்பாவின் நோய்க்கும் எரிச்சலுக்கும் ஆனால் காரணமுண்டு. நான் யார் பக்கமும் கட்சி பேச வரவில்லை.
இப்பவும் ஆஸ்துமாவுக்கு நிரந்தர குணம் உண்டோ? எனக்குத் தெரியாது. ஆனால் அப்போது மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் இந்த அளவுக்கு முன்னேறவில்லையே? ‘அவரை உயிரோடு காணனும்னா பட்டண வாசம் இனிமேல் அவருக்கு ஆகாது. திறந்தவெளியும் காற்றோட்டமும் காண கிராமத்துக்குப் போயிடுங்கள்’ என்று வைத்தியன் தீர்ப்பு அளித்துவிட்டான்.
அப்பா யானைக்குட்டி மாதிரியிருப்பார். தொந்தியில்லை, கெட்டிச் சதை, காலையில் டர்பனைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டாரானால், வெறும் டியூஷனிலேயே மாதம் ரூ. 200/- வருமானம். பள்ளிக்கூடத்தில் சம்பளம் தவிர, பரீட்சைத்தாள் திருத்தல் Extra. அடேயப்பா! அந்த நாளில் அது என்ன கடல் தெரியுமா? கப்பலில் தான் மிதந்தோம், என்ன செல்வாக்கு, எத்தனை உறவுகள்! வருவோருக்கும் போவோருக்கும் எங்கள் வீடு ஒரு ஜங்ஷன், இரண்டு வேளையும் பருப்போடு சமையல். இரண்டு வேளை டிபன். நொறுக்குத் தீனி; எத்தனை வேளை வேணுமானாலும் காபி. அம்மாவுக்கு நன்னா பண்ணனும், நாலுபேருக்கும் கொடுக்கணும். தவிர, விருந்தினர்கள் நாங்கள் வெறுங்கையோடு வரவில்லை என்று ஜாடை காட்டும் பிஸ்கட் பாக்கெட், காராபூந்தி பொட்டலம், வாழைப்பழச் சீப்பு – இதெல்லாம், குழந்தைகள் எங்களுக்கு அலுத்துவிட்டால் அப்புறம் நாங்கள் குழந்தைகள் எப்படி…?
ஒரு நிமிஷம் சும்மாயிருக்க முடியாத அப்பாவைத் திடீரென்று கிராமத்தில் எங்கோ போர்டு ஸ்கூலில், முப்பது ரூபாய் சம்பளத்தில் தள்ளிவிட்டால்…
Cinderella – வுக்கு மணி 12 அடித்தாற்போல் – மந்திரக் கோல் வீச்சுப்போல், எல்லாம் திடீரென்று ‘அந்த நாளாக’ மாறிப்போனால் அப்பாவுக்கு எப்படித் தாங்க முடியும்?
“அம்மாவின் சரடு உரத்தில் தான் ஐயாவின் மூச்சு இழையோடுது. பாட்டி நீங்க இனி ஊர்க்கவலையைப் படாதீங்க. ஒழுங்கா நீங்க புள்ளை கைக்கொள்ளி வாங்கிட்டுப் போற வழியைப் பாருங்க”ன்னு குடும்பத்தின் பரம்பரை ஜோஸ்யன் சாமிநாத பண்டிதன் அம்மாவுக்கும் பாட்டிக்கும் தீர்ப்பு சொல்லிவிட்டான்.
கூட்டமும் கும்மாளமும் சிட்டாய்ப் பறந்துவிட்டது. அனுதாபம் விசாரிக்கக் கூட ஒருவரும் வரவில்லை. அப்பா தான் பொருமுவார். அம்மா dont care. ‘நமக்கு நாம் இருக்கும் வரை நமக்குக் கவலையில்லை’ என்று சொல்லிக் கொண்டே குத்துவிளக்கை ஏற்றுவாள். ஆனால் இன்னும் பின்னித் தொங்கவிட்டுக் கொள்ளவில்லை. எடுத்துக் கட்டிக் கொள்ளவில்லை. சபதத்தில் முடித்த கூந்தலில் ஒரு தாழம்பூ மடல் கத்தி போல் அம்மா பேச்சுக்கு சாட்சியாகக் குத்திட்டு நிற்கும்.
நமக்கு நாம் என்று சவால் விடலாம். ஆனால் நடை முறையில்..
ஒருமுறை சித்தப்பா பட்டணத்திலிருந்து நாலு நாள் ரஜாவில் வந்திருந்தார்.
“சப்தரிஷி, இந்தப் பையன்கள் இங்கேயிருந்தால் மாடு மேய்க்கத்தான் லாயக்குபடுவார்கள். மூத்தது ரெண்டையும் என்னோடு அனுப்பி வை.”
“நீ சொல்றது என்னமோ வாஸ்தவந்தான். ஆனால் அம்பி, என் நிலை உனக்குத் தெரியும். அவர்கள் சம்பளத்துக்கோ, சாப்பாட்டுக்கோ, ஒத்தாசையா பணம் அனுப்பவோ எனக்கு வழியில்லை.”
“என்னடா பிரிச்சுப் பேசறே?” – சித்தப்பா சீறினார். அந்த நாளின் வேர்களே வேறு! என்னையும் சிவாவையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.
“நன்னாப் படிச்சு இறக்கையை விரிச்சு முன்னேறப் பாருங்கோ.”
“சமத்தாப் படிங்கோ.”
சித்தப்பாவின் யதார்த்த புத்திமதிக்கும். அம்மாவின் ஆசிபலத்துக்குமிடையே எங்கள் அதிர்ஷ்டமும் சேர்ந்து கொண்டு நாங்கள் சிரத்தையாகவே படித்தோம். சிவா பரவாயில்லை. நானே சொல்லிக் கொண்டாலும் என் மார்க்குகள் ஏற்றம் தான். ஏழாம் வகுப்பிலிருந்தே நான் merit scholarship.
வருடம் மும்முறை நவராத்திரி, கிறிஸ்துமஸ், கோடை விடுமுறைக்கு கிராமத்துக்கு வந்துவிடுவோம்.
“அம்மாவிடம் பால் குடிக்கப் போறேளா…?” – சித்தி கேலி பண்ணுவாள். ரோசமாயிருக்கும். ஆனால் நாங்கள் ரோசங் கெட்டவர்கள். ஒரு வேடிக்கை. சென்னையில் அவ்வளவு ஒற்றுமையாக இருப்போமே….. இங்கே காலடி வைத்தது தான் தாமதம், பழி, சண்டை எங்களிடையே மூண்டு விடும்! “என் ராசிடா!” அம்மா தலையிலடித்துக் கொள்வாள்.
எனக்குப் பன்னிரண்டு. அவனுக்குப் பத்து. அண்ணன் தம்பிகளிடையே சண்டை வரக்கூடாதென்றால் ஒன்று இரட்டைப் பிறவியாயிருக்கணும். அல்லது வயது வித்தியாசம் கணிசமாயிருக்கணும். இப்படி இரண்டுங்கெட்டானாய் இரண்டு மூணு வயதிருந்தால், பிறந்ததிலிருந்தே பங்காளிக் காய்ச்சல் தான்! எல்லாவற்றிலும் மேல், அண்ணன் தம்பியாப் பிறக்கக்கூடாது.
பிள்ளைகள் விடுமுறைக்கு வந்திருக்குக! அம்மா வித விதமா எங்களைக் கவனிப்பாள். வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல், கத்தரிக்காய் எண்ணெய்க்கறி, பதக்கம் பதக்கமாக வெங்காய பஜ்ஜி, பின்னால் வயிற்றை ஒடுக்கி, வாயொடுக்கி என்ன ஆறதோ? இப்போ எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாயிருக்கோம். அன்றிலிருந்து இன்று வரை ஆயிரம் பேசுகிறோம்…. கலை, வேதாந்தம், விஞ்ஞானம், ஆனால் எல்லாம் கடைசியில் முடிவது தீனியிலும் திண்டியிலும் தான்!
ஓர் இரவு மதறாஸில் புயல் அடித்தது. தெருவில் தந்திக் கம்பங்களிடையில் காற்று ஊளையிட்டது. நாங்களிருவரும் போர்வைக்குள் வெடவெடவென்று, ஒருவரையொருவர் அணைத்தபடி நடுங்கிக் கொண்டிருந்தோம். குளிரினால் அல்ல. Binny போர்வை நல்ல கதகதப்பு. ஊரிலே அம்மா, அப்பா, பானு, வைத்தி, ராமு இப்போ என்ன பண்ணின்டிருக்காளோ பழைய வீடாச்சே! பெருந்திருவே – (இது பாட்டி பாடம்: ‘எது என்னவானாலும் நம் குலதெய்வத்தை மறந்துடாதேங்கோ) அவாளைக் காப்பாத்து!
ஆனால், நான் இங்கே சொல்லவந்தது, சித்தப்பா வீட்டுக்கு நாங்கள் போனபிறகு திரும்பிய முதல் நவராத்திரி விடுமுறை போது நேர்ந்த ஒரு சம்பவம் பற்றி. என்னவோ ஆரம்பித்து, எங்கெங்கோ சுற்றி வந்துவிட்டேன்.
நவராத்திரி வெள்ளிக்கிழமை அம்மா பாயசம் பண்ணினாள். பண்ணிக் கொண்டிருந்தாள். சேமியாப் பாயசம்.
“ஏண்டி சீமதி சேமாயி, நைவேத்யத்துக்கு எடுத்ததோ?” பாட்டியிருந்தால் கேட்டிருப்பாள். பாட்டி சென்னையில் இருந்தாள். ஆனால் அம்மா அதுக்கும் பதில் வைத்திருப்பாள். “ஆமாம்; சாமி பேரில் நாம்தானே குடிக்கிறோம்! ஏதோ பாயசத்தில் பாலை அம்பாள் ஏத்துண்டால் சரி.” சேமியா பாயசம்னா எனக்கு உசிர்!
திடீரென சிவாவுக்கும், எனக்கும் போர் வந்துவிட்டது. காரணம் வேணுமா என்ன…? மறந்து போச்சு. எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் அப்பவே என் தமிழ்ப் பாடத்தில் வந்தாச்சு! ஏதோ ஸ்லேட்டு குச்சி அல்ல, துண்டு பென்சில் அல்ல. ஒட்டு பொம்மை அல்ல… ஒண்ணுமே வேண்டாம். “நீ ஏண்டா என்னையே பாத்துண்டிருக்கே…?” அது போதுமே – நேரே கைகலப்புத்தான். கட்டிப்பிடித்து விழுந்து அடுப்படியில், அம்மா காலடியில் பூனைக்குட்டி போல் உருண்டோம்.
“சனியன்களா நெருப்பிலே சாக இங்கேதான் வேளை தேடினேளா…?” மொத்து மொத்து…. மொத்தல் இரண்டு பேருக்குமே விழுந்தது. கைப்பாத்திரத்தாலேயே தம்பி தலையில் நெத்தினாள். அவன் துடைத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டான். அவனை உத்தேசிக்கையில் எனக்குக் கிடைத்த தண்டனை ஒன்றுமேயில்லை.
நான் பேசாமல் போய் கூடத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டேன். வேதாளம் என்னுள் வேலை செய்ய ஆரம்பித்தது. அம்மா என்னை அடிக்கலாமா? இத்தனை நாள் பிரிஞ்சுட்டு ஊரிலிருந்து வந்திருக்கேனே! நன்னாப் படிக்கறேனே! ராமேசுவரம் போய் தவங்கிடந்து பெற்ற பிள்ளையாச்சே! அம்மா ஜாடையை வேறு அப்படியே உரிச்சு வெச்சிருக்குன்னு எல்லாரும் சொல்றாளே! நான் அப்போ எவ்வளவு அருமையாயிருக்கணும்! புறுபுறுவுக்குப் பளிச்சென்று தனித்தனியாக வாதங்கள் உறுதி தெளியவில்லை. ஆனால் அடிப்படை என்னவோ இதுதான். இது வாய்த்தானிருக்கணும்.
குங்குமப்பூ கூடத்துக்கு மிதந்து வந்தது. அம்மா ஒண்ணு குறை வைக்கமாட்டாள்.
“சாப்பிட வாங்கோ பசங்களா!”
சிவா அப்பவே கையில் பொரித்த அப்பளத்துடன் சமையலறையிலிருந்து வந்தாச்சு. அம்மா சாமிக்குக் கையெல்லாம் சமையலறையிலிருந்தே காட்டி விடுவாள். பாட்டியிருந்தால் பூஜை, ஸ்தோத்திரம் இன்னும் அரை மணி நேரம் கூட ஆகும். பசி வயிற்றைக் கிள்ளிற்று.
அம்மாவே இன்னிக்கு எல்லாருக்கும் தாலங்களை அலம்பி வைத்துவிட்டாள்.
சாஸ்திரத்துக்கு முன்கலத்துக்குப் பாயசத்தைச் சொட்ட என்னிடம் வந்ததும் நான் இரண்டு கைகளையும் குறுக்கே மடித்துக் கொண்டு வேண்டாம் என்கிற முறையில் தாலத்தின் மேல் முதுகு வரை முகம் கவிழ்ந்தேன். அம்மாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
‘‘இதென்னடா நாட்டியப் போஸ்? நிமிர். அப்புறம் நிறைய ஊத்தறேன்.”
நான் பேசவில்லை. தலையை உரமாக ஆட்டினேன்.
“எனக்கு வேலை தலைக்கு மேல் இருக்கு. நேரங் கிடத்தாதே. உன் விளையாட்டெல்லாம் அப்புறம். ஊம்!”
தாலத்தை மறைத்த கை கலையாமல் நான் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“என்னேங்கறே? பாயசம் வேண்டாமா?”
‘வேண்டாம்’ என்கிற முறையில் தலையை ஆட்டினேன்.
வேண்டாம்? – சிரித்த முகம் இறுகத் தலைப்பட்டது.
“வேண்டாம்?”
அவ்வளவு தான். உருளியோடு தூக்கிக் கொண்டு போய்ப் ‘படக்’கென்று தொட்டி முற்றத்தில் சாய்த்துவிட்டாள்.
எனக்கு உடம்பு வெலவெலத்துப் போய்விட்டது. ஏன் உண்மையைச் சொல்கிறேனே – அரை நனைந்துவிட்டது. நான் எதிர்பார்த்தது இது அல்லவே! எல்லா அம்மாக்கள் மாதிரி: “குங்குமப்பூ போட்டிருக்கேண்டா…. கறந்த பாலைக் காய்ச்சி விட்டிருக்கேண்டா….. அத்தனையும் நெய்டா! உனக்குப் பிடிக்குமேன்னு பண்ணினேண்டா! உனக்குன்னு பண்ணினேண்டா! வேண்டாங்காதடா கண்ணு…”
அட, என் வயதுக்கு மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டாம் ஒரு ‘கண்ணு’க்கு வயசு மீறிப்போயிடுத்தா என்ன?
அம்மாவைப் பார்க்கப் பயமாயிருந்தது. அவள் கண்கள் கொதித்தன. முகம் குங்குமப் பிழம்பாகிவிட்டது. என் தம்பிகள், தங்கைகள் அழ ஆரம்பிச்சுடுத்துகள். “அம்மா”ன்னு அலறிண்டு எல்லாரும் ஓடிப்போய் அவளைக் கட்டிண்டோம். எங்களை அணைத்துக் கொண்டாள்.
சமையலறையைக் குங்குமப்பூவின் மணம் தூக்கிற்று. யாகக் குண்டம் போல் தொட்டி முற்றத்தில் ஆவி புகைந்தது. முந்திரியும், வறுத்த திராஷைப் பழங்களும் அத்தனை முழிகளாய் விழித்தன. சேமியா ஆவியின் அசைவில் நெளிந்தது. அம்மாவின் கூந்தல் முடிச்சிலிருந்து ஒரு மல்லிப்பூ அதில் உதிர்ந்திருந்தது.
அன்றிரவு அம்மா மறுபடியும் சேமியா பாயசம் பண்ணினாள். நன்றாய்த்தானிருந்திருக்க வேண்டும். அம்மாவுக்கு வேறெப்படியும் பண்ண முடியாது. ஆனால், இது சலித்த பாயசம் பண்ணி, நாங்கள் யாருமே சுவைக்காது ஆஹுதியாகப் போன பாயசம்தான். பாயசம் எனக்கு.
அந்த நாளின் வேர்களே வேறு!
***
தாழம்பூ மணம் அறையில் பின் வாங்கி விட்டது. விளக்கைப் போட்டேன். சுவர் வெடிப்பில், பயந்தபடி எதையும் காணோம்! ஆனால் வெடிப்பு இப்போ அங்கு மட்டுமல்ல…



