திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

7. ஓதாதுணர்ந்த மாதவச் செல்வர்

நம் முன்னோர் செய்த நற்றவத்தின் பயனாக அறந்தரும் நாவுக்கரசும் ஆலாலசுந்தரரும் பிறந்தருளிய திருமுனைப் பாடி நாட்டிலே (தென்னார்க்காடு மாவட்டத்திலே) இற்றைக்கு 163 ஆண்டுகளுக்கு முன்னே மருதூர் என்னும் சிற்றூரில் வாழ்ந்த கருணீக வேளாளர் இராமையாப்பிள்ளை அவர்கட்கும், அவர்தம் ஆறாவது மனைவியராகிய சின்னம்மையாருக்கும் ஐந்தாவது மகவாகத் தோன்றியவர் இராமலிங்க வள்ளலார். இவர் இளமையிலேயே தந்தையையும் தாயையும் இழந்து தமையனார் சபாபதிப் பிள்ளை அவர்களால் வளர்க்கப் பெற்றார். சென்னையில் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயின்று புராணச் சொற்பொழிவு செய்தலைத் தமது வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை அவர்கள், தம் தம்பியாரைத் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பிவைத்தார். மகாவித்துவான் முதலியாரவர்கள் கருவிலே திருவுடையராகிய இராமலிங்கரது பக்குவ நிலையையும், நுண்மாண் நுழை புலத்தையும் கூர்ந்துணர்ந்து இவர் தாமே பயிலும் தரமுடையாரென்பதனை எண்ணிக் கல்வி பயிற்றுவதைக் கை விட்டார். இந்நிலையில் இராமலிங்கர் சென்னையில் கந்த கோட்டத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை நாள்தோறும் வழிபட்டுக் கற்றதனாலாய பயனைப் பெற்று மகிழ்ந்தார்.

செந்தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானையே தமது வழிபடு கடவுளாகவும், முதற் குரவனாகவும் கொண்டு தமிழ் நூல்களைப் பிறரிடம் சென்று ஓதாமல் தாமே பயின்று தேனினுமினிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடும் தெய்வப்புலமை கைவரப் பெற்றார். திருஞானசம்பந்தரைத் தமது வழிபடு குருவாகவும், ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கும் தேனினுமினிய திருவாசகத்தைத் தமது வழிபாட்டு நூலாகவும் கொண்டு இறைவன் திருவருளில் திளைத்து மகிழும் செம்புலச் செல்வராகத் திகழ்ந்தார். ஆதலின் இராமலிங்கரை ஓதாதுணர்ந்த மாதவச் செல்வரெனப் போற்றுதல் பெரிதும் பொருத்த முடையதாகும்.

இராமலிங்கர் தாம் ஐந்து திங்கள் நிரம்பிய குழந்தையா யிருந்த போது அவர்தம் தந்தையார், மனைவி மக்களுடன் சிதம்பரஞ் சென்று திருச்சிற்றம்பலத்தில் அருள் நடம் புரியும் கூத்தப்பெருமானை வழிபாடு செய்து சிற்றம்பலத்தில் அருவ நிலையிலுள்ள சிதம்பர ரகசிய (திருவம்பலச் சக்கர) தரிசனத்துக்காக நின்ற சமயம் தில்லைவாழந்தணர் இரகசியத் திரையைத் தூக்கி ரகசிய தரிசனம் காட்டியபோது அனைவரும் கண்டு வணங்கின ரென்பதும் அந்நிலையில் தாயின் கையில் குழந்தையாயிருந்த இராமலிங்கரும் அத்தெய்வ அருட்காட்சியைக் காணும் உணர்வுடையராய்க் கண்டு மகிழ்ந்தாரென்பதும்

தாய்முதலோ ரொடு சிறிய பருவமதில் தில்லைத்தலத்திடையே திரைதூக்கித் தரிசித்தபோதுவேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்வெளியாகக் காட்டியஎன் மெய்யுறவாம் பொருளே

(திருவருட்பா 4133)

எனவரும் அடிகளாரது வாய்மொழியால் நன்கு துணியப்படும்.

இங்ஙனம் இராமலிங்கர் தமது குழந்தைப் பருவத்தில் கண்டுணர்ந்த சிதம்பர ரகசிய தரிசனமாகிய அருட் பெருஞ்சோதி வழிபாட்டினைத் தமது நாற்பத்தொன்பதாம் அகவையில் வடலூர்ப் பெருவெளியாகிய உத்தர ஞான சிதம்பரத்திலே சத்தியஞானசபையில் அமைத்துக் காட்டியமை இங்குக் கருதற்குரியதாகும்.

ஞானமே திருமேனியாகவுடைய குமாரசிவமாகிய இறைவன் “கரவாகிய கல்வியுளார் கடைசென்று இரவாவகை இராமலிங்கருக்கு மெய்ப்பொருட் கல்வியாகிய நிதியத்தை வாரி வழங்கினான்” என்பது அடிகள் வரலாற்றிற் காணப்பெறும் சிறப்புடைய நிகழ்ச்சி யாகும். ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து எனத் தெய்வப்புலவர் அருளியவாறு முன்னைப் பிறப்பில் பெற்ற கல்வி அறிவு ஒழுக்கமாகிய அநுபவங்கள் விட்டகுறை தொட்டகுறை என்னுமாறு இராமலிங்கருக்குத் தன்னியல்பில் புலப்பட்டுத் தோன்றுமாறு இறைவன் அருள்புரிந்தனன். தமது மூன்றாவது ஆண்டிலேயே காழிக்கவுணியப் பிள்ளையார் உமையம்மையார் அளித்த பாலடிசிலைப் பருகி வேத முதலாய எல்லாக் கலைகளையும் ஓதாது உணர்ந்தருளினார் என்பது வரலாறு. ஓதாதுணர்ந்த ஆளுடைய பிள்ளையாராகிய பெருமானைத் தமது குருவாசகக் கொண்டு நாள்தோறும் பிள்ளையார் அருளிய திருநெறிய தமிழாகிய திருமுறைகளை ஓதிவழிபட்ட இராமலிங்க வள்ளலாரும் பிளர் துணையின்றிக் கலைநூல்களைத் தாமே பயின்றுணரும் புலமைநலம் பெற்று ஓதாதுணர்ந்த மாதவச் செல்வராயினார் என்பது அவர்தம் வாழ்க்கை வரலாற்றால் இனிது புலனாகின்றது.

தாம் பள்ளியிற் சென்று பிறர்பாற் கல்விபயிலாத நிலையில் தம்முள்ளத்திருந்து கலைநூல்களை அறிவுறுத்திய குருவும், ஒன்பதாம் ஆண்டளவாகிய இளமைப் பருவத்திலேயே தன் திருவருளுக்குரிமை செய்து தன்பொருள்சேர் புகழ்த்திறங்களைச் செந்தமிழாற் பாடச் செய்தருளிய தெய்வமும் ஆகத் திகழ்பவன் எல்லாம் வல்ல குமாரசிவமாகிய கூத்தப்பெருமானே என்னும் இவ்வுண்மையினை,

ஏதுமறியா திருளில் இருந்த சிறியோனைஎடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்துஓதுமுறை முதற்கலைகள் ஓதாமல் உணரஉணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்தீதுநெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்திருஅருள்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான் மருளும்போதுமயங் கேல்மகனே என்று மயக்கெல்லாம்போக்கி எனக்குள்ளிருந்த புனித பரம்பொருளே. (3053)

ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கத் தெரியாதழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கவுனைப் பாடிவிரும்பியருள் நெறிநடக்க விடுத்தனை நீயன்றோபொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன் முன்பிறப்பில்புரிந்ததவம் யாததனைப் புகன் றருள வேண்டும்.
துய்யறிவு கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்சுத்தபரி பூரணமாம் சுசரூபப் பொருளே (3055)

சுற்றதுமற் றவ்வழிமா சூதது என்றெண்ணாத்தொண்டரெலாம் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம்புரியும்என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளாள்கற்றது நின்னிடத்தேபின் கேட்டது நின்னிடத்தேகண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தேபெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தேபெரியதவம் புரிந்தேன் என்பெற்றி அதிசயமே (3044)

ஓதாதுணர்ந்திட ஒளி அளித் தெனக்கேஆதார மாகிய அருட்பெருஞ்சோதி (அகவல் 23, 24)

எனவும்,

வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றைவேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்தூண்டாத மணிவிளக்கே பொதுவிலாடும்சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னைஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்டஅருட்கடலே என்னுள்ளத் தமர்ந்ததேவேஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்தெண்ணம் அறிந்தருளாயேல் என் செய்கேனே (2697)

என்னை யறியாப் பருவத்தாண்டு கொண்டஎன்குருவே எனக்குரிய இன்பமே. (2698)

நாதாபொன் அன்பலத்தே அறிவானந்த நாடகஞ்செய்பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்ஓதாதுணர உணர்த்தி உள்ளேநின் றுளவுசொன்னநீதா நினைமறந் தென்நினைக்கேன் இந்த நீணிலத்தே.

(2775)

வேண்டார் உளரோ நின்னருளைமேலோரன்றிக் கீழோரும்ஈண்டார் வதற்கு வேண்டினரால்இன்று புதிதோ யான்வேண்டல்தூண்டா விளக்கே திருப்பொதுவிற்சோதிமணியே ஆறொடு மூன்றாண்டாவதிலே முன்னென்னைஆண்டாய் கருமை அளித்தருளே (3597)

உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்உணர்விலிருந் துணர்த்தி (3159)

எனவரும் வள்ளலார் வாய்மொழிகள் அகச் சான்றுகளாயமைந்து நன்கு புலப்படுத்தல் காணலாம்.

மாற்றமனங்கழியநின்ற இறைவனை வழிபடும் நெறிகளில் அன்பு மீதுர்ந்த பத்திமைப் பாடல்களால் அம்முதல்வனுடைய புகழ்த்திறங்களை இசையுடன் போற்றி வழிபடுதலே எளிமையும் இனிமையும் வாய்ந்த நெறியாகுமென்பர் பெரியோர்.

பத்திமைப் பாடலறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடுநாவே.

(திருஞானசம்பந்தர் 1-8-2)

பத்தனாய்ப் பாடமாட்டேன் (அப்பர் 4-23-1)

அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்

(சேக்கிழார் பெரிய – தடுத்தாட்கொண்ட -70)

பாடும் பணியே பணியா யருள்வாய் (கந்தர நுபூதி – 1)

எனவரும் அருளாசிரியர்கள் வாய்மொழிகள் இத்தகைய பத்திமைப் பாடற்றொண்டின் சிறப்பினை வற்புறுத்துவன ஆகும். இவ்வாறு இறைவனுடைய மெய்யான புகழ்த் திறங்களை இனிய பாடல்களில் அமைத்துப் பாடிப் போற்றுதல் என்பது இறைவன் அருள்பெற்றார்க் கன்றி ஏனையோர்க்கு உலகியற் புலமையால் மட்டும் எளிதில் இயலாத தொன்றாம். உலகியற் புலமையை மட்டும் கொண்ட புலவர்கள் பாடும் செய்யுட்களிலெல்லாம் சிந்தையால் அளவுபடாத இறைவனது புகழ்த்திறங்கள் அடங்கிவிடுவன அல்ல. அவனருளாலே அவன்றாள் வணங்கி என்றவாறு இறைவனது திருவருள் தூண்டுதலின் பயனாக அம்முதல்வன்பால் பேரன்புடைய பத்திநலம் வாய்ந்த பெருமக்கள் பாடிய பாடல்களே இறைவனது அருளின் நீர்மையை உலக மக்கள் உள்ளத்தால் உணர்ந்து போற்றும் படி விரித்துரைக்கவல்ல ஆற்றல் வாய்ந்தனவாகும். எல்லாம் வல்ல இறைவனது திருவருட் கடலில் படிந்து சைவநெறி உலகேழும் பாலிக்கும் தகைமையில் தெய்வநெறிச் சிவம் பெருக்கிய திருநாவுக்கரசர், இயல் இசைத்தமிழாகிய பத்திமைப் பாடல்களால் பாடுமாறு தம்மை உள்நின்றுபாடச் செய்தவன் தம்முயிர்க் குயிராகிய இறைவனே என்னும் உண்மையினை,

பத்திமையால் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்பாமாலை பாடப் பயில்வித்தானை. (6-54-3)

எனவும்,

பன்னிய செந்தமிழ்மாலை பாடுவித்தென்சிந்தை மறுக்கறுத்ததிரு வருளினானை (6-84-4)

எனவும் வரும் தொடர்களில் புலப்படுத்தியுள்ளமை இங்கு நினைக்கத்தக்கது.

செந்தமிழ்ச் சிவநெறியில் வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டமரபினருள் ஒருவராய்த் தன்னை அன்பினால் வழிபட்டு வரும் இராமலிங்கருக்குத் தன் புகழ்த்திறங்களைத் தேனினுமினிய செந்தமிழ்ப் பாடல்களால் பாடுந்திறத்தினை உள்நின்று வழங்கியருளியவன் எல்லாம் சிவபெருமானே என்பது,

உருவத்திலே சிறியேனாகி யூகத்தி லொன்றுமின்றித்தெருவத்திலே சிறு கால்வீசி யாடிடச் சென்ற அந்தப்பருவத்திலேநல் அறிவளித்தே உனைப்பாடச் செய்தாய்அருவத்திலே உருவானோய் நின்தண்ணளி யார்க்குளதே.

(2218)

ஏதுமொன் றறியாப் பேதையாம் பருவத்தென்னைஆட் கொண்டெனை உவந்தேஓதும் இன்மொழியால் பாடவே பணித்தஒருவனே என்னுயிர்த் துணைவாவெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமதுபெம்மான்என் றடிகுறித்துப் பாடும் வகைபுரிந்தபெருமானே நான் செய்த பெருந்தவமெய்ப் பயனே (4165)

எனவரும் அவர்தம் வாய்மொழிகளால் இனிது விளங்கும்.

அருட்பிரகாச வள்ளலார் சங்க நூல்கள், திருக்குறள் நாலடியார் முதலிய நீதி நூல்கள், பன்னிரு திருமுறைகள். சித்தாந்த சாத்திரங்கள், திருவிளையாடல், திருப்புகழ் கந்தரநுபூதி, துறைமங்கலம் சிவப்பிரகாசர் நூல்கள் பட்டினத்தார் தாயுமானார் முதலியோர் அருளியபாடல்கள் ஆகிய செந்தமிழ் நூல்களையும் வேத சிவாகம உபநிடதங்கள் முதலிய வடமொழி நூல்களையும் இறைவன் திருவருளால் தாமே பயின்றுணர்ந்த தவநெறிச் செல்வர் என்பது அவர்கள் அருளிய திருவருட்பாப் பாடல்களில் அவற்றின் சொல்லையும் பொருளையும் கருத்துக்களையும் எடுத்தாண்டுள்ளமையால் நன்கு விளங்கும். கலைமகளைப் போற்றும் பாடலில்,

சங்கம் வளர்ந்திடவளர்ந்த தமிழ்க்கொடியே (2427)

எனத் தமிழின் வண்ணமாகப் போற்றியுள்ளார். இத் தொடர்ப் பொருளைச் சிந்திக்குங்கால் பத்துப்பாட்டு எட்டுத் தொகை முதலிய சங்க இலக்கியத்தில் வள்ளலாருக்குள்ள ஈடுபாடு புலனாகும்.

சாதி சமய வேற்றுமையின்றி உலகமக்கள் அனைவரும் அன்பினால் ஒன்றுபட்டு வாழ்தற்குரிய நெறிமுறைகளை வற்புறுத்தும் வாழ்வியல் நூலாகிய திருக்குறளை வள்ளலார் தம் பாடல்களில் பல இடங்களிலும் எடுத்தாண்டுள்ளார். நெஞ்சறி வுறுத்தல் என்ற பகுதியில் வெகுளியை அடக்குதலின் இன்றியமையாமையை வற்புறுத்துங்கால்,

பாபக்கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்கோபக் கடலிற் குளித்தனையே தாபமுறச்செல்லாவிடத்துச் சினந்தீது சொல்லிடத்தும்இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையோ மல்லல்பெறத்
தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க என்றதனைப்பொன்னைப்போல் போற்றிப் புகழ்ந்திலையேஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போல் என்னும்திகழ்வாய்மையும் நீ தெளியாய் (432-4-5)

எனவரும் நெஞ்சறிவுறுத்தற் பகுதியில் வெகுளாமை என்ற அதிகாரத்தில் வரும் மூன்று திருக்குறளையும் ஒரு சேர எடுத்தாண்டமை காணலாம்.

நாழிகைமுன் நின்றார் இந்தரார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்சென்றார் எனக் கேட்டுந் தேர்ந்திலையே (475)

என யாக்கை நிலையாமையை உணர்த்தும் இக்கண்ணி.

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணிஇன்னினியே செய்க அறவினை இன்னினியேநின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேள்அலறச்சென்றான் எனப்படுத லான் (நாலடியார் 29)

எனவரும் நாலடியார் செய்யுளை அடியொற்றி யமைந்திருத்தல் காணலாம்.

பரஞ்சோதி முனிவர்பால் உபதேசம் பெற்ற மெய்கண்ட தேவநாயனாருக்குத் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள பொல்லாப் பிள்ளையார் சித்தாந்தச் செம்பொருளை விளங்க அருளிச்செய்த திறத்தையும், கணேசர் கபிலருக்கு அருள் செய்த திறத்தையும்,

விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன்வித்தகக் கபிலனாதியர்க்கேகண் அருள் செயும்நின் பெருமையை அடியேன்கனவிலும் நனவிலும் மறவேன் (2533)

எனவரும் வல்லபை கணேசர் பிரசாத மாலையில் விளக்கியுள்ளமை காணலாம்.

புறத்தே உலகியற் பொருளைப் பற்றி ஓடும் இயல்பினதாகிய மனமானது ஆன்ம அறிவுக்குக் கட்டுப்பட்டு அடங்குதலால் வரும் பயனை எடுத்துரைப்பது,

சுற்றிமனம்தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொருமானடங் கொள்பாத மலர்வாய்க்கும் (திருவருட்பா 608/9)

எனவரும் நெஞ்சறிவுறுத்தல் கண்ணியாகும்.

இது, சிவஞானிகளது மன அடக்கத்தால் உலக மக்களுக்கு உண்டாகும் நலங்களை விரித்துரைக்கும் நிலையிலமைந்த பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடலின் சொற்பொருள் நலன்களை நினைவு படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.

தாமடங்க இந்தப் தலமடங்கும் தாபதர்கள்தாமுணரில் இந்தத் தலமுணரும் தாமுனியில்பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும்நாமடந்தை நில்லாள் நயந்து.

சிவஞானம் பெற்ற ஞானிகளுக்கும் பழக்க வாசனையால் அவர்தம் அறிவு புறத்தே செல்லுதல் கூடும். அவ்வாறு தம் அறிவு புறத்தே செல்லாதவாறு மடக்கி அகத்தே ஒரு குறியின்கண் நிறுத்தி நிட்டைகூடும்படி திருவைந்தெழுத்தை ஓதும் முறையில் உள்ளத்தே வைத்துச் சிந்திக்கச் சிந்தனையானது, புறத்தே செல்லும் நோக்கத்தைப் பற்றறக் கெடுத்து, ஞானசொரூபத்தை இனிது விளக்கி ஈறிலின்பமயமான பூரண நிலையிற் கொண்டு செலுத்தும். ஆதலால் சித்தத்தே இறைவனைச் சிந்தித்து வழிபடுவோர் அப்பூசைக்கு அங்கமாக அகத்தே செய்தற்குரிய தியானத்தையும் திருவைந் தெழுத்தைச் சாதனமாகக் கொண்டே செய்தல் வேண்டும் எனவும், அவ்வாறு செய்யும் முறையில் இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவன் எனவும், அந்நிலையில் ஆன்மாவுக்கு ஆண்டானடிமைத் திறம் இனிது வாய்க்குமெனவும் வற்புறுத்துவது,

அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை சுரண்டரனைஅஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில்அஞ்செழுத்தாற்குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில்அண்டானாம் சேடனாம் அங்கு.

எனவரும் சிவஞானபோத வெண்பாவாகும். இதன்கண் குண்டலி என்றது உந்தித்தாமரையை. இதுவே அகப் பூசைக்குரிய வேள்வித் தானம். இதயம் என்றது நெஞ்சத் தாமரையை. இது அகப்பூசைக்குரிய பூசைத் தானமாகும். கோதண்டம் என்றது புருவநடுவினை. இது தியானத் தானமாகும். சானித்தல் தியானித்தல், அண்டன் என்றது எல்லா அண்டங்களையும் இயக்கும் இறைவனை சேடன் என்றது அம்முதல்வனுக்கு என்றும் அடிமைத் திறத்தினனாகிய ஆன்மாவை.

இங்ஙனம் இவ்வெண்பாவில் குறித்துள்ள அகப்பூசை முறைகளை எல்லாம் சுருக்கித் தரும் முறையில் அமைந்தது,

அஞ்செழுத்தால் அர்ச்சித்து அமர்வோரும் (திருவருட்பா – 671)

எனவரும் நெஞ்சறிவுறுத்தலாகும்.

இச்செயலை நானே செய்தேன், இதனைப் பிறர் செய்தார், இஃது என்னுடையது, இதற்குரிமையுடைய வினைமுதல் யானே, என எண்ணும் இம்மனக்கோணலை ஞானத்தீயால் வெதுப்பி நிமிர்த்து ஆன்மாவாகிய தான் என் செயலாவது யாதொன்று மில்லை, எல்லாம் நின்செயலே, என இறைவன் அருள் வழியடங்கிச் செந்நெறியில் நிற்பாராயின் மெய்ப்பொருளாகிய இறைவன் நேரே வெளிப்பட்டுத் தன்னையே அவர்கட்கு அளித்து நிற்பான், அந்நிலையில் ஆன்மாவின் வினைகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தோடியொழிவனவாம். இவ்வாறன்றி நான் செய்வேன் என்னும் செருக்குடன் இருப்பார்க்கு இறைவன் வெளிப்படுதலின்றி அவர்தம் வினைப்பயனை அவரே நுகரும்படி செய்வன்; மேலும் கன்மங்களைச் செய்விப்பன். சிவஞானம் வெளிப்பட்டாலன்றி இவ்வுலகில் ஒருவருக்கும் யான் எனது என்னுஞ் செருக்கு அறாது என அறிவுறுத்துவது,

யான் செய்தேன் பிறர்செய்தார் என்ன தியானென்னும்இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத்தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன் தான் நேரேதனையளித்து முன்னிற்கும் வினையொளித் திட்டோடும்நான்செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றிநண்ணுவிக்கும், போகத்தைப் பண்ணுவிக்கும் கன்மம்ஊன்செய்யா ஞானந்தான் உதிப் பினல்லாமல்ஒருவருக்கும் யானெனதிங் கொழியாதன்றே.

(சித்தியார் – சுபக்கம் 305)

எனவரும் சிவஞான சித்தியாராகும். இப்பாடற்பொருளை உளங்கொண்ட அருட்பிரகாச வள்ளலார் இந்நிலைக்கு மாறாக எனது செயல் அமைந்துள்ளதே என இரங்கி இனிச் செய்யத்தக்கது எதுவென்பதனை நீயே ஓதியருளுதல் வேண்டும் என இறைவனை வினவும் முறையில் அமைந்தது,

யாதும் உன்செயலாம் என அறிந்தும்ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத்தீது செய்தனர் நன்மை செய்தனர்நாம்தெரிந்து செய்வதே திறம் என நினைத்துக்கோது செய்மலக் கோட்டையைக் காவல்கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீஓது செய்வ தொன் றென்னுயிர்த் துணையேஒற்றி மேவிய உலகுடையோனே. (1114)

எனவரும் திருவருட்பாவாகும்.

அருவம், அருவுருவம், உருவம் என்னும் முக்கூற்றினுள் அடங்காது இவற்றிற் கெல்லாம் அப்பாற்பட்டு விளங்கும் ஒருவனாகிய இறைவன், ஒவ்வொரு தத்துவங்களிலும் நின்று கொண்டு தத்தம்தொழில்களைச் செய்யும் சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், ஈசன், உருத்திரன் மால், அயன் என்னும் முத்திறத்து ஒன்பது தெய்வக் கூற்றினும் வேற்றுமையின்றிக் கலந்து நின்று அவ்வத் தொழில்களைச் செய்வித் தருள்கின்றான் என்னும் உண்மையினை விளக்குவது,

சிவம்சத்தி நாதம்விந்து சதாசிவம் ஈசன்உவந்தருள் உருத்திரன்தான் மால்அயன் ஒன்றில் ஒன்றாய்ப்பவந்தரும் அருவ நாலிங் குருவநா லுபயமொன்றாய்பவந்தரும் அருவ நாலிங் குருவநா லுபயமொன்றாய்நவந்தரு பேதம் ஏகநாதனே நடிப்பன் என்பர்

(சிவஞானசித்தி – சுபக்கம் 164)

எனவரும் சிவஞான சித்தியாராகும்.

மேற்குறித்த ஒன்பது வடிவங்களுள் முற்குறித்த சிவ முதலான நான்கும் அருவத் திருமேனிகள் எனவும், சதாசிவம் ஒன்றும் அருவுருவத்திருமேனி எனவும், மகேசன் உருத்திரன் மால் அயன் என்னும் நான்கும் உருவத்திருமேனிகள் எனவும் இவ்வாறு மூவகை களாகக் குறித்த ஒன்பது தெய்வ நிலைகளையும் இயக்கிநிற்கும் முழுமுதற் பொருளாக விளங்குபவன், இறைவன் ஒருவனே எனவும் அருணந்திசிவனார் கூறிய பாடற் பொருளை,

உருநான்கும் அருநான்கும் நடுவே நின்றஉருஅருவ மொன்றும் இவை உடன்மேல்உற்றஒருநான்கும் இவை கடந்த ஒன்றுமாய்

(திருவருட்பா – 2172)

எனவும்,

ஒன்பதாகிய உருவுடைப் பெருமான் (திருவருட்பா 1038)

எனவும்,

நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்நண்ணியநின் பொன்னடிகள் (திருவருட்பா 3094)

எனவும் வரும் திருவருட்பாத் தொடர்களில் அருட் பிரகாச வள்ளலார் விரித்தும் தொகுத்தும் விளக்கி யுள்ளமை அவர்தம் சித்தாந்த சாத்திரப் புலமையை நன்கு தெளிவுபடுத்துவதாகும்.

அருட்பிரகாச வள்ளலார் அருளிய நெஞ்சறிவுறுத்தலில் வள்ளலார் தம் நெஞ்சினை நோக்கி இன்னின்னார் இருக்குமிடங் களைச் சேராதே எனத் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்தும் முறையில் 630 முதல் 651 வரையுள்ள கண்ணிகள், சைவசமய சந்தான குரவராகிய உமாபதிசிவம் அருளிய நெஞ்சுவிடு தூதில் 110 முதல் 119 ஆம் அடிவரை உள்ள பகுதியினை அடியொற்றி யமைந்துள்ளமை காணலாம்.

தில்லைச் சிற்றம்பலவன் கோயில் முதலாக, திருக்கயிலாயம் ஈறாக உள்ள திருத்தலங்களில் கோயில் கொண்டருளிய சிவபெருமானை நோக்கி விண்ணப்பம் செய்யும் முறையில் வள்ளலார் பாடிப் போற்றிய விண்ணப்பக் கலிவெண்பா, உமாபதி சிவம் அருளியதெனக் கருதப்படும் கோயில் திருவேட்களம் எனத் தொடங்கும் திருப்பதிக் கோவையென்னும் பனுவலை அடியொற்றி அமைந்ததாகும். இவ்விண்ணப்பக் கலிவெண்பா இத்திருத் தலங்களில் பாடிய திருமுறை ஆசிரியர்களின் வரலாறுகளையும், இப்பதிகளில் பாடப் பெற்ற திருப்பதிகங்களின் சொற்பொருள் அமைப்பினையும், இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுடைய அருள் நலன்களையும் விரித்துப் போற்றும் முறையில் 417 கண்ணிகளால் இயன்றதாகும். இன்று முதல் 277 வரை உள்ள கண்ணிகளில் தில்லை முதல் கயிலை ஈறாக உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் குறிக்கப் பெற்றன. 278 முதல் அமைந்த பிற்பகுதியில் கயிலைப் பெருமானை நோக்கி வள்ளலார் வேண்டிய விண்ணப்பம் இடம் பெற்றுள்ளது.

வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்ஒளியாகி நின்ற வுனை (1973)

எனவரும் வள்ளலார் அருளிய சிவநேச வெண்பாத் தொடர்,

வெளியில் வெளியில் வெளியன் வெளியில்ஒளியில் ஒளியில் ஒளியன் (கண்ணி 33)

என உமாபதி சிவம் அருளிய நெஞ்சுவிடுதூதில் உள்ள தொடரினை நினைவுபடுத்துதல் காணலாம்.

உன்னால் எனக்காவது உண்டதுக் கண்டதுவேஎன்னாலுனக் காவ தேதுளது (1984)

எனவரும் சிவநேச வெண்பாத் தொடர்,

பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு பொன்படைத்தோன்தன்னாற் பிர யோசனம் பொன்னுக்கங் கேதுண்டு

(திருக்காளத்தி -2)

எனவரும் பட்டினத்தடிகள் பாடற்றொடரை நினைவு கூறும் முறையில் அமைந்திருப்பது காணலாம்.

கூகா என அடுத்தோர் கூடியழாத வண்ணம்சாகா வரமெனக்கே தந்திட்டான் (5510)

எனவரும் வள்ளலார் வாய்மொழி,

கூகா என என்கிளை கூடியழப்போகாவகை மெய்ப்பொருள் பேசியவா (கந்தர நுபூதி)

எனவரும் அருணகிரியார் வாய்மொழியைத் தன்னகத்தில் கொண்டு விளங்குவதாகும்.

கட்டிமுண்டகரபாலி

எனத் தொடங்கும் தில்லைத்திருப்புகழில்

துக்கம்வெந்துவிழ ஞானமுண்டு குடில்வச்சிரங்களென மேனி தங்கமுறசுத்தகம் புகுத வேதவிந்தையொடு புகழ்வேனோ’

(திருப்புகழ் 361)

எனவரும் பகுதியை ஒத்தது,

மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்வான் வடிவும்கொடுத்தெனக்கு

(திருவருட்பா 4150)

என வள்ளலார் பாடியருளிய தொடராகும்.

ஆவதும் நின்னால் அழிவதுவும் நின்னால் எனயான்நோவதுவும் கண்டு அயலில்நோக்கினையே

(நெஞ்சறிவுறுத்தல். கண்ணி 586)

என வள்ளலார் தம்நெஞ்சை நோக்கிக் கூறிய கூற்று.

கொடுக்க வல்லதும் கெட்டவர் தங்களைஎடுக்க வல்லதும் இம்மனம்

(பிரபுலிங்கலீலை. சாதகாங்ககதி – 15)

எனத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் மனத்தின் இயல்பைக் குறித்துக்கூறிய கருத்தினை நினைவுபடுத்துதல் அறியத்தக்கதாகும்.

வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியவிருத்தம் ஆசிரியம் ஆகிய நால்வகைப் பாக்களால் சம்பந்தர் நாவரசர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய சமயகுரவர் நால்வரையும் பரவும் முறையில் நால்வர் நான்மணிமாலை என்னும் பனுவலைப்பாடிப் போற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளாவர். நான்மணிமாலை என்னும் இப்பனுவலின் சிறப்பினை உணர்ந்த அருட்பிரகாச வள்ளலார், சமயகுரவர் நால்வரையும் தனித்தனியே போற்றும் முறையிற் பாடிய பனுவல்கள் ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை, ஆளுடைய அரசுகள் அருள்மாலை, ஆளுடைய நம்பி அருள்மாலை, ஆளுடைய அடிகள் அருள்மாலை என்னும் நால்வகைப் பனுவல்களுமாகும். இவற்றுள்,

வருபகற் கற்பம் பலமுயன்றாலும்வரலருந் திறனெலாம் எனக்கேஒருபகற் பொழுதில் உறஅளித்தனை நின்உறுபெருங்கருணை என் உரைப்பேன்பெருமண நல்லூர்த் திருமணம் காணப்பெற்றவர் தமையெலாம் ஞானஉருவடைந்தோங்கக் கருணை செய்தளித்தஉயர்தனிக் கவுணிய மணியே (3235)

எனவரும் பாடல் ஆளுடைய பிள்ளையார் அருண்மாலையில் அமைந்துள்ளது. இப்பனுவல் நால்வர் நான்மணிமாலையில் ஞானசம்பந்தரைப் போற்றிப் பாடிய

கொள்ளைகொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத்தள்ளும் திருஞான சம்பந்தர்

எனவரும் திருப்பாடற் கருத்தை உளங்கொண்டியற்றப் பெற்றிருப்பது காணலாம்.

ஆளுடைய அரசு அருண்மாலையில்தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித் தூறும்செழுந்தேனே சொல்லரசாம் தேவேமெய்ம்மைசார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கின்பம்தந்தபெருந் தகையே எம் தந்தையே என்கூர்ந்தமதி நிறைவே என் குருவே எங்கள்குலதெய்வமே சைவக்கொழுந்தே துன்பம்தீர்ந்த பெரு நெறித்துணையே ஒப்பிலாதசெல்வமே அப்பனெனத்திகழ்கின் றோனே. (திரு. 32 46)

எனவரும் பாடல்,

உற்றான் அலன்தவம் தீயினின் றானலன் ஊண்புனலாவற்றான் அலனுகர்வுந் திருநாவுக்கரசு எனுமோர்சொற்றான் எழுதியும் கூறியுமே என்றுந்துன்பில்பதம்பெற்றான் ஒருநம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே.

(நால்வர் நான்மணிமாலை 38)

எனவரும் சிவப்பிரகாசர் பாடலை அடியொற்றியதாகும்.

இப்பாடலில் ‘என்றும் தும்பில்பதம் பெற்றான் ஒரு நம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே’ என்னுந் தொடர்ப் பொருளை, ‘மெய்மை சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே’ என்ற தொடரில் வள்ளலார் விளக்கியுள்ளமை காணலாம்.

ஆளுடைய நம்பிகள் அருண்மாலையில்,
தேன்படிக்கும் அமுதாம்உன்திருப்பாட்டைத் தினந்தோறும்நான்படிக்கும் போதென்னைநானறியேன் நாஒன்றோஊன்படிக்கும் உளம்படிக்கும்உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே (3253)

இன்பாட்டுத் தொழிற் பொதுவில்இயற்றுகின்ற எம்பெருமான்உண்பாட்டுக் குவப்புறல்போல்ஊர்பாட்டுக் குவந்திலர் என்றென்பாட்டுக்கிசைப்பினும் என்இடும்பாட்டுக் கரணமெலாம்அன்பாட்டுக் கிசைவதுகாண்அருட்பாட்டுப் பெருந்தகையே (3253)

பேரூரும் பரவைமனப் பிணக்கற எம்பெருமானைஊரூரும் பலபுகல ஒளிரவில் தூதன் எனத்தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தார்ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே. (3256)

எனவரும் மூன்று பாடல்களும்,

படியிலா நின்பாட்டில் ஆருர நனிவிருப்பன் பரமனென்பதடியனேன் அறிந்தனன் வான்றொழுமீச னினைத்தடுத்தாட் கொண்டு மன்றித்தொடியுலா மென்கைமட மாதர்பால்நினக்காகத் தூது சென்றும்மிடியிலா மனைகடொறு மிரந்திட்டுமுழன்றமையால் விளங்கு மாறே.

எனச் சிவப்பிரகாசர் சுந்தரரைப் போற்றும் நால்வர் நான்மணிமாலைப் பாடலின் பொருள் விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

திருவாசகத்துக்குப் பொருள் யாது என வினவிய அன்பர்களைத் தில்லைக் கோயிலுக்குள் அழைத்துக் கொண்டு சென்று இதற்குப் பொருளாவார் தில்லைச் சிற்றம்பலவரே எனக் கூறித் தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையிற் சின்மயமாய் ஆடுகின்ற சேவடியாகிய அருள் வெளியில் கலந்தவர் மணிவாசகப் பெருமான். அவரைப் போற்றுவதாக அமைந்தது.

பெருந்துறை புகுந்து பேரின்பவெள்ளம்மூழ்கிய புனிதன் மொழிந்த வாசகமேவாசக மதற்கு வாச்சியந்தூரக லல்குல்வேய்த் தோளிடத் தவனே (8)

எனவரும் நால்வர் நான்மணிமாலைப் பாடலாகும்.

வாசகம் – சொல்; வாச்சியம் – பொருள். வேய்த் தோளிடத் தவன் – பசிய மூங்கில் போலும் தோளினையுடையாளாகிய உமையை யிடப்பாகத்திற் கொண்டவனாகிய சிவபெருமான்.

இதன்கருத்தினை அடியொற்றியது.

வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்தருமொழியாம் என்னில் இனிச் சாதகமேன் சஞ்சலமேன்குருமொழியை விரும்பி அயல் கூடுவதேன் கூறுதியே.

(திரு. 3264)

எனவரும் ஆளுடைய அடிகள் அருள் மாலையாகும்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசத்துக்கும் உருகார் என்பது தமிழகத்தில் வழங்கும் பழமொழியாகும். கற்போர், கேட்போர் நினைப்போராகிய எல்லோரது உள்ளத்தையும் உருக்கும் ஆற்றல் திருவாசகத்துக்கே உண்டு என்பதனை மேற்குறித்த பழமொழியாலறியலாம். மலங்கெடுத்து மனங்கரைக்கும் திருவாசகத் தினை இடைவிடாது ஓதி நெஞ்சம் நெக்குருகப் பெற்றவர் அருட்பிரகாச வள்ளலாராதலின், தாம் பயின்ற திருவாசகம் தம் உள்ளத்தை உருக்கி ஆன்மாவாகிய தம்மையும் தம்மையுடை யானாகிய சிவபெருமானையும் ஒன்றுபடுத்திச் சிவானுபவமாகிய பெரும்பயனை நுகர்ந்து இன்புறச் செய்தது என்பார் நின் வாசகத்தில் ஒருமொழியே என்னையும், என் உடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம் என மாணிவாசகப் பெருமானை வள்ளலார் உளம் உவந்து போற்றினார். ஒன்றுவித்துத் தருதலாவது, நெக்குநெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியனாகிய இறைவனை நினைவாரையும் நினைக்கப் பொருளாகிய இறைவனையும் ஆன்மாவாகிய தன்னையும் பிரித்துணர ஒண்ணாதபடி அவனே தானாகச் செய்தல்.

அருட்பிரகாசவள்ளலார் அறிவுறுத்திய சமரச சன்மார்க்க அநுபவநெறிக்குச் சிறந்த இலக்கியமாகத் திகழ்வது தாயுமானார் அருளிய பாடற் பகுதியாகும்.

சன்மார்க்க முத்தி முதலே சர்வபரிபூரணஅகண்ட தத்துவமான சச்சிதாநந்த சிவமே (தாயு. சச்சி -6)

எனவும்,

வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலைபெற்றவித்தகச் சித்தர் கணமே (சித்தர்கணம் 1 முதல் 10)

எனவும் வரும் தாயுமானவர் வாய்மொழிகள் இக்கருத்தை வற்புறுத்துவன ஆகும்.

வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ’ (திருவருட்பா 3378)

எனவரும் வள்ளலார் வாய்மொழி இங்கு ஒப்புநோக்கத் தகுவது.

எங்கள் பதம் எங்கள் பதம் என்றுசமயத்தேவர்இசை வழக்கிடு நற்பதம்’ (1960-1)

எனவரும் திருவடிப்புகழ்ச்சித் தொடர்,

சமய கோடிகளெலாம் தன்தெய்வ மென்தெய்வ மென்றுஎங்கும் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது (தாயு. 1)

எனவரும் தாயுமானார் அருளிய பரசிவ வணக்கத்தை நினைவு படுத்துதல் காணலாம்.

மதுரையில் சோமசுந்தரக் கடவுள் தன் அடியார்க்கு அருளும் பொருட்டு நிகழ்த்தியருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல் களுள் பலவற்றை நினைந்து நெஞ்சம் நெக்குருகிய இராமலிங்க வள்ளலார் அவற்றைத் தாம் அருளிய திருவருட்பாப் பாடல்களில் எடுத்துரைத்துப் போற்றியுள்ளமை திருவிளையாடற் புராணத்தில் வள்ளலார்க்கு உள்ள ஈடுபாட்டினை நன்கு புலப்படுத்தும்.

எல்லாம் வல்ல இறைவன் செம்மனச் செல்வியாகிய வந்தி அம்மையார் பொருட்டு வையை வெள்ளத்தை அடைத்தல் வேண்டிக் கூலியாளாக எழுந்தருளி வையைப் பெரு வெள்ளத்தை யடைக்க மண்சுமந்து கூலி கொண்டு பாண்டியமன்னன் ஓச்சிய பிரம்பினால் மொத்துண்ட எளிமைத்திறனை எண்ணி யெண்ணி இரங்கும் நிலையில் அமைந்துள்ளது,

வன்பட்ட கூடலில் வான்பட்டவையை வரம்பிட்டநின்பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவி நடையாம்துன்பட்ட வீரர் அந்தோ வாதவூரர்தம் தூய நெஞ்சம்என்பட்டதோ இன்று கேட்ட என் நெஞ்சம் இடி பட்டதே

(2251)

என இராமலிங்க வள்ளலார் பாடிய பாடல் ஆகும்.

இப்பாடல் மதுரையில் இறைவன் தன்னைவழிபடும் அடியார் கட்கு எளிவந்து நிகழ்த்திய திருவிளையாடல் நிகழ்ச்சிகளில் வள்ளலாரது உள்ளத்தோய்வினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

அளிய நெஞ்சம் ஓர் அறிவுருவாகும்அன்பர் தம்புடை அணுகிப் அருள்போல்எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்என்னில் பாதிமட் டீந்தருள்வாயேல்களிய மாமயல் காடற எறிந்தாங்காரவேரினைக் களைந்து மெய்ப்போதஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்ஒற்றிமேவிய உலகுடையோனே. (திருவருட்பா 1117)

எனவரும் இப்பாடலில் அளிய நெஞ்சம் ஓர் அறிவுருவாகும் அன்பர் என்றது, இறையருளால் அளிதரும் ஆக்கையைப் பெற்றுச் சிவஞானமே உருவாகத் திகழ்ந்த மணிவாசகப் பெருமானை. இங்கு ‘ஓர் அறிவுருவமாகுமன்பர், என்ற தொடர், ‘மாணிக்கவாசகர் அறிவினாற் சிவமே’ என்பது திண்ணம் என்ற இலக்கணக் கொத்தின் நூலாசிரியரான சுவாமிநாத தேசிகர் கூறிய மொழியினை நினைவுபடுத்தும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம்.

நமது நாட்டில் வழங்கும் சமயங்களை ஆறு சமயங்களாகத் தொகுத்தும், பின் அவற்றையே அகச்சமயங்கள் ஆறு, புறச் சமயங்கள் ஆறு எனப்பகுத்தும் கூறுவர் முன்னுள்ளோர். அகமும் புறமுமாகிய சமயங்களிடையே யமைந்த வேறுபாடு நோக்கி அகம், அகப்புறம், புறம், புறப் புறம் என நான்காகப் பிரித்துக் கூறுவர் சிவஞான முனிவர். தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாங் அடக்கிக் கூறியபொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிரு படலத்தில் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் எனப்பகுத்தோதியவாறு போல்வது இப்பகுப்பு முறையாகும்.

அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தேஅடுத்திடும் புறப்புறம் நான்கில் (3640)

எனவரும் திருவருட்பா பாடற்றொடரில் இப்பகுப்பு முறை இடம் பெற்றுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.

அருட்பிரகாச வள்ளலார், ஒழிவில் ஒடுக்கம் தொண்டை மண்டல சதகம் என்னும் நூல்களை ஆராய்ச்சியுரையுடன் பதிப்பித்துள்ளமையும் சின்மய தீபிகை, மனுமுறைகண்ட வாசகம், சீவகாருணிய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல்களை இயற்றி யுள்ளமையும் வள்ளலாரின் பரந்த கல்விப்புலமையை எடுத்துக் காட்டுவனவாகும். வள்ளலார் அறிவுறுத்தும் தத்துவ நுண் பொருள்களுக்குக் காழிக் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய நூலும் சிவஞானவள்ளலார் இயற்றிய நூல்களும், திருப்போரூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் இயற்றிய கொலை மறுத்தல் என்னும் நூலும், அதற்குத் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் இயற்றிய சுத்தசாதகம் முதலிய நூல்களும் முன்னூற் சான்றுகளாக அமைந்துள்ளன. இக் குறிப்புக்களை உற்று நோக்குங்கால் வள்ளலார்க்குத் தமிழ் நூற் பரப்பினுள் அமைந்த புலமைத்திறம் இனிது புலனாகும். இவ்வாறே சமய நுட்பம் பற்றி உபநிடதங்கள், ஆகமங்கள் முதலிய வடமொழி நூல்களை இராமலிங்க வள்ளலார் இறைவன் அருளால் ஓதாதுணரப் பெற்றார் என்பது திருவருட் புகழ்ச்சியிலமைந்த வடமொழித் தொடர்களாலும் நாதாந்தம் முதலிய ஆறந்தங்களின் இயல்புரைக்கும் திருவருட்பா பகுதிகளாலும் நன்கு தெளியப்படும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *