திருவருட்பாச் சிந்தனை 
க. வெள்ளைவாரணனார்

திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

முன்னுரை

திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தேதிருக்கூத்து விளங்க ஒளிசிறந்த திருவிளக்கேஉருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்கஉலகமெலாம் விளங்க அருள் உதவு பெருந்தாயாம்மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்கவயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவராய் விளங்கிய பன்மொழிப் புலவர் டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களுடன் சித்தாந்த கலாநிதி உரை வேந்தர் ஔவை. துரைசாமிப் பிள்ளையவர்களும், யானும் 1944-45-ஆம் ஆண்டில் வடலூரில் நிகழ்ந்த சன்மார்க்க சங்கக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். அக்கூட்டத்திற்குத் தமிழ்த்தென்றல் திரு. வி. கல்யாண சுந்தரனார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அப்போது ‘தேவாரத் திருமுறையும் திருவருட்பாவும்’ என்ற பொருள் பற்றிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 15 மணித் துளியில் யான் பேசிய பேச்சைக் கேட்ட திரு.வி.க. அவர்கள், அப்பேச்சினை விரித்து ஒரு கட்டுரையாக எழுதும் படி பணித்தார்கள். சைவத் திருவாளர் திரு. சச்சிதானந்தம் பிள்ளையவர்களிடமும் சொல்லி நினைவு படுத்தினார்கள் எனினும் பல்கலைக்கழகப் பணிகளுக்கிடையே அதனைச் செய்து முடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தார் கேட்டுக் கொண்டபடி அருட்பா அறம் என்ற வரிசையில் நான்கு நிமிட அளவில் ஆறு பேச்சுக்கள் வானொலியில் நிகழ்த்தப் பெற்றன. சைவத்திருமுறைகளிலும், திருவருட்பாவிலும், உறுதியான ஆர்வமும், ஈடுபாடும், புலமையும் தியான அனுபவமும், ஒருங்கு வாய்க்கப் பெற்ற வடலூர் வாழ் திருவாளர் பழ.சண்முகனார் அப்பேச்சுகளைத் தொகுத்து வெளியிட விரும்பிக் கையெழுத்துப் படியினை வாங்கிச் சென்றார்கள். இருபது பக்க அளவில் அமைந்த அக் கையெழுத்துப் படியினைக் கண்ணுற்ற மதுரைக் காமராசர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர். வ.சுப. மாணிக்கனார் அவர்கள் சிறிய அளவில் இதனை வெளியிடுவதைக் காட்டிலும் இக்கருத்துக்களை மேலும் விளக்கித் தனிநூலாக வெளியிடுதலே பயனுடையதாகும் என வற்புறுத்தினார்கள். அவர்களது வற்புறுத் தலுக்கு இணங்க மேலும் பல தலைப்புக்களில் விரிந்த பொருளமைப்பினைப் பெற்று இந்நூல் வெளிவருகின்றது.

இராமலிங்க வள்ளலார் அருளிய திருவருட்பா செந்தமிழ்ச் சொல்வளத்தாலும், ஆழ்ந்த பொருள் நுட்பத்தாலும் ஒப்பற்ற பேரருளின்பக் கடலாகும். அதனை ஆராயப் புகுந்த யான் கடலுற்றுண் பெரு நசை ஒரு கணங்கனை யொக்குந் தகைமையேன் என்பதனை நன்கறிவேன். ஆயினும் சைவத் திருமுறைகளில் எனக்கு இயல்பாக வுள்ள ஆர்வத்தாலும் அத்திருமுறைகளுக்கு விளக்கவுரை போன்று வள்ளலார் பாடியருளிய திருவருட்பாப் பனுவலின் சிறப்பினைச் சைவவுலகம் உள்ளவாறு உணர்ந்து போற்றுதல் வேண்டும் என்னும் ஆசையினாலும் இச்சிறுநூலை எழுதத் தொடங்கினேன். எனக்கு உறுதுணையாய் உடனிருந்து உரிய கருத்துக்களை வழங்கி இந்நூலை எழுதி நிறைவேற்றியவர் அருள் நெறிச் செல்வர் பழ. சண்முகனார் அவர்களேயாவர். அவர்கட்கு எனது வணக்கத் தினையும், நன்றியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சைவத் திருமுறைகளில் உண்மையான மதிப்புடைய சித்தாந்தச் சைவர்கள் சிலர் சமயங்கடந்த பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கத்தை வற்புறுத்தும் திருவருட் பாவினைச் சைவத்திருமுறைகட்கு மாறுபட்ட கருத்துக்களை வற்புறுத்தும் நூலாகப் பிறழவுணர்ந்து அயன்மை செய்து வருகின்றனர். திருவருட் பாவின் சமரச நன்னெறியினை வற்புறுத்தும் குறிக்கோளுடைய சன்மார்க்க அன்பர்களில் ஒரு சாரார் வள்ளலார் பாடிய முதல் ஐந்து திருமுறைகள் சைவத் திருமுறையாசிரி யர்களையும் அவர்கள் அருளிய திருமுறைப்பனுவல் களையும் போற்றுதலால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் விருப்பின்றிச் சிறப்பாகச் சாதிசமயப் பிணக் கொழித்துச் சமரச சன்மார்க்க நெறியினை வற்புறுத்தும் ஆறாந் திருமுறையினையே தமக்குரிய ஆதார நூலாகக் கொள்கின்றனர்.

இராமலிங்க வள்ளலார் வற்புறுத்தும், சமரச சுத்த சன்மார்க்கத்தின் விளைபுலமாகவும் தமிழ்மக்களின் தெய்வத்திறம் பேசும் திருவருளிலக்கியமாகவும் திகழும் சைவத் திருமுறைகளை ஆதாரமாகக் கொள்ளுதற்கு அன்னோர் தயங்குகின்றார்கள். மேற்குறித்த இருதிறத்தாரும் சைவத் திருமுறைகளையும் அவற்றில் தோய்ந்து இறைவன் திருவருளில் திளைத்த இராமலிங்க வள்ளலார் அருளிய திருவருட்பாவினையும், காய்தலுவத்தலகற்றி ஒப்பு நோக்கி ஆராய்வார்களானால், சைவத்திருமுறைகள் மூல நூலாகவும், திருவருட்பா அவற்றின் பெருவிளக்கவுரையாகவும் அமைந்துள்ள ஒற்றுமைத் திறத்தினை உள்ளவாறுணர்வர். அதனால் திருமுறைகளும் திருவருட்பாவும் தம்முட் பொருளால் முரண்படுவன அல்ல என்னும் தெளிவுடையராவர் என்பது திண்ணம். இவ்வாறு சைவத் திருமுறை கட்கும் திருவருட்பாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினையும், அவ்விரண்டுக்கும் பொருள் மாறுபாடு சிறிதும் இல்லை என்பதனையும் எடுத்துக் காட்டி விளக்குவதே இச்சிறுநூலின் நோக்கமாகும்.

சாதிமத வேற்றுமையொழிப்பு, வேதாந்த சித்தாந்த சமரசம் இராமலிங்க வள்ளலார் வற்புறுத்திய சாகாக் கல்வி, மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய கருத்துக்கள் பல திருமூலர் முதலிய திருமுறையாசிரியர்கள், காழிச் சிவஞான வள்ளலார், தாயுமானவர் ஆகிய பெருமக்கள் இயற்யி நூல்களிலும், இடைக்காலத்துச் சித்தர் பாடல்களிலும், பிற்காலத்தில் வாழ்ந்த அனுபவ ஞானியாகிய குமாரதேவர் நூல்களிலும் கூறப்பட்ட பழைமையுடையனவே யன்றி வள்ளலாரால் எவையும் புதியனவாகப் புனைந்து கூறப்பட்டன அல்ல. இடைக்காலத்தில் வாழ்ந்த சிவஞானச் செல்வர்கள் கண்டுணர்த்திய அக்கருத்துக்களை விளக்கி உலகமக்கள் பலரும் தம் வாழ்வியல் நடைமுறையில் பின்பற்றி யொழுக நெறிப்படுத்தி உறுதியாக விரிவாக வழங்கிய தொன்றே வள்ளலார்குரிய தனித் தன்மையாகும். வள்ளலார் பின்பற்றிய நெறி சைவசித்தாந்தமே என்பது முப்பத்தாறு தத்துவங்கள் பற்றியும், மும்மலங்களாகிய பாசங்கள் பற்றியும், ஆன்ம வியல்பு பற்றியும் பதியியல்பு பற்றியும் அவர் கூறும் விளக்கங்களால் நன்கு புலனாகும்.

இந்நூலை எழுதும்படி தூண்டித் துணைபுரிந்தவர் தில்லைத் திருக்கோயில் திருப்பணிச் செல்வர் தருமபூஷணம் செ. இரத்தினசாமி செட்டியாரவர்களின் முதல் மைந்தர் என கெழுதகைத் தம்பியார் திரு. பாலசுப்பிரமணியம் ஆவர்.

செந்தமிழும் சிவநெறியும் தம் இரு கண்களாகக் கொண்டு போற்றும் இயல்பினராகிய இவரும், இவருடைய தம்பியர் திரு.இராமநாதன் திருநாவுக்கரசு ஆகியோரும் சுற்றமும் நட்பும் சூழப் பொன்னம்பலத்தில் அருள்நடம் புரியும் அம்பலவாணர் திருவருளால் எல்லாச்செல்வங்களும் நற்பேறுகளும் இனிது பெற்று நாடு நலம் பெற நீடு வாழ்தல் வேண்டும் என உளமுவந்து வாழ்த்துகின்றேன்.

உடல் நலங்குறைந்த நிலையிலும் இத்தகைய தமிழ்ப் பணிகளில் யான் ஈடுபடும் அளவுக்குத் தனது உடல் நலத்தைப் பொருட் படுத்தாது எனது உடல் நலத்தைப் பேணி வரும் என் வாழ்க்கைத் துணைவி திரு.பொற்றடங்கண்ணி உடல்நலமும் உளநலமும் பெற்று நீடு வாழ்தல் வேண்டும் என அன்புடன் வாழ்த்துகிறேன்.

சைவத்திருமுறைகளில் நிலை பெற்ற சிந்தையராய் வள்ளலார் அறிவுறுத்திய சமரச சுத்த சன்மார்க்கச் செந்நெறி யினைக் கடைப் பிடித்தொழுகும் செந்தமிழ்ச் செல்வர் திரு. பழ.சண்முகனார் அவர்களது ஆர்வத்தின் விளைவாக, அமைந்ததே திருவருட்பாச் சிந்தனை என்னும் இந்நூலாகும்.

இதனை அன்புகூர்ந்து உடனிருந்து எழுதி நிறைவேற்றிய அவர்கட்கு எனது நன்றியும், வணக்கமும், வாழ்த்தும், பாராட்டும் என்றும் உரியவாகும்.

இந்நூல் மாணிவாசகர் நூலகத்தின் வெளியீடாக வெளிவருதற் குரிய ஊக்கவுரையினை நல்கியதுடன் அருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பாவின் செம்பொருள் நுட்பங்கள் இனிது புலனாக ஆய்வுநலம் சிறந்த அணிந்துரையினை ஆர்வமுடன் எழுதி இந்நூலினைச் சிறப்பித்த மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மூதறிஞர் செம்மல் டாக்டர் வ. சுப. மாணிக்கம் பி.எச்.டி.,டி.லிட்., அவர்களுக்கு எனது உளமார்ந்த வணக்கத்தினையும் நன்றியினையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தம் தந்தையார் விரும்பிய வண்ணம் வனப் புற வெளியிட்டு உதவியவர், சிறந்த நூல்களை வெளியிடுந் திறத்தால் செந்தமிழ் வளர்க்கும் மணிவாசக நூலக உறுதுணையாளரும் அண்ணா மலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளரும் ஆகிய நண்பர் திரு.ச. மெய்யப்பன் எம்.ஏ. அவர்கள் ஆவர்.

இவர் நாள்தோறும் கூத்தப் பெருமானை வழிபட்டு வரும் பெற்றியர். தமிழ் வளர்ச்சியில் ஆர்வமுடைய இவர் தில்லைச் சிற்றம்பலவன் திருவருளால் எல்லாச் செல்வங்களும் பெற்று நல்ல தமிழ்ப் பணிகள் புரிந்த, நாடு நலம்பெற வாழ்க என உளமுவந்து வாழ்த்துகின்றேன்.

சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவேன் உய்திபெறநல்ல தமிழ்ப்பணியை நல்குவான் செல்வமலிபுள்ளிருக்கு வேளூர்ப் புகழ்ச்செவ்வேள் பொன்னடியென்உள்ளிருக்க என்றும் உவந்து.

. வெள்ளைவாரணன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *