கார் நாற்பது 
மதுரை கண்ணங்கூத்தனார்

மதுரை கண்ணங்கூத்தனார்
அருளிச் செய்த

கார் நாற்பது

ந. மு. வேங்கடசாமி நாட்டார்

அவர்கள் எழுதிய உரையுடன்

கார்நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று. கீழ்க் கணக்கு நூல் பதினெட்டென்பது,

‘வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென்
மொழியாற்றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே’

என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைக்கு மாற்றானறியலாவது. அவை அம்மையென்னும் வனப்புடையவாதலும் அவ்வுரையாற் றெளியப்படும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக்கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுளோர் வகைப்படுத் துரைத்தன ராவர்.

‘அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்’

என்பது பன்னிரு பாட்டியல்.

கீழ்க்கணக்குகள் பதினெட்டாவன: நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, திணைமொழியைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறு பஞ்சமூலம், இன்னிலை, முது மொழிக்காஞ்சி, ஏலாதி என்பன. இதனை,

‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி
யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு’

என்னும் வெண்பாவானறிக. இதில் ‘நால்’ என்பதனை ‘ஐந்திணை’ என்பதன் முன்னுங்கூட்டி நாலைந் திணையெனக்கொள்ள வேண்டும். சிலர் கைந்நிலை யென்பது கூட்டி இன்னிலையை விடுத்திடுவர். வேறு சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக் கொண்டு இன்னிலை. கைந்நிலை இரண்டனையும் ஒழித்திடுவர். அவர் ‘திணை மாலை’ என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவதுண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகல் வேண்டுமென்பர். முற்குறித்த வெண்பாவில் ‘ஐந்தொகை’ ‘இன்னிலைய’ ‘மெய்ந்நிலைய’ ‘கைந்நிலையோடாம்’ ‘நன்னிலைய வாம்’ என்றிவ்வாறெல்லாம் பாடவேற்றுமையும் காட்டுவர்.

இனி, கார்நாற்பது என்னும் இந்நூலை யியற்றி னார் மதுரைக் கண்ணங்கூத்தனார் எனப்படும் நல்லிசைப் புலவராவர். கூத்தனார் என்னும் பெயருடைய இவர் கண்ணன் என்பார்க்கு மகனா ராதலிற் கண்ணங் கூத்தனார் என்றும், மதுரையிற் பிறந்தமையாலோ இருந்தமையாலோ மதுரைக் கண்ணங்கூத்தனார் என்றும் வழங்கப் பட்டனரெனக் கொள்ளல் வேண்டும். கண்ணனுக்கு மகனாராகிய கூத்தனார் கண்ணங் கூத்தனார் என வழங்கப்படுதற்கு விதி,

‘அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும் நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண முறைதொ கூஉ மருங்கி னான’

என்னும் தொல்காப்பியச் சூத்திரமாகும். இவ்வாசிரியர் கடைச் சங்கப் புலவரென்பது ஒருதலையாயின் இவரது காலம் கி. பி. 200 – க்கு முற்பட்டதெனக் கருதலாகும். இவர் இன்ன பிறப்பினர் எனத் துணிதற்கு இடனின்று. இவரது சமயம் சமணமோ பௌத்தமோ அன்றென்பது தெளிவு. இவர் இந்நூலன்றி வேறு செய்யு ளொன்றும் இயற்றியதாகத் தெரியவில்லை.

இந்நூற் செய்யுட்களெல்லாம் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாட்டினுள் இன்பங் கண்ணிய அகத்தின் பகுதியாகிய முல்லைத் திணையின்பாற் பட்டனவாகும். முல்லையாவது ஒரு தலைமகன் தனக்குரியயாதானும் ஒரு நிமித்தத்தாற் பிரிந்து சென்றவழி அவன் வருந்துணையும் தலைமகள் அவன் கூறிய சொற் பிழையாது கற்பால் ஆற்றியிருத்தலாம். வேந்தற்குந் துணையாகப் போர்புரியச் செல்லுதலுற்ற தலைமகன் ‘கார் காலத்து மீண்டு வருவேன்’ எனக் காலங்குறித்துப் பிரிந்தானாக, அதுகாறும் அரிதின் ஆற்றியிருந்த தலையன்பினளாய தலைவிக்கு அப்பருவம் வந்தும் அவன் வரத் தாழ்த்திடின் ஆற்றாமை விஞ்சுதல் இயற்கை. அங்ஙனம் விஞ்சுத லுற்ற ஆற்றாமையும் ஆற்றுதலும், ஒன்றினொன்றிகலி நிற்கும் அந்நிலைமை தலைமகளது அன்பின் பெருமையும் கற்பின் அருமையும் நனி விளங்குதற் குரியதொன் றாகலின் அதுவே பொருளாக இந்நூல் இயற்றப்பட்டதென்க. இதிலுள்ள செய்யுட் களெல்லாம் தலைவி, தோழி, தலைவன் என் போரின்கூற்றுக்களாக உள்ளன. ஒவ்வொரு செய்யுளிலும் கார் வந்தமை கூறப்படுதலின் இந்நூல் கார் நாற்பது எனப்பட்டது. இதில் முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளும் முதற் பொருளும் அன்றிக் கருப்பொருளிற் பல கூறப்பட்டுள்ளன. இதிலுள்ள உவமைகளெல்லாம் கற்போர்க்கு இன்பம் பயக்குந் தகையன மாயோனையும் பலராமனையும், வேள்வித் தீயையும், கார்த்திகை விளக்கீட்டையும் இவ் வாசிரியர் குறித்திருப்பது கருதற்பாலது.

இந்நூற்குப் பழைய பொழிப்புரையொன் றுளது. அவ்வுரை 23 முதல் 38 வரையுள்ள பாடல்களுக்குக் கிடைத்திலது. சின்னாளின் முன்னரும் சிலர் உரையெழுதி யிருக்கின்றனர். அவற்றுள் காலஞ்சென்ற திருவாளர் பி. எஸ். இரத்தி வேலு முதலியார் அவர்கள் எழுதிய விருத்தியுரை முச்சங்கம், பதினெண் கீழ்க் கணக்கு, அகப்பொருளியல் என்பன முதலிய ஆராய்ச் சிகளையும் கொண்டிருப்பது. இதில் காணப்படும் குற்றங் குறைகளைப் பொறுத்தருளுமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்கின்றேன்.

“ஞால நின்புக ழேமிக வேண்டும் தென் னால வாயி லுறையுமெம் மாதியே”

இங்ஙனம்,

ந. மு. வேங்கடசாமி நாட்டார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *