திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

1. கடவுள் ஒருவரே

இவ்வுலக நிகழ்ச்சியைக் கூர்ந்து நோக்குங்கால் காணப்படும் உலகம் ஓர் நிலையாகிய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நின்று செயற்படுதல் இனிது புலனாகும். இத்தகைய நியதியோடு பொருந்திய உலகின் இயக்கத்திற்கு வினைமுதலாய் (கருத்தாவாய்) உடன் நின்று இயக்கி நிற்கும் பேரறிவும் பேராற்றலும் பேரருளும் வாய்ந்த முழுமுதற் பொருளொன்று உலகுயிர்கட்குச் சார் பாயிருத்தல் வேண்டும் என்பது அறிஞர் பலரும் ஒப்ப முடிந்த உண்மையாகும். இங்ஙனம் எல்லார்க்கும் புலனாகும் நிலையில் காணப்படும் உலக நிகழ்ச்சியாகிய காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இக் காரியத்துக்குரிய கர்த்தாவாய் உலகுயிர்களை உடன்நின்று இயக்கியருளும் முழுமுதற் பொருளாகிய கடவுள் ஒன்று இருத்தல் வேண்டும் என்பதனை உலகத்தாருக்கு உணர்த்தக் கருதிய திருவள்ளுவர் அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி, பகவன் முதற்றே உலகு (1) என வரும் திருக்குறளால் எடுத்துரைத்தார். இத்திருக்குறள் காண்டற்கரிய கடவுளின் உண்மையினைக் கருதலளவையால் நிறுவுவதாகும். எழுத்துக்களெல்லாம் தம்மை உடனிருந்து செலுத்தும் அகர ஒலியினைத் தமக்கு முதலாக உடையன. அதுபோல, உலகமும் தன்னை உடனிருந்து இயக்கி நிற்கும் ஆதிபகவனாகிய இறைவனைத் தனக்கு முதலாக உடையது என்பது இப்பாடலின் பொருளாகும். இதன்கண் உலகு என்றது, உடம்பொடு காணப் பெறும் உயிர்தொகுதியினை. ஓர் வரையறையுடன் காணப்படும் இவ்வுலக இயக்கமாகிய காரியத்தினை அடிப்படையாகக் கொண்டு இதற்கு நிமித்தகாரணமாகிய முழுமுதற் பொருளொன்று உண்டு எனத் துணிய வேண்டி யிருத்தலால் உலகு ஆதிபகவனை முதலாக உடையது என உலகின் மேல் வைத்துக் கடவுள் உண்டு எனும் உண்மை யினைப் புலப்படுத்தினார் திருவள்ளுவர். ஆயினும், தனக்கு முதல்வனாக ஆதிபகவனைத் தேர்ந்து கொள்ளும் உணர்வுரிமையும் உடைமைத்தன்மையும் உலகிற்கு இல்லை. ஆதலால் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பதே இத் திருக்குறளின் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும் என விளக்கங் கூறுவர் பரிமேலழகர்.

ஆசிரியர் தொல்காப்பியனாரும் எழுத்தெனப்படுவ அகரமுதல் (தொல்,நூன்மரபு.1) எனவும் மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் (தொல், மொழிமரபு 13) எனவும் வரும் நூற்பாக்களில் எழுத்துக்கள் எல்லாவற்றின் இயக்கத்திற்கும் காரணமாய் நிற்கும் அகரம் முதன்மையுடையதாதலைத் தெளிவாகத் குறித்துள்ளார். அகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட் கிசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறு பட்டதாதலின் ஒன்றேயாயும், பலவேயாயும் நிற்பதோர் தன்மையுடைத்து என்று கோடும் (கொள்ளுதும்). இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும், பல்லுயிர்க்கும் தானேயாய் நிற்கும் தன்மையும் போல எனவும், இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்பமுடிந்தாற் போல, அகரமும் உயிர்க்கண்ணும் ததனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும் என்பது சான்றோர்க் கெல்லாம் ஒப்ப முடிந்தது. அகரமுதல என்னும் குறளால் ‘அகர மாகிய முதலையுடைய எழுத்துக் களெல்லாம்; அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகம் என வள்ளுவனார் உவமை கூறிய வாற்றாலும், கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க எனவும் தொல்காப்பிய முதற் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் அகரத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் திருக்குறள் கடவுள் வாழ்த்திலுள்ள முதற்குறளின் விளக்கமாக அமைந்திருத்தல் காணலாம். அகர முதல் என்னும் இத்திருக்குறளைத் திருமூலர் முதலிய திருமுறை ஆசிரியர்களும், மெய்கண்டார் முதலிய சைவசித்தாந்த நூலாசிரியர்களும் தாம் வழிபடும் சிவபரம் பொருளுக்குரிய உண்மையியல்பினை அறிவுறுத்தும் நிலையில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்கள். தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருளைப் பற்றிக் கூறப் பெற்றுள்ள தத்துவ உண்மைகளை அடியொற்றிச் சைவ சித்தாந்த மெய்ந்நூற் பொருளை விரித்துரைப்பது உமாபதி சிவம் இயற்றிய திருவருட் பயன் என்னும் சித்தாந்த நூலாகும். இந்நூல் திருக்குறளைப் போலவே பத்துக் குறளைத் தன்னகத்தே கொண்டது ஒரு அதிகாரமாகப் பதிமுது நிலைமுதல் அணைந்தோர் தன்மை ஈறாகப் பத்து அதிகாரங்களை யுடையது. திருவள்ளுவர் அகர முதல் எனத் தொடங்கியது போலவே உமாபதி சிவாசாரியாரும் அகர உயிர் போல் அறிவாகி எங்கும், நிகரிலிறை நிற்கும் நிறைந்து என இந்நூலைத் தொடங்கி யுள்ளார். அகர ஒலி நாதமாத்திரையாய் எத்தகைய திரிபுமின்றி இயற்கையில் தோன்றுவதாய் ஏனைய உயிர்ரெழுத்துக்கள் தோறும், மெய்யெழுத்துக்கள் தோறும் நிறைந்து முதன்மை உற்று நிற்க, ஏனைய எழுத்துக்களெல்லாம் அவ்வகரத்தின் இயக்கத்தால் வெவ்வேறு முயற்சியில் தோன்றித் திரிபுடையனவாய் நிலவுதல் போல, ஆதி பகவனாகிய இறைவன் இயற்கையுணர் வினனாய் முற்று முணர்ந்து யாண்டும் நீக்கமற நிறைந்து முழுமுதல்வனாய் விளங்கி நிற்ப, உலக உயிர்கள் யாவும் அம்முதல்வனது ஆணைக்குள் அடங்கித் தத்தம் வினைக் கீடாக உலகு, உடல், கருவி, நுகர்வு ஆகியவற்றைப் பெற்றுத் திரிபுடையனவாய் நிலவாநின்றன என்பதாம் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் நிறைந்து அவற்றிற்கெல்லாம் முதலாய் நிற்கும் பொது இயல்பு பற்றி அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் கூறினார். ஆயினும் அப்பரம்பொருள் அறிவே உருவாய் எவ்விடத்தும் நீக்கமற நிறைந்து எப்பொருட்கும் ஆதாரமாய் நிற்கும் முழு முதலாகவும், உலகப் பொருள் அனைத்தினையும் தனக்கு உடைமையாகக் கொண்ட தன்னேரில்லாத் தலைவனாகவும் திகழ்தலால் உண்மையாக ஆராய்ந்து பார்க்குங்கால், அம்முதல்வன் தன் உடைமைப் பொருள்களாகிய பசுபாசங்கள் ஒன்றினோடும் உவமிக்கப் படுபவன் அல்லன் என்பது திருவள்ளுவர் கருத்தாகும். இவ்வுண்மையை அறிவுறுத்துவார், அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து என்றார் உமாபதி சிவனார். ‘அகர உயிர் போல் என்பது ‘அகர முதல் என்னும் முதற்குறளையும் ‘அறிவாகி என்பது இரண்டாங்குறளில் உள்ள வாலறிவன், என்ற தொடரையும் ‘நிகரில் இறை, என்பது தனக்கு, உவமை இல்லாதான் (7) என்னும் தொடரையும் ‘எங்கும் நிறைந்து நிற்கும் (5) என்பது, ‘இறைவன் (10) என்னும் பெயர்க்காரணத்தையும் விளக்கும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.

எழுத்துக்கள் உயிர், மெய் என இருபகுதியனவாய் அகரத்தைத் தமக்கு முதலாகக் கொண்டு இருத்தல் போன்று. உலகமும் உணர்வுடைய உயிர்கள், உணர்வில்லாத பொருள்கள் என இருபகுதியை உடையதாய் ஆதிபகவனைத் தனக்கு முதலாக உடையது என்று அறிவுறுத்துவது திருக்குறளின் முதற்குறளாகும். உயிரெழுத்து ஆன்மாவுக்கும், மெய்யெழுத்து தத்துவப் பிரபஞ்சத் திற்கும், அகரம் ஆகிபகவனாகிய இறைவனுக்கும் உவமை.

திருக்குறளில் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்தில் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான் வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறி வாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்பது கடவுளுக்குரிய திருப்பெயர்களாகக் குறிக்கப் பெற்றுள்ளன. இவையனைத்தும் இறைவனை ஒருவனாகவே வைத்துக் கூறுதலாலும், மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் முழுமுதற் கடவுளாகிய செம்பொருளை ஓர்த்துள்ளம் உள்ள உணரின் என்ற தொடரில் உள்ளது என ஒருமை வாசகத்தால் குறிப்பிடுதலாலும், இறைவன் ஒருவனே என்பது தெய்வப்புலவர் கருத்தாதல் நன்கு தெளியப்படும்.

ஒருவாற்றானும் தனக்கு ஒப்பில்லாதவனாய் யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையானாக உயர்ந்து விளங்கும் இறைவன் ஒருவனே என்னும் இவ்வுண்மையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது தனக்கு உவமை இல்லாதான் என்னும் திருக்குறள் தொடராகும். இத் தொடர்ப் பொருளை விரித்து உரைப்பது,

பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின்அருமைக்கும் ஒப்பின்மை யான் (3)

எனவரும் திருவருட் பயனாகும்.

மிகப் பெரிய அண்டங்கள் யாவும் தன் விரிவினுள் (வியாபகத்துள்) அடங்க, தான் அவையெல்லாவற்றையுங் கடந்து மேலாக விரிந்து நிற்கும் பெருமையாலும், உயிர்தோறும் உயிர்க் குயிராய் உள்நின்று அருள்சுரக்கும் பெருங் கருணைத் திறத்தினாலும், உயிர்களின் முயற்சியால் சென்று அடைய முடியாத திருவாகிய வீடு பேற்று இன்பத்தினை உயிர்களின் அறிவெல்லைக்கு அப்பாற் பட்டு நின்று வழங்கியருளும் அருமைத் திறத்தினாலும் தன்னை யொப்பார் ஒருவருமில்லாத தனிமுதல்வன் இறைவன் ஒருவனே என்பது இதன் பொருளாகும். தன்னை ஒப்பார் எவரும் இல்லாதவன் எனவே தன்னின் மிக்கார் ஒருவரும் இல்லான் என்பதும் தானே விளங்கும். ஒரு பொருளுக்கு எடுத்துக் காட்டும் உவமையினை ஒத்தது, உயர்ந்தது என இருவகையாக வகுத்துரைத்தல் மரபு. ஒத்ததனை ஒப்பு எனவும், உயர்ந்ததனை உவமன் எனவும் வழங்குவர் சான்றோர். அம்முறையில் இறைவனுக்கு ஒப்பாக ஒன்றைக் கூறுங்கால் அவனுக்கு ஒப்பாருமில்லை; உயர்ந்தாருமில்லை என்பதனைத் திருமுறை ஆசிரியர் இனிது விளக்கியுள்ளார்கள்.

‘ஒப்புடையனல்லன் ஓர் உவமனில்லி’ (6-97-10) எனவரும் அப்பர் அருள்மொழி இங்கு ஒப்பு நோக்குதற்குரியதாகும். இவ்வாறு உலக உயிர்த்தொகுதிகளில் ஒன்றையும் உவமை கூற உண்ணாதபடி உயர்வற உயர்ந்து விளங்குதல் முழுமுதற்பொருளின் இயல்பாதலின், அம் முதற்பொருளை ஒன்றலா ஒன்று எனக் குறித்தார் மெய்கண்ட தேவர். ஒன்றலா ஒன்று என்றது, உலகாகிய சடப்பொருள், உயிர்களாகிய சேதனப் பொருள் என்னும் இவ்விரு வகையுள் ஒன்றினும் அடங்காது இவற்றிற்கெல்லாம் மேலாய் நின்று இவற்றை இயக்கி நிற்கும் முழுமுதற்பொருள் என்றவாறு.

மாயையின் காரியமாகிய உலகம், அறிவில்லாத பொருளாதலாலும், உலகில் வாழும் மன்னுயிர்கள் ஆணவ இருளால் மறைக்கப்பெற்றுச் சிற்றறிவினை உடையன ஆதலாலும் இவ்விரு வகைப் பொருளையும் ஒருங்கு இயக்குதற்கு இவற்றின் வேறாகிய முதற்கடவுள் ஒன்று உண்டு என்பது பெறப்படும்.

பெறப்படவே, காணப்படும் உலகம் வியக்கத்தக்க இயக்கம் உடையதாய்த் தொழிற்படுதலின் இவ்வுலகினை இயக்கும் முதற் கடவுள் அளவிலா ஆற்றலும், முற்றுணர்வும் பேரருளும் முதலியன வாக எண்ணப்படும் குணங்களுடையன் என்பதும் பெறப்பட்டது. எனவே அத் தன்மையனாகிய முதற்கடவுள் ஒருவனே அமையும்; வேறு அத்தன்மைய பொருள் ஒன்று உண்டு எனக் கொள்வதற்குச் சிறிதும் இடம் இல்லை. அன்றியும் ஒரு பொருளுக்குக் கூறப்படும் இலக்கணத்திற் சிறிதும் வேறுபாடு இல்லாத நிலையில் அப்பொருள் ஒன்றாக இருத்தல் கூடுமேயன்றிப் பலவாக இருத்தல் இயலாது என்னும் கருத்தினாலேயே ஒன்றலா ஒன்று என்றார். ஒன்று அல்லா ஒன்று என்றது, உருவும், அருவுமாகிய இருகூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றுமல்லாத முழுமுதற் பொருள் என்றவாறு. ஒன்று என்பது இலக்கணத்தால் வேறுபாடு இல்லது என்னும் பொருட்டு எனச் சிவஞான முனிவர் இத் தொடர்ப் பொருளை விளக்கி முதற்கடவுள் ஒருவரே எனத் தெளிவித்துள்ளமை இங்கு நினைவுகூரத் தகுவதாகும்.

கடவுள் ஒருவரே என்னும் இவ்வுண்மை ஒன்றவன் தானே (திருமந்திரம்) எனவும், ஒன்றேகுலம் ஒருவனே தேவனும் (திருமந்திரம். 2104) எனவும் திருமூலநாயனார் வற்புறுத்தியுள்ளார். இவ்வாறே தேவார ஆசிரியர்களும் ஒருவனார் (7-76-1) ஒருவர் தாம் பலபேருளர் காண்மினே என்றாங்கு இறைவன் ஒருவனே எனத் தெளிந்து போற்றியுள்ளார்கள். அறிவினாற் சிவனேயாகிய மணிவாசகப்பெருந்தகையாரும் ஒருவன் என்னும் ஒருவன் காண்க (திருவண்டப் – வரி. 43). எனவும் சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே (கோயில் திருப்பதிகம்) எனவும் ஒருத்தனே (அருட்பத்து 2) எனவும் போற்றி யுள்ளமையால் ஒரு தெய்வக் கொள்கையே திருமுறை ஆசிரியர்களின் துணிபாகும் என்பது நன்கு தெளிப்படும், ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு எனத் தொடங்கும் பட்டினத்தடிகள் பாடலும் அங்கிங்கெனாதபடி எனத் தொடங்கும் தாயுமானவர் திருப்பாடலும் தெய்வம் ஒன்றே என்னும் இத்துணிபினை நன்கு வற்புறுத்துதல் காணலாம்.

திருமூலர் முதலிய திருமுறை ஆசிரியர்கள் கடவுள் ஒருவரே எனத் தெளிந்து உணர்த்தியது போலவே அவ் அருள் ஆசிரியர்களின் வாய்மொழிகளை உளங்கொண்ட அருட்பிரகாச வள்ளலாரும் தாம்பாடிய திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலையில் திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் எனத் தெளிவுபட அறிவுறுத்தியுள்ளமை இங்கு மனங்கொள்ளத் தகுவதாகும்.

இறைவனை வழிபட்டு நற்பேறு அடைதற்குரிய ஆன்மாக் களை அடிசேர்ந்தார், புகழ்புரிந்தார், ஒழுக்கநெறி நின்றார் என்றாங்குப் பன்மை வாசகத்தால் திருவள்ளுவர் கூறுதலால் உயிர்கள்பல என்பதும் துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று என்னும் திருக்குறளால் அவ்வுயிர்கள் எண்ணில் அடங்காதவன என்பதும் ஆசிரியர் திருவள்ளுவர் கருத்தாதல் நன்கு புலனாகும்.

இறைவனைக் குறித்த தொடர்களாகத் திருவள்ளுவர் கூறியவற்றுள் முதற் குறளில் அமைந்தது ஆதிபகவன் என்பதாகும். இதனை இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகக் கொண்டு ஆதியாகிய பகவன் என விரித்து முதற் கடவுள் எனப்பொருள் கொள்வர் பரிமேலழகர். இத் தொடரை ஆதியோடு கூடிய பகவன் என விரித்துப் பொருள்கொள்வர் ஆளுடைய பிள்ளையார். இத்தொடரில் ஆதி என்பது எப்பொருளையும் தோற்றுவிக்கும் அன்னையாகிய சத்தியை. உலகத் தோற்றத்திற்குக் காரணமானவள் என்ற பொருளில் ஆதி என்னும் சொல் சத்தியாகிய அன்னையைக் குறிக்கும் காரணப் பெயர் ஆயிற்று. ஆதியாகிய சத்தியோடு பிரிவின்றித் திகழ்வேன் இறைவன் என்பது இத்தொடரின் பொருள் ஆகும். ஆதி என்னும் பெயர்கள் சங்க காலத்தில் மக்களுக்கு இட்டு வழங்கும் பெயர்களாக ஆளப் பெற்றுள்ளமையால், திருவள்ளுவர் குறித்த ஆதி என்னும் இச்சொல் உலகுயிர்களைப் படைத்துக் காக்கும் இறைவனது பேராற்றலாகிய அருட்சத்தியைக் குறித்த தமிழ்ப் பெயரெனவே கொள்ளத் தகுவதாகும். ஆதியாகிய சத்தியை ஒரு பாகத்தில் கொண்டவன் இறைவன் என்பது புலப்பட ‘ஆதி பகவன்’ என்றார் திருவள்ளுவர்.

சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன் (1-115-4) என வரும் திருஞானசம்பந்தர் தேவாரத் தொடர். ஆதி பகவன் என்னும் இத் திருக்குறள் தொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை அறியத் தகுவதாகும்.

எல்லாம் வல்ல இறைவனை அம்மையுடன் அமர்ந்த அப்பனாக (மாதொருபாகனாகக்) கருதிப் போற்றும் வழிபாட்டு முறை தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நிலை பெற்று வருவதாகும். இத்தகைய மாதொரு பாகர் வழிபாடு-

நீலமேனி வாலிழைபாகத்துஒருவன் – (ஐங்குறு நூறு-கடவுள் வாழ்த்து)

எனவும்,

பெண்ணுரு வொருதிறனாகின்று அவ்வுருத்தன்னு ளடக்கிக் கரக்கினும் கரக்கும் (புறநானூறு – கடவுள் வாழ்த்து)

எனவும்,

ஊர்ந்தது ஏறே, சேர்ந்தோள் உமையே (அகநானூறு – கடவுள் வாழ்த்து)

எனவும் வரும் சங்கச் செய்யுட்களில் இடம் பெற்றுள்ளமை காணலாம். முழுமுதற் பொருள் அம்மையப்பராகத் திகழும் தொன்மைக் கோலத்தினை

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்சூலமும் தொக்க வளையுமுடைத் தொன்மைக்கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி

எனவரும் திருவாசகத் திருப்பாடலால் மணிவாசகப் பெருமான் சொல்லோவியம் செய்து காட்டிய திறம் நினைந்து போற்றுதற் குரியதாகும்.

இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய முற்றுணர்வினனாகிய இறைவன், உலகப்பொருள்கள் எவற்றிலுந் தோய்வின்றித் தானே திகழொளியாய்த் தனித்து நிற்கும் நிலையில் சிவம் (அப்பன்) எனவும், உலகெலாமாகி வேறாகி உடனுமாய் இவ்வாறு உலகு உயிர்களொடு கலந்து நிற்கும் நிலையில் சத்தி (அம்மை) எனவும், கூறப்படுவான். ஒருமையில் இருமையனாய் (தாதான்மிய சம்பந்தத்தால் இருதிறப்பட்டு) உலகினை இயக்கி நிற்றல் பற்றி அம் முதல்வனை ஆதிபகவன் (அம்மையப்பன்) என்று வள்ளுவனார் குறித்துள்ளார் எனக் கொள்ளுதல் பெரிதும் ஏற்புடையதாகும். சத்தியும் சிவமும் குணமும் குணியுமாக (பண்பும் பண்புடைய பொருளுமாக) ஒன்றியியைந்துள்ள தொடர்பினைப் புலப் படுத்துவதே ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் என்னும் திருமந்திரமாகும். இத்திருமந்திரப் பொருளை மேலும் விரித்து விளக்கும் நிலையில் அமைந்தது,

பிணைபெணொ டொருமையின் இருமையு முடையணல் (1-121-3)

எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயலாகும். ‘பிணைபெண்ணோடு ஒருமையின் இருமையுமுடை அண்ணல் எனப் பிரித்துப் பொருள் கொள்க. தன்னோடு பிணைந்துள்ள அருட்சத்தியாகிய உமாதேவியுடன் பிரிவின்றி இயைந்த ஒருமைத் தன்மையின்கண் சத்தியும் சிவமுமென இரண்டாகப் பகுத்துரைக்கும் இருமைத் தன்மையினை உடைய இறைவன் என்பது இத்தொடரின் பொருளாகும். சிவம் முழுமுதற்பொருள். அருளாகிய சத்தி சிவத்தின் குணமாகும். குணத்திற்கும் குணமுடைய பொருளுக்கும் உள்ள இயைபு தாதான்மிய சம்பந்தமெனப்படும். தாதான்மியம் என்பதற்கு அதுதான் ஆதல் எனப்பொருள் கொண்டார் சிவஞானமுனிவர். தாதான்மிய சம்பந்தமாவது, பொருளால் ஒன்றேயாயினும் ஒருவாற்றால் இரண்டாகப் பகுத்துக் கூறுதற்குரிய தன்மையாகிய தொடர்பு. இத்தொடர்பினை ஒருமையின் இருமை என அழகிய தமிழில் ஆளுடைய பிள்ளையார் புலப்படுத்தியுள்ளமை உன்னுந் தோறும் உவகை தருவதாகும். அவையே தானேயாய் உலகுயிர்கள் தோறும் நீக்கமின்றி விரிந்து நிற்கும் முதல்வன், தன் ஆணையாகிய சத்தியுடன் பேதமும் அபேதமுமின்றி அவ்விரண்டிற்கும் பொதுவாய் நீக்கமின்றி நிற்கும் தொடர்பினை ஆணையின் நீக்கமின்றி நிற்குமன்றே என மெய்கண்டதேவர் (சிவஞான போதச் சூத்திரம்-2) விளக்கியுள்ளார். இங்ஙனம் நீக்கமின்றி நிற்றலாகிய இத்திறம் ஆளுடைய பிள்ளையாரால் ஒருமையின் இருமை யெனக் குறிப்பிடப் பட்டதாகும்.

இங்ஙனம் இறைவன் அம்மையப்பனாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருள் புரிகின்றான் என்பது,

தன்னிற் பிரிவிலா எங்கோமான் (திருவெம்பாவை 16)

எனவும்,

எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்

(சிவஞானசித்தியார் சுப- 165)

எனவும் வரும் ஆன்றோர் உரைகளால் இனிதுணரப்படும்.

இறைவன் தனது அருளாகிய சிற்சத்தியுடன் வேறாதலும் (பேதமாதலும்) ஒன்றாதலும் (அபேதமாதலும்) இன்றி அவ் விரண்டிற்கும் பொதுவாய்த் தாதான்மிய சம்பந்தத்தால் நீக்கமின்றி எங்கும் விரிந்து நிற்பன் என்பதனை எந்த எந்தப் பொருள் யாண்டும் விரிந்து நிற்கின்றதோ அந்த அந்தப் பொருள் ஒன்றாதலும் இரண்டாதலும் இன்றி அவ்விரண்டிற்கும் பொதுமையில் நிற்கும்; தன் எல்லையளவும் விரிந்து பரவிநிற்கும் ஞாயிறு தன்னொளிக் கதிரொடு நீக்கமின்றி நிற்றல் போலும் என்னும் ஏதுவால் வலியுறுத்துவர் சிவஞான முனிவர். இங்ஙனம் இறைவன் தானும் சத்தியும் என இருதிறப்பட்டுத் தனது ஆணையாகிய சிற்சத்தியுடன் நீக்கமின்றி நிற்றலை வலியுறுத்தும் நிலையில் அமைந்தது ஆதிபகவன் என்னும் இத்திருப்பெயர் என்பதும் இது மாதொரு கூறராகிய அம்மையப்பரைக் குறித்த பெயரென்பதும் இங்கு மனங்கொளத்தக்கன.

அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்பர் என்றறிகஅம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் அம்மையப்பர்எல்லா வுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்அல்லார் போல் நிற்பர் அவர் (திருக்களிற்றுப் படியார் -1)

எனவரும் பாடல் ஆதிபகவன் என்னும் திருக்குறள் தொடரோடு ஒப்பவைத்துச் சிந்தித்து உணர்தற்குரியதாகும்.

அம்மையப்பராகிய இறைவர் தன்னிற் பிரிவிலா அருளாகிய சத்தியால் உலகுயிர்களோடு இரண்டறக் கலந்து ஐந்தொழில் நிகழ்த்தி யருளுதலாகிய பொதுவியல்பும் இவ்வாறு உலகுயிர் களோடு பிரிவறக் கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தனக் கெய்தலின்றி அவை யெல்லாவற்றையுங் கடந்து சிந்தனைக்கரிய சிவமாகித் தனித்து மேற்பட்டு விளங்கும் தன்னுண்மையாகிய சிறப்பியல்பும் ஒருங்குணர்த்துவது மேற்குறித்த திருக்களிற்றுப் படியார் பாடலாகும். இது திருக்குறளின் முதற் குறளில்மைந்த ‘ஆதிபகவன் முதற்றேயுலகு’ என்னும் தொடரால் உணர்த்தப்படும் இறைவனது பொதுவும் சிறப்புமாகிய இருவகை இலக்கணங்களையும் நன்கு புலப்படுத்தும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம்.

தொன்று தொட்டுத் தமிழ் முன்னோர்களால் வழிபடப் பெற்றுவரும் மாதொரு பாகனாகிய இறைவனது தொன்மைக் கோலத்தினை உளங்கொண்ட திருவருட் பிரகாச வள்ளலார்,

திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்ருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தேதிருக்கூத்து விளங்க ஒளி சிறந்த திருவிளக்கே;
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்கஉலக மெலாம் விளங்க அருள் உதவு பெருந்தாயாம்ருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்கவயங்குமணிப் பொது விளங்க வளர்ந்த சிவக்கொழுந்தே.

(திருவருட்பா – 3268)

எனவரும் திருப்பாடலில் தில்லையம்பலப் பெருமானை அம்மையப்பராகப் பரவிப் போற்றியுள்ளார்.

மாற்றம் மனங்கடந்து நின்ற இறைவன் தனது பேரின்ப நிலையாகிய ஆனந்த வீட்டின் எல்லையை நிலை பெற்ற ஆன்மாக்கள் வந்து பொருந்தும்படி உதவி செய்யும் அருளாகிய பராசத்தியுடனே பேதமின்றி ஒன்றி நிற்பான் என்னும் இவ் வுண்மையினை,

தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்திபின்னமிலான் எங்கள் பிரான் (திருவருட்பயன் -2)

எனவரும் திருவருட்பயனில் உமாபதி சிவாசாரியார் விளக்கி யுள்ளார். இங்ஙனம் மன்னுயிர்கள் பிறவிப் பிணிப்பினின்றும் நீங்கி இறைவனது பேரின்ப வாழ்வைத் தலைப்படுதற்குத் துணைநின்று உதவிபுரிவது இறைவனது திருவருட்சத்தியே என்பதும், அவ்வருட் சத்தி முழுமுதற் பொருளினின்றும் பிரித்துணரவொண்ணாதது என்பதும், அருளாகிய தாயின் உதவிபெற்றே தந்தையாகிய சிவபரம் பொருளை அடைந்து இன்புறுதல் இயலும் என்பதும் ஆகிய வுண்மைகளை மேற்காட்டிய திருவருட்பாவில்

உருவிளங்க உயிர் விளங்க உணர்ச்சியது விளங்கஉலகமெலாம் விளங்க அருளுதவு பெருந்தாயாம்மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொரு பால்விளங்கவயங்கு மணிப்பொது விளங்க வளர்ந்த சிவக் கொழுந்தே.

எனவரும் தொடர்களில் இராமலிங்க வள்ளலார் இனிது
விளக்கியுள்ளமை காணலாம்,

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்இயல் உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்றிந்தேன்உனக்கும் விளம்புகின்றேன்.

(திருவருட்பா-5803)

எனச் சிவம் ஒன்றே என்று வற்புறுத்திய அடிகளார், அருளுதவு பெருந்தாயாம் மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க வயங்குமணிப் பொது விளங்க வளர்ந்த சிவக் கொழுந்தே என அம்மைப்பர் என இருமையில் வைத்துப் போற்றியது எவ்வாறு பொருந்தும் எனச் சிலர் வினவுதல் கூடும். இவ்வினாவுக்கே விடையாக அமைந்தது

ஒன்றுமலார் இரண்டுமலார் ஒன்றிரண்டு மானார்’ (திருவருட்பா 3283)

எனவரும் திருவருட்பாத் தொடராகும்.

ஞாயிறு என்னும் ஒருபொருளே உலகப் பொருளில் தோய்ந்து விளக்கு மிடத்துக் கதிர் என்னும் பெயரும், தன்னை விளக்குமிடத்துக் ‘கதிரோன்’ என்னும் பெயரும் பெற்று இரு திறப்பட்டு இயைந்து நிற்குமாறு போல, பேரறிவாகிய முழுமுதற் பொருள் ஒன்றே உலகுயிர்களாகிய புறப்பொருளை நோக்கி நிற்கும் தன்னிலையில் சிவம் என்னும் பெயரும் பெற்று ஒருமைத் தன்மையின்கண் இருதிறப்பட்டு இயைந்து குணமும் குணியுமாய் (பண்பும் பண்புடைப் பொருளுமாய்)த் திகழ்தலால் அம்மையும் அப்பனுமாகிய அப்பெருமானை

ஒன்றுமலார், இரண்டுமலார், ஒன்றிரண்டு மானார்

என அருட்பிரகாச வள்ளலார் குறிப்பிட்டமை பொருத்த முடையதே யாகும், இவ்வாறு அருட்சத்திக்கும் சிவபரம் பொருளுக்கும் அமைந்த தொடர்பு பற்றிய இவ்விளக்கம் ‘பிணை பெண்ணொடு ஒருமையின் இருமையுமுடை அண்ணல்’ எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருள் மொழியை அடியொற்றி அமைந்ததாகும். இவ்வாறு ஒன்றுமலார் இரண்டுமலார் ஒன்றிரண்டு மானார் என்ற இறைவனை ஆண் என்று குறிப்பதா, பெண் என்று குறிப்பதா என ஒரு வினா எழுதல் கூடும். இவ்வினாவுக்கு விடையாக அமைந்ததே ஒன்றிரண்டுமானார், என்ற அடிகளார் திருவாக்காகும். ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள்நல்கி எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருள்மொழி இங்கு நினைக்கத் தகுவதாகும்.

அருவருக்கு முலகவாழ் வடங்க நீத்தோர்க்கானந்தப் பெருவாழ்வா மாடல் காட்டமருவருக்கன் மதிவளிவான் யமானன் தீநீர்மண்ணெனுமெண் வகையுறுப்பின் வடிவு கொண்டஒருவனுக்கும் ஒருத்திக்கு முருவென் றாலவ்வுருவையிஃ தொருத்தன் என்கோ ஒருத்தி என்கோஇருவருக்கு முரித்தாக ஒருவர் என்றோர்இயற்சொல் லிலதெனனின் யான்மற் றென்சொல்கேனே. (54)

எனவரும் சிதம்பரச் செய்யுட்கோவையில் குமரகுருபர அடிகள் அம்மையப்பனாகிய இறைவனை ஒருவன் என்றோ ஒருத்தி என்றோ பிரித்து வழங்கத் தேவையில்லை என்றும், ஆணும் பெண்ணுமாகிய இருவருக்கு முரியதாக அமைந்த ‘ஒருவர் என்னும் இயற்றமிழ்ச் சொல்லாலேயே அம்மையப்பராகிய இறைவரைப் போற்றுதல் பெரிதும் பொருத்தமுடைய தென்றும்’ சுவைபடக் குறித்துள்ளமை காணலாம்.

ஒருவர் என்னும் சொல் ஒரு என்னும் பகுதியால் ஒருமை யினையும் அர் என்னும் விகுதியால் ஆண் பெண் இருவருக்கு முரிய உயர்திணைப் பன்மையினையும் உணர்த்தும் இயல்பினைப் பெற்றுள்ளமையால், அச்சொல் ஒருவன் ஒருத்தி என்னும் இருபாற்கு முரிய பொதுமையினைப் பெற்ற இயற்றமிழ்ச் சொல்லாகும் என்பது,

ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவிஇருபாற்கும் உரித்தே தெரியுங் காலை. (தொல்-பெயர். 37)

எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் இனிது விளங்கும். ஒருவர் என்னும் இவ்வியற் சொல் பொருளுணர்த்தும் திறத்தைத் தெளிய உணர்ந்த வள்ளலார்,

ஒன்றுமலார் இரண்டுமலார் ஒன்றிரண்டும் ஆனார்உருவும் அலார் அருவும் அலார் உருஅருவும் ஆனார்அன்றும் உளார் இன்றும் உளார் என்றுமுளார் தமக்கோர்ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ் ஜோதியினார்என்று கனல் மதியகத்தும் புறத்தும் விளங்கிடுவார்யாவுமிலார் யாவுமுளார் யாவும் அலார் யாவும்ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தேஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்

(திருவருட்பா. 3282)

எனவரும் இத்திருப்பாட்டில் அம்மையப்பராகிய இறைவரைக் கடவுள் ஒருவர் என ஒருவர் என்னும் இயற்றமிழ்ச் சொல்லால் குறித்துப் போற்றியுள்ளமை இங்கு உளங் கொளத் தகுவதாகும்.

இதுகாறும் எடுத்துக் காட்டிய அருளாளர்கள் வாய்மொழி களாலும், அவை பற்றிய விளக்கங்களாலும் உலகுயிர்களை இயக்கியருளும் அம்மையப்பராகிய முழு முதற் கடவுள் ஒருவரே என்பதும் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் எனத் திருமூலநாயனார் வற்புறுத்திய ஒரு தெய்வக் கொள்கையினையே போற்றுதற்குரிய தவப்பெருஞ் செல்வராகிய அருட்பிரகாச வள்ளலாரும் தாம் பாடிய திருவருட்பாவில் வலியுறுத்தியுள்ளார் என்பதும் இனிது விளங்கும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *