பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
மறைமலையடிகள்

பின் இணைப்பு

1. உயிர்களின் தோற்றம்

இந் நில உலகத்தில் உயிர் உள் பொருள்களும் உயிர்இல் பொருள்களும் ஆகிய இருவகையும் ஒருங்கு காணப்படுகின்றன. இவற்றுள், உயிர்உள் பொருள்களுக்குப் பயன்படுமுகத்தால் உயிர்இல் பொருள்கள் ஆராய்ந்தறியப்படுகின்றனவேயன்றி, இவை முன்னையவற்றின் தொடர்பின்றி அங்ஙனம் அறியப் படுதலைக் காண்கிலேம். ஆகவே, உயிர்ப் பொருள்களைப் பற்றித் தெளிவான அறிவு பெற்றால், அவ்வறிவு பெறுவார்க் கெல்லாம் அஃது அறிவும் இன்பமும் அளித்து, அவரது மண்ணுலக வாழ்க்கையை விண்ணுலக வாழ்க்கை யோடொப்பச் செய்யுந் திறத்ததாம் என்பதனை அனைவரும் நினைவிற் பதித்தல் வேண்டும்.

இனி, இங்ஙனம் இன்றியமையாது ஆராய்ந்து அறியற் பாலனவாகிய உயிர்களோ எண்ணிறந்த கோடியன; என்றாலும், அவைதம்மிற் புலனாகும் உணர்வின் அறிவின் பெருமை சிறுமை கண்டு, அவைதம்மை ஆறு தொகுதிகளாகப் பகுத்துப், பண்டைத் தமிழாசிரியராகிய தொல்காப்பியனார் அளவுபடுத்தி யிருக்கின்றார். தொட்டாலுணரும் உணர்ச்சிமட்டும் உடைய ஓர் அறிவுயிர்களும், தொடுதலுடன் நாவினாற் சுவைத்துணரும் ஈர் அறிவுயிர்களும், தொடுதல் சுவைத்தலுடன் மோந்துணரும் மூக்குணர்வும் வாய்ந்த மூவறிவுயிர்களும், இம் மூன்றனுடன் கண்ணாற் கண்டுணருங் கண்ணுணர்வும் வாய்ந்த நாலறிவுயிர்களும், இந்நான்கனுடன் செவியாற் கேட்டுணருஞ் செவியுணர்வும் வாய்ந்த ஐயறிவுயிர்களும், இனி இவ்வவைம் புலன்களால் அறிந்தவற்றை, நல்லதிது தீயதிது, இஃது இதனையொப்பது, இஃது இதனின் வேறாவது எனப்பகுத்துக் காணும் மனவறிவும் ஒருங்குகெழுமிய ஆறறிவுயிர்களும், என ஆறு பெரும்பகுப்பில் எல்லா உயிர்களையும் அடக்கி, அவற்றிற்கு ஒவ்வொரு பகுப்பிலிருந்தும் ஒருசில உயிர்களையும், அவற்றின் அறிவியக்கத்தையும் எடுத்துக்காட்டி யிருக்கினறார் ஆசிரியர். இவ்வாறாக உயிர்களெல்லாவற்றையும், அவ்வவற்றின்கட் காணப்படும் அறிவின் ஏற்றத்தாழ்வு கண்டு, ஆறு வகையில் அடக்கிக்காட்டிய மிகப் பழைய நூல் தமிழ் மொழியிலுள்ள தொல்காப்பியத்தைத் தவிர, வேறெந்தப் பழைய மொழியிலும் எந்தப் பழைய நூலும் இல்லாமை கருத்திற் பதிக்கற்பாற்று. இதுகொண்டு, பழைய தமிழாசிரியரின் நுட்ப ஆராய்ச்சியறிவின் மாட்சி தெற்றென விளங்காநிற்கும்.

இனி, இங்ஙனம் பகுக்கப்பட்ட அறுவகை உயிர்களில், மனவறிவுடன் ஆறறிவுகூடிய மக்களே உயர்ந்த பிறப்பினர். அதனால், ஆசிரியர் தொல்காப்பியனார் மக்களை “உயர்திணை” என்றும், மக்கள் அல்லாத ஏனை ஐந்தறிவுக்குட்பட்ட உயிர்களை “அஃறிணை” என்றும் வழங்கினார்.

இனித், தொடுதலுணர்ச்சி ஒன்றேயுடைய புல்லும் மரனுமே முதன்முதற் றோன்றிய உயிர்களாகும். இந்நிலவுலகத்தின் மேற்பரப்பெல்லாங் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பனிப்பாறைகளால் மூடப்பட்டிருந்தன. அப் பனிப்பாறைகள் பகலவன் வெப்பத்தால் உருகிக் கரையக் கரைய, நீர்பெருகிப் பள்ளத்தாக்கான இடங்களில் நிரம்பிக்கொண்டு பரம்பவே, ஆறும் ஏரியும் சிறுகடல் பெருங்கடல்களுமாகிய நீர்நிலைகள் தோன்றலாயின. பின்னர், இந் நீர்நிலைகளின் அடிப்படையில் ஓரறிவுயிர்களிற் கடைப்படி யினவாகிய நீர்ப்பூண்டுகளும், ஈரறிவுயிர் களாகிய நத்தை, சங்கு, இப்பி, கிளிஞ்சில் முதலியனவும், மூவறிவினதாகிய அட்டையும், நான் கறிவினதாகிய நண்டும், ஐயறிவினவாகிய மீன்களும் பிற் பிற்காலங்களிற் றோன்றுவ வாயின. நீரின்கட்டோன்றிய நிர்ப்பூண்டுகள் காலஞ் செல்லச் செல்ல நிலத்தின்மேல் இவர்ந்து வளர, அவற்றையடுத்து வான்அளாவிய பரிய பரிய மரங்கள் தோன்றலும், அவை அடர்ந்த காடுகள் பல ஆங்காங்கு இம்மண்மிசைப் பொலிவவாயின.

இத்தகைய காடுகளிற் பல பல்லாயிர ஆண்டுகளுக்குப்பின் மடிந்து நிலத்தின்கட் புதைந்து போகவே, பட்டுப்போன அவைகளின் மரங்கள் பல நூற்ண்டுகளுக்குப் பின் கரிகளாக உருமாறின; அங்ஙனம் மாறிய கரிகளே, இப்போது நிலத்தை அகழ்ந்த சுரங்கங்களிலிருந்தும் மிகுதியாய் எடுக்கப்பட்டு, நீராவி வண்டிகளையும், நீராவிக் கப்பல்களையும் விரைவாகச் செலுத்துதற்குப் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன.

இனி, நிலத்தின்௧ண் இயங்கும் உயிர்களில் இருப்பன, ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவனவாகிய எல்லா உயிர்களும் முதன்முதல் நீரின் கட்டோன்றிப் பிற்காலங் களிற்றாம் நிலத்தின்மேல் ஏறிவந்து உயிர்வாழப்பெற்றன. இதற்குச் சான்றாக நீர்க்கோழியையும் நீராமையையும் உற்றுப் பார்மின்கள்! நீர்க்கோழி நீருள் அமிழ்ந்தி வாழவும் வல்லது, நிலத்தின் மேல் இயங்கவும் வல்லது, வானிற் பறந்து செல்லவும் வல்லது. மற்று, நீராமை நீரில் நீந்தி உயிர்காவழ்தற்குத் துணைசெய்யும் செட்டைகள் வாய்ந்ததாயிருத்தல் போலவே, நில ஆமை நிலத்தின்மேல் நடமாடுதற் கேற்ற அடிகளுடன் கூடிய கால்கள் வாய்த்திருத்தல் அறியற்பாலது. இன்னும் நிலத்தின்கண் உலவும் நாய், குதிரை, யான, குரங்கு முதலான விலங்குகளோ டொப்ப, நீர்நாய், நீர்க்குதிரை, நீர்யானை, நீர்க்குரங்கு, முதலான விலங்குகள் கடலின்௧கண் உலவா நிற்றலைக், கண்காட்சி நிலையங்களில் அவைதம்மிற் சில கொணர்ந்து வைக்கப்பட்டிருத்தலைக் கண்டு நன்கறியலாம்.

இன்னும், நிலத்தின்மேல் உள்ள உயிர்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிய உருவம் வாய்ந்த உயிர்கள், மக்கள் தோன்றாத அந்நாளிற் கடல் நீரிலும் மணல்வெளிகளிலும் இயங்கின. மக்கள் தோன்றிய பின்னாளிலும் அவ்விரண்டிலுங் காணப்பட்டு வருகின்றன. நிலத்தின்மேல் உள்ள தேளை விட மிக மிகப் பெரிய உருவினவாகிய கடற்றேள்கள் ஒன்பதடி நீளம் உள்ளனவாய் அந்நாளில் தோன்றியிருந்தன. அங்ஙனமே, மிகப் பரியவான சில விலங்குகள் எண்பத்து நான்கடி நீளமும், மற்றுஞ் சில நூறடி. நீளமும் உள்ளனவாயிருந்தன. இஞ்ஞான்றுள்ள யானையைவிடப் பத்துப் பதினைந்துமடங்கு பெரிய உருவினவான பேரியானைகளும் அஞ்ஞான்றிருந்தன. ஆனாலும், இவ்விலங்குகளிற் பெரும்பாலன மக்கள் தோன்றுதற்கு முன்னமே மாண்டடொழிந்தன. அவற்றுள், உயிர்மாண்டு பனிப்பாறைகளின் ஊடே கிடந்து புதைந்துபோனவை பின்நாளில் அப் பனிப்பாறைகள் கதிரவன் வெப்பத்தால் உருகிக் கரைந்துவிடவே, எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன் மாண்டு போன அவற்றின் முழுவுடம்பும் புத்தப் புதியனவாய்க் கண்டு எடுக்கப்பட்டி ருக்கின்றன. பனிப்பாறைகள் இல்லாத இடங்களில் மாய்ந்தவைகளோ அங்குள்ள மண் கற்பாறைகளாய் இறுகிவிட அவற்றினிடையே கிடந்து தசை கழிந்து மட்கிப்போக, வெறும் எற்புக் கூடுகளாய் வெட்டி. வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

இங்ஙனம், இருப்பன, ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவனவாகிய சிற்றுயிர்கள் முதன்முதல் நீரிற் றோன்றி இயங்கிப், பின்னர் அவற்றிற் பல நிலத்தின் மேல் இவர்ந்து, வரவரப் பல்கி வாழலாயினாற் போலவே, மக்கள் யாக்கை யினையுடைய உயிர்களும் முதலில் நீரின்கட்டோன்றிப், பின்னர் நிலத்தின் மேல் வந்து உயிர்வாழ்ந்து பெருகலா யினமையும் ஒரு சில நிகழ்ச்சிகளாற் புலனாகின்றது. ஒரு கால் மேல்நாட்டு மக்களாற் செலுத்தப்பட்டுச் சென்ற ஒரு மரக்கலம் ஒரு கடற்பகுதியிற் செல்லுங்கால், அங்குள்ள கடல்நீரினின்றும். மக்கள் வடிவினதாகிய ஓர் அண் உயிர், அம் மரக்கலத்தின்மேல் ஏறிவந்து, அதன் முன் அணியத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெண்பாவை யுருவினைச் சிறிதுநேரம் உற்றுநோக்கிக் கொண்டிருந்து, அக்கப்பல் மீகாமனும் பிறருந் தன்னைப் பிடிக்க முயன்றபோது, அக்கடல்நீரிற் குதித்து அமிழ்ந்திப்போன உண்மை வரலாற்றினை எமது “சிறுவர்க்கான செந்தமிழ்” என்னும் நூலில் எடுத்துக்காட்டி யிருக்கின்றேம்.

இத்தகைய நிகழ்ச்சியிலிருந்து, கடல்நீரிலும் மக்கள் வடிவினவாகிய உயிர்கள் இயங்குதல் அறியப்படுகின்ற தன்றோ? இவ்வாறு எல்லா உயிர்களும் இவ்வூன் உடம்பிற் றேன்றுதற்கு இன்றியமையாத இடமாகிய கடல்நீரில் முதன்முதற் றோன்றியே, பன்னெடுங் காலங்களுக்குப் பிறகு மக்களும் நீர்வாழ்க்கையை விட்டு நிலவாழ்க்கையைக் கடைப்பிடிக்கலா யினரென்று உணர்தல் வேண்டும். அஃதுண்மையேயாயினும், உயிர்வாழ்க்கைக்கு இன்றி யமையாது வேண்டப்படும் எல்லாக் கருவிகளும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற இந்நிலத்தின்மிசை உயிர்கள் முதன்முதற் றோன்றாமல், நீரின்கண் முதன்முதற் றோன்றலானது என்னையெனிற், கூறுதும் படைப்பின் துவக்கத்திலேயே இம் மண்ணுலகம் உயிர்களின் வாழ்க்கைக்கு ஏற்றதாய் இருந்தால், புன்முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்களும் இம் மட்பாங்கர் மிசையே தோன்றியிருக்கும். ஆனால், இந்நிலவுலகின் இயல்போ பல்லாயிரங்கோடி ஆண்டுகளுக்குமுன் இருந்த நிலைவேறு, இங்ஞான்றுள்ள நிலை முழுவதூஉம் வேறு.

வெய்யவன் மண்டடிலம் ஒரு பெருநெருப்புத் திரளையாய் அன்றும் இன்றும் விளங்காநிற்கின்றது. இது நினைத்தற்கும் இயலாக் கடுவிரைவுடன் சுழலா நிற்கையில் இந்நிலமும், திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலான கோள்களும் அவ்வெய்யவனாகிய தீப்பிழம்பினின்றுந் தெறித்துப்போந்த நெருப்புப் பொறிகளேயாகும். சிறிய பொருள்களையே அறிந்து நுகர் தற்பான்மையவான கண் முதலான சிறுபொறிகள் மட்டுமே அமையப்பெற்ற சிற்றறிவினராகிய நம்மனோர் கண்களுக்கு நாம் வாழும் இம்மண்ணுலகம் மிகப் பெரியதுபோற் காணப்படினும், உண்மையான் ஆராய்ந்து காண்பார்க்குக் கதிரவன் மண்டிலமே இந்நிலவுலகத்தைப் பார்க்கிலும் முந்நூற்று முப்பதினாயிர மடங்கு பெரியதாதல் விளங்குமென்று இஞ்ஞான்றை வான் நூலாசிரியர் கணக்குச் செய்திருக்கின்றனர். அதனால், இம்மண்ணுலகங் கதிரவன் மண்டிலத்தினின்றுந் தெறித்துப் போந்த ஒரு சிறு நெருப்புப் பொறியேயல்லால் வேறன்றாதல் தேர்ந்துணரற்பாற்று. அங்ஙனம் ஒரு நெருப்புப்பொறியாய் முதன் முதல் உண்டான இந்நிலவுலகு எத்தனையோ நூறாயிரம் ஆண்டுகளாய் வெம்மை குறைந்து ஆறி இறுகிவருகின்றது. இன்றுங்கூட இதன் உட்பகுதி அளவிடப்படாத வெப்பம் வாய்ந்த தீக்குழம்பு உடையதாய்க் கொதித்துக் கொண்டிருக் கின்றது. இந்நிலத்தின் மையமான இடத்தினூறு ஆங்காங்குள்ள எரிமலைகளின் புழைவழியே இத்தீக்குழம்பு ஏரோவொருகாற் கொதித்துப் பொங்கி மேலெழுந்து வழிந்துவிடுதல் உண்டு;

இவ்வாறு வழிதலால் எரிமலைகளின் அடிவாரத்திலும் அண்மையிலும் உள்ள ஊர்களும் நகர்களும் எரிந்து சாம்பலாய்விடுகின்றன. கி.பி 501- ஆம் ஆண்டில் வெசுவியசு என்னும் எரிமலையினின்றும் பொங்கி வழிந்த தீக்குழம்பால் அதனை அடுத்திருந்த பெரிய நகரங்கள் எரிந்து சாம்பலாயின; பதினெண்ணாயிரம் மக்களும் மடி ந்துபோயினர்!

இங்ஙனம், உயிர் வாழ்க்கைக்குப் பேரிடர் பயப்பதான தீவடிவினதாய் முதற்கண் இருந்தமையால், இந்நிலவுலகத்தின் மேற்பரப்பிற் பலகோடி ஆண்டுகள் வரையிற் புற்பூண்டுகள் முதல் மக்கள் ஈறான எத்தகைய உயிருந் தோன்றாவாயின. பிறகு, பன்னூராயிரம் ஆண்டுகளாக இந்நிலவுலகின் வெம்மை ஆறி வரவர, இதன் மேற்பரப்பு இறுக, இறுகிய கற்பாறையின் பள்ளத்தாக்கான இடங்களில் மழைநீர் நிரம்பி, ஏரி, சிறுகடல் பெருங்கடல் முதலான நீர்நிலைகளைத் தோற்றுவிக்கலாயிற்று.

அங்ஙனம் உண்டான நீர்நிலைகளின் அடிப்படையில் நீர்ப்பூண்டுகளும், அவற்றின்பிற் பல நூற்றாண்டுகள் கழித்துப், பெருக்கக் கண்ணாடியின் உதவியின்றி நம் கட்புலன்களுக்குச் சிறிதும் புலனாகாத மிக நுண்ணிய உயிர்களுந் தோன்றுவவாயின. அவற்றின்பிற் பல நூற்றாண்டுகள் கழித்து நங் கட்புலன்களுக்குப் புலனாகும் ஈரறிவுயிர்களும், அவற்றின்பின் மூவறிவு, நாலறிவு ஐயறிவுடைய உயிர்களும், இறுதியாக ஆறறிவுயிர்களாகிய மக்களுந் தோன்றலாயினர். இங்ஙனம் நீரின்கட்டோன்றிய உயிர்களிற் பல நிலத்தின்மேல் இவர்ந்து வந்து உயிர்வாழ்தற்கு ஏற்றபடியாக, நீர் நிலைகளை அடுத்த நிலப்பகுதிகளிற் சிறியவும் பெரியவுமான புற்பூண்டுகளும், மரஞ்செடி கொடிகளும் உண்டாகி இலையும் பூவங், காயுங் கனியுங், கிழங்குகளும் வித்துக்களும் ஆகிய உணவுப் பொருள்களை மிகுதியாக அளித்தன. உணவுப் பொருள்கள் மிகுந்து வரவே, அவற்றை அயிலும் உயிர்களும் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரமாய்ப் பல்கலாயின.

இவ்வாறாக, நிலத்தின் மேற்பரப்பில் நீர்த்தோற்றம், கற்பொடித் தோற்றம், புற்பூண்டுத்தோற்றம், சிற்றுயிர்த்தோற்றம் முதலான நிகழ்ச்சிகளெல்லாம் படிப்படியே யுண்டாகிப், பலகோடி ஆண்டுகள் சென்ற பின்னரேதான் மக்களுயிர்களின் தோற்றம் உளதாயிற்று. விலங்கின் யாக்கையில் நின்ற உயிர் பலகோடி யாண்டுகளாக அவ்வியாக்கைகளை விட்டுவிட்டுக் கடைப்படியாக மக்கள் யாக்கையில் வரலானது இற்றைக்கு ஒந்நூறாயிர ஆண்டுகளுக்கு முன்னரேயன்றி, அதற்கு முன் மக்களுடம்புடைய எத்தகைய உயிருமே இல்லையென்று இத்துறையிற் பேருழைப்பெடுத்துப் பெரிதாராய்ந்த நில நூல் உயிர் நூல்வல்ல மேல்நாட்டாசிரியர்கள் முடிவு கட்டி யிருக்கின்றார்கள்.

ஆகவே, இம் மண்மிசைத் தோன்றிய உயிர்த்தொகைகளிற், கடைமுறையாகத் தோன்றியவை மக்களுடம்பு வாய்ந்த ஆறறிவுயிர்களேயென்றும், இவை தோன்றிய காலம் ஐந்நூறாயிர அண்டுகளுக்குமேற் சென்றதாகாதென்றும் நினைவிற் பதித்தல் வேண்டும்.

2. மக்கள் முதன்முதற் றோன்றிய இடம்

இனி, இந்நிலவுலகின் எந்தப் பகுதியில் முதன் முதல் எல்லா உயிர்களும் வாழத் துவங்கின என்பது ஆராயற்பாற்று. நீரைவிட்டு நிலத்தின்மேற் போந்த பின் உயிர்கள் பசியால் வாடி மடியாமல் நிலைப்படுதற்கு வேண்டியவை உணவுப்பண்டங்கள் அல்லவோ? ஆகவே, உணவுப்பண்டங்கள் முதன்முதல் எந்த இடத்தில் மிகுதியாய்த் தோன்றிக் கிளர்ந்தனவோ, அந்த இடமே உயிர்கள் நன்கு உயிர்வாழ்ந்து பல்குதற்கு ஏற்ற பெருவளன் உடையதாதல் வேண்டுமென்பதை எவருமே அறிவர்.

இந்நிலவுலகின் வடமுனைப் பாங்கரும், இதன் தென்முனைப் பாங்கரும் அன்றும் இன்றும் பனிப்பாறைகளால் மூடப்பட்டிருத்தலின், அங்கே புற்பூண்டுகளும் மரஞ்செடி கொடிகளும் உண்டாவதில்லை.

அவை யில்லையாகவே உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையா உணவுப்பண்டங்களும் அப்பகுதிகளிற் கிடைப்பதில்லை. ஆகவே, வடமுனை தென்முனைகளை நெருங்கிய நாடுகளில் மக்கள் முதன்முதற் றோன்றி வாழ்ந்திருத்தல் இயலாது.

பின்னர், அவ் வடமுனை தென்முனைகளுக்கு மிக விலகி, இந்நிலத்திற்கு நடுவணதான குமரி நாடே, பகல் இராப்பொழுதுகளும் வெப்பதட்பங்களும் ஒத்த நிலையில் இயற்கையே பொருந்தப்பெற்று, மரஞ் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்து, நெல், கோதுமை, பல்வகைப் பயறுகள், தீஞ்சுவைக் காய்கனி கிழங்குகள் முதலான உணவுப் பண்டங்களை வழங்குதலின், ஈதொன்றே மக்களும் பிற உயிர்களும் முதன்முதற்றோன்றி உயிர்வாழ்ந்து, பல்கிப் பலமுகமாய்ப் பரவுதற்கு இடஞ்செய்ததென்பது ஆழ்ந்த ஆராய்ச்சியால் நன்கு விளங்கா நிற்கின்றது.

இவ்வியல்பினதான குமரிநாடே மக்கட்டோற்றத்திற்கு முதற்றாயகமாய் இருந்த உண்மையினை மேனாட்டா சிரியர்கள் பலமுகமாய்ப் பரக்க ஆராயந்து முடிபு கட்டியிருக்கின்றார்கள்.

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!