சுயம்வரம்
விந்தன்

அத்தியாயம் : 9

ஒரு சந்தேகம் –
பைத்தியக்காரர்கள் உள்ளே அதிகமா,
வெளியே அதிகமா?…

‘மதனாவைக் காணோம்!’ – எடுத்த எடுப்பிலேயே இப்படி மாதவனிடம் சொல்லிவிடவில்லை அருணா. வீட்டுக்குள் இருந்த அவனை ஜன்னல் வழியே பார்த்துக் கண் அசைத்து, வாய் அசைத்து, கையசைத்து மெல்ல வெளியே வரவழைத்துக் கொண்டதும், அவள் மேலே பார்த்தாள்; கீழே பார்த்தாள். மயங்கி மருகினாள்; தயங்கித் தடுமாறினாள். “ஏதோ சொல்லவேண்டுமென்று வந்தேன். இப்போது சொல்ல வேண்டாம்போல இருக்கிறது; வருகிறேன்!” என்று திரும்பினாள்; சிறிது தூரம் சென்றதும் அவளே திரும்பி, “நீங்கள் வரும்வரை அங்கேயே நான் காத்திருந்திருக்கலாம். அதற்குள் இங்கே வந்தது தப்பு என்று இப்போதுதான் தெரிகிறது எனக்கு” என்றாள்.

தனக்கே இயல்பான பொறுமையுடன் அவளுடைய சேட்டைகள் அத்தனையையும் கவனித்துக்கொண்டிருந்த மாதவன், “என்னதான் விஷயம். சொல்லேன்?” என்றான்.

“சொன்னால் அதை நீங்கள் தாங்குவீர்களோ, என்னவோ?” என்றாள் அவள், நகத்தைக் கடித்துக் கீழே துப்பிக்கொண்டே.

“தாங்குவேன், சொல்லு!” என்றான் அவன், அவளிடமிருந்து சற்றே விலகி நின்று.

“மனம் உடைந்து போய் அப்படியே உட்கார்ந்துவிட மாட்டீர்களே?” என்றாள் அவள், தன் கண்களை மேலே உயர்த்தி,

“மாட்டேன், சும்மா சொல்லு?” என்றான் அவன், அப்போதும் கலங்காமல். “தெறி கெட்டு எங்கேயாவது ஓடிவிட மாட்டீர்களே?”

“ஊஹும்.”

“மாதவன் சார், அதைக் கேட்டு நீங்கள் அழுதால் அதை என்னால் தாங்க முடியாது, சார்!” என்றாள் அவள், தன் கைகளைப் பின்னால் கட்டி, மெல்ல ஆடி அசைந்து கொண்டே.

“அழ மாட்டேன், சொல்லு சீக்கிரம்?” என்றான் அவன், ஆடாமல் அசையாமல் நின்று.

“நீங்கள் என்னை வெறுக்கலாம்; உங்களை என்னால் வெறுக்க முடியாது, சார்!”

“யாரையும் யாரும் வெறுக்க வேண்டாம், சொல்லு?”

“பெண் தன்னுடைய ஆசையைக் கண்ணால் சொல்வதுதான் எங்கும், எப்பொழுதும் உள்ள வழக்கம். ஆனால்…”

அவள் மீண்டும் நகத்தைக் கடித்தாள்; அவன் பல்லைக் கடித்தான். “நீ வாயால் சொல்லப் போகிறாயாக்கும்? சொல்லேன்!” என்றான்.

“வெட்கமாயிருக்கிறது, சார்!” என்றாள் அவள், மென்னகையுடன்.

“வெட்கப்படுவதாயிருந்தால் சொல்லாதே!” என்றான் அவன் புன்னகையுடன்.

“சொல்லாமலும் இருக்க முடியவில்லை.”

“சரி, சொல்லு?”

“நான்… நான்…”

“நான்… நான்…”

“போங்கள் சார், நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்கள்!”

“நான்… உங்களை…”

“நான்… உங்களை…”

“போங்கள் சார், என்னை நீங்கள் நையாண்டி செய்கிறீர்கள்; நான் சொல்ல மாட்டேன்!”

“இல்லை , சொல்லு?”

“உடல் இன்பத்துக்காக உங்களை நான் ‘கா’ பண்ணவில்லை சார், உயிர் இன்பத்துக்காக ‘கா’ பண்ணுகிறேன்.”

“காவா! அது என்ன கா?”

“அதுதான் சார், கா… கா…”

“காக்காயா?”

“உக்கும், குருவி! போங்கள் சார், அதுகூடத் தெரியாதாக்கும் உங்களுக்கு?” என்றாள் அவள் சற்றே சிணுங்கி.

“தெரியவில்லையே!” என்றான் அவன், ஒரு கைக்கு இரு கைகளாக விரித்து.

“இரண்டாவது எழுத்தையும் சேர்த்து வேண்டுமானால் சொல்லட்டுமா?”

“சொல்லு?”

“கா.. த…கா…த…”

“ஓ, காதா?” என்று அவன் தன் காதைப் பிடித்துக் காட்ட, “ஆமாம், குத்தியிருந்தால் கடுக்கன் போட்டுக் கொள்ளுங்கள்; ஜமீன்தார் மாதிரி இருக்கும்!” என்று அவள் கோபித்துக்கொண்டு ‘தொப், தொப்’ என்று காலை எடுத்து வைத்து நடக்க, “கோபித்துக்கொள்ளாதே அருணா, சொல்வதைக் கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லேன்?” என்று அவன் அவளுக்குப் பின்னால் ஓட, “கிட்ட வாங்க, சொல்கிறேன்” என்று அவள் திரும்பி, அவனைத் தன் அருகே அழைத்து, அவன் தலையைப் பிடித்து, அவனுடைய காதைத் தன் வாயோடு அணைத்து, “காதல் பண்றேன்” என்று முகம் சிவக்கச் சொல்ல, அப்போது ஏதோ காரியமாக வெளியே வந்த ‘லட்டு மாமி’ அதைப் பார்த்து வேறு விதமாக நினைத்து வெறுப்படைந்து, “இது என்னடியம்மா, அக்கிரமமாயிருக்கு? பட்டப் பகல்லே, நட்ட நடு வீதியிலே, பல பேருக்கு முன்னிலையிலே, சினிமாவில் பண்ற மாதிரியில்லே இவங்க பண்றாங்க” என்று முகவாய்க் கட்டையின் மேல் கையை வைத்துக் கொண்டு நிற்க, “ஐயோ மாமி, இது ஆபீஸ் ரகசியம், மாமி வேறே ஒண்ணும் இல்லே” என்று சொல்லிக் கொண்டே மாதவன் திரும்பினான்.

“அவ்வளவு பெரிய ரகசியமாயிருந்தா, அதை அவ உள்ளே வந்து சொல்லக் கூடாதா?” என்றாள் அவள்.

“வெளியே நின்று சொல்லும்போதே நீங்கள் இப்படி நினைக்கிறீர்களே, உள்ளே வந்து சொன்னால் என்ன நினைப்பீர்கள்?” என்றாள் அருணா, ‘களுக்’கென்று சிரித்து.

“சிரிப்பைப் பார், சிரிப்பை!” என்று கருவிக்கொண்டே ‘லட்டு மாமி’ உள்ளே செல்ல, அவள் தலை மறைந்ததும், “இதைச் சொல்லத்தானா நீ இவ்வளவு தூரம் வந்தாய்?” என்றான் மாதவன்.

“பார்த்தீர்களா? எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக்கொண்டு நிற்கிறேன் நான்! உங்களை என்று நான் முதன் முறையாகப் பார்த்தேனோ, அன்றிலிருந்து என் புத்தி இப்படித்தான் பேதலித்துக் கொண்டிருக்கிறது!” என்றாள் அவள், தன் நெற்றியை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டு.

“ரொம்பக் கெட்டதாச்சே, அது!”

“கெட்டதா! என்ன ஆகும்?”

“கடைசியில் அது உன்னைக் கீழ்ப்பாக்கத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தாலும் சேர்த்துவிடும்.”

“ரொம்ப நல்லதாச்சே சார், அது! பற்றற்ற நிலைக்கு ஒரு மனிதன் எப்போது ஆளாகிறான், தெரியுமா?”

“தெரியும்; பைத்தியம் பிடிக்கும்போது!”

“அந்த மேலான நிலைக்கு என்னை நீங்கள் உயர்த்த விரும்புவது பற்றி மெத்த மகிழ்ச்சி.”

இதைச் சொன்னபோது அருணாவின் கண்கள் உண்மையிலேயே கொஞ்சம் கலங்கின. அதைப் பார்த்த மாதவனின் மனமும் கொஞ்சம் நெகிழ்ந்துவிட்டது. அந்த நெகிழ்ச்சியின் வசப்பட்டு அவன் சொன்னான்:

“மகிழ்ச்சிக்கு அங்கே இடமில்லை அருணா, விரக்திக்குத்தான் இடம் உண்டு.”

“எதுவாயிருந்தால் என்ன, அதிலும் இன்பம் காண முடியும் என்னால். எல்லாம் அவரவர்களுடைய மனத்தைப் பொறுத்தது. மனம் மட்டும் சரியாக இருந்தால் நிறைவேறிய கனவில் மட்டுமல்ல, நிறைவேறாத கனவிலும் இன்பம் காணலாம்.”

“அந்த அளவுக்கு உன் மனம் பக்குவம் அடைந்திருக்குமானால், என்னை நீ காதலிப்பதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.”

அருணா சிரித்தாள்; “ஏன் சிரிக்கிறாய்?” என்று மாதவன் கேட்டான்.

“எனக்காக உங்களை ஒரே ஒரு கணமாவது கவலைப்பட வைக்காவிட்டால், எனக்காக உங்களை ஒரே ஒரு சொட்டுக் கண்ணீராவது விட வைக்காவிட்டால் நான் உங்களைக் காதலிப்பதும் ஒன்றுதான்; காதலிக்காமல் இருப்பதும் ஒன்றுதான்.”

“ஏன்?”

“என்னுடைய காதல் உயிருள்ள காதலாயிருக்க வேண்டுமென்றும், அது ஏதாவது ஒரு வகையில் உங்களை உறுத்த வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன்.”

“வீண் முயற்சி!”

“முயற்சி யாருடையதாயிருந்தாலும் அது எப்போதும் வீணாவதில்லை.”

“சரி, அதையும் பொறுத்துப் பார்ப்போம்; அப்புறம்?”

“நான் சொல்ல வந்தது…”

“என்ன?”

“உங்கள் அருமை மதனாவைக் காணோம்!”

“என்ன!”

“இப்போது வாயைப் பிளந்து என்ன பிரயோசனம்? அப்போது நீங்கள் அவளுடன் வாழத் தவறி விட்டீர்கள்!”

“யார், நானா?”

“ஆமாம்; மற்ற உறவுகளையெல்லாம் விட்டுவிட்டு ‘நீயே உறவு’ என்று நீங்கள் எப்போது அவள் கரம் பற்றத் துணிந்தீர்களோ, அப்போதே நீங்கள் அவளுக்கென்று ஒரு வீட்டைப் பார்த்திருக்க வேண்டும்…”

“அது என் தவறுதான்.”

“தவறு எப்போதும் தனியாக நிற்பதில்லை; அது தன்னுடன் ஒன்றன்பின் ஒன்றாகப் பல தவறுகளைச் சேர்த்துக் கொண்டே போகும்…”

“அப்படியானால் நான் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருக்கிறேனா?”

“சந்தேகமில்லாமல் ‘நீயே உறவு’ என்று அவளைக் கைப்பிடித்த பிறகு, உங்களுக்கு மாமா உறவு எதற்கு? மாமி உறவு எதற்கு? நீலா உறவுதான் எதற்கு?”

அவள் இப்படிச் சொன்னதும் அவனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, “பாவம் நீலா, அவளும் என்னைக் காதலிக்கிறாள்!” என்றான் பெருமூச்சுடன்.

அருணா மறுபடியும் சிரித்தாள்; “ஏன் சிரிக்கிறாய்?” என்று மாதவன் கேட்டான்.

“ஒன்றுமில்லை.”

“என்ன, ஒன்றுமில்லை?”

“உங்களை யாராலும் காதலிக்காமல் இருக்க முடியாது என்று நினைத்தேன்; சிரிப்பு வந்துவிட்டது!”

“அப்படி என்ன இருக்கிறது, என்னிடம்?”

“மதனாவைக் கேட்டுப் பார்த்தீர்களா?”

“இல்லை.”

“நீலாவைக் கேட்டுப் பார்த்தீர்களா?”

“இல்லை.”

“அவர்கள் இருவரையும் கேட்காதபோது என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?”

“உன்னையும் கேட்கவில்லை; என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்!”

“சரி, கேட்டுக் கொள்ளுங்கள்; நான் வரட்டுமா?”

அவள் திரும்பினாள்; “மதனாவைக் காணோம் என்று மொட்டையாகச் சொல்லிவிட்டுப் போனால்…” என்று அவன் இழுத்தான்.

“காது மூக்கு வைத்துக் ‘கதை’ கட்டிச் சொல்ல எனக்குத் தெரியாதே!” என்றாள் அவள்.

“உன்னை நம்பித்தானே அவளை நான் அங்கே அனுப்பி வைத்தேன்?”

“அந்த ஒரு விஷயத்திலாவது என்னை நீங்கள் நம்பியது பற்றி மகிழ்ச்சி. ஆனால் அந்த நம்பிக்கைக்கு விரோதமாக நான் நடந்து கொள்ளவில்லையே! இரவில் என்னுடன் படுத்தவளைப் பொழுது விடிந்ததும் காணா விட்டால் அதற்கு நானா பொறுப்பு?” என்றாள் அவள்.

அவன் ஒரு கணம் யோசித்தான்; மறுகணம், “ஏதாவது கடிதம் கிடிதம் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாளா என்று பார்த்தாயா?” என்றான்.

“பார்த்தேன்; ஒன்றுமில்லை” என்றாள் அவள்.

“எங்கே போயிருப்பாள்?”

“அந்தக் கேள்வியைத்தான் அவள் காணாமற் போனதிலிருந்து என்னுடைய உள்ளமும் என்னைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது!”

இந்தச் சமயத்தில் ஆனந்தன் அவர்களை நோக்கி வர, “அதோ, ஆனந்தன் வருகிறானே, அவனைக் கேட்டால் தெரியுமா?” என்றான் மாதவன்.

சட்டென்று அவன் வாயைத் தன் கையால் பொத்தி, “ஸ், நேற்று வரைதான் அவள் உங்கள் காதலி; இன்று சாட்சாத் மனைவி. அவள் காணாமற்போன விஷயம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும்; வெளியே தெரிய வேண்டாம்!” என்றாள் அருணா.

சுயம்வரம்
விந்தன்

அத்தியாயம் : 10

உல்லாச உலகம், உனக்கே சொந்தம்;
அனுபவி ராஜா அனுபவி!…

“என்ன, மிஸ்டர் மாதவன்! என்ன சொல்லிவிட்டுப் போகிறாள், அந்த அருணா?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் ஆனந்தன்.

“ஒன்றுமில்லை; மிஸ்டர் ஆனந்தன் என்னைக் காதலிக்கிறார்; அவரை நான் கலியாணம் செய்து கொள்ளட்டுமா, வேண்டாமா?” என்று கேட்டாள். ‘பேஷாய்ச் செய்து கொள்ளலாம்’ என்றேன்; போய்விட்டாள்” என்றான் மாதவன், தன்னுடைய கவலை அவனுக்குத் தெரியாமல் இருப்பதற்காக அவன் தோளில் செயற்கைச் சிரிப்புடன் ஒரு தட்டுத் தட்டி.

“உன்னைப்போல் என்னையும் மடையன் என்று நினைத்துக் கொண்டாயா, என்ன?” என்றான் ஆனந்தன், ஒரு தட்டுக்கு இரண்டு தட்டுக்களாக அவன் தோள்களில் தட்டி.

“எனக்குத் தெரியாதே, பிரதர்! எப்பொழுதிலிருந்து நீ இப்படிப் புத்திசாலியானாய்? ”

“போடா, மக்கு! பிறந்ததிலிருந்தே நான் புத்திசாலியாகத்தான் இருக்கிறேனாம். ஒரு உதாரணம் வேண்டுமானால் சொல்லட்டுமா?” “சொல்லு, உதாரணம் இல்லாமல்தான் உன்னால் எதையும் சொல்ல முடியாதே!”

“நான் குழந்தையாயிருந்தபோது ஒரு நாள் அடுத்த வீட்டுக் குழந்தையைக் கிள்ளிவிட்டு, அது அழுவதற்கு முன்னால் நான் அழுதேனாம்!”

“அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம் என்றால், அந்த புத்திசாலித்தனம் எனக்கு வேண்டவே வேண்டாம், சுவாமி” என்று கையெடுத்துக் கும்பிட்டான் அவன்.

“போடா, மடையா! கலியாணம் யார் செய்து கொள்கிறார்கள், தெரியுமா? முட்டாள்கள்தான் செய்து கொள்கிறார்கள்!” என்றான் அவன்.

“இதுவும் உன் சொந்தக் கருத்து அல்ல, இரவல்; அப்புறம்?”

“இந்த உலகத்தில் யாருக்கு எதுதான்டா, இரவல் இல்லை? எல்லாம் இரவல்தான்! ‘ஆடை நமக்கிரவல், அணிந்ததெல்லாம் இரவல்’ என்று ராத்திரியானால் பாடிக் கொண்டு வருகிறானே ஆண்டிப் பண்டாரம், அதுகூடவா உன் காதில் விழவில்லை?”

“அவனும் அதையெல்லாம் அணிந்து கொண்டு தானேடா பாடி வருகிறான்?”

“அதிலிருந்து என்ன தெரிகிறது? இரவலாயிருந்தாலும் அதை எடுத்து அணிந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்று தெரியவில்லையா? அதே மாதிரிதான் கருத்தும்; இரவலாயிருந்தாலும் வேண்டும் போது அதை எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே?”

“சரி, சொல்லு! நான் கலியாணம் செய்து கொண்ட முட்டாள்; நீ?”

“கலியாணம் செய்துகொள்ளாத முட்டாள் அல்ல; புத்திசாலி! ஏன் தெரியுமா? எனக்கு இந்தக் கட்டுப்பாடே பிடிக்காது. அரிசிக்கும் சர்க்கரைக்கும்தான் கட்டுப்பாடு; அதனால் அவற்றுக்குக் கட்டுப்பாடு. இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன தட்டுப்பாடு? தட்டுப்பாடு இல்லாத அவர்களுக்கும் அவர்களுடைய காதலுக்கும் ஏன் இந்தக் கட்டுப்பாடு?”

“காதலுக்குக் கட்டுப்பாடா! அது என்னப்பா, அது?”

“அட, கலியாணத்தையும் சேர்த்துத்தான்டா சொல்கிறேன் அதற்குப் பின் அவளும் சரி, அவனும் சரி, வேறு யாரையும் அவ்வளவு சுதந்திரமாக் காதலிக்க முடிவதில்லையல்லவா?”

“ஐ ஸீ, அதற்காகத்தான் நீ கலியாணம் செய்து கொள்ளாமலே இருக்கிறாயா?”

“வேறு எதற்காக, பிரதர்? அரிசிக்கும் சர்க்கரைக்கும் உள்ள கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால் அவை கிடைப்பதும் தண்ணீர் பட்ட பாடாயிருக்கும், அவற்றின் விலையும் தண்ணீர் பட்ட பாடாயிருக்கும் என்று நம் வணிகப் பெருமக்களில் சிலர் சொல்லவில்லையா? அந்தப் பெருமக்களைப் பின்பற்றி இந்தப் பெருமகனும் சொல்கிறேன் – கலியாணத்தை நீக்கிப் பார்க்கட்டும்; ‘காதலினால் அது உண்டாம், இது உண்டாம், ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே!’ என்று எந்தக் கவிஞனும் பாடாமலேயே இந்த நாட்டில் காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறதா இல்லையா, பார்!”

“இப்போது மட்டும் என்ன, அது குறைந்தா போய் விட்டது? உன்னைப் போன்ற புண்ணியவான்கள் இருக்கும் வரை காதல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறதோ இல்லையோ, கண்ணீர் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டுதானே இருக்கிறது?”

“எந்தக் கண்ணீர் வெள்ளத்தைச் சொல்கிறாய், நீ?”

“உன்னால் காதலிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட பெண்களின் கண்ணீர் வெள்ளத்தைச் சொல்கிறேன்!”

‘ஹஹ்ஹஹ்ஹா!’ என்று ஆனந்தன் சிரித்தான்; “என்ன ஹஹ்ஹஹ்ஹா?” என்று மாதவன் கேட்டான்.

“பெண்கள்! ஹஹ்ஹஹ்ஹா, பெண்கள்!” என்று அவன் மேலும் சிரித்துவிட்டு, “என்னதான் சொன்னாலும் இந்தப் பெண்களுக்கு ஒரு உண்மை மட்டும் புலப்படவே மாட்டேன் என்கிறது! அவர்கள் காதலிக்கத்தான் பிறந்தவர்களே தவிர, கண்ணீர் விடப் பிறந்தவர்களே அல்ல, பிரதர்! என்னால் காதலிக்கப்பட்ட ஒருத்தி கண்ணீர் விடுகிறாள் என்பதற்காக அவளை நான் காலம் முழுவதும் காதலித்துக் கொண்டிருக்க முடியுமா? அப்படிக் காதலித்தால் அதற்குக் ‘காதல்’ என்றா பேர்? இல்லை. ‘தண்டனை’ என்று பேர் பிரதர், ‘தண்டனை’ என்று பேர்!”

“படு புத்திசாலிடா, நீ! நீ கைவிடாவிட்டால் அவள் ஏன் கண்ணீர் விடுகிறாள்?”

“யோசித்துப் பார், நான் மட்டுமா அவளைக் கைவிடுகிறேன்? அவளை நான் கைவிடும்போது அவளும் அதே சமயத்தில் தன்னையறியாமல் என்னைக் கைவிட்டு விடுகிறாள்!”

“அடி, சக்கை! மனு நீதிச் சோழன்டா, நீ! நீதி சாஸ்திரம் எழுதிய மனுகூட உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும். அது கிடக்கட்டும், நீ அவளைக் கைவிட்டால் இன்னொருவளைத் தேடிக் கொள்ள முடியும்; அவள் இன்னொருவனைத் தேடிக் கொள்ள முடியுமா?”

“ஏன் முடியாது? நானும் என்னுடைய ‘பாலிசி’யும் அப்படியொன்றும் அனாதைகளாக இருக்கவில்லை, மாதவன்! என்னையும் என்னுடைய லட்சியத்தையும் பின்பற்றுபவர்கள் எத்தனையோ பேர் இந்த உலகத்தில் உண்டு. அவர்களில் ஒருவன் கூடவா கிடைக்காமற்போய் விடுவான் அவளுக்கு? தாராளமாகக் கிடைப்பான். ஜஸ்ட் ஃபார் அன் எக்சேஞ்ஜுக்குத்தானே?”

“நல்ல எக்சேஞ்ஜுடா, உன் எக்சேஞ்ஜ்! அப்படியே கிடைத்தாலும் அவனுக்காக அவள் தன் கற்பைக் கைவிட முடியுமா? விட்டால் சமூகம் அவளை ஏற்றுக் கொள்ளுமா?”

“என்னைக் கேட்டால் ‘சமூகம்’ என்று ஒன்று இல்லவே இல்லை என்பேன்! இல்லாத ஒன்றைக் கற்பித்துக்கொண்டு எடுத்ததற்கெல்லாம் அதற்குப் பயந்து கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம்? அப்ஸல்யூட்லி ராங்! ‘கற்பு, கற்பு’ என்று கதைப்பதெல்லாம் நம்மவர்களிடம்தான் இருக்கிறதே தவிர, மற்றவர்களிடம் அது இருப்பதாகத் தெரியவில்லை.”

“கற்பு வேண்டுமானால் கதையாக இருந்துவிட்டுப் போகட்டும்; ஒழுக்கம்கூடவா கதை?”

“அது உண்மையாகத்தான் இருக்கட்டுமே! அதனால் என்ன, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகக் குளித்து விட்டால் போச்சு!”

“குளித்தால் உடம்பில் படிந்த அழுக்கு வேண்டுமானால் போகலாம்; உள்ளத்தில் படிந்த அழுக்கு போகாது.”

“அதற்காக நான் ஆறிப்போன இட்லியைத்தான் ஆயுள் பூராவும் தின்று கொண்டிருக்க வேண்டும் என்பது என்ன நீதி? ஐ வாண்ட் ஹாட் இட்லி!”

“பெண் இட்லி அல்ல, பிரதர்…”

“தோசையாயிருக்கட்டும்!”

“தோசையும் அல்ல, அவள்…”

“பூரியாயிருக்கட்டும்!”

“பூரி என்றும் சொல்ல முடியாது, அவளை…”

“வேறு என்னவென்று வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போ! ஐ டோண்ட் மைன்ட் முடிந்தால், வசதி இருந்தால் ஒவ்வொரு நாளும் அவள் எனக்குப் புதுசாயிருக்க வேண்டும்; அவ்வளவுதான்!”

“மற்றவர்களுக்கு அவள் பழசாயிருந்தால் பாதகம் இல்லை , அப்படித்தானே?”

“ஏன் பழசாயிருக்கிறாள்? என்னை நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லை, பிரதர்! அதான் சொன்னேனே, அது ஒரு ‘எக்ஸ்சேஞ்ஜ் பிசினஸ்’ மாதிரி நடக்க வேண்டும். நேற்று எனக்குப் புதுசாயிருந்தவள், இன்று உனக்குப் புதுசு; எனக்குப் பழசு. அதே மாதிரி, இன்று உனக்குப் புதுசாயிருப்பவள், நாளை எனக்குப் புதுசு; உனக்குப் பழசு. ஆஹா! இந்த ‘ஆனந்தன் வழி’யை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்! பிள்ளை , குட்டி, படிப்பு, உத்தியோகம், கலியாணம், வீடு, வாசல் என்று ஒரு பிக்கல் இருக்குமா? ஒரு பிடுங்கல் இருக்குமா?”

“இருக்காது அப்பனே, இருக்காது.”

“உதாரணத்துக்காக உன்னைத்தான் எடுத்துக் கொள்ளேன்! நீ மதனாவைக் காதலித்தாய்; அதோடு நின்றாயா? அவளைக் கலியாணமும் செய்து கொண்டாய். பிடித்தது சனியன்! இனி அவள் உனக்குத்தான் சொந்தம் என்று நீ உரிமை கொண்டாடுவாய்; இனி நீ தனக்குத்தான் சொந்தம் என்று அவள் உரிமை கொண்டாடுவாள். இந்த சொந்தத்திலிருந்து பந்தம் முளைக்கும்; பாசம் முளைக்கும், அப்புறம் பிள்ளை , குட்டி எல்லாம் முளைக்கும். பிடுங்கல், பிடுங்கல், ஒரே பிடுங்கல்! அதோ, போகிறார்கள் பார். இரண்டு பெண்கள், அவர்களும் என் ‘பாலிசி’யைப் பின்பற்றுகிறவர்கள்தான். ஏதாவது ஒரு டாக்சியைக் கொண்டு போய் அவர்களுக்கு அருகே நிறுத்தி, ‘கம் ஆன், கெட் இன்’ என்றால் போதும்; ‘தாங்க் யூ!’ என்று இனிய குரலில் இனிக்க இனிக்கச் சொல்லிக்கொண்டே ஏறிக் கொள்வார்கள். ஏதாவது ஒரு ஓட்டல் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, ‘இரவு முழுவதும் நீங்கள் எங்களுடன் தங்க வேண்டும்’ என்றால் போதும்; அப்படியே தங்குவார்கள். பொழுது விடிந்ததும் இருபத்தைந்தோ, ஐம்பதோ கையில் கொடுத்தால் போதும்; அழகான புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். அதற்குப் பின் நமக்கும் அவர்களுக்கும் எந்த விதமான உறவும் கிடையாது; உபத்திரவமும் கிடையாது. அந்த மாதிரி வாழ்க்கையை நீயும் அனுபவி ராஜா அனுபவி!”

மாதவன் சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

“எனக்கு வேண்டாம் ராஜா அந்த வாழ்க்கை, நீயே அனுபவி!”

“எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? நீ எங்கே இன்பத்தை அனுபவிக்கப் போகிறாய்? துன்பத்தைத் தான் அனுபவிக்கப் போகிறாய். அதிலும், ஒருத்தியா காதலிக்கிறாள் உன்னை? மதனா காதலிக்கிறாள்; அருணா காதலிக்கிறாள்; நீலா காதலிக்கிறாள். மதனாவின் காதல் கலியாணத்தில் முடிந்து, இப்போது கண்ணீரில் நிற்கிறது. மற்ற இருவரின் காதல்களும் எதில் முடிந்து, எப்படி நிற்கப் போகின்றனவோ? போ, மதனா உனக்காக அங்கே நின்று அழுது கொண்டிருக்கிறாள்; போ பிரதர், போ! போய், நீயும் அவளுடன் சேர்ந்து அழு! அதற்குத்தான்டா நீ லாயக்கு!” என்று அவன் மாதவனைப் பிடித்துத் தள்ள, “எங்கே நின்று அழுது கொண்டிருக்கிறாள்?” என்றான் அவன், ஒன்றும் புரியாமல்.

“வேறு எங்கே நின்று அழப் போகிறாள்? நீ அனுப்பி வைத்தாயே பெண்கள் விடுதிக்கு, அந்த விடுதிக்கு வெளியே நின்றுதான் அழுதுகொண்டிருக்கிறாள்!” என்றான் ஆனந்தன்.

“உண்மையாகவா?”

“போயும் போயும் ஆண்களிடம் பொய் சொல்லி எனக்கென்னடா, ஆகப் போகிறது? ஏன். அருணா உன்னிடம் வேறு விதமாக ஏதாவது சொன்னாளா?” என்றான் ஆனந்தன் மீண்டும்.

“இல்லை, அவள் வேறு விதமாக என்னிடம் எதுவும் சொல்லவில்லை” என்று சொல்லிக்கொண்டே மாதவன் ஏதோ யோசித்தபடி, தலை முடியைக் கோதி விட்டுக் கொண்டே திரும்பினான்.

“டொய்ங், டொய்ங், டொய்ங்ங்ங்…” என்று வாயினால் படு உல்லாசமாக சோக கீதம் இசைத்துக்கொண்டே, “நான் வரேன், பிரதர்!” என்று அவன் முதுகில் ஒரு தட்டுத் தட்டி விட்டு, அங்கிருந்து நழுவினான் ஆனந்தன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *