

சிற்றம்பலம்
கி. வா. ஜகந்நாதன்
சைவத் திருமுறைகள் பன்னிரண்டிலும் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியவை. இந்த மூன்று திருமுறைகளிலும் இப்போதுள்ள பதிகங்கள் 383. இவற்றில் முதல் திருமுறையில் 136 திருப்பதிகங்களும், இரண்டாம் திருமுறையில் 122 பதிகங்களும், மூன்றாந் திருமுறையில் 125 பதிகங்களும் அடங்கியுள்ளன. திருமுறைகண்ட புராணத்தில் நம்பியாண்டார் நம்பிகள்,
“பண்புற்ற திருஞான சம்பந்தர் பதிகம்முந்நூற்
றெண்பத்து நான்கினால் இலங்குதிரு முறைமூன்று”
வகுத்ததாக ஒரு செய்தி இருக்கிறது. 384 பதிகங்கள் என்று அங்கே காணப்படினும் அடங்கன் முறையில் 383 பதிகங்களே இருக்கின்றன. விட்டுப்போன பதிகம் இன்னதென்று தெரியவில்லை. அரசாங்கத்தின் முயற்சியால் கல்வெட்டுகளை ஆராயும் ஆராய்ச்சி தொடங்கிய பிறகு திருவிடைவாய் என்னும் தலத்துக்குரிய திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகம் ஒன்று கல்வெட்டிலிருந்து கிடைத்தது. அது நம்பியாண்டார் நம்பிகள் வகுத்த பதிகங்களில் அடங்காததென்றே தோன்றுகிறது. இராசராச சோழனும் நம்பியாண்டார் நம்பிகளும் தில்லைத் திருக்கோயிலில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடியைக் கண்டுபிடித்து எடுத்தபோது அவ்வேடு கறையானால் மூடப்பட்டிருந்தது. பிறகு எண்ணெயை ஊற்றிக் கரையானைப் போக்கி ஏட்டை எடுத்துப் பார்க்கும்போது பதிகங்கள் சிதைந் திருந்தன. அதைக் கண்டு மன்னன் வருந்தியபோது, “ஈண்டு வேண்டுவன வைத்தோம்” என்று அசரீரி வாக்கு எழ, அப்பால், கிடைத்தவற்றை ஒழுங்குபடுத்தத் தலைப்பட்டார்கள். இந்தச் செய்தியைப் பின்வரும் பாடல்கள் தெரிவிக்கின்றன:
ஐயர் நடமாடும்அம் பலத்தின் மேற்பால்
அருள்பெற்ற மூவர்தம தருள்சேர் செய்ய
கையதுவே இலச்சினையாய் இருந்த காப்பைக்
கண்டவர்கள் அதிசயிப்பக் கடைவாய் நீக்கிப்
பொய்யுடையோர் அறிவுதனைப் புலன்கள் மூடும்
பொற்பதுபோல் போதமிகும் பாடல் தன்னை
நொய்யசிறு வன்மீகம் மூடக் கண்டு
நொடிப்பளவி னிற்சிந்தை நொந்த வேந்தன்.
பார்த்ததனைப் புறத்துய்ப்ப உரைத்து மேலே
படிந்திருந்த மண்மலையைச் சேரத் தள்ளிச்
சீர்த்ததில் தயிலமலி கும்பங் கொண்டு
செல்லுநனை யச்சொரிந்து திருஏ டெல்லாம்
ஆர்த்தஅரு ளதனாலே எடுத்து நோக்க
அலகிலா ஏடுபழு தாகக்கண்டு,
தீர்த்தமுடிக் கணிபரனே பரனே என்னச்
சிந்தைதளர்ந் திருகண்ணீர் சோர நின்றான்.
ஏந்துபுகழ் வளவன் இவ்வா றன்பி னாலே
இடர்க்கடலின் கரைகாணா தினையுங் காலை
சார்ந்தமலை மகள்கொழுநன் அருளால், வேதச்
சைவநெடுத் தலைவரெனும் மூவர் பாடல்
வேய்ந்தனபோல் மண்மூடச் செய்தே ஈண்டு
வேண்டுவன வைத்தோம்என் றுலகில் உள்ள
மாந்தரோடு மன்னவனும் கேட்கும் ஆற்றால்
வானகத்தில் ஓரோசை எழுந்த தன்றே.’
இப்போது கிடைத்துள்ள திருப்பதிகங்களிலும் சில பதிகங்களிற் சில பாசுரங்கள் இல்லை.’ சில பாசுரங்கள் முழுமையாக இல்லை.’ சிதலாலே குறைவுற்ற ஏட்டிலிருந்து கிடைத்தவை என்பதற்கு இப்படி உள்ள குறைகள் சான்றாகும்.
பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் பல இடங்களுக்குச் சென்று திருப்பதிகம் பாடியதாகச் சேக்கிழார் சொல்லுகிறார். ஆனால் சில தலங்களின் திருப்பதிகங்கள் இப்போது கிடைக்கவில்லை. இதனால் இப்போதுள்ள தேவாரப் பதிகங்களையல்லாமல் வேறு பதிகங்களும் தமிழ்நாட்டில் வழங்கிவந்தன என்பது தெரியவரும்.
மூன்றாந் திருமுறையில் காந்தார பஞ்சமம்; கொல்லி, கொல்லிக் கௌவாணம், கௌசிகம், பஞ்சமம், சாதாரி, பழம் பஞ்சுரம், புறநீர்மை, அந்தாளிக் குறிஞ்சி என்ற ஒன்பது பண்களில் அமைந்த பதிகங்கள் இருக்கின்றன.
சந்த வகையாலும் எழுத்தமைப்பு முதலியவற்றாலும் வேறுபடுகின்ற நாலடிமேல் வைப்பு, திருவிருக்குக் குறள், திருவிராகம், வழிமொழித் திருவிராகம், திருமுக்கால், ஈரடி, திருஇயமகம், மாலைமாற்று என்ற வகைப் பாடல்கள் இந்தத் திருமுறையில் இருக்கின்றன.
தம்முடைய தந்தையார் வேள்வி செய்யும் பொருட்டுப் பொன் பொறுதற்காக ஞானசம்பந்தர் பாடிய பதிகமும், ஆற்றைக் கடக்கப் பாடியதும், பாண்டியனைச் சுரநோய் பற்றும்படி பாடியருளியதும், ஏடு வையையின் எதிரே செல்லப் பாடிய திருப்பாசுரமும், சமணர்களோடு வாதிட இறைவன் அருள் செய்ய வேண்டுமென்று வேண்டியதும், திருமணத்தின் போது பாடியதும், சோதியிற் கலக்குமுன்பு பாடிய நமசிவாயத் திருப் பதிகமும், ஐந்தெழுத்தின் பெருமையைச் சொல்லும் பஞ்சாக்கரப் பதிகமும் இந்தத் திருமுறையில் உள்ளன.
மூன்றாந் திருமுறையிலிருந்து எடுத்த பதினொரு பாடல்களுக்குரிய விளக்கத்தை இப்புத்தகத்தில் காணலாம். தில்லை, திருவாவடுதுறை, திருக்கழுமலம், திருக்கானப்பேர், திருவேடகம், திருக்காளத்தி, திருக் கருகாவூர், திருவைகாவூர் என்னும் தலங்களைப்பற்றிய பாடல்கள் எட்டும், பொதுப் பாடல்கள் மூன்றும் இங்கே விளக்கம் பெறுகின்றன.
தமிழ்நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவாலயங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அவ்வவ்வூர்களிலிருந்து ஆலய வழிபாடு செய்து வந்தார்கள். தமிழர்களுக்குக் கடவுள் உணர்ச்சியும் கடவுள்பால் அன்பும் பல காலமாக இருந்து வருகின்றன. இப்போது கிடைக்கும் நூல்களில் மிகப் பழையது தொல்காப்பியம் என்னும் இலக்கணம். அதற்கு அப்பால் எழுந்த நூல்களில் பழையவை கடைச்சங்க நூல்கள் என்று வழங்கும் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்னும் தொகை நூல்கள். இந்த நூல்களிலுள்ள குறிப்புகளைக் கொண்டு பார்த்தால் தமிழ் மக்கள் சிவபிரான், முருகன், திருமால், பலதேவர், காளி, இந்திரன், வருணன், கதிரவன் முதலிய தெய்வங்களை வணங்கி வந்தார்க ளென்பது தெளிவாகும். தெய்வங்களுக்கு உருவம் அமைத்தும், மரம் முதலியவற்றில் எழுந்தருளி யிருப்பதாகக் கொண்டும் வழிபட்டார்கள். மரத்தினடியில் திருவுருவங்களை வைத்து வணங்கினர். கடவுளைப் பூசிக்கும் வழக்கத்தையுடைய சில வகுப்பினர் இருந்தனர். மதுரை, திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, பழமுதிர் சோலை மலை, திருவேரகம், திருமருதந்துறை, புகார், காஞ்சீபுரம் முதலிய தலங்களில் தெய்வங்களின் திருக்கோயில்கள் இருந்தன என்பதை மேலே சொன்ன நூல்களால் உணரலாம். வரவரப் பிற்காலத்தில் திருக்கோயில்களின் கட்டிட அமைப்பு விரிந்தது; குகைக் கோயில்களும், கற்கோயில்களும் வந்தன.
மூவர் தோன்றித் தேவாரம் பாடிய பிறகு தமிழ் மக்களுக்கு கடவுள் உணர்ச்சி மிகுதியாயிற்று. தல வழிபாட்டில் ஊக்கம் வளர்ந்தது. தேவாரப் பதிகங்களைப் பக்தியோடு ஓதத் தொடங்கினர். திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி வகுப்பதற்கு முன்பே திருப்பதி கங்களைத் தலந்தோறும் ஓதும் வழக்கம் உண்டாயிற்று. பழைய காலத்துச் சிலா சாசனங்களில் வரும் குறிப்புக் களால் இந்தச் செய்தியை அறியலாம். இராசராச சோழன் தேவாரங்களைக் கண்டெடுத்து நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு திருமுறைகளாக வகுத்த பிறகு, தல வழிபாடும் தேவாரம் ஒதுவதும் பின்னும் பெருகின. அப்பால் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் பெரிய புராணம் பாடி நாயன்மார்களின் பெருமையைத் தமிழுலகம் நன்கு அறியச் செய்தார். அதுமுதல் நாயன்மார்களிடம் தமிழ் மக்களுக்கு அன்பு அதிகமாயிற்று. அவர்களிலும் சிறப்பாக மூவருடைய வரலாறுகளை உணர்ந்தும் அவர்களுடைய திருப்பதிகங்களை ஓதியும் இன்புற்றனர். பொதுவாக எல்லாத் தலங்களையும் மக்கள் வழிபட்டு வந்தாலும் தேவாரம் பெற்ற தலங்களுக்குத் தனி மதிப்பு மிகுதியாக ஏற்பட்டது.
ஆலயங்களில் வழிபாட்டு வகைகள் விரிந்தன. சோழ அரசர்களுக்குப் பின்பு வந்த மன்னர்களும் ஆலயங்களை விரிவாக அமைத்தனர். அதன் பின்பு சென்ற நூற்றாண்டில் தனவணிக மக்கள் தேவாரம் பெற்ற தலங்களிலுள்ள சிவாலயங்களை மிகச் சிறந்த வகையில் கட்டினர்.
இவ்வாறு தல வழிபாடு சிறப்படைய அடைய அவற்றைப் பற்றிய புராணங்களும், பிரபந்தங்களும் கணக்கில்லாமல் எழுந்தன. சில தலங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புராணங்கள் பாடப்பெற்றன. புலவர்கள் தல புராணங்களிலே தங்கள் புலமைத் திறத்தைக் காட்டத் தொடங்கினர். வடமொழியில் தல புராணங்களுக்கு, இலக்கியமாக வைத்து எண்ணப்பெறும் நிலை இல்லை. தமிழிலோ, பல பெரிய புலவர்கள் புராணங்களைக் காப்பியமாகவே இயற்றத் தொடங்கினர். சைவ எல்லப்ப நாவலர், சிவஞான சுவாமிகள், கச்சியப்ப முனிவர், மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை முதலிய புலவர்கள் பூராணங்களைக் காப்பியச் சுவை அமையும்படி இயற்றியிருக்கிறார்கள்.
தலங்களில் மண்டப வகைகளும், பசு மடங்களும், வேத பாடசாலை, தேவார பாடசாலை, ஆகம பாட சாலைகளும், திருவிழாக்களும் விரிவாக ஏற்பட்டன. முப்பது ஆண்டுகளுக்கு முன் வரையிலும் இந்தத் தலப் பற்று தமிழ் நாட்டில் வளர்ந்து கொண்டே வந்தது. இவ்வாறு கடவுளுணர்ச்சியும் தல வழிபாடும் வளர்ந்து வந்ததற்கு மூலகாரணம் தேவாரத் திருப்பதிகங்களென்றே சொல்லவேண்டும்.
தேவாரம் ஓதும் ஓதுவார்கள் ஆலயங்களில் திருப்பதி கங்களை ஓதி வந்தார்கள். இப்போதும் பலர் அங்கங்கே உள்ளனர். ஆயினும் தேவாரத்தின் இலக்கியச் சுவையை உணர்ந்து இன்புறும் முறை தமிழ் மக்களிடத்தில் வளரவில்லை. சிவஞான போதம் முதலிய சாத்திரங்களுக்கு உரைவகுத்த பெரியோர் அங்கங்கே பாடல்களை மேற்கோளாகக் காட்டினர். நச்சினார்க்கினியர் எங்கோ ஓரிரண்டு இடங்களில் சுட்டிப் போயினர். தேவாரத்துக்கு உரை காணவோ, அதன் இலக்கிய நயத்தை ஆராயவோ பலர் முற்படவில்லை. அதனால் ஓதுவார்கள் ஓதுவதைத் தவிரத் தேவாரத்துக்கு வேறு பயன் இல்லாமற் போய்விட்டது. சொற்பொழிவாளர்கள் சில பாசுரங்களை மேற்கோளாகக் காட்டிப் பேசினர். தமிழ்ப் பாட புத்தகங்களில் முன்பு தேவாரப் பதிகங்களைச் சேர்த்து வந்தனர். தமிழ் வித்துவான் தேர்வுக்குத் திருமுறைகளில் எதையாவது பாடமாக வைத்தார்கள். இப்போது இந்த வழக்கம் நின்று விட்டது.
இந்த நிலையில் தேவார அறிவு தமிழ் மக்களிடத்தில் வளராமல் இருப்பது வியப்பன்று. வரவரக் குறைந்து போகுமாயின் அதுவும் வியப்பாகாது. பண்ணோடு முறையாகத் தேவாரத்தைப் பாடுவது கூட இப்போது அருகி வருகின்றது. பழைய மரபு என்றால் வேப்பங் காயாக எண்ணும் சிலர், தேவாரம் பாடும் புண்ணியச் செயலை உடையவராக இருந்தும், அப்பாடல்களுக்குரிய பண்ணை மாற்றிச் சினிமாமெட்டில் பாடுவதற்கும் துணிந்து விட்டார்கள். வேதமாக எண்ணிப் பக்தியுடன் பாடுவதற்குரியது தேவாரம். வேதத்துக்குச் சுரம் அமைந்தது போலத் தேவாரத்துக்குப் பண்கள் அமைந்திருக்கின்றன. திருமுறைகளைக் கண்டெடுத்த இராசராசன் அவற்றை அப்படியே வெளிப்படுத்தாமல், பண்களுடன் பாடுவது இன்றியமையாதது என்று அறிந்தே திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடைய மரபிலுதித்த மங்கையொருத்தியின் உதவியினால் பண்களை அமைக்கச் செய்தான். தேவாரத் திருமுறைகளின் வகுப்பே பண்ணை அடிப்படையாகக் கொண்டது. இன்ன இன்ன பண்ணுக்கு இத்தனை பதிகங்கள் என்ற வரையறையை இந்த வகுப்பில் காணலாம். அப்படியிருக்கப் பண்களை மாற்றி ஓதுவதும், சினிமாப் பாட்டாக எண்ணும்படி ராகம் அமைத்து ஓதுவதும் தேவாரத்துக்குரிய தெய்விகப் பண்பைக் குறைத்துவிடும்.
தேவாரம் ஓதுவதும், தேவாரத்தின் இலக்கியச் சுவையை நுகர்ந்து இன்புறுவதுமாகிய செயல்கள் தமிழ் மக்களிடத்தில் மிகுதியாக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தினால் இதனை இங்கே தெரிவிக்கலானேன். திருமாலடியார்கள் திவ்யப் பிரபந்தத்தைப் பாதுகாக்கும் முறையையும், அதற்கு உரை பல தோன்றிச் சிறப்புற்று விளங்கும் செய்தியையும் நினைத்துப் பார்த்தால் தேவாரத்துக்குச் சிவனடியார்கள் செய்தது எள்ளளவுகூட இல்லை என்பது தெரியவரும்; தேவாரம் மீண்டும் பழைய நிலையைப் பெறுவதோடு, அதிலுள்ள இலக்கியச் சுவையை அறிந்து இன்புற்றும் பிறரை இன் புறச் செய்தும் வரும் முயற்சிகள் பல்க வேண்டுமென்று இறைவன் திருவருளை வழுத்துகிறேன்.
கி.வா. ஜகந்நாதன்



