
திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்
அணிந்துரை
மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கம், டி. லிட்
முன்னைத் துணை வேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
பேராசிரியர் திருமுறைச் செல்வர் வெள்ளைவாரணனார் மாணுற எழுதிய திருவருட்பாச் சிந்தனை என்ற பெருவிளக்க நூலுக்குக் கெழுதகை நட்புக்கருதி அணிந்துரை எழுத வேண்டியவன் ஆகின்றேன். குங்கிலியம் சண்முகனார் பங்கும் ஈடுபாடும் இப் பனுவலுக்கு உண்டு என்று அறியும் போது, என் அணிந்துரையைப் பணிந்துரையாகவே கருதவேண்டும். துணை வேண்டாச் செருவென்றி என்பது போல, அணிந்துரை வேண்டா அருள் நூல் இது.
அருட்பாச்சிந்தனை என்ற இந்நூல் திருவருட் பாவைக் களமாகக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக இடையறாது ஓடிவந்த தமிழ்ச் சிந்தனைகளின் வரலாறு கூறும் முறை நூலாகும். ‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ, என்ற படி தொல்காப்பிய வாழை, சங்கவாழை, திருக்குறள் வாழையாக, திருமுறை பிரபந்த வாழையாக, தாயுமானார் வள்ளலார் வாழையாக, தாயுமானார் வள்ளலார் வாழையாக, பாரதியார் பாரதிதாசன் வாழைக்கன்றுகளாக வற்றாது பாய்ந்து வரும் தமிழ் நீரியலைப் பளிங்குப் படுத்துளது இச்சிந்தனை நூல். வாழையடி வாழையாக வந்தாலும் அவற்றின் தாற்றுக் கொழுமைகள் வேறுபடுமன்றோ?
வள்ளலார் உலகிற் பரப்ப எண்ணிய சமரச சுத்த சன்மார்க்க நெறியானது சைவசமயத்திற் கால் கொண்டு வளர்ந்தது என்று வரன்முறை விளக்கம் தரும் பேராசிரியர் வெள்ளைவாரணனார். அருட்பாவினால் பழந்தமிழ்க் கொள்ளைகள் புதுமலர்ச்சி பெற்றதையும், முன்னூல்களில் நுண்ணிதிற் கிடந்த மறைமொழிகள் பலரறிய வெளிப்பாடு ஆனதையும், இதுகாறும் யாரும் காட்டாத தடம் புகுந்து அழுத்தமாக எழுதியுள்ளார். இச்சிந்தனை நூலின் தனிச்சிறப்பு இது.
சன்மார்க்க நெறி பரப்பிய இராமலிங்க வள்ளலார் இன்றைக்கு நூறாண்டுகட்கு முன்னரே இறைவன் திருவருளால் தெளிந்து வகைப்படுத்தி உணர்த்திய தேக சுதந்திரம், போக சுதந்திரம், சிவசுதந்திரம், திருவருட் சுதந்திரம் ஆகிய சுதந்திர வுணர்களின் இயல்பினை மக்கள் எல்லாரும் நன்குணர்ந்து, பயன் பெறும் வண்ணம் உலகமக்கள் அனைவர்க்கும் ஆங்கிலம் முதலிய பல்வேறு மொழிகளிலும் கட்டுரை வாயிலாகவும் சொற்பொழிவு வாயிலாகவும் அறிவித்தல் நம்நாட்டு அறிஞர் பெரு மக்களின் தலையாய கடமையாகும் என்பது திருமுறைச் செல்வரின் நல்லுரை. அதன்படி இந்நூலேனும் பன் மொழிப்படும் என்று ஆசைப் படுவோமாக. பாரத வொருமைக்கும் ஞாலவொருமைப் பாட்டிற்கும் நன்னெறியம் காட்டவல்ல நாடி எம்மொழிஉண்டு? அம்மொழி தான் தமிழ்.
இச்சிந்தனை நூல் கடவுள் ஒருவரே என்பது முதலாக, திருமுறையும் திருவருட்பாவும் என்பது ஈறாகப் பதினாறு பகுதி கொண்டது. வள்ளலாரின் ஓதா வுணர்வு, பன்னூற் புலமை, யாப்பு வளம், உரைநடைத் திறம், விண்ணப்ப நடை, இசைப்பாடல்கள், தெய்வக் காதல், திருமுறைப் பதிவு, இலக்கியச் செல்வாக்கு எல்லாம் பன்னூற் சான்றுகளொடு நன்னடையில் விளக்கம் பெற்றுள. தேசியவி பாரதியார்க்குக் கருத்தாலும் நடையாலும் வழிகாட்டிய பெருமான் வள்ளலார் என்பதனை நாம் மறக்க லாகாது. பாரதியார் சாதியின் கொடுமையைத்தான் மிகுதியாகத் தாக்கிப் பாடினார். சாதி, சமயம் மதம் சாத்திரக் குப்பை என்ற விகற்ப விளையாட்டு எல்லாம் கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப்போக என்று அதிர் பறை யறைந்தவர் வள்ளலார்.
என் அணிந்துரைக்கண் மரணமிலாப் பெருவாழ்வுக் கோட்பாட்டினைச் சற்று விரிவாக அலசியதன் நோக்கம் வள்ளலாரின் புதிய தூய சிந்தனை வளர்ச்சியை உள்ளவாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கேயாம். எல்லாரும் சாகாவாழ்வு பெறலாம் என்று அவர் மொழிந்த கருத்தினை முன்வைக் கின்றோமே யன்றி அதற்கு அவர் விதித்த சுத்தசன்மார்க்கம், கொலைபுலையின்மை, ஜீவ காருணியம் என்னும் உயிரிரக்கம் என்ற தகுதிப்பாடுகளை மக்கள் முன் நாம் மறைக்கிறோம் சொல்ல அஞ்சுகின்றோம். இன்னும் சொல்லப்போனால் அருட்பாவை வஞ்சிக் கின்றோம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றோம்.
வள்ளற் பெருமான் உலகிற்கு வழங்கிய அழியா முழு முதற்கோட்பாடு ஒன்றே ஒன்றுதான். அதுவே சீவகாருணியம் என்னும் உயிரிரக்கப்பண்பு. இரக்கமும் இராமலிங்கரும் குணங் குணியாம் இரண்டற்ற நிலையாம். இராமலிங்க சுவாமிகளின் சமயம் என்ன என்று எவரேனும் கேட்பின், அவர் சமயம் அருள்நெறி என்பர் திரு.வி.க. மரணமிலாப் பெரு வாழ்வுகூட முத்திபோலத் தனிமனிதப் பயனாகும் ஆருயிரின் தனி வேட்கை யாகும். முத்தர்க்கு உலகமக்கட் சமுதாயத் தொடர் அற்றது போல, உடற்சோதி யினர்க்கும் பழைய உடம்பு போல வினையாற்றலும் உலக வுறவும் இரா. ஆதலின் சீவகாருணியமே சுத்தசன்மார்க்கம் என்று அருளறம் தெளித்தார் இராமலிங்கர். அதனாற்றான் அவர் பாடியவை அருட்பா ஆயின. அவரும் அருட்பிரகாசர் ஆயினர். அவர்தம் மந்திரமும் அருட்பெருஞ் சோதியாயிற்று. ‘அருளே நங்குலம் அருளே நம்மினம்’ என்பது வள்ளலாரின் நிறைமொழி. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பது திருக்குறள், இவ்வுலகமேயில்லை என்பது அருட்பா,
வள்ளலாரின் திருமுகம் எப்போதும் துயரக்குறையாய் இருந்தது என்று அறிகின்றோம். அவருக்கு ஏற்பட்ட துயரங்கள் எனை? பயிரின் வாட்டங் கண்டு வாடினார் உயிர்ப்பலி வாங்கும் சிறுதெய்வ வெங்கோயில் கண்டு பயந்தார். யாரே யாயினும் பசியாற் பிணியால் வெதும்பிய போது பதைத்தார்; இறந்தார்க்காக உறவினர் அருகுரல் கேட்டபோது நடுங்கினார்; பகைமன்னர்கள் போர் கொலை குவித்தபோது தளர்ந்து துடித்தார்; பல்லி கூகை காக்கை, பருந்து இவற்றின் கடுங்குரல் கேட்டபோதெல்லாம் என்ன துன்பப்பட்டனவோ என்று கலங்கினார். பாம்பு படமெடுத்த போது நஞ்சு எதனைக் கொல்லுமோ என்று உள்ளம் ஒடுங்கினார்; வீடுதோறும் இரந்தும் பட்டினி கிடப்பாரைக் கண்டு இனைந்தார். பசித்தார்க்கு உதவ முடியவில்லையே என்று வருந்தித் தான் சிறிய அளவே உண்டார்.
சாதி மத சமயச் சடங்குகளின் வேதாகமங்களான சாத்திரங்களில் வள்ளலார் ஒருமைப்பாடு காணவிரும்பவில்லை என்பதனை யும் இவையெல்லாம் பொய்யாம் சழக்காம் என வெறுத்தார் என்பதனையும் கருதுக.
சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுகநீதியியல் ஆச்சிரம் நீட்டென்றும் – ஓதுகின்றபேயாட்டம் எல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச்,
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலைஎன்ன பயனோ இவை.
வேதங்களையும் விரிவுகளையும் புராண சாத்திரங்களையும் வடமொழி வாயிலாகவே திறம்படக் கற்றவர் எனினும் பகுத்தறிவுக்கும் உலக வொற்றுமைக்கும் உயிர் நலத்துக்கும் ஒவ்வாதவற்றைக் கடுஞ் சொற்களால் இகழ்ந்துரைத்தவர் இராமலிங்கனார் போல் யாருமில்லை. அவ்வுலக நாட்டமின்றி இவ்வுலக நாட்டமின்றி இவ்வுலக நாட்டம் வலியுறுத்தியவர். அருட்பாவின் உள்ளத்தைத் தெள்ளிதின் உணர்ந்த பேராசிரியர் வெள்ளைவாரணனார்.
‘ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்ஒருமை யுளராகி உலகியல் நடத்தல் வேண்டும்’
என்றபடி ‘இந்நாட்டிற் கல்வி, செல்வம் முதலியவற்றால் ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் ஆகிய எல்லா மக்களும் தம்முள் வேறு பாடின்றி ஒத்த உரிமை யுடையராகி, நமது நாட்டின் அரசியல் ஆட்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பினைப் பெறுதல் வேண்டும் என்பதே வடலூர் வள்ளலாரின் உயர்ந்த குறிக் கோளாகும் என்று முடித்திருப்பது சிறிதும் புனைந்துரையன்று. இந்தியப் பாரதத்தில் எவ்வகைக் கொள்கையினரும் சிந்திக்க வேண்டிய செயலுரையாகும். அருட்பா என்று பெயர் கொண்ட திருமுறையில், ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக என்று பாடியிருப்பரேல், கண்ணோட்டத்தையும் மக்களாட்சியையும் மதித்த வள்ளலாரின் குடியரசு முறை தெளிவாகும்.
அடிகளாரின் கருத்துணர்ச்சியைச் சென்னைச் சிந்தனை, வடலூர்ச் சிந்தனை, என இவ்வகைப் படுத்தலாம். முதற் பகுதியில் (1825-1858) பழைய சைவத்திரு முறைப் போக்காகவும், பிற்பகுதியில் (1859-1874) புதிய பொதுநெறிப் போக்காகவும் அருட்பாசுரங்கள் காட்சியளிக்கின்றன. முருகவழிபாடு, மூவருள் சிவன் முதன்மை, சிவனடிப்பேறு, ஐந்தெழுத்தின் சிறப்பு, அடியார் கூட்டம், பெண்ணாசையின்மை, ஐம்புலவொடுக்கம், முத்திப்பேறு, சித்தாந்த மெய்ம்மைகள் என்ற மரபுப்பொருட்கள் முற்பகுதியில் பழைய தடத்தில் நடைப் படுகின்றன.
பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்து நின்றார் ஐயோநான்காமாந்த காரமெனும் கள்ளுண்டு கண்மூடிஎமர்ந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே
என்ற நடைப்பட்ட மரபியற் பாசுரங்களே கருங்குழிக்கு வருவதற்கு முன்புவரை மிகுதியாகவுள. பின்வாழ்விலும் இத்தகைய பாசுரங்கள் இருந்தாலும், புதிய வேகத்தையும், குற்றங்குறை காணப்பெறாத் துயரத்தையும், மன்பதை தழுவிய இவ்வுலக சீர் திருத்தத்தையும், பயிரையும் உயிராகக் கொண்ட ஆன்மநேய வொருமைப் பாட்டையும், மரணமிலாப் பெருவாழ்வையும், சீவகாருணியம் என்னும் உயிரிரகத்தையும் கருங்குழி வடலூர் சித்திவளாகப் பாடல்கள் காட்டுகின்றன. உயிரிரகத்திற்கும் சமரச சன்மார்க்கம் என்னும் பொது நெறியத்திற்கும் எதிரான எதனையும் சாதி மத சமய சாத்திரம் எதனையும் அதிரச்சாடித் தூக்கி எடுத்தெறியும் வன்னடைப் புரட்சியை வடலூர்ப்பாக்களில் கடலோர அலை போல் காண்கின்றோம். வள்ளலார் பாடியவை என்பதனால் அருட்பா முழுமைக்கும் ஒத்த மதிப்பு உண்டென்றாலும் பிள்ளைப் பெரு விண்ணப்பம், நடராச பதிமாலை, சுத்தசிவநிலை, உலகர்க்கு உய்வகை, புனிதகுலம் பெறுதல், சமாதி, சன்மார்க்க உலகநிலை என வரும் செய்யுட் பகுதிகள் வள்ளலாரின் தனிச்சிந்தனை வளர்ச்சிகள்.
இவ்வளர்ச்சியின்றேல், எத்துணையோ தெய்வப்பாடல்களைப் பாடியோருள் ஒரு பொது வடியவராக இராமலிங்கர் அடங்கி யிருப்பர்.
வள்ளலாரின் வடலூர் வாழ்க்கை மக்கள் நோக்காயிற்று; பைந்நிலப் பார்வையாயிற்று; உயிர்த் தொண்டாயிற்று. இறைவனைத் தன் முத்திக்கு வழிகேட்ட முன்னோரினும் வேறாக, இறைமையை உயிர்ப்பொது நலத்துக்கு வழிப்படுத்தினார் இராமலிங்கர். ஏனை அருளாளர்கள் போலன்றி, சாலை சங்கம் சபை கண்டும் கொடி நாட்டியும் யாவரும் வழிபடும் ஒளிக்கோயில் அமைத்தும் அருட்பெருஞ் சோதி தனிப்பெரும் கருணையெனத் தனி மந்திரம் ஒதியும் தன்கொள்கைக்குச் செயல் வழிகளைத் தானே கண்ட இயக்காளர் இராமலிங்கனார்.
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசைமுத்தி பெற்றிடவும் பெற்றிலேன்உரியதோர் இச்சை எனக்கிலை என்தன்உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில்ஆடலே யன்றி ஓர்விடயக்காதலால் ஆடல் கருதிலேன் விடயக்கருத் தெனக் கில்லை
எனவரும் அருட்பாக்கள் வள்ளலாருக்குத் தனிமுத்திப் பற்று இன்மையையும், எல்லாவுயிர்களின் பொதுநலம் காணும் சமுதாயப் பற்று இருந்ததையும் தெளிவாக்கும். ஏனையடியவர்களினும் வள்ளலாரைப் பிரித்துக் காட்டுவது இப்பொதுவுணர்வே யாகும். உயிர்த்தொகை நலத்திற்காக முத்தித் தன்னலத்தைத் துறந்தமையால், வள்ளலார் என்ற பெயர் இவ்வகையிலும் பொருந்தும். ‘வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’ என்று சேக்கிழார் பெருமான் குறிக்கும் அடியவர் இலச்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்பவர் வள்ளலாரே எனப் பேராசிரியர் வெள்ளைவாரணனார் போற்றி யிருப்பது அரிய கருத்தாகும்.
வள்ளலார் அழுத்தமாகச் சாற்றிய சிறப்புக் கோட்பாடுகளில் ஒன்று மரணமிலாப் பெருவாழ்வு. ஒளியுடம்பு பெறும் இக்கொள்கை புதிதன்று எனவும், சங்கவிலக்கியம் திருக்குறள் திருமந்திரம் திருவாசகம் பெரியபுராணம் தாயுமானவர் முதலான தமிழ் நூல்களிற் சான்றுகள் உண்டு எனவும் பேராசிரியர் வெள்ளைவாரணனார் வன்முறைச் சிந்தனையாக எடுத்துக் காட்டுவர். இவ்வாறு சிவஞானிகளுக்கு வற்புறுத்திக் சமாதிக் கிரியையைச் சன்மார்க்க நெறி நிற்போர் அனைவர்க்கும் உரிய கிரியையாக இராமலிங்க வள்ளல் வற்புறுத்தியுள்ளார் என்று பேராசிரியர் க.வெ. எழுதுவதும் குறிப்பிடத்தகும். எதனையும் மக்கட் பொதுவகைச் செய்வது வள்ளலாரின் பெருநெறியாதலின் சாகாக்கலையும் பொதுவாயிற்று.
இக்கலைபற்றி விரிந்த விளக்கங்கள் பல்துறையறிஞர்களால் எழுதப்பட்டு வருகின்றன. திரு.வி.க. பின்வருமாறு கருதுவர்.
‘சாகாநிலை என்னும் ஒருநிலையுண்டு என்பர். எனது ஆராய்ச்சியில் விளங்கிய உண்மைகளுள் ஒன்று. அது குறித்து எனக்கு எவ்வித ஐயமாதல் திரிபாதல் மயக்கமாதல் இல்லை. அந்நிலையில் எனக்கு உறுதி யுண்டு. நமது நாட்டு ஆன்றோர் ஒரு முகமாக அறிவுறுத்திய அப்பெருநிலை இப்பொழுது மேல்நாட்டறிஞர் பலராலும் உறுதி செய்யப்பட்டு வருகிறது, என்று விளக்கும் திரு.வி.க. இப்பிறவியிலேயே தான் அந்நிலையை அடைய வேண்டும் என அவாவினார். வள்ளலாருக்கு முன்விளங்கிய பெரியோர்கள் எல்லாம் பிறவாமை வேண்டினர் எனவும், வள்ளலார் இறவாமை வேண்டினார் எனவும், இப்புழுக் குரம்பையே சுத்த சன்மார்க்கத் தொடர்பினால் நித்தியமாகும் எனக் கண்டார் எனவும் அருட்பாவில் முழுமைத் தோய்வுடைய ஊரனடிகள் தெளிவுப்படுத்துவர். ‘கருவுற்று வந்தால் தான் புதுப்பிறப்பு என்பதல்ல, புதுப்பிறப்பின் பயனை ஈண்டு இவ்வுடலுடன் பெறுவதே உயரிய பிறப்பு என்று சுருங்கச் சொல்லுவர் குங்கிலியசண்முகனார். சாங்கை மருத்துவக் கல்லூரி மூப்பு வாரா மருந்தினைக் கண்டுபிடித்திருப்பதாகவும் அதனை யுண்டவர் வெண்ணரை நீங்கி மீண்டும் கருமயிர் பெற்ற தாகவும் மூப்புக்கு உரிய நலிவுகள் இம்மருந்தினால் குணமடை வதாகவும் ஒரு சீனச் செய்தி வெளியாயிற்று. ஆதலின் திருமூலர், தாயுமானவர், தாயுமானவர், இராமலிங்கனார் சித்தர்கள் சொல்லி வரும் ஒளியுடம்பு எதிர்காலத்தில் இன்னும் உறுதிப் படலாம். விண் வெளியாராய்ச்சி முனைப்பாக நடக்கும் அறிவியற் காலம் இது. அங்குச் செல்லுநர் மானிடவுடம்போடு சென்றாலும் அவ்வுடம்பும் பல பதம் பெற வேண்டும். கனந்தோன்றா மென்மையாக வேண்டும் காற்றுப்போல இயங்க வேண்டும். அதற்குத் தகமனமும் அறிவும் பயிற்சி பெற வேண்டும்.
முன்னையோரைக் காட்டிலும் சாகாநிலையுடம்பு என்ற கோட்பாட்டினை வள்ளற்பெருமான் வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் ஆசைப்படும் படியும் பாடிவிட்டார் என்பது என் கருத்து.
‘மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் செய்கின்றேன்.
‘இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடுஞ் சேர்ந்திடுமின்என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே
‘செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்ஒத்தாராய் வாழ்க உவந்து.
என வாங்குப் பாடல்களில் சிவனுரை தன்னுரையாகவே வலியுறுத்துவர் இராமலிங்கர். துயில்வது போலப் புதையுங்கள்; எரியிற் சுடாதீர்கள்; சுடுவது கூடக் கொலை என்ற அளவுக்கு அருட்பா சென்றுவிட்டது. பரிசுச்சீட்டு வாங்கினார்க்கெல்லாம் முதற்பரிசு விழும் என்ற கதையாயிற்று. அறிஞர் ம.பொ.சி. சுட்டியது போல, அடிகள் எவ்வளவுக்கு அவர் உலகத்தாரால் புரிந்து கொள்ள முடியாதவராயினார். செத்தார் எழுதல் என்ற இயக்க நிலையை வள்ளலார் வெளிப்படுத்திய போது, கொஞ்சமேனும் உள்ளப் பக்குவப் பண்பாடு இன்றிப் பொதுமக்கள் சவங்களைக் கொண்டு வந்து எழுப்பித் தர மன்றாடினார்கள் என்று மன்பதையின் பேதைமையைக் கண்டிப்பர் குங்கிலியம் சண்முகனார்.
இரக்கம் நீங்கில் என்னுயிரும் நீங்கும்; என்னையும் இரக்கத்தையும் ஒன்றாக இசைவித்தான் திருச்சிற்றம்பலத்தான் எனவும், உயிர்கள் படும் துயரங்களைப் பார்த்தும் கேட்டும் கணமும் பொறுக்கமாட்டேன் எனவும், உயிர்களின் துன்பம் தவிர்க்கும் வரம் அருளுக எனவும் வள்ளற் பெருமான் தொடுத்த பாக்கள் சீவகாருணியம் என்னும் உயிரிரக்கமே அருட்பாவின் சித்தாந்தம் என்பதைத் தெளிவாக்கும். சீவகாருணியமே சன்மார்க்கமாம், புண்ணியமாம், கடவுள் வழிபாடாம், முத்தியின்பமாம் ஆன்ம இயற்கை விளக்கமாம்: மற்றையவெல்லாம் மாயாசாலச் செய்கைகளாம் என்று சீவகாருணிய ஒழுக்கம் எனப்பெயரிய தம் உரைநடை நூலிலும் வள்ளலார் அழுத்தம் திருத்தமாக எதிர் வாதங்களோடு நாட்டியிருப்பதை நாம் ஒருதலையாகக் கடைப் பிடிக்க வேண்டும்.
அருட்பிரகாச வள்ளலின் இரக்கவெல்லைக்கும் இரக்கப் புறனடைக்கும் ஓர் எடுத்துக்காட்டு; கொலையையும் முற்றும் கண்டிப்பவர் அடிகளார்; கொலைஞரையும் புலாலுண்ணி களையும் பகையாகக் கருதுபவர் அடிகளார். இவ் விருசாராரையும் மனிதவினமல்லாதவர் என்று தள்ளும்படி அடிகளார் செய்வர்: என்றாலும் இவர்கள் பாலும் ஒரு நிலையில் அடிகளார்க்கு இரக்க வுணர்வு உண்டு. அவர்களும் பசித்துயர்படப் பொறார்.
உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்உறவினத்தா ரல்லர் அவர் புறவினத்தார் அவர்க்குப்பயிர்ப்புறுமோர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக,
என்பது அருள்விளக்க மாலை. இரக்கத்துக்கு எக்கொடிய உயிருட் கூட விலக்கில்லை என்ற அடிகளாரின் ஆன்ம நேய வொருமைப்பாடு தெளிவாம். இரக்கச் செயலே அருட்பா வழங்கும் பேரறம் என உணர்வோமாக. தெய்வப் பாசுரங்களின் ஆழமும் கரையும் கண்ட சான்றோர் வெள்ளைவாரணனார் வறியோரது பசிப்பிணியை மாற்றுதலின் இன்றியமையாமையை எல்லோர் உள்ளத்திலும் நன்க பதியும்படித் தெளிவாக வற்புறுத்திய அருளாளர் அருட்பிரகாச வள்ளலார் ஒருவரே எனச் சுட்டியிருப்பது நடுநிலைமை காட்டும் மதிப்பீடாகும்.
மேலே விளக்கியபடி, திருவருட்பாச் சிந்தனை என்னும் இப்பனுவல் தொன்று முதல் இன்று காறும் தமிழினம் போற்றி வளர்த்த வாழ்வுச் சிந்தனைகளின் அருட்பேழையாகும். நுண்போர்க் கருவிகளாலும், கொள்கை முனைப்புக்களாலும் இகல்வேக வுணர்ச்சிகளாலும் இப் பைஞ்நிலம் அழியுங்கொல் என்று கவலை மீதூரும் இக் காலத்துக்கு, உலகவொருமைப்பாடு சாற்றும் அருட்பா உலகர் அனைவரும் கைக்கொள்ளத் தகும் பொருட்பா என்றால் மிகையன்று. இம்மறை தமிழ்மொழியில் இருப்பதால் உலகோர் அறியச் செய்தல் தமிழர் கடன் தமிழகப் பல்கலைக் கழகங்களின் பொறுப்பு. திருக்குறள் போலத் திருவருட்பா மறையும் பன்மொழியில் நடமாடும் பெருமை எய்துக. அதனால் உலகில் ஒருமை நாட்டம் வளரும்.
தந்தையார் வாழ்த்தாலும் சான்றோர்களின் உறவாலும் பதிப்புச்செம்மல் மெய்யப்பனாரின் ஆள்வினையாலும் மணிவாசகர் நூலகம் என்னும் ஆலமரம் வெற்றித்தழை செழித்துக் கிளைபெருக்கி விழுதுவிட்டு யாதும் ஊரே எனப் பரவித் தமிழ்நிழல் தருகின்றது. நூலொன்று வாராது நாளொன்று போகாது என்று சொல்லும் வண்ணம் எளிய இனிய உயரிய பல்துறை நூல்களையும் பொதுவறிவு நூல்களையும் ஒப்பியல் நூல்களையும் வரிசை நூல்களையும் காஞ்சி வனப்போடு பதிப்பித்து வருகின்றது. கல்லார்க்கும் கற்றவர்க்கும் தமிழ்க்களிப்பு ஊட்டும் மணிப்பதிப்பகமாக இலங்குகின்றது.
பேராசிரியர் திருமுறைச் சான்றோர் வெள்ளைவாரணனார் பழுத்த பேரானந்தப் பழமாக ஆழ்பெரும் புலமையோடு எழுதிய திருவருட்பாச் சிந்தனை என்ற நூலை மணிவாசகர் நூலகர் வெளியிட்டிருப்பது அதன் பதிப்பு வரலாற்றில் பெருமைதரும் தொண்டாகும். வள்ளற் பெருமான் வாழ்த்தும் கூடவே கிடைக்குமன்றோ.



