திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

12. வள்ளலார் செந்தமிழ்

தமிழிலக்கிய வரலாற்றில் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டினை ஒரு பொற்காலமெனக் கூறலாம். இக் காலத்திலே தான் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் யாழ்ப்பாணத்து நல்லூர் சிவத்திரு ஆறுமுக நாவலர் அவர்களும், வடலூர் இராமலிங்க வள்ளலாரும் தோன்றித் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் சமயமாகிய சைவசமய வளர்ச்சிக்கும் ஆக்கம் தரும் நிலையான பல புலமைப் பணிகளைச் செய்து உள்ளார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்துவானாகிய பிள்ளை அவர்கள் செந்தமிழ் நூல்களை நன்றாகப் பயின்றும், வடமொழியில் உள்ள நூல்களின் கருத்துக்களை உணர்ந்தும், மாணவர் பலருக்கும் ஆர்வமுடன் சிறந்த நூல்களைப் பாடம் சொல்லியும், தம்முடைய பாவன்மையால் தலபுராணங்கள் இருபத்திரண்டும், சரித்திரங்கள் மூன்றும், மான்மியம் ஒன்றும் காப்பியங்கள் இரண்டும், பதிகம் நான்கும், எமக அந்தாதி மூன்றும், வெண்பா அந்தாதி ஒன்றும் மாலை ஏழும், பிள்ளைத்தமிழ் பத்தும், கலம்பகம் இரண்டும், கோவை மூன்றும், உலா ஒன்றும், தூது இரண்டும், குறவஞ்சி ஒன்றும், சிலேடைவெண்பா ஒன்றும், கப்பற்பாட்டு, குருபரம்பரை அகவல், ஆனந்தக்களிப்பு, பொன்னூசல்மங்கலம், வாலி வாழ்த்து என்பனவும் ஆகப் பலவகைப் பனுவல்களை இயற்றியும், தமிழ் வளர்ச்சிக்கும், சைவசமய வளர்ச்சிக்கும், ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார்கள். மகாவித்துவான் பிள்ளை அவர்களின் பன்னூற் பயிற்சியும், கற்பனைத்திறமும், சைவ சித்தாந்தத் தத்துவத் தெளிவும், காப்பியச்சுவை நயங்களை விளக்கும் கற்பனைத்திறமும், பல்வகை யாப்பணியமைய இயல்பாக விரைந்து பாடும் பாவன்மையும், ஆகிய இவையாவும் இவர்களாற் பாடப் பெற்றுள்ள பல்வேறு பனுவல்களிலும் விரிந்து பரவி உள்ளன. மகாவித்துவானாகிய இப்புலவர் பெருமான், கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமாயணமாகிய ஒரு கதையினை எடுத்துக் கொண்டு, பல்வகைச்சுவை நயங்களும் பொதுள ஒரு காப்பியஞ் செய்தாற் போன்று ஏதேனும் ஒரு கதையினை எடுத்துக் கொண்டு பெருங் காப்பியம் ஒன்று பாடியிருப் பாரானால் இவர் கம்பரினும் விஞ்சிய பெரும்புலவராகப் பாராட்டப் பெற்றிருப்பார் என என் ஆசிரியப் பெருந்தகை யாழ் நூலாசிரியர் விபுலாநந்த அடிகளார் பலமுறை பலரிடமும் கூறக் கேட்டிருக் கின்றேன். இங்ஙனம் பேரறிஞர் பாராட்டும் வண்ணம் நிறைந்த புலமை வாய்ந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களது புலமை மாண்பினைத் தமிழ் மாணவர் பலரும் உணர்ந்து மகிழும்படி பிள்ளையவர்கள் பாடிய பனுவல்களில் அமைந்துள்ள சொற் பொருளணி நயங்களையும், பல்வேறு சவை நயங்களையும் சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கையினையும் ஆராய்ந்து நூலுருவில் வெளிப்படுத்துதல் தமிழறிஞர்களின் தலையாய கடமையாகும்.

ஈழத்தில் தோன்றித் தமிழ் பயின்று விவிலிய நூலை உரைநடையில் மொழி பெயர்த்தும், நாடக நூல்கள் சில எழுதியும், கீர்த்தனங்கள் சில பாடியும் புகழ்பெற்ற ஆறுமுக நாவலர் தமிழ் நாட்டிற்கு வந்து சிதம்பரத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். செந்தமிழும் சிவநெறியும் தழைத்தோங்குதற்கெனவே தமது வாழ்க்கைமுழுவதும் பிரமச்சரிய நிலையைக் கடைப்பிடித்து ஒழுகிய தவச்செல்வராகிய அவர், தமிழோடு, ஆங்கிலமும், வடமொழியும் கற்றவர். தமிழ் மாணவர்கள் தம் இளம் பருவ முதல் படிப்படியாகக் கற்றற்குரிய தமிழ்ப்பாட, நூல்களை முதற் பாலபாடம், இரண்டாம் பாலபாடம், மூன்றாம் பாலபாடம், நான்காம் பாலகாடம் எனப் படிப்படியே எழுதி உதவினார். தொல்காப்பியம், திருக்குறள், பரிமேலழகர் உரை, அகத்தியத் தேவாரத் திரட்டு திருவாசகம் திருக்கோவையார், திருத்தொண்டர் புராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய இலக்கண இலக்கிய நூல்களையும், நன்னூல் விருத்தியுரை, இலக்கணக்கொத்து, நிகண்டு முதலிய கருவி நூல்களையும், கோயிற்புராணம், சைவசமயநெறி முதலிய பல நூல்களையும் பிழையறப் பதிப்பித்து உதவினார். தமிழ்மொழியினைப் பிழையறப் பதிப்பித்து உதவினார். தமிழ்மொழியினைப் பிழையறக் கற்றற்கு உறுதுணையாக நன்னூற் காண்டிகையுரை, இலக்கண வினாவிடை இலக்கணச் சுருக்கம், ஆகிய புது நூல்களை இயற்றினார். திருத்தொண்டர் புராணம், கந்தபுராணம் ஆகிய புராணத்தினை உரைநடையாக யாவரும் கற்றுணரும்படி அவற்றை (வசன நடையில்) வரைந்தும், பெரியபுராணம் வரலாற்றின் நுட்பங்களைக் கற்போர் உணர்ந்து பிறர்க்கும் எடுத்துரைத்துப் பயன்விளைக்கும் முறையில் உரைநடையில் சூசனம் (விளக்கம்) எழுதியும் சிவநெறிப்பணி புரிந்தார். தமிழ்ச் சுவை நயங்களையும், சமய உண்மைகளையும் பலரும் உணர்ந்து பயன் பெறும் முறையில் தமது நாவன்மை தோன்றச் சொற்பொழிவாற்றி நாவலார் என்னும் சிறப்புக்குரியவரானார். சைவர்கள் இளம்பருவ முதல் இன்றி யமையாது மேற்கொள்ளுதற்குரிய கடமைகளைக் குறித்துச் சைவ வினாவிடை, நித்தியகன்மவிதி முதலிய சிறு நூல்களை இயற்றினார். இவ்வாறு ஆறுமும் நாவலர் தமிழுக்கும் சைவத் துக்கும் செய்த பணிகள் பலவாகும். அப்பணிகளுள் பிழையற்ற பதிப்புமுறையும், உரைநடை யமைப்பும் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும்.

சென்ற நூற்றாண்டில் தோன்றிய இராமலிங்க வள்ளலார் தம் தாய்மொழியாகிய தமிழின் இனிமையையும், மனத்தால் அறிதற்கரிய நுண்பொருள்களையும், சொற்களிற் புலப்பட வைக்கும் எளிமைத் திறத்தினையும் உலகுயிர்களை இயக்கும் பரம்பொருளைப் போற்றிப் பரவுதற் கினிய தெய்வத் திறத்தினையும் நன்குணர்ந்த செம்புலச் செல்வராவர். கற்றோர்க்கேயன்றி மற்றோர்க்கும் பயன்படும் வண்ணம் தாம் பெற்ற திருவருட் புலமையால் பாட்டும், உரையும் என இருதிறத்தாலும் செந்திறத்த தமிழோசை யமைய அமிழ்தினு மினிய தமிழ்மொழியை வளர்த்த அருளாசிரியர் இராமலிங்க வள்ளலாரேயாவர். வள்ளலார் பாடியருளிய பாடல்கள் ஆறாயிரத்துக்க மேற்பட்டன. பொதுவாகத் திருக்குறள் முதலிய தொன்னூல்களையும் சைவத் திருமுறைகளையும், சிறப்பாகத் திருவாசகத்தையும், சிந்தித்துணரும் நிலையில் அருட்பிரகாச வள்ளலார் பாடிய செழும் பாடல்கள் அனைத்தும் திருவாதவூரடிகள் அருளிய திருவாசகத்தைப் போலவே படிப்போர், பக்கத்திலிருந்து கேட்போர் சிந்திப்போர் ஆகிய எல்லோருடைய உள்ளங்களையும் உருகச் செய்வனவாகும். இக்காலத்தில் கற்றோரே யன்றி மற்றோரும் எளிதிற் புரிந்து படித்துணர்ந்து மகிழ்தற்குரிய வண்ணம் சொல்லின் எளிமையும் பொருளின் தெளிவும் உடையனவாகத் திருவருட்பாப் பாடல்கள் அமைந்திருபது தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கம் தருவதாகும்.

தென்தமிழும் வடமொழியும் ஓதாதுணர்ந்த இராமலிங்க வள்ளலார் வடமொழி முதலிய பிறமொழிகளுக்கில்லாத எளிமையும், தெளிவும் வாய்ந்த தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் குடும்பத்தில் தம்மைப் பிறப்பித்தருளித் தென்மொழியால் தம்மைப் பாடுவித் தருளிய இறைவனது பெருங்கருணைத் திறத்தினை நினைந்து எல்லாம் வல்ல இறைவனை உள்ளம் கசிந்து போற்றுகின்றார்.

இடம்பத்தையும், ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரியம் முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் எளிதாய்ப், பாடுதற்கும், துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக்கல்வியை எளிதில் அறிவிப்பதாய்த் திருவருள் பலத்தால் கிடைத்த தென் மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச் செய்து அத்தென் மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளினீர் எனச்சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெருவிண்ணப் பத்தில் இறைவனை நோக்கி அருட்பிரகாச வள்ளலார் கூறுவதாக அமைந்த இப் போற்றுதல், சேக்கிழார் அருளிய வண்ணம் ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழின் சிறப்பினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

இராமலிங்க வள்ளலார் தம்முடைய தாய்மொழியாகிய தமிழ் இறைவனுக்கு உவப்பான மொழியென்பதனையும், கற்றோர் உள்ளத்தில் அமைதியை வினைவிக்குந் தன்மையது என்பதனையும், சிந்தைக்கும் மொழிக்கும் அப்பாற்பட்டு நின்ற இறைவனது புகழ்த் திறங்கள் தேவார ஆசிரியர் மூவர் அருளிய திருப்பதிகங்களுக்கு இசைந்தனவாய் முதிர்தீம்பாலும் முக்கனியும் வானோர் அமுதமும் நல்ல தேனும் கைப்புடையன் என்று சொல்லும் வண்ணம் மிக்க இனிப்புடையனவாய் விளங்குவன என்பதனையும் வடிக்குறும் தமிழ்த் தொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே (876) எனவும் தண்டமிழ்க் கவிதை போல் சாந்தமிக்கது (குடும்பகோஷம் (19) எனவும் மூவர் திருப்பாட்டினுக்கு இசைந்தே முதிர்தீம்பாலும் முக்கனியும் காவல் அமுதும் நறுந்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே. (908) எனவும், பண்ணாரும் மூவர் சொற் பாவேறு கேள்வியிற் பண்படா ஏழையின் சொற்பாவையும் இகழ்ந்திடாது ஏற்று (2606) எனவும் வரும் தொடர்களில் குறித்துப் போற்றி யுள்ளமை தமிழ்ச் சுவையில் வள்ளலார் கொண்ட ஈடுபாட்டினை நன்கு புலப்படுத்துவனவாகும்.

சிற்சபையில் நடிக்கின்ற இறைவனது திருக்கூத்து இயல், இசை, நாடகம் என்னும் மும்மைத் தமிழுக்கும் ஏற்புடையதாய்ச் செந்தமிழை வளர்க்குந் திருக்கூத்தாக ஆன்மாக்களின் உள்ளம், உரை, செயல் ஆகிய முக்கரணங்களையும் திருத்தி மும்மை மலம் அகன்றொழியச் செம்மை நலம் பெறச் செந்தமிழை வளர்க்கும் திருக்கூத்தாகத் திகழும் திறத்தினை,

எந்தையுனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்செந்தமிழில் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் (4802)

எனவரும் தொடரில் அருட்பிரகாசவள்ளலார் விரித்துப் போற்றி யுள்ளமை தமிழ்மொழி யிடத்து வள்ளலார் கொண்டுள்ள பெருமதிப் பினையும் பேரார்வத்தினையும் நன்க விளக்குதல் காணலாம்.

திருவொற்றியூரில் எழுந்தருளியுள்ள வடிவுடை மாணிக்க மாகிய அன்னையைப் பரவிப் போற்றும் பனுவலில் ‘மெய்யன்பர் புனைந்த தமிழ்ப் பாவால் நிறைந்த பொற்பாவாய் (1469) என அம்மையை வள்ளலார் தமிழ்ப் பாவின் திருவுருவமாகப் பரவிப் போற்றியுள்ளமை காணலாம். வடிவுடை அம்மையைப் போற்றுவதாக அமைந்த இத்தொடர்,

தொடுக்கும் கடவுட் பழம் பாடற் றொடையின்பயனேநறைபழுத்த துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே

எனக் குமரகுருபர அடிகளார் மீனாட்சி அம்மையை அழைத்துப் போற்றிய பிள்ளைத் தமிழின் அம்மையை அழைத்துப் போற்றிய பிள்ளைத் தமிழின் தொடரை அடியொற்றி அமைந்துள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும். செந்தமிழ்க் கடவுளாகிய முருகனை,

முன் செய்த மாதவத்தால் அருணகிரிநாதர்முன்னே முறையிட்டு ஏத்தும்புன்செயல்தீர் திருப்புகழைஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் (2515)

எனவும், அம்முதல்வனது திருவடிப் பேரழகில் ஈடுபட்டு அத்திருவடிகளைக் கனவிலேலும் கண்டு மகிழ்தல் வேண்டும் என்னும் பெருவேட்கை தோன்றப்

பண்ணேறு மொழியடியார் பரவியேத்தும்பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கின்கண்ணேறு படுமென்றோ கனவிலேனும்காட்டென்றால் காட்டு கிலாய் கருணை ஈதோ!

(103)

எனவும் வள்ளலார் குறித்துப் போற்றியுள்ளமை தெய்வத்திறம் பேசுவதற்கு ஏற்புடைய மொழி தமிழ் மொழியே என்னும் உண்மையினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

உண்மையும் தெளிவும் வாய்ந்த மொழி தமிழ்மொழி என்பதும், அம் மொழியொன்றே எல்லாம் வல்ல பரம்பொருளின் உண்ம இயல்பினை உள்ளவாறு புலப்படுத்தும் என்பதும்,

‘தெய்வச் சுருதிதமிழ்க் கன்றித் தீட்டா நிலைமைத்து எனவரும் ஆன்றோர் வாய்மொழியால் நன்கு துணியப்படும்.

சைவசமய ஆசிரியர் நால்வரும் செம்பொருளாகிய சிவபரம் பொருளைப் பாடிப் போற்றிய செந்தமிழ்த் திருப்பாடல்களை இடைவிடாது ஓதி நெஞ்சம் கனிந்து உருகும் பேரின்ப அநுபவத்தினைப் பெற்ற இராமலிங்க வள்ளலார், சைவ சமய குரவர்கள் நால்வரும் செய்த தமிழ்ப் பாடல்கள், உலகவின் பத்திலேயே ஊறிக் கிடக்கும் காமுகர்களைக் கூடத் தம்பால் ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தன என்னும் உண்மையை,

சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் கீர்த்தியைச் சேர்த்தியந்தநால்வரும் செய்தமிழ் கேட்டுப்புறத்தில் நடக்கச் சற்றேகால்வரு மாயினும் இன்புருவாகிக் கனிமனம் அப்பால் வருமே அதன்பாற் பெண்களை விட்டுப் பார்க்கினுமே

(2332)

என இறைவனை முன்னிலைப் படுத்திப் போற்றும் பாடலில் அருட்பிரகாச வள்ளலார் தமது கற்பனைத் திறம் விளங்க வெளியிட்டுள்ளமை அவர்தம் தமிழ் ஆர்வத்தை இனிது புலப் படுத்துவதாகும்.

அருட்பிரகாச வள்ளலார் தம் பாடலிற் பயன்படுத்திய மொழிநடை கற்றோர், கல்லாதோர், ஆகிய எல்லாரும் புரிந்து கொள்ளுதற்குரிய எளிமையும் இனிமையும் ஒருங்கு அமையப் பெற்றதாகும்.

உலக வழக்கில் மக்களால் பேசப்படும் மொழி நடையினை அவ்வாறே செய்யுளாக யாத்தமைக்கும் யாப்பின் திறம் அருட்பிரகாச வள்ளலார்க்கு இயல்பாகவே கைவந்த கலைத்திறமாகும்.

மக்களுக்குப் புரியாத சொற்களை வலிந்து சேர்த்து அரிதுணர் பொருளனவாய்ச் செய்யுட்களைப் பாடும் ஏனைய புலவர்களைப் போலன்றி, உலகில் இயல்பாக வழங்கும் மொழிநடையினைச் சீரும், தொடையும் சிறக்க, தன்மை, உவமை, உருவகம் முதலிய அணிநலன்கள் அமைய இயல்பாகவே பாடலியற்றும் பாவன்மையினை இறைவன் திருவருளால் பெற்றஅருட்பாவலர் இராமலிங்க வள்ளலார் ஆவர். அவர்கள் பாடிய பாடல்களில் மோனை எதுகை, முரண், இயைபு, முதலிய தொடை நயங்களும் சொல்லும் பொருளும் பற்றிய அணி நயங்களும் இயல்பாகவே அமைந்துள்ளன என்பது திருவருட்பாப் பனுவல்களைப் படிந்து மகிழும் அன்பர்கள் அனைவர்க்கும் தெரிந்த செய்தியாகும்.

வள்ளலார் அருளிய பாடல்களில் ஆசிரியப்பா வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களும் தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்களும் வண்ணம், சந்தம் பற்றிய யாப்பு வகைகளும், கண்ணி, கும்மி, சிந்து, கீர்த்தனம், நாமாவளி, முதலிய இன்னிசைப் பாடல்களும், தலைவியும் தோழியும் உறழ்ந்து கூறுவனவாகவும், தலைவனும் தலைவியும் உறழ்ந்து கூறுவனவாகவும், நாடக அமைப்பில் அமைந்த உரையாடல்களும் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

வள்ளலார் பாடிய கண்ணி, சிந்து முதலிய யாப்பு வகைகளில் சில, தாயுமானவர் பாடல்களில் அமைந்த கண்ணி, சிந்து முதலிய யாப்பியல் வகையினை அடியொற்றியுள்ளன.

சைவ, சமய ஆசிரியர் நால்வரும் பாடியருளிய யாப்பு வகையினை அடி ஒற்றி அமைந்த இயலிசைத் தமிழ்ப் பதிகங்கள் பல திருவருட்பாவில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு எல்லாம் வல்ல இறைவனை இசைநலம் பொருந்தப் பரவிப் போற்றும் பத்திப் பனுவல்களாக இராமலிங்க வள்ளலார் பாடிய பாடற் றொகுதியாகிய திருவருட்பா அமைந்துள்ளது. எனவே இயல், இசை நாடகமென்னும் முத்ததமிழுக்கும் சிறந்த இலக்கியமாகத் திருவருட்பா திகழ்கின்றமை தமிழ் மக்கள் செய்த தவப் பேறேயாகும்.

உலக மக்களது உணர்வுக்கு அணி செய்வதாய் ஆழ்ந்த பொருளைத் தந்து மக்களது அறிவினை வளர்ப்பதாய், அகமும் புறமுமாகிய உலகியல் ஒழுகலாறுகளை விரிந்துரைப்பதாய்த் தெளிவுடையதாய், அன்பும் அறனுமாகிய தெய்வப் பண்பினை வளர்ப்பதாயமைதலே சான்றோர் கவியின் இலக்கணம் என்பர் பெரியோர். அத்தகைய சான்றோர் கவிக்கு இலக்கியமாகத் திகழும் தன்மையது வள்ளலார் பாடிய திருவருட்பாவாகும்.

அருட்பிரகாச வள்ளலார் தம் உள்ளத்திலே அருட் பெருஞ்சோதி ஆண்டவனாகிய இறைவனை இடைவிடாது நினைந்து போற்றி மெய்யுணர்வு பெற்ற அருளாளர் ஆவர். ஆகவே அவர் சிந்தையில் ஊற்றெடுத்து வாயின் வழியாக வெளி வந்த செந்தமிழ்ப் பாடல்கள் யாவும் சொல்லாலும் பொருளாலும், கற்போர்க்கும் கேட்போர்க்கும், அறிவொளி பரப்பும் தன்மையன வாகவே அமைந்துள்ளன. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவது போன்று வள்ளலார் உள்ளத்தில் தோன்றி வரும் கவிப் பெருக்கும், கலைப்பெருக்கும் இந்நாட்டிற் பசியாலும் பிணியாலும் வாட்டமுற்று அறிவுக் கண்ணை இழந்து பள்ளத்தில் விழுந்த குருடர்கள் எல்லாம் கல்விக் கண் பெற்று உலகியல் வாழ்விலும், அருளியல் வாழ்விலும் உயர்ந்த பதவிகளைப் பெறுவதற்கு உரியவண்ணம் செய்தன. வறுமையிலும் பசிக்கொடுமையிலும் சிக்குண்டு துன்பக்குழியில் வீழ்ந்து துயருறும் ஏழை எளிய மக்களையெல்லாம் இறைவனது திருவருளாகிய ஒளியின் உதவி கொண்டு மேல்நிலை பெற வழிவகுத்த பெருமை வள்ளலார் பாடிய தெளிந்த தமிழ்ப் பாடல்களின் சிறப்பியல்பு ஆகும். இங்ஙனம் மக்களது கலங்கிய அறிவினைத் தெளிவிக்கும் திருவருட்பாவாகிய தமிழ் அமுதத்தைப் பருகிச் சுவை காணும் பண்புடைய பெருமக்கள் இவ்வுலகில் வாழும் நிலையிலேயே வானோர் அமிழ்தத்தினைப் பருகி மகிழுஞ் சிறப்பினைத் தம் வாழ்விற் கண்டுணர்ந்தோராவர்.

திருவருட்பாவினை நன்கு பயின்று இதன் சுவை நலத்தில் திளைத்து இன்புற்ற தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் வள்ளலார் பாடிய திருவருட்பாவின் இயல்பினை மனத்துட்கொண்டு செந்தமிழ்க் கவிதையின் மாட்சியினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

உள்ளத்தில் உண்மைஒளி யுண்டாயின்,
வாக்கினிலே ஒளியுண்டாகும்வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்,
கவிப்பெருக்கும் மேவுமாயின்பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்விழிபெற்றுப் பதவி கொள்வார்தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்இங்கமரர் சிறப்புக் கண்டார். (பாரதியார் 22. தமிழ் 4)

எனவரும் பாடலாகும்.

பாட்டுக்கொரு புலவன் பாரதி யென அறிஞர்களாற் போற்றப் பெற்ற தேசியகவி சுப்பிரமணிய பாரதியார், வள்ளலார் பாடிய திருவருட்பாவில் பெரிதும் ஈடுபாடுடையவர் என்பது, திருவருட்பாவில் காணப்படும் சிந்து, கண்ணி, கீர்த்தனம் முதலிய யாப்பு வகைகளை அடியொற்றிப் பலபாடல்கள் பாடி இருத்தலாலும் வள்ளலார் அறிவுறுத்திய மரணமிலாப் பெரு வாழ்வினை உளங்கொண்டு சாகாவரம் அருள்வாய் எனப் பாடிய இசைப் பாடலினாலும் சமயப் பொதுமையினை அறிவுறுத்தும் முறையில் பாடிய பிற தோத்திரப் பாடல்களினாலும் இனிது புலனாகும்.

இராமலிங்க வள்ளலார் பாடிய,

களக்கமறப் பொதுநடம்நான் கண்டு கொண்ட தருணம்கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோவெம்பாது பழுக்கினுமென் கரத்திலகப்படுமோகொளக்கருது மலமாயைக் குரங்கு கவர்ந்திடுமோகுரங்கு கவராதெனது குறிப்பிலகப் படினும்துளக்கம்அற உண்ணுவேனோ தொண்டைவிக்கிக்கொளுமோசோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே (3380)

எனவரும் திருவருட்பாவை உளங்கொண்டு,

களக்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெதும்பி உதிர்ந்திடுமோ
வெம்பாது பழுக்கினுமென் கரத்திலகப் படுமோ

வளர்த்த பழம் கர்சன் என்ற குரங்க கவர்ந்திடுமோமற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோதுளக்கமற யான் பெற்றிங் குண்குவனோ, அல்லால்தொண்டை விக்குமோ ஏதும் சொல்லரியதாமே.

(பாரதி – கோகலே – 33)

எனக் கோகலே சாமியாரைப் பற்றிப் பாரதியார் பாடியுள்ள பாடல், திருவருட்பாவில் பாரதியாருக்குள்ள ஈடுபாட்டை நன்கு புலப்படுத்துவதாகும். மேற்குறித்த கோகலே சாமியார் பாடல் தலைப்பின்கீழ் இராமலிங்க சுவாமிகள் களக்கமறப் பொதுநடம் நான் கண்டு கொண்ட தருணம் என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது எனப் பாரதியாரவர்களே குறிப்பிட்டு இருப்பது இவ்வுண்மையினை வற்புறுத்துவதாகும்.

அருட்பெருஞ் சோதியாகிய இறைவனைத் தம் உள்ளத்தே இடைவிடாது நினைத்துப் போற்றுவோர் நோயற்ற பொன்மயமான செம்மேனியுடையவராய், நரை, திரை, மூப்பு இன்றி மரணமிலாப் பெருவாழ்வினராய் நிலைத்த தூய உடம்பினைப் (சுத்ததேகம்) பெறுவார்கள் என்பதனை வள்ளலார் தாம் பாடிய திருவருட்பாப் பாடல்களில் பல இடங்களிலும் குறித்துள்ளமை காணலாம். இவ்விருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கந்தவேளது அருள்பெற்றுச் செந்தமிழ்ப் பனுவல் பாடிய தவப்பெருஞ் செல்வராகிய பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வள்ளலார் அறிவுறுத்திய மரணமிலாப் பெரு வாழ்வினை முருகப் பெருமான் தன் அடியார்கட்கு வழங்கியருள்வான் என்பதனை,

நின்மலச் செஞ்சோதி வடிவுடையவுனையனவரத நினைப்போர்க் கென்றும்பொன்மயச் செம்மேனி யுடம்புண்டாகுநரை திரைகள் பொருந்தர் புன்கண்தன்னுரத்தி னுயிர்கொள் கூற்றமணுகாதெதினுஞ் சத்தாய் நிற்குஞ்சின்மயத்தின் தெருட் பிழம்பே யான் றொழுமோர்வேற்சமர்த்தா சிவச் சீர்க்குன்றே.

(பாம்பன் சுவாமிகள்)

எனவரும் பாடலில் தொகுத்துக் கூறியுள்ளார் வள்ளலார். செந்தமிழ்ப் பொருள் நலத்தில் பாம்பனடிகளார் கொண்டுள்ள பெரு மதிப்பினையும் பேரார்வத்தையும் இது நன்கு புலப்படுத்துவதாகும்.

இவ்வுலகில் உயிர்கள் படும் துன்பத்தினைக் கண்டு உளம் பொறாது அவற்றின் துன்பத்தினைத் துடைக்க முற்படும் உயிரிரக்க உணர்வே தம் வடிவாகக் கொண்டு நெஞ்சம் நெக்குருகி மன்னுயிர் களின் துயரங்களைத் துடைத்தருளல் வேண்டும் என நெஞ்சத்தினை நெகிழ்விக்கும் செந்தமிழ்ப் பனுவல்களால் எல்லாம் வல்ல இறைவன்பால் இடைவிடாது முறையிட்டு வேண்டிய அருளாளர் இராமலிங்க அடிகளாராவார். தம் துயர் தீர்த்தருள்க என வேண்டும் தன்னலமின்றி மன்னுயிர்களின் துயர் துடைத்தல் வேண்டும் என இறைவனைப் போற்றும் முறையில் வள்ளலார் பாடிய பாடல்கள் உயிரிரக்க உணர்வின் இலக்கியமாக அமைந்துள்ளமை திருவருட்பாவின் தனிச் சிறப்பாகும். இவ்வுண்மை,

கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கடுத்தகடுந்துயர் அச்சமாதிகளைத்தருண நின்னருளால் தவிர்த்தவர்க் கின்பம்தரவும்வன் புலைகொலை இரண்டும்ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்கஉஞற்றவும் அம்பலந் தனிலேமருவிய புகழை வழுத்தவும் நின்னைவாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய் (7430)

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்வருத்தத்தை ஒருசிறி தெனினும்கண்ணுறப் பார்த்தும் செவியுறக்கேட்டும்கணமும்நான் சகித்திட மாட்டேன்எண்ணுறும் எனக்கே நின்னருள் பலத்தால்இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்நண்ணுமவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான்நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
பல்லிகள் பலவாயிடத்தும் உச்சியினும்பகரும் நேர் முதற்பலவயினும்சொல்லியதோறும் பிறர்துயர் கேட்கச்சொல்கின்றவோ எனச் சூழ்ந்தேமெல்லிய மனம்நொந் திளைத்தனன் வகைவெங்குரல் செயுந்தோறும் எந்தாய்வல்லியக் குரல்கேட் டயர் பசுப்போலவருந்தினன்எந்தைநீ அறிவாய் (3432)

புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும்என்பொலா மணியே எண்ணி நான் எண்ணிஏங்கிய ஏக்கம் நீயறிவாய்வன்புலால் உண்ணும் மனிதரைக்கண்டுமயங்கி உள்நடுங்கி ஆற்றாமல்என்பெலாம் கருக இளைத்தனன் அந்தஇளைப்பையும் ஐயநீ அறிவாய் (3450)

தலைநெறி ஞான சுத்த சன்மார்க்கம்சந்ததம் முயலுறா தந்தோகலைநெறி உலகக் கதியிலே கருத்தைக்கனிவுற வைத்தனர் ஆகிப்புலைநெறி விரும்பினார் உலகுயிர்கள்பொது எனக் கண்டிரங்காதுகொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன்எந்தைநான் கூறுவ தென்னே. (3477)

என வள்ளலார் பிற உயிர்களுக்கு நேரவிருக்கும் துன்பங்களை எண்ணி நெஞ்சங் கசிந்து பாடிய பாடல்கள் இவ்வுண்மையினை நன்கு புலப்படுத்துவனவாகும்.

எல்லாம் வல்ல இறைவனது திருவருளைப் பொருளாகக் கொண்டு தம் பாட்டின் திறத்தாலே கடவுள் உண்மையினையும், கொல்லாமை, புலாலுண்ணாமையாகிய சீவகாருண்ய ஒழுக்கத் தையும், மக்கள் எல்லோரும் ஒரு குலத்தாராய் அன்பினாலொன்றி யிருந்து முழுமுதற் பொருள் ஒன்றையே மனமொழி மெய்களால் வழிபட்டு ஈறிலாப் பேரின்ப வாழ்வினை அடைந்து இன்புறுதற்கு ஏதுவாகிய சமரச சுத்த சன்மார்க்கத்தினையும் பரப்புதலையே தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்த வள்ளலார் நாம் பரப்ப எண்ணிய இவ்வுயர்ந்த கொள்கைகளை எல்லோரும் புரிந்து மேற்கொள்ளும் முறையில் இனிமையும், எளிமையும், தெளிவும் வாய்ந்த செந்தமிழ்ப் பாடல்களாலும், தெளிந்த உரைநடையாலும் வெளியிட்டு வந்தார்கள். வள்ளலார் அருளிய பாடல்கள் யாவும் நம் நாட்டில் கற்றோர், கல்லாதாராகிய எல்லா மக்களும் இறைவன் திருமுன்னர் நின்று பாடிப் போற்றி ‘மகிழற்குரிய இன்னிசைச் செழும் பாடல்களாக அமைந்துள்ளன என்பது யாவரும் அறிந்த செய்தியாகும். அத்தகைய பாடல்களில் சிலவற்றையேனும் இங்கு எடுத்துக்காட்டுதல் ஏற்புடையதாகும்.

இராமலிங்க வள்ளலார் தம் இளம்பருவத்திலேயே சென்னையில் கந்தகோட்டத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானைப் போற்றிப் பரவிய செந்தமிழ்ப்பனுவல் தெய்வ மணிமாலை என்பதாகும். அதன்கண் பாடலாக அமைந்தது,

ஒருமையுட னினதுதிரு மலரடி நினைக்கின்றஉத்தமர்தம் உறவு வேண்டும்உள்ஒன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும்பொய்ம்மை பேசா திருக்கவேண்டும்பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்பிடியாதிருக்க வேண்டும்மருவு பெண்ணாசையை மறக்கவேவேண்டும் நோயற்றவாழ்வில்நான் வாழவேண்டும்தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத் துள்வளர்தலம் ஓங்கு கந்தவேளே.
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணிசண்முகத் தெய்வமணியே. (8)

என்பதாகும். முன்னியது முடித்தருளும் முருகப்பெருமான் முன்னிலையில் நின்று தாம் விரும்பியவற்றை வேண்டும் முறை யிலமைந்த இப்பாடலில் பெரியோரைத் துணைக் கோடலும், சிற்றினஞ் சேராமையும் இறைவனுடைய பொருள்சேர் திறங்களைப் போற்றிப் பரவுதலும், பொய் கூறாமையும், பெருநெறியாகிய சன்மார்க்க நெறியில் ஒழுகுதலும், மக்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் மத வேற்றுமைக்கு இடம் கொடாதிருத்தலும், மனை வாழ்க்கைக்கு மாறான பெண்ணாசையை மறத்தலும், உயிர்க்குயிராகிய இறைவனை மறவாதிருத்தலும், நல்லறிவும், அருட் செல்வமும், பொருட் செல்வமும், நோயற்ற வாழ்வும், எங்களுக்கு அளித்தருளல் வேண்டும் என இறைவன் முன் நின்று வேண்டுதலும் ஆக உலகமக்கள் அனைவர்க்கும் உரிய உயர்ந்த வேண்டுகோளனைத்தும் அமைய வள்ளலார் இப்பாடலைப்பாடிய திறம் வியந்து பாராட்டுதற்குரியதாகும்.

இறைவன் திருவடித் தாமரைகளை இடைவிடாது சிந்தித்துப் போற்றுவார்க்கு உலகியல் வாழ்வில் பெறுதற்குரிய எல்லா நலன்களும் எளிதிற் கிடைக்கும் என அறிவுறுத்துவது,

நீருண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்றநிலன் உண்டு புலனும் உண்டுநிதியுண்டு, துதிஉண்டு, மதிஉண்டு, கதிகொண்டநெறியுண்டு, நிலையும் உண்டுஊருண்டு, பேர்உண்டு, மணிஉண்டு, பணிஉண்டுஉடையுண்டு, கொடையுமுண்டுஉண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தமுறும்உளமுண்டு வளமுமுண்டுதேருண்டு, கரியுண்டு, பரியுண்டு, மற்றுள்ளசெல்வங்கள் யாவுமுண்டுதேனுண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்தியான முண்டாயில் அரசேதாருண்ட சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்தலமோங்கு கந்தவேளேதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணிசண்முகத் தெய்வ மணியே (28)

எனவரும் திருவருட்பா இது.

பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்பக்கமுண்டெக் காலமும்பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயமபடரெனும் திமிர மணுகாக்கதியுண்டு ஞான மாங் கதிருண்டு சதிருண்டுகாய சித்திகளுமுண்டுகறையுண்ட கண்டர்பால் அம்மைநின்தாளில்கருத்தொன்று முண்டாகுமேல்.
நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபரஞான ஆனந்த ஒளியேநாதாந்த ரூபமே வேதாந்த மோனமேநானெனு மகந்தை தீர்த்தென்மதியுண்ட மதியான மதிவதன வல்லியேமதுசூதனன் தங்கையேவரைராசனுக்கு இருகண்மணியாயுதித்த மலைவளர்காதலிப் பெண் உமையே.

(தாயுமானவர் 37 மலைவளர்காதலி 1)

எனவரும் தாயுமானவரின் பாடலை அடியொற்றி அமைந்திருத்தல் காணலாம்.

திருமுல்லை வாயிலை அடைந்த வள்ளலார், அங்கு எழுந்தருளி யுள்ள பெருமானை நோக்கி அம்முதல்வனது திருவருளினியல்பை வினவுவதாக அமைந்தது,

தேன்என இனிக்கும் திருவருட் கடலேதெள்ளிய அமுதமே சிவமேவான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலா மணியேஊன்என நின்ற உணர்விலேன் எனினும்உன்திருக்கோயில் வந்தடைந்தால்ஏன் எனக் கேளா திருந்தனை ஐயாஈதுநின் திருவருட் கியல்போ (653)

எனவரும் திருவருட்பாவாகும்.

திருவொற்றியூரில் எழுந்தருளிய எழுத்தறியும் பெருமானை நோக்கித் தம் துயர்துடைத்தருள வேண்டுமென இரந்து முறையிடும் முறையில் வள்ளலார் பாடியது, எழுத்தறியும் பெருமான் மாலை என்னும் பனுவலாகும். உலகியல் வாழ்வில் இன்னல் பல உற்றவர்கள் இறைவன் முன்னிலையில் நின்று போற்றிப் பரவுதற்கேற்ற எளிய தமிழ்நடையில் அமைந்தது இம்மாலையாகும். இதன் முதற்பாடல்,

சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனைமுந்தை வினைதொலைத்துன் மொய்கழற்கா ளாக்காதேநிந்தையுறும் நோயால் நிகழ வைத்தல் நீதியதோஎந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே (723)

என்பதாகும்.

ஞானகாயப் பெருவெளியில் திருக்கூத்தியற்றியருளும் நடராசப் பெருமானைக் குருவாகப் போற்றும் முறையில் அமைந்தது வள்ளலார் பாடிய நடராசபதி மாலை என்னும் பனுவலாகும். இதன்கண் அமைந்தது,

காய்எலாம் கனியெனக் கனிவிக்கும் ஒருபெருங்கருணை அமுதே எனக்குக்கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்காட்சியே கனகமலையேதாயெலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்தலைவனே நின் பெருமையைச்சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்சார்கின்ற தோறும் அந்தோவாயெலாம் தித்திக்கும் மனம்எலாம் தித்திக்கும்மதியெலாம் தித்திக்குமென்மன்னிய மெய்யறிவெலாம் தித்திக்கும் என்னில் அதில்வருமின்பம் என்புகலுவேன்.
தூய் எலாம்பெற்றநிலை மேல்அருட்சுகமெலாம்தோன்றிட விளங்கு சுடரேதுரிய வெளிநடுநின்ற பெரிய பொருளே அருட்சோதி நடராச குருவே, (3681)

எனவரும் திருவருட்பாவாகும். எல்லாம் வல்ல இறைவனது புகழ்த்திறம் சிந்திக்கும் பொழுதும், பேசும் பொழுதும், சிந்தையிலும் நாவிலும் அள்ளுறித் தித்திக்கும் இயல்பினது என்பதனை இப்பாடலில் விரித்துரைத்துப் போற்றியுள்ளமை காணலாம். அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் (திருவாசகம் 157) எனவும் ‘நினைத்தொறும், காண்தொறும், பேசுந்தொறும், எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடையான் (திருவா – 217) எனவும் வரும் மணிமொழிகள் இங்கு நினைக்கத் தக்கன வாகும்.

வள்ளலார் பாடிய அருள் விளக்க மாலையில் இரண்டாம் பாடலாக அமைந்தது,

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்தகுளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியேஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரேஉகந்ததண்ணீரிடை மர்ந்த சுகந்த மணமலரேமேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றேமென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனேஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந்தருளே. (4097)

என்ற பாடலாகும்.

விளையாடும் இளம் பருவத்திலேயே என்னை மணந்து கொண்ட தலைவன் நீ என்பார், ஆடையிலே எனை மணந்த மணவாளா என அழைத்தார் (ஆடையிலே விளையாடும் பருவத்தி லேயே – இளம் பருவத்திலே. ஆடையிலே என்பது உலகவழக்குச் சொல்), பாச ஞானத்தாலும் பசுஞானத்தாலும் உணர்தற்கரிய பரம்பொருளை அதன் முதல்வனது திருவருளே கண்ணாகக் கொண்டு சிந்தையிலே இடைவிடாது சிந்திக்குங்கால், அங்ஙனம் சிந்திப் போரது பிறவி வெப்பம் தணிய அவ்இறைவனது திருவடி ஞானம் தண்ணிய நிழலாய்த் தோன்றி குளிர்ச்சியை நல்கும் என்பர் மெய்கண்டார். (சூத்திரம் 9) இதனை நினைவு கூரும் முறையிலமைந்தது,

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர்தருவே தருநிழலே

எனவரும் தொடராகும்.

விளையாடும் இளம் பருவத்திலேயே என்னை மணந்து கொண்ட தலைவன் நீ என்பார், ஆடையிலே எனை மணந்த மணவாளா என அழைத்தார் (ஆடையிலே விளையாடும் பருவத்திலேயே – இளம் பருவத்திலே. ஆடையிலே என்பது உலகவழக்குச்சொல்), பாச ஞானத்தாலும் பசுஞானத்தாலும் உணர்தற்கரிய பரம்பொருளை அதன் முதல்வனது திருவருளே கண்ணாகக் கொண்டு சிந்தையிலே இடைவிடாது சிந்திக்குங்கால், அங்ஙனம் சிந்திப் போரது பிறவி வெப்பம் தணிய அவ்இறைவனது திருவடி ஞானம் தண்ணிய நிழலாய்த் தோன்றி குளிர்ச்சியை நல்கும் என்பர் மெய்கண்டார். (சூத்திரம் 9) இதனை நினைவு கூரும் முறையிலமைந்தது,

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர்தருவே தருநிழலே

எனவரும் தொடராகும்.

வெம்மை பொறாத கோடைக்காலத்திலே வழிநடப் போருக்குக் குளிர்ந்த மரநிழலும் ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரும் மெல்லென வீசுகின்ற தென்றற் காற்றும் ஒரு சேர இணைந்த நிலையில் ஏற்படும் இன்பத்தினை இறைவன் அருளால் விளையும் இன்பத்திற்கு உவமையாக எடுத்துரைக்கும் முறையில் அமைந்தது இப்பாடல்.

மாசில்வீணையும் மாலை மதியமும்வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்மூசுவண்டறை பொய்கையும் போன்றதேஈசன் எந்தை இணையடி நீழலே

எனவரும் அப்பர் தேவாரத்தின் விளக்கமாக அமைந்துள்ளமை ஒப்பு நோக்கி மகிழத்தகுவதாகும்.

உலக வாழ்க்கையில் மக்கள் விரும்பி நுகர்தற்குரிய முக்கனி களின் சாறுகள், சர்க்கரை, கற்கண்டு, தேன், பசும்பால், தேங்காய்ப்பால், இனிய வாதுமை, முந்திரிப் பருப்பின் பொடி, நல்லநெய் இவற்றையெல்லாம் கலந்து காய்ச்சிப் பதமறிந்து இறக்கிய நறும்பாகின் கட்டியைக் காட்டிலும் இன்சுவைதரும் தெள்ளிய அமுதமாகத் திகழ்வோன் கூத்தப்பெருமான் என்பதனை விரித்துரைத்துப் போற்றுவது.

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டிச்சர்க்கரையும் கற்கண்டின் பொடியுமிகக்கலந்தேதனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தெங்கின்தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும்விரவிஇனித்த நறுநெய்யளைந்தே இளஞ்சூட்டினிறக்கிஎடுத்த சுவைக்கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதேஅனிதமறத் திருப் பொதுவில் விளங்கு நடத்தரசேஅடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந்தருளே. (4106)

எனவரும் திருவருட்பாவாகும்.

பழத்தின் இரதமாம் – பாலில் நெய்யாம் எனவரும் அப்பர் அருள் மொழி இங்கு நினைவுகூரத் தகுவதாகும்.

இங்ஙனம் பண்ணார்ந்த பாடலால் செந்தமிழ் மொழிக்கு வளஞ்சேர்த்த திருவருட் பிரகாச வள்ளலார், தமது உரைநடைத் திறத்தாலும், தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டு புரிந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். இராமலிங்க வள்ளலார் இயற்றி உதவிய உரைநடை நூல்களில் மனுமுறை கண்ட வாசகம், சீவகாருண்ய ஒழுக்கம் என்பன சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும். அருண் மொழித் தேவராகிய சேக்கிழார் நாயனார், தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில் அருளியல் ஆட்சியினை அறிவுறுத்தும் நோக்குடன் பாடியமைத்த மனுநீதி கண்ட புராணத்தை விரித்து விளக்கும் உரை நடை நூலாக அமைந்தது மனுமுறை கண்ட வாசகம் என்னும் இந்நூலாகும். இதன்கண், மனுச்சோழன் அவனுடைய பட்டத்தரசி, மைந்தன் வீதிவிடங்கன், அவனது தேர்க் காலினால் ஊரப்பட்டு இளங்கன்றினை இழந்த தாய்ப் பசு, வாயில் காவலர், மந்திரி, பழிக்குக் கழுவாய் கூறும் அந்தணாளர் முதலியோருடைய மன இயல்புகளை உலகியல் உணர்வும், கற்பனை நயமும், மெய்ப்பாட்டுணர்வும் பொருந்தவும், எவ்வுயிர்க்கும் இரங்கும் அருளின் திறம் மேம்பட்டு விளங்கவும் இனிய, எளிய தமிழ் நடையில் அருட்பிரகாச வள்ளலார் இயற்றி யமைத்துள்ளார். இந்நூலின் சொற்பொருள் அமைப்பு அறிஞர் களால் வியந்து பாராட்டத் தகுவதாகும்.

இராமலிங்க வள்ளலார் இயற்றிய சீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல் மூன்று பிரிவுகளை உடையதாகும். சீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்பது முதற்பிரிவு ஆகும். ஆன்ம இன்ப வாழ்வு என்பது இந்நூலின் இரண்டாம் பிரிவு ஆகும். சீவகாருண்யத்தின் சொரூபம் முதலியன மூன்றாவது பிரிவு. இந்நூல் முற்றுப் பெறாதது நம் தவக் குறைவேயாகும்.

அருட்பிரகாச வள்ளலார் தம் வாழ்க்கையின் குறிக்கோளாக மேற்கொண்ட சீவகாருண்ய ஒழுக்கம் பற்றிய இவ்வுரைநடை நூல், முழுமை பெற்றிருக்கு மாயின் இப்பொருள்பற்றி அடிகளார் திருவுள்ளத்தில் தோன்றிய கருத்துக்கள் அனைத்தையும் நம்மனோர் உணர்ந்து பயன் பெறுதற்கு வாய்ப்பா யிருந்திருக்கும். காழிக் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய ஒழிவிலொடுக்க என்ற நூலை இராமலிங்க வள்ளலார் பதிப்பித்துள்ளார்.

வள்ளலார் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்வள்ளன்மலர்த் தாடலைமேல் வைத்துரைத்தானுள்ளத்தழிவிலடுக்குந்தேனை யன்பரெலா முண்ணஒழிவி லொடுக்கநூ லோர்ந்து

எனவரும் ஒழிவிலொடுக்கச் சிறப்புப் பாயிரப் பாடலுக்கு இராமலிங்க அடிகளார் பேருரை வரைந்துள்ளார்கள். இவ்விளக்கம் ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்தி யென்ற பெயரால் வழங்கப் படுகிறது. இப்பாடலில் வள்ளல் குருராயன் என்ற பெயர்கள் திருஞான சம்பந்தப் பிள்ளையாரைக் குறித்தனவாகும்.

குருராயன் என்பது திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்குச் சிறப்பிற் சிறப்பால் காரணப் பெயராய் நின்று ஓதியுணர்ந்து பன்னாள் பல சாதனங்களில் முயன்று முயன்று ஆசாரியத் தன்மை ஒருவாறு அரிதிற் கிடைக்கப் பெற்றும், ஒரோர் காலங்களில் அவத்தை வயப்பட்டு மயங்கும் மற்றை ஆசாரியார் போலாது ஓதாமல் வேதாக மாதிகளை முற்றுமுணர்ந்து இறைப்போதும் ஓர் சாதனங்களில் முயன்றதின்றி ஞானசாரிய அருள் இலக்கணங்கள் அனைத்தும் தாமே தம்பால் நிரம்பி நிற்ப அமர்ந்தனர் என்பதூஉம், ஓதியுணர்ந்த அவ்வாச்சாரியர்க்கெல்லாம் அவரவர் அறிவின்கண் அருவுருவாய் நின்று அறிவித்தும் ஆசாரிய உருவாய் வெளிநின்று அநுக்கிரகித்தும் நின்றனர் என்பதும், திருநோக்கம் செய்தல் முதலிய அறுவகைத் தீக்கையானும் அன்றித் தமது திருவுருவைக் காண்டல் நினைத்தல் மாத்திரையே பக்குவரல்லாரும் பக்குவராய்ப் பயன் பெற நின்ற திருவருட் பெருமையர் என்பதூஉம் குறித்த தென்றுணர்க. இங்ஙனம் ஓதாமல் வேதாக மமாதி உணர்ந்தமை முதலியவற்றை ஆசிரியர் கூறிய தன்மையு முன்னிலையும் என்னும் திருவெண்பாவாற் காண்க.

அல்லதூஉம், குருராயன் என்பதும் வாதுவென்ற சம்பந்தன் என்பதற்கு மேனிற்க வைத்த விதப்புக் குறிப்பால் பிள்ளையார் இவ்வவதாரத்தின் மேனின்ற அவதாரத்தினும் குமார சற்குருவாய் அரனார்க்கும், அகத்தியனார்க்கும், உபதேசித்தருளிய ஆசாரியத் தலைமையும் குறித்ததெனக் கொள்க. அருணகிரிநாதர்,

தென்னவனங் கனஞ்சூழ் காத்திரிநக சூலகரத்தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமும் பின்னதென்னவனங்கனன் னீற்றாற்றிருத்திய தென்னவின்னந்தென்னவனங்கனங்கைச் சிலைக் கூனையும் தீர்த்தருளே.

என்றதனால், பிள்ளையார் இவ்வவதாரத்திற்கு மேனின்ற அவதாரத்தில் குமாரசற்குரு வென்பது காண்க,

கல்லாடம்,
உழன் மதிற் சுட்ட தழனகைப் பெருமான்வணங்கி நின்றேத்தக் குருமொழி வைத்தோய்குருமணி தேற நெடுமறைவிரித்தோய்.
சித்தியார்.

அருமறை ஆகமம் அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாம் குருவை என்பவைகளால் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்த ஆசாரியத் தலைமையை உணர்க.

என இராமலிங்க வள்ளலார் ஆளுடைய பிள்ளையாரைக் குருராயன் என்ற பெயரால் காழிக்கண்ணுடைய வள்ளலார் குறித்தற்குரிய காரணத்தினை மேற்கோள் தந்து விளக்கியுள் ளார்கள். இவ்விளக்கம் இராமலிங்க வள்ளலாரது செந்தமிழ் உரைநடைத் திறத்திற்கும் பல நூல்களையும் ஒதாது உணர்ந்த புலமை நலத்திற்கும் சிறந்த இலக்கியமாகத் திகழ்தல் காணலாம்.

இராமலிங்க அடிகளார் காழிக்கண்ணுடைய வள்ளலார் இயற்றிய ஒழிவில் ஒடுக்கத்திற்குப் பேருரை வரையத் தொடங்கியதன் காரணம் கண்ணுடைய வள்ளலார்பால் இராமலிங்க அடிகளாருக் குள்ள பேரீடுபாடே யாகும்.

அடிகளார் பரப்ப எண்ணிய சீவகாருண்ய ஒழுக்கத்திற்கும், ஆழ்ந்த முடிவின் அனுபவ நிலைக்கும் நிலைக்களனாகத் திகழ்வன காழிக்கண்ணுடைய வள்ளலார் சிவஞான வள்ளார் ஆகியோர் நூல்களாகும்.

இவ்வுண்மை, வள்ளலார் சாத்திரங்களில் ஒன்றாகிய ஞான விளக்கம் என்ற நூலில் சீவகாருண்ய விளக்கம், இடம் பெற்றிருத் தலாலும், உபதேச மாலை என்ற நூலில் கொல்லா விரதத்தின் இன்றியமையாமை விரித்துரைக்கப் பெறுவதாலும்,

சித்தாந்தம் வேதாந்தம் செப்புதத்து வாந்தமிசைபுத்த கலாந்தமொடு போதாந்தஞ் சுத்தமாநாதாந்த மென்றிவைக ளாறு நவையென்றேமீதானந் தேடி விடு.

(வள்ளலார் சாத்திரம் உபதேசமாலை – 40)

எனவரும் பாடலில் ஆறந்த உபதேசம் இடம்பெற்றிருத்தலாலும் நன்கு துணியப்படும்.

காழிக் கண்ணுடைய வள்ளலார் ஞானசம்பந்தப் பிள்ளை யாரைக் குருவாகக்கொண்டு ஒழுகியது போலவே இராமலிங்க அடிகளாரும் ஞானசம்பந்தரைக் குருவாகக் கொண்டு வழி பட்டமையாலும் இருவர்க்கும் வள்ளல் என்ற சிறப்புப்பெயர் வழங்கி வருவதாலும், காழிக் கண்ணுடைய வள்ளலார் நூல்களுக்கும் அருட்பிரகாச வள்ளலார் திருவருட்பாவுக்கும் நெருங்கிய தொடர் பிருத்தல் வேண்டும் என எண்ண வேண்டி யுள்ளது.

இராமலிங்க வள்ளலார் தொண்டைமண்டலசதகம் என்பதற்குத் தொண்டமண்டலம் என்னும் பெயர் இலக்கணமும் வழிபடுகடவுள் வணக்கப் பாட்டுரையும் வரைந்து அந்நூலைப் பதிப்பித்துள்ளமை பலரும் அறிந்த செய்தியாகும்.

திருத்தொண்டர் வரலாற்றினைக் காப்பியமாக இயற்ற வெண்ணியசேக்கிழார் அடிகட்குத் தில்லையம்பலவாணர் – முதலாக எடுத்துக் கொடுத்தருளிய மொழி உலகெலாம் என்பதாகும். இறைவனது அருள்வாக்காகிய உலகெலாம் என்னும் மெய்ம் மொழியாற் கட்டப்பட்ட பொருளைப் பல்லாற்றானும் விரித்து விளக்கும் முறையில் இராமலிங்க வள்ளலார் எழுதிய உரைநடை நூல் உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் என்பதாகும்.

சுவை, யொளி, ஊறு, ஓசை நாற்றமென் றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகு (திருக்குறள் – 27)

எனத் திருவள்ளுவரும்

வனந்தம் மண்ணினந்தம் வைத்து வைத்துப் பார்க்க எனக்குஆனந்தம் தந்த அரசே பராபரமே (பராபரக்கண்ணி – 13)

எனத் தாயுமானாரும் கூறிய வண்ணம், தத்துவங்களின் அமைப்பில் உலகங்களைப் பல்வேறு வகையாக வள்ளலார் வகுத்துக் காட்டி யுள்ளார். இவ்வாறு ஒரு பொருளைப் பல்வேறு வகையாகப் பகுத்துக் காணும் அடிகளாரது கற்பனைத் திறத்திற்கு இவ்வுரை நடைநூல் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.

வள்ளலார், தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரையும் மூலிகைக் குண அட்டவணை முதலிய மருத்துவக் குறிப்புக்களும் நித்தியகருமவிதி என்னும் நூலும் உபதேசக் குறிப்புக்களும், சுப்பிரமணியம், அருள் நெறி, திருவருள் மெய்ம்மொழி, பேருபதேசம் என்னும் கட்டுரைகளும் மக்கள் இம்மையினும், மறுமையினும் இன்பம் பெறுதற்குரிய சிறந்த பொருள்களை அறிவுறுத்தும் உரைநடை நூல்களாகும்.

சாதிசமய வேறுபாடின்றி மக்கள் எல்லோரும் எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய இறைவன் திருமுன் நின்று வழிபடும் நிலையில் இறைவனைநோக்கி, எல்லோரும் சேர்ந்து நின்று ஒரு குரலாக வேண்டும் வேண்டு கோளாக அமைந்தன.

1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்.

2. சமரச சுத்த சன்மார்க்கச் சத்தியப் பெரு விண்ணப்பம்.

3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்.

எனவரும் உரைநடை விண்ணப்பங்களாகும். இவ்விண்ணப் பங்கள் உலகமக்கள் அனைவரையும் ஒரு குடும்பத்தவராகவும், ஆருயிர்கள் அனைத்தையும் ஓரினமாகவும் உலக முதல்வனை அம்மையப் பனாகவும் கொண்டு எல்லா உயிர்களிடத்தும் இரக்க முடையராய் வாழும் வண்ணம் அருட் பிரகாச வள்ளலார் திருவுள்ளத்திற் கருதி வகுத்தருளிய அருளியல் வாழ்க்கையின் ஒழுங்குமுறையினை நன்கு வற்புறுத்துவன. இத்தகைய நல்வாழ்க்கைக்கு அரண் செய்யும் வண்ணம் இறைவனது திருவருளை வேண்டும் முறையில் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், சீவ ஒழுக்கம், ஆன்ம வொழுக்கம் ஆகியவற்றின் இன்றியமையாமையை வற்புறுத்தும் முறையில் இவை அமைந்துள்ளமை காணலாம். இவ்விண்ணப்பங்களை ஊன்றிச் சிந்திப்பவர்கள் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கியமாக வாழ்ந்தவர், அருட்பிரகாச வள்ளலார் என்பதனை நன்குணரப் பெறுவர் என்பது திண்ணம்.

நான்காவது உரைநடை விண்ணப்பமாக அமைந்தது, ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கச் சத்திய’ விண்ணப்பம். இது, வள்ளலார் வகுத்த சமரச சன்மார்க்க சத்திய சங்கத்தின் உறுப்பினராகிய அன்பர்கள் அனைவரும் வடலூர்ப் பெருவெளியில் உள்ள சுத்த சிவானுபவ ஞான சபையில் ஒருங்குகூடி அருட்பெருஞ்சோதி ஆண்டவரை முன்னிலைப்படுத்தி வேண்டும் சிறப்புடைய விண்ணப்பமாகும். இவ்விண்ணப்பத்தில் மக்கள் அடைதற்குரிய தேக சுதந்தரம், போக சுதந்தரம், ஜீவ சுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும், நீங்கிய இடத்தேதான் இவற்றிற்கு மேலாகிய திருவருட் சுதந்தரம் நமக்குக் கிடைக்கும் என்ற உண்மை நன்கு வலியுறுத்தப் பெற்றுள்ளமை காணலாம்.

அருட்பிரகாச வள்ளலார், தம்பால் அன்புடைய மாணவர் கட்கும், பெருமக்கட்கும், அறிஞர்கட்கும், தம் திருக்கரத்தில் வரைந்த கடிதங்களாகிய திருமுகங்கள் அடிகளாரது தெளிந்த தமிழ் உரைநடைத் திறத்தினையும், தம்பால் அன்புடையவர்களது நல்வாழ்க்கையில் அடிகளார் கொண்டிருந்த ஈடுபாட்டினையும், தம் அன்பர்கள் வறுமையாலும் பிணியாலும் துன்புற்ற நிலையில் அத்துன்பங்களைக் களையும் திறத்தில் இரக்கவுணர்வுடைய வள்ளலார் மேற்கொண்ட இறையருள் வழிப்பட்ட முயற்சி யினையும் நன்கு புலப்படுத்தும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம். இத்திருமுகங்களை ஊன்றி நோக்குவோர் இறைவன் திருவருள்வழி அன்றி எதனையும் செய்ய முற்படாத வள்ளலாரின் உள்ளப் பாங்கினையும், தம்பால் அன்புடையோருடைய வேண்டு கோளையும் மறுக்காது உடன்படும் நிலையில் வள்ளலாருக்கிருந்த கண்ணோட்டத்தினையும் தெளிவாக உணரப் பெறுவார்கள்.

இராமலிங்க வள்ளலார், தமது குறிக்கோளாகிய சீவகாருண்ய ஒழுக்கத்தினை மக்களிடையே பரப்புதல் வேண்டிச் சமரச வேத தர்மசாலை தொடங்கும் பொழுது, சாலைத் தொடக்க விழா அழைப்பாகவும், சாலை விளம்பரமாகவும், சாலை அன்பர்களுக்கு இட்ட கட்டளையளாகவும், ஞானசபை விளம்பரமாகவும், சபையில் உள்ளார்க்கு இட்ட ஒழுக்கக் கட்டளையாகவும், சன்மார்க்கப் பிரார்த்தனையாகவும், சபை வழிபாட்டு விதியாகவும் சித்திவளாக அமைப்பும் அதுபற்றிய வழிபாட்டு விதியாகவும் உரைநடையில் பல்வேறு விண்ணப்பங்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

சன்மார்க்க சங்கக் கொள்கைகளைப் பரப்புதற் பொருட்டு சன்மார்க்க விவேக விருத்தி என்னும் பத்திரிகை ஒன்றினையும் தொடங்கியுள்ளார்கள்.

இளைஞர் முதல் முதியோர்வரை யாவர்க்கும் சன்மார்க்க நெறியைப் போதிக்கும் நிலையில் சன்மார்க்க போதினி, என்கிற சாத்திரப் பாடசாலை ஒன்றினையும் தொடங்கி நடத்த எண்ணி இருந்தார்கள்.

இவ்வாறு மாணாக்கர் பலருக்கும் உயர்ந்த நூல்களைப் பாடஞ் சொல்லியும், ஒழிவிலொடுக்கம், சின்மய தீபிகை போன்ற தத்துவ நூல்களை விளக்கக் குறிப்புடன் சிறந்த முறையில் பதிப்பித்தும், சீவகாருண்ய ஒழுக்கம் பற்றியும் சன்மார்க்க நெறி பற்றியும் பொதுமக்கள் நன்குணர்ந்து கொள்ளும் முறையில் பத்திரிகை தொடங்கியும், தம்மை அடைந்தோர்களின் ஐயங் களைப் போக்கி மெய்யுணர்வளித்தும் இவ்வாறு நூலாசிரிய ராகவும், உரையாசிரியராகவும் போதகாசிரியராகவும், ஞானாசிரி யராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும் விளங்கிச் செந்தமிழ் வளர்த்த பெருந்தவச் செல்வர் வடலூர் இராமலிங்க வள்ளலார் ஆவார் என்பதனைத் தமிழ் உலகம் நன்கு உணர்தல் வேண்டும்.

சன்மார்க்க நெறி கண்ட சான்றோராகிய இராமலிங்க வள்ளலார், பாட்டும் உரையுமாக வளர்த்த செந்தமிழ், சாதி சமய வேறுபாடற்ற நிலையில் உலக மக்கள் எல்லோரையும் ஒரு குடும்பத்தாராக அன்பினால் ஒத்து வாழும் முறையில் ஒன்று படுத்தும் ஆற்றல் வாய்ந்த தாகும்; சிந்தனைக்கெட்டாத சிவபரம் பொருளை நாட்டு மக்கள் உள்ளத்திலே நிலைபெறச் செய்து உலகமக்களில் ஒத்தார், உயர்ந்தார், தாழ்ந்தார் என்னும் வேறுபா டின்றி ஒருமையுணர்வினராகி உலகியல்லாட்சியை நடத்தும் உரிமை வாழ்வினைத் தரும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

சிவயோகியராகிய திருமூலநாயனார் முதல் தாயுமான அடிகள் ஈறாகத் தமிழகத்தில் வாழ்ந்த ஞானச் செல்வர்கள் அருளிய நூல்களிற் கூறப்பட்ட தத்துவ உண்மைகளும், அருள் அநுபவங்களும் ஆகியவற்றின் தெளிவாகத் திகழ்வது, வள்ளலார் வளர்த்த செந்தமிழ் எனக் கூறுதல் பொருந்தும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் எனவும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனவும், நம் தமிழ் முன்னோர்கள் அறிவுறுத்திய உலக ஒருமைப்பாட்டினை மீண்டும் நிலைபெறச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது, வள்ளலார் வளர்த்த செந்தமிழே எனக் கூறுதல் பொருத்தமுடையதாகும்.

அருணகிரிநாதர், தாயுமானவர் முதலிய அருளாளர்கள் பாடிய பாடல்களைச் சேய்மையில் இருந்து கேட்போர் இப்பாடல் இன்னார் பாடியது என இனந்தெரிந்து கொள்ளுமாறு போலவே, இராமலிங்க வள்ளலார் பாடிய பாடல்களைக் கேட்போர் இப்பாடல் திருவருட்பாவைச் சேர்ந்தது என இனம்புரிந்து கொள்ளும்படி தமக்கென ஒருமொழி நடையை உருவாக்கிக் கொண்ட சிறப்பு வள்ளலார்க்கு உரியதாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *