
திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்
14. அகத்துறைப் பாடல்கள்
தொல்காப்பியப் புறத்திணையியலுள் ஏழாவதாகச் சொல்லப் படுவது பாடாண்திணை என்னும் ஒழுகலாறாகும். புலவர் பாடும் புகழினை விரும்பிய தலைவர்கள் தம்முடைய, அறிவு, திரு, ஆற்றல், ஈகை முதலிய பெருமிதப்பண்புகளை ஆளுதல் தன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். இது புலவராற் பாடப்பெறும் தலைமக்களது ஒழுகலாறாகிய பண்புடைமையினை உணர்த்தி நின்றது. போர்க் களத்தே அஞ்சாது போர்புரியும் மறவர்களின் தொழிலாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, என்பன வற்றைப் பொருளாகக் கொண்டு பாடப் பெறும் அறுவகைத் திணைப்பகுதிகளும், ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் அன்பினாற் கூடி வாழும் அகத்திணை ஒழுகலாற்றைப் பொருளாகக் கொண்டு பாடப்பெறும் காமப்பகுதியும் ஆகிய இவ்வெழு வகைகளும் பாடாண் திணையின் பொருட்கூறுகளாகும். மக்களைப் பொருளாகக் கொண்டு பாடுதற்குரிய காமப் பகுதியினைக் கடவுளைப் பொருளாகக் கொண்டு பாடினும் நீக்கார். கடவுளை மக்கள் காமுற்றதாகச் செய்யுள் செய்தலும் நீக்கப்படாது என்றார் தொல்காப்பியனார். இவ்விருவகையினையும் கடவுள் மாட்டுத் தெய்வப்பெண்டிர் நயந்த பக்கம் எனவும் கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் எனவும் முறையே குறிப்பிடுவர் இளம்பூரணர். இவ்விரு வகையுடன் கடவுள் மானிடப் பெண்டிரை நயத்தலையும் சேர்த்து மூன்றாகக் கொள்வர் நச்சினார்க்கினியர். காமம் என்னாது காமப்பகுதி என்றதனானே கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை என்னும் எழுதிணைக்குரிய காமமும், காமஞ்சாலா இளமையோள்வயிற் காமமும் அன்று; இது வேறோர் காமம் என்று கொள்க என்பர் நச்சினார்க்கினியர்.
கடவுள் என்னும் சொல் தெய்வம் என்னும் பொதுப் பொருளில் மட்டுமன்றி உலகப் பொருள்கள் எல்லாவற்றையும் இயக்கி நிற்கும் முழுமுதற் பொருளாகிய இறைவனைக் குறிக்கும் சிறப்பு முறையில் இங்கு ஆளப் பெற்றுள்ளது. எனவே எல்லாம் வல்ல பரம்பொருளைத் தம் ஆருயிர் நாயகனாக எண்ணிக் காமுற்றுப் பேரன்பு செய்யும் வழிபாட்டு முறையும் தொல்காப்பியனார் காலத்துத் தமிழகத்தில் நிலவியிருந்தமை நன்கு தெளியப்படும். சைவத் திருமுறை ஆசிரியர்களாகிய ஆழ்வார்களும் எல்லாம் வல்ல இறைவனை ஆருயிர் நாயகனாகவும் தம்மை அவனது அருள்வேட்ட தலைவியாகவும் கொண்டு போற்றிய ஞான நன்னெறிப் பாடல் களாகிய திருவருள் இலக்கியத்திற்கு அரண் செய்யும் இலக்கணமாகக் காமப்பகுதி கடவுளும் வரையார், ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் (தொல்.புற. 23) எனவரும் இத்தொல்காப்பிய நூற்பா அமைந்துள்ளமை காணலாம்.
தொண்டு நெறியிலும் மகன்மை நெறியிலும் தோழமை நெறியிலும் என்று எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய கூத்தப் பெருமானைப் போற்றிய இராமலிங்க வள்ளலார், இறைவனை ஆருயிர்த் தலைவனாகவும் தம்மை அவனது அருள் வேட்ட தலைவியாகவும் கொண்டு (திருவாதவூரடிகள் மேற்கொண் டொழுகிய தலைவன் தலைவி உறவு நிலையில் நின்று) பாடிப் போற்றிய அகத்துறைப் பாடல்கள் திருவருட் பாவில் நிரம்ப இருத்தலை அன்பர்கள் நன்குணர்வார்கள். தம் ஆருயிர் நாயகனாகிய திருவொற்றியூர்ப் பெருமான்பால் காதல் கூர்ந்த தலைவி ஒருத்தி அம்முதல்வன் திரு வீதியில் உலாப் போந்த காட்சியினைக் கண்டு தான் பெற்ற பேற்றினைத் தன் பாங்கிக்கு எடுத்துரைப்பதாக அமைந்தது, திருவருட் பாவிலுள்ள திரு உலாப் பேறு என்னும் பதிகமாகும்.
சேயைஅருளுந் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில்தூயபவனி வரக்கண்டேன் சூழ்ந்தமகளிர் தமைக்காணேன்தாயைமறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன்தனிப்பட்டேன்ஏயென் தோழி என்னடிநான் இச்சையமாய் நின்றதுவே!
(1498)
என்பது மேற்குறித்த பதிகத் திருப்பாடல்களுள் ஆறாம் பாடலாகும். இப்பாடலில் தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன் எனவருந் தொடர் :
அன்னையையும் அத்தனையும் அன்றேநீத்தாள்அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்தன்னை மறந்தாள் தன்நாமங் கெட்டாள்தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே! (6-25-7)
எனவரும் அப்பர் அருள்மொழியை நினைவு படுத்துவதாகும்.
ஒற்றியூர்ப் பெருமானை விழைந்த தலைவி தன் ஆருயிர் நாயகனாகிய இறைவன்பால் நாரை, கிளி, முதலிய பறவைகளைத் தூது விடுவதாக அமைந்தது ‘நாரையும் கிளியும் நாட்டுறு தூது என்னும் தலைப்பில் அமைந்த பதிகமாகும்.
கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும்காணக் கிடையாக் கழலுடையார்நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய்சென்று நவிற்றாயோஅண்ணல் உனது பவனிகண்டஅன்றுமுதலாய் இன்றளவும்உண்ணு முணவோ டுறக்கமும்நீத்துற்றாள் என்றிவ் வொருமொழியே. (1503)
என்பது மேற்குறித்த பதிகத்தின் முதற்பாடலாகும்.
இப்பாடல்,
குட்டத்துங் குழிக் கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்இட்டத்தா லிரைதேரு மிருஞ்சிறகின் மடநாராய்சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேயவட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே
(3-63-3)
எனவரும் ஆளுடைய பிள்ளையார் திருப்பாடலை யடியொற்றி யமைந்துள்ளமை காணலாம்.
தன் ஆருயிர் நாயகனைப் பிரிந்த நிலையில் தலைவி இரங்குவதாக அமைந்தது, முப்பத்தொரு பாடல்களால் இயன்ற ‘இரங்கல் மாலை யென்னும் பனுவலாகும். இறைவன் திருவுலா வந்ததைக் கண்ட தலைவி தன் மனம் அவனை விரைந்து சென்றடைந்தமையினை வியந்துரைப்பதாக அமைந்தது, திருவுலா வியப்பு என்னும் பதிகமாகும். தலைவி தன் ஆருயிர்த் தலைவ னாகிய ஒற்றியூர்ப் பெருமானுடன் அன்பினால் உரையாடிய திறத்தை வியந்துரைப்பது சல்லாப் வியன்மொழி என்னும் பதிகமாகும்.
வெற்றியிருந்த மழுப்படையார்விடையார் மேரு வில்லுடையார்பெற்றியிருந்த மனத்தர்தமுட்பிறங்கும் தியாகப் பெருமானார்சுற்றியிருந்த பெண்களெல்லாஞ்சொல்லி நகைக்க வருகணைந்தார்ஒற்றியிருமென் றுரைத்தேனான்ஒற்றியிருந்தே னென்றாரே (1558)
என்பது இப்பதிகத்தின் ஐந்தாம் பாடலாகும். ‘வெற்றித் திறன் வாய்ந்த மழுப்படையை யுடையவரும் எருதினை ஊர்தியாகப் பெற்றவரும் மேருமலையை வில்லாக வளைத்தவருமாகி, அன்பு நிறைந்த மனமுடைய அடியார்களின் உள்ளத்தே விளங்கும் தியாகேசப் பெருமானாகிய தலைவர், என்னைச் சுற்றியிருந்த பெண்களெல்லாம் இவள் நாணமற்றவள் என்று சொல்லிச் சிரிக்க என்பக்கத்தே அணைந்தார். அதுகண்ட நான் என்னை நெருங்காது சிறிது தூரத்தில் தள்ளியிருப்பீராக என்று கூறுமுறையில் ‘ஒற்றியிரும் என்றுரைத்தேன். அதுகேட்ட தலைவர் நான் ஒற்றி (நெருங்கி)த் தானே யிருந்தேன் என்று கூறினார் எனத் தலைவி தோழியை நோக்கிக் கூறுவதாக அமைந்தது இப்பாடல். இதன்கண் ஒற்றியிரும் என்ற சொல் எம்மை விட்டுச் சிறிது தள்ளியிருப்பீராக என்ற பொருளில் தொண்டைநாட்டில் வழங்கும் வழக்குச் சொல்லாகும். ஒற்றியிருத்தல், தள்ளியிருத்தல், தள்ளியிருப்பீராக என்ற கருத்தில் ஒற்றியிரும் என்று வழக்குச் சொல்லால் தலைவி கூறினாளாக, அது கேட்ட தலைவர் அப்பொருளை உணராதவர்போல் நடித்து ஒற்றியிருந்தேன் (நெருங்கியிருந்தேன்) எனக் கூறியது, இருவர் கலந்துரையாடலில் நிகழ்ந்த இன்பமாகும். ஒற்றியிருந்தேன் எனவரும் இத்தொடர்க்கு ‘ஒற்றியூரிலிருப்பவனே நான் எனத் தலைவர் மறுமொழி கூறினாராகக் கொள்ளுதலும் ஓர் நயம். இவ்வாறே திருவருட்பா இரண்டாம் திருமுறையில் இன்பக்கிளவி முதல் இங்கிதமாலை ஈறாக உள்ள பகுதிகளும், ஆறாந் திருமுறையில் திருவடிப்பெருமை முதல் அநுபவமாலை ஈறாக உள்ள பகுதிகளும் அகத்துறைப் பாடல்களாகவே அமைந்துள்ளன.
கூத்தப் பெருமான்பால் காதல் கொண்ட தலைவி ஒருத்தி, அவ்விறைவரது திருவடிப் பெருமையைத் தன் தோழிக்கு விரித்துக் கூறுவதாக அமைந்தது, திருவடிப் பெருமை என்ற பனுவலாகும்.
திருவாளர் கனகசபைத் திருநடஞ் செய் தருள்வார்தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்பெருவாய்மைத் திறம் சிறிதும் பேச முடியாதேபேசுவதார் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால்துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்சொல்அளவில் லாதசுகம் தோன்றுவ தென்தோழி. (5625)
என்பது திருவடிப்பெருமை என்ற தலைப்பில் அமைந்த முதற் பாடலாகும். தலைவி தலைவன் செயலைத் தாய்க்கு உரைப்பதாக அமைந்தது,
அன்னப் பார்ப்பால் அழகாம் நிலையூடேஅம்பலம் செய்துநின் றாடும் அழகர்துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும்நானும்சூதாடுகின்ற அச்சூழலில் வந்தேஉன்னைப் பார்த்துன்னுள்ளே என்னைப் பாராதேஊரைப் பார்த்தோடி உழல்கின்ற பெய்யேஎன்னைப் பார் என்கின்றார் என்னடி அம்மாஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா (5670)
எனவரும் பாடலாகும். இதன்கண் அம்பலத்திலாடும் அழகராகிய இறைவர் தலைவியும் தோழியும் விளையாடும் இடத்திலே வந்து தலைவியை நோக்கி உன்னைப் பார்த்து உன்னுள்ளே என்னைப் பாராதே. ஊரைப் பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே, என்னைப் பார் எனக் கூறியது, உயிர்க் குயிராகிய இறைவன் ஆன்மாவை நோக்கி, ‘புறப்பொருள்களில் உள்ளத்தைச் செலுத்தாமல் உன் உள்ளத்துள்ளே உயிர்க்குயிராய்த் திகழும் என்னைக் கண்டு உய்தி பெறுவாயாக என அறிவுறுத்திய உபதேசப் பொருளை உளங்கொண்டதாகும்.
இறைவன்பால் காதல்கொண்ட தன் மகளது நிலைமை குறித்து நற்றாய் செவிலிக்குக் கூறுவதாக அமைந்தது,
உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யவன்என்உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்அணிந்தனன் எனக்கே அருள்மண மாலைஅதிசயம் அதிசயம் என்றாள்துணிந்துநான் தனித்தபோது வந்தென்கைதொட்டனன் பிடித்தனன் என்றாள்புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்பொங்கினாள் நான்பெற்ற பொன்னே (5680)
எனவரும் பாடலாகும். ‘இது வனபவள வாய்திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால் எனத் திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகப் பொருளை அடி ஒற்றி யமைந்துள்ளமை காணலாம். இத்துறையில்,
ஏலுநன் மணிமா மன்றருட் சோதிஎன்னுளத் தமர்ந்தனன் என்றாள்பாலுமின் சுவையும்போன்றென தாவிபற்றினன் கலந்தனன் என்றாள்சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கேசத்தியை அளித்தனன் என்றாள்மேலும்எக் காலம் அழிவிலேன் என்றாள்மிகுகளிப் புற்றனள் வியந்தே. (5689)
எனவரும் பாடல் இராமலிங்க அடிகளாகிய நாயகி தன் ஆருயிர்த் தலைவன்பால் பெற்ற பேரின்ப நிலையைப் புலப்படுத்தல் காணலாம்.
தேவர்கோ வறியாத தேவதேவனாகிய தலைவனை விரும்பிய தலைவி, அவன்பால் கொண்ட அன்புரிமைத் திறத்தினைத் தன்னுடைய தோழிக்கு எடுத்துரைப்பதாக அமைந்தது, தோழிக் குரிமை கிளத்தல் என்னும் பதிகமாகும். அதன் முதற்பாடல்.
நயந்தநட நாயகர் உன்நாயகரே எனினும்நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவேவியந்து மற்றைத் தேவர்எலாம் வரவும் அவர்நேயம்விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழிவயந்தரும் இந்திரர் பிரமர் நாரணர்கா ரணர்கள்மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தேபதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே. (5690)
எனவரும் பாடலாகும். இதன்கண் நடராசப் பெருமான் உன் ஆருயிர்த் தலைவராயினும் மறைமொழி மந்திரங்களால் ஏனைய தேவர்களெல்லாம், அவ்விறைவரை யடைந்து வழிபடுகின்றார்கள். நீ அத்தேவர்கள்பால் அன்பு செலுத்தாது இருப்பதன் காரண மென்ன, என வினவிய தோழியை நோக்கி இந்திரர், பிரமர், நாரணர், காரணர் முதலிய யாவர்க்கும் பயந்த கடி நானல்லடி, திருச்சிற்றம்பலத்தே நடஞ்செய்யும் திருவடிக்கே அடிமை செய்யும் கடியானேன் யான் எனத் தலைமகள் மறுமொழி கூறுவதாக அமைந்த இப்பாடல், நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்….. சங்கவெண்குழையோர்காதிற் கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடியிணையே குறுகினோமே (6-98-1) எனவும்,
என்றுநாம் யாவர்க்கு மிடைவோம் அல்லோம்இருநிலத்தில் எமக்கெதிர் ஆவாரு மில்லைசென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம் (6-98-5)
எனவும் வரும் திருநாவுக்கரசர் வாய்மொழியையும்,
யாவர்கோன் என்னையும் வந்தாண்டு கொண்டான்யாமார்க்கும் குடிஅல்லோம் யாது மஞ்சோம்.
(திருவாசகம் – 34)
எனவரும் மணிவார்த்தையையும் நினைவுபடுத்துவது காணலாம். தன் ஆருயிர்த் தலைவராகிய இறைவரது வரவினை எதிர்பார்த் திருக்கும் தலைவி ‘அவர்காலையிலே இங்கு வந்தமர்ந் தருள்வர்; ஆதலால் நம்மாளிகையை அலங்கரித்து வைப்பாயாக எனத் தோழிக்கு உரைப்பதாக அமைந்தது, தலைவி கூறல் என்ற தலைப்பில் அமைந்த பதிகமாகும்.
தந்தேகம் எனக்களித்தார் தம் அருளும் பொருளும்தம்மயும் இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே யிருந்தார்என்உயிரில் கலந்த நடத் திறையவர் காலையிலேவந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தேமாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தைசத்தியம் சத்தியம் மாதே சத்தியம்சத் தியமே. (5704)
எனவரும் பாடல் இப்பதிகத்தின் முதற்பாடலாகும். இது ‘தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னை கொண்டதென் தன்னை (39 எனவும் ‘தன்னைத்தந்தஎன்னாரமுதை (408) எனவும் ‘காணும் கரணங்க ளெல்லலாம் பேரின்பமெனப் பேணு மடியார் (633) எனவும் வரும் திருவாசகத் தொடர்களின் பொருளை அடியொற்றி அமைந்துள்ளமை காணலாம்.
அம்பலத்தே திருநடஞ்செய்யும் கூத்தப்பெருமானாகிய தன் ஆருயிர்த் தலைவனை அணைந்து இன்புறும் நிலையினைப் பெற்ற தலைவி தன் மணவானனாகிய முதல்வனது இயல்பினையும் அம்முதல்வனால் தான் பெற்ற அருள் அநுபவத்தினையும் நூறு திருப்பாடல்களால் எடுத்துரைக்கும் பனுவல் அநுபவ மாலையென் பதாகும். அகத்துறைப் பாடல்களாகிய இவை, ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து இன்புறும் பேரின்ப நிலையினை விளக்கு முறையில் அமைந்துள்ளன. உலகில் மன்னுயிர்கள் எல்லாம் உறங்கும் பொழுதும் தான் மட்டும் கனவிலும் நனவிலும் அருட் பெருஞ்சோதி இறைவரோடு இணைந்து இரவு பகலில்லா இன்ப வெளியில் மகிழ்ந்திருக்கும் திறத்தினைத் தலைவி எடுத்துரைப்பதாக அமைந்தது,
கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்கனவே கண்டுள மகிழ்வேன் கனவொன்றோ நனவும்எண்அடங்காப் பெருஞ்சோதி என்இறைவர் எனையேஇணைந்திரவு பகல்காணா தின்புறச் செய்கின்றார்மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்மற்றுளவெலாம் உறங்கும் மாநிலத்தே நமதுபெண்உறங்காள் எனத்தாயர் பேசி மகிழ்கின்றார்பெண்கள் எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ் செய்கிலரே.
(5715)
எனவரும் பாடலாகும். இது
மண்உறங்கும் விண்ணுறங்கும் மற்றுளஎல்லாம் உறங்கும்கண்ணுறங்கேன் எம் இறைவர் காதலினாற் பைங்கிளியே.
(தாயு. பைங்கிளி. 44)
எனவரும் தாயுமானார் பாடலை நினைவுப்படுத்துவது காணலாம். என்னாற் காதலிக்கப் பெற்ற தலைவனை தனக்குவமை யில்லாத இறைவன் என்பதை உணராமல் என்னை அச்சுறுத்திய தாய ரெல்லாம் யான் முதல்வன் மாலையிட்டு மகிழும் நிலையினைக் கண்டு ஆறுதல் உடையவர்களாய், என்னைக் கண்டு பெருமித நிலையில் உள்ளார்கள். என்னை முன்னர் அயன்மையாகக் கருதிய மகளிரெல்லாம் இப்போது எனது உறவினை விரும்பி என் அருகில் அமர்ந்து என்னைப் பரவிப் போற்றுகின்றார்கள் எனத் தலைவி தான் பெற்ற இன்ப நிலையினைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்தது,
வஞ்சமிலாத் துணைவருக்கே மாலைமகிழ்ந்தளித்தேன்மறைகளுடன் ஆகமங்கள் வகுத்து வகுத்துரைக்கும்எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வேஎற்றோ நான்புரிந்த தவம் சற்றே நீ உரையாய்அஞ்சுமுகம் காட்டியஎன் தாயரெலாம் எனக்கேஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக்கின்றார்பஞ்சடிப் பாவைய ரெலாம் விஞ்சடிப்பாலிருந்தேபரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே. (5718)
எனவரும் திருவருட்பாவாகும். இதன்கண் அஞ்சுமுகம் காட்டியஎன் தாயரெலாம் எனக்கே ஆறுமுகம் காட்டி மிக வீறுபடைக்கின்றார் எனவரும் தொடரில் ‘அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் எனவரும் நக்கீரர் பாடற்றொடர் இடம் பெற்றிருத்தல் அறிந்து இன்புறத்தகுவதாகும்.
கண்ணுக்கினியராய் என்னுடைய அன்பினாற் கலந்த தலைவராகிய இறைவர் என்னை யணைந்த பொழுது என்னையும் என்கருவி கரணங்களையும் கண்டறியாத வளாயினேன். காணுங் கரணங்களெல்லாம் பேரின்பமெனப் பேணும் சிவபோக நுகர்வில், எண்ணத் தக்க உலக போகங்க ளெல்லாம் இச்சிவபோகத்தை நோக்கமிகமிகச் சிறியனவாம் என மறைகள் கூறும் அளவின் தன்மையினை இன்று அறிந்து கொண்டேன். சிதாகாசப் பெருவெளியில் ஆடல்புரியும் இறைவர் என் உயிரிற் கலந்த பொழுது வினைத்தொடர்பு அற்று யான் பெற்ற இன்பத்தினை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் யான் நுகரும் பேரானந்த மாகிய பெரும்போகம் அவ்வப்போது பொங்கி யெழுந்து என்னை விழுங்கித் தன் அகத்திட்டுக் கொண்டதனைக் காண்பாயாக எனத் தலைவி தோழியை நோக்கிக் கூறுவதாக அமைந்தது,
கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்கண்டறியேன் என்னையும் என்கரணங்கள் தனையும்எண்கலந்த போகம் எலாம் சிவபோகம்தனில் ஓர்இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைந்திடுந்தோ றெல்லாம்உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போதுற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி (5721)
எனவரும் திருவருட்பாவாகும். இதன்கண் ‘உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போது உற்றதென எனை விழுங்கக் கற்றதுகாண் எனவரும் தொடர் யானாகிய என்னை விழுங்கி வெறுந் தானாய் நிலை நின்றது தற்பரமே (கந்தரநுபூதி 28) எனவரும் அருணகிரிநாதர் அநுபவ மொழியை அடியொற்றி யமைந்துள்ளமை காணலாம்.
ஆருயிர்த் தலைவனாகிய இறைவனை யணைந்த தலைவி, தன்னுடம்பு முழுதும் பச்சைக் கற்பூர நறுமணம் இடைவிடாது வீசும் இயல்பினையும் இத்தகைய நறுமணம் துரிய நிலையிலுள்ள இறைவன் திருமேனிக்கு அமைந்த இயற்கை மண மென்பதனையும் உலக மக்கள் அறிந்து கொள்ளமாட்டாராயினர். திருநீறுபூசிய இறைவனது திருமேனி முழுவதனையும் யான் காணப் பெற்றேன்; அம் மேனியை அணைந்தேன். ஆன்மாவாகிய யான் அம் முதல்வனோடு ஒன்றானேன், எனத்தலைவி தான் பெற்ற அருள் அநுபவத்தைத் தோழிக்கு உரைப்பது,
கற்பூர மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்கணவர் திருமேனியிலே கலந்த மணம் அதுதான்இற்பூத மணம்போல மறைவதன்று கண்டாய்இயற்கை மணம் துரியநிறை இறைவடிவத் துளதேபொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்புண்ணியனார் திருவடியில் நண்ணியவா றதுவேநற்பூதி யணிந்ததிரு வடிவு முற்றும் தோழிநான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான் அது ஆனேனே (5723)
எனவரும் அநுபவமாலைப் பாடலாகும். தலைமகள் கூற்றாகிய இப்பாடல்,
கருப்பூரம் நாறுமோ கமலப் பூநாறுமோதிருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோமருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே
(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 56)
எனவரும் நாச்சியார் திருமொழியை நினைவுப்படுத்துவதாகும்.
என்னைக் கண்டோர் சிலர் ‘இவள் கள்ளுண்டவளைப் போல் மயங்கிக் கிடக்கின்றாள்’ எனச் சொல்வார்கள். தோழியே ஆனந்தத்தைத் தரும் கள்ளினையான் பொன்னம்பலத்தின் நடுவிலே கண்டதுண்டு, சிற்றம்பலத்தை யடைந்து அக்கள்ளியினை யுண்டது முண்டு. என்னால் உண்ணப் பெற்ற அக்கள்ளானது உலகத்தவரால் இகழப்படுகின்ற பல பொருள்களிலிருந்தும் இறக்கிய இழிந்த கள் அன்று; எக்காலத்தும் இறவாத நிலையில் மக்களை நிலை பெறச் செய்யும் கள் ஆகும். உலகத்தார் உண்டபொழுது அவர்களை மயக்கும்படியான கள் அதுவன்று; உள்ளத்தில் மயக்கம் அத்தனையும் அறவே யொழித்துத் தெளிவாகிய ஞானத்தினைத் தரும் கள் யானுண்ட கள் ஆகும் என்னால் உண்ணப்பட்ட கள்ளானது உலகியல் வாழ்வில் துன்புற்றார் பிறரும் என்னை அடுத்தடுத்துக் கண்டால் அவர்களுக்கு அறிவினை வழங்கும் இயல்பினை யுடைய தாகும் என இறைவன்பால் காதல் மீதூர்ந்து அவனையணைந்து இன்புற்ற தலைவி தான் பெற்ற பேரின்ப மகிழ்ச்சியினைத் தன் தோழிக்கு எடுத்துரைப்பதாக அமைந்தது,
கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபைநடுவேகண்டதுண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடிநான்எள்ளுண்ட பலவிடயத் திருக்குங்கள் அன்றேஎன்றும்இறவா நிலையில் இருத்துங்கள் உலகர்உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவேஉள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்துக் கண்டால்அறிவுதரும் அவர்க்கு இங்கே யான் உண்டகள்ளே (5725)
எனவரும் பாடலாகும். நினைந்த அளவிலே களிப்பினை யடைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சியை எய்துதலும் கள்ளுண் டார்க்கு இல்லை. இவ்விரு தன்மையும் காமமுடையார்க்கே உண்டு என்பார், திருவள்ளுவர். ‘உள்ளக்களித்தலும் காணமகிழ்தலும் கள்ளுக்கு இல், காமத்திற்குண்டு என்பது திருக்குறள். உணர்வு அழியாத நிலை களித்தலெனவும், உணர்வழிந்த நிலை மகிழ்தலெனவும் வேறுபாடு காட்டுவர் பரிமேழகர். கள்ளுண்டாள் எனப் புகன்றார் என்னும் தொடலில் கள் எனப்பட்டது. அறியாமையைத் தரும் மதுவினை. கனகசபையிற் கண்டதும் சிற்சபையில் உண்டதும் ஆகிய கள் என்றது, இறைவனது அருண்ஞானமாகிய இனிய தேனினை. அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய் யாமோ (276) நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும், எப்போதும், அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடை யானுக்கே (217) எனவரும் திருவாசகத் தொடரில் குறிக்கப்படும் சிவானந்தத் தேனினை மயக்கத்தை விளைப்பதாய், உலகத்தாரால் உண்ணப்படும் கள்ளினை மாயக்கள் எனவும், உடம்பினுள்ளே கோயில் கொண்டருளிய இறைவனது மெய்ஞான திருவடித் தாமரையில் ஊற்றெடுத்துப் பெருகும் பேரின்பமான தேனை மெய்ஞ்ஞானக் கள் எனவும் வேறுபிரித்து உணர்த்தும் முறையில் அமைந்தது,
காயத்துள்மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதேமாயக்கள் ளுண்டாரென் றுந்தீபறவறட்டுப் பசுக்களென் றுந்தீபற (திருவுந்தியார் 43)
எனவரும் திருவுந்தியாராகும். தன் ஆருயிர்த் தலைவனாகிய இறைவனோடு தான் அணைந்த காலத்தில் பெற்ற பேரின்ப அநுபவம் பிறருக்குச் சொல்லால் வெளியிட்டுரைக்க வொண்ணா தென்பதனையும், அதனை உள்ளவாறு அநுபவித்தவராலேயே உணரமுடியுமென்பதனையும் தலைவி தோழிக்கு எடுத்துரைப்பதாக அமைந்தது,
மனையணைந்து மலர் அணைமேல் எனை அணைந்த போதுமணவாளர் வடிவென்றும் எனது வடிவென்றும்தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்சற்றுமறியேன் எனில்யான் மற்றறிவதென்னேதினைஅளவா யினும் விகற்பஉணர்ச்சி யென்பதிலையேதிருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோஅனை அணைந்தால் இவ்வாறுநான் கேட்பேன் அப்போதுன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே. (5729)
எனவரும் திருவருட்பாவாகும். பேரின்ப அனுபவம் இன்ன தன்மைத் தெனச் சொல்லால் வெளியிட்டு உரைக்க வொண்ணாத நிலையில் அப்பாற்பட்ட தென்பதனைச் சிற்றின்ப அநுபவத்தில் வைத்து விளக்குவது,
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்மகட்குத் தாய்தன் மணாளனோ டாடியசுகத்தைச் சொல்என்றாற் சொல்லுமா றெங்ஙனே.
(திருமந்திரம் 2944)
எனவரும் திருமுலநாயனார் அருளிய திருமந்திரமாகும்.
‘கூத்தாடிக் கணவருக்கோ மாலையிட்டு மணந்தாய் எனத் தன்னை வினவும் தோழியை நோக்கிப் பேதையே இப்பூமி னிடத்தும் வானுலகிலும் பாதலத்திலும் அண்டத்திலும் அண்ட வெளியின் அப்புறத்தே யுள்ள அண்ட கோடிகளிலும் பதிந்து நிகழும் இயக்கத்தின் விளக்கமெல்லாம் என் தலைவர் தம் திருவடிமலர் கொண்டு திரு அம்பலத்தில் நிகழ்த்தும் திருக்கூத்தின் அருள் விளக்கமேயாகும்; இது உண்மை என்று அருமறைகளும் ஆகமங்களும் பறை சாற்றுகின்றன. அவ்வுண்மையைக் கேட்டறிந்து நீ என்பால் கொண்ட வாட்ட மெல்லாம் தவிர்வாயாக எனத் தலைவி தோழிக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது,
கொடியிடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்டபகிரண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்அடிமலர் கொண்டையர் செய்யும் திருக்கூத்தின் விளக்கம்ஆகும் இது சத்தியம்என் றருமறை ஆகமங்கள்கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாந் தவிர்த்தே.
(3760)
எனவரும் திருவருட்பாவாகும். இப்பாடல் ஆட வல்லானாகிய இறைவன் இயக்க எல்லா அண்டங்களும் இயங்குகின்றன என்ற உண்மையை வற்புறுத்துவது காணலாம்.
சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத இறைவனது திருவருட் கூத்தினை அன்புறு சித்தாந்த நடனமாகவும், வேதாந்த நடனமாகவும் முதல் நடு ஈறு இல்லாத சோதி மன்றத்திலே நான்கண்டு கொண்டேன். தோழி அத்திருநடம் இன்ப மயமாய் ஆன்மாவும் சிவமும் ஒன்றாகவும், இரண்டாகவும், ஒன்றுமிரண்டு மின்றாகவும், எல்லாம் செய்ய வல்லதாகவும் தன்னிகரற்ற பரவெளியைக்கடந்த சமரசத் தனிப்பெரு நடனத்தையும் காணப்பெற்றேன். அதனால் எவ்வுயிர்க்கும் தனித்த சுகத்தினை நல்கும் பொதுமன்றத்தின் இயல்பு அதுவாகும் எனத் தலைவி தான் கண்ட திருக்கூத்தின் வகைகளைத் தன்தோழிக்கு உரைத்ததாக அமைந்தது,
என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சிஇசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்அன்புறு சித்தாந்த நடம் வேதாந்த நடமும்ஆதிநடு அந்தமிலாச் சோதிமின்றில் கண்டேன்இன்பமயமா யொன்றாய்இரண்டா யொன்றிரண்டும்இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பேர் அந்தத்தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே. (5778)
எனவரும் அனுபவ மாலைப் பாடலாகும். இப்பாடற் பொருளை ஊன்றி நோக்குங்கால் இதனைப் பாடிய அருட்பிரகாச வள்ளலார் வேதாந்த, சித்தாந்த, சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணத்துள் ஒருவராவர் என்பது நன்கு தெளியப்படும்.
அம்பலத்தே ஆடல் புரியும் என மணவாளர் காலைப் பொழுதிலே இங்கு வந்து என்னைக் கலந்து இன்பம் தர உள்ளார். எனவே என் தோழியாகிய நீ இம்மனையகத்தே தங்காது புறத்தே செல்வாயாக என என்னை நோக்கிக் கூறுகின்றாய். உலகில் பெண்கள் தம் மகிழ்நரொடு கூடி இன்புறுதற்குரிய காலம் மாலைப்பொழுது என்பது உலகியலில் கண்ட வழக்கமாகும். நீ கூறுமாறு காலையில் கணவரோடு கலத்தலைக் கண்டிலேன். இது வியக்கத்தக்க தாயிருக்கிறது என்று தோழியே நீ கூறாதே. ‘நீ உலகியல் நூல் எழுதிவைத்ததை மனத்தினுட் கொண்டு தடுமாறு கின்றாய். ஆதலால் காலையிலே கணவரொடு கலத்தற்குரிய இவ்வுட்கருத்தினை அறியமாட்டாயாயினை. மக்கள் மேற்கொள் ளும் நல்லறச் செயல்களிலும் அறிவுடைய அம்முதல்வரைப் போற்றிக் கூடி ஞானப் பொருளாயுள்ள சான்றோர்கள் பலர் கண்டு மகிழும் சமரச சன் மார்க்க சங்கத்திலும் என் தோழியாகிய நீ சிறிது நேரம் தங்கியிருப்பாயானால் என் ஆருயிர் நாயகரை அங்கே காணலாம். பசி நோயினால் துன்புற்று வரும் ஏழைகட்கு அன்னம் பாலித்தல் முதலிய அறச் செயல்களிலும் மன்னுயிர்கள் உய்ய அம்முதல்வனை நினைந்து போற்றும் தியான நிலையிலும் அவ் இறைவர் பகற்பொழுதிலேயே எல்லோரும் காண வெளிப்பட்டு என் உயிரிற் கலந்து இன்பம் நல்குந் திறத்தினை நீ நேரிற் கண்டுணர் வாய் எனத் தலைவி தன் தோழியொடு உரையாடியதாக அமைந்தது.
மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்வழக்கம்அதுகண்டனம் நீ மணவாளருடனேகாலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்கண்டிலன் ஈததிசயம்என் றுணராயேல் என்தோழிஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதிஉழல்கின்றாய் ஆதலில் இவ்வளவறியாய் தருமச்சாலையிலே சமரச சன்மார்க்க சங்கத்தனிலேசற்றிருந்தாய் எனில் இதனை உற்றுணர்வாய் காணே. (5785)
எனவரும் அனுபவமாலை 72-ஆம் பாடலாகும். இப்பாடலில் தருமச்சாலையிலே சற்றிருந்தாயெனில் இதனை உற்றுணர்வாய் எனத் தலைவி தோழிக்குக் கூறுகின்றாள். இத்தொடரில் இதனை என்றது இறைவனாகிய தலைவன் காலைப் பொழுதிலேயே பலருங் காணத் தன் ஆருயிர்த் தலைவியோடு கலந்து இன்பம் நல்குதலை. இவ்வுண்மையினை வள்ளலார் தாம் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூலில்,
ஆகாரம் கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத் தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும், நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகம் முழுதும் சில் என்று பழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள் விளக்கத்தையும் திருப்தி இன்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக் கின்றார் களாதலால் அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்கள் என்றும், கடவுளின் இன்பத்தை அநுபவிக்கின்ற மூத்தர் என்றும் அறியவேண்டும் எனத் தெளிவாக விளக்கி யுள்ளமை காணலாம். தம் பசிப்பிணி நீங்க ஆகாரத்தைப் பெற்று மகிழ்ந்த ஏழை எளியவர்களின் முகமலர்ச்சியிலே பலரும் காண வெளிப்பட்டுத் தோன்றும் ஆன்ம நாயகனாகிய இறைவன், அன்னமளித்து ஏழைகளின் முகமலர்ச்சி கண்டு மகிழும் ஆருயிர்த் தலைவியொடு கலந்து ஈறிலாப் பேரின்பத்தை நல்கி அருளுவான் என்னும் உண்மை மேற்குறித்த வள்ளலார் வாய்மொழியில் நன்கு புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். இனி சன்மார்க்க சங்கந்தனிலே சற்றிருந்தால் காணலாம், என்பது,
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்முயிர்போல் எண்ணி உள்ளேஒத்துரிமை யுடையவரா யுவக்கின்றார்யாவர் அவருளந்தான் சுத்தசித்தருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடமென நான்தெரிந்தேன் அந்தவித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்சிந்தைமிக விழைந்த தாலோ. (5297)
எனவரும் பாடலில் வள்ளலார் குறித்துள்ளமையால் நன்கு புலனாகும். சிறிதும் மன்னுயிர்களிடத்திலே வேறுபாடு காட்டாது எல்லா உயிர்களையும் தம் உயிர்போன்று கருதி அவ்வுயிர்களுக்கு வரும் துன்பங்களைத் துடைத்து ஆன்ம நேய ஒருமைப்பாடு உடையவராய் மன்னுயிர்கள் அடையும் இன்பத்தைக் கண்டு மகிழ்கின்றவர்கள் யாரோ, அத்தகைய பெருமக்களுடைய உள்ளமே, தூய அறிவின் வடிவாய் எம் இறைவன் திருநடனம் புரியும் இடம் என்று நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். அத்தகைய சன்மார்க்க நெறியில் நின்ற அடியார்களுடைய திருவடிகட்கு ஏவல் புரிந்திட என்னுடைய சிந்தையானது பெருவிருப்ப முடையதாயிற்று என்பது இப்பாடலின் பொருளாகும்.
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய பலரும் கூடிய சன்மார்க்க சங்கத்திலேயே ஆருயிர் நாயகனாகிய இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பது வள்ளலார் கருத்தாதல் மேற்குறித்த பாடலால் நன்கு புலனாம். ‘வாயாரத்தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகந்தான் (6-8-5) எனவரும் அப்பர் அருள்மொழி இங்கு நினைக்கத் தகுவதாகும்.
அருட்பிரகாச வள்ளலாராகிய நாயகி, தன் ஆருயிர்த் தலைவனாகிய சிவபரம் பொருளோடு ஒன்றிச் சுத்தசிவ சாக்கிரம், சுத்த சிவ சொப்பனம், சுத்த சிவ சுழுத்தி, சுத்த சிவதுரியம், சுத்தசிவதுரியாதீதம் (தூய சிவ நனவு; தூய சிவ கனவு, தூய சிவ உறக்கம், தூயசிவ பேருறக்கம், தூய சிவ உயிர்ப்படக்கம்) என்னும் ஐவகை நிலைகளிலும், சிவமயமாய்க் கலந்து நிறைந்த பேரின்ப நிலையினைப் பெற்று மகிழ்ந்திருக்கின்ற தன்மையினை,
தனிப்படுமோர் சுத்தசிவசாக்கிர நல்நிலையில்தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்கனிப்படு மெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்தசிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்இனிப்புறு சிற்சபை இறையைப் பெற்ற பரிசதினால்இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி
(5809)
எனவரும் பாடலில் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.
வினவு தெரியாத இளம் பருவத்திலே உயிரிற் பிரிவின்றிக் கலந்து கலந்து இனிமை தரும் பெருந்தலைவராகிய நடராசப் பெருமான் என்னை வலிந்து அழைத்து ஐந்தொழில் ஆடலை நிகழ்த்தும் தம் திருவடிக்கே யான் பாடல் செய்து போற்றுமாறு பணித்தருளினார். அடக்கமில்லாத மனத்தையுடைய சிறியேன் செய்த குற்றங்களையெல்லாம் அழகிய விளையாட்டுச் செயல்களெனக் கொண்டு பொறுத்தருளி எனக்கு மணமாலை யணிந்து என்னைக் கூடினார். அருளும் ஞானமும் உடைய அப்பெருந்தலைவர் என்னைப் புறத்தே கலந்த கலப்பு உயிராகிய என்னை ஈறிலாப் பெருவாழ்வில் இன்புற்று ஓங்க அருளியது. அத்தலைவர் என் உயிரிற் கலந்து ஒன்றிய அகப்புணர்ச்சியால் விளைந்த இன்ப அநுபவத்தின் அளவு சொல்லால் வெளியிட் டுரைக்கும் தரத்த தாமோ? எனத் தலைவி ஆருயிர்த் தலைவனாகிய இறைவனால் தான் பெற்ற முடிவிலாப் பேரின்ப நிலையை யெடுத்துரைப்பதாக அமைந்தது,
அறியாத பருவத்தே என்னை வலிந்தழைத்தேஆடல் செயும் திருவடிக்கே பாடல் செயப் பணித்தார்செறியாத மனச்சிறியேன் செய்த பிழையெல்லாம்திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்பிறியாமல் என் உருவில் கலந்து கலந்தினிக்கும்பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்அறிவாளர் புறப் புணர்ச்சி எனை அழியா தோங்கஅருளிய தீண்டகப் புணர்ச்சி அளவுரைக்க லாமே. (5813)
எனவரும் அநுபவ மாலையாகும்.
இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றால் திருவருட்பாவில் அமைந்த அகத்துறைப் பாடல்கள் யாவும் கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் என்ற அகப்புறத்துறையில் அடங்கு வனவாய் எல்லாம் வல்ல இறைவனை ஆருயிர்த் தலைவனாகவும் அவன் அருள் விழைந்த ஆன்மாவைத் தலைவி ஆகவும் கொண்டு பாடப் பெற்றன என்பது ஒருவாறு விளக்கப் பெற்றமை காணலாம்.



