திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

13. செந்தமிழ்ப் புலமையினைத் தூண்டும் திருவருட்பா

அருட்பிரகாச வள்ளலார் பாடிய திருவருட்பாப் பனுவலில் பொதுமக்கள் எல்லோர்க்கும் பொருள் இனிது விளங்கக் கூடிய எளிய தமிழ்ச் சொற்களால் இயன்ற பாடல்களே மிகுதியாக உள்ளன. எளிய சொற்களால் இயன்றும் அரிதின் முயன்று நுண்ணிதின் ஆராய்ந்து உணர்தற்குரிய அரும்பொருட்களையும் வள்ளலார் பாடியுள்ளார். உணர்தற்கரிய பொருள்களையும், எண் பொருளவாக எல்லோரும் உணர்ந்து கொள்ளும்படி தெளிந்த சொல் நடையில் விரித்துக் கூறுதலும், கல்வியில் வல்லவர்களே நுண்ணிதின் ஆராய்ந்து உற்றுணரும் முறையில் திட்பமும் நுட்பமும் செறியக் கூறுதலும் ஆகிய இருவகை மொழி நடையும் மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதன. இவற்றுள் எளிய நடையானது சொல்வோரது சொல்வன்மையை வளர்க்குந் தன்மையது. அரிய நடையானது கேட்போரது சிந்தனையைத் தூண்டி அவர்க்கு உய்த்துணரும் ஆற்றலை மிகுவிப்பதாகும். எனவே சொல்வோர், கேட்போர் என்னும் இருதிறத்தாருடைய உணர்வினையும் விரிவடையச் செய்யும் நிலையில் எளிய சொல் நடையும் அரியசொல் நடையுமாகிய இருவகை மொழி நடைகளும் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமை யாதனவே எனக்கருதிய இராமலிங்க வள்ளலார், எல்லோரும் எளிதிற் பொருளுணர்தற் குரிய தெளிந்த செழும் பாடல்களையும் ஆராய்ந்துணர்தற்குரிய குறிப்புடைய அரும்பொருட் பாடல்களையும் இயற்றியுள்ளார்கள். அவற்றுள் நுண்ணிதின் உணரும் அரும்பொருட் பாடல்களாக வள்ளலார் பாடிய திருவருட்பாப் பனுவல்களில் ‘இங்கித மாலையும் ஒன்று இதன்கண் ஒருதொடரினையே இருபொருள் படவும் மூன்று பொருள் படவும் ஆண்டுள்ள இடங்கள் பல உள்ளன. பிச்சைத் தேவராய் வந்தருளிய இறைவன் கூறிய மொழிகளும், அப்பெருமானை நோக்கிப் பிச்சையிட வந்த தலைவி கூறிய மொழிகளும், இத்தகைய சிலேடை அணிக்குரிய சிறந்த இலக்கியமாக அமைந்தமை முன்னர்க் கூறப்பட்டது. இவ்வாறே அடிகளார் பாடிய அருண்மொழிமாலை, இன்பமாலை என்பனவும் குறிப்பிற் பொருளுணர்த்தும் பல பொருள் தொடர்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குதல் காணலாம்.

தளிநான் மறையீர் ஒற்றிநகர்தழைத்து வாழ்வீர் தனிஞானவெளிநா வரசை யைந்தெழுத்தாலுவரி கடத்தி னீரென்றேன்களிநாவலனை யீரெழுத்தாற்கடலில் வீழ்த்தி னேமென்றார்அளிநாண் குழலா யென்னடியவ்வையர் மொழிந்த அருண்மொழியே. (1743)

எனவரும் அருண்மொழி மாலைப்பாடல், ஆருயிர்த் தலை வனாகிய இறைவனுக்கும் அம்முதல்வன்பால் காதல் கொண்ட தலைவி யாகிய தனக்கும் இடையே நிகழ்ந்த இனிய உரையாடல் களைத் தலைவி தோழிக்கு உரைப்பதாக அமைந்ததாகும். ஒற்றியூர்த் திருக்கோயிலில் நான் மறைப்பொருளா யெழுந்தருளிய இறைவனே, ஒற்றி நகர் செல்வ வளத்தால் தழைக்கும் வண்ணம் வாழ்பவரே ஒப்பற்ற சிவஞான ஒளிபெற்ற திருநாவுக்கரசரைத் திருவைந் தெழுத்தால் உவரி கடத்தினீர் (கடலினின்றும் கரையேற்றியருளினீர்) என்று கூறினேன். (அதுகேட்ட இறைவர்) களிப்பு மிக்க நாவலூரில் தோன்றிய நம்பி ஆரூரனை இரண்டெழுத்தால் கடலில் வீழ்த்தினோம் என்று கூறுகின்றார். வண்டுகள் மொய்க்கும் மலரணிந்த கூந்தலையுடைய தோழியே! அத்தலைவர் கூறிய அருண் மொழியின் பொருள்தான் என்னேடி என்பது இப்பாடலின் பொருளாகும். இதன்கண், நாவரசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் எனவரும் தலைவியின் கூற்று, நாவரசைத் திருவைந்தெழுத்தின் துணையால் கடலினின்றும் கரையேற உதவிய நீவிர் நும்பால் காதல் கொண்டு துயர்க் கடலில் வீழ்ந்து வருந்தும் என்னையும் கரையேற்றி உய்வித்தருள்வீராக என வேண்டும் குறிப்பினதாகும். (அது கேட்ட இறைவர்) களி நாவலனை ஈரெழுத்தால் கடலில் வீழ்த்தினோம் எனக் கூறியது, கடலினின்றும் கரையேற்றுதல் மட்டும் எனது தொழிலன்று, அன்புடைய தோழர்களைக் கடலில் விழச்செய்து வேடிக்கை பார்த்தலும் எனது தொழிலேயாம் என்னும் குறிப்பினதாகும். இத் தொடரில் ஈரெழுத்து எனப்பட்டது. ‘ஆசை என்பதாகும். நாவலர்கோன் ஆரூரரின் உள்ளத்தில் தோன்றிய ஆசை யென்னும் இரண்டு எழுத்தினால் (அவனைக்) கடலில் (பரவையில்) விழச் செய்தோம், என்பது இத்தொடரின் பொருளாகும். இங்குக் கடல் என்றது, அதன் பரியாயப் பெயராகிய ‘பரவை என்ற சொல்லால் நங்கை பரவையாரைக் குறித்து ஆளப்பெற்றதாகும். நங்கை பரவையாரைக் காதலித்த நம்பியாரூரர் பரவையாரை அடையவேண்டுமெனத் தம்பால் தோன்றிய ஆசை எழு கடலினும் பெரியதாகும் எனத் தனித்திருந்து இரங்குவதாக அமைந்தது,

பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல்ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவைசீர்பரவை ஆயினாள் திருவுருவின் மென்சாயல்ஏர் பரவை இடைப்பட்ட என்னாசை எழுபரவை.

(பெரிய-தடுத்தாட் – 148)

எனவரும் திருத்தொண்டர் புராணச் செய்யுளாகும். இவளது பேர் நங்கை பரவை, இவளது பெண்மைக் குணங்களைக் கூறுமிடத்துப் பெரிய தேவரவை விரும்புகின்ற திலோத்தமை அரம்பை முதலிய மகளிரும் துதிக்கத் தக்க தெய்வமாகும். வரிசையாக விளங்கும் அழகிய பற்கள் முல்லை யரும்புகளாகும். திருமகளும் விரும்பும் அழகுடைய இவளது உடம்பின் அழகிய, மெல்லிய, சாயலின் பரப்பினுள் அகப்பட்ட என்னுடைய ஆசையானது ஏழுகடல் போன்றதாகும் என்பது இதன் பொருளாகும். இச்செய்யுளில், திருவுருவின் மென்சாயல் ஏர் பரவையிடைப் பட்ட என் ஆசை எழுபரவை என வரும் தொடர்ப் பொருளை உள்ளத்தில் கொண்ட இராமலிங்க வள்ளலார் களிநாவலனை ஈரெழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என இறைவரது கூற்றில் வைத்து உணர்த்தினார். இத் தொடரில் ஈரெழுத்து என்றது ‘ஆசை என்னும் குறிப்பினது. கடல் என்றது அதன் பரியாயப் பெயராகிய ‘பரவை யென்ற பெயரால் அழைக்கப்படும் நங்கை பரவையாரைக் குறிக்கின்றது. இந்நுட்பம் மேற்காட்டிய பெரியபுராணச் செய்யுளோடு இச்செய்யுளை ஒப்பிட்டு நோக்குங்கால் நன்கு புலப்படுதல் காணலாம். களிநாவலனை ஈரெழுத்தால் கடலில் வீழ்த்தினேம் எனவரும் இத்தொடர், பெரியபுராணத்தில் வள்ளலார் கொண்டுள்ள ஆழ்ந்த புலமைத் திறத்தினையும் குறிப்புப் பொருள்படப் பாடலியற்றும் வள்ளலாரின் கவித்திறத்தினையும் ஒருங்கு புலப்படுத்துதல் காணலாம்.

சிற்சபையில் நடம்புரியும் கூத்தப் பெருமானை அறுகம் புல்லினால் அர்ச்சித்து வழிபட்டால் இவ்வுலக வாழ்வில் உயர்ந்த பதவிகளையும் மறுமையில் வீடுபேறாகிய முத்தியினையும் பெறலாம் என அறிவுறுத்துவது,

பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில்இகலில் இடையை இரட்டித் தகவின்அருச்சித்தால் முன்னாம் அது கடையாம் கண்டீர்திருச்சிற் சபையானைத் தேர்ந்து. (2724)

எனவரும் வெண்பாவாகும். பகுதி, தகுதி, விகுதி என்னும் சொல் வாய்பாடுகளை முன்னே நிறுத்தி, அச்சொற்களின் இடையே அமைந்த ‘கு கர எழுத்தை இரட்டியாக்கி (மூவிரண்டு, ஆறு, ‘கு அறுகு, ஆக்கி) அவ்வறுகம் புல்லினால் சிற்சபையில் ஆடல் புரியும் இறைவனைத் தகுதியுடன், அருச்சித்து வழிபட்டால் அம்மூன்று சொற்களின் இறுதி எழுத்தாகிய தி என்பதன் மும்மை, அஃதாவது ‘முத்தி, வீடுபேறுமுடிவில் உளதாகும் என்பது இப்பாடலிற் குறிக்கப்படும் குறிப்புப் பொருளாகும். பகுதி, தகுதி விகுதி என்னும் சொற்களுள் இடையிலுள்ள ‘கு கரத்தை இரட்டியாக்குதலாவது மூன்று சொற்களின் இடையிலுள்ள ‘குகரம் மூன்றினையும் இரட்டி ஆறு கு ஆக்குதல், ஆறு-கு-அறுகு, என்றது அறுகம்புல்லினை. முன் என்றது, இங்குக் குறித்த மூன்ற சொற்களின் முதல் நின்ற எழுத்துக்களின் சேர்க்கையாகிய ‘பதவியினை. கடை என்றது, அச்சொற்களின் இறுதி எழுத்தாகிய மூன்று – ‘தி கரத்தினை (மூன்று தி- முத்தியினை).

இவ்வாறு குறிப்பிட்ட சில சொற்களை எடுத்துக் கொண்டு, அவற்றின் முதலிலும், இடையிலும், கடையிலும் நின்ற எழுத்துக் களைத் தனித்தனியே பிரித்து வெவ்வேறு சொற்களாக்கிக் குறிப்பினால் பொருளுணர்த்தும் முறையில் வள்ளலார் பாடிய பாடல்கள், எழுத்தியலமைப்பில் மிறைக் கவி (சித்திரகவி) புனையும் அவர் தம் புலமைத் திறத்துக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.

வறுமையால் வருந்திய நாங்கள், ஈகைக் குணமில்லாத புல்லரை அணுகித் தாதா (வள்ளலே) எமக்கு வேண்டும் பொருளைத்தா (தருவாயாக) எனக் கேட்டுப் பயன்சிறிதும் பெறாது அலைந்து வருந்தினோம். ஒளி மழுங்காத மாணிக்க மணியே! திருவைந்தெழுத்தின் பொருளாகத் திகழ்பவனே! எம் தந்தையே! என உனது பெரும்புகழைப் போற்றித் துதித்து உய்தி பெறும்படி (எம் தலைமேல் நான்முகன்) எழுதாக் குறைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும். இதுவரையில் பட்ட துன்பம் எங்களுக்குப் போதாதா என எல்லாம் வல்ல இறைவனை நோக்கி வருந்தி முறையிடும் நிலையில் அமைந்தது,

தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்தாதாதா என்றுலகில் தான் அலைந்தோம் போதாதாநந்தா மணியே நமச்சிவாயப் பொருளேஎந்தாய் எனப்புகழ வே. (2725)

எனவரும் வெண்பாவாகும். இதன் முதலடியில் தா, தா, தா, தா, தா, தா, தா என வந்துள்ள ஏழு ‘தா என்னும் எழுத்துக்களின் பின் ‘குறை என்ற சொல்லை இயைத்தால் ஏழுதாக்குறை என்றாகும். ஏழு தாக்குறை = எழு தாக்குறை; என்றது, படைத்தற் கடவுளாகிய நான்முகன் உயிர்களை, மக்களுடம்போடு படைக்கும்பாலத்து, அவரவர் செய்தற்குரிய வினைகளையும் அவற்றின் பயன்களையும் அவரவர் தலையில் எழுதி வைப்பான் என்பது நம் சமயத்தவர் நம்பிகையாகும். இவ்வாறு எழுதும் பொறுப்புடைய நான்முகன், எங்கள் தலையில் எழுதும் போது ‘இறைவனைப் புகழ்ந்து உய்தி பெறுக’ என்று எழுதியிருப்பானானால் நாங்கள் உலகில் தகுதி யில்லாதாரைப் புகழ்ந்து ஒரு பயனும் பெறாது அலைந்து வருந்தியிருக்கமாட்டோம். இவ்வாறு அலைந்து வருந்தியது எங்கள் குறையன்று. இறைவனாகிய நின்னைப் புகழ்க என்று நான்முகனார் எங்கள் தலையில் எழுதாத குறையேயாகும் என இறைவனை நோக்கி அடிகளார் முறையிட்டுள்ள நயம் வியந்து பாராட்டுதற் குரியதாகும்.

ஆன்ம எழுத்து எனப்படும் ய என்னும் தமிழ் எண்ணாகிய யகரத்தை ஐ (இறைவன் ஆகிய சிவத்துக்குப் பின்னால் வைத்து (சிவய என) ச் செபித்தால் ‘ஆ வுடன் கூடிய ஈரைந்து (பத்தினையும்) ஆபத்தினையும் ‘வி யுடன் கூடிய ஈரைந்து (பத்தினையும்) விபத்தினையும் நீக்கும் ஆற்றல் பெறலாம். ஆவி = ஆன்ம இயல்பினை; ஈர் (கெடுக்கும்) ஐந்து = ஐவகை மலங்களையும் அகற்றலாம் – நீக்கலாம் – ஆவிக்கு – ஆன்மாவுக்கு உறுதியாகிய ஈரைந்து – (பத்தினையும் பற்றினையும் – அன்பினையும்) உறலாம் – பொருந்தலாம். (ஐந்தெழுத்தினைச் சேர்த்துச் செபிக்கும் முறையினை) ஆராய்ந்து (ஆவியாகிய) பிராணனது கலைகள் ஈரைந்து (பத்துடன்) ஓர் இரண்டையும் பன்னிரண்டினையும் கழியாமல் சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம் என அறிவுறுத்துவது,

ஆவி யீரைந்தை அபரத்தே வைத் தோதில்ஆவி யீரைந்தை அகற்றலாம் = ஆவியீர்ஐந்துறலாம் ஆவி யீரைந் தறலாம் ஆவியீர்ஐந்திடலாம் ஓரிரண்டோ டாய்ந்து. (2578)

எனவரும் திருவருட்பாவாகும் இதன் கண் ஆவியீரைந்து என்றது, ஆன்ம எழுத்தாகிய ய என்னும் தமிழ் எண்ணின் குறியீடாயுள்ள யகரத்தை. ஐ என்றது, இறைவனைக் குறிக்கும் எழுத்தாகிய ‘சி கரத்தை, அபரத்தே வைத்தோதின் – முற்குறித்த ‘ய கரத்தை, ‘சி கரத்தின் பின்னே வைத்தோதினால்; அபரம் = பின், திருவைந் தெழுத்தினை ஓதுங்கால் இறை எழுத்தாகிய. சிகரத்தின் பின் ஆன்ம எழுத்தாகிய ‘ய கரத்தை ஓதும் முறையில் ஓதவேண்டும் என வற்புறுத்தும் நிலையில் ‘ஆவி ஈர் ஐந்தை அபரத்தே வைத்தோதின்’ என்றார். இரண்டாம் அடியில் ஆவியீரைந் தென்றது, ‘ஆ கார எழுத்தின் பின்னும், வி என்ற எழுத்தின் பின்னும் இயைந்த பத்தினை; ஆவின் பின் இயைந்த பத்து ஆபத்து; ‘வியின் பின் இயைந்த பத்து விபத்து; சூக்கும் ஐந்தெழுத்தினை முறைப்படி ஓதினால் உலகில் நேரும் ஆபத்தையும் விபத்தையும் அகற்றலாம் என அறுவுறுத்துவது ஆவியீரைந்தை யகற்றலாம் என்ற தொடராகும். ஆபத்து – அச்சத்தை விளைவிக்கும் பொருள்களால் நேரும் துன்பம். விபத்து – எதிர்பாராத வகையில் இயற்கை மாற்றங்களால் நேரும் துன்பம். ஆவி ஈரைந்து உறலாம் = ஆன்மாவுக்கு உறுதியாகிய பத்து (பத்தியினைப்) பெறலாம். இங்குப் பத்து என்னுஞ் சொல் பத்தி என்ற பொருளில் வழங்கப் பெற்றது. பத்தென்னும் சொல் பத்தியைக் குறித்து வழங்குதல், பத்தில னேனும் பணிந்திலனேனும் (திருவாசகம் 602) எனவும், பத்துடையீர் ஈசன் பழவடியீர் (திருவா – 157) எனவும் வரும் திருவாதவூரடிகள் வாய் மொழிகளால் அறியப்படும்.

ஆவி ஈர் ஐந்து – ஐந்து ஆன்மாவை வருத்தும் ஆணவம் கன்மம், மாயை, திரோதாயி, மாயேயம் என்னும் ஐவகை மலங்கள், அறலாம் – நீக்கிவிடலாம், ஈர்தல் – வருத்துதல். ஆவியீரைந்து ஓரிரண்டோடு ஆய்ந்து இடலாம் – பிராணனுக்குரிய கலைகள் பத்தோடு இரண்டினையும் (பன்னிரு கலைகளையும்) சேர்த்து (புறத்தே கழியாமல் – அகத்தே) கட்டிக் கொள்ளலாம் எனத் திருவைந்தெழுத்து ஓதுதலின் பயன்களை உய்த்துணரச் செய்யும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளமை சிந்தித்து உணரத் தகுவதாகும்.

கற்போர் தம் நுண்மாண் நுழைபுலனை வளர்த்துக் கொள்ளும் முறையில் அருட்பிரகாச வள்ளலார் பாடிய அரும் பொருட் பாடல்களில் கற்றோர் அறிவுக்கும் எட்டாத நிலையில் இப்பாடலின் பொருள் இதுதான் எனத் துணிந்து கூற வியலாத வாறு அமைந்த பாடல்களும் சில உள்ளன. அவற்றை யெல்லாம் நுண்ணிதின் ஆராய்ந்து பொருள்விளக்கந் தருதல் செந்தமிழ்ப் புலமையும் திருவருள் அநுபவமும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற சான்றோர்களின் தலையாய கடமையாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *