நன்னெறி
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
அருளிச் செய்த

நன்னெறி

ந. மு. வேங்கடசாமி நாட்டார்

அவர்கள் எழுதிய உரையுடன்

நன்னெறி யென்னும் இந் நீதிநூல் ஏறக்குறைய இருநூற்றெண்பது ஆண்டுகளின் முன்பு விளங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் கவிஞர் பெருமானால் அருளிச் செய்யப் பெற்றது. சிவப்பிரகாசரின் தந்தையார் காஞ்சிபுரத்திலே தொண்டை மண்டல வேளாளர்க்குக் குருக்களாயிருந்த குமார சுவாமிதேசிக ரென்பவர். இவர் பின்பு சிவலிங்க தாரணஞ்செய்து கொண்டு வீரசைவ (இலிங்காயத) மதத்தினராயினர். சிவப்பிரகாசருக்கு வேலையர், கருணைப்பிரகாசர் என இருதம்பியரும், ஞானாம்பிகை என ஒரு தங்கையும் இருந்தனர். ஞானாம் பிகையம்மை திருப்போரூரிலிருந்தவரும், வைராக்கிய சதகம் முதலிய அரிய நூல்களை அருளிச் செய்தவரும் ஆகிய சாந்தலிங்க சுவாமிகள் என்னும் பெரியாருக்கு மணஞ்செய்து கொடுக்கப் பெற்றனர். சிவப்பிரகாசர் மணஞ்செய்து கொள்ளாது துறவு பூண்டிருந்தனர். இளைஞர் இருவரும் இல்லற வாழ்க்கைய ராயினர். சிவப்பிரகாசர் மிக்க இளம் பருவத்தினராயிருந்த பொழுதே தமிழ்க்கல்வியிற் றலைசிறந்து விளங்கியதுடன், செய்யுளியற்றும் வன்மை கைவரப்பெற்றவருமாயினர். இவர் இளைஞராய்த் திருவண்ணாமலையில் வதிந்து வருநாட்களில் ஒருநாள் சோணசைலமாலை யெனப் பெயரிய நூறு செய்யுட் களாலாய பிரபந்தம் பாடி அதனைத் துதித்தனர் என்ப. அவர் தமிழிலக்கணம் பாடங்கேட்ட வரலாறாகக் கேட்கப்படுவது பின் வருமாறு:- “பாண்டிய நாட்டிலே தாமிரவரணிக் கரையிலுள்ள சிந்துபூந் துறையில் தருமபுரவாதீனத்து வெள்ளியம்பல வாணத் தம்பிரான் இலக்கண விலக்கியங்களில் மிகவும் வல்லுநராயிருந் திருக்கின்றன ரெனக் கேள்வியுற்று, இவர் அவ்விடத்தெய்தித் தம்பிரான் சுவாமிகளைக் கண்டு தாம் இலக்கணங் கற்க வேண்டி வந்தமையைத் தெரிவித்துக் கொண்டனர். சுவாமிகள் இவரது இலக்கியப் பயிற்சியை அறிதற்பொருட்டு, ‘கு என்னும் எழுத்து முதலிலும் இறுதியிலும் அமையவும், ஊருடையான் என்பது இடையிற் பொருந்தவும் ஒரு வெண்பாப் பாடுக’ என்று கூற, இவர் உடனே,

‘குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழன்
முடக்கோடு முன்னமணி வாற்கு – வடக்கோடு
தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதோன்
மேற்கொள்ள லூருடையா னென்னு முலகு.’

என்னும் வெண்பாவைப் பாடினர். இதனுள் ‘வடக்கோடு தேருடையான்’ என்று அமைத்தமையைத் தம்பிரானடிகள் வியந்து பாராட்டி, வேலையர், கருணைப்பிரகாசர் என்னும் இருவர்க்கும் சில நாட்களில் ஐந்திலக்கணமும் பாடஞ்சொல்லி முடித்தனர். அது கண்ட சிவப்பிரகாசர் தாம் அண்ணாமலை ரெட்டியாராற் கொடுக்கப் பெற்றுக் கொண்டு வந்திருந்த முந்நூறு பொன்னையும் ஆசிரியர்க்குக் காணிக்கையாக வைத்து உபசரிக்க, அவர் ‘இது நமக்கு வேண்டுவதில்லை; புலவர்களை இகழும் புன்மையுடை யராய்த் திருச்செந்தூரில் வசிக்கும் தமிழ்ப்புலவரொரு வரைச் செருக்கடக்கி, அவர் நம்மை வந்து வணங்கும்படி செய்தலே நமக்குக் காணிக்கையாகும்’ என்றனர். சிவப்பிரகாச முனிவர் அதற்குடன்பட்டுத் திருச் செந்தூருக்குப் போய் முருகக் கடவுளைத் தரிசித்து வலம்வரும் பொழுது அப் புன்புலவர் இவரை யெதிர்ப் பட்டு இகழத் தலைப்பட்டவர், இவரைப் புதிய முறையால் வெற்றி பெறுவோமெனத் துணிந்து, ‘நாமிருவரும் நிரோட்டக யமகம் பாடுவோம்; முன்பு பாடி முடித்தவர்க்கு அஃதியலாதார் அடிமை யாவோம்’ என்று கூறினர். சுவாமிகள் அதற் கிசைந்தருளி , உடனே அத் தலத்து முருகக்கடவுள் மீது நிரோட்டக யமக அந்தாதியாக முப்பது கட்டளைக் கலித்துறை பாடி முடித்தனர். அப்பொழுது ஒரு செய்யுளேனும் பாடி முடிக்கா லாற்றாத அப் புலவர், அடிகளின் திருவடிகளை வணங்கி ‘அடிமையா யினேன்’ என்று விண்ணபப்பஞ் செய்ய, சிவப்பிரகாச முனிவர் அவரை யழைத்து வந்து தம் ஆசிரியருக்கு அடிமையாக்கிவிட்டனர்.”

சிவப்பிரகாச சுவாமிகள் பெரும்பாலும் வதிந்த இடம் வடவெள்ளாற்றின் பக்கத்திலுள்ள வாலிகண்ட புரத்திற்கு அணித் தாகிய நல்லாற்றூர் என்னும் துறைமங்கலமாகும். அதனாலேயே அவரது ஊர் துறைமங்கலம் எனப்படும். அக்காலத்து அங்கிருந்த பெருஞ்செல்வரும், தமக்கு அணுக்கத் தொண்ட ரானவரும் ஆகிய அண்ணாமலை ரெட்டியார் வேண்டிக் கொண்டபடி திருவெங்கைமா நகரத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமான் மீது கோவை, கலம்பகம், உலா, அலங்காரம் ஆகிய பிரபந்தங்கள் பாடினர். அவற்றுள் அண்ணாமலை ரெட்டியாரையும் ஒவ்வோரிடங்களில் புகழ்ந்து கூறியிருக் கின்றனர். அக்காலத்திலே இத்தாலி தேசத்தி னின்றும் வந்திருந்த பாதிரியாகிய வீரமாமுனிவர் என்பவர் தமது ஏசுமதக் கொள்கையை நிலைநிறுத்துதற் பொருட்டுத் தருக்கஞ் செய்ய, சிவப்பிரகாச அடிகள் அக் கொள்கைகளை மறுத்து ஏசுமத நிராகரணம் எனப் பெயரிய நூல் இயற்றினர்.

சிவப்பிரகாசருக்கு ஞானாசிரியர் பொம்ம புரம் சிவஞான பாலைய தேசிகர். தம் ஞானாசிரியர் மீது தாலாட்டு, நெஞ்சுவிடு தூது, திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ், கலம்பகம் ஆகிய பிரபந்தங்கள் அடிகளால் இயற்றப் பெற்றுள்ளன. சைவசமய குரவர்களாகிய நால்வர் களையும் அடிகள் துதித்துள்ள ‘நால்வர் நான்மணி மாலை’ என்னும் பிரபந்தம் சைவ நன்மக்கள் யாவராலும் போற்றப்படுகின்றது. திருவாவடுதுறை யாதீனத்துப் பெரியார்கள், சிவப்பிரகாசர் தமது சித்தாந்த சைவ மரபினரல்ல ராயினும், அவர் நால்வர்மீது பாடியுள்ள நான்மணிமாலைப் பாடல்களின் அருமை பெருமைகளைப் பாராட்டி அப் பாடல்களைச் சிறிய எழுத்துக் களால் எழுதிச் சுருள் செய்து உருத்திராக்க வடத்துடன் தொடுத்து அணிந்து கொள்வதுண்டென்று பெரியோர் சிலர் சொல்லக் கேட்டுளோம். சிவப்பிரகாச சுவாமிகள் போலவே, அவருடைய தம்பியரிருவரும் புலமை மிக்கவரா யிருந்தனர். இளையவராகிய கருணைப் பிரகாசரும், மூத்தவராகிய சிவப்பிரகாசரும் இவ்வுலக வாழ்வைத் துறந்த பின்பு ,

‘அல்லிமலர்ப் பண்ணவனும் ஆராய்ந் தறிகவிதை
சொல்லும் இருவரிடைத் தோன்றியயான் – முல்லை
அரும்பிற் பொலியும் அணிமுறுவல் நல்லாய்
கரும்பிற் கணுநிகர்த்தேன் காண்.’

என்று வேலையர் இரங்கிக் கூறியுள்ளார். சிவப்பிரகாசர் தமது முப்பத்திரண்டாம் ஆண்டிற் சிவப் பேறெய்தினரெனக் கூறப்படுகின்றது. அவருடைய பாடல்களெல்லாம் புதிய புதிய கற்பனைஅங்காரங்களுடன் கூடிக் கற்றவருள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் பான்மையன. அவர் பாடலின் சுவையில் ஈடுபடாத உள்ள முடையார் அவிழ்ச் சுவையன்றித் தமிழ்ச்சுவையறியாதவரே யாவர்.

சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நூல்கள்:-

இட்டலிங்கப் பெருமான்மீதும் சிவஞான பாலைய தேசிகர் மீதும் இயற்றியுள்ள பிரபந்தங்களும், சோணசைமாலை, நால்வர் நான்மணிமாலை, திருச்செந்திலந்தாதி, பழமலையந்தாதி, பிக்ஷாடண நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மை கலித்துறை, நன்னெறி, திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, வேதாந்தசூடாமணி, சித்தாந்த சிகாமணி, பிரபுலிங் கலீலை, திருக்கூவப்புராணம், சீகாளத்திப்புராணம் (கண்ணப்பச் சருக்கம், நக்கீரச் சருக்கம்) என்பனவும், தருக்க பரிபாஷை முதலியனவும் ஆம். சீகாளத்திப் புராணத்தின் முற்பகுதி கருணைப் பிரகாசராலும், பிற்பகுதி வேலையராலும் பாடப்பெற்றன.

சிவப்பிரகாச சுவாமிகள் பொம்மபுரத்தில் எழுந்தருளியிருந்த காலத்தில் ஒருநாள் தனிமை யாகக் கடற்கரை யெய்தி, அங்குள்ள நறுமணற் பரப்பிலே நன்னெறி வெண்பா நாற்பதையும் எழுதிவிட்டு வந்து, அதனை ஏட்டிலெழுதி வரும்படி கருணைப்பிரகாசருக்குக் கட்டளையிட, அவரும் அங்ஙனமே எழுதி வந்தனரெனக் கூறுப. இந்நூலின் ஒவ்வொரு பாவும் மக்கட்கு இன்றியமையாத நீதிகளை அழகிய உவமைகளுடன் கூறுவதாகும். உவமைகளெல்லாம் யாவ ராலும் அறியப்பட்டனவாகவும் அமைந்து, கற்போர்க்கு வியப்பும் மகிழ்ச்சியும் விளைப்பனவாகும். மக்களின் உடலுறுப்புக்களாகிய கண் முதலியவற்றின் இயல்புகளை ஒன்பது பாக்களிலும், ஞாயிறு, திங்கள், கடல், காற்று முதலிய இயற்கைப் பொருள்களையும், நெல், வாழை, பசு முதலிய பயிற்சி மிக்க பொருள்களையும், வேறு பல பாக்களிலும் உவமையாக அமைத்திருப்பது இளைஞர்கட்குக் கல்வி பயில்விப்ப தில் இவ்வாசிரியர்க்குள்ள திறப்பாட்டை நன்கு விளக்கா நிற்கும்.

இங்ஙனம்,

ந. மு. வேங்கடசாமி நாட்டார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *