திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

5. பசிப்பிணி மருத்துவர்

உடம்போடு கூடிய உயிர்கள் எல்லாவற்றிற்கும் பொது வாயமைந்தது பசியாகும். இது உயிர்கள் கருவாய்ப் பதிந்த நாள் தொட்டு அவ்வுயிரது உடம்பின் உள்ளே நிலைபெற்று, உடல் வளர்ச்சிக்குள்ள உணவினைப் பக்குவப்படுத்தி செரிக்கச் செய்யும் தீயாகும். உடல் வளர்ச்சிக்கு வேண்டிய உணவினை அவ்வப்பொழுது பக்குவப்படுத்தி நிற்கும் பசியாகிய இத்தீயானது, உரிய காலத்தில், உடலுக்குத் தர வேண்டிய உணவு உரிய காலத்தில் தரப்பெறாத நிலையில் வயிற்றின் உள்ளிருந்து மூண்டு வெதுப்புவது; உயிர்களின் கருவி கரணங்களைத் தளர்ச்சியுறச் செய்தல் இத் தீயின் செயலாகும். எனவே உடம்பொடு கூடிய உயிர்கள் இத்தகைய பசித்தீத் தணிய உரிய காலத்தில் உணவினை உட்கொள்ளுதல் இன்றியமையாத தாயிற்று. உணவினை முதலாகக் கொண்டதே உயிர்கள் பெற்றுள்ள உடம்பாகும். இத்தகைய உணவினைப் பெறவியலாது மக்கள் பசியால் வருந்திய பொழுது அவர்களுக்கு வேண்டிய உணவினைக் கொடுத்தவர்கள், அவர்தம் உடம்போடு உயிரை நிலைத்திருக்கச் செய்தமையால், அவர்கள் உயிர் கொடுத்தவராகவே மதித்துப் போற்றப் பெறுவர். இங்கு உணவெனப்படுவது நிலமும் நீரும் விரவிய நிலையில் விளையும் நெல் முதலிய தானியங்களும், காய்கனிகள் முதலியனவுமாகும். மக்களுக்கு இன்றியமையாத உணவுப் பொருள்களை விளைவிக்கும் நோக்குடன் நீரையும் நிலத்தையும் ஒரு வழிக்கூட்டி வளம்பெறச் செய்தவர்கள், இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவர் எனப் பாராட்டப் பெறுவர். இவ்வுண்மை,

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
உண்டி முதற்றே உணவின் பிண்டம்உணவெனப் படுவது நிலத்தொடு நீரே,
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டுஉடம்பும் உயிரும் படைத்திசி னோரே. (புறம். 18)

எனக் குடபுலவியனார் என்னும் புலவர் பாண்டியன் நெடுஞ் செழியனைப் பாடிய புறநானூற்றுப் பாடலில் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

வறியோராகிய மக்கள் உணவு பெறாது பசித் தீயால் வாட்டமுற்ற போது பொருளுடைய செல்வர்கள், அவர்களுக்கு வேண்டும் உணவு அளித்து அவர்தம் பசித்தீயைத் தணிவித்தல் வாழ்வியல் அறமாகும். பொருளை ஈட்டியவர்கள் தாம் ஈட்டிய பொருளைச் சேமித்து வைக்கும் நிதிக்களமாக (வங்கித்) திகழ்வது, பசி தீர்த்தலாகிய அவ்வறமேயாகும். இவ்வுண்மையினை,

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள் வைப்புழி. (குறள் – 226)

எனவரும் திருக்குறளில் திருவள்ளுவர் விளக்கியுள்ளமை காணலாம். (அற்றார் – பொருளற்றாராகிய வறியவர்கள்)

உயிர்களின் பண்பு நலன்களும் கருவி கரண இயக்கங்களும் அழிய உயிர்க்கு இறுதி தரும் நிலையில் வருவது பசி நோயாதலால் அழி பசி என்றார் திருவள்ளுவர்.

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்நாணணி களையு மாணெழில் சிதைக்கும்பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்பசிப்பிணி யென்னும் பாவி

(மணிமேகலை – பாத்திரம் பெற்ற காதை 76-80)

எனவரும் மணிமேகலைத் தொடர் மேற்குறித்த அழிபசி என்னும் திருக்குறள் தொடருக்குரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவம்உயர்ச்சி தாளாண்மை தேனின்கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்பசிவந்திடப் போம் பறந்து. (நல்வழி – 26)

எனவரும் ஔவையார் வாய் மொழியும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. பசி நோயானது, இவ்வுடம்பின் உள் நின்று உயிர்களின் ஞான ஒழுக்கங்கள் யழித்து அதனால் இனிவரும் உடம்புகளுக்கும் துன்பம் செய்தலின் பசி யென்னும் தீப்பிணி என்றார் திருவள்ளுவர்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்தீப்பிணி தீண்ட லரிது. (திருக்குறள் – 227)

எனவரும் திருக்குறள், உணவுண்ணப் புகுவோர், தம்மையடுத்த ஏழை எளியவர்களின் பசித்தீத் தணியத் தம்மிடத்துள்ள உணவுப் பொருளைப் பகுத்தளித்து உண்ணுதல் வேண்டும் எனவும், அவ்வாறு வறியவர்க்குப் பகுத்தளித்து எஞ்சியதை உண்பாரைப் பசி யென்று சொல்லப்படும் தீய நோய் தீண்டுதல் இல்லை எனவும் அறிவுறுத்துகின்றது.

அதிகமான் நெடுமான் அஞ்சி, என்னும் வள்ளல் தான் உண்ணத் தொடங்கும் போது சிறிய அளவுடைய சோறாயிருந்தாலும் அதனை மிகப் பல உண்கலங்களிலும் பகுத்துப் படைத்துப் பலரோடும் உடனிருந்து உண்பான் எனவும், மிக்க அளவினையுடைய சோறாயிருந்தாலும் அதனைப் பல உண்கலன்களிலும் படைத்துப் பலரோடு உண்பான் எனவும், அவ்வாறு பகுத்துண்ணுதலாகிய அறத்தினையுடைய அவ்வள்ளல் நம்மைவிட்டுப் பிரிந்தனனே எனவும், செயலற்று இரங்கும் நிலையில்,

சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னேபெருஞ் சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே (புறம் – 235)

என ஔவையார் வருந்திப் பாடியுள்ளார்.

சோறு எல்லார்க்கும் பொதுவாதலால் சிற்றளவுடைய சோறாயினும் அதனைப் பல உண்கலன்களிலும் பகுத்துப் பலரோடும் உடனிருந்து உண்பன், அத்தகைய பெரியோன் இன்று இல்லையே. மிக்க அளவினையுடைய சோறாயினும் அதனைப் பல உண்கலன் களிலும், பகுத்துப் பலரோடும் உண்பன், அத்தகைய நெடுமான் அஞ்சி இன்று நம்மைவிட்டுப் பிரிந்தனனே என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். இதனால் தன்னிடமுள்ள உணவுப் பொருள் சிறிய அளவினதாயினும் பெரிய அளவினதாயினும் பசியால் வருந்துவோர் பலர்க்கும் பகுத்தளித்து உண்ணும் பகுத்துண்டலாகிய நல்லறத்தைத் தன் வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகியவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்னும் வள்ளல் என்பது புலப்படுத்தப்பட்டமை காணலாம்.

எல்லா நூல்களிலும் கூறப்படும் நல்லறங்களைத் தொகுத் தெடுத்து எல்லா மக்களுக்கும் பொதுப்படக் கூறும் அறநூலாசிரிய ராகிய திருவள்ளுவர், கொல்லாமை என்னும் நல்லறத்தை விளக்கும் அதிகாரத்தில் கொல்லாமையாகிய அறத்திற்கு அடிப்படை யாயமைந்தது பகுத்துண்ணுதலாகிய இவ்வறமே என்பதனை,

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்தொகுத்தவற்று ளெல்லாம் தலை (திருக்குறள்-322)

எனவரும் திருக்குறளில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

உண்ணுதற்குரிய உணவினைப் பசியால் வருந்திய உயிர் களுக்குப் பகுத்துக் கொடுத்து எஞ்சியதனைப் பின் தான் உண்டு, எல்லா உயிர்களையும் சோர்ந்தும் இறப்பு நேராமல் குறிக்கொண்டு பாதுகாத்தல் அறநூலுடையார் தொகுத்த நல்லறங்கள் எல்லா வற்றுள்ளும் முதன்மையாகிய அறமாகும் என்பது மேற்காட்டிய குறளின் பொருளாகும்.

இதனால் கொல்லாமையாகிய அறத்திற்குப் பகுத்துண்ணு தலாகிய அறம் அடிப்படையாய் அமைந்த உண்மை நன்கு புலப்படுத்தப் பெற்றமை காணலாம்.

தவச் செல்வர்களுக்குரிய வலிமையாவது, தம்மையுற்ற பசிப்பிணியைப் பொறுத்துக் கொள்ளுதல். அத்தகைய தவ வலிமையும் வறியோரது பொறுத்தற்கரிய பசியைத் தமது பகுத்துண்ணும் அறத்தால் ஒழிப்பாரது வலிமைக்குப் பிற்பட்டதேயாகும். தாமும் பசியால் வருந்திப் பிறரது பசி வருத்தத்தையும் தீர்க்க மாட்டா தாராகிய தவச் செல்வர்களது வலிமையைக் காட்டிலும் தாமும் பசியால் வருந்தாது பிறரது பசிப்பிணியையும் தீர்ப்பாராகிய இல்லறத்தராது வலிமை மிகவும் சிறந்த தென்பது இக்குறளால் நன்கு வலியுறுத்தப்பட்டது.

ஊண், உடை, உறையுள் என்பனவற்றை நாடிப் பெறும் முயற்சி, வாழ்க்கையின் முதற்படியாகும். வயிறார உண்டு மகிழ்தலே எல்லாருடைய விருப்பமாகும். அருளும் ஆற்றலும் நிரம்பிய பெருவள்ளல்கள் பசியால் துன்புறும் எளியவர்களுக்கு வேண்டும் உணவளித்து அவர்களை ஊக்கத்துடன் உழைக்கும் நல்லுணர் வுடையவர்களாகச் செய்தார்கள். தங்களை அடைந்தவர்களுடைய வயிற்றுப் பசியைத் தணித்தலே இவ்வள்ளல்களின் வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்தது. பரிசிலர் சுற்றத்துப் பசிப்பகையாகி விளங்கிய இவ்வள்ளல்களை நாடாளும் மன்னர்களும் பாராட்டிப் போற்றினார்கள். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சியில் சோழநாட்டில் உள்ள சிறுகுடி என்னும் ஊரின் தலைவனாய் விளங்கிய பண்ணன் என்பான், பசியால் வருந்தி வரும் எளியவர்களுக்குப் பெருஞ்சோறு கொடுத்துப் போற்றி வந்தான். பிறர் வறுமை நோக்கி உதவும் பண்ணனது பேரறச் செயலை வேந்தர் பெருமானாகிய கிள்ளிவளவன் கேள்வி யுற்றான். பண்ணன் வாழும் சிறுகுடிக்குச் சென்று அவனுடைய நல்லறச் செயல்களைப் பாராட்டி மகிழ வேண்டுமென எண்ணித் தானும் ஒரு பரிசிலன் போல் அவனுடைய சிறுகுடிக்குப் புறப்பட்டுச் சென்று அவ்வூரின் எல்லையை அடைந்தான். புது வருவாயை யுடையதாகிய பழுத்த மரத்தின் கண்ணே பறவைக் கூட்டம் ஒலித்தாற் போன்று பண்ணனது மனையிற் பெருந்திரளாகக் கூடியுண்ணும் மக்களின் ஆரவாரம் அவ்வூருக்கு நெடுந்தொலை விலேயே கேட்டது. மழை பெய்யுங் காலத்தை முன்னறிந்து தம் முட்டைகளை மேட்டு நிலத்திற்குக் கொண்டு செல்லும் சிறிய எறும்புகளின் வரிசை போன்று பண்ணன் வீட்டில் பெரிய சுற்றத் தினருடன் கூடியுண்ட சிறு பிள்ளைகள் அடுத்த வேளைக்குப் பயன்படும்படி தங்கள் கைகளிலே சோற்றுத் திரளைக் கொண்டு செல்லும் அழகிய தோற்றத்தினைக் கிள்ளிவளவன் தன் கண்ணாரக் கண்டான். பண்ணன் இரவல்பால் வைத்த அருளுடைமையை எண்ணி மனமுருகிய மன்னன், யான் உயிர் வாழும் நாளையும் தனக்குரிமையாகப் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக எனப் பாராட்டி வாழ்த்தும் நிலையில்,

யான்வாழு நாளும் பண்ணன் வாழியபாணர் காண்கிவன் கடும்பின திடும்பையாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்னஊணொலி யரவந் தானுங் கேட்கும்பொய்யா வெழிலி பெய்விட நோக்கிமுட்டை கொண்டு வற்புலஞ் சேரும்சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கேய்ப்பச்சோறுடைக் கையர் வீறுவீ றியங்கும்இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும்மற்று மற்றும் வினவுதுந் தெற்றெனப்பசிப்பிணி மருத்துவ னில்லம்அணித்தோ, சேய்த்தோ கூறுமி னெமக்கே (புறம் – 173)

எனவரும் பாடலைப் பாடியுள்ளான்.

‘யான் உயிர் வாழும் நாளையும் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக. பாணரே! காண்பீராக இந்தப் பரிசிலனது சுற்றத்தின் வறுமையை, புது வருவாயை யுடைத்தாகப் பழுத்த மரத்தின் கண்ணே புள்ளினம் ஒலித்தாற் போன்ற ஊணாலுண்டாகிய ஆரவாரந்தானும் இவ்வூர்ப்புறத்தே கேட்கின்றது. பருவந்தப்பாத மழை பெய்யுங் காலத்தைப் பார்த்துத் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தினை யடையும் மிகச்சிறிய எறும்பினது சிலவாகிய வரிசையை யொப்பச் சோறுடைக் கையினராய் வேறு வேறு போகின்ற பெரிய சுற்றத்தோடும் கூடிய பிள்ளைகளைக் காண்கின்றோம். கண்டு வைத்தும் எம்பசி வருத்தத்தானும் வழிவரல் வருத்தத்தானும் பின்னரும் பின்னரும் விதுப்புற்று (மனத்தின் விரைவுற்று)க் கேளாநின்றேம் பசிநோய் தீர்க்கும் மருத்துவனது மனை அணித்தோ? சேய்மைக் கண்ணதோ? எங்களுக்குத் தெரியச் சொல்லுமின்’ என்பது இப்பாட்டின் பொருளாகும்.

ஒருவருடைய இயல்புகளைக் கூறி வாழ்த்துவோர், ஆயிரம் வெள்ளம் வாழ்க என்றது போலத் தம்மனம் விரும்பிய அளவு வாழ்த்துதல் உலகியலிற் பெரும்பாலும் நிகழும் வாழ்த்தியல் முறையாகும். மக்கள் கருவாய்ப் பதிகின்ற அன்றே அவர்களுக்குரிய வாழ்நாளும் வரையறை செய்யப் பெற்றனவாதலின் அதற்கு மேலும் பல ஆண்டுகள் வாழ்கவென வாழ்த்துதல் நிலை பேறுடைய வாழ்த்தாகாதென எண்ணிய புலவர் சிலர், ஊழால் நினக்கு வரையறுக்கப்பட்ட நாள் முழுதும் இனிதாக இருப்பாயாக என வாழ்த்துதலும் உண்டு. இவ்விரு வகை வாழ்த்துக்களிலும் வாழ்த்து வார்க்கு வரும் இழப்பெதுவுமில்லை ஆனால் பசிப்பிணி மருத்துவனாக விளங்கிய பண்ணனை வாழ்த்தக் கருதிய கிள்ளிவளவன், தனக்குத் தெய்வத்தால் வரையறுக்கப்பட்ட வாழ்நாட் பகுதியில் இதுகாறும் கழிந்தன போக இனி எஞ்சியிருக்கின்ற நாளையும் பண்ணன் தன்வாழ் நாட்களுடன் சேர்த்துப் பெற்று இனிது வாழ்வானாக என வாழ்த்துகின்றான். இச்செயல், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாகிய பண்ணனது ஈகைத் திறத்தையும், அவன் செய்யும் அறச் செயல்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து உள்ளமுருகிய வேந்தர் பெருமானாகிய கிள்ளிவளவனது விரிந்த உள்ளத்தின் உயர்வையும் நன்கு தெளிவிப்பதாகும்.

நுகர்தற்குரிய இனிய உணவுகளைப் பெற்ற பொழுது அவற்றை யாமே தனித்து உண்போம், எம்மிடத்துக் கொண்டு வந்து தருக என்று உணவுப் பொருள்களிலே விருப்பமுடையோர் கூறுவர். அங்ஙனம் கூறும் தன்னலத்தினைத் துறந்த தூய நெஞ்சம் உடையவர்களே தம்மிடமுள்ள பொருளைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துண்ணும் ஆண்மையுடையவராவர். தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெற்றியினையுடைய இப்பெருமக்களே பிறர்க்குப் பகுத்துண்ணுதலாகிய அறத்தால் நாட்டு மக்களது பசிப்பிணியை நீக்க வல்ல பேராண்மை படைத்தவராவர். காப்பியாற்றுக் காப்பியனாரென்னும் புலவர், களங்காய்க்கண்ணி நார் முடிச் சேரல் என்னும் வேந்தர் பெருமானை நோக்கி,

உலகத்தோரே பலர்மற் செல்வர்எல்லா ருள்ளுநின் னல்லிசை மிகுமே
… …. …. …. …. …. ….
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்தருகென விழையாத் தாவி னெஞ்சத்துப்பகுத் தூண் டொகுத்த வாண்மைப்பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே. (பதிற்றுப்பத்து – 38)

எனப்பாடிய இப்பாடலில் சேரலாதனாகிய வேந்தன் தன்பாலுள்ள உணவுப் பொருள்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்துப் பசியால் வருத்தமுற்ற பலர்க்கும் பகுத்தளித்தலால் பசிப்பிணியை அகற்றிய பேராண்மை படைத்தவன் என்பதனையும், இவ்வாறு பகுத் துண்ணலாகிய இவ்வறத்தால் தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெருமகனாகிய இவன் உலகில் வாழும் செல்வமுடையா ரெல்லாருள்ளும் சிறந்த புகழுடையானாகத் திகழ்கின்றான் என்பதனையும் விரித்துக் கூறியுள்ளார்.

‘வறியோர்க்குப் பகுத்துண்ணுதலாகிய அறச்செயல் மன்னர்கள் முதலிய பெருஞ்செல்வர்களால் மட்டுமின்றி ஏழை எளிய மக்களாலும் நாளும் மேற்கொள்ளுதற்குரிய எளிமை யுடையதே என்பதனை,

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

(திருமந்திரம் 252)

எனத் திருமூல நாயனார் அருளிய திருமந்திரத் தொடரால் நன்கு உணரலாம்.

திருஞானசம்பந்தப் பிள்ளையாரும், திருநாவுக்கரசரும் அடியார் திருக்கூட்டத்தோடு திருவீழிமிழலையில் தங்கியிருந்த போது பெரும்பஞ்சம் உண்டாயிற்று. அப்போது வீழிமிழலைப் பெருமான் அவ்விருவர் கனவிலும் தோன்றி, ‘இப்போது ஏற்பட்டுள்ள பஞ்சத்தால் நீங்கள் உங்கள் பசிகருதிச் சிறிதும் மனவருத்தம் அடைய மாட்டீர்களாயினும் உங்களை வழிபட்டு வரும் அடியார்கள் கூட்டத்தின் பசிநோயை அகற்றுதல் வேண்டி நாள்தோறும் உங்கள் இருவர்க்கும் படிக்காசு அளிக்கின்றோம் எனக் கூறியருளி அவ்விருவர்க்கும் நாள்தோறும் படிக்காசு அளித்தருளினன் என்பதும், நாளும் படிக்காசு பெற்ற அவ்விருவரும் அக்காசினைக் கொண்டு உணவுப் பொருள் வாங்கித் தங்கள் திருமடத்தில் அடியார் அனைவர்க்கும் பகலுமிரவுமாகிய இருபொழுதிலும் பசிதீரத் திருவமுது படைத்தனர் என்பதும் திருத்தொண்டர் புராணத்திற் கூறப்படும் வரலாற்று நிகழ்ச்சியாகும்.

அல்லார் கண்டத் தண்டர்பிரான்அருளாற் பெற்ற படிக்காசுபல்லா றியன்ற வளம்பெருகப்பரமனடியார் ஆனார்கள்;
எல்லாம் எய்தி உண்கவெனஇரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச்சொல்லாற் சாற்றிச் சோறிட்டார்துயர்கூர் வறுமை தொலைத் திட்டார்.

(பெரிய- திருநாவுக்கரசர் 259)

எனவரும் சேக்கிழார் வாய்மொழி, பொருட் சார்பு பெறாத அடியார்களின் பசித்துன்பத்தினை இறைவனது அருட்சார்பினால் நீங்கியருளிய சம்பந்தர் திருநாவுக்கரசராகிய பெருமக்கள் இருவரது தொண்டின் திறத்தினை விரித்துரைத்தல் காணலாம்.

பிற உயிர்கள் படும் துன்பத்தினைக் கண்டால் அறிவுடைய நன்மக்கள் உள்ளத்திலே இரக்கவுணர்வு தன்னியல்பில் தோன்றுவ தாகும். இத்தகைய இரக்கங் காரணமாகப் பிற உயிர்களின் துயரங்களைப் போக்குதற்கு முற்பட்டு முயலும் அருளாளர்களின் கருணைத் திறம் கொல்லாமை, புலாலுண்ணாமை ஏழைகளின் பசி தீர்த்தல் என்னும் இம் மூவகை அறங்களினும் படர்ந்து செயற்படுவதாகும்.

மேற்குறித்த மூவகை அறங்களுள்ளும் பொருட் செல்வம் உடையோர், ஏழைத் தொழிலாளர், முதலிய பலதிற மக்களும் தம் வாழ்வில் எளிதிற் கடைப்பிடித்தற்குரிய தலைசிறந்த அறமாகத் திகழ்வது, பசியால் வாட்டமுற்றவர்களின் பசிப்பிணியைத் தீர்த்தலாகிய அன்னதானம் ஒன்றேயாகும்.

பசித்தோர்க்கு உணவளித்தலின் இன்றியமையாமையினை அருட்பிரகாச வள்ளலார் தாம் இயற்றிய சீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூலில் பின் வருமாறு விரிவாக விளக்கியுள்ளார்.

பசியினால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதில் வருமின்பம் பர இன்பமாகும். அவை இம்மையில் யோகசித்திகளாலும், ஞானசித்திகளாலும் வருகின்ற இன்பங்களும் முடிவில் அனுபவிக்கப்படும் மோட்ச இன்பமும் ஆகுமென்றறிய வேண்டும். உண்பதற்கு ஆகாரமில்லாமல் சோர்வடைந்த சீவர்களுக்குச் சீவகாருண்யத்தால் ஆகாரம் கொடுக்க உண்டு பசி நீங்கிய தருணத்தில், அந்தச் சீவகர்களுக்கு அகத்தினிடத்தும், முகத்தினிடத்தும் தழைத்துப் பொங்கித் ததும்புகின்ற இன்பமும், அது கண்ட போது கொடுத்தவர்களுக்கு அகத்திலும் முகத்திலும் அவ்வாறுண்டாகிற இன்பமும், ஆன்ம சகிதமாகிய கடவுள் கரணத்தில் பூரணமாகத் தோன்றுகின்றவை யாதலால் பர இன்பம் என்றறிய வேண்டும்.

வஸ்திரம், இடம், நிலம், பொன், பொருள் முதலானவைகள் இல்லாமல் துன்பப் படுகின்றவர்கள், அத்துன்பங்களை மன எழுச்சியால் சகித்துக் கொண்டு உயிர் தரித்துத் தங்களால் செய்யக் கூடிய முயற்சியைச் செய்யக்கூடும். பசியினால் துன்பம் நேரிட்ட போது, மன எழுச்சியால் அத்துன்பத்தை சகித்துக் கொள்ளக் கூடாது சகிக்கத் தொடங்கில் உயிரிழந்து விடுவார்கள். பசி நேரிட்ட போது பெற்றோர்கள், பிள்ளைகளை விற்றும் பிள்ளைகள் பெற்றோர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும் அந்தப் பசியினால் வரும் துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்களென்றால், அன்னியமாகிய வீடு, மாடு, நிலம், உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வார்களென்பது சொல்ல வேண்டுவதில்லை. உலக முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும் பசி நேரிட்ட போது தனது அதிகார உயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால், பசி நேரிட்டது, என்ன செய்வது? என்று அருகிலிருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்கிறான். பகைவரால் எறியப்பட்ட மார்பிலுருவிய பாணத்தையும் கையாற்பிடித்துக் கொண்டு எதிரிட்ட பகைவரையெல்லாம் அஞ்சாது ஒரு நிமிடத்தில் வெல்லத்தக்க சுத்த வீரரும் பசி நேரிட்ட போது சௌரியத்தை – வீரத்தை இழந்து பசிக்கஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து, ‘இளைப்பு வருமே சண்டை எப்படிச் செய்வது?’ என்று முறையிடுகின்றார்கள். இவ்வுலக போகங்களோடு இந்திர போக முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து முற்றும் துறந்து அறிவையறிந்து அநுபவம் விளங்கிய ஞானிகளும் இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து உண்மை நிட்டை யிலிருக்கின்ற யோகிகளும், இறந்தோரை எழுப்பத் தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும், முனிவர்களும் தவசிகளும், பசி நேரிட்டபோது தங்கள் தங்கள் அனுபவ லட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு – பிச்சைக்கு வருகின்றார்கள்.

பலி நேராத போது – பிக்கைக் கிடைக்காத போது நிலை கலங்கு கிறார்கள். சொப்பனத்தில் ஒரு இழிவரினும் அது குறித்து உயிர் விடத்தக்க மானிகளும் பசி நேரிட்ட போது சொல்லத் தகாதவரிடத்தும் சொல்லி மானங்குலை கின்றார்கள். சாதி, சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆச்சாரியர்களும் பசி வந்தால் ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர் பார்க்கிறார்கள். கல்வி கேள்விகளில் நிரம்பி அறிதற்கரிய நுட்பங்களை அறிந்து செய்தற்கரிய செய்கைகளைச் செய்து முடிக்க வல்லவர்களும், பசி நேரிட்ட போது அறிவுங் கருத்தும் அழிந்து தடுமாறுகிறார்கள். இராப்பகல் தோன்றாது புணர்ச்சியின்பத்திற் பொங்குகின்ற காமிகளும் பசி நேரிட்டபோது புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகிறார்கள். நாமே பெரியவர், நமக்கு மேற் பெரியவர் இல்லை என்று இறுமாப்படையென்ற அகங்காரிகளும் பசிநேரிட்ட போது ஆங்காரங் குலைந்து ஆகாரம் கொடுப்பவரைப் பெரியராகப் புகழ்கின்றார்கள். ஒருவகைக் காரியங்களில் அநகே வகைகளால் உபசரிக்கச் செய்கின்ற டம்பர்களும் பசி நேரிட்ட போது டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள். இவரிவர் இப்படி இப்படியாகில் ஒருவகை யாதாரமுமில்லாத ஏழைகள், பசி நேரிட்ட போது என்ன வாழ்வு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில் அந்த ஏழைகளுக்கு ஆகாரம் கிடைத்தால் எப்படிப்பட்ட சந்தோஷம் உண்டாகும். அந்த சந்தோஷத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு எப்படிப்பட்ட லாபம் கிடைக்கும். இப்படிப்பட்ட தென்று சொல்லுதற்கு அருமை என்றறிய வேண்டும்.

சீவர்களுக்குப் பசி அதிகரிங்குங்காலத்தில் சீவ அறிவு விளக்க மில்லாமல் மயங்குகின்றது. அது மயங்கவே அறிவுக் கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது. அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது. அது சோரவே ப்ரகிருதி தத்துவம் மழுங்குகின்றது. அது மழுங்கவே குணங்களெல்லாம் பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது – புத்தி கெடுகின்றது. சித்தங் கலங்குகின்றது; அகங்காரம் அழிகின்றது; பிராணன் சுழல்கின்றது; பூதங்களெல்லாம் – புழுங்குகின்றன. வாத, பித்த, சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன; கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது. காது கும்மென்று செவிடு படுகின்றது. நா உலர்ந்து வறளுகின்றது. நாசி குழைந்து உலர்கின்றது. தோல் மெலிந்து மரணை கெடுகின்றது, கை, கால், சோர்ந்து துவளுகின்றன. வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது. பற்கள் தளருகின்றது. ரோமம் வெளிக்கின்றது. நரம்புகள் குழைந்து நைகின்றன. நாடிகள் கட்டு விட்டுக் குழைகின்றன. எலும்புகள், கருகிப் பூட்டுகள் நெக்கு விடுகின்றன. இருதயம் வேகின்றது. மூளை சுருங்குகின்றது சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது. ஈரல் கரைகின்றது. இரத்தமும் சலமும் சுவறுகின்றன. மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது. வயிறு பகீரென்றெரிகின்றது. தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன. உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அநுபவங்களும் மேன் மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக் கெல்லாம் பொதுவாக வேயிருக்கின்றது.

இவ்வளவு அவஸ்த்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவகளையுங் கடவுட்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டா கின்றது – இப்படிப்பட்ட இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம். இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியவான்களை எந்தத் தெய்வத்துக்குச் சரி என்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்கட்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால் நரக வேதனை சனன வேதனை என்கின்ற மூன்று வேதனைகளும் கூடி முடிந்த வேதனையே பசி வேதனை என்றும், அகம், புறம், நடு, கீழ் மேல் பாகம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோட்ச இன்பமே ஆகாரத்தினாலுண்டாகும் திருப்தியின்பம் என்றும் அறியப்படும்.

பசியில்லாவிடில் சீவர்கள் ஆகாரங் குறித்து ஒருவரை யொருவர் எதிர்பார்க்க மாட்டார்கள்; எதிர்பாராத பட்சத்தில் உபகாரச் செய்கை தோன்றாது – அது தோன்றாத போது சீவகாருணியம் விளங்காது. அது விளங்காதபோது கடவுளருள் கிடைக்கமாட்டாது. ஆதலால் பசியும் கடவுளாற் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவியென்றே அறியவேண்டும்.

பசியினால் துன்பப் படுகின்றவர்கள் ஆகாரத்தைக் கண்ட காலத்தில் அடைகின்ற சந்தோஷம் தாய், பிதா, பெண்டு, பிள்ளை, காணி, பூமி, பொன், மணி முதலான வைகளைக் கண்ட காலத்திலும் அடையார்களாயின் ஆகாரம் உண்ட காலத்தில் உண்டாகும் சந்தோஷம் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஆதலால் இந்த ஆகாரத்தின் சொரூப ரூப சுபாவங்களும் கடவுளருளின் ஏகதேசத்தின் சொரூப ரூப சுபாவங்களாகவே அறிய வேண்டும்.

பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினும் பற்றி எரிகிற போது ஆகாரத்தால் அவிக்கின்றது தான் சீவகாருண்யம் – பசி என்கிற விஷக்காற்றினால் ஏழைகள் அறிவாகிய விளக்கை அவிக்கின்ற தருணத்து ஆகாரங் கொடுத்து அவியாமல் ஏற்றுகின்றதே ஜீவகாருண்யம். கடவுளியற்கை விளக்கத்திற்கு இடமாகிய சீவ தேகங்களென்கிற ஆலயங்கள் பசியினால் பாழாகுந் தருணத்தில் ஆகாரங் கொடுத்து அவ்வாலயங்களை விளக்கஞ் செய்விப்பதே சீவகாருண்யம். கடவுள் இன்பத்தைப் பெறுகின்ற நிமித்தம் தேகங்களிலிருந்து குடித்தனஞ் செய்கின்ற சீவரது தத்துவக் குடும்ப முழுதும் பசியினால் நிலை தடுமாறி அழியுந் தருணத்தில் ஆகாரங் கொடுத்து அக்குடும்ப முழுதும் நிலைபெறச் செய்வதே சீவகாருணியம். – பசி என்கிற புலியானது ஏழை உயிர்களைப் பாய்ந்து கொல்லத் தொடங்கும் தருணத்தில் அப்புலியைக் கொன்று அவ்வுயிரை இரட்சிப்பதே சீவகாருண்யம் பசி என்கிற விஷம் தலைக்கேறிச் சீவர் மயங்குந் தருணத்தில் ஆகாரத்தால் அவ்விஷத்தை இறக்கி மயக்கந்தெளியச் செய்வதே சீவகாருணியம் – பசி என்கிற கொடுமையாகிய தேள் வயிற்றிற் புகுந்து கொட்டுகின்ற போது கடுப்பேறிக் கலங்குகின்ற ஏழைகளுக்கு ஆகாரத்தால் அக்கடும்பை மாற்றிக் கலக்கத்தைத் தீர்ப்பதே சீவகாருணியம் – வெயிலேறிப் போகின்றதே, இனி பசியென்கிற வேதனை வந்து சம்பவிக்குமே! இந்த விதி வசத்திற்கு என்ன செய்வது! என்று தேனில் விழுந்த ஈயைப் போல, திகைக்கின்ற ஏழைச் சீவர்களுடைய திகைப்பை நீக்குவது தான் சீவகாருணியம் – இருட்டிப் போகின்றதே, இனி ஆகாரங் குறித்து எங்கே போவோம்! யாரைக் கேட்போம்! என்ன செய்வோம்! என்ற விசாரத்தில் அழுந்திய ஏழைச் சீவர்களது விசாரத்தை மாற்றுவதே சீவகாருணியம் – நடந்து நடந்து காலுஞ் சோர்ந்தது, கேட்டுக் கேட்டுக் காதும் சோர்ந்தது, நினைத்து நினைத்து மனமுஞ் சோர்ந்தது, இனி இப் பாவிவயிற்றுக்கு என்ன செய்வோம்! என்று கண்ணீர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துக் கண்ணீரை மாற்றுவதே சீவகாருணியம் – பகற்போதும் போய்விட்டது. பசியும் வருத்துகின்றது, வேறிடங்களிற் போக வெட்கந் தடுக்கின்றது; உயிரை விடுவதற்கும் உபாயந் தெரிய வில்லை; இவ்வுடம்பை ஏன் எடுத்தோம்! என்று மனமும் முகமும் சோர்ந்து சொல்வதற்கு நாவெழாமல் உற்பாத சொப்பனங் கண்ட ஊமையைப் போல் மனம் மறுகுகின்ற மானிகளாகிய சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து மானத்தைக் காப்பதுவே சீவகாருணியம் – நாம் முன் பிறப்பில் பதித்தவர்கள் பசிக்குறிப்பறிந்து பசியை நீக்கியிருந்தால், இப்பிறப்பில் நமது பசிக் குறிப்பறிந்து பசியை நீக்குவதற்குப் பிறிதொருவர் நேர்வார். அப்போது அப்படி நாம் செய்ததில்லை, இப்போது நமக்கிப்படிச் செய்வாருமில்லை; என்று விவகரித்துக் கொண்டு தூக்கம் பிடியாமல் துக்கப்படுகின்ற ஏழைச் சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்கித் தூக்கம் பிடிக்கவைப்பதே சீவகாருணியம் – தேகமுழுதும் நரம்புகள் தோன்றப் பசியினால் இளைத்து உயிரொடுங்கி மூர்ச்சை மூடிய காலத்தும் அயலாரைக் கேட்பது துணியாமற் கடவுளை நினைத்து நினைத்து நெருப்பிற் படுத்து நித்திரை செய்யத் தொடங்குவாரைப் போல அடிவயிற்றிற் கொடிய பசி நெருப்பை வைத்துப் படுக்கத் தொங்குகின்ற விவேகிகளுக்கு ஆகாரங்கொடுத்து அந்தப் பசி நெருப்பை ஆற்றுவதே சீவகாருணியம் – நேற்றுப் பட்டினி கிடந்தது போல் இன்றும் பட்டினி கிடக்கத் துணிவோமாயினும் பட்டினி சகியாத நமது ஏழை மனைவி வயிற்றுக்கு யாது செய்வோம்?

இவள் பசியைக் குறிப்பதும் பெரிதல்ல, வார்த்திப திசையால் (முதுமைத்தளர்ச்சியால்) மிகவும் சோர்ந்த நமது தாய் தந்தைகள் இன்றும் பட்டினி கிடந்தால் இறந்து விடுவார்களே! இதற்கென்ன செய்வோம்? பசியினால் அழுதழுது களைத்த நமது புத்திரர்களது சோர்ந்த முகத்தை எப்படிப் பார்ப்போம்? என்று எண்ணி எண்ணிக் கொல்லன் உலையிலூத மூண்ட நெருப்பைப் போல், பசி நெருப்பும், பயநெருப்பும், விசாரநெருப்பும், விசாரநெருப்பும் உள்ளே மூண்ட படியிருக்கக் கன்னப்புடையில் கைகளை வைத்துக் கொண்டு கண்களில் நீர் கலங்க வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்து வருத்தத்தை மாற்றுவதே சீவகாருணியம் – கண், கை, கால் முதலிய உறுப்புகளிற் குறைவில்லாதவர்களாய் ஆகாரஞ் சம்பாதிக்கத் தக்க சத்தியுள்ளவர்களும் பசியால் வருந்தி இதோ படுத்திருக்கின்றார்கள், குருடும் செவிடும் ஊமையும் முடமுமாக இருக்கின்ற நமக்கு ஆகாரம் எந்த வழியாற் கிடைக்கும்? பசி எப்படி நீங்கும்! என்று தனித் தனிநினைத்து நினைத்துத் துக்கப்படுகின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்குவதே சீவகாருணியம் – பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும், எந்தச் சமயத்தாராயினும், எந்தச் சாதியா ராயினும் அவர்கள் தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம் சாதி ஒழுக்கம் செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல், எச்சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம், சன்மார்க்க ஒழுக்கத்திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பசி நிவர்த்தி செய்து கொள்ளத்தக்க மிருகம் பறவை ஊர்வன தாவரம் என்கின்ற உயிர்களுக்குப் பசி வந்த போது பசி நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம்.

பசியை நிவர்த்தி செய்து கொள்ளத் தக்க புவன போக சுதந்திரங்களைப் பெறுதற்குரிய அறிவிருந்தும் பூர்வகர்மத்தாலும் அஜாக்கிரதையாலும் அச் சுதந்தரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து அந்தப் பசி வருத்தத்தை நீக்கித் திருப்தி யின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய சீவகாருணியம் என்கின்ற திறவு கோலைக் கொண்டு தான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும். ஆதலில் சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக் கொண்ட சமுசாரிகள் சரியை கிரியை யோகம் ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல் எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.

புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணிய தீர்த்தங் களிலாடல் புண்ணிய தலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ் செய்தல், ஜெபஞ் செய்தல் யாகஞ் செய்தல், பூஜை செய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பக்தர்களும் இருடிகளும், உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச் சார்புகளைத் துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும் அளவிறந்த சித்தி யின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், சீவ காருணியம் என்கிற திறவு கோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத் திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழ மாட்டார்களென்று உண்மையாக அறிய வேண்டும். இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்படும்.

அன்றியும் சீவகாருணிய ஒழுக்கத்தை உடையவர்களாகி அருந்தல், பொருந்தல் முதலிய பிரபஞ்ச போகங்களை அனுபவிக்கின்ற சமுசாரிகளெல்லாம் சர்வ சக்தியுடைய கடவுளருளுக்கு முழுதும் பாத்திரமாவார்கள். சீவகாருணியம் ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவை களைச் செய்கின்றவர்கள். கடவுளருளுக்குச் சிறிதும் பாத்திரமாகார்கள். அவர்களை ஆன்ம விளக்கமுள்ளவர்களாவும் நினைக்கப்படாது. சீவகாருணியமில்லாது செய்யப்படுகிற செய்கைகளெல்லாம் பிரயோஜனமில்லாத சாலச் செய்கைகளே யாகுமென்று அறிய வேண்டும்.

எல்லாச் சீவர்களும் கடவுள் இயற்கையுண்மை ஏக தேசங்களாகலாலும் அவரவர் இடங்களிற் கடவுள் அருள் விளக்கம் விளங்குவதாலும் சமுசாரிகளுள் தமது தாய் தந்தை புணர்ந்தோர் மக்கள் துணைவர் முதலிய குடும்ப மட்டில் பசியாற்றிக் கொள்ளத் தக்க அற்ப சக்தியுள்ள சமுசாரிகள் தாய் பிதா, மக்கள் துணைவர் முதலிய குடும்பத்தாரைப் பசியினாற் பரிதபிக்க விட்டு விட்டு அயலார்க்குப் பசியாற்றல் தொடங்குதலும், தம்மிடத்துப் பசியது வந்த அயலாரை அந்தப் பசியால் பரிதபிக்க விட்டுத் தம் குடும்பத்தார் பசியையாற்றத் தொடங்குதலும் கடவுளருளுக்குச் சம்மதமல்ல. ஆதலால் தமது குடும்பச் செலவைக் கூடிய மட்டில் சிக்கனஞ் செய்து இருதிறத்தார் பசியும் நீக்குதல் வேண்டுமென்றும், அற்ப சத்தியினுங் குறைபட்டுத் தமது குடும்ப மட்டிலும் பசியாற்று விப்பதற்குப் பிரயாசையால் மிகச் சிறிய முயற்சியுடைய சமுசாரிகள் தமது குடும்ப மட்டிலாவது பசியாற்றுவித்துக் கொண்டு தம்மிடத்துப் பசித்து வந்த அயலார் விஷயத்தில் மிகவும் தயவுடையவர்களாகி அவர் பசியை மற்றொருவரைக் கொண்டாவது ஆற்றுவிப்பதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டுமென்றும் இயல்புள்ள பிரபல சமுசாரிகள் தங்கள் தங்கள் வருவாய்க்குத் தக்க வகையில் தாய், பிதா, புணர்ந்தோர், மக்கள், துணைவர், உறவினர், சினேகர், அதிதிகள், பெரியர், அடிமைகள் அயலார், பகைவர் முதலியவர் களுக்கும், தமது குடும்பத்திற்குச் சகாயமாகத் தேடிய பசு, எருது, எருமை, ஆடு, குதிரை, தாவரம் முதலிய பிராணிகளுக்கும், பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டு பண்ண வேண்டுமென்றும், விவாகம் புத்திரப் பேறு, தெய்வம் படைத்தல் முதலிய பலவகைச் செய்கைகளில் வேறு வேறுசடங்குகளும் வேறு வேறு வினோதங்களும் வேறு வேறு பெருமைப்பாடுகளும் குறித்துப் பொருட் செலவு செய்தலை அமைத்து, விவாக முதலிய அந்தந்தச் செய்கை களிலும் பசித்த சீவர்களுக்குப் பசியை ஆற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சிறப்பினையே செய்ய வேண்டும், என்றும் அப்படிச் செய்யின் பசித்தவர் பசி நீங்கி அடைந்த இன்பத்திலும் அனேக மடங்கு அதிகமான இன்பத்தைத் தாம் அடைவார் களென்றும் சத்தியமாக அறிய வேண்டும்.

சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ காரியங்களில் பந்தலை அலங்கரித்தும், வேறு வேறு சடங்குகளைச் செய்வித்தும், ஆடல், பாடல், வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களையும் அப்பவர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப் பாடுகளையும் நடத்தியும் எக்களிப்பில் அழுந்தியிருக்குந் தருணத்தில் பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிப்பதில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும் தமது மக்கள் துணைவர் முதலியோர்களுக்காயினும் ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது. அப்போது அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படு கிறார்கள். இப்படித் துக்கப்படும் போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும், பாடல் வாத்தியம் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களும் அப்பவர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப் பாடுகளும் அந்த ஆபத்தைத் தடை செய்யக் கண்டதில்லை, அந்தச் சுபகாரியத்தில் உள்ள படியே பசித்த சீவர்களுக்கு ஆகாரங்கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்கத்தையும் கடவுளின் பத்தையும் வெளிப்படச் செய்திருந்தார்களானால் அந்த விளக்கமும் இன்பமும் அத்தருணத்தில் நேரிட்ட ஆபத்தை நீக்கி விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக உண்டு பண்ணு மல்லவா? ஆதலின் விவாக முதலிய விசேஷச் செய்கைகளிலும் தங்கள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தி இன்பத்தை உண்டு பண்ணுவது முக்கியம் என்று அறியவேண்டும். சூலை, குன்மம், குஷ்டம், முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால் அந்தச் சீவகாருணிய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விசேஷ சௌக்யத்தை உண்டு பண்ணுமென்பது உண்மை. பல நாள் சந்ததியில்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார் களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டு பண்ணுமென்பது உண்மை. அற்ப வயதென்று குறிப்பினால் அறிந்து கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப் படுகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால் அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டு பண்ணு மென்பது உண்மை. கல்வி அறிவு செல்வம் போகம் முதலியவை களைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களேயானால் அந்த சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணு மென்பது உண்மை.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரமாகக் கொண்ட சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெயிலும் வருத்தாது; மண்ணும் சூடு செய்யாது பெருமழை, பெருங்காற்று, பெரும் பனி பேரிடி பெரு நெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்க மாட்டா. விடுசீகை (வைசூரி அம்மை) விஷக்காற்று விஷசுரம் முதலிய அசாத்தியப் பிணிகளுமுண்டாகா. அந்தச் சீவகாருணியமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள். அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள். காருணியமுள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் – வியாபாரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் – சுற்றங்களாலும் துஷ்ட ஜந்துக் களாலும் துஷ்டப் பசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள் – சீவகாருணிய முள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதை யினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வாரா.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருணிய ஒழுக்க மாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரமச்சாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண் சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம் செய்யத் தக்கதென்பது கடவுளாணை யென்றறிய வேண்டும்.

பசித்தவர்களுக்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில் புருஷனைப் பெண்சாதி தடுத்தாலும், பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும், பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும், தந்தையைப் பிள்ளைகள் தடுத்தாலும் சீஷரை ஆசாரியர் தடுத்தாலும், அடியாரை ஆண்டவன் தடுத்தாலும், குடிகளை அரசன் தடுத்தாலும் அந்தத் தடைகளால் சிறிதுந் தடைபடாமல் அவரவர் செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லது வேறிடத்திற் போகா வென்பதை உண்மையாக நம்பிச் சீவகாருணிய ஒழுக்கத்தை நடத்த வேண்டு மென்றும் அறியவேண்டும். உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்த போது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக்கரணமாகி நினைத்த படியால் அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால் ஞானிகளென்றே உண்மையாக அறிய வேண்டும். ஆகாரங் கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும், கீழும் மேலும், நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள் விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக் கின்றார்களாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர் களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறிய வேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார் களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறிய வேண்டும்.

சீவகாருணிய ஒழுக்கமுடையவர்களாகிச் சீவர்களைப் பசியென்கிற அபாயத்தினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், எந்தச் சாதியாராயினும், எந்தச் சமயத்தவராயினும், எந்தச் செய்கையை யுடையவர்களாயினும், தேவர், முனிவர் சித்தர் யோகர் முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடைய வராவர்களென்று சர்வ சக்தியையுடைய கடவுள் சாட்சியாகச் சத்தியஞ் செய்யப்படு மென்று அறிய வேண்டும்.

மேற்குறித்த வள்ளலாரின் அருள் மொழிகள் உயிர்களில் உணர்வொழுக்கங்களை அழித்து அவ்வுயிர்கட்கு இறுதி விளைப்பதாகிய பசிப்பிணியின் கொடுமையினையும் அற்றார் அழிபசி தீர்த்தலாகிய நல்லறத்தினை மேற்கொண்டு செய்வோர் அடைதற்குரிய பெரும் பயன்களையும், வறியோரது பசிதீர்த்தலாகிய அறத்தினைச் செய்யாது மக்கள் மேற்கொள்ளும் அறச் செயல்களும் தீர்த்த யாத்திரை முதலிய கடவுள் வழிபாடுகளும் எத்தகைய பயனையும் தரமாட்டா என்பதனையும் மக்கள் உள்ளத்தில் பதியும்படி அறிவுறுத்தும் மெய்ம் மொழிகளாக அமைந்துளளன. இவ்வாறு வறியோரது பசிப்பிணியை மாற்றுதலின் இன்றியமையாமையை எல்லோர் உள்ளத்திலும் நன்கு பதியும்படி தெளிவாக வற்புறுத்திய அருளாளர் அருட்பிரகாச வள்ளலார் ஒருவரே எனக் கூறுதல் மிகவும் பொருத்தமுடையதாகும்.

அருளறத்தின் திருவுருவாய்த் தோன்றிய அடிகளார் வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் உளம் நைந்து வாடினார். பசியினால் இளைப்புற்று வீடு தோறும் அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் வெதும்பினார். நீங்காத நோயால் வருந்துவோரைக் கண்டு உளம் வருந்தி மருந்தளித்துப் பிணிதீர்த்தார். உலகில் ஏழை மக்கள் பசியால் வருந்துகின்றார்கள் என நண்பர்கள் சொல்லக் கேட்ட போதெல்லாம் உளம் பகீரெனத் துடித்தார். மானமுடையராய்ப் பிறர்பால் இரந்துண்ண மனமின்றி ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்களைக் கண்டு இளைப்புற்றார்.

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்வாடினேன் பசியினால் இளைத்தேவீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்தவெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்நேருறக் கண்டுளந்துடித்தேன்ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். (3471)

எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தேஇலகிய இறைவனே உலகில்பட்டினி யுற்றோர் பசித்தனர் களையால்பரதவிக் கின்றன ரென்றேஒட்டிய பிறராற்கேட்ட போ தெல்லாம்உளம் பகீரென நடுக் குற்றேன்இட்ட இவ்வுலகிற் பசியெனில் எந்தாய்என்னுளம் நடுங்குவ தியல்பே. (3431)

எனவரும் திருவருட்பாப் பாடல்கள் மக்கட் சமுதாயத்திலே பசிப்பிணியால் விளையும் துயரங்களை யெண்ணி அடிகளாருள்ளம் அடைந்த வேதனையினை யுணர்த்துவனவாகும்.

உலகியல் வாழ்விற் பசியின் கொடுமையினை உள்ளவாறுணர்ந்து உள்ளங்கவன்ற இராமலிங்க வள்ளலார் மக்கட் சமுதாயத்திலே பசிப்பிணியினை அறவே நீக்கத் திருவுளங் கொண்டு சீவகாருணிய ஒழுக்கத்தை அன்றாட நடைமுறையிற் செயற்படுத்து தற்கென்றே உத்தர ஞான சிதம்பரம் எனப் பெறும் வடலூரில் சத்தியதருமச் சாலையை நிறுவிப் பசிப்பிணி மருத்துவராகத் திகழ்ந்தார். அடிகளாரது அருட்பணி சமுதாய வாழ்வில் நலிவுற்ற மக்களுக்கு உதவுவதே உண்மையான தெய்வத் திருப்பணியாகும் எனக் கொண்ட அவர்தம் சீவகாருணிய ஒழுக்கத்தினை நன்கு புலப்படுத்துதல் காணலாம்.

பண்டைத் தமிழ்க் காப்பியங்களில் ஒன்றாகிய மணி மேகலையில் ஆபுத்திரனும் அறவண அடிகள் என்னும் புத்ததுறவி பால் உபதேசம் பெற்றுத் துறவு பூண்ட மாதவியின் மகள் மணிமேகலையும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் பிச்சை யெடுத்தாவது மக்களது பசிப்பிணியைப் போக்கிய செய்திகள் நன்கு விரித்துக் கூறப் பெற்றுள்ளன. சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் திருவருட் பிரகாச வள்ளலார் தோன்றி நம் நாட்டில் எத்தகைய வேறுபாடும் கருதாது மக்களது பசிப்பிணியினை நீக்குதற் கென்றே சத்திய தருமச்சாலையை நிறுவித் தமது திருவருட் புலமைத் திறத்தால் ஏழையெளியவர்கட்குப் பசிதீர உணவளிப்பதே கடவுட் பணி என்ற எண்ணத்தினை மக்கள் உள்ளத்திலே நன்கு நிலை பெறச் செய்தருளினார்கள். அடிகளார் சமுதாய வளர்ச்சிக்கெனத் தொடங்கிய இச் செயல், மக்களது ஆட்சி யுருப்பெற்று வளரும் இக்கால அரசியல் ஆட்சி முறைக்கு அரண் செய்யும் நிலையில் அமைந்துள்ளமை அறிந்து போற்றத் தகுவதாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *