திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

16. திருமுறையும் திருவருட்பாவும்

நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞான சம்பந்தப் பிள்ளையாரை வழிபடு குருவாகக் கொண்டு, செந்தமிழும் வடமொழியும் ஆகிய இருமொழிகளிலும் அமைந்த மெய்ந்நூற் பொருள்களை ஓதாதுணர்ந்த மாதவச் செல்வர் இராமலிங்க அடிகள் என்பது முன்னர் விளக்கப் பெற்றது.

காழிக் கவுணியப் பிள்ளையார் மூன்று வயது குழந்தையாகிய பிள்ளைப் பருவத்திலேயே உமையம்மையார் அளித்த ஞானப் பாலடிசிலை உண்டு, தமிழ் ஞானசம்பந்தராய்த் தோடுடைய செவியன் முதலாக உள்ள திருநெறிய தமிழாகிய திருப்பதிகங் களைப் பாடியருளினார் என்பது வரலாறு. பிள்ளையார் அருளிச் செய்த திருப்பதிகங்கள் பண்ணமைதி கருதி முதல் மூன்று திருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளன. ஆளுடைய பிள்ளையார் காலத்தவராகிய திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருப்பதிகங்கள், நான்கு, ஐந்து ஆறாம் திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள், ஏழாம் திருமுறையாக அமைக்கப் பெற்றன. திருவாதவூ ரடிகளாகிய மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும் திருச்சிற்றம்பலக் கோவையும் எட்டாந் திருமுறையாகவும், திருமாளிகைத் தேவர் முதல் சேந்தனார் ஈறாக உள்ள ஆசிரியர் ஒன்பதின்மர் பாடியருளிய இன்னிசைச் செழும் பாடல்களாகிய திருவிசைப்பாவும் திருப் பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறை யாகவும், திருமூலநாயனார் அருளிய தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரம் பத்தாந் திருமுறையாக வும், திருவாலவாயுடையாராகிய சிவபெருமான் பாணபத்திரர் பொருட்டுச் சேரமான் பெருமாளுக்குப் பாடியருளிய திருமுகப்பாசுர முதலாக நம்பியாண்டர் நம்பிகள் அருளிய திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஈறாக அமைந்த நாற்பது பிரபந்தங்களும் பதினேராந் திருமுறையாகவும், அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் பெருமான் பத்திச் சுவைந னிசொட்டச் சொட்டப் பாடியருளிய திருத்தொண்டர் புராணமாகிய பெரியபுராணம் பன்னிரண்டாந் திருமுறையாகவும் பின் வந்த சான்றோர்களால் முறைப்படுத்தப் பட்டன.

இவ்வருள் நூல்கள் அனைத்தும் தம்மை மறந்து சிவபரம் பொருளையே இடைவிடாது சிந்திக்கும் அருளாளர்களால் அருளிச் செய்ப்பட்டன வாதலின், எனதுரை, தனதுரையாக (1-86-1) என ஆளுடைய பிள்ளையார் அருளிய வண்ணம் எல்லாம் வல்ல இறைவனுடைய அருள்வாக்கெனவே கொள்ளத்தக்கனவாம்.

சைவ சமயகுரவர் நால்வருள் திருஞானசம்பந்தர் திரு நாவுக்கரசர், நம்பியாரூரர் ஆகிய மூவரும் அருளிச் செய்த தெய்வ இசைப்பாடலகளைத் தேவாரம் எனவும், மணிவாசகப் பெருமான் அருளிய பத்திப்பனுவல்களாகிய பாடல்களைத் திருவாசகம் எனவும் வழங்குதல் மரபு. இத்திருமுறைப் பனுவல்களை இடைவிடாது ஓதி உள்ளம் உருகப் பெற்றவர் இராமலிங்க வள்ளலார் ஆதலின், அவர் பாடியருளிய திருவருட்பாவில் பன்னிரு திருமுறைகளின் சொற்பொருள் நலங்கள் எங்கும் இடம் பெற்று விளங்கக் காண்கின்றோம். சமய குரவர் நால்வரும் அருளிய தேவார திருவாசகமாகிய அருட்பாடல்களை இடைவிடாது ஓதி நெஞ்சம் நெக்குருகிய அருட்பிரகாச வள்ளலார், அவ்வருளாசிரியர் அறிவுறுத்திய நெறியில் நின்று எல்லாம் வல்ல இறைவனைப் பாடிப் போற்றிய பனுவல் திருவருட் பாவாதலின், அப்பாடல்கள் யாவும் இறைவன் அருள்வழிநின்று முன்னோர் பாடிய திருமுறைகளின் விரிவுரையாகவும் நுண்பொருள் விளக்கமாகவும் அமைந் துள்ளமை காணலாம். அருட்பிரகாச வள்ளலார் சமய குரவர் முதலிய திருமுறையாசிரியர்களது வரலாற்றுச் செய்திகளையும் திருமுறைப் பாடல்களின் சொற்பொருள் அமைப்பினையும், தாம் பாடிய திருவருட்பாப் பனுவல்களிற் பலவிடங்களிலும், குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். இவற்றைக் கூர்ந்து நோக்குங்கால் திருமுறைகளில் இராமலிங்க வள்ளலார் கொண்டுள்ள அளப்பரும் ஈடுபாடும் அத்திருமுறைகளாற் பெற்ற அருளனுபவமும் இனிது புலனாகும்.

தமிழகம் சங்க காலத்துக்குப்பின் அயலவர் ஆட்சியுட் பட்டுத் தனக்குள்ள, தெய்வக் கொள்கை, தமிழ் வளர்ச்சி, தமிழர் நாகரிகம் முதலிய தன் தொன்மை நலங்களிற் சிதைவுற்ற பொழுது, அச்சிதைவுகளை நீக்கித் தமிழ் நாட்டு அரசியல் உரிமையும், தமிழ் மக்களது வாழ்வியலும், மொழியுணர்வும், கலைவளமும் பண்டு போல் மீண்டும் சிறப்புற்று விளங்க இறைவன் அருளால் தோன்றித் தெய்வத்தமிழ் பரப்பிய செம்புலச் செல்வர்கள், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய திருமுறை ஆசிரியர்கள் ஆவர்.

பண்ணேறும் மொழியடியாராகிய தேவார ஆசிரியர்கள் மூவரும், தமிழகத்தில் ஊர்தோறும் சென்று தமிழ் மக்களை ஒன்றுகூட்டித் திருக்கோயில் வழிபாட்டில் ஈடுபடச் செய்யும் நோக்குடன் பாடிப் போற்றிய இன்னிசைத் திருப்பதிகங்கள் தமிழ்மக்களின் அச்சத்தை நீக்கித் தம் நாட்டினைத் தாமே ஆளும் உரிமையுணர்வினைக் கிளர்ந்தெழச் செய்தன என்பது தமிழக வரலாறு நமக்கு உணர்த்தும் பேருண்மையாகும்.

‘நாமார்க்கும் குடியல்லோம், ‘அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்சவருவதும் இல்லை என்றாங்கு அப்பரடிகள் அருளிய மெய்மொழிகளை உளங்கொண்ட தமிழ் மக்களும், தமிழ் வேந்தர்களும் உரிமையுணர்வுடையராய் வீறு பெற்று எழுந்தனர். செந்தமிழ்ப் பாண்டிநாடு நன்றியிலா நெறியாகிய புறச்சமய இருளில் நீங்கித் திருவருள் வண்ணமாகிய திருநீற்றின் ஒளியுடன் கிழ்வதாயிற்று.

தேவாரத் திருப்பதிகங்களை அன்புடன் ஓதி இறைவனை வழிபட்ட ஆதித்தன், பராந்தகன், அருள்மொழித் தேவனாகிய இராசராசன், கங்கை கொண்ட சோழன் முதலிய பிற்காலச் சோழ மன்னர்கள், தம் நாட்டிலிருந்து அயலார் ஆட்சியை நீக்கியதுடன் தமிழகம் முழுவதனையும், ஒரு குடைக்கீழ் ஆட்சி புரியும் பேராற்றல் கைவரப் பெற்றனர்; வங்காளம் முதலிய வடநாட்டுப் பகுதிகளிலும், கடல் கடந்த வெளிநாடுகளிலும் தமிழரது ஆட்சியும் தமிழர் நாகரிகமும் தமிழ் மக்களின் தெய்வ வழிபாட்டு மரபுகளும் நிலைபெறச் செய்தனர். இவ்வாறு தமிழகத்திலும் வடநாட்டிலும் கடல் கடந்த சயாம் முதலிய வெளிநாடுகளிலும், தமிழரது வீரமும், தமிழர் நாகரிகமும், பரவுவதற்குக் காரணமாய்த் தமிழ் மக்களுக்கு ஊக்கமும் உணர்வும் அளித்தவை, தேவார ஆசிரியர் முதலியோர் அருளிய திருமுறைப் பனுவல்களேயாகும். இவ்வுண்மை திருகோயில்கள் தோறும் திருப்பதிகம் விண்ணப்பஞ் செய்யத் தமிழ் மன்னர்கள் நிறுவிய அறக் கட்டளை (நிபந்தங்கள்) பற்றிய கல்வெட்டுச் செய்திகளால் நன்கு வலியுறுதல் காணலாம்.

புறச்சமய இருள்நீக்கித் தமிழ் மக்களது தெய்வ வழிபாட்டினை நிலை நிறுத்தும் நோக்குடன் பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையை யடைந்த திருஞான சம்பந்தர், திருஆலவாய்ப் பெருமானைப் பரவிப் போற்றும் நிலையில் அமைந்த திருப்பாடல்,

நீலமாமிடற்று, ஆலவாயிலான்பால தாயினார், ஞாலமாள்வரே (1-94-1)

என்பதாகும்.

மன்னுயிர்கள் உய்தல் வேண்டி ஆலகால மாகிய நஞ்சினைத் தன்மிடற்றில் அடக்கிய பேரருளாள னாகிய இறைவனது திருவருளின்வழி ஒழுகுவோரே இவ்வுலகத்தை ஆட்சி புரிவதற்கேற்ற பேராற்றல் படைத்தவர் ஆவர் என்பது இத்திருப்பாடலின் பொருளாகும்.

இத்திருப்பாடல் பாடப் பெற்ற காலச் சூழ்நிலையினைக் கருத்திற் கொண்ட அருட்பிரகாச வள்ளலார் இப்பாடல், அயலவர் ஆட்சியுட்பட்டு அல்லற்படும் தம் காலச் சூழ்நிலைக்கும் ஏற்புடையதே எனத் தெளிந்தார். அத்தெளிவின் பயனாகத் தம் நெஞ்சத்துக்கு அறிவுறுத்தும் நிலையில் திருவொற்றியூர்ப் பெருமானைப் போற்றிப் பாடிய திருப்பதிகம், நெஞ்சொடு நேர்தல் என்னும் தலைப்பில் அமைந்த தாகும். அப்பதிகத்தின் இரண்டாம் பாடல்,

ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டிநீநீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள்பாடும் எம்படம் பக்க நாதன்தாள்நாடு நாடிடில் நாடு நம்மதே. (755)

என்பதாகும்.

இது, மேற்குறித்த ஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிய பாடலின் சொற்பொருள் அமைப்பினையும், யாப்பு அமைதியினையும் அடியொற்றி அமைந்துள்ளமை காணலாம். இதன்கண் மூவர்கள் பாடும் எம்படம்பக்க நாதன் என்ற தொடர், தேவார ஆசிரியர்கள் மூவராலும் திருப்பதிகச் சொல் மாலைகளால் பாடிப் போற்றப் பெற்ற படம்பக்கநாத ராகிய திருவொற்றியூர் சிவபெருமானைக் குறித்ததாகும்.

இங்கெழுந்தருளிய இறைவன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவரும் பாடிய தேவாரத் திருப்பதிகங்களை ஆர்வமுடன் கேட்டு அருள் புரிந்த திறத்தை

நாட நல்லிசை நல்கிய மூவர்தம்பாடல் கேட்கும் படம்பக்க நாதரே (719)

எனவரும் அடிகளில் வள்ளலார் குறித்துப் போற்றி யுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாததும், தேவர் முதலியோர்களால் அறியப் படாததும் ஆகிய இறைவனது பொருள்சேர் புகழ் திறத்தினை நாவெனும் ஒரு பொறிக்கு மட்டும் சுவை பயப்பனவாகிய பாலும், கனியும், அமுதும் தேனும், கசப்புடையன என்று ஒதுக்கும்படி அவற்றினும் மேலாய்ப் பாடும் நாவுக்கும், கேட்கும் செவிக்கும், நினைக்கும் சிந்தைக்கும் தீஞ்சுவை பயக்கும், செந்தமிழ்ப் பாமாலைகளால் போற்றிப் பரவியவர் தேவார ஆசிரியர்கள் மூவருமாதலால் அவர்களால் பாடப் பெற்ற திருப்பாட்டிற்கு இறைவனது மெய்ப்புகழ் இசைந்து அப்பாடல்ளுள் அடங்குவ தாயிற்று என அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

தேவர் அறியார் மால் அறியான்திசை மாமுகத்தோன் தான் அறியான்யாவர் அறிவார் திரு ஒற்றி அப்பா!
அடியேன் யாதறிவேன்மூவர் திருப்பாட்டினுக் கிசைந்தேமுதிர் தீம்பாலும் முக்கனியும்காவல் அமுதும் நறுந்தேனும்கைப்ப இனிக்கும் நின்புகழே. (908)

எனவரும் திருவருட்பாவாகும்.

ஆளுடைய பிள்ளையார் தமது மூன்று வயதாகிய இளம் பருவத்திலேயே உமையம்மையார் அளித்த ஞானப் பாலையுண்டு திருநெறித்தமிழால் சைவ மெய்ந்நெறியைப் பரப்பும் சமய குரவராகத் திகழ்ந்தருளிய செய்தியினை,

பயிலு மூவாண்டிற் சிவைதரும் ஞானப்பால் மகிழ்ந்துண்டு மெய்ந்நெறியாம்பயிர் தழைந் துறவைத் தருளிய ஞானபந்தன் என்றோங்கு சற்குருவே. (3227)

என ஞான சம்பந்தப்பிள்ளையாரை முன்னிலைப்படுத்திப் போற்றும் முகத்தாலும்,

மாநத்த மலர்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே (1420)

என வடிவுடையம்மையை முன்னிலைப்படுத்திப் போற்றும் முகத்தாலும் வள்ளலார் குறித்துள்ளமை காணலாம். நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தப் பிள்ளையாரது கைமலர் வருந்தாதவாறு திருக் கோலக்கா இறைவர் பொற்றாளம் அளித்தருளிய செய்தியை ஓர் காழிப் பாலர்க்காக அன்று பசும் பொற்றாளங் கொடுத்த கோலக்கா மேவும் கொடையாளா (1962-கண்ணி-16) எனவரும் தொடரில் வள்ளலார் குறித்துப் போற்றியுள்ளார்.

திருநெல்வாயில் அரத்துறையினை வழிபடச் சென்ற ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்தம் திருவடி வருந்தாதவாறு அறத்துறை யீசர், முத்துச் சிவிகை, குடை, சின்னம் ஆகியவற்றை அளித்தருளினார் என்பது வரலாறு. இந் நிகழ்ச்சியினை,

முன்னங்காழி வள்ளலுக்கு முத்துச்சிவிகை குடையொடுபொற்சின்னம் அளித்தோன் சிவபெருமான். (1369)

எனவும்,

எங்கள் காழிக் கவுணியரை எழில் கொள் சிவிகை ஏற்றி வைத்தார் (1660)

எனவும்

பேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப் பாலுண்ட செம்மணியைச்சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்ததேவ! (2361)

எனவரும் தொடர்களில் வள்ளலார் குறித்துப் போற்றியுள்ளார்.

தம் மாமன் மகளை மணந்து கொள்ளும் விருப்பத்தால் அவளை உடனழைத்துக் கொண்டு செல்லும் வணிகன், திருமருகலில் தங்கியிருந்த பொழுது, நள்ளிரவில் விடந்தீண்டி இறந்தானாக, அவனுடன் வந்த நங்கையின் அரற்றுதலைக் கேட்ட ஆளுடைய பிள்ளையார், திருவுருமிரங்கி சடையாயெனுமால் என்னும் திருப்பதிகத்தைப் பாடி அவ்வணிகனை உயிர்ப்பித் தருளினார் என்பது வரலாறு. இவ்வருட் செயலை,

ஏச்சகலவிண் மருவினோனை விடநீக்க நல்லருள்செய்வண்மருகல் மாணிக்க வண்ணனே (1962 கண்ணி 145)

எனவரும் தொடரில் மருகற் பெருமானைப் போற்று முகத்தால் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.

திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருவீழி மிழலையில் தங்கியிருக்கும் பொழுது அவரைக் காண விரும்பிய காழி நகர மாந்தர் வீழிமிழைக்க வந்து பிள்ளையாரைத் தொழுது தங்களுடன் காழிப்பகுதிக்கு எழுந்தருள, வேண்டுமென வேண்டிக் கொண்டார்கள். அவர்களது விருப்பத்தை உணர்ந்த பிள்ளையார் இன்று கழித்து நாளை வீழி மிழலை யிறைவர் அருள் பெற்றுப் புறப்படுவோம் எனக் கூறி அன்றிரவு துயிலமர்ந்தார். அந்நிலையில் வீழிமிழலைப் பெருமான் பிள்ளையார்க்குக் கனவில் தோன்றி யாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நீ இன்று வீழிமிழலையிற் காண்பாய் என அருள்செய்து மறைந்தனர். துயிலுணர்ந்து விழிப்புற்று எழுந்த பிள்ளையார், கைகளைத் தலைமேற் குவித்திறைஞ்சித் திருவிழிமிழலைத் திருக்கோயிலுட் புகுந்து விண்ணிழி விமானத்தின் கண்ணே திருத்தோணிபுரத் திருக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து மைம்மருபூங்குழல் என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். இத்திருப்பதிகத்தின் பாடல் தோறும் புகலி நிலாவிய புண்ணியனே! மிழலை விண்ணிழி கோயில் விரும்பியது என்கொல் சொல்லாய் எனப் பிள்ளையார் இறைவனை நோக்கி வினவிப் போற்றுவதுடன் இப்பதிகத்தின் ஒன்பதாம் திருப்பாடலில் எறிமழுவோடிளமான் கையின்றி யிருந்தபிரான் இது என் கொல் சொல்லாய் (1-4-9) எனவரும் தொடரால் மானும் மழுவுங்கைக் கொள்ளாது வீற்றிருந்தருளும் தோணியப்பரது திருவுருவத்தை வீழி மிழலையிற் கண்ட அற்புத நிகழ்ச்சியையும் வெளியிட்டருளிய திறம் உளங்கொளத் தக்கதாகும்.

இவ்வரலாற்று நிகழ்ச்சியைத் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது,

ஏழியல் பண்பெற் றமுதோடளாவிஇலங்கு தமிழ்க்கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக்கிளர்ந்த நற்சீர்வீழியில் தம்பதிக் கேவிடை கேட்கவெற்பாளுடனேகாழியில் தன்னுருக் காட்டினரால்எம்கடவுளரே! (827)

எனவரும் திருவருள் வழக்க விளக்கப் பாடலாகும்.

திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் திருநாவுக்கரசரும் அடியார் திருக்கூட்டத்துடன் திருவீழி மிழலையில் தங்கியிருந்த போது பஞ்சம் உண்டாக, வீழிமிழலைப் பெருமான் அடியார் களின் பசிநீங்க, பஞ்சம் நீங்கும் வரையிலும், அவ்விரு பெரு மக்களுக்கும், நாள்தோறும் படிக்காசு வழங்கியருளினான் என்பது வரலாறு. இச் செய்தியை,

…………. முன்னரசும்காழிமிழலையரும் கண்டு தொழக் காசு அளித்தவீழிமிழலை விராட்டுருவே (1962 கண்ணி 126)

எனவரும் கண்ணியில் வள்ளலார் விளக்கியுள்ளார்.

திருவோத்தூரில் வாழ்ந்த அடியார் ஒருவர் சிவனடியார் களுக்கெனத் தண்ணீர் இறைத்து வளர்த்த பனைகள் அனைத்தும் ஆண்பனையாக, அதுகண்ட புறச் சமயத்தார் அவ்வடியரை இகழ்ந்துரைத்தனர். அந்நிலையில் அவ்விகழ்ச்சியுரையைப் பெறாத அவ்வடியவர் அங்கு வந்த ஆளுடைய பிள்ளையாரிடம் முறை யிட்டார். அது கேட்ட பிள்ளையார் பூத்தேர்ந்து ஆயன கொண்டு என்னும் பதிகத்தினைப் பாடி ஆண்பனைகளை யெல்லாம் பெண்பனைகளாக மாற்றிக் குரும்பை ஈன்று காய்க்கும் படி செய்தருளினார். இச்செய்தியை வள்ளலார் ஆண்பனை, பெண் பனை யாக்கி (3031) எனவரும் தொடரில் குறித்துள்ளார்.

திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் தாம் பெற்ற பூம்பாவையும் தன் செல்வம் அனைத்தையும் பாண்டி நாட்டில் புறச்சமய இருள் நீக்கிச் சிவநெறி பரப்பிய ஞான சம்பந்தருக்கே உரிமை செய்து வாழ்ந்தார். தம்மகள் விடந்தீண்டி யிறக்க அவளது உடம்பைத் தீயிலிட்டு வெந்த சாம்பரையும், எலும்பையும் ஓர் குடத்தில் வைத்துப் பூசனை செய்து வந்தார். அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார் திருமயிலைக்கு எழுந் தருளினார். சிவநேசருடைய மகளது என்பு நிறைந்த குடத்தினைக் கபாலீச் சரத்து இறைவன் திருமுன்னர் வைக்கும்படி செய்து ‘மட்டிட்ட புன்னையங் கானல் எனத் தொடங்குந் திருப்பதிகத்தை ஞானசம்பந்தர் பாடிய பொழுது, அந் குடத்தில் துவக்கப் பெற்ற எலும்பிலிருந்து பூம்பாவை உயிர் பெற்றெழுந்தாள் என்பது வரலாறு.

ஆளுடைய பிள்ளையார் எலும்பைப் பெண்ணாக்கிய இவ்வருட்செயல், சிவமே தாமாகி ஏகனாகி இறைபணி நிற்கும் அவரது உயர்வற வுயர்ந்த பெருமைக்கு ஏற்ற எடுத்துக்காட்டாகும் வியப்புடைய செயலாகாது எனவும், அவருடைய பெரும் புகழை உள்ளவாறு உணர்ந்த பிறர் ஒருவர் எடுத்துக் கூறுவா ராயினும் வெறும் சாம்பலும் தெய்வ வடிவாய் உயிர் பெற்றெழுவ தாகும் எனவும் அருட்பிரகாச வள்ளலார் ஆளுடைய பிள்ளையாரது சீர்த்தியை விரித்துப் போற்றுவதாக அமைந்தது,

பண்ணால் உன்சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்புபெண்ணான தென்பார் பெரிதன்றே அண்ணா அச்சைவ வடி வாம்ஞான சம்பந்தர் சீருரைக்கில்தெய்வவடி வாம் சாம்பர் சேர்ந்து, (திருவருட்பா 2008)

எனவரும் சிவநேச வெண்பாவாகும்.

இறந்த பூம்பாவையின் எலும்பினை உயிர்பெற்றெழும் படி ஞான சம்பந்தர் செய்த இவ்வருட் செயலானது சிறிய போகத்தை நல்கும் அமிழ்தத்தை உணவாக உண்டு நெடுங்காலம் வாழ எண்ணிய தேவர்களை நோக்கி வானுலகம் இகழ்ந்து நகைப்பதற்கு ஏதுவாயிற்று என்னும் கருத்தமைய வள்ளலார் ஞானசம்பந்தரைப் போற்றியதாக அமைந்த பாடல்,

நல்லமுதாம் சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச்சொல்லமுதந் தந்த எங்கள்பிரான் வளஞ்சூழ்மயிலைஇல்லமுதந் திகழ்பெண்ணாக என்னை எழுப்பிய நாள்சில்லமுதம் பெற்ற தேவரை வானஞ் சிரித்த தன்றே. (2301)

என்பதாகும்.

‘சிறுமை யுடைய வானுலக இன்பத்தினையே பெரிதெனக் கருதி அமுதினை யுண்டு நெடுநாள் வாழும் தேவர்களாகிய நீவிர் வளமார்ந்த திருமயிலைப் பதியில் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய ஞானத் தமிழாகிய அமுதினைப் பருகி, என்பு பெண்ணுருவாகத் தோன்றிய அமிழ்தனைய பூம்பாவை சிவனருளைச் சிந்தித்துச் சிவத்தைச் சேர்ந்தாற் போன்று, தெய்வவமுதத்தைப் பருகிச் சிவமாந் தன்மைப் பெருவாழ்வைப் பெற முயலாது வீணே காலத்தைக் கழிக்கின்றீர்களே என வானுலகம் தன்னிடத்தே வாழும் தேவர்களை நோக்கி இகழ்ந்து நகைப்பதாயிற்று என்பார்,

வளஞ்சூழ் மயிலையில் அமுதந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள் சில்லமுதம் பெற்ற தேவரை வானஞ் சிரித்தது என்றார் வள்ளலார். சில்லமுதம் என்றது நிலையில்லாத சிறிய போகத்தை.

கவுணியப் பிள்ளையார், உமாதேவியார் நல்ல அமுதமாகிய திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் கலந்து தர அதனைக் கையிற்கொண்டு பருகி அதனை நாவினால் மறித்து, எல்லாம் வல்ல இறைவனும் அவன் அடியார்களும் தம் செவிகளாற் பருகும் சொல்லமுதமாகத் தந்தருளினார். எங்கள் பிரான் சம்பந்தன் செய்தருளிய இதனைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது.

சிவைநல்லமுதம் தரத் தான்கொண்டு நின் நற்செவிக்குச்சொல்லமுதந் தந்த எங்கள்பிரான்.

என்னும் தொடராகும்.

சிவை = உமையம்மை. நல்லமுதம் = அம்மையார் அளித்த ஞானப்பாலமுதம். நாவினாற் பருகிய ஞானப் பாலைத் தேவாரத் திருப்பதிகம் என்னும் சொல்லமுதமாக அன்பர் பலரும் பருக அளித்த பெருமை காழிக் கவுணியர் பிரானாகிய வள்ளலுக்கே உரியதென்பது இத்தொடரின் கருத்தாகும்.

வள்ளலார் அருளிய இப்பாடல் ;

பூவான் மலிமணிநீர்ப் பொய்கைப் கரையினியற்பாவான் மொழிஞானப்பாலுண்டு நாவான்மறித்தெஞ் செவியமுதா வார்த்த பிரான் றண்டைவெறித் தண் கமலமே வீடு. (நால்வர் நான்மணிமாலை-1)

எனவரும் சிவப்பிரகாசரின் பாடற் பொருளை நினைவு கூரும் நிலையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருஞான சம்பந்தப் பிள்ளையார் நல்லூரில் வாழ்ந்த நம்பாண்டார் நம்பியின் திருமகளாரை மணந்து தீவலம் வருதலான சடங்கினை நிறைவேற்றும் நிலையில் விருப்புறும் அங்கியாவார் விடையுயர்த்தவரே யென்னும் சிந்தையராய்த் தீயினை வலம் வந்தார்; நல்லூர்ப் பெருமணத் திருக்கோயிலை யடைந்து கல்லூர்ப் பெருமணம் வேண்டா என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடி, அங்கு எழுந்த பெருஞ்சோதியில் காதலியைக் கைப்பிடித்துப் புகுபவர் தம் திருமணம் காண வந்த எல்லோரையும் முன்னேயனுப்பி அதன்பின் தாமும் தம் மனைவியாரும் இறைவனது எழில்வளர் சோதியிற்புகுந்து சிவபெருமானோடு ஒன்றி உடனானார் என்பது வரலாறு. இவ்வரலாற்று நிகழ்ச்சியை,

…. ….. ….. ….. ….. விழிப்பாலன்கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதருநல்லூர்ப் பெருமணம்வாழ் நன்னிலையே

(1962 கண்ணி – 6)

என விண்ணப்பக் கலிவெண்பாவில் வள்ளலார் குறித்துள்ளமை காணலாம். இதன்கண் விழிப்பாலன் என்றது, சிவபெருமானது நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகப் பெருமானை, முருகப் பெருமானே, திருஞான சம்பந்தப் பிள்ளையாராகத் திருஅவதாரஞ் செய்தருளினார் என்பது அருட்பிரகாச வள்ளலாரின் நம்பிக்கை யாகும். அது பற்றியே ஞானசம்பந்தப் பிள்ளையாரை இத்தொடரில்

விழிப்பாலன் எனக் குறித்தார் வள்ளலார்.

ஆருகதச் சமயக் காட்டை அழித்த வெங்கனலே போற்றி

(முருகன் போற்றி 512)

எனவும்,

சைவந்தழைக்கத் தழைத் தாண்டி ஞானசம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி (சண்முகர் கொம்மி 534)

எனவும் வரும் தொடர்களில் ஞானசம்பந்தப் பெருமான் செய்த செயல்களை முருகப் பெருமான் செயல்களாக வள்ளலார் குறித்துப் போற்றியுள்ளமை காணலாம்.

இவ்வாறு ஞானசம்பந்தப் பிள்ளையாரை முருகப் பெருமானது திருஅவதாரமாகப் போற்றி வழிபடு மரபு கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணியிலும், கந்தரநுபூதி பெற்றுக் கந்தரநுபூதி பாடிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழிலும், சிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர்ச் சந்நிதி முறையிலும் இடம்பெற்றுள்ளமை இங்கு ஒப்புநோக்குதற் குரியதாகும்.

பிறவிப் பெருங்கடலிற்கட்டுக் கரை காணாது வருந்தும் இயல்பினராகிய மக்கள் திருஞானசம்பந்தரது திருமணத்தைக் கண்டு உடன்சேவித்துச் செல்லும் நற்பேற்றினாலே நல்லூர்ப் பெருமணத் திருக்கோயிலில் தோன்றிய ஈறில் பெருஞ்சோதியிலே புகுந்து பிறவா நெறியாகிய பேரின்ப வாழ்வைத் தலைப் பட்டார்கள் என்னும் இவ்வரலாற்று நிகழ்ச்சியை உளங்கொண்டு நெஞ்சம் நெக்குருகிய வள்ளலார், இறைவனை நோக்கி முறையிடுவதாக அமைந்தது,

எங்கோவே யான்புகலி எம்பெருமான் அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் இங்கேநின்தாள்வருந்த வேண்டேன் தடைப்பட்டேன் ஆதலினில்நாள்வருந்த வேண்டுகின்றேன் நான். (2009)

எனவரும் திருவருட்பாவாகும்.

‘எம் ஆருயிர்த் தலைவனாகிய இறைவனை, புகலிசபதியில் தோன்றிய எம்பிரான் சம்பந்தரது திருமணத்தில் மணத்திற்கு வேண்டும் பொருட்களைத் தூக்கிச் செல்லும் பணியாட்களுள் ஒருவனாக யான் இருந்திருப்பேனானால் இவ்விடத்தை நின் திருவடி வருந்தும்படி பலமுறையும் வணங்கி வேண்டும் நிலையில் நினக்குச் சுமையாக இருக்கமாட்டேன். இத்திருமணத்தில் கலந்து கொள்ளாதபடி காலத்தால் தடைப்பட்டேன் ஆதலால் இந்நாளில் வருந்தும்படி நின்னைப் பலமுறையும் வேண்டிக் கொள்வே னாயினேன் என வள்ளலார் இறைவனை நோக்கிக் கூறுகின்றார். திருஞான சம்பந்தப் பிள்ளையார் தம் திருமணம் காண வந்தார் அனைவருக்கும் வீடுபேறளித்த அருள் உண்மையை நினைந்து போற்றுவது மேற்குறித்த சிவநேச வெண்பாவாகும். ஞானசம்பந்தப் பிள்ளையாரை இளம்பருவத்திலேயே குருவாகக் கொண்ட வள்ளலார், பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களை நாள்தோறும் ஓதிவருவதனை மரபாகக் கொண்டவ ரென்பதும், அவ்வாறு ஓதி வரும் நாளில் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் முதல் திருப்பதிகத்தின் திருக்கடைக் காப்புப் பாடலாகிய,

அருநெறிய மறைவல்ல முனியகன்பொய்கை அலர்மேயபெருநெறிய பிரமா புரமேவியபெம்மான் இவன்றன்னைஒருநெறிய மனம் வைத்துணர்ஞானசம்பந்தன் னுரைசெய்ததிருநெறிய தமிழ்வல்லவர் தொல்வினைதீர்தல் எளிதாமே (1-1-11)

எனவரும் பாடலை இறைவன் குறிப்பித்தருளினன் எனவும், அப்பாடலின் நுண் பொருளை நெடுநாள் தெரியாதிருந்த தாம், உயிர்க்குயிராய் இறைவன் மீண்டும் உள்நின்றுணர்த்த அப்பாடலிற் குறிக்கப்பட்ட பெருநெறி என்ற தொடர்ப் பொருளைத் தாம் உள்ளவாறு அறிந்து கொண்டதாகவும், ஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களாகிய திருநெறிய தமிழ் காலவேறு பாட்டால் மாற படாததெய்வத் தன்மைவாய்ந்த தமிழ்மறையாகும் என்பதனைப் பிற்காலத்தில் உணர்ந்து தெளிந்த தாகவும் அருட்பிரகாச வள்ளலார் படிப்படியாகத் தாம் பெற்ற திருவருள் விளக்கத்தைக் கூத்தப் பெருமானை நோக்கிக் கூறுவதாக அமைந்தது,

திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக் காப்பதனால்திருவுளங்காட்டிய நாளில் தெரிந்திலன் இச்சிறியேன்பெருநெறி என் உளத்திருந்து காட்டியநா ளறிந்தேன்பிழைபடாத் தெய்வமறை யிதுவெனப்பின் புணர்ந்தேன்ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்உணராத உளவையெல்லாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்தெருள்நெறிதந் தருளுமறைச் சிலம்பணித்த பதத்தாள்சிவகாம வல்லிமகிழ் திருநடத் தெள்ளமுதே. (2802)

எனவரும். திருவருட்பாத் திருவருள் விலாசத் தலைப்பின் இரண்டாவது பாடலாகும்.

திருஞானசம்பந்தர் அருளிய மேற்குறித்த திருக்கடைக் காப்புப் பாடலில் பெருநெறி எனவும், திருநெறி எனவும் குறிக்கப்பட்டது, வள்ளலார் மேற்கொண்டொழுகிய சமரச சுத்த சன்மார்க்க நெறியாகும். இந்நுட்பம்,

திருநெறியொன்றே யதுதான் சமரசசன்மார்க்கச்சிவநெறியென் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமினீண்டுவருநெறியி லெனையாட்கொண் டருளமுத மளித்துவல்லப சத்திகளெல்லாம் வழங்கிய ஓர்வள்ளல்பெருநெறியிற் சித்தாடத் திருவுருங்கொண் டருளிப்பெருங்கருணை வடிவினொடு வருதருண மிதுவேகருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்கண்மையினாற் கருத்தொருமித் துண்மை யுரைத்தேனே (5587)

எனவும்,

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரச சன்மார்க்கத்திருநெறியே பெருநெறியாம் சித்தியெலாம் பெறாலாம்ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கு முணர்ந்தீர்உலகமெலாங் கண்டிடுமோர் உளவையறிந்திலிரேவார்ந்தகடல் உலகறிய மரணமுண்டே அந்தோமரணமென்றாற் சடமெனுமோர் திரணமும் சம்மதியாசார்ந்திடுமம் மரணமதைத் தடுத்திடலாங் கண்டீர்தனித்திடு சிற்சபை நடத்தைத்தரிசனஞ் செய்வீரே. (5596)

எனவும் வரும் திருவருட்பாக்களால் இனிது புலனாதல் காணலாம்.

மேற்கண்ட இப்பாடல்களிரண்டும் வள்ளலார் தோன்றுந் துணையாக இருந்து சித்திவளாகத் திருமாளிகையில் திருக் காப்பிட்டுக் கொள்வதற்குமுன் இறுதியாகப் பாடிய இருபத்தெட்டுப் பாடல்களில் அடங்கியன என்பதை அருட்பா அன்பர்கள் அனைவரும் நன்குணர்வர். பெரு நெறிய…. பெம்மான் என ஞானசம்பந்தர் நுண்பொருளாய்க் குறித்த பெருநெறி யினையே வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கமாக விரித்துக் கூறியுள்ளார் என்பது இத்திருமூலர் அருளிய திருநெறி, பெருநெறி எனக் குறிக்கப்படுவது குருமுகமாக அறிவுறுத்தப்படும் சன்மார்க்கச் சிவநெறியே என்னும் உண்மையினை,

திருநெறியாவது சித்தசித் தன்றிப்பெருநெறியாய பிரானை நினைந்துகுருநெறியாம் சிவமாநெறி கூடும்ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. (திருமந்திரம் – 54)

எனவரும் திருமந்திரப்பாடல் நன்கு விளக்குகிறது.

குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக்கொடுத்தது கூறரிதாம்பெருநெறிக்கே சென்ற போக்குக்கிடைப்பது பேய்உலகக்கருநெறிக் கேற்றவர் காணற்கரியது காட்டுகின்றதிருநெறிக் கேற் கின்றதுஉத்தரஞான சிதம்பரமே. (4052)

எனவரும் திருவருட்பாவினாலும் இவ்வுண்மை நன்கு வலியுறுத்தப் பெறுவது காணலாம்.

சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஓசை எனப்படும் ஐம்புல உணர்வுகளும் தமக்குரிய நா, கண், மெய், செவி, மூக்கு என்னும் ஐம்பொறிகளில் நிலைத்திராது கலக்க முறவும் இவற்றைச் செலுத்துவதாகிய மனம் தான் செல்லுதற்குரிய நெறி இன்னதென்று அறியாது மயக்க முறவும், மனம் முதலிய அகக்கருவிகள் வாயிலாக வும் மெய் முதலிய புறக் கருவிகள் வாயிலாகவும் பொருள்களை அறிதற்குரிய உயிரின் அறிவு சிதைவுறவும், உடம்பில் வாய் வழியாகக் கோழை மேற்பட்டு வரவும் ஆன்மா அலமரும் இடர் நிலையில் ‘அஞ்சற்க என்று இறைவன் அருள் புரிவான் என்னும் உண்மையினை அறிவுறுத்தும் முறையிலமைந்தது,

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கிஅறி வழிந்திட்டு ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல் என்றருள் செய்வான்.

(தேவாரம் 1-130-1)

எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரமாகும். இவ்வருளுரை யினைக் கூர்ந்து சிந்தித்த இராமலிங்க வள்ளலார் ஒரு நிலையில் நில்லாது உலகியலிற் பலவிடங்களிலும் பரந்து திரியும் நெஞ்சத்தினை நோக்கி, நினக்கு அருள் புரியும் சிவபரம் பொருளை நினையாது உலகப் பொருள்களிற் சென்று அலைகின்ற நெஞ்சமே ஞானசம்பந்தர் அருளிய புலனைந்தும் பொறிகலங்கி என்ற பாடற் பொருளை, மயக்கத்தைச் செய்யும் மாயையாகிய மலத்தால் மறைப்புண்டு ஐயோ, மறந்து விட்டாயே என வருந்தி அறிவுறுத்துவதாக அமைந்தது,

இறைவனேபுனைந்தும் என்றருளும் பொன்மொழியை மாயாமலமொன்றி அந்தோ மறந்தாய் (1965 கண்ணி 470)

எனவரும் ‘நெஞ்சறிவுறுத்தல் பகுதியாகும்.

இத்தொடரில் இறையோன் என்றது, சிவமாம் தன்மைபெற்ற திருஞானசம்பந்தப் பிள்ளையாரை.

திருஞான சம்பந்தப் பிள்ளையார், மங்கையர்க் கரசியாரும், குலச்சிறையாரும் வேண்டிக் கொண்ட வண்ணம் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளி, அதன் தலை நகராகிய மதுரையை நெருங்கிய நிலையில் திருவாலவாயின் கோபுரம் தோன்ற அது கண்டு வியந்து நிலமிசைப் பணிந்து திருவாலவாய் இறைவரைப் போற்றிய திருப்பதிகம் ‘மங்கையர்க்கரசி எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகத்தின் இரண்டாம் பாடலாகத் திகழ்வது,

வெற்றவே அடியா ரடிமிசை வீழும்விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் றனக்கு மந்திரி யாயகுலச்சிறை குலாவி நின்றேத்தும்ஒற்றை வெள்விடைய னும்பரார் தலைவன்உலகினி லியற்கையை ஒழிந்திட்டுஅற்றவர்க் கற்ற சிவனுறைகின்றஆலவா யாவது மிதுவே. (3-120-2)

என்பதாகும். இதன்கண் முதலிரண்டிகளும் மந்திரியார் குலச் சிறையாரின் அடியார் பத்தியினையும் சிவபத்தியினையும் விளக்குவன. பன்னிரண்டடிகளும், திருவாலவாய்த் திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனது திருவருளின் நீர் மையைப் புலப்படுத்துவன.

‘உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு அற்றவர்க்கு அற்றசிவன் எனவரும் இத்தொடர், உலகுயிர்களோடு ஒன்றாகியும். வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது அத்துவித நிலையைப் புலப்படுத்துவதாகும். இதன் கண் அற்றவர் என்றது, அளவற்ற அன்பின் திறத்தாலே உலகியல் நெறியாகிய பாசவாழ்வினை ஒழித்து யாவராலும் செய்ய வொண்ணாத செயலைச் செய்து, ஆன்ம போதம் அற்றுத் தம்மைச் சிவனருளிலே கொடுத்த மெய்யடியார்களை. அற்றவர்க்கு – பாசப் பிணிப்பினின்றும் நீங்கி இறைவன்பால் முழுதும் தன்னைக் கொடுத்துத் தான் அவனாய்த் தன் செயலற்ற சிவஞானியர்கட்கு. அற்றசிவன் தான் என்றும் அவர் என்றும் பிரிக்க வொண்ணாத இரண்டற்ற நிலையில் தன் செயலே அவர்கள் செயலாக அவ்வடியார்களோடு ஒட்டி வாழ்பவ னாகிய சிவபெருமான். அற்றசிவன் என்ற தொடரில் உள்ள அறுதல் என்னும் வினை, இரண்டற ஒன்றுபடுதலைக் குறித்தது. இஃது ஒட்டி வாழ்தல் எனவும் கூறப்படும். உயிராவணம் செய்திட்டு உன்கைத் தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி (6-25-1) எனவரும் அப்பர் அருளனுபவ மொழி இங்கு நினைக்கத் தகுவதாகும். அற்றவர்க்கு அற்றசிவன் என்னும் இத்தொடர்ப் பொருளை.

முற்றும் அற்றவர்க்கற்றவன் (இருபா இருபது 20) எனவரும் தொடரில் அருள் நந்திசிவனார் விளக்கியுள்ளமை காணலாம். இத்தொடர் உலகெலாமாகி, வேறாய் உடனுமாய் நிற்கும் இறைவன், பாசப் பிணிப்பின் நீங்கித் தன்செயல் அற்று இறைபணி நிற்கும் சிவஞானயர்களோடு தன் செயலே அவர் செயலாகும்படி ஒன்றுபட்டு நிற்கும் அத்துவித நிலையைப் புலப்படுத்துவதாகும்.

இவ்வுண்மையினை.

அற்றவர்கட் கற்றசிவ னாமென்ற அத்துவிதமுற்றுமொழி கண்டருளின் மூழ்குநா ளெந்நாளோ

(தாயு – அறிஞருரை -2)

எனவரும் பாடலில் தாயுமான அடிகளார் தெளிய விளக்கி யுள்ளமை காணலாம்.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிய அற்றவர்க்கற்ற சிவன் என்ற தொடரின் பொருளையும் அந்தத் தொடருக்கு அருள்நந்திசிவனாரும், தாயுமான அடிகளும் கூறிய விளக்கத் தினையும் உளங்கொண்ட அருட்பிரகாச வள்ளலார், பாசப் பிணிப்பின் நீங்கித் தன் செயலற இறைபணியில் நிற்காத நெஞ்சத் தினைத் திருத்திப் பணி கொள்ளுதற்குரிய பொன்மொழியாக விளங்குவது, சம்பந்தர் அருளிய அத்தொடர் மொழி என்றும், அம் மொழியை உலகத்தார் கூறும் மற்றை மொழிகளைப் போன்று புறக்கணித்து மறந்து விடலாகாதென்றும் தமது நெஞ்சத்திற்கு அறிவுறுத்தும் முறையிலமைந்தது,

சம்பந்தர்

அற்றவருக்கு அற்றசிவனாமெனுமப் பொன்மொழியைமற்றை மொழி போன்று மறந்தனையே. (1965-525)

எனவரும் நெஞ்சறிவுறுத்தல் கண்ணியாகும்.

அம்மை யப்பனாகிய இறைவனைத் தாயானைத் தந்தையெனக் காயினானை (3951) எனப் போற்றுவர் வடலூர் வள்ளலார். ‘தாயும் நீயேதந்தை நீயேசங்கரனே (1-50-7) என்பது ஆளுடைய பிள்ளையார் வாய் மொழியாகும். இறைவன் விழிப்பு நிலையிலும் உறக்க நிலையிலும் கனவு நிலையிலும் தமக்குத் தோன்றியருள் புரிந்த திறத்தை,

நனவினும் கனவினும் எனக்கே நண்ணிய தண்ணிய அமுதை (3966)

எனவரும் தொடரில் பரவிப் போற்றுவர் வள்ளலார் இத் திருவருட்பாத் தொடர்,

நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளிநினைவிலும் எனக்கு வந்தெய்தும் நின்மலன் (3-21-1)

எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தை அடிஒற்றியமைந்தது.

பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானைப் பிறப்பிலான் எங்கள் பரசிவ பெருமான் – (884) என வள்ளலார் போற்றியுள்ளமை ‘பிறப்பில் பெருமானைப் பின் தாழ் சடையானை (1-80-2) எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தை அடிஒற்றி அமைந்துள்ளமை காணலாம்.

இவ்வாறே அருட்பிரகாச வள்ளலார் சைவசமய ஆசிரியர் நால்வருள் திருநாவுக்கரசர், நம்பியாரூரர் மாணிக்கவாசகர் அருளிய திருமுறைகளையும், திருமூலர் முதல் சேக்கிழார்நாயனார் ஈறாக வுள்ள ஏனையோர் அருளிய திருமுறைகளையும் தாம்பாடிய திருவருட்பாவில் எடுத்தாண்டு பொருள்விளக்கம் செய்துள்ளார்கள். அத்தகைய ஒப்புமைப் பகுதிகள் நிரம்பவுள்ளன. அவையனைத்தும் ஒருதனி நூலாக வெளிவரத் தக்கன ஆதலின் திருமுறையும் திருவருட்பாவும் என்ற இப்பகுதி இவ்வளவில் நிறைவு செய்யப் பெறுகிறது.

வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள்வாழிஎலாம் வல்ல மணிமன்றம் வாழிநடம்வாழி அருட்சோதி வாழி நடராயன்வாழி சிவ ஞான வழி.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *