
திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்
2. சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
எல்லாம் வல்ல இறைவனை அம்மையப்பர் திருவுருவில் அமைத்து வழிபடும் வழிபாடு தொன்மை வாய்ந்ததாகும் திருச்செங்கோடு என்னும் மலைமேல் வழிபடப்பெறும் அர்த்த நாரீசுவரர் திருவுருவம் உமையொருபாகர் வழிபாட்டின் தொன்மை யினைப் புலப்படுத்துவதாகும்.
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்பால்வெள்ளை நீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியும்சூலமும் தொக்க வளையு முடைத் தொன்மைக்கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ!
(திருவாசகம்-18 திருக்கோத்தும்பி)
என மாணிக்கவாசகர் அருளிய திருப்பாடல் உமையொருபாகர் திருக்கோலத்தின் எழில் நலத்தினையும் அதன் தொன்மையினையும் விரித்துப் போற்றுதல் காணலாம்.
தமிழகத்தில் மாயோன் சேயோன் கொற்றவை முதலாகப் பல்வேறு திருவுருவங்களில் வைத்து வழிபடப் பெறும் எல்லாத் தெய்வங்களும் முழுமுதற் கடவுளாகிய பரம்பொருள் தன்னை வழிபடும் அன்பர்களின் உள்ளத்திற்கேற்ப மேற்கொண்ட அருள் வெளித் தோற்றமே என்னும் மெய்ம்மையினைத் தெரிந்துணர்ந் தவர்கள் சங்க காலத் தமிழ் மக்கள். பல்வேறு வடிவங்களிற் பலவிடங்களிலும் மக்களால் மேற்கொள்ளப்படும் எல்லா வழிபாடுகளும் முழுமுதற் கடவுளாகிய ஒரு பொருளையே சார்ந்து பயன் விளைவிக்கும் என்பது பண்டைத் தமிழ் மக்களது தெளிவான தெய்வக் கொள்கையாகும். இவ்வுண்மையை,
வேறுபல் லுருவிற் கடவுட் பேணியும் (பத்து – குறிஞ்சி)
எனவும்,
ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்அவ்வவை மேய வேறு வேறு பெயரின்எவ்வயி னோயும் நீயே (பரிபாடல்-திருமால்)
எனவும் வரும் சங்க இலக்கியங்களால் நன்குணரலாம்.
இறைவனைத் தாயுந் தந்தையுமாகக் கருதி வழிபடும் நிலையில் தந்தையினும் தாயினை முந்தி வழிபடுதல் வேண்டும் என்னும் ஆர்வமுடையோர் மிகுதியாக, அவர்களால் அம்மைக்குரிய தனிக் கோயில்கள் சிவபெருமான் திருக்கோயிலின் அகத்தும் புறத்தும் அமைக்கப் பெற்றன. காடுறையுலகமாகிய முல்லை நிலத்தின் தெய்வமாக நீலமேனி நெடியோன் வழிபடப் பெற்றது போலவே, காடு கிழாளாகிய கொற்றவையும் நீலநிறம் வாய்ந்த திருமேனியுடையவளாகவும், ஆழியும் சங்கும் ஏந்திய கையினளா கவும் திருவுருவமைக்கப் பெற்று மாயோன் தங்கையாக வழிபடப் பெற்றாள். போரில் வெற்றி நல்கும் கொற்றவையாகிய அன்னை அமைதியளிக்கும் நிலையில் சிவனது இடப்பாகத்தில் அமர்ந் தருளிய உமையம்மையாகவும் இயைத்துப் போற்றப் பெற்றாள். தெய்வ வழிபாட்டில் இத்தகைய உறவுமுறைச் சங்க காலத்திற்கு முன்னிருந்தே வழங்கியிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டி யுள்ளது. சிவபெருமான் தனது சத்தியாகிய உமையம்மையினை ஓருருவிற் கொண்டு அர்த்தநாரிசு வரத் திருமேனியினராக (மாதொரு பாகராக) அருள் புரிதல் போலவே, உமையின் தமையன் எனப் போற்றப் பெறுந் திருமாலைத் தனது ஒருபாகத் தடக்கிய நிலையில் சங்கர நாராயணர் (மாலொருபாகர்) ஆக அன்பர்க்கு அருள்புரிகின்றான் என்பதும் சங்காலந்தொட்டு நிலை பெற்று வரும் தெய்வ வழிபாட்டு மரபாகும்.
சிவனும் திருமாலும் ஓருருவினராக (சங்கர நாராயணராகப்) போற்றப்பெறும் இவ்வழிபாடு, சைவத் திருமுறைகளிலும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் இடம் பெற்றுள்ளது.
வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்துஉருவுட னியைந்த தோற்றம் போலஅந்தி வானமொடு கடலணி கொளாஅவந்த மாலை. (அகம் – 360)
எனவரும் அகப்பாடலில் அந்திவானமும் கருங்கடலும் இயைந்த தோற்றத்திற்கு மாலொருபாகர் (சங்கர நாராயணர்) திருமேனியை மதுரைக் கண்ணத்தனார் உவமை கூறியுள்ளார். எனவே மாலொரு பாகர் (சங்கர நாராயணர்) திருமேனி கடைச்சங்க காலந்தொட்டுத் தமிழகத்தில் வழிபடப் பெற்று வருகின்றதெனத் தெரிகிறது. சிவனும் திருமாலும் முழுமுதற் பொருளால் ஒன்றே என வலியுறுத்தும் முறையில் அமைந்த சங்க நாராயணர் திருவுரும் அப்பனாகிய, சிவமும் அம்மையாகிய சத்தியும் ஞாயிறும் அதன் கதிரும் போலப் பொருளால் ஒன்றேயென வற்புறுத்தும் உமையொரு பாகர் (அர்த்தநாரீசுரர்) திருவுருவ அமைப்பினை அடியொற்றியதாகும். மாயோன் தங்கை மாயோர் எனவும், நாராயணன் தங்கை நாராயணி யெனவும், காத்தற் கடவுளாகிய திருமாலின் அமிசமாகக் கொண்டு போற்றப் பெறும் கொற்றவை, சிவனுக்குரிய கொன்றையும், திருமாலுக்குரிய துளவமும் சேரத் தொடுத்த மலர்மாலையைச் சூடியவளாகவும், திருமால் போன்று ஆழியும் வளையும் ஏந்திய கையினாளாகவும், சிவபெருமானைப் போன்று நஞ்சுண்ட கறுத்த கண்ட முடையவளாகவும் சிவபெருமான் நிலையிலும் திருமால் நிலையிலும் ஒருங்கு வைத்துச் சிலப்பதிகார வேட்டுவ வரியிற் போற்றப் பெற்றுள்ளமை காணலாம். சிவனும் உமையும் ஒருவராகத் திகழும் அர்த்த நாரீசுவரர் திருவுருவினைப் போன்றே சிவனுடன் திருமாலையொரு கூற்றினராகக் கொண்டு போற்றும் சங்கரநாராயணர் திருவுருவம் அன்பர்களால் ஓருருவாக வைத்துப் போற்றப் பெறுவதாயிற்று. சிவபரம் பொருள் ஒன்றே சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையில் வைத்து வணங்கப் பெறுதல் போன்று, முழுமுதற் பொருள் ஒன்றே சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையில் வைத்து வணங்கப் பெறுதல் போன்று, முழுமுதற் பொருள் ஒன்றே சிவனும் திருமாலும் என இருமை நிலையில் வைத்து வணங்கப் பெறுகின்றது என்னும் இவ்வுண்மை மாதொரு கூறர் (அர்த்தநாரீசுவரர்) மாலொரு கூறர் (சங்கரநாராயணர்) ஆதிய திருவுருவ அமைப்புக்களால் இனிது புலனாகும்.
கிழக்கே விடியற் காலையிலே இளஞ்செவ்வியுடைய செஞ்சுடர் விரிந்து திகழக் கடலிடையே தோன்றும் ஞாயிறு, தன்கீழுள்ள கடல்நீர் நீலமும் பசுமையும் கலந்த நிறத்தினதாய் துலங்கா நிற்பக் காணப்படும் அழகிய காட்சி, அழகேயுருவாகிய முருகன் எழில்கிளர் தோகையினையுடைய நீலமயிலின் மேல் அமர்ந்து தோன்றினாற் போலுந் தெய்வத் தோற்றத்தினைப் புலப்படுத்தி நிற்றலின், வைகறை விடியலில் மலர்தலை யுலகின் மாயிருள் நீங்கத் தோன்றும் புலர்புகழ் செஞ்ஞாயிறே மைவரை யுலகின் தெய்வமாகிய சேயோனாகவும், கதிரவனுக்குக் கீழே தோன்றும் நீல நிறக் கடலே சேயோனது ஊர்தியாகிய மயிலாகவும் கருதிக் காலைக் கதிரவனைச் சேயோனாக எண்ணிப் போற்றுதல் தமிழ் நாட்டார் மரபாயிற்று. சேயோனாகிய முருகப் பெருமான் வைகறைப் பொழுதிலே மாயிருள் நீங்கத் தோன்றும் இள ஞாயிற்றின் தோற்றமுடையவனாகத் திருமுருகாற்றுப் படையிற் போற்றப் பெற்றுள்ளமை அம் முதல்வன் என்றும் இளையோனாக உலக வாழ்க்கையில் ஈடுபடும் மக்கட் குலத்தார்க்கு மெய்யுணர் வென்னும் வேற்படையினால் அச்சம் அகற்றி, அறிவும் ஆண்மையும் நல்கி அவர் தம் வாழ்வில் முன்னியது முடித்தருளும் பெற்றியனாகப் தம் வாழ்வில் முன்னியது முடித்தருளும் பெற்றியனாகப் போற்றப் பெறும் செந்தமிழ்க் கடவுளாகத் திகழ்கிறான்.
இனி, கதிர்சாயும் காலமாகிய மாலை வேளையில் மேற்கே காணப்படும் கதிரவனே, தன் செவ்வொளி தோய்ந்த முகிற் குழாங்கள் வானமுகட்டின் நாற்புறத்தும் செர்க்கர்ச் சடையெனச் சிவந்து மிளிர, அம்முகிற் குழாங்களின் இடையே தோன்றும் வெண்பிறையானது, அவிர் சடைக் கற்றைமேல் நிவந்து தோன்றும் வெண்பிறை என விளங்காநிற்கச் சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மானை மனம் கொள்ளச் செய்யும் தெய்வத் தோற்றம் உடையனவாகத் திகழ்தலின் செவ்வானன்ன மேனியன் சிவன் எனவே வைத்து வழிபடப் பெறுவானாயினன். இவ் வுண்மை,
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்அருக்க னாவான் அரனுரு வல்லனோ (5-100-8)
எனவரும் அப்பர் அருள்மொழியினால் நன்கு புலனாதல் காணலாம்.
காலையில் தோன்றும் இளஞாயிறு, இருளிற் றுயிலும் மன்னுயிர்களைத் தன் ஒளிக் கதிர்களால் இருள் நீக்கி எழுப்பிப் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தி வாழ்க்கையில் அச்சம் அகற்றி, வெற்றி நல்கி வையத்து வாழ்வாங்கு வாழ்தற்கு உதவுமாறு போலவே, என்றும் இளையோனாகிய சேயோனும் மக்கட்குலத்தார் குற்றமற்ற கோட்பாடுகளால் தாம் தாம் மேற்கொண்ட தொழில்களை வெற்றி பெற முடித்து வையத்து வாழ்வாங்கு வாழும் வண்ணம் அவர்தம் மனத்தகத்தே இளஞாயிறாகத் தோன்றி அவர்தம் அறியாமை இருளை நீக்கி, அச்சம் தவிர்த்து அவர்கள் அறியாமை இருளை நீக்கி, அச்சம் தவிர்த்து அவர்கள் உள்ளத்தே எண்ணிய அனைத்தையும் இனிதே முடித்தருளுகின்றான் எனச் செந்தமிழ்ப் பனுவல்கள் போற்றுகின்றன. ஆதலால் காலைக் கதிரவனது தோற்றம் முன்னியது முடித்து அருளும் முருகப் பெருமானது தோற்றப் பொலிவிற்கு உவமையாயிற்று. பகலெல்லாம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உழைத்து இளைத்த மக்கட் குலத்தார் தமது உடல் இளைப்பும் உள்ளக் கவலையும் நீங்கி ஓய்வுபெறும் நிலையில் மாலைப் பொழுதில் ஞாயிற்றின் தோற்றம் அமைதி வழங்குமாறு போன்று, உலக வாழ்கையில் பலப்பல பிறவிகளை எடுத்து அல்லல் உற்ற மாந்தர் எம்பெருமானே எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தோம்; எங்களது பிறவிப் பிணிப் பகற்றிப் பிறவா நெறியினை அளித்து அருள்வாயாக என ஐம்பொறிகளை அடக்கிய செம்புலச் செல்வர் களாய் மனம் குளிர்ந்து போற்றி ஒருமைநிலை பெற்று அமைதிபெறும் நிலையில் அமைந்தது சிவ வழிபாடாகும் எனவே காலை இளஞாயிற்றின் தோற்றம் என்றும் இளையோனாகிய சேயோன் திருமேனியையும், மாலை ஞாயிற்றின் முதிர்ந்த செவ்வித்தாகிய அந்தி வானத் தோற்றம் முது முதல்வனாகிய சிவபெருமானது செம்மேனியையும் குறிப்பனவாக இலக்கியங்களில் குறிக்கப் பெறுதலின், காலை இளங்கதிரவனை என்றும் இளையோனாகிய முருகன் எனவும், மாலை முதிர் கதிரவனை முருகனுக்குத் தந்தையாகிய சிவபெருமான் எனவும் தமிழ் முன்னோர் கருதிப் போற்றினர் எனத் தெரிகிறது.
காலை ஞாயிறும் மாலை ஞாயிறும் கால வேறுபாட்டால் இரு நிலையினவாகக் காணப்படினும் பொருள் அளவில் இரண்டும் ஒன்றே ஆதல் போன்று சேயோனும் சிவனும் இரு தெய்வங்களாக வைத்து வணங்கப்பட்டாலும் இருவரும் ஒருவரே என்பது சேயோன் சிவன் என வழங்கும் பெயர் ஒற்றுமையாலும் இனிது புலனாகின்றது. முருகனுக்கு உரிய சேயோன் என்னும் பெயர் செம்மை நிறம் வாய்ந்த திருமேனியை உடையான் என்னும் பொருளுடையது. சிவன் என்னும் பெயரும் சிவந்த நிறத்தினன் என்னும் பொருளையே தருகின்றது. எனவே சொல் ஒற்றுமையாலும் பொருள் ஒற்றுமையாலும் சேயோனாகிய முருகனும் சிவனாகிய இறைவனும் ஒரே முழுமுதற் கடவுளாகக் கருதப்பெற்றமை காணலாம். குமரனாகிய முருகனும் அவன் தந்தையாகிய சிவனும் முழு முதற்கடவுளின் இருவேறு கோலங்களே என்னும் மெய்ம்மையினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்ததே கந்தபுராண வரலாறு ஆகும். முருகப் பெருமானைக் குறித்து வழங்கும் திருப் பெயர்களுள் கந்தன் என்பதைத் தமிழ் சொல்லாகக் கொண்டு கந்தன் – தூண் வடிவில் நிறுத்தப்பட்ட கந்தில் உறையும் தெய்வம் எனப்பொருள் கொள்ளுதற்கும் இடம் உண்டு. வல்வேற் கந்தன் நல் இசை உள்ளி (புறநானூறு – 38) என வரும் தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் ‘கந்தன் என்பது சங்க காலத்திலேயே தெய்வப் பெயராக மக்களுக்கு இட்டு வழங்கப் பெற்றது’ என்பது உய்த்து உணரப்படும்.
குறிஞ்சி நிலத் தெய்வமாகிய சேயோனை நிலம் கடந்த நிலையில் முழுமுதற் கடவுளாகப் போற்றப் பெறும் சிவபெருமானுடைய திருமகனாகக் கொண்டு வழிபடும் நிலை ஏற்பட்டபின் சிவபெருமான் திருக்கோயிலின் அகத்தும் புறத்தும் முருகப் பெருமானின் திருவுருவம் இடம் பெறுவதாயிற்று. இவ்வாறே முருகப் பெருமான் திருக்கோயில்களில் முதல்வனது தந்தை என்ற முறையில் சிவலிங்கத் திருவுருவமும், தாய் என்ற முறையில் கொற்றவை திருவுருவமும் இடம் பெறுவனவாயின. திருப்பரங் குன்றம், திருச்சீலைவாய் என்னும் திருச்செந்தில், திருவாவினன் குடி, திருவேரகம், திருச்செங்கோடு முதலிய குன்றுகள் சங்க கால முதல் முருகப்பெருமானுக்குரிய சிறப்புடைய திருக்கோயில்களாக வழிபடப்பெறும் தொன்மை உடையனவாகத் திகழ்கின்றன.
இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன் மதம் என்ற சொல், சமயக் கொள்கை என்ற பொருளில் வழங்கப் பெறவில்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்னர்த் தோன்றிய மணிமேகலையில்தான் சமயம் என்ற சொல் முதன் முதல் ஆளப்பெற்றுள்ளது. கடவுளைப் பற்றியோ உலகத்தைப் பற்றியோ உயிர்களைப் பற்றியோ மக்கட் குழுவினர் கொண்ட கொள்கை யினையும், தாம் தாம் மெய் எனத் துணிந்துள்ள கொள்கை பற்றிய ஒழுகலாறுகளையும் குறித்து வழங்கப்பெறுவதே சமயம் என்ற சொல் ஆகும். பண்டைத் தமிழியல் நூலாகிய தொல்காப்பியத்திலும், அதன் பின்னர்த் தோன்றிய சங்கத் தொகை நூல்களிலும் மதம் என்ற சொல்லோ, சமயம் என்ற சொல்லோ இடம் பெறவில்லை. பலவகைச் சமயங்களும் தோன்றி அவ்வச் சமயங்களின் பெயரால் தமிழ் மக்கள் தம்முட் பிரிவுபடுவதற்கு முன்னரே இயற்றப் பெற்ற தொன்மை உடையன தொல்காப்பியமும் சங்கத் தொகை நூல்களும் என்பது இதனால் நன்கு துணியப்படும்.
தொல்காப்பியர் காலத்திலே மாயோன், சேயோன் இந்திரன், வருணன் ஆகிய நானிலத் தெய்வங்களின் வழிபாடும், கொற்றவை வழிபாடும், நில வெல்லையினைக் கடந்த பொதுமை நிலையிற் சிவவழிபாடும் நிலைபெற்று வழங்கின என்பது முன்னர் விளக்கப் பெற்றது. இவ் வழிபாடுகள் யாவும் பலதிற மக்களும் தம் தம் சூழ்நிலைக்கும் தாம் தாம் உள்ளத்திற் கருதிய தெய்வத் தோற்றத்திற்கும் ஏற்ப மேற்கொண்டுள்ள தெய்வ வழிபாடுகள் என்ற பொதுமை நெறியில் நிகழ்ந்தனவே அலறிப் பிற்காலத்திற் போன்று குறிகளாலும் அடையாளங்களாலும் வேறுபட்ட தனிக்கொள்கை யினையுடைய சமயங்களாக அவை வழங்கப் பெறவில்லை என்பதும், மக்கண் ஒற்றுமையைக் குலைக்கும் நிலையில் அவைவேறுபட்டு காணப்படவில்லை என்பதும் இங்கு மனங்கொள்ளுதற்குரியனவாகும்.
இனி, கடைச்சங்க காலத்தை யடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம் மணிமேகலை என்னுங் காப்பியங்களில் தான் சிவவழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் இவ்வழிபாடுகளும் இவற்றின் வேறாகச் சமணமும் புத்தமும் வேதநெறி பற்றிய கொள்கைகளும் தத்துவ அளவில் தனித்தனிச் சமயங்களாக வேறுபடுத்திப் பேசப்படுகின்றன. சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் நான்கும் தம்முள் உறவு முறைத் தொடர் புடையனவாகவும், இவற்றுட் சிவவழி பாடொன்றுமே தலைமைச் சிறப்புடையதாகவும் திகழ்ந்தமையும், இவையன்றி ஞாயிறு வழிபாடு, திங்கள் வழிபாடு, மழை வழிபாடு, இந்திர விழா, காம வேள் விழா என்பன அக்காலத் தமிழ்மக்களால் கொண்டாடப் பெற்றன என்பதும், தெய்வச் சிறப்புடைய ஊரைப் போற்றுதலும், தீதுதீர் காவேரி வையை கங்கை முதலியவற்றில் ஆறாட்டும், குமரி முதலிய கடலாட்டும் ஆகிய வழிபாட்டுச் சடங்குகளும் அக்கால மக்களால் மேற்கொள்ளப் பெற்றன என்பதும் சங்கத் தொகை நூல்களாலும் சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இவ்விரு காப்பியங்களாலும் நன்கு புலனாகின்றன.
வடநாட்டில் வைதிக நெறிக்கு எதிராகத்தோன்றிய சமண புத்த சமயங்கள் தத்தம் கொள்கைகளைப் பரப்பும் நோக்குடன் தமிழகத்தில் சங்ககாலத்தில் வேரூன்றின அவை வேரூன்றிய பின்னர்த் தத்தம் சமயக் கொள்கையைப் பரப்பும் அளவில் அமைந்து விடாது இங்குள்ள தெய்வக் கொள்கையினையும் புறம் பழிக்கத் தொடங்கின என்பது சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையோன் கூற்றைப் புறக்கணித்துப் பேசிய கவுந்தியடிகள் கூற்றால் உய்த்துணரப்படும். சிலப்பதிகாரத்தையடுத்து மணிமேகலைக் காப்பியம் இயற்றப் பெற்ற காலத்தில் தமிழகத்திற் பல்வேறு சமயவாதிகளும் மக்கள் பேரவையிலே தத்தம் சமயவுண்மைகளைக் குறித்து உறழ்ந்து பேசுதற்கேற்ற வாய்ப்பு காவிரிப்பூம்பட்டினம் முதலிய தமிழகப் பேரூர்களில் நிகழும் இந்திரவிழா முதலிய திருவிழாக் காலங்களில் நாடாள் வேந்தரால் அளிக்கப் பெற்றது. இச்செய்தி,
ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்பட்டி மண்டபம் பாங்கறிந் தேறுமின்
(மணிமேகலை – விழாவறை காதை)
எனவரும் மணிமேகலைத் தொடரால் இனிது புலனாகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முன்னர் இல்லாத சமயப் பகுப்புகளும், மத மாறுபாடுகளும் இத்தென்றமிழ் நாட்டிலே தோன்றித் தமிழ் மக்களது ஒற்றுமை யுணர்வைச் சிதைத்து அவர்களை ஒருவரோடொருவர் மாறுபடச் செய்து அலைக்கழிக்கலாயின.
அசோக வேந்தன் காலந் தொடங்கிக் கி.பி. முதல் நூற்றாண்டு வரையில் ஏறக்குறைய முந்நூறாண்டுகள் தமிழகத்திற் குடியேறி, இந்நாட்டு மக்களோடு ஒன்றி அமைதியாய் வாழ்ந்த புத்த சமணத் துறவிகள், பாண்டிய நாட்டிலும் சோழநாட்டிலும் தமிழ் வேந்தது அரசு நிலை குலையத் தொடங்கிய நிலையில் தமிழ் நாட்டின் மேற் படையெடுத்து வந்த அயலவராகிய கருநடமன்னர் முதலியோரது துணைகொண்டு தம் சமயக் கொள்கைகளை மிக முயன்று தமிழகத்திற் பரப்பும் பணியில் ஈடுபடலாயினர்; தமது கொள்கைக்கு இணங்காத தமிழ் மக்களையெல்லாம் தம் மதங்களில் திருப்புதற்கு அரசியற் சார்பு பெற்றுத் தவறான தந்திரங் களையெல்லாம் கையாள் வாராயினர். இதனால் தமிழாசிரியர்க்கும் சமண புத்த சமயத் தார்க்குமிடையே வழக்குகளும், எதிர்வழக்குகளும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அதனால் ஒருசார் மதக் கொள்கையினையுடையார் பிறிதொரு மதக் கொள்கையாளரிடமிருந்து தம்மை வேறுபடுத்தித் தம்மை உயர்த்திக் கோடற்கும், தம் கொள்கையினை யுடன்படாத பிறரைத் தம்மினின்று வேறுபடுத்திக் காட்டுதற்கும் சைவர், வைணவர், புத்தர், சமணர், வைசேடிகர், நியாயவாதிகள், உலகாயதர், மாயாவாதிகள் என்றாங்கு வெவ்வேறு குழுவினர்க்கு வெவ்வேறு சமயப் பெயர் கொடுத்து வழங்கும் நிலை சமயவாதிகளிடையே நிலைபெற்று வேரூன்றலாயிற்று. சமயம் மதம் என்ற பெயர்களும், அப்பெயர்களாற் பகுத்துரைக்கப்படும் பிரிவினைகளும் இன்றி எல்லோரும் ஒன்றுபட்ட பொதுமை யுணர்வினராய் எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளையே பல்வேறு வடிவிற் பல்வேறு பெயர்களில் வணங்கி இவ்வாறு அமைதி நிலையில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே வடக்கிருந்து வந்து நிலை பெற்ற சமண, புத்த சமயத்தவர்களாலும் அவர்களோடு முரண்பட்டு வந்த வைதிகக் குழுவினராலுமே பல்வேறு மதங்களும் மதப்போர்களும் இந்நாட்டிற் கிளைத்து வளர்ந்தன. இவ்வாறு இந்நாட்டில் முரண்பட்டு வளர்ந்துள்ள பல்வேறு மதங்களும் வடக்கிருந்து தமிழகத்திற் குடியேறின அயலவர்களாலேயே பல்கின என்பதற்கு அம்மதங்கள் பலவும் வடமொழிப் பெயர் கொண்டு உலவுதலும், அம்மதங்களைப் பற்றிய நூல்களெல்லாம் வடமொழியில், எழுதப் பெற்றிருத்தலுமே உறுபெருஞ் சான்றாகும். இதனை நன்குணர்ந்த சுவாமி விவேகானந்தர் மதச் சண்டைகளும் சாதிவேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் அமைந்தது வடமொழியே எனவும், அம்மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப் போராட்டங்களும் தொலைந்து போகும் எனவும் வருந்திக் கூறியுள்ளார். (மறைமலை அடிகளாரின் தமிழர்தம் நூல். பக்கம் 22) பழைய தமிழ் நூல்களிற் சமயப் போருக்காவது சாதிச் சண்டைக்காவது இடமில்லை என்பதைச் சங்க இலக்கியங்களால் நல்குணரலாம்.
இன்னவுரு, இன்னநிறம் என்றும் அறியவொண்ணாத செம்பொருளாகிய இறைவனைத் தூணூருவில் நிறுத்தி வழிபடும் வழிபாடு பண்டைக் காலத்தில் சமயவேறுபாடு இல்லாத பொதுமை வாய்ந்த கடவுள் வழிபாடாகவே நிகழ்ந்து வந்துள்ளது. இதன் வளர்ச்சியே சிவலிங்க வணக்கமாகும்.
மன்னுயிர்களுக்கு உள்ளும் புறம்பும் நின்று அருள் புரியும் முழுமுதற்கடவுளை உலகிற் காணப்படும் புறப் பொருள்களுள் ஒன்றாலாகிய உருவிலோ, அன்றி அகத்துள் கருதியுணரப்படும் அருவிலோ வைத்து வழிபடும் வழிபாடு இறை இயல்பினை நன்கு விளக்காதென வுணர்ந்த முன்னைய அருளாளர்கள், அம்முதல்வன் உயிர்களின் அகத்தே உள்ளிருந்தெழும் சோதியாகவும், உலகின் புறத்தே தோன்றி இருள் நீக்கும் சுடராகவும் திகழுந் திறத்தினை மக்கள் உணர்ந்து போற்றும் முறையில் அருவுருவாகிய இச் சிவலிங்கத் திருவுருவினை அமைத்து வழிபடுவாராயினர். இவ்வுண்மை,
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்நீணாக மணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்
(பெரிய. சாக்கிய நாயனார்-8)
எனவரும் சேக்கிழார் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.
இலிங்கம் என்ற சொல் அடையாளம், குறி என்று பொருளுடையது. காண்டற்கரிய கடவுளை மனத்தாற் குறித்து வழிபடுதற்குரிய குறியாகவும், அடையாளமாகவும் அமைந்ததே இச்சிவலிங்கத் திருமேனியாகும். ஆராத பேரன்புடையராய் அறுவகைக் குற்றங்களையும் ஒழித்து, ஐம்புலன்களையும் அடக்கி இறைவனருளிய அருள் ஞானத்தைப் பெற்ற பெருந்தவ முனிவரது உள்ளத்துள்ளே சோதி வடிவாய்த் திகழும் இறைவனது அருள் திருமேனியின் அமைப்பினைப் புலப்படுத்தும் குறியாக அமைந்ததே சிவலிங்கத் திருமேனி. சிவலிங்கத்தின் அடிப்பீடம் ஆன்மாக்களின் நெஞ்சத் தாமரையாகவும், அதன் நடுவே நாட்டப்பெற்ற பாணம் அவ்உயிர்களின் உள்ளத்தில் எழும் சோதிப் பொருளாகிய இறைவனாகவும் கொண்டு அமைந்ததே சிவலிங்கத் திரு உருவம். இவ்வுண்மை ‘மலர் மிசை ஏகினான்’ என்னும் வள்ளுவர் வாய்மொழியாலும் ‘மலர்மிசை எழுதரு பொருள்’ (1-12-5) எனவரும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலும் புலனாதல் காணலாம்.
எரியாய தாமரைமேல் இயங்கினாரும் (6-16-7)
எனவரும் நாவுக்கரசர் அருள்மொழியும்,
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால்விரல் (7-45-9)
எனவரும் சுந்தரர் வாய்மொழியும் இக்கருத்தினைப் புலப்படுத்தல் காணலாம்.
இவ்வாறு எல்லார்க்கும் பொதுவாகத் தோன்றிய சிவலிங்க வழிபாடு இறைவனை உருவமாகக் கொண்டு வழிபடும் சிவயோகிகள் வழிபாட்டிற்கும் இடைப்பட்டதாய்ப் பொதுமையின் அமைந் தமையின் இது தெய்வக் கொள்கையுடைய பல சமயத்தார்க்கும் பொதுமையுடையதாகவே அமைந்து வந்துள்ளது.
தெய்வம் உண்டு என்னும் தெளிவு பெறாத மீமாம்சகர், வைசேடிகர், நையாயிகர் முதலியோரும் வைதிகத்திற்குப் புறம்பான அருகர், புத்தர் முதலிய சமயத்தாரும் தத்தம் கொள்கைகளில் மாறுபாடுடையவராய்த் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனராயினும், அன்னோர் தத்தம் சமய ஆசிரியர்களை வழிபடும் வழிபாட்டுத் திறத்தில் ஒருமையுடையராதலை உலகியலிற் காண்கிறோம். இவ்வாறு மக்கட் குலத்தார் தெய்வம் உண்டென்னும் தெளிவு பெறாத நிலையிலும், தங்களை அன்பினால் நல்வழிப் படுத்தும் தந்தை, தாய், ஆசிரியன் முதலிய பெரியோர்களை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும் உலக முதல்வனாகிய இறைவனே ஏற்றுக் கொண்டு அருள்புரிகின்றான் என்பது திருமுறை ஆசிரியர்கள் முதலிய சிவநெறிச் செல்வர்களின் துணிபாகும். தெய்வத்தை உடன்படுவனவும், உடன்படாதனவுமாக உலகில் வழங்கும் சமயங்கள் யாவும் மக்களை அவரவர் தம் பக்குவ நிலைமைக்கு ஏற்பப் படிப்படியாக உயரச் செய்து பேரின்பம் அளிக்கும் பெருங் கருணைத் திறத்தால் உலகமுதல்வனாகிய இறைவனால் வகுத்தருளிச் செய்யப் பெற்றனவே என்பது நம் முன்னோர் கண்ட உண்மையாகும். இவ்வாறு உலகச் சமயங்கள் எல்லாம் இறைவன் ஒருவனாலேயே படிகால்முறையாக அமைக்கப்பட்டன என்னும் இந் நுட்பம்,
ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச்சமயம் வைத்தார் (4-30-5)
எனவும்,
முறை முறை நெறிகள் வைத்தார் (4-38-7)
எனவும்,
பேணித் தொழுமவர் பொன்னுலகாளப் பிறங்கருளால்ஏணிப்படிநெறி இட்டுக் கொடுத் திமையோர் முடிமேல்மாணிக்கமொத்து மரகதம்போன்று வயிர மன்னிஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே
(4-92-16)
எனவும் வரும் அப்பரடிகள் வாய் மொழிகளால் இனிது புலனாகும்.
கடவுட் கொள்கை யென்னும் உள்ளீடில்லாத சமயங்களை இருமுச் சமயத்து ஒருபேய்த் தேர் (திருவாசகம், திருஅண்டப் பகுதி 79) எனவும், கடவுட் கொள்கையுடை அகச் சமயங்களைத் திருத்தகும் அறுவகைச் சமயம் (திருஅண்டப்பகுதி 16-17) எனவும், மணிவாசகப் பெருமான் குறிப்பிடுவதால் அவர்காலத்து அகச்சமயம் அறுவகையாகவும், புறச்சமயம் அறுவகையாகவும் வழங்கின எனக் கருத வேண்டியுள்ளது. சாருவாகம் (உலகாயதம்), முதலிய எல்லாச் சமயமும் இறைவன் ஒருவனாலேயே அருளிச் செய்யப்பெற்ற மையின் அவ்வச் சமயத்தார் அளவில் அவை பிரமாணமாகக் கொள்ளத் தக்கனவே. மந்த உணர்வினராய மக்கள், உலக இன்பமே பெரும்பயன் எனவும், தமக்குப் புறம்பாயுள்ள உடம்பு முதலியவற்றை ஆன்மா எனவும் அபிமானம் செய்து உழலும் நிலையின் அன்னோர்க்கு இரங்கிய இறைவன், துன்பம் முதலியவற்றோடு விரவுவதால் உலக இன்பம் பேருறுதிப்பயன் அன்று எனவும், உடம்பு முதலியன ஆன்மா அல்ல எனவும் உணர்த்தி, அவர்களது உணர்வு அவ்வளவில் நிலை பெறுதற் பொருட்டு அதனினும் நுட்பப் பொருளை உணர்த்தத் தொடங்கின் அன்னோர் ஏற்றுக் கொள்ளும் உணர்வு பெறாமையின் தூல உடம்பே ஆன்மா எனவும், அவ்வுடம்பு நசித்தலே பேருறுதிப்பயன் எனவும் அறிவுறுத்தி யருளினான். பின்னர் அவ்வாறு அறிவுறுத்தும் நெறியிலே ஒழுகி இறைவனது திருவருளுக்கு உரியராய் ஆணவமல மறைப்பினின்றும் சிறிது நீங்கி, உடம்பே ஆன்மா, உடம்பு நசித்தலே பேருறுதிப்பயன் எனத் தாம் முன்பு கொண்ட கொள்கையில் ஐயப்பாடுடையராயினர். அங்ஙனம் ஐயுற்ற மாந்தர்களுக்கு, உடம்பு முதலியன ஆன்மா அல்ல என்று மறுத்தற்பொருட்டுப் புத்த சமயத்தை அறிவுறுத்தி யருளினான். இவ்வாறு மக்களின் மன உணர்வினை வளர்த்தற் பொருட்டே மேலும் மேலும் ஏணிப் படிகளாகப் பல்வேறு சமயங்களையும் இறைவன் வகுத்தருளினான் என்பர் பெரியோர்.
இது, தைத்திரியத்தில் அதிகாரி பேதம் பற்றி அன்ன மயகோசம் பிரமம் என்றும் அதனை மறுத்து மேல், அதனிற் சூக்குமமாகிய பிராணமய கோசம் பிரமம் என்றும் அதற்குமேல் மனோமயகோசம் பிரமம் என்றும், அதற்கு மேல் விஞ்ஞானமய கோசம் பிரமம் என்றும், அதற்கு மேல் ஆநந்த மயகோசம்பிரமம் என்றும் ஒன்றற் கொன்று சூக்குமமாய் உணர்த்துதல் போலவும், கவுசிதக உபநிடதத்தில் அதிகாரி பேதத்தால் இந்திரன் தைத்தியனுக்குத் தன்னையே பிரமமாகக் கூறியது போலவும் கொள்க. அங்ஙனம் புல்லை எதிரே காட்டி ஆக்களைப் பிடிக்குமாறு போலச் சோபான முறைமை பற்றிக் கூறியது என்பதூஉம், அவை எல்லாம் ஒருவாற்றாற் பிரமாணம் என்பதூஉம் சூதசங்கிதையிற் காண்க (சிவஞான பாடியம் சிறப்புப்பாயிரம்) என மாதவச் சிவஞான முனிவர் தரும் விளக்கம் இங்கு எண்ணத் தகுவதாகும்.
இனி, பலவகைச் சமயங்களிலிருந்தும் இறைவனை, உண்மையாகப் போற்றும் அன்பர்கள் எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் அவரவர் நினைந்த திருமேனி கொண்டு அங்கங்கே தோன்றி அருள்புரிதல் இறைவனது இயல்பென்பதும், கடவுட்கொள்கை யில்லாத பிற சமயத்தாரும் தத்தம் சமயத் தலைவர்களை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் யாவும், முழுமுதற் முன்னைய அருளாசியர் துணிபாகும்.
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்குஇங்கே என்று அருள்புரியும் எம்பெருமான். (2-40-6)
என ஆளுடைய பிள்ளையாரும்.
ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளேஅவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் (6-18-11)
பாராழி வட்டத்தார் பரவியிட்டபன்மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் (6-18-5)
இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்துமடி இன்புற்றார் இட்டபூ ஏறுமடி. (6-6-5)
என ஆளுடை அரசரும்,
அறிவினான் மிக்க அறுவகைச் சமயம்அவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து (7-55-9)
என ஆளுடைய நம்பிகளும் அருளிய அருளுரைகளைக் கூர்ந்து நோக்குங்கால், பல சமயங்களால் போற்றப்படும் எல்லாத் தெய்வங்களாகவும் முன்னின்று அருள் புரிவோன் எல்லாம் வல்ல சிவபெருமானே என்னும் உண்மை திருமுறை ஆசிரியர்கள் துணிபாதல் நன்கு புலனாகும்.
மக்கள் தங்கள் குறுகிய நோக்கத்தால் வேறுபட்டுத் தமக் கெனப் புதியனவாகச் சமயங்களைக் கற்பித்துக் கொண்டாலும், அன்னோர் கற்பனைகளுக்கெல்லாம் தானுமுடனாய் நின்று அருள் செய்யும் இயல்புடையோன் இறைவன் என்பதனை.
வாதுசெய்து மயங்கும் மனத்தராய்ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்மாதவ னல்லால் தேவர் மற்றில்லையே (5-100-4)
எனவும்
விரிவிலாஅறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்துஎரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும் (4-60-10)
எனவும் திருநாவுக்கரசர் தெளிவுபடுத்தியுள்ளமை காணலாம்.
ஏணிப்படி நெறிகளாக அமைக்கப் பெற்ற அகம் புறமென்னும் அறுவகைச் சமயங்களிலும் ஒழுகும் உள்ளத்தினரைத் தெய்வம் ஒன்றே என்னும் தெளிவு பெறச் செய்தலும், அங்ஙனம் தெளிந்த தொண்டர்களைச் சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகிப் பேரின்பத்தைப் பெற்று மகிழும் சிவநெறியாகிய செந்நெறிக்கே ஏற்றதலும் முழுமுதற்கடவுளது திருவருளின் திறமாகும்.
இவ்வுண்மையினை,
போற்றுந்தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மைஆற்றுந் தகையன ஆறுசமயத் தவரவரைத்தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கேஏற்றுந் தகையன இன்னம் பரான்றன் இணையடியே (4-99-7)
எனவரும் திருவிருத்தத்தில் அப்பரடிகள் விளக்கியுள்ளமை காணலாம். இவ்வாறு எல்லாச் சமயத்தாராலும் மேற்கொள்ளப் பெறும் வழிபாடுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அவ்வவர்க்கு அவ்வவர் தெய்வமாய்த் தோன்றி அருள்புரியும் சமயங்கடந்த தனிமுதற் பொருளாகவே சிவநெறிச் செல்வர்கள் இறைவனைப் போற்றி வந்துள்ளார்கள். இச்செய்தி,
பரிதியானைப் பல்வேறு சமயங்கள்கருதியானைக் கண்டார் மனமேவியபிரிதியானைப் பிறர் அறியாத தோர்சுருதியானைக் கண்டீர் தோழற்பாலதே. (5-94-5)
எனவரும் திருநாவுக்கரசர் அறிவுரையானும்,
மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்லஇனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச்சினமுத லகற்றி வாழும் செயலறமானால் யார்க்கும்முனமொரு தெய்வம் எங்கும் செயற்கு முன்னிலையாமன்றே.
எனவரும் சிவஞான சித்தியார் (113 பக்கம்) திருவிருத்தத்தாலும் நன்கு விளங்கும்.
தெய்வம் உண்டென்னும் தெளிவுடைய அகச்சமயத்தார் செய்யும் வழிபாடு முழுமுதற் கடவுளை அடையும்படிச் செய்யும் என்பதனை ஒத்துக் கொள்வதில் தடையில்லை, தெய்வங் கொள்கையே யில்லாத புறச்சமயத்தார் தத்தம் சமயத் தலைவர்களை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் முழுமுதற் பொருளாகிய இறைவனைச் சார்தல் எவ்வாறு பொருந்தும்? என்பதொரு வினா இவ்விடத்தில் எழுவது இயல்பு. எல்லாம் வல்ல இறைவன் உயிர்க்குயிராய் யான்டும், நீக்கமற நிறைந்துள்ளான் என்பது சான்றோர் துணிபாதலின் புறச்சமயத்தலைவரிடத்தும் அம்முதல்வன் இடங்கொண்டுள்ளான் என்பது தெளிவு. எனவே அச் சமயத்தலைவர்களை நோக்கிச் செய்யும் வழிபாடுகளையும் அவர்கள் வழியாக இறைவன் ஏற்றுக் கொள்கிறான் என்பதில் சிறிதும் ஐயுறவில்லை. இந்நுட்பம், சிவபெருமானை நினையாமலும் திருவைந்தெழுத்தினை முறைப்படி ஓதாமலும், பச்சிலையும் நீருங்கொண்டு வழிபாடு செய்யாமலும் வேறுயாராகவோ நினைக்கும் புறச்சமயத்தார் உள்ளத்திலும் இடைமருதீசனுடைய பொன்னார் திருவடியே நண்ணி அருள்வழங்கும் என்பதும், ஆறு சமயத்தார் செய்யும் வழிபாடுகளெல்லாம் இடைமருதீச னொருவனையே வந்து சார்வன என்பதும் ஆகியவுண்மையினை
ஓராதே அஞ்செழுத்து முன்னாதே பச்சிலையுந்நேராதே நீரும் நிரப்பாதே – யாராயோஎண்ணுவா ருள்ளத் திடை மருதர் பொற்பாதம்நண்ணுவா மென்னுமது நாம்
எனவும்,
அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்ஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலும் என்றும்ஒருதனையே நோக்குவா ருள்ளத் திருக்கும்மருதனையே நோக்கி வரும்.
எனவும் வரும் திருவிடைமருதூர் மும்மணிக் கோவைச் செய்யுட் களால் திருவெண்காட்டடிகளார் இனிது விளக்கியுள்ளார். இப்பாடல்கள் முற்குறித்த வினாவுக்கு ஏற்றவிடையாதல் காணலாம்.
இங்ஙனம் சிவபெருமான் சமயங்கடந்த தனிமுதற் பொருளாக விளங்கும் மாட்சியினை,
இடத்துறை மாதரோ டீருடம் பென்றும்நடத்தினை நள்ளிருள் நவிற்றினை யென்றும்புலியதள் என்பொடு புனைந்தோ யென்றும்பலிதிரி வாழ்க்கை பயின்றோ யென்றும்அருவமும் உருவமும் ஆனா யென்றும்திருவமர் மாலொடு திசைமுகனென்றும்உளனே யென்றும் இலனே என்றும்தளரானென்றும் தளர்வோனென்றும்ஆதி யென்றும் அசோகினன் என்றும்போதியிற் பொலிந்த புராண னென்றும்இன்னவை முதலாத் தாமறி யளவையின்மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்பிணங்கும் மாந்தர் பெற்றிமை நோக்கிஅணங்கிய அவ்வவர்க்கு அவ்வவையாகி யடையப்பற்றிய பளிங்கு போலும்,
ஒற்றி மாநக ருடையோய் உருவே.
(திருவொற்றியூர் ஒருபாவொபஃது) எனவரும் திருப் பாடலில் திருவெண்காட்டடிகள் விரித்துக் கூறியுள்ளார்.
திருவொற்றியூரில் எழுந்தருளிய பெருமானே! மாதொரு பாகனாகிய நின்னைத் திருமாலென்றும், பிரமனென்றும், அருக னென்றும் புத்தனென்றும் பல்வேறு பெயர்களாற் சமயவாதிகள் பலர் மாறுபடக் கூறினாலும் யாவர்க்கும் மேலாம் இறைவனாகிய நீ அவ்வச்சமயத்தவர்களுக்கு அவரவர் நினைத்த திருமேனி கொண்டு தோன்றி அருள் புரிகின்றாய். பளிங்கு தன்கண் சார்ந்த பொருளின் தன்மைகளைப் புலப்படுத்தி அவற்றின் தன்மை தனக்கெய்தலின்றித் தனித்து விளங்குமாறு போன்று மேம்பட்டு விளங்குதல் நின்திருவுருவின் இயல்பென உணர்ந்தோம் என்பது இத்திருப்பாடலின் பொருளாகும். இத்திருப்பாடலை அடியொற்றியமைந்தது,
சுருதி வானவனாம் திருநெடுமாலாம்சுந்தர விசும்பின் இந்திரனாம்பருதி வானவனாம் படர்சடை முக்கட்பகவனாம் அகவுயிர்க் கமுதாம்எருது வாகனனாம் எயில்கள் மூன்றெரித்தஏறுசேவகனுமாம் பின்னும்கருதுவார் கருதும் உருவமாம் கங்கைகொண்ட சோளேச் சரத்தானே
எனவரும் கருவூர்த்தேவர் திருவிசைப்பாவாகும்.
இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றால் தெய்வங் கொள்கை யுடையாரும், அக்கொள்கையினை உடன் படாதாருமாகிய எல்லாச் சமயத்தார் செய்யும் வழிபாடுகளும் முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனையே சாருமென்பதும், பல சமயத்தாரும் தத்தம் தத்துவக் கொள்கைகள் காரணமாக முரண்பட்டு நிற்கும் சமயப் பிணக்கங்களில் ஈடுபட்டு மக்கள், தம்முள் மாறுபட்டுக் கலாம் விளைத்தல் இறைவனது அருட் குறிப்புக்கு மாறான செய்கை என்பதும் திருமுறை ஆசிரியர்கள் மேற்கொண்டொழுகிய சமயப் பொதுநிலைக் கொள்கை (சைவத்தின் சமரசம்) ஆதல் நன்கு புலனாதல் காணலாம்.
இவ்வாறு சங்காலம் முதலாக நம் நாட்டில் நிலவி வரும் சமயப் பொதுநிலைக் கொள்கைக்கு மாறான மதப் பூசல்களும், மதச்சடங்குகளும், பிற்காலத்தில் பெருகிய சாதி வேறுபாடுகளும் தமிழகத்திற் பரவி நாட்டு மக்களின் ஒற்றுமையுணர்வினைச் சிதைத்து அயல் நாட்டாருக்கு நம்மை அடிமைப்படுத்திய இருட் காலத்தே இறைவனது அருளால் தோன்றியவர் அருட் பிரகாச வள்ளலார். மக்கள் அனைவரையும் ஒரு குலத்தவராகக் கருதி மன்னுயிர்களுக்கெல்லாம் அன்பு செய்யும் அருள் நலம் வாய்ந்த அடிகளார், தம் காலத்தின் சமய வேறு பாடுகளால் நிலவிய பகைமையுணர்ச்சியைப் போக்கி எல்லாச் சமயவழிபாடுகளும் முழுமுதற் பொருளாகிய ஒன்றையே சென்று சார்வன என முன்னோர் கொண்டொழுகிய சமயப் பொது நிலையை யாவரும் உணர அறிவுறுத்தலையே தமது குறிக்கோளாகக் கொண்டனர். உத்தஞான சிதம்பரமாகிய வடலூர்ப் பெருவெளியில் எல்லா மக்களும் தத்தம் வேறுபாடுகளை மறந்து ஒரேகுலத்தார் என்னும் ஒற்றுமை யுணர்வுடன் முழுமுதற் பொருளை அருவுருவத் திருமேனி யுடையதாய்ப் பேரொளிப் பிழம்பினதாய், ஆதியும் அந்தமுமில்லா அரும் பெருஞ்சோதியாம் நிலையில் கருதி வழிபட்டு உய்தியடைதற் பொருட்டு ஞானசபையை நிறுதியருளி னார்கள் என்பது யாவரும் அறிந்த செய்தியாகும்.
வேறுபடும் சமய மெல்லாம் புகுந்து பார்க்கில்விளங்கு பரம் பொருளேநின் விளையாட்டல்லால்மாறுபடும் கருத்தில்லை முடிவில் மோனவாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற் றம்மா
(தாயு-கல்லா-25)
எனத் தாயுமானப் பெருந்தகையார் அறிவுறுத்திய சமயப் பொது நிலைக் கொள்கையைத் தமிழ்மக்கள் நெஞ்சத்தில் நன்கு வேரூன்றச் செய்து, அதன் பயனாக நாட்டில் நிலவும் சமயப் பூசல்களை அறவே அகற்றுதலைத் தமது குறிக்கோளாகக் கொண்டு அருட்பிரகாச வள்ளலார் அருளிய திருப்பாடல்கள் பலவாகும். இறைவனை விழைந்த ஆருயிர்த் தலைவி ஒருத்தியின் அநுபவ மாலையில்,
பெருகியபேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும்பெருந்தகை என்கணவர் திருப்பேர்புகல் என்கின்றாய்அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன்என்பேன்நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன்பருகு சதாசிவம் என்பேன் சத்தி சிவம் என்பேன்பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரம மென்பேன்துருவு சுத்தப் பிரமம் என்பேன் துரியநிறை வென்பேன்சுத்தசிவம் என்பன் இவை சித்து விளையாட்டே
(திருவருட்பா-5801)
எனத் தன் ஆருயிர்த் தலைவனாகிய இறைவன் பல்வகைச் சமயத் தாராலும் வழிபடப் பெறும் ஒருவனாகத் திகழும் உண்மையினைத் தலைவி தன் தோழிக்கு எடுத்துரைக்கின்றாள். அது கேட்ட தோழி ஞானப் பெருவெளியாகிய அம்பலத்திலே அருள் நடம் புரியும் நம் பெருமானுக்குப் புறச் சமயக் கடவுளர்களின் பெயர்களையும் நீ இயைத்துரைப்பது பொருந்துமா என வினவுகின்றாள். அவள் கேட்ட வினாவுக்கு விடைகூறுவதாக அமைந்தது,
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்பிற்சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய்பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எப்பெயர் ஒவ்வாதோஅச்சமயத் தேவர் மட்டோ நின்பெயர் என்பெயரும்அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரேசிற்சபையில் என்கணவர் செய்யும் ஒருஞானத்திருக்கூத்துக் கண்டளவே தெளியும் இது தோழி
(திருவருட்பா 5802)
எனவரும் பாடலாகும்.
இதன் கண், இந்நாட்டில் இதுவரை தோன்றி வளர்ந்துள்ள சமயங்களின் தெய்வப் பெயர்களும், இனிப் புதுவதாகத் தோன்ற விருக்கும் சமயங்களின் தெய்வப் பெயர்களும், இந்நாட்டில் முன் இல்லாதனவாய்ப் பின் வந்து புகுந்த சமயங்களின் தெய்வப் பெயர்களும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனையே குறிக்கும் எனம்வு, பித்தன் என்ற பெயரையே விரும்பி ஏற்றுக் கொண்ட பெருமான் பிற சமயப் பெயர்களையும் வெறுக்காது ஏற்றுக் கொள்வான் எனவும் சுவைபடக் கூறும் நிலையில் அமைந்தது,
பிற்சமயத்தோர் பெயரும் அவர்பெயரேகண்டாய்பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எப்பெயர் ஒவ்வாதோ
என்ற தொடராகும்.
ஒன்றாய்ப் பலவாய் உயிர்க்குயிராய் விளங்கும் இறைவன் ஞானமயமாகிய பெருவெளியிலே திருவருட்பேரொளி வடிவாய் எல்லார்க்கும் பொதுவாய் நடம் புரிந்தருள் கின்றான் என்னும் பேருண்மையை அறிவுறுத்தும் நிலையில் அமைந்ததே தில்லைச் சிற்றம்பலத் திருக்கோயிலாகும். எல்லாம் வல்ல இறைவன் சமயங் கடந்த தனிமுதற் பொருளாய் எல்லாவுயிர்களும் உய்திபெறும் முறையில் இம்மன்றத்திலே அருட்கூத்து இயற்றுகின்றான் என்பது சிவநெறிச் செல்வர்களது துணிபாகும். பல்வேறு சமயங்களையும் கடைப்பிடித்துத் தொழுகின்ற எல்லா மக்களும் தம் மிடையேயுள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் எனத் திருமூலர் அறிவுறுத்திய பொதுமை நிலையில் நின்று இறைவனை வழிபடும் முறையில் அமைந்ததே இத்தில்லையம்பலமாகிய பொதுமன்றமாகும். இவ்வாறு எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு சமயங் கடந்த தனிமுதற் பொருளை வழிபடும் சைவசமயத்தினரால் சோதிப் பொருளாகிய இறைவனது இயல்பினை எல்லார்க்கும் புலப்படுத்தும் நிலையில் அமைக்கப் பெற்ற இத்தெய்வசபையின் அமைப்பினையும் இதனைக் கண்டு அமைத்த சைவ சமயத்தின் சிறப்பினையும் அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது,
சைவ சமயமே சமயம் சமயா தீதம்பழம்பொருளைக்கைவந்திடவே மன்றுள் வெளிகாட்டு மிந்தக் கருத்தை விட்டுப்பொய்வந் துழலும் சமய நெறி புகுதல் வேண்டாம் முத்திதரும்தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாரும் செகத்தீரே
எனத் தாயுமானார் அருளிய திருப்பாடலாகும். அப் பெருந் தகையார் அருளிய வண்ணம் சமயாதீதப் பழம் பொருளாகிய இறைவனை ஞானப்பொதுவில் ஆடல் புரிவோனாகக் கண்டு வழிபடும் தெய்வசபையினையே அருட்பிரகாச வள்ளலார் உத்தரஞான சிதம்பரமாகிய வடலூர்ப் பெருவெளியில் 1879 ஆம் ஆண்டில் நிறுவியருளினார்கள். வள்ளலார் நிறுவிய தெய்வசபையில், இயற்கை உண்மைத் தனிப்பெயரும் பொருளாய், இயற்கை விளக்கத் தனிப்பெரும் பதமாய், இயற்கை இன்பத் தனிப் பெருஞ்சுகமாய்ப் பிரிவின்றி நிறைந்த தன்மையராகிய அருட்பெருஞ்சோதி ஆண்டவரது வழிபாடு எல்லாச் சமயத் தார்க்கும் உரிய பொது வழிபாடு எல்லாச் சமயத்தார்க்கும் உரிய பொது வழிபாடாக நிகழ்ந்து வருவது இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.
அருட்பெருஞ்சோதி – அருட்பெருஞ்சோதிதனிப்பெருங்கருணை – அருட்பெருஞ்சோதி
எனவரும் இத் தொடரையே திருவருட்பிரகாச வள்ளலார் தாம் பரப்ப எண்ணிய சுத்த சன்மார்க்கத்திற்குரிய மந்திர மொழியாக அறிவுறுத்தியுள்ளார். இவ்வுண்மை வள்ளலாரின் பேருபதேசமாகிய உரைநடைப் பகுதியாலும், விண்ணப்பங்களாலும் அருட் பெருஞ்சோதி அகவலாலும் நன்கு தெளியப்படும். தயவு கருணை அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும்; ஆதலால் பெரிய பெருந்தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம் (சொல்லின் பொருள்) இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்பாநு பவம் பெறுவதற்குத் தடையில்லை சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் (தாயுமானவர் – கருணாகரக் கடவுள்) என்னும் பிரமாணத்தால் உணர்க என வள்ளலார் தாம் அறிவுறுத்திய திருமந்திரத்தின் பொருளைச் சுருக்கமாக விளக்கியுள்ளமை காணலாம்.
அருளே திருமேனியாகக் கொண்ட இறைவனை அகத்தும் புறத்தும் பொருளாகக் கொண்டு இடைவிடாது நினைந்து போற்றும் அடியவர் உள்ளத்துள்ளே அம்முதல் வனது பெருங்கருணை வெள்ளம் அகத்தேயும் நிறைந்து புறத்தேயும் வெளிப்பட்டு உலகில் துன்புறும் உயிர்களது துயர்களைத் துடைக்கும் பற்றுக்கோடாய் விளங்கும் என்பது,
கருணைநிறைந்து அகம்புறமும் துளும்பி வழிந்துயிர்க் கெலாம் களைகண் ஆகித்தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்றகண்ணுடையோய் சிதையா ஞானப்பொருள் நிறைந்த மறையமுதம் பொழிகின்றமலர்வாயோய் பொய்ய னேன்றன்மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையுமுட்கசிந்துருக்கும் வடிவத் தோயே! (திருவருட்பா 2070)
என அடிகள் அருளிய திருப்பாடலால் அறிவுறுத்தப் பெற்றுள்ளமை காணலாம். எல்லா அண்டங்களின் அகத்திலும் அவற்றைக் கடந்து அப்பாற்பட்டு அவற்றின் புறத்திலும் மன்னுயிர்களின் உள்ளத்திலும், ஒளியுருவாய்த் தோன்றி உலகின் புற இருளையும் உயிர்களின் அக இருளையும் நீக்கி அருள்புரியும் – பேரருளும் பேராற்றலுமுடைய இறைவன் பெருஞ்சோதியாகத் திகழ்கின்றான் என்னும் இவ் வுண்மையினை,
காரொளிய திருமேனிச் செங்கண்மாலும்கடிக்கமலத் திருந்தவனும் காணாவண்ணம்சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்திகழொளியைச் சிந்தைதனை மயக்கம் தீர்க்கும்ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்ஏழுலகும் கடந்தண்டத் தப்பால் நின்றபேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்பேசாத நாளெல்லாம் பிறவாநாளே. (6-1-11)
எனவரும் பெரிய திருத்தாண்டகம் நன்கு புலப்படுத்தக் காணலாம். இதன்கண் செங்கண்மாலும் கடிக்கமலத் திருந்தவனும் (பிரமனும்) காணா வண்ணம் சீரொளிய தழற் பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழ்ஒளியென்றது, எல்லாம் வல்ல இறைவன் அண்டத்தினுள்ளே ஒளியுரு வினனாய்த் திகழும் திறத்தைக் குறிப்பதாகும். இங்ஙனம் தோன்றும் ஒளியினை அண்ட ஒளி என்பர் பெரியோர். சிந்தைதனை மயக்கம் தீர்க்கும் ஏரொளி என்றது, கண்ணை மறைத்து நிற்கும் புற இருளைப் போலன்றி ஏனைய பொறி களையும் மறைப்பதாய், உயிர்களது அறிவு இச்சை தொழில்களையும் மறைந்து நிற்கும் ஆணவமாகிய அகவிருளைப் போக்கும் பொருட்டு உயிர்களின் சிந்தையில் தோன்றி நின்றருளும் திருவருள் ஒளியினை உடம் பினகத்தே உயிர்களின் உள்ளே தோன்றும் இவ்வொளியினைப் பிண்ட ஒளி என்பர் பெரியோர். (பிண்டம் -உடல்), ‘இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற பேரொளி’ என்றது, அண்டங்களிலுள்ள ஞாயிறு விண்மீன் முதலிய எல்லாப் பொருள்களுக்கும் ஒளிவாங்குவதாய் அண்டங்களைக் கடந்து தோன்றும் பேரொளியினை. இதனை அகண்டவொளி என்பர் அறிஞர். இதன் இயல்பினை,
அண்டமாரிரு ளூடு கடந்தும்பர்உண்டு போலுமோர் ஒண்சுடர் அச்சுடர்கண்டிங் காரறிவார் அறிவாரெலாம்வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே. (5-97-3)
எனவரும் திருக்குறுந்தொகையில் திருநாவுக்கரசர் விளக்கியருளிய திறம் நினைந்து போற்றற் குரியதாகும். இங்ஙனம் எல்லாம் வல்ல இறைவன் தன்னிற் பிரிவிலா அருளையே திருமேனியாகக் கொண்டு உயிர்களின் அகத்திலும் அண்டங்களின் உள்ளும் புறமும் சோதிப் பொருளாகத் திகழும் திறத்தினை,
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்சோதிக்க வேண்டா சுடர் விட்டுள்ள எங்கள் சோதிமாதுக்கம் நீக்கலுறுவீர் மனம் பற்றி வாழ்மின்சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே. (3-54-5)
எனவரும் திருப்பாசுரத்துள் ஆளுடைய பிள்ளையார் விளக்கி யுள்ளமை அறிதற் குரியதாகும். இத்திருப்பாசுரத்தில் சுடர் விட்டுளன் எங்கள் சோதி எனவரும் தொடரில் சுடர் என்றது அண்டத்தின் அகத்தும் புறத்தும் காணப்பெறும் ஒளியின் பரந்து திகழும் பருமை நிலையையும், சோதி என்றது, உயிர்களின் அகத்தே திகழும் நுண்மை நிலையையும் குறிப்பதாகும் எனக் கொள்ளுதல் பொருந்தும்.
இத்திருப்பாசுரத் திருப்பாடலுக்கு உரை கூறப் புகுந்த சேக்கிழார் பெருமான் :-
தோன்று காட்சி சுடர்விட்டுளன் என்பதுஆன்ற அங்கிப் புறத்தொளியாய் அன்பின்ஊன்ற உள்ளெழுஞ் சோதியாய் நின்றனன்ஏன்று காண்பார்க் கிதுபொரு ளென்றதாம்.
(பெரிய – சம்பந்தர் – 825)
மாதுக்கம் நீங்கலுறுவீர் மனம் பற்றும் என்பது
ஆதிச்சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள்ளாக்கிப்
போதித்த நோக்குற் றொழியாமற் பொருந்தி வாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின்நெறி பேர்மின் என்றாம்.
(பெரிய – சம்பந்தர் 826)
எனவரும் செய்யுள்களால் இதன் பொருளைத் தெளிவுபடுத்தி யுள்ளார். சுடர் என்பது ஒளிப் பொருளின் புறத்தோற்றத் தையும், சோதி என்பது அதன் அகத்தோற்றத்தையும் குறிக்கும் நிலையில், இத்திருப் பாசுரத்தில் ஆளப் பெற்றுள்ளமை மேற்காட்டிய சேக்கிழார் வாய்மொழியாற் புலனாதல் காணலாம்.
சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே
(திருவாசகம்-அருட்பத்து -1)
எனவரும் திருவாசகத் தொடரும் இப்பொருளில் ஆளப் பெற்றுள்ளமை காண்க.
இரந்திரந்துருக என்மனத்துள்ளே எழுகின்ற சோதியே
(திருவா-கோயிற்-6)
எனவரும் திருவாசகம் உயிர்களின் உள்ளத்தெழும் சோதியாய் இறைவன் விளங்கும் திறத்தைச் சுட்டி நிற்றல் காண்க. அன்பினாற் கசிந்துருகும் நெஞ்சத்தினராகிய அடியாருள்ளத்திலும் ஞானமயமான அம்பலத்திலும் ஒளியே பெருக எல்லாம் வல்ல இறைவன் எழுந்தருளியுள்ளான் என்பதனை,
உருகுதலைச் சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியேபெருகுதலைச் சென்று நின்றோன்
(திருக்கோவையார் – 104)
எனவரும் திருச்சிற்றம்பலக் கோவையாரில் மணிவாசகப் பெருந்தகையார் விளக்கியுள்ளார்.
உலகில் உள்ள ஞாயிறு, திங்கள், தீ, விண்மீன்கள் ஆகிய சுடர்களுக்கெல்லாம் ஒளி வழங்குவது இறைவன் திருவடியாகிய அருள் ஒளியே என்பதனை,
மெய்ச் சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல்உத்தர கோச மங்கைக் கரசே.
(திருவாச – நீத்தல் விண்ணப்பம் 15)
எனவரும் தொடரால் திருவாதவூரடிகள் விளக்கியுள்ளமை காணலாம்.
இவ்வாறு இறைவனை அகத்தும் புறத்தும் ஒளியுருவினனாக வைத்துப் போற்றும் வழிபாட்டு நெறியே இறைவன் ஆழநிழலில் அமர்ந்து அருந்தவ முனிவர் நால்வர்க்கும் அறிவுறுத்திய ஒளி நெறியாகும் என்பதனை,
ஓரால் நிழல் ஒண்கழல் இரண்டும்முப்பொழு தேத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை
(1-12-6/8)
எனவரும் திரு எழுகூற்றிருக்கைத் தொடரில் ஆளுடைய பிள்ளையார் தெளிவுபடக் கூறியுள்ளமை காணலாம். இங்ஙனம் சோதிப் பொருளாக இறைவனைப் போற்றி வழிபடும் இவ் வொளிநெறியினையே திருவாதவூரடிகள் சிறப்பு வழிபாடாகக் கொண்டனர் என்பது,
ஆதியும் அந்தமு மில்லா அரும்பெருஞ் சோதியைகேழில் பரஞ்சோதி கேழில்பரங்கருணைசோதியாய்த் தோன்றும் உருவமே.
என்றாங்கு வரும் திருவாசகத் தொடர்களால் இனிது விளங்கும். அறிவினாற் சிவனேயாகிய மாணிவாசகப் பெருந்தகையார் அருளிய திருவாசகத்தேனை இடைவிடாது பருகி இன்புற்ற இராமலிங்க வள்ளலார் வாதவூர் அடிகள் அறிவுறுத்திய சோதி வழிபாடே இக் காலத்தில் சமய வேறுபாடின்றி எல்லா மக்களையும் தம்பால் ஈர்க்கவல்லது என்னும் மெய்ம்மையைத் தெளிந்து ‘அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி – தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி’ என்னும் மெய்ம் மொழியைச் சோதி வழிபாட்டிற்குரிய திருமந்திரமாக அறிவுறுத் தருளிய திறம் இங்கு மனங்கொளத்தகுவதாகும் இம் மந்திரத்தில் அமைந்த அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை என்ற தொடர்கள் திருவாவூதரடிகள் அருளிய திருவெம்பாவை எட்டாம் திருப்பாடலில் உள்ள ‘கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை’ என்ற தொடரை அடியொற்றி அமைந்தனவாகும். கேழில் பரஞ்சோதி = ஒப்பு இல்லாத பெருஞ்சோதி, என்றது ஆதியும் அந்தமுமில்லாத அரும்பெருஞ்சோதியாகிய கடவுளை, கேழில் பரங்கருணையென்றது, அம்முதல்வனினின்றும் பிரித்துணர வொண்ணாத திருவருள் விளக்கமாகிய சிவசத்தியை. எல்லாம் வல்ல இறைவன் அருளே உருவாகத் திகழும் தனிநிலையில் ‘சிவம் எனவும், தனது பேரருளின் விரிவாய் உலகுயிர்களில் எல்லாம் கலந்து நின்று அவற்றைத் தொழிற் படுத்தும் நிலையில் ‘சத்தி எனவும் திகழ்கின்றான் என்பர் பெரியோர். இந்நுட்பம்,
கற்பனை கடந்தசோதி கருணையே உருவமாகிஅற்புதக் கோலம்நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்றுபொற்புடன் நடஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி
(பெரிய-தில்லைவாழ் -2)
எனவரும் சேக்கிழாரடிகள் வாய்மொழியால் இனிது புலனாதல் காணலாம்.
இதுகாறும் கூறியவாற்றால் உலகெலாம் இயக்கியருளும் அருளே உருவாகிய இறைவன், அண்டங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாலும், அண்டத்தின் உள்ளும், ஆன்மாக்களின் அகத்திலும் சுடர்விட்டு விளங்கும் சோதியாய்த் திகழ்கின்றான் என்பதும், அருட்பெருஞ்சோதி ஆண்டவனாகிய அம்முதல்வனது தனிப் பெருங்கருணையே உலகுயிர்களை யெல்லாம் சூழ்ந்து தனது விரிவுக்குள் அடக்கிக் கொண்டு மன்னுயிர்களின் வாழ்க்கைக்குப் பற்றுப் கோடாக அமைந்துள்ளது என்பதும், எல்லாம் வல்ல சிவபரம் பொருளைச் சமயங் கடந்த நிலையில் ஒளிப் பிழம்பினனாகப் போற்றும் முறையில் அமைந்ததே திருச்சிற்றம் பலமாகிய தெய்வ சபை என்பதும் ஆகிய உண்மைகள் ஒருவாறு விளக்கப் பெற்றன. இவை திருமூலர் திருமந்திரம் முதலிய சைவத் திருமுறைகளிலும் தாயுமானவர் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளனவேயன்றிப் புதியன அல்ல. இவ்வுண்மைகளைத் திருவுளங் கொண்ட இராமலிங்க வள்ளலார் உலக மக்களை ஆண்டவன் திருவருளில் ஈடுபட்டு உய்திபெறச் செய்யும் முறையில்,
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதிதனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என்னும் திருமந்திரத்தை மக்களுக்கு உபதேசித் தருளினார்.
தவமான சத்தியஞானப் பொதுவில்துவமார் துரியஞ் சொருபமதாமே. (திருமந்திரம் – 25 38)
எனத் திருமூலரும்,
செப்பரிய சமயநெறி யெல்லாந் தந்தம்தெய்வமே தெய்வமெனுஞ் செயற்கையானஅப்பரிசா ளருமஃதே பிடித்தா ரிப்பால்அடுத்தஅந் நூல்களும் விரித்தே அநுமானாதிஒப்பவிரித் துரைப்ப ரிங்ஙன் பொய் மெய்யென்னஒன்றிலை ஒன்றெனப்பார்ப்ப தொவ்வாதார்க்கும்இப்பரிசாஞ் சமயமாய் அல்லவாகியாதுசமயமும் வணங்கும் இயல்பதாகி (தாயுமா – ஆகார -9)
இயல்பென்றும் திரியாமல் இயம மாதிஎண்குணமும் காட்டியன்பால் இன்பமாகிப்பயனருளப் பொருள்கள் பரிவாரமாகிப்பண்புறவுஞ் சௌபான பட்சங்காட்டிமயலறு மந்திரஞ் சிட்சை சோதிடாதிமற்றங்க நூல் வணங்க மௌன மோலிஅயர்வறச் சென்னியில் வைத்து ராசாங்கத்தில்அமர்ந்தது வைதிகச் சைவம் அழகிதந்தோ (தாயுமா – ஆகார -10)
எனத் தாயுமான அடிகளும் அருளிய திருப்பாடல்களால் சத்திய ஞானப் பொதுவாகிய சிதம்பரம் என்னும் சிற்றம்பலத்தின் இயல்பும், எல்லாம் வெளியே எனத் திகழும் அத் தெய்வ சபையினை எல்லாச் சமயத்தவரும் வந்து இறைஞ்சாநிற்பர் என்னும் உண்மையும் நன்குபுலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். இவ்வாறு முன்னைய அருளாளர்களால் விளக்கப் பெற்றதும், சமய வேறு பாடின்றி எல்லாச் சமயத்தாரும் அன்பினாற் கூடியிருந்து வழிபாடு செய்தற் குரிய பொதுமை வாய்ந்ததுமாகிய தெய்வ சபையினையே வள்ளலார் உத்தரஞான சிதம்பரமான வடலூர்ப் பெருவெளியில் இற்றைக்கு 114 ஆண்டுகட்கு முன்னே நிறுவி யுள்ளார்கள் என்பது தமிழ் மக்கள் எல்லாரும் உளங்கொளத்தக்க செய்தியாகும்.
எனவே, வள்ளலார் கண்ட உத்தரஞான சிதம்பரத்து சத்தியஞானசபை வழிபாடு முன்னைப் பழமைக்கும் பழமைய தாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையதாய் விளங்கும் தனிச் சிறப்புடையது என்பது நன்கு தெளியப்படும்.



