
திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்
15. சுதந்தரம் பெற வழி வகுத்த தோன்றல்
உலகியல் வாழ்வில் பிறருடைய அதிகாரத்திற்குக் கட்டுப் பட்டுத் தமது உரிமையினை இழந்து வாழ்தலை அறிவும் ஆற்றலும் பொருளும் வாய்க்கப் பெற்ற மாந்தர் ஒரு பொழுதும் விரும்ப மாட்டார்கள். தாம் பிறந்த நாட்டில் தாம் தம் விருப்பப்படி சென்று உலவுதற்கும் தம் தகுதிக்கேற்ற தொழில்களைச் செய்து பொருளீட்டித் தத்தமக்குரிய இடங்களில் தங்கித் தாம் விரும்பிய தெய்வத்தை வழிபட்டு வாழ்வதற்கும் நாட்டு மக்களக்கு இயல்பாக அமைந்துள்ள உரிமை நிலையினையே சுதந்தரம் என்ற சொல்லால் நாளும் வழங்கி வருகின்றோம். இராமலிங்க அடிகளார் இந்நாட்டில் தோன்றிய கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நமது பாரதநாடு ஆங்கிலேயரது ஆட்சிக்கு உட்பட்டு உரிமையிழந் திருந்தது. அதனால் இந்நாட்டு மக்கள் தாம் பிறந்த நாட்டிலே பிறரது ஆட்சிக்கு அடங்கி அடிமைப்பட்டு அயலார் போற் சுதந்தரமின்றி வாழ நேர்ந்தது என்பதனை நம்மிற் பலரும் நன்கறிவார்கள்.
மக்களது பிறப்புரிமையாகிய இச் சுதந்தரம் என்பது மக்கட் சமுதாயத்தினரால் மட்டும் பாதுகாத்தற்குரிய அத்துணை எளிமையானதன்று என்பதனை உலகில் நாள்தோறும் நடைபெற்று வரும் பல்வேறு அரசியல் குழப்பங்களாலும் இனக் கலவரங் களாலும் நில நடுக்கம், எரிமலைகளின் குமுறல், புயல், இடி, மழை, வெள்ளம், கடலின் கொந்தளிப்பு முதலியவற்றால் உளவாகும் பல்வேறு இடையூறுகளாலும் அநுபவத்தில் உணர்ந்து வருகின்றோம். இவ்வாறு நிகழும் உலகியல் நிகழ்ச்சிகளை யெல்லாம் நுனித் துணரும் நுண்ணறிவும், அன்பு அடக்கம் முதலிய சிறந்த பண்புகளும், செய்தற்கு அரியனவற்றையும் எளிதிற் செய்து முடிக்கும் செயல் திறனும் வாய்ந்து வாழ்க்கையில் மேன் மேலும் உயர்ந்து விளங்குதற் குரிய மனவுணர்வு கைவரப்பெற்றவர் மக்கட்குலத்தார் ஆவர் இத்தகைய உணர்வுரிமையுடைய மக்களினத்தார், காலந்தோறும் பிறர்க்கு அடிமையாகி அல்லற் படுவதனையும் பிறரை அடிமை யாக்கி அல்லற்படுத்துவதனையும் எண்ணி வருந்திய இராமலிங்க வள்ளலார், தமது திருவருள நுபவத்தால் மக்கள் பெறுவதற்குரிய உண்மையான சுதந்தரமாவது எது என்பதனைத் தெளிவாக உலக மக்களுக்கு அறிவுறுத்தி யுள்ளமை இங்கு நோக்கத் தகுவதாகும்.
யான் எனது என்று உரிமை பாராட்டுதற்குரிய நிலையில் அமைந்த நமது உடம்பினையும் அந்த உடம்பினைக் கருவியாகக் கொண்டு நுகரப்படும் உலக நுகர்ச்சிகளையும் அந்நுகர்ச்சிகளை நுகரும் விளைமுதல் (கர்த்தா) ஆகிய ஆன்மாவையும் நமக்கே உரிய உடைமைப் பொருளாகக் கொண்டு உரிமை பாராட்டி வரு கின்றோம். நமது உடம்பு நாம் விரும்பியவண்ணம் தொழில் புரிதற்கும், விரும்பிய நாள்வரை நிலைபெறுதற்கும், உரிய தகுதியைப் பெறுவதே தேக சுதந்தரம் எனப்படும். உடம்போடு கூடிவாழும் நாம் இவ்வுலகில் விரும்பிய நுகர் பொருள்களை விரும்பிய வண்ணமே பெற்று நுகரும் உரிமையினைப் பெறுதல் போகசுந்தரம் எனப்படும். நமது ஆன்மா ஐம்புலன்களால் ஈர்க்கப் படாது நமது அறிவின் எல்லைக்குள் அடங்கி ஒழுகுதற் கேற்ற உரிமையுணர்வுடன் இருத்தலே சீவ சுதந்தரம் எனப்படும். இம் மூவகைச் சுதந்தரங்களையும் விரும்பிய நாம், இத்தகைய சுதந்தரங்கள் எளிதில் கிடைக்கப் பெறாமையால் நமது வாழ்க்கையின் பல்வகைத் துன்பங்களையும் அநுபவித்து வருகின்றோம். நமக்கு உரியனவாக நம்மால் விரும்பிப்படும் இச் சுதந்தரங்கள் யாவும் என்றும் நிலை பேறுடைய சுதந்தரங்கள் ஆகமாட்டா.
புண்ணிய பாவங்களாகிய இருவினைப் பயன்களை நுதர்தற்கும் ஈட்டுதற்கும் உரிய கருவிகளாக நாம் பெற்றுள்ள, மெய், வாய், கண், மூக்குச், செவியென்னும் ஐம்பொறிகளும் மாயை எனப்படும் அறிவற்ற சடப் பொருளின் காரியங்களாகுமே யன்றி அறிவுடைய உயிராகிய நம் வயத்தன ஆகமாட்டா. நாம் செய்யும் வினை நிகழ்ச்சிக்கு நிலைக்களமாகிய உலகியற் பொருள்கள் யாவும், மாயையின் காரியமாய், எல்லாம் வல்ல முழுமுதற் பொருளால் தரப்படுவனவே அன்றி, உயிராகிய நம்மால் இயற்றிக் கொள்ளப் படுவன அல்ல. நாம் பெற்றுள்ள உடம்பின் அகக் கருவிகளாகிய மனம் முதலியனவும் புறக்கருவிகளாகிய மெய் முதலியனவும் தொழிற்படும் செயல்வகைகளும் உலகுயிர்களை இயக்கும் பேராற்றலாகிய முழுமுதற்பொருளின் வசத்தன அன்றி நம்வசத்தன அல்ல. உடம்பொடு கூடி நின்று வினைகளைச் செய்தற்கும் வினைப் பயன்களை நுகர்தற்கும், கருத்தாவான ஆன்மாக்களாகிய நாமும், விழைவு, அறிவு, செயல்களாகிய நம்முடைய ஆற்றல்களை இறைவன் விளக்கிய நிலையில் விளங்கப் பெற்றும் அல்லாத வழி விளங்கிக் கொள்ளும் வாய்ப்பு இன்றியும் தம்வயம் இழந்த நிலையில் உள்ளோம்.
இவ்வாறு தன்வயத்தரல்லாத ஆன்மாக்களாகிய நாம் தன் வயத்தனாகிய தனிமுதல்வனது அருளாணையின் வழி அடங்கி நடத்தற் குரியராதலே யன்றி நமக்கெனச் சுதந்தரமுடையேம் அல்லேம். இவ்வாறு நாம் பெற்றுள்ள தேகம், நாம் நுகர்தற்குள்ள போகம், நுகர்கின்ற சீவனாகிய நாம் என்னும் மூவகையாலும் நமக்குச் சுதந்தரம் இன்மையினை நன்குணர்ந்து இறைவனது திருவருளாணை வழி அடங்கி நடத்தலே நம்மைப் பிணித்துள்ள ஆணவம் மாயை கன்மமென்னும் மும்மலப் பிணிப்பினின்று விடுதலை பெற்று உண்மைச் சுதந்தரர் ஆதற்குரிய உபாயமாகும். இந்நுட்பம்,
நாமல்ல இந்திரியம் நம்வழியின் அல்ல வழிநாமல்ல நாமும் அரனுடைமை – ஆம் என்னில்எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினைமுற்செய்வினை யும்தருவான் முன்
(சிவஞானபோதம், வெண்பா – 63)
எனவரும் சிவஞான போத உதாரண வெண்பாவில் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். தன் வயத்தரல்லாத ஆன்மாக்கள், இவ்வுலகில் தேக சுதந்தரம், போக சுதந்தரம், சீவ சுதந்தரம் ஆகிய மூவகைச் சுதந்சரங்கட்கும் காரணமாகிய திருவருட் சுதந்தரம் பெறுதற்குரிய உபாயத்தினையே மெய்கண்டதேவர், இவ் வெண்பாவில் அறிவுறுத்தியுள்ளார்.
உயிர்களாகிய நாம் நம்மளவில் சுதந்தரர்கள் ஆகமாட் டோம். நாம் நமக்குரியனவாக எண்ணியுள்ள தேகசுதந்தரம், போக சுதந்தரம், சீவ சுதந்தரம் என்னும் இவையாவும் வெறும் போலிச் சுதந்தரங்களே. இவை என்றும் நிலைபேறுடையன அல்ல, நிலையற்ற இவற்றை நமக்குரிய சுதந்தரமாகக் கொள்வதைக் கைவிட்டு எல்லாம் வல்ல கடவுளின் திருவருளின் ஆணை வழி அடங்கி ஒழுகுதலே எல்லாச் சுதந்தரங்களுக்கும் சார்பாகிய திருவருட் சுதந்தரத்தினை அடைதற்குரிய உபாயமாகும் என்பது இவ் வெண்பாவினால் அறிவுறுத்தப் பெற்றது.
இதுவே அருட்பிரகாச வள்ளலாரது உறுதியான கோட்பாடாகும். இவ்வுண்மை, எல்லாம் வல்ல இறைவனை நோக்கி வள்ளலார் வேண்டிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் சத்திய விண்ணப்பத்தால் இனிது புலனாதல் காணலாம்.
உத்தரஞான சித்திபுரம் என்றும், உத்தரஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை விளக்க நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில் இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச்செயற்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித் தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்சோதி ஆண்டவரே தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகிற சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்:-
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடைத்தாகிய தேகத்தைப் பெற்ற யான், இத்தேகத்திற்கு இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டு மென்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லா வற்றையும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடுமென்று அறியத் தொடங்கிய தருணத்து, வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது; எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்தரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
பின்னர் திருவருட் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கு மென்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேக சுதந்தரம், போக சுதந்தரம் சீவ சுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கிய விடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
ஆகலில் எனது சுந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத் தையும், போக சுதந்தரத்தையும், சீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்துவிட்டேன். கொடுத்த தருணத்தே இத்தேகமும் சீவனும் போகப் பொருள்களும் சர்வ சுதந்தரராகிய கடவுள் பெருங்கருணையாற் கொடுக்கப் பெற்றன அன்றி நமது சுதந்தரத்தாற் பெற்றன அல்ல என்னும் உண்மையை அருளால் அறிவிக்கவும் அறிந்துகொண்டேன். இனி இத்தேகத் தினிடத்தும் சீவனிடத்தும் போகப் பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
இத்தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் உரிமை யுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும். தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம் வந்தனம் என்பது வள்ளலார் இறைவனை நோக்கிச் செய்துகொண்ட விண்ணப்பமாகும். உலகியல் வாழ்வில் அறிவு, திரு, ஆற்றல் என்னும் மூவகையாலும் வேறுபாடுடைய மக்களினத்தார் அனைவரும் சமுதாய வாழ்விலும் அரசியல் ஆட்சியிலும் ஒத்த சம உரிமையினைப் பெற்றும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் முதலிய நுகர் பொருள்களைத் தடையின்றிப் பெற்றும், பசியும் பிணியும் பகையும் இன்றி இனிது வாழ்தலே உண்மையான சுதந்தர வாழ்வாகும். இத்தகைய மெய்ம்மையான சுதந்தர வாழ்வே உலக நாடுகள் அனைத்திலும் நிலைபெறுதல் வேண்டுமென்பதும், அவ்வாறு நிலைபெறுதற்கு இறைவனது திருவருட் சுதந்தி ரத்தினைப் பெறுதல் இன்றியமையாததென்பதும், இத்தகைய நிறைவான சுதந்தரம் நிலை பெறுதற்குச் சன்மார்க்க நெறியினை மக்கள் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டுமென்பதும் மேற்குறித்த சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தால் நன்கு விளங்கும். மக்கள் பெறுதற் குரிய எல்லாச் சுதந்தரங்களுக்கும் அடிப்படையான திருவருட் சுதந்தரத்தைப் பெற்றுப் பல்லுயிரனைத்தையும் மகவெனப் பாதுகாத்தருள் புரியும் செல்வக் கடவுள் தொண்டர்களின் நிலையுடைய நிறைவான சுதந்தர வாழ்வினை அறிவுறுத்தும் வகையிலமைந்தது,
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்இன்பமே எந்நாளும் துன்பமில்லைதாமார்க்குங் குடியல்லாத் தன்மையானசங்கரன் நற்சங்கவெண் குழையோர் காதிற்கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க்கொய் மலர்ச் சேவடியிணையே குறுகினோமே!
என அப்பரடிகள் அருளிய மறுமாற்றத் திருத்தாண்டகமாகும். இதனை யுளங் கொண்டு தேசியகவி சுப்பிரமணிய பாரதியார்.
பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் – பரிபூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்!
எனப் பாடிய சுதந்தரப் பாடல் உலகியலிற் பெறுதற்குரிய பல்வேறு சுதந்தரங்களுக்கும் அடிப்படையாகிய திருவருட் சுதந்தரத்தின் இன்றியமையாமையினை நன்கு தெளிவு படுத்தல் வேண்டும்.
இவ்வாறு உலக மக்கள் அனைவரும் இவ்வுலகில் நிலை பேறுடைய உண்மையான சுதந்தர வுணர்வினைப் பெற்று இனிது வாழ்தல் வேண்டும் எனத் திருவுளங் கொண்ட இராமலிங்க வள்ளலார், அருட் பெருஞ் சோதி யாண்டவரை நோக்கி வேண்டிய மேற்குறித்த விண்ணப்பத்தின் வாயிலாக உலகமக்கள் அனைவர்க்கும் உரியதாக அறிவுறுத்தப் பெற்ற சுதந்தர வுணர்வினை நூறாண்டு களுக்கு முன் சுதந்தரம்பெற உழைத்த பிற நாட்டறிஞர்கள் கூட இவ்வாறு சிந்தித்து வெளிப்படுத்திய தாகத் தெரியவில்லை. எனவே இற்றைக்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலக மக்கள் அனைவரும் தம்முள் இகலின்றிச் சுதந்தர வாழ்வினைப் பெற வழிவகுத்த பெருமை தமிழ்ச் சான்றோராகிய அருட்பிரகாச வள்ளலார் ஒருவர்க்கே உரிய தனிச்சிறப்பு ஆகும் எனக் கூறுதல் மிகவும் பொருத்தமுடையதாகும். சன்மார்க்க நெறி பரப்பிய இராமலிங்க வள்ளலார் இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னரே இறைவன் திருஅருளால் தெளிந்து வகைப்படுத்து உணர்த்திய தேக சுதந்தரம், போக சுதந்தரம், சீவ சுதந்தரம், திருவருட் சுதந்தரம் ஆகிய சுதந்தர உணர்வுகளின் இயல்பினை மக்கள் எல்லோரும் நன்குணர்ந்து பயன்பெறும் வண்ணம் உலக மக்கள் அனைவர்க்கும் ஆங்கிலம் முதலிய பல்வேறு மொழிகளிலும் கட்டுரை வாயிலாகவும் சொற்பொழிவு வாயிலாகவும் அறிவித்தல் நம்நாட்டு அறிஞர் பெருமக்களின் தலையாய கடமையாகும்.
எல்லாம் வல்ல இறைவனை அம்மை யப்பனாகவும், அவனுடைய அருளாரின்பத்தினை நுகர்தற்குரிய உரிமை வாய்ந்த ஆன்மாவாகிய தம்மை அம்முதல்வனுடைய பிள்ளையாகவும் எண்ணி அன்பினால் நெஞ்சம் நெக்குருகிக் கற்போர் கேட்போர் சிந்திப்போராகிய எல்லாருள்ளத்தினையும் கசிவிக்கும் இனிய செந்தமிழ்ப்பனுவல்களாற் பாடிப் போற்றியவர் இராமலிங்க வள்ளலார். ஆதலின் அம்முதல்வனால் நீ நம் பிள்ளை என ஏற்றுக் கொள்ளப் பெற்றுத் ‘திருவருட் சுதந்தரம் பெற்ற செம்புலச் செல்வராயினார். இச்செய்தியினை,
துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித்தது நினைச்சூழ்ந்தருள் ஒளி நிறைந்தேசுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கேசுதந்தரமதானது லகில்வன்பெலா நீக்கி நல்வழியெலாம் ஆக்கிமெய்வாழ்வெலாம் பெற்று மிகவும்மன்னுயிரெலாம் களித்திட நினைத்தனை உன்றன்மனநினைப் பின் படிக்கேஅன்பநீ பெறுக உலவாது நீடூழிவிளையாடுக அருட்சோதியாம்ஆட்சிதந்தோம் உனைக்கைவிடோம் கைவிடோம்ஆணைநம் ஆணை என்றேஇன்புறத் திருவாக் களித்தெனுள்ளே கலந்திசைவுடன் இருந்த குருவேஎல்லாஞ் செய்வல்ல சித்தாகி மணி மன்றினில்இலங்கு நடராசபதியே. (திரு. 3676)
எனவரும் திருவருட்பாப் பாடல் நன்கு விரித்துரைத்தல் காணலாம்.
தனக்கென வாழாது மன்னுயிர்கள் நலம் பெறுதற் பொருட்டே இறைவனது திருவருளாணையாகிய திருவருட் சுதந்தரம் கைவரப் பெற்ற அருட்பிரகாச வள்ளலார், தாம் பெற்றசுதந்தரத்தை மற்றவர்களும் பெற்றுநல்வாழ்வு பெறுதல் வேண்டும் என்னும் நோக்கத்தால் உலக மக்களை நோக்கி அறிவுறுத்தப்பெற்றதே,
எல்லாஞ் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தேஎல்லாம் வல்லான்றனையே ஏத்து (திருவருட்பா)
எனவரும் மறைமொழியாகும்.
நம் பாரத நாடு அயலார் ஆட்சியில் அடங்கி மக்கள் சுதந்தர மின்றி அடிமை வாழ்வில் வருந்திய காலத்தில், இந்நாட்டுமக்கள் சுதந்தர உணர்வுடையராய்த் தமது அடிமை விலங்கினைத் தகர்த்து உரிமை பெற்று எழுவதற்கு உழைத்த அறிஞர் பலருள் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் முதல் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவர் என்பதனை இந் நாட்டு மக்கள் அனைவரும் நன்குணர்வர். தமது பாட்டின் திறத்தாலே நாட்டின் விடுதலயுணர்வைத் தோற்றுவித்த பெருங்கவிஞர் சுப்பிரமணிய பாரதி யாருக்கு வழிகாட்டியாக வாழ்ந்த தவச் செல்வர்களில் போற்றுதற்குரிய இராமலிங்க வள்ளலார் முதல் வரிசையில் வைத்து எண்ணத்தகும் தனிச்சிறப்புடையவராகத் திகழ்கின்றார். இவ்வுண்மை, இந்துதானத்திற்குள் தமிழ் நாடு முதலாவதாகக் கண் விழித்தது. இராமலிங்க சுவாமிகள் போன்ற மகான்கள் தமிழ் நாட்டின் புதிய விழிப்பிற்கு ஆதிகர்த்தர்களாக விளங்கினார்கள் எனவரும் பாரதியார் வாய்மொழியால் நன்கு புலனாகும்.
நம் நாட்டு மக்கள் அயலார் ஆட்சியுள்பட்டு வருந்திய துன்ப நிலையினைக் கண்டு நெஞ்சம் நெக்குருகிய அருட்பிரகாச வள்ளலார், அருளில்லாத அயலவரது ஆட்சி அடியோடு அகற்றப் பெறுதல் வேண்டும் எனவும், உயிர்க்குயிராகிய இறைவனது திருவருளில் திளைத்த சன்மார்க்கச் செல்வர்களே இந்த நாட்டினை ஆளுதல் வேண்டுமெனவும் இடைவிடாது எண்ணியவர் ஆவர். இவ்வுண்மை.
கருணையிலா ஆட்சி கடுகி ஒழிகஅருள் நயந்த நன் மார்க்கர் ஆள்க – தெருள்நயந்தநல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்தெல்லோரும் வாழ்க இசைந்து (5618)
எனவரும் திருவருட்பாப் பாடலால் இனிது விளங்கும்.
இந்நாட்டிற் கல்வி, செல்வம் முதலியவற்றால் ஒத்தார், உயர்ந்தார், தாழ்ந்தார் ஆகிய எல்லா மக்களும் தம்முள் வேறுபாடின்றி ஒத்த உரிமை யுடையராகி நம் நாட்டின் அரசியல் ஆட்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பினைப் பெறுதல் வேண்டு மென்பதே வடலூர் வள்ளலாரின் உயர்ந்த குறிக்கோளாகும்.
மக்களாட்சியின் அமைப்பினைப் பற்றிய இவ்வுயர்ந்த கருத்து,
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்ஒருமையுளராகி உலகியல் நடத்தல் வேண்டும். (4082)
என இராமலிங்க வள்ளலார் இறைவனை நோக்கி வேண்டிய சுத்த சன்மார்க்க வேண்டுகோளில் இடம் பெற்றிருத்தல் உணர்ந்து மகிழத்தகுவதாகும்.



