திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

4. உயிரிரக்கம்

உலகிற் பேணுதற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றவர்கள் இப்பிறப்பினால் அடையத்தக்க பயனைக் காலம் உள்ளபோதே அறிந்து அடைதல் வேண்டும் என்பது இராமலிங்க வள்ளலாரது பெருவேட்கையாகும். எல்லா வுலகங்களையும் எல்லாப் பொருள் களையும் எல்லாவுயிர்களையும் எங்கும் நிறைந்த இயற்கை விளக்கமாகிய தனது அருள் என்னும் சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கும் முழுமுதற் பொருளே கடவுள். உண்மையறிவின்ப வடிவினராகிய கடவுளின் முழுநிறைவாகிய இயற்கை யின்பத்தைப் பெற்றுத் தம்முடைய விழைவு அறிவு செயல் என்பன எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாமல் நிகழ வாழ்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வை அடைவதே மக்கட் பிறவியால் ஒவ்வொரு வரும் அடைதற்குரிய பெரும் பயனாகும். உலக மக்கள் தமது உயிர்க்குயிராகிய கடவுளின் திருவருளைத் துணையாகக் கொண்டல்லது மேற்குறித்த பெரும்பயனை அடைதல் இயலாது என்னும் மெய்யுணர்வு கைவரப்பெற்ற வர்களே இவ்வுலகில் அருட்பருவ வளர்ச்சியைப் பெற்ற அருளாளராவர்.

உலகெலாம் இயக்கும் அருட்பெருஞ்சோதியாகிய இறைவன் ஓரறிவுயிராகிய புல்முதல் ஆறறிவுயிராகிய மக்கள் ஈறாக எல்லாவுயிர்களிலும் நீங்காது எழுந்தருளியுள்ளான். மக்கள் அம்முதல்வனது திருவருளைப் பெறவேண்டுமானால் இறைவனது அருள்விளக்கத்திற்கு நிலைக் களமாகத் திகழும் எல்லாவுயிர் களிடத்திலும் நீங்காத அன்புடையராய் உலகியலில் உயிர்கள் படுந்துயரத்திற்கு உளம் இரங்கியும் அவற்றின் துயர்களைத் துடைத்தும் நலம்புரியும் சீவகாருணிய ஒழுக்கத்தினை மேற்கொள்ளுதல் இன்றி யமையாததாகும்.

இவ்வுலகிற் பசியினாலும் நோயினாலும் பகையினாலும் மன்னுயிர்கள் படுந் துயரங்களை நேரிற் கண்டிருந்தும் அவற்றைப் போக்கும் வழிகளை ஒருசிறிதும் நினையாது தமது உயிர்வாழ்க்கை ஒன்றனையே இனிதெனக் கருதி வாழ்வார் மிகப் பலர், யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நாம் மட்டும் சுகமாக வாழ்ந்தாற் போதும் என்று தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எவ்வகை யிலும் பிறர்க்குப் பயன்படாது வாழ்வோர் எத்துணைப் பேரறிவும் பேராற்றலும் பெருஞ்செல்வமும் உடையராயினும் அவர்கள் பெற்றுள்ள அறிவும் ஆற்றலும் செல்வமும் முதலாயின உயர்திணை மாந்தராகப் பிறந்துள்ள அவர்தம் மக்கட் பண்பின் வளர்ச்சிக்கோ அன்றி அவரைச் சூழ்ந்துள்ள மக்கட் குலத்தாரது நல்வாழ்வுக்கோ ஒருசிறிதும் பயன்படுவதில்லை. இவ்வாறு ஒருவாற்றானும் பிறர்க்குப் பயன்படாத இன்னோரது பேதைமை நிலையினை யெண்ணி இரங்குவதாக அமைந்தது.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தன்னோய்போற் போற்றாக்கடை (315)

எனவரும் திருக்குறளாகும். இராமலிங்க வள்ளலார் அருளிய திருவருட்பா அறிவுறுத்தும் அறங்கள் பலவற்றுள்ளும் தலை சிறந்து விளங்குவது சீவகாருணிய ஒழுக்கம் சீவன் – உயிர், காருணியம் – என்பது பிறவுயிர்கள் படும் துன்பத்தினைக் கண்டால் அறிவுடைய நன் மக்களுள்ளத்திலே இயல்பாகத் தோன்றும் இரக்கவுணர்வு காரணமாகப் பிற உயிர்களின் துயரங்களைப் போக்குதற்கு முற்பட்டு முயலும் கருணைத்திறம், கொல்லாமை, புலாலுண்ணாமை; ஏழைகளின் பசிதீர்த்தல் என்னும் மூவகையறங்களையும் உள்ளடக்கியதே சீவகாருணிய ஒழுக்கமாகும்.

காணா மரபினவாகிய உயிர்களுக்குக் காணுதற்குரிய உடம்புகள் படைத்தளிக்கப் பெற்றதன் நோக்கம் எல்லா உயிர்களும் தம்மையொத்த மன்னுயிர்களை உணர்ந்து அன்பு செலுத்துதற் பொருட்டேயாம் என்பதும், அவ்வாறு உயிர்கள்பால் அன்பு செலுத்தும் உணர்வுரிமை மன உணர்வு பெற்ற மக்கட் குலத்தார்க்கே நன்கு அமைந்துள்ள தென்பதும் ஆகிய உண்மையினை ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்ற தொடரில் அருட் பிரகாச வள்ளலார் தெளிவாகப் புலப்படுத்தி யுள்ளார்கள். நன்றும் தீதும் பகுத்துணர வல்ல மாந்தர்கள் தம் இனத்தார் படும் துயரங்களையும் தம்மினும் தாழ்ந்த விலங்கு பறவை முதலிய அஃறிணை உயிர்கள் படும் துன்பத்தையும் கண்டு அத்துன்பங்களைக் களைதற்குரிய அருள் முயற்சியாகிய இரக்க உணர்வினைப் பெறுதல் வேண்டு மென்பது வள்ளலார் அறிவுறுத்திய உயிர் இரக்கமாகிய ஒழுக்க நெறியின் குறிக்கோளாகும். இத்தகைய அருளுணர்வு உயிர்க் குயிராகிய தெய்வத்தின் திருவருள் பெற்றோர்க்கே உள்ளத்தில் கருணையாக நிறைந்து பிற உயிர்கள் படும் துனபத்தைத் துடைக்க வல்ல பேராற்றலை மக்களுக்கு வழங்குவதாகும்.

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே

(தாயு. பரா-கண்ணி 5)

எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணும் தபோதனர்கள்செவ்வறிவை நாடிமிகச் சிந்தை வைப்ப தெந்நாளோ

(தாயு-பரா. எந். கண்ணி. 12)

எனத் தாயுமானப் பெருந்தகையார் எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணி அவ்வுயிர்கள் படும் துயரத்துக்கு உளம் இரங்கி அவற்றின் துன்பங்களைத் துடைக்க முற்படும் கருணைத் திறமாகிய உயிர் இரக்கவுணர்வினை இறைவனது திருவருளால் பெறுதல் வேண்டுமென்பதனை நன்கு வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய உயிர் இரக்க உணர்வு இறைவனது திருவருள் ஒன்றினாலேயே பெறுதற்குரியது என்பதனை மகா தேவ மாலையில் கருணை நிறைந்து அகம்புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கெலாம் களைகணாகித்தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்ணுடையோய் என இறைவனைப் போற்று முகத்தால் வள்ளலார் அறிவுறுத்தி யுள்ளமை காணலாம்.

உயிர்க்குயிராகிய கடவுளின் இயற்கை விளக்கமே அருள் எனப்படும். அருள் என்பது தொடர்பு பற்றாது (உறவு முறை கருதாது) இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை என விளக்கம் தருவர் பரிமேலழகர். செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப் பெற்ற சிறப்புடைய செல்வமாவது அருளால் வரும் செல்வமே; ஏனைப் பொருளால் வரும் செல்வங்களோ இழிந்தாரிடத்தும் உள்ளன. மன்னுயிர்களை ஓம்பி அவ்வறத்தினால் மேம்படுதலாகிய அருட்செல்வம் அறிவொழுக்கங்களாற் சிறந்த உயர்ந்தோரிடத்திலேயே நிலைத்து நிற்கும். ஆதலால், அவ்வருளால் வரும் செல்வமே எல்லாச் செல்வங்களிலும் சிறப்புடைய செல்வ மாகும் என அறிவுறுத்துவது,

அருட் செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள (குறள் 241)

எனவரும் திருக்குறளாகும்.

பிறரை ஏவும் முறையில் நீண்ட ஆணைமொழிகளைப் பேசுதலும் தாம் விரும்பிய இடங்களுக்கு நினைத்த மாத்திரத்திலேயே விரைந்து செல்லுதற்குரிய ஊர்திகளை ஏறிச் செலுத்துதலும் செல்வத்தின் பயனென எண்ணி நுண்ணுணர்வு இல்லாதார் பிறர்க்கு உதவி செய்யாது தமது வாழ்க்கையை வீணேகழிப்பர். அன்பு, நாண், ஒப்புரவு கண்ணோட்டம், வாய்மை என்னும் பண்பினால் நிறைந்த சான்றோர்கள், தம்மையடைந்தவர்கள்படும் துயரத்துக்கு அஞ்சி அவர்கட்கு வேண்டுவன அருளும் உயிர் இரக்கமாகிய பண்பினையே பெருஞ் செல்வமாகக் கொண்டு மன்னுயிர்களின் துயரங்களைப் போக்குதலே தம்முடைய வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வார்கள். இவ்வுண்மையைச் சங்கத் தமிழ்ச் சான்றோர் ஒருவர் நற்றிணைப் பாடலொன்றில் தெளிவாக விளக்குகின்றார்.

தன் பிரிவினால் வருந்தும் தலைவியின் துயரத்தை உணராது புறத்தொழுக்கம் ஒழுகும் தலைவனைத் தோழி கண்டித்துரைப்ப தாக அமைந்தது,

அரிகால் மாறிய அங்கண் அகன்வயல்மறுகால் உழுத ஈரச் செறுவயின்வித்தொடு சென்ற வட்டி பற்பலமீனொடு பெயரும் யாணர் ஊரநெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்செல்வமன்று தம் செய்வினைப் பயனேசான்றோர் செல்வ மென்பது சேர்ந்தோர்புன்கண் அஞ்சும் பண்பின்மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே.

(நற்றிணை – 210)

எனவரும் நற்றிணைச் செய்யுளாகும்.

நெல்லின் அரிந்த தாளாகிய அடிப்பகுதி மறு உழவால் மாறிய அழகிய இடமகன்ற வயலிடத்தே மறுசால் உழுததினால் ஈரம் உலராத அவ்வயற் பகுதியிலே விதைத்தற் பொருட்டு விதைகளைக் கொண்டு செல்லப்பட்ட கூடைகள் பல்வேறு வகைப்பட்ட மீன்களைக் கொண்டு மீளும் புதுவருவாய் நீங்காத மருதநிலத்து ஊரின் தலைவனே! பிறரை ஏவல் கொள்ளும் நிலையில் நீண்ட ஆணை மொழிகளைக் கூறுதலும், விரைந்து செல்லும் ஊர்திகளை ஊர்ந்து செலுத்துவதும் உயர்ந்த செல்வமெனக் கருதப்பட மாட்டா. அவை தாம் தாம் செய்த தொழிற் பயனால் நுகரும் நுகர்ச்சியே யாகும். பண்பால் நிறைந்த சான்றோர் நுகரும் நுகர்ச்சியேயாகும். பண்பால் நிறைந்த சான்றோர்களால் உயர்ந்த செல்வமெனக் கூறப்படுவது, தம்மைச் சேர்ந்தோரது துன்பத்தைக் கண்டு அஞ்சும் பண்போடு கூடிய அருளுடைமையாகிய செல்வம் ஒன்றேயாகும். அதுவே எல்லாச் செல்வங்களுக்கும் மேலான சிறப்புடைய செல்வமாகும் என்பது இப்பாட்டின் பொருளாகும்.

தன்னையடைந்தவர்களுடைய துன்பத்தைக் கண்டு இரங்கித் துயர் துடைக்க முற்படும் அருளுடைமையாகிய செல்வமே சான்றோர்களால் செல்வமென மதிக்கப்படுவது என்னும் இவ் வுண்மையினை ‘மிளை கிழான் நல்வேட்டனார்’ என்னும் புலவர் மேற்காட்டிய நற்றிணைப் பாடலில் வற்புறுத்தியுள்ளமை காணலாம்.

கணவனும் மனைவியுமாக அன்பினாற் கூடி வாழ்ந்தார் உறவுமுறை முதலிய தொடர்பு நோக்காது எல்லா உயிர்களிடத்தும் இரக்கமுடையராய் வாழும் அன்பின் முதிர்ச்சியே அருளாகும். அருளென்னும் அன்பீன் குழவி என்றார் தெய்வப்புலவரும். கணவனும் மனைவியுமாகக் கூடிவாழும் இருவர்க்கும் உரியனவாகக் கூறப்படும் பிறப்பு முதலிய பத்துவகைப் பொருத்தங்களுள் உயிரிரக்கமாகிய அருட்பண்பும் ஒன்றாகும் என ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்தியுள்ளார்.

தன் ஆருயிர்த் தலைவியைப் பிரிந்து மன்னனுக்குத் துணையாய் வினைவயிற் சென்ற தலைவன், அத்தொழில் நிறைவேறிய நிலையில் தலைவியின் பிரிவுத்துன்பத்தை நீக்குதற் பொருட்டுத் தேரில் ஏறி விரைந்து வருகின்றான். அவ்வாறு வரும்போது வழியிடையே அமைந்த காடுகளிலே மலர்களில் உள்ள தேனைப்பருகி ஆணும் பெண்ணுமாகக் கூடி இன்புற்றிருக்கும் வண்டுகளின் அன்பின் நிலையை எண்ணிப் பார்க்கின்றான். மணிகட்டிய தன் தேர் அக்காட்டின் வழியே விரைந்து செல்லுமானால் தன் தேரில் கட்டிய மணிகளின் பேரொலியின் அதிர்ச்சியினால் அவ்வண்டுகள் துன்புறுமே எனச் சிந்திக்கின்றான். தன்னுடைய தேரின் ஆரவாரம் காட்டில் உள்ள வண்டுகளாகிய சிற்றுயிர்களுக்கு அதிர்ச்சியைத் தந்து துன்பம் விளைக்காதவாறு தன் தேரிற் கட்டிய மணியின் நாவினை ஒலியெழாதபடி கயிற்றால் பிணித்துக் கட்டிக் காட்டின் வழியே செல்கின்றான். இவ்வாறு வண்டுகளாகிய சிற்றுயிர்க்கும் துன்பம் விளையாதவாறு உயிரிக்க உணர்வுடையோனாய்த் தேரில்வரும் தலைமகனது அருள் விளக்கத் தோற்றப் பொலிவினைத் தோழி அவனது ஆருயிரனைய தலைவிக்குப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது,

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்ததாதுண் பறவை பேதுற லஞ்சிமணிநா வார்த்த மாண்வினைத் தேரன்உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்

(அகநானூறு 4)

எனவரும் அகநானூற்றுப் பாடற்பகுதியாகும்.

இத்தொடர், ஒத்த அன்புடைய காதலராகிய தலைவன் தலைவி யென்னும் தலைமக்கள் அனைவர்க்கும் பிறவுயிர்களின் துன்பந்துடைக்க முற்படும் உயிரிரக்கவுணர்வு இன்றியமையாதது என்பதனை அறிவுறுத்தும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம்.

பறம்பு மலைத் தலைவனாகிய பாரிவள்ளல் மலை வளங்காணத் தேரிற் சென்று தன் தேரினை ஓரிடத்தே நிறுத்திவிட்டு உலவச் சென்றவன், சிறிது நேரம் கழித்து மீண்டு வந்து தன் தேரினைப் பார்த்த போது அவ்வழியிலே தான் படர்தற்குரிய கொழுகொம்பின்றித் தளர்ந்து அசைந்த முல்லைக்கொடி யொன்று தன் தேரினைப் பற்றிச் சிறிது படர்ந்திருந்த காட்சியைக் கண்டான். படர் கொம்பின்றித் தன் தேரைப் பற்றிய ஓரறிவுயிராகிய அந்த முல்லைக் கொடியின் தளர்ச்சியை நீக்கக் கருதிய அருளுள்ளம் படைத்தோனாகிய பாரிவேள், தான் ஊர்ந்து வந்த தேரினையே அக்கொடி படர்தற்குரிய கொழு கொம்பாக நிறுத்திவிட்டு நடந்து சென்றான் என்பது சங்க இலக்கியம் கூறும் வரலாற்றுச் செய்தியாகும். உயிரிக்க முடைய உரவோனாகிய பாரிவேள் முல்லைக்கொடிக்குத் தன் தேரை அளித்த அருள்வழிப்பட்ட இரக்கவுணர்வினை நினைந்து,

பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லைநாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்தபரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறம் 200)

எனப் பொய்யாநாவிற் புலவர் பெருமானாகிய கபிலர் உள்ளம் உருகுகின்றார். தம்மைத் துன்பமின்றிக் காத்துக் கொள்ளும் மனவுணர்வும் செயலாற்றலும் வாய்க்கப் பெற்ற மக்கள் படுந் துன்பத்தினை அகற்றுவதோடு அமைந்து விடாமல், அத்தகைய உணர்வுவன்மை வாய்க்கப் பெறாத சிற்றுயிர்களின் துயரத்தையும் உணர்ந்து போக்கும் உயிரிரக்க உணர்வுடையராய்ப் பண்டைத் தமிழ் வேந்தர் வாழ்ந்தார்கள். சோழர்குல முதல்வனாகிய சிபி என்னும் மன்னன், பருந்தின் தாக்குதலுக்குப் பயந்து தன்னை அடைக்கலமாக அடைந்த புறாவைப் பாதுகாத்தல் வேண்டியும், அப்புறாவை உணவாக நாடித் தொடர்ந்து வந்த பருந்தின் பசியினைப் போக்குதல் வேண்டியும் தன் உடம்பினை அரிந்து பருந்துக்கு அளித்துப் பருந்தின் பசித் துன்பத்தை யகற்றிப் புறாவினைப் பாது காத்தான் என்பது தமிழகத்தின் தொன்மை வரலாறாகும். நிலத்தின் மேல் உயிர் வாழ்வார்க்குக் கதிரவனது வெய்யில் வெப்பத்தால் உண்டாகும் தளர்ச்சி நீங்கும்படி கதிரவனின் வெப்பத்தைத் தம் சடைக்கற்றைகளால் தாங்கிக் காற்றையே உணவாகக் கொண்டு கதிரவனது சுழற்சியோடு உடன் திரியும் அருளுள்ளம் படைத்த முனிவர்கள் சிலர் உள்ளார் என்பதும், அவர்களது சடைக்கற்றை யினாலே கதிரவனது வெம்மை மறைக்கப் பெற்று மன்னுயிர்கள் வாழ்வுக்கு வேண்டு மளவு கதிரவனது வெம்மை கொடுக்கப் பெறுகிறது என்பதும் நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும். இவ்வாறு ஞாயிற்றின் மிகுவெப்பத்தைத்தணித்து மன்னுயிர்களுக்கு வேண்டுமளவு குறைத்துத் தரும் விரிசடை முனிவர்கள் ‘வேணாவியோர்’ என வழங்கப் பெறுவர். மன்னுயிர்களின் துயர் நீக்கும் இவர்களுக்கு இறைவனது திருவருள் உடனிருந்து உதவி புரிகின்றது என்பதனை,

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை (திருமுருகு. 107-108)

என நக்கீரனாரும்

சுடரொடு திரிதரும் முனிவரும் அமரரும்இடர்கெட அருளும் நின் இணையடி தொழுதேம்

(சிலப். வேட்டுவவரி)

என இளங்கோவடிகளும் முறையே முருகப் பெருமானையும் கொற்றவையையும் பரவிய பாடல்களில் போற்றியுள்ளனர். இவ்வாறு உலக நலன் கருதி ஞாயிற்றைச் சூழ்ந்து வரும் விரிடை முனிவர்களும் வியப்புற்று மயங்க வளைந்த சிறகினையும் கூரிய நகத்தினையுமுடைய பருந்தின் தாக்குதலுக்குப் பயந்து தன்னை யடைக்கலமாக அடைந்த குறுநடைப் புறாவினதுவருத்தத்துக்கு அஞ்சி, தனது துயரத்தைப் பொருட் படுத்தாது புறவினைத் தொடர்ந்த பருந்தினது பசியை அடக்குதல் வேண்டிப் புறாவின் நிறை அளவிற்கு ஈடாகத் தனதுடம்பினைத் தராசில் நிறுத்துத் தந்தவன், வரையா வண்மையும் பேராற்றலும் படைத்த சோழ மன்னன் சிபி என்பவனாவான். சிற்றுயிர்கள்படும் துன்பத்துக்கு இரங்கித் தன் உடம்பினையே பருந்துக்கு உணவாக அளித்த இவ்வேந்தர் பெருமானின் உயிரிரக்க உணர்வினை,

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்காலுணவாகச் சுடரொடு கொட்கும்அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்தன்னகம் புக்க குறுநடைப் புறவின்தபுதி அஞ்சிச் சீரை புக்கவரையா யீகை யுரவோன் (புறம். 43)

எனத் தாமப்பல்கண்ணனார் என்னும் புலவர் பெருமான் நெஞ்சம் நெகிழ்ந்து போற்றியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும்.

பேகன் என்னும் வள்ளல், குளிரால் நடுங்கிய மயிலின் துன்பத்தைக் கண்டு ஆற்றாது உயிரிரக்கத்தால் தான் அணிந்திருந்த பொன்னாடையைப் போர்த்தி அதன் குளிரைப் போக்கினான் என்ற செய்தி சங்க இலக்கியத்திற் புலவர் பெருமக்களால் பாராட்டிப் போற்றப் பெற்றுள்ளது.

மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப்படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்கடாஅ யானைக் கலியான் பேக உடாஅ போரா வாகுத லறிந்தும்படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோகடாஅயானைக் கலிமான்பேகன் (புறம் 145)

எனப் பரணரும்,

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கியஅருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்பெருங்கல் நாடன் பேகனும் (சிறுபாண். 84-87)

என இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும் பேகனது உயிரிரக்கத்தினை உள்ளங்கசிந்து போற்றியுள்ளமை காணலாம்.

இவ்வாறு, உயிர்கள் படும் துயரத்தைக் கண்டு உள்ளம் இரங்கி அவற்றின் துன்பங்களை விரைந்து நீக்க முற்படும் உயிரிரக்க உணர்வு ஆறறிவுபடைத்த மக்கட் குலத்தார்க்கு இன்றியமையாதது என்பதும், இங்ஙனம் பிற உயிர்கள் படும் துயரத்தைக் கண்டு இரங்கும் அருளொழுக்கம் வாய்க்கப் பெறாதார் பெற்றுள்ள அறிவினால் சிறிதும் பயனில்லை யென்பதும்,

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தன்னோய்போல் போற்றாக் கடை (திருக்குறள் 315)

எனவரும் திருக்குறளினால் வலியுறுத்தப் பெற்றுள்ளமை முன்னரும் கூறப்பட்டது.

தனக்குப் பிறர்செய்யுந் துன்பங்கள் தன்னுயிர்க்கு வருத்தம் தருதலைத் தன் அனுபவத்தால் அறிந்த ஒருவன் தன்னையொத்த நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் இன்னா செய்தல் என்ன காரணத்தாலோ? என அவனது பேதைமையை நினைந்து தெய்வப் புலவர் திருவள்ளுவர் இரங்குவதாக அமைந்தது,

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க்கு இன்னா செயல் (திருக்குறள் 318)

எனவரும் திருக்குறளாகும்.

இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் பண்டைத் தமிழ் மக்கள் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி இரங்கும் உயிரிரக்க உணர்வுடையராய் ஒழுகினமை நன்கு புலனாகும். இவ்வாறு தமிழ் முன்னோர் கொண்டொழுகிய உயிரிரக்க ஒழுகலாறாகிய சீவகாருணிய ஒழுக்கத்தை மீண்டும் வற்புறுத்தி எல்லா மக்களும் மேற்கொள்ளச் செய்த பெருமை வடலூர் அருட்பிரகாச வள்ளலாருக்குரிய தனிச் சிறப்பாகும்.

இனி, இவ்வொழுகலாறு பற்றி வள்ளலார் தரும் விளக்கங்களை இங்குத் தொகுத்து நோக்குதல் இன்றியமையாதது.

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடைய வேண்டும்.

எல்லா அண்டங்களையும் எல்லாப் புவனங்களையும் எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங் களையும் எல்லாப் பயன்களையும் தமது பூரண இயற்கை விளக்க மாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும் எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபமாகும்.

சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுளின் அருளைப் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக் கூடாது. அருள் என்பது கடவுள் தயவு. கடவுள் இயற்கை விளக்கம். சீவகாருண்யம் என்பது சீவர்கள் ஆன்ம இயற்கைவிளக்கம்.

இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலும் கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அநுபவம் ஆதலின் சீவகாருண்யத்தைக் கொண்டு இறைவனது அருளைப் பெறுதல் கூடும். வேறொன்றினாலும் பெறுதல் இயலாது.

கடவுள் அருளைப் பெறுதற்கு உயிரிரக்கமாகிய சீவகாருண்யமே வழி. உயிரிரக்கமாகிய சீவகாருண்யம் மக்கள் உள்ளத்தே விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும். அதனால் பிறவுயிர்க்கு உதவி செய்யத் தோன்றும். அந்த ஆற்றலால் எல்லா நன்மைகளும் தோன்றும். மக்கள் உள்ளத்தில் உயிரிரக்கம் மறையும் போது அறிவும் அன்பும் உடனே மறைந்துவிடும். அதனால் பிற உயிர்க்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆற்றல் மறையும். அது மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும் ஆதலின் புண்ணியம் என்பது சீவகாருண்யமே என்றும் பாவமென்பது சீவகாருண்யம் இல்லாமையே என்றும் அறிதல் வேண்டும்.

சீவகாருண்ய ஒழுக்கத்தினால் மக்கள் உள்ளத்துள் தோன்றும் இரக்கத்தின் விளக்கமே கடவுள் விளக்கம். அவ்வொழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம். இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பல்கால் கண்டு நுகர்ந்து நிறைவு பெற்றவர்களே சீவன் முத்தர்கள் ஆவர். அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள். உயிர்களுக்கு உயிர்களின் தொடர்பாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தலே சீவகாருணிய ஒழுக்கமெனப்படும்.

உயிர்கள், பசி, தாகம், இச்சை, எளிமை, பயம் கொலை இவைகளால் துக்கத்தை அநுபவிக்கக் கண்ட போதாகினும், கேட்டபோதாகினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாகினும் உயிர்களின் தொடர்பாக ஆன்ம உருக்கம் உண்டாகும். உயிர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கை உண்மை ஏகதேசங்களாய் எல்லாம் வல்ல கடவுளால் உடம்போடு கூட்டிப் படைக்கப்பட்டமையால் ஒத்த உரிமை உள்ள சகோதரர் களேயாவர். சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்ற போதும் துக்கப்படுவார் என்று அறிந்தபோதும் அவரைத் தமது சகோதரர் என்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கம் உண்டாவது சகோதர உரிமையாம்.

ஆகவே, ஓருயிர், துன்புறக் கண்டபோதும் துன்பப்படும் என்று அறிந்த போதும் மற்றொரு உயிர்க்கும் உருக்கம் உண்டாவது பழைய ஆன்ம நேய உரிமை என்று அறிதல் வேண்டும். துக்கப்படுகின்றவரைத் தமது சகோதரர் என்று அறியத் தக்க ஆன்ம அறிவு என்னும் கண்ணானது அறியாமை இருளால் மறைக்கப்பெற்று ஒளி மழுங்கினபடியாலும் அவைகளுக்கு உதவும் கருவிகளாயமைந்த மனம் முதலான கண்ணாடிகளும் ஒளிதரும் ஆற்றல் இன்றித் தடிப்புள்ளவைகளாக இருந்தபடியாலும் மக்கட்குலத்தாரிடையே சகோதர உரிமை இருந்தும் சீவகாருண்யம் உண்டாகாமலிருந்தது. இதனால் சீவகாருண்யம் உள்ளவர்கள் மன்னுயிரனைத்தையும் ஒக்கப் பார்க்கும் உயர்விளக்கம் உள்ளார் என்று அறிதல் வேண்டும்.

உலகிற் பலர் பசிதாகம் பயம் முதலியவற்றால் மிகவும் துன்புறக் காண்கின்றோம். இவர்கள் முன்னைப் பிறப்பில் சீவகாருண்ய ஒழுக்கத்தை விரும்பாமல் வன்னெஞ்சத்தவராய்த் தீது நெறியில் நடந்தவராகையால் கடவுளின் ஆணைப்படி பசி தாகம் பயம் முதலியவற்றால் துன்பப்படுகிறார்கள் என்றறிய வேண்டும்.

சீவகாருண்ய ஒழுக்கம் சிறிதுமில்லாத புலி, சிங்கம் முதலிய விலங்குகள் திரியும் காட்டிலே இவ்வுலகியல் ஒழுக்கம் நிலைபெறாது. அதுபோல் சீவகாருண்யமில்லாத மனிதர்கள் வாழுமிடத்திலும் இவ்வுலகியல் ஒழுகலாறு செவ்வையாக நடைபெறாது. சீவகாருண்யம் இல்லாத போது மக்கள் உள்ளத்தே அருள் விளக்கம் தோன்றாது; அது தோன்றாபோது கடவுள் நிலை கை கூடாது; அது கைகூடாத போது வீடு பேற்றின்பத்தினை ஒருவரும் அடைய மாட்டார்கள். ஆகவே பரலோக ஒழுக்கமும் சீவகாருண்யத் தாலேயே கைகூடு மென்று அறிதல் வேண்டும் சீவகாருண்யம் ஆன்மாக்களின் இயற்கை விளக்கமாதலால் அந்த இயற்கை விளக்கம் இல்லாத உயிர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது. உயிர்களெல்லாம் இயற்கை விளக்கமாகிய கடவுளது அருள் அறிவுக் கறிவாய் விளங்குவதற்கு ஒத்த உரிமையுடைய இடங்களாக அமைந்துள்ளன. அவ்வுயிர்கள் உடம்புடன் கூடி அன்புடையராய் வாழ்தற்குப் பூதகாரியமான உடம்புகளே உரிமையாக உள்ளன. அவ்வுடம்புகளில் இரக்கம் மறைபடும். அதனால் கடவுளின் அருள் விளக்கம் வெளிப்படாது; அப்போது அறியாமையே மிக்குத் தோன்றும்; அதுவே ஆன்மாக்களின் அறிவு, இச்சை, தொழில்களைக் கட்டுப்படுத்தும் பிணிப்பு ஆகிவிடும். ஆகவே ஒவ்வோர் ஆன்மாவுக்கும் பூதகாரியமாகிய உடம்பு இன்றியமையாததாகும். அவ்வுடம்புக்கு மாயை என்னும் சடப்பொருளே முதற் காரணமாகும். ஆதலால் அந்த மாயையின் பல்வேறு விளைவுகளாகிய பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை என்பவைகளால் உயிர்கள் பெற்ற உடம்புகளுக்கு அடிக்கடி இடையூறுகள் நேரிடுகின்றன. அத்தகைய இடர்கள் நேராமல் அகக்கருவி புறக்கருவியாகியவற்றின் உதவியைப் பெற்ற தம்முடைய அறிவைத் துணையாகக் கொண்டு மிகவும் விழிப்போடு முயற்சி செய்து அவ்விடர்களைத் தடுத்துக் கொள்வதற்குத் தக்க வல்லப சுதந்தரம் (ஆணையாகிய உரிமை) மக்கள் உயிருக்கு அருளால் கொடுக்கப் பெற்றுள்ளது. மன உணர்வுடைய மக்கள் எல்லோரும் தமக்குக் கொடுக்கப்பட்ட வல்லப சுதந்தரமாகிய அவ்வுரிமையினைக் கொண்டு உடம்புடன் வாழ்ந்து தமக்கு நேரிடும் இடர்களை நீக்கி ஆன்ம லாபத்தைப் பெறுதற்கு முயற்சி செய்யக்கடவர்.

ஊழ்வினையாலும் விழிப்பின்மையாலும் வரும் இடர்களை நீக்கிக் கொள்ள மாட்டாமல் வருந்துகின்ற பிற உயிர்களின் வாழ்க்கையில் நேரும் இடர்களை நீக்கத் தக்க ஆற்றல் பெற்ற மக்கள், அவ்வுயிர்கள் படும் துன்பத்தை நீக்குவித்தல் வேண்டும். அவ்வாறு இடர் நீக்கும் தரத்தில் பசி, கொலை என்பவற்றால் வரும் துன்பம் தவிர, தாகம் பிணி இச்சை எளிமை பயம் என்பவற்றால் வரும் துன்பங்களை மாற்றுவது அபரஜீவ காருண்யம் (இயல் கருணைத்திறம்) எனப்படும். இது உலக இன்பத்தை மாத்திரம் சிறிது உண்டுபண்ணும். பிற உயிர்களுக்குப் பசியினால் வரும் துன்பத்தையும் கொலையினால் வரும் துன்பத்தையும் நீக்குவது பரசிவ காருண்யம் (பெருங்கருணைத்திறம்) எனப்படும். இது இவ்வுலக இன்பங்களையும் அளவிறந்த சித்தின்பங்களையும், எக்காலத்தும் அழியாத முத்தி இன்பத்தையும் கடவுளால் நல்குவதாகும். இவ்வாறு மன்னுயிர்களுக்கு நேரிடுகின்ற அல்லல்களைப் போக்குதற்குரிய வல்லப சுதந்தரமும் அறிவும் இருந்தும், அவ்வாறு செய்யாமல் தமது ஆற்றலை வஞ்சித் தொழுகும் மாந்தர்க்கு இவ்வுலக இன்பத்தோடு முத்தியின்பத்தை யும் அநுபவிக்கின்ற உரிமை இறையருளால் இல்லாதொழிந்தது. இன்னோர் இக்காலத்தில் நகருகின்ற புவன போகங்களையும் இழந்து விடுவர் என அருள் நூல்கள் விதித்திருக்கின்றன. ஆகவே தமக்கு நேரும் இடர்களைப் போக்குதற்குரிய அறிவும் சுதந்தரமுமில்லாத சிற்றுயிர்களின் துன்பங்களை நீக்கத் தக்க அறிவும் சுதந்தரமும் வாய்க்கப் பெற்ற மாந்தர்கள் தமக்குள்ள வல்லப சுதந்தரத்தை வஞ்சித்து மறையாமல் பிறவுயிர்கள் படுந் துன்பத்தினை அருளால் நீக்க முற்படுவதே சீவகாருண்யத்தின் முக்கியமான குறிக்கோளாகும். உயிரிரக்க ஒழுகலாறாகிய இதன்கண் உண்மையாக நம்பிக்கை வைத்துப் பசித்த சீவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்கவும் கொலைப்படும் சீவர்களுக்கு உரிய காலைத்தில் வந்து தடுக்கும் செயல் வகையால் கொலைத் துன்பத்தை நீக்கியும், இவ்வாறு மனநிறைவாகிய இன்பத்தை உண்டு பண்ணுவதே அறிவறிந்த மக்கட் பிறப்பினால் அடைதற்குரிய மேலான நற்பயனாரும் என அருட்பிரகாச வள்ளலார் தாம் எழுதிய சீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலின் முற்பகுதியில் தெளிவாக விளக்கியுள்ளார்.

அருட்பிரகாச வள்ளலார் இறைவனை முன்னிலைப் படுத்திப் போற்றிய ‘பிள்ளைப் பெரு விண்ணப்பம்’ என்னும் பனுவலில் சீவகாருண்யம் என்ற வடமொழித் தொடர்ப் பொருளை உயிரிரக்கமெனத் தமிழ்த் தொடராக்கி விளக்கம் தந்துள்ளார்கள். இந்நுட்பம்:

வருமுயிர் இரக்கம் பற்றியே உலகவழக்கில் என் மனஞ் சென்ற தோறும்வெருவி நின்னடிக்கே விண்ணப்பித்திருந்தேன்விண்ணப்பம் செய்கின்றேன் இன்னும்உருவ என்னுயிர்தான் உயிரிரக்கம் தான்ஒன்றதே இரண்டிலை இரக்கம்ஒருவில் என் உயிரும் ஒருவும் என்னுள்ளத்தொருவனே நின்பதத் தாணை (திருவருட்பா. 3506)

தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும்தலைவனே இன்னும்என் உளமும்மலைவிலென் னறிவும் நானும் இவ்வுலகவழக்கிலே உயிரிரக்கத்தால்இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம்என்னுயிர் என்னவே றிலையேநிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும்நீங்கும்நின் திருவுள மறியும். (திருவருட்பா. 3507)

ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில்ஆடலே யன்றி யோர்விடயக்காதலால் ஆடல் கருதிலேன விடயக்கருத்தெனக் கில்லை என்றிடல்இப்போதலால்சிறிய போதும் உண்டதுநின்புந்தியில் அறிந்தது தானேஈதலால் வேறோர் தீதெனத் திடத்தேஇல்லைநான் இசைப்பதென் எந்தாய் (திருவருட்பா. 3508)

என்னையும் இரக்கம் தன்னையும் ஒன்றாய்இருக்கவே இசைவித்திவ் வுலகில்மன்னிவாழ் வுறவே வருவித்த கருணைவள்ளல் நீ நினக்கிது விடயம்பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளைப்பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்இன்னவா றெனநீ சொன்னவாறு இயற்றாதிருந்த தோர் இறையுமிங்கிலையே (திருவருட்பா 3509)

சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் படிவழியாக அமைந்த நால்வகை நெறிகளையும் கடைப்பிடித்து ஆறாதாரங்களிலும் முழுமுதற் பொருளைத் தியானிக்கும் சிவயோக நிலையிலும் அவனே தானேயாகிய அந்நெறியில் ஏகனாகி இறைபணி நிற்றலாகிய ஞானநன்னிலையினும் நிலைபெற்ற அருட் பிரகாச வள்ளலார், உலக மக்கள் அனைவரும் உயிர்க்குயிராகிய இறைவன் திருவருளை எளிதிற் பெற்று ஈறிலாப் பேரின்பத்தை நுகர்தற்குரிய சிறந்த உபாயமாக உயிரிரக்கம் என்னும் சீவகாருண்ய ஒழுக்கத்தையே சிறப்பாக வலியுறுத்தியுள்ளார்கள். சீவகாருண்ய ஒழுக்க நெறியில் நிற்போர் அருட் பெருஞ்சோதியாகிய ஆண்டவனைத் தம் அகத்தே கண்டு வழிபடுதற்குரிய தியானம், யோகம், தவம் ஆகியவற்றை யாவரும் உணர எளியமுறையில் அறிவுறுத்தியுள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும்:-

அகம் அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத் திலும் கடவுட்பிரகாசம் உள்ளது. அதனில் காரியத்தாலுள்ள விபரம்:- பிண்டத்தில் அகம் ஆன்மா. ஒருபொருளினது உண்மையையறிதல் ஆன்ம அறிவு. பிண்டத்தில் அகப்புறம் ஜீவன் ஒரு வதுவின் பியோசனத்தையறிந்த அறிவே ஜீவ அறிவு. பிண்டத்தில் புறம் கரணம். ஒரு வத்துவின் நாமரூபத் தையும், குணகுற்றங்களையும், விசாரித்தறிதல் கரணமாய மன அறிவு. பிண்டத்தில் புறப்புறம், கண் முதலிய இந்திரியங்கள், ஒரு பொருளினது, நாமரூப குணகுற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக்காட்சி, சீவக்காட்சி, ஆன்மக் காட்சியுமுண்டு. இதுபோல் அண்டத்தில் அகம், அக்கினி. அண்டத்தில் அகப்புறம் சூரியன். அண்டத்தில் புறம் சந்திரன், புறப்புறம், நட்சத்திரங்கள். ஆகவே பிண்டத்தில் நாலிடம் அண்டத்தில் நாலிடம் ஆக எட்டிடத்திலும் கடவுட்பிரகாசம் காரியத்தாலுள்ளது. காரணத்தால் உள்ள இடம் பிண்டத்தில் புருவமத்தி. அண்டத்தில் பிரமாகாசம். காரண காரியமாயுள்ள இடம் நான்கு. பிண்டத்தில் விந்து நாதம். அண்டத்தில் மின்னல் இடி. சர்வயோனியிடத்தும் விந்து விளக்கமாகிய மின்னலிடத்தும் நாதவிளக்கமாகிய இடியிடத்தும் இதல்லாது, ‘பாரொடு விண்ணாய்ப் பரந்ததோர் சோதி என்றும் சோதியுள்சோதியுள் சோதியாயும்…’ மேற்குறித்த அகமாகிய ஆன்மப்பிரகாசமே ஞானசபை. அந்தப் பிகாசத்துக்குள்ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவு நடம். இதுதான் ஞானாகாச நடன மென்றும் அசைவுற்றதே நடராச ரென்றும் ஆனந்த நடன மென்றும் சொல்லுகின்றது. ஆதலால் நாம் தினம் ஆறுகாலத்திலும் மேற்குறித்த பிரகாசமே சபையாகவும் அதன் உள்ளொளியே பதியாகவும் வணங்கவேண்டும். எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நம்முடைய கரணத்தைச் செலுத்த வேண்டும் என வள்ளலார் தரும் தியான விளக்கம் இங்குமனங் கொளத்தகுவதாகும்.

அருட்பொருஞ்சோதி அகவலில் தமிழ் நெடுங்கணக்கின் உயிர்வர்க்கத்தில் வைத்து அருட் பெருஞ்சோதியைப் போற்றும் வள்ளலார் ஔ காரத்தையடுத்து ஆய்த (ஃ) எழுத்தில் வைத்து உணர்த்தும் நிலையில் திருநிலைத் தனிவெளி, சிவவெளி யெனுமோர், அருள் வெளிப்பதிவளர் அருட்பெருஞ்சோதி (அகவல் 27-28) எனக் கூத்தப் பெருமானைப் போற்றுகின்றார். இத்தொடரில் அருள் வெளிப் பதி என்பது இருகண்களுக்கு இடையே புருவ மத்தியில மைந்த இடைவெளியினை. இது கீழ் இரண்டும் மேல் ஒன்றும் ஆக அமைந்த (ஃ) முப்புள்ளி வடிவாகிய ஆய்தவெழுத்தினைப் போன்று இரண்டு கண்களுக்கு மேல் மத்தியில் அமைந்திருத்தலின் ஔ கார எழுத்தினையடுத்துக் கூறப் பட்டுள்ளமை உய்த்துணர்தற்கு உரியதாகும். இத்தியான முறையினை:-

நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளிஉற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்பற்றுக்குப் பற்றாய்ப் பரமனிருந்திடும்சிற்றம் பலமென்று தேர்ந்துகொண்டேனே (2770)

எனவரும் திருமந்திரத்தில் திருமூல நாயனார் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம். இத் திருமந்திரப் பொருளை அடியொற்றி:-

கையறவி லாதுநடுக் கண் புருவப் பூட்டுகண்டுகளி கொண்டு திறந்துண்டு நடு நாட்டு (5-528)

எனவும்,

உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனதுகுளத்தினும் நிரம்பிய குருசிவபதியே (அகவல் 1037-38)

எனவும், வள்ளலார் தரும் அநுபவ விளக்கம் இங்கு ஒப்பு நோக்குதற்குரியதாகும்; குளம் என்றது நெற்றியினை.

இவ்வாறு நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளியில் உள்ளத்தை ஒன்ற வைத்து இறைவனைத் தியானிக்கும் இம் முறையே சிறந்த தவமாகுமென்பதனை,

மன்புருவ நடு முதலாய் மனம் புதைந்து நெடுங்காலம்என்புருவாய்த் தவஞ்செய்வார் (3259)

எனவரும் தொடரில் வள்ளலார் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.

உண்மையான ஞானமென்பது உயிர்களிடத்திலும் உயிர்க்கு யிராகிய இறைவனிடத்திலும் செலுத்தும் அன்பே யாகும். இவ்வுண்மை

ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர்ஞானம் உண்டார் (பெரிய சம்பந்தர் – 843)

என வரும் சேக்கிழார் வாய் மொழியால் நன்கு தெளியப்படும். அன்பின் மிகுதியாகிய ஆர்வத்தையுடைய உருகு மனத்தடியார்கள் பிறவிவேர் அறுக்கும் இறைவனைக் கண்டு இன்புறுவர். எவ் வுயிர்க்கும் இரங்குதலாகிய அன்பினையுடையவர்கள் எவ்விடத்தும் இறைவன் திருவடியினைக் கண்டு மகிழ்வார்கள் என்னும் உண்மையினை,

ஆர்வமுடையவர் காண்பர் அரன்றன்னைஈரமுடையவர்காண்பார் இணையடி (திருமந்திரம் 273)

எனவரும் தொடரில் திருமூலநாயனார் அறிவுறுத்தி யுள்ளமை காணலாம். அன்பினில் விளைந்த ஆரமுதே என்பது திருவாசகம், ‘ஈர அன்பினர் யாதும் குறைவிலார்’ என்பது பெரிய புராணம். இத்திருமுறையின் பொருளை மக்கள் எல்லோரும் உணர்ந்து உயிரிரக்கமுடையவராய் அருட்பெருஞ்சோதியாண்டவரைக் கண்டு போற்றி உய்தி பெறுதல் வேண்டும் என்னும் பெரு வேட்கையினாலேயே அருட்பிரகாச வள்ளலார் சீவகாருணிய வொழுக்கத்தினை நன்கு வற்புறுத்துவாராயினர். இவ் உயிரிரக்க உணர்வினைக் கடைப்பிடித்து ஒழுகாதவர்கள் சிவபரம் பொருளைக் கண்டு உய்தி பெறுதல் இயலாது என்பதனை

ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்

(பாரதி அறுபத்தாறு பக்கம் – 257)

எனத் தேசிய கவி பாரதியார் குறித்துள்ளமை இங்கு நோக்கத் தகுவதாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *