
திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்
3. ஆன்ம நேய ஒருமைப்பாடு
ஆன்ம நேய ஒருமைப்பாடு என்பது மன்னுயிர்த் தொகுதி யெல்லாவற்றையும் ஓர் இனமெனக் கருதி எல்லா உயிர்களிடத்தும் அன்புடையராயொழுகும் ஒருமையுணர்வின் இன்றியமையாமையைக் குறிப்பதாகும். ஆன்மா – உயிர்; நேயம்; அன்பு; ஒருமை; அன்பெனும் பாசத்தால் எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணும் மனத்தின் ஒருமைப்பாடு. உயிர் என்பது காட்சிக்குப் புலனாகாத அருவப்பொருள்; “காணாமரபிற்று உயிரென மொழிப” (தொல்-களவியல்-சூ-ந. உரைமேற்கோள்) என்பது பழம்பாடல். காணமுடியாத உயிரின் உண்மையைக் காணப்படும் அதன் உடம்பினைக் கொண்டு நாம் கருதியுணர்கின்றோம். உயிரோ உணருந்தன்மையது, உடம்போ உணர்வற்றது. உயிர் என்றும் அழியாத நிலை பேறுடையது. அது பற்றியே அதனை மன்னுயிர் என வழங்குகிறோம். உயிரினது நிலைக்களமாகிய உடம்போ அழியக் கூடியது, அறிவில்லாததும் அழியக் கூடியதுமாகிய இவ்வுடம்பிற்கும் அறிவுடையதும் நிலைபேறுடையதுமாகிய உயிருக்கும் உண்டாகிய தொடர்புக்குக் காரணம் யாது என்னும் ஐயம் எழுதல் இயல்பு. இங்ஙனம் தோன்றும் ஐயத்தினை நீக்கி உயிருக்கும் உடம்புக்கும் ஏற்பட்ட தொடர்பினை விளக்கு முறையிலமைந்தது அன்போடியைந்த வழக்கென்ப, ஆருயிர்க்கு என்போடியைந்த தொடர்பு (குறள்-78) என வரும் திருக்குறளாகும். காணாமரபினதாகிய உயிர்க்குக் காணப்படும் உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை அன்பென்னும் உயிர்ப்பண்பினை வளர்த்தற் பொருட்டு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர் என்பது இதன் பொருளாகும். அருவாகிய உயிர்கள் உருவாகிய உடம்பினைப் பெற்றல்லது தம்முள் அன்பினை வளர்த்தல் இயலாமையால் அன்பாகிய உயிர்ப் பண்பினை வளர்த்தற் பொருட்டே அருவாகிய உயிர்க்கு உருவாகிய உடம்பு அளிக்கப் பெற்றது என்பதாம். ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி என்றாங்குப் புல் முதல் மக்கள் ஈறாகிய உடம்புகள் உயிர்க்குப் படிகால் முறையாகப் படைத்து வழங்கப் பெற்றன என்பர் பெரியோர். இத்தகைய உயிரினத்தில் உயர்திணை எனப்போற்றப் பெறும் மன உணர்வினைப் பெற்ற மக்கட் கூட்டத்தார் இல்வாழ்க்கைக்கண் நின்று மனை, மக்கள், சுற்றம் நட்பு என எல்லோரிடத்தும் அன்புடையராய் வாழ்ந்ததின் பயனாகவே பேரின்பமாகிய வீடு பேற்றினைப் பெறுதற்குரியர் என்பது அன்புற்றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றா ரெய்தும் சிறப்பு (அன்புடைமை-5) என வரும் திருக்குறளால் அறிவுறுத்தப் பெற்றது.
ஓரறிவுயிராகிய புல் முதல் ஆறறவு உயிராகிய மக்கள் ஈறாக எல்லா உயிர்களும் தாம் பெற்றுள்ள உடம்புகளால் வேறுபட்டுத் தோன்றினும், ஊழ்வினை காரணமாகப் பிறக்கும் பிறப்பு இயல்பினால் ஒத்த தன்மையுடையனவே என்பது ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (972) எனவரும் வள்ளுவர் வாய்மொழியால் நன்கு விளங்கும். உயிர்கள் செய்த நன்றும் தீதுமாகிய இருவினைப் பயன்களைச் செய்த உயிர்களே அனுபவிக்கும்படி வரையறுத்து ஊட்டுவது ஊழாகிய நியதி தத்துவமென்ப. இறைவனது ஆணையாகிய திருவருட் சத்தியெனப்படும் இந்நியதி காரண மாகவே உலகிற் பல்வேறு உயிர்களும் பல்வேறு உருவினைப் பெற்றனவாய், மாறிப் பிறந்து வருகின்றன என்பர் சைவ சித்தாந்திகள். இவ்வாறு உயிர்த் தொகுதிகள் தாம் தாம் பிறக்கும் இடவகை யாலும் அவ்வப்பொழுது மேற்கொள்ளும் உடல் வகையாலும் வேறுபட்டனவாயினும், உணர்வுடைய பொருளாய் உயிரெனப் பேசப்படுந் தன்மையில் ஒற்றுமையும், உயிர்ப்பண்பாகிய அன்பின் தொடர்ச்சியினால் உறவும் உடையனவேயாம். இவ்வுண்மையைச் சங்க காலச் சான்றோர் தம் அநுபவத்தால் உணர்ந்து, ஆன்மநேய ஒருமைப்பாட்டிற்கு வித்திட்டுள்ளார்கள். இந்நுட்பம்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவதன்றே வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்இன்னா தென்றலும் இலமே, மின்னொடுவானம் தண்டுளி தலைஇ யானாதுகல்பொரு திரங்கு மல்லற் பேரியாற்றுநீர்வழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியிற் றெரிந்தன மாதலின் மாட்சியிற்பெரியோரை வியத்தலு மிலமேசிறியோரை இகழ்தல் அதனினு மிலமே (புறம் 192)
என வரும் கணியன் பூங்குன்றார் பாடலால் உய்த்துணரப்படும். வானத்தினுலவும் மேகம் பெருமழையைப் பெய்தமையால் உண்டாகிய வெள்ளப்பெருக்கு மலை முகட்டில் உள்ள கற்களை யலைத்துக் கொண்டு பேராறாக இழியும் நிலையினை யொத்தது உலகினை இயக்கும் பேராற்றலினால் முறைப்படுத்தப்படும் ஊழாகிய நியதி என்பதும், அவற்றினால் ஈர்த்துச் செல்லப்படும் மிதவை (தெப்பம்) போன்றது மன்னுயிர்த் தொகுதி என்பதும், ஊழின் வயப்பட்ட வுயிர்கள் உலகிற் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு இனங்களிலும், பிறந்தும், இறந்தும் உழன்று இருவினைப் பயன்களை நுதர்தலின், அவ்வுயிர்கட்கு யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பதும் மக்கள் அடையும் நன்றும் தீதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல. அவரவர் செய்த வினையின் பயனாகத் தாமே வருவன என்பதும், உலகிலேயே மக்கள் பெறும் உயர்வு தாழ்வுகட்கு அன்னோர் இயற்றிய இருவினையாகிய ஊழ் என்னும் முறைமையே காரணமாதலால் நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ் தலையோ, அன்றித் தீவினையால் தாழ்வுற்ற சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யுணர்ந் தோராகிய தத்துவ ஞானிகள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதுமாகிய உண்மைகள் இப்பாடலில் தெளிவுபடுத்த பெற்றுள்ளமை காணலாம்.
படைப்புக் காலந் தொடங்கி மன்னுயிர்கள் ஊழ்வினை காரணமாகப் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு உடம்புகளிலும் பிறந்திருந்து அலமரு நிலையில், அவ்வுயிர்கட்கு யாதும் ஊராகவும், யாவரும் உறவினராகவும் அமைந்துள்ள திறத்தினை,
அகில லோகமும் அனந்த யோனியும்கிலமும் தோன்ற நீ நினைந்தநாள் தொடங்கிஎனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்துயாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்தாயராகியும் தந்தையராகியும்வந்திலாதவர் இல்லை யான் அவர்தாயராகியும் தந்தைய ராகியும்பிறவா நிலமும் இல்லை அவ்வயின்இறவா நிலமும் இல்லை
(11-ஆம் திருமுறை – திருக்கழுமலமும்மணிக்.7)
எனத் திருவெண்காட்டடிகள் விரித்துக் கூறியுள்ளார். இங்கெடுத்துக் காட்டிய பாடற் பகுதி யாதும் ஊரே யாவரும் கேளிர் எனவரும் புறநானூற்று அடிக்குரிய உரை விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.
உயிர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்னும் கொள்கையை உடன்பட்ட புத்த சமண சமயத்தாரும், இருவினைப் பயனால் இறந்தவுயிர் மீளவும் பிறக்குங்கால் வெவ்வேறு இடங்களிற் சென்று பிறக்கும் எனவும், அவ்வுயிரிடத்தே அன்பு செலுத்துவோர் அஃது எங்கே பிறந்தது என்று அறியமுடியாமையால் எல்லா உயிர் களிடத்திலும் அன்பு செலுத்துதல் வேண்டும் எனவும் கூறுவர். சோழ இளவரசனாகிய உதயகுமரன் என்பான், மாதவியின் மகள் மணிமேகலையை விரும்பி அவளைப் பின் தொடர்ந்து செல்லும் போது, துறவியாகிய அவள் காயசண்டிகை என்ற பெண்ணின் வடிவமுடையவளாக உருமாறினாள். காயசண்டிகையின் கணவனாகிய வித்தியாதரன் அவள் மணிமேகலை என்பதை அறியாமல் தன் மனைவி காயசண்டிகையே என எண்ணி அவளைத் தொடர்ந்து வந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். அதனைக் கேட்ட சோழ மன்னன் தன் மகன் இறந்ததற்குச் சிறிதும் வருந்தாமல், மணிமேகலையைச் சிறையில் வைத்தான். தன் புதல்வனை இழந்த அரசமாதேவி தன் மகன் இறந்ததற்குக் காரண மாயிருந்த மணிமேகலையை இனி உயிரோடு வைக்கமாட்டேன் எனச் சினமுற்று மணிமேகலையைச் சிறையினின்றும் விடுவித்து, அவளைப் புழுக்கறையில் அடைத்துப் பலவாறு துன்புறுத்தினாள்.
தான் பெற்ற மந்திர ஆற்றலால் அத்துன்பங்களை யெல்லாம் பொறுத்துக் கொண்ட மணிமேகலை, சிறிதும் மாற்றமின்றிக் காணப்பட்டாள். அதனைக் கண்டு வியந்த அரசமாதேவி நடுக்க முற்றவளாய், என் மகனை இழந்த துன்பத்தால் உனக்கு இத்தகைய கொடுமைகளைச் செய்தேன். இவற்றைப் பொறுத்தருள வேண்டும் என மணிமேகலை சென்ற பிறப்பில் நீலபதியின் வயிற்றில் தோன்றிய இராகுலன் என்பவனைத் திட்டி விடம் என்ற பாம்பு தீன்ட அவன் இறந்த பொழுது, அவன் மனைவியாக இருந்த யான் அத்துயரத்தைப் பொறாது தீயிற் பாய்ந்து உயிர் துறந்தேன் அவ் விராகுலனே இப்பிறப்பில் உனக்கு மகனாக வந்த உதயகுமாரனாவான். அவன் முன்பிறப்பில் பாம்பு தீண்டி இறந்த பொழுது அவனது பிரிவாற்றாது யான் தீப்பாய்ந்து உயிர் விட்ட அந்நாளில் இளங்கோவாகிய அவன் பொருட்டு அரசியாகிய நீ எங்கிருந்து அழுதாய்? அப்போழுது அவனுக்கும் உனக்கும், மகன் – தாய் என்னும் உறவு முறைமை இன்மையின் அழாதிருந்தாயல்லவா? பூங்கொடி போல்பவளே! இப்பொழுது அவன் உன் மகனாகிய நிலையில் இறந்த பொழுது பிற உயிர்க்குத் தீங்கு செய்தலாகிய பொருந்தாத செயல்களைச் செய்துவிட்டாய். இனி நீ நின் மகனது உடலை நினைந்து அழுதாயா? அல்லது அவனது உயிரை நினைந்து அழுதாயா? உடலை நினைந்து அழுதாயானால் அவனது உடம்பையும் (எண்ணெய் முதலிய பாதுகாப்புப் பொருளில்) பேணிவைக்காமல் அதனை இடு காட்டில் இட்டவர்கள் யார்? இல்லை, உயிரை நினைந்து அழுதாயானால் அவ்வுயிர் சென்று புகும் உடம்பு அவ்வுயிர் செய்த வினைப்பயனால் பெறுவதாதலின் யாராலும் தெரிந்து காணுதற்கரியதாகும். அவ்வுயிர்க்கு, உண்மையான அன்பினைச் செலுத்துவாயானால், அவ்வுயிரோடு தொடர்புடைய எல்லா உயிர்களிடத்திலும் இரக்கமுள்ளவளாய் அன்பு செலுத்துதல் வேண்டும். என ஆன்மநேய ஒருமைப் பாட்டுணர்வினை அறிவுறுத்துவதாக அமைந்தது,
யாங்கிருந் தழுதனை யிளங்கோன் றனக்குப்பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனைஉடற்கழுதனையோ? உயிர்க்கழுதனையோ?
உடற்கழு தனையேல் உன் மகன் தன்னைஎடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே!
உயிர்க்கழுதனையே லுயிர் புகும் புக்கில்செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வரியதவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடிஎவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்.
(மணிமேகலை – சிறைவிடுகாதை 61-71)
எனவரும் மணிமேகலைத் தொடராகும்.
ஆருயிர்களிடத்திலே செலுத்தும் அன்பு எவ்வுயிர்கட்கும் உயிராகிய சிவபரம் பொருளிடத்தும் சென்று சேரும் இயல்பின தாகும். உயிர்ப் பண்பாகிய அன்புக்கும், உயிர்க்குயிராகிய சிவத்துக்கும் உள்ள பிரிக்கமுடியாத அன்பின் தொடர்பினை யுணர்த்துவது,
அன்பு சிவமிரண் டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே (திருமந்திரம்.270)
எனவரும் திருமந்திரமாகும்.
இறைவனையடைவதற்குச் சாதனமாகிய அன்பும் அதனால் அடையத்தகும் பயனாகிய சிவமும் என அன்பையும் சிவத்தையும் இருவேறு, பொருளாகப் பிரித்துரைப்பர் அவற்றின் இயல்பினை உள்ளவாறு அறியாதார். உயிர்களிடத்துக் காணப்படும் அன்பே சிவ பரம்பொருளின் விரிந்த விளக்கமாகும் என்பதை எத்துணை யறிஞர்களும் உள்ளவாறு அறியமாட்டாராயினர். உயிர்ப் பண்பாகிய அன்பே சிவத்துவ விளக்கமாகும் என்னும் இம் மெய்மையினை யாவரும் (அனுபவத்தால்) அழுந்தி அறிந்த பின்னர் அன்னோர் எவ்வுயிரிடத்தும் விரிந்து விளங்குவதாய்த் தம்பால் நிலைபெற்ற அன்பே சிவமாகி விரிந்து தோன்ற அத்தகைய சிவத்தின் வியாபகத்துள்ளே (விரிவினுள்ளே) அன்புருவாய்ப் பிரிப்பின்றி அமர்ந்திருந்தார்கள் என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும்.
எவ்வுயிரும் நீங்காதுறையும் இறையாகிய சிவத்தின் விரிந்த விளக்கமே உயிர்களிடத்துக் காணும் அன்பாகிய பண்பென உணர்ந்து அன்புருவாகிய பரமசிவனிடத்தே நீங்காத பேரன்புடையராய் வழிபட்டு ஒழுகுவோரே எல்லா உயிர்க்கும் அன்புடையார் தமக்கும் அன்புடையார் ஆவர். இவ்வுண்மையை உணராதார் அன்பு சிவம் என்பன தனித்த இரு வேறு பொருள்கள் எண்றெண்ணிப் பிழைபடப் பேசுவார் என்பார், அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் என்றார்.
உயிர்க்குணமாகிய அன்பு என்பது சிவபரம் பொருளின் திருவுருவ விளக்கமேயன்றி அதனின் வேறாய பிறிதொரு பொருளன்று என்பார், அன்பேசிவமாவது என்றார். ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே; அன்பினில் விளைந்த ஆரமுதே என்பன திருவாசகம். சிவத்துவ விளக்கமாகிய அன்பினைப் பெருக்குவதற்கே உயிர்கட்கு என் போடியைந்த இவ்வுடம்பு கொடுக்கப் பெற்ற தென்பது,
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கென்போ டியைந்த தொடர்பு (73)
எனவரும் பொதுமறையாற் புலனாகும்.
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் – இகழாதேயாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்டபேரன்பே யின்னும் பெருக்கு. (அற்புத -31)
எனவரும் காரைக்கால் அம்மையார் அருளிச் செயலும்,
அழலார் வண்ணத் தம்மானை அன்பிலணைத்து வைத்தேனே
எனவரும் அப்பர் (4-15-7) அநுபவமொழியும் இங்கு ஒப்பு நோக்கி உணரத்தக்கனவாகும். அன்பு என்பது சிவத்துவ விளக்கமே என்பதும் அவ்விளக்கத்தை முழுவதும் பெற்றோர் சிவத்தோடு பிரிவின்றி யுடனாம் வீடு பெற்றினைப் சிவத்தோடு பிரிவின்றி யுடனாம் வீடு பேற்றினைப் பெற்றவராவார் என்பதும் உணர்த்துவார், ‘அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’ என்றார். தெளிவு பற்றி அமர்ந்திருந்தார் என இறந்த காலத்தாற் கூறினார். இங்கு அறிதல் என்பது அழுந்தியறிலாகிய அநுபவத்தினை.
முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமானஅன்பினை எடுத்துக்காட்ட அளவிலா ஆர்வம்பொங்கிமன்பெருங் காதல்கூர வள்ளலார் மலையை நோக்கிஎன்புநெக்குருகி யுள்ளத் தெழுபெரு வேட்கையோடும்
(பெரிய புராணம் – கண்- 102)
நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏறத்தாமும்பேணுதத்துவங்கள் என்னும் பெருகு, சோபானம் ஏறிஆணையாஞ் சிவத்தைச்சார அணைபவர் போலஐயர்நீணிலை மலையை ஏறி நேர்படச் செல்லும் போதில்
(பெரிய கண்ணப்பர் 103)
பொங்கிய ஒளியினீழல் பொருவிலன் புருவமானார்
(பெரிய கண்ணப்பர் 104)
முன்னைப் பிறதுறை வேட்கை நீங்கிஅன்பு கொண்டுய்ப்பச் செல்லும் அவர்
(பெரிய கண்ணப்பர் 114)
சார் வருந்தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்கார்வரையடவி சேர்ந்துங் காணுதற்கரியர் தம்மைஆர்வமுன் பொங்க ஆரா அன்பினிற் கண்டு
(பெரிய கண்ணப்பர் 128)
முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள்நோக்கால்இன்புறு வேதகத்திரும்பு பொன்னானாற் போல் யாக்கைத்தன் பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்று மறஅன்பு பிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ
(பெரிய கண்ணப்பர் 154)
எனவரும் சேக்கிழார் வாய்மொழிகள் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரது இயல்பினை உள்ளவாறு உண்ர்த்துதல் காணலாம்.
ஈசனுக்கன்பில்லார் அடியவர்க் கன்பிலார்எவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்கு மன்பிலார்பேசுதென் அறிவிலாப் பிணங்களை நாமிணங்கிற்பிறப்பினினும் இறப்பினினும் பிணங்கிடுவர் விடுநீ
(சிவஞானசித்தியார் பக்கம் – 323)
எனவரும் அருள்தந்தி சிவனார் வாய்மொழியும் இங்கு நோக்கத் தகுவதாகும்.
ஈசனுக்கன்பில்லார், அடியவர்க்கன்பிலார்,
எவ்வுயிர்க்கு மன்பிலார் தமக்குமன்பிலார்
என மேற் காட்டிய சித்தியார் தொடர், சிந்தனைக் கெட்டாத சிவபரம் பொருளைச் சிந்தனைக்குரிய பொருளாகக் கொண்டு வழிபடும் கால் மாலறநேயம் மாலறநேயம் மலிந்தவராகிய அடியார் திருவேடமே அன்பினால் வழிபடத் தக்கது. ஆதலின் திருவேடமே அன்பினால் வழிபடத்தக்கது. ஆதலின் அடியாரிடத்து உண்மை யன்பு செலுத்தாதவர்கள் இறைவனிடத்தும் உண்மையான அன்பில்லாதவர்கள், ஆகவே தம்மிடத்தும் உண்மையான அன்பில்லாதவர்களே என்னும் உண்மையினை வலியுறுத்தும் முறையில் அமைந்ததாதலின், அடியவர்க் கன்பில்லார், ஈசனுக் கன்பில்லார், எனவே எவ் வுயிர்க்கும் அன்பிலார் தமக்கும் அன்பில்லார் என முடித்துக்கூறும் நிலையில் இத்தொடருக்குப் பொருள் காண்பார் முன்னையோர்.
மகவெனப் பல்லுயிரனைத்தையும் ஒக்கப் பார்க்கும் செல்வக் கடவுள் தொண்டராகிய அடியார்களிடத்தே செலுத்தும் அன்பானது அவர்தம் உயிர்க்குயிராய் உள் நின்ற ஈசனிடத்தும் அவ்வடியார் களால் பேணிக்காக்கப்படும் ஆருயிர்களிடத்தும் இருபாலும் ஒப்பச் செல்லும் என்பதை அருணந்திசிவனார் இத்தொடராற் புலப்படுத்தியுள்ளமை காணலாம். அடியாரிடத்துச் செலுத்தும் அன்பே ஆருயிர்களிடத்தும் செல்லும் என்னும் இக்குறிப்பினால் அருளாளர்களது உள்ளத்திலிருந்தே ஆன்ம நேய ஒருமைப் பாட்டுணர்வு தோன்றும் என்னும் உண்மை புலப்படுத்தப் பட்டமை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கதாகும்.
எவ்வுயிர்க்கும் உயிராய், அன்பே உருவாய்த் திகழும் சிவபரம் பொருளிடத்தே உண்மையான அன்பினைச் செலுத்த எண்ணுவோர் அப் பரம்பொருள் எழுந்தருளியுள்ள கோயில்களாகத் திகழும் ஆருயிர்களிடத்திலே உண்மையான அன்பினைச் செலுத்துதல் வேண்டுமென அறிவுறுத்துவது,
‘எவ்வுயிரும் நீங்காது உறையும் இறை சிவமென்றுஎவ்வுயிர்க்கும் அன்பாயிரு (சைவசமயநெறி)
எனவரும் முன்னைச் சான்றோர் வாய்மொழியாகும்.
எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!
(தாயு- பராபரக்கண்ணி 65)
எனவரும் தாயுமானவர் பாடலும் இக்கருத்தை வலியுறுத்தல் காணலாம். மேற் குறித்த வண்ணம் தாம் பெற்ற தெய்வ அருட்கருணையால் ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செயல் வேண்டுனெ இறைவனை இறைஞ்சி எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணும் தபோதனருள் ஒருவராகிய அருட்பிரகாச வள்ளலார், இக்கால மக்கள் உய்தி பெறும் நிலையில் அறிவுறுத்திய செந்நெறிக் கொள்கையே ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையாகும். இத்தகைய ஒருமைப்பாட்டின் விளக்கமாக அமைந்தன.
உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்ஒருதிருப் பொது என அறிந்தேன்செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்துமலர்ந்தனன் சுத்தசன்மார்க்கப்பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்பாடுகின்றேன் பொதுப்பாட்டே! (திருவருட்பா – 5426)
எவ்வுயிரும் பொதுவெனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச்செவ்வியர்தம் செயலனைத்தும் திருவருளின்செயல் எனவே தெரிந்தேன் இங்கேகவ்வை இலாத் திருநெறி அத்திருவாளர்தமக்கேவல் களிப்பால் செய்யஒவ்வியதென் கருத்தவர் சீர் ஓதிடஎன்வாய்மிகவும் ஊர்வ தாலோ
(திருவருட்பா – 5296)
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்தம் உயிர்போல் எண்ணி உள்ளேஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்யாவர் அவர் உளந்தான் சுத்தசித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்இடம் என நான் தெரிந்தேன் அந்தவித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தை மிக விழைந்த தாலோ.
(திருவருட்பா -5-98)
எவ்வுயிர்த்திரளும் என்னுயிரெனவேஎண்ணிநல் இன்புறச் செயவும்அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றைஅகற்றியே அச்சநீக்கிடவும்செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச்
‘சிவ சிவ வென்று கூத்தாடிஒவ்வுறுகளிப்பால் அழிவுறாதிங்கேஓங்கவும் இச்சை காண் எந்தாய்
(திருவருட்பா 3403-)
எனவரும் திருவருட்பாப் பனுவல்களாகும்.



