திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

6. கொலையும் புலையும் தவிர்த்த குரிசில்

“இலங்கும் உயிர் உடல் அனைத்தும் ஈசன் கோயில்” என்பது,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்தெள்ளத் தெளிர்ந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. (திருமந்திரம் 1823)

எனவரும் திருமூலர் வாய்மொழியால் அறிவுறுத்தப்பெறும் பேருண்மையாகும்.

கருணைக் கடலாகிய இறைவனுக்கு ஊனினாலாய இவ்வுடம்பு ஆலயமாகவும், உடம்பின் உட்கருவியாகிய உள்ளம் கருவறையாகிய பெருங்கோயிலாகவும் அம்முதல்வனது பொருள் சேர் புகழ்த்திறங்களை எடுத்துரைத்து வாழ்த்துதற்குரிய வாயானது, அக்கோயிலுக்குரிய கோபுர வாயிலாகவும், ஐயத்துக் கிடமின்றி மெய்ப் பொருளை உணர்ந்து போற்றும் சிவஞானத் தெளிவுடை யோர்களுக்கு அவர்தம் ஆன்மாவே இறைவன் எழுந்தருளி அருள் வழங்குதற்குரிய சிவலிங்கமாகிய அருட் குறியாகவும், ஆன்மாவைக் கள்ளத்தால் தன்வழி ஈர்த்து நிற்கும் ஐம்புலன்களே ஒளி தரும் நல்விளக்காவும் அன்னோர் அகத்தே புரியும் சிவபூசையில் அமைதற்குரியன என்பது இத் திருமந்திரத்தின் பொருளாகும்.

தெளிந்த சிந்தனையினர்களாகிய சிவஞானிகள் செய்யும் இவ்வகைப் பூசையானது, எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் நீக்கமின்றி எழுந்தருளியிருக்கும் நீர்மையை நன்கு வற்புறுத்தும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம். இவ்வாறு உயிர்கள் யாவும் இறைவனை வழிபடுதற்குரிய அருட்குறியாகத் திகழும் உண்மையை உணர்ந்த அருளாளர்கள் மன்னுயிர்களை இரக்கமின்றிக் கொல்லுதலும், அவற்றின் ஊனைத்தின்று தம்முடம்பைப் பெருக்குதலும் ஆகிய தீவினைகளை மனத்தாலும் எண்ண மாட்டார்கள். உயிர்களைக் கொல்லாமையும் அவற்றின் ஊனாகிய புலாலை உண்ணாமையு மாகிய அருளறவழியில் ஒழுகுவோர் எல்லாவுயிர்களும் தம்மைக் கைகூப்பித் தொழும் தெய்வ நிலையை இவ்வுலகில் வாழும் பொழுதே அடை கின்றார்கள். இவ்வுண்மை,

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா வுயிரும் தொழும். (திருக்குறள் 260)

எனவரும் தெய்வப்புலவர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

வேள்வியிலும் சிறு தெய்வ வழிபாடுகளிலும் ஆடு, கோழி முதலிய சிற்றுயிர்களைப் பலியிடும் வழக்கம் நம் நாட்டு மக்களிடையே நெடுங்காலமாக நிலைபெற்று வந்தது என்பதனைப் பலரும் அறிவர். இவ்வாறு மக்கள் தம்முடைய சொந்த விருப்பம் நிறைவேறுதற் பொருட்டுப் பிறவுயிர்களைப் பலியிடும் வழக்கம் நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் இடைக்காலத்தில் வந்ததென்றே எண்ண வேண்டியுள்ளது.

பண்டைய நாளில் தமிழகத்தில் வாழ்ந்த தறுகண்மை மிக்க பெருவீரர்கள், தம் நாட்டு மக்கள் போரில் பகைவரை வென்று வெற்றி பெறுதல் வேண்டுமென்னும் உயர்ந்த குறிக்கோளுடன் தம்முயிரையே, அவிப்பலியாக பலிப் பொருளாகத் தந்து வெற்றித் தெய்வமாகிய கொற்றவையை வழிபட்டார்கள் என்பது பழந்தமிழ் நூல்களாலும் பிற்காலத்தில் வீரர்களைப் பற்றி வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களாலும் அறியப்படும் வரலாற்றுச் செய்தியாகும். இவ்வாறு தம்முயிரையே அவிப்பலியாகத் தந்து தெய்வத்தை வழிபடும் நெஞ்சத் திண்மை வாய்க்கப் பெறாது கோழைகளாகிய பிற்காலத்தார், தாம் விரும்பிய காரியம் நிறைவேற வேண்டித் தம்முயிர்க்கு ஈடாக ஆடு கோழி முதலான சிற்றுயிர்களையே தெய்வத்துக்குப் பலியாக இட்டு வழி படத் தொடங்கினர். இத்துய பழக்கமே பிற்காலத்தில் நாடு முழுவதும் எளிதிற் பரவுவதாயிற்று. இவ்வாறு மக்கட் குலத்தார் பகைவரை வெற்றி கொள்ளுதல், தம் உடம்பின் நோய் நீங்குதல் முதலிய பலன்களைப் பெறுதல் வேண்டித் தம்மைத்தாம் பாதுகாத்துக் கொள்ளும் வன்மையில்லாத எளிய உயிர்களைத் தெய்வத்துக்குப் பலியாக இடும் கொலைப் பழக்கத்தை மேற்கொண்டனர். இதனால் தெய்வத்துக்குப் பலி இடப்பட்ட உயிருடம்பின் ஊனினை நிவேதனப் பொருளாகக் கொண்டு புலால் உண்ணும் பழக்கமும் நாளடைவில் மிகுதிப்படுவ தாயிற்று. இவ்வாறு தெய்வ வழிபாட்டில் சிற்றுயிர்களைக் கொன்று பலியிடுதலாகிய இச்செயல் மக்களது பகுத்தறிவுக்கும் எல்லாவுயிர் களிடத்தும் நிறைந்திருக்கும் இறைவனது திருவருட் குறிப்பிற்கும் ஏலாத மூடப்பழக்கமென்பதனை அருளாளர் அனைவரும் நன்குணர்வர். மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் அன்பு, அருள் முதலிய உயிர்ப்பண்பின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒழுகலாறு, கொலையும் புலையுந் தவிர்ந்த அருளற வாழ்வேயாகும்.

இத்தகைய நல்லற வாழ்வினைக் கற்றார் – கல்லாதார் ஆகிய எல்லாரும் உளமுவந்து ஏற்றுக்கொண்டு கொல்லாமை – புலால் உண்ணாமை ஆகிய இவ்விரு பேரறங்களையும் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகும் வண்ணம் தெளிவாக அறிவுறுத்திய அருளாளர் அருட்பிரகாச வள்ளலாரே யாவர்.

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் வடநாட்டிற் குடி புகுந்த ஆரிய இனத்தார் தம்முடைய வேதநெறிப்படி செய்த யாகங்களில் ஆடு, மாடு முதலிய விலங்கினங்களைக் கொன்று தம்மால் வழிபடப் பெறும் இந்திரன், வருணன் முதலிய தேவர்கட்கு அவியுணவாக இட்டு வந்தனர். இவ்வாறு வைதீக யாகங்களில் விலங்கினங்களாகிய சிற்றுயிர்களைக் கொல்லும் செயல் மிகுந்து காணப்பட்ட நிலையிலேயே அருளாளர்களாகிய – மகா வீரரும் கௌதம புத்தரும் நம்நாட்டிலே தோன்றி இத்தகைய கொலை வேள்விகளைத் தடுத்துநிறுத்தும் அருட்பணியில் ஈடுபட்டனர். அவ்வருவளாளரது அறிவுரையினைச் செவிமடுத்த மக்கள் எவ்வுயிர்களிடத்தும் இரக்கம் உடையராய் கொலையும் புலையும் தவிர்த்து வாழும் அருளற நெறியினைக் கடைப்பிடித் தொழுகுவாராயினர். இவ்வாறு, கொல்லாமை – புலாலுண்ணாமை யாகிய இரு பேரறங்களையும் கடைப்பிடித்து வாழுதற்குரிய நெறிமுறையினை வகுத்தளித்த அருளாளர்களுள் முதன்மை பெற்று விளங்குபவர் சமண சமயத் தலைவராகிய மகாவீரர் ஒருவரே எனக் கூறுதல் மிகவும் பொருத்த முடையதாகும். அறவழியில் பொருளீட்டி அப்பொருளால் இன்பம் நுகர்ந்துவாழும் நெறிமுறையினைக் கூறும் வாழ்வியல் நூலாகிய திருக்குறளை அருளிச் செய்த தெய்வப் புலமைத் திருவள்ளுவனார், புலால்மறுத்தல், கொல்லாமை என்னும் அதிகாரங்களில், இவ்விரு பேரறங்களையும் அருளாளராகிய சான்றோர்க்கு உயிரினும் சிறந்தனவாக வற்புறுத்தியுள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

கொலைத் தொழிலின் காரியமாகவும், மீண்டும் அதனைத் தூண்டுதலால் கொலைகளுக்குக் காரணமாகவும் அமைந்தது, ஊன் உண்ணுதலாகிய தீவினை. இத்தகைய பாவச்செயல் அருட்குண முடையார்க்கு எவ்வாற்றானும் பொருந்தாது என்பதனை அறிவுறுத்துவதே திருக்குறளில் உள்ள புலால் மறுத்தல் என்னும் அதிகாரமாகும். புலால் மறுத்தல் – ஊன் உண்ணுதலை ஒழித்தல் (புலால் – ஊன்). மக்களது உடம்பு நெல், கோதுமை முதலிய தானியங்கள், இலை, பூ, காய்கனிகள் ஆகியவற்றை உணவாகக் கொண்டே உரிய அளவில் வளர்தற் குரியதாகும். இயல்பாகக் கிடைக்கும் இத் தாவர வுணவுகளைக் கொண்டே மனிதன் தன் உடம்பை நன்முறையில் வளர்த்துக் கொள்ள முடியும். உடல் வளர்ச்சிக்குப் போதுமான இவ்வுணவுகள் இருக்கவும் பிறிதோர் உயிரைக் கொன்று அதன் ஊனினை உணவாகக் கொள்ள விரும்புவது அதன் மேலும் தன் உடம்பினை வீங்கச் செய்தலாகும் எனவும், இவ்வாறு தன் உடம்பைப் பெருக்கப் பிறிதோர் உயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்பவன் ‘அருள் என்னும், பண்பினைப் பெறுதல் இயலாது’ எனவும் புலாலுண்ணுதலைக் கண்டு இரங்கும் நிலையில் அமைந்தது,

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிதூன் உண்பான்எங்ஙனம் ஆளும் அருள். (251)

எனவரும் திருக்குறள் ஆகும்.

புலால் என்பது பிறிதோர் உடம்பின் புண்ணாகும். இவ்வாறு அதன் இழிவினைத் தெரிந்து கொண்டவர்கள் அதனை உண்ணா திருத்தல் வேண்டும் எனப் பொருந்து மாறாகிய உத்தியினால் புலால் உணவின் இழிவினைப் புலப்படுத்துவது,

உண்ணாமை வேண்டும் புலாஅல், பிறிதொன்றன்புண்ண துணர்வார்ப் பொறின். (257)

எனவரும் திருக்குறளாகும்.

வேள்வித் தீயின்கண் நெய் முதலிய அவி உணவினைச் சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதைவிட உடம்பினின்று ஓர் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாதிருத்தல் மிகப் பெரிய அறமாகும் என அறிவுறுத்துவார்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று. (259)

என்றார் திருவள்ளுவர்.

ஆயிரம் வேள்விகளைச் செய்து அல்லற்படுவதைக் காட்டிலும், புலால் உண்ணுதலாகிய தீவினை ஒன்றைச் செய்யாது சும்மா யிருத்தலே உயிர்க்குப் பெரும்பயன் விளைக்கும் என்பதனை இத் திருக்குறள் நன்கு வற்புறுத்தல் காணலாம்.

இவ்வாறு சான்றோர் பலரும் உயிர்ப்பலியையும் புலாலுண வினையும் தீயன என விலக்கிய நிலையிலும் இத் தீமைகள் பழக்கங் காரணமாக இவ்வுலகில் மக்களிடையே தொடர்ந்து வருதல் கண்டு அருளாளர் பலரும் மனங்கவன்று வருந்தியுள்ளார்கள்,

கொல்லா விரதமொன்று கொண்டோரே நல்லோர்மற்றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே (பரா – 192)

எனவும்,

கொல்லா விரதங்குவலய மெல்லா மோங்கஎல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே (பரா – 54)

எனவும் தாயுமானப் பெருந்தகையார் நெஞ்சம் நெகிழ்ந்துரைக்கும் வாய்மொழிகள் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் அருளுடைய மெய்யடியார்கள் உள்ளத்திலே நிலைபெற்றுள்ள உயிரிரக்கப் பண்பினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

புலாலுணவுண்பதில் பெருவிருப்பமுடையார் சிலர் மக்களை நலியும் சிறுதெய்வங்களாக நாட்டிலே பல் பெயர் தந்து நாட்டி அத்தெய்வங்களுக்குப் பலியிடுதற்கென ஆடு கோழி முதலிய வற்றை ஆரவாரத்துடன் கொண்டு செல்லும் கொடுமையைக் கண்ட இராமலிங்க அடிகளார், புந்தி நொந்து உளம் நடுக்குற்றார். இத்தகைய தீமைக்குச் சார்பாக அமைந்த சிறுதெய்வக் கோயில்களைக் கண்டகாலத்திலும் அவற்றை அஞ்சி விலகினார்.

நலிதரும் சிறிய தெய்வ மென்று ஐயோநாட்டிலே பலபெயர் நாட்டிப்பலிதரும் ஆடு பன்றி குக்குடங்கள்பலிக்கடா முதலிய உயிரைப்பொலிவுறக் கொண்டே போகவும்கண்டேபுந்தி நொந்துளம் நடுக்குற்றேன்கலியுறு சிறிய தெய்வவெங்கோயில்கண்ட காலத்திலும் பயந்தேன்

எனவும்,

துண்ணெனக் கொடியோர் பிறவுயிர்கொல்லத்தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்கண்ணினால் ஐயோ பிறவுயிர் பதைக்கக்கண்டகா லத்திலும் பயந்தேன்,
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணிவகைகளும் கண்டபோ தெல்லாம்எண்ணிஎன் னுள்ளம் நடுங்கிய வதனைஎந்தைநின் திருவுள மறியும். (3473)

எனவும் திருவருட் பிரகாசவள்ளலார் கொலையும் புலையும் ஆகிய செயல்களின் கொடுமையினையும் புலாலுண்ணாமையாகிய அறத்தின் சிறப்பினையும் படிப்போர் நெஞ்சம் நெக்குருக எடுத்துக் கூறியுள்ளார். கற்போர் நெஞ்சம் கசிந்துருகும் நிலையிற் பாடப்பெற்ற இத் திருப்பாடல்கள் அருட்பிரகாச வள்ளலாரது உள்ளத்தின் உயிரிரக்கவுணர்வினை நன்கு புலப்படுத்துவனவாம். இங்ஙனம் வள்ளலாரது திருவுள்ளம் உலகியலில் ஈடுபடும்பொழு தெல்லாம் உயிரிரக்கம் பற்றியே செல்வதாயிற்று.

இரக்கவுணர்வையும், அடிகளாரையும் பிரித்துணர வொண்ணாத நிலையில் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி யிரங்கும் தெய்வ அருட்கருணை வடிவாகவே இராமலிங்க அடிகளார் திகழ்ந்தார் என்பது அவர் பாடியருளிய திருவருட்பா பாடல்களால் இனிது விளங்கும்.

புலால் உண்ணும் கருத்துடையோர் சிறந்த கல்வியும் உலகம் வியந்து போற்றத்தக்க அற்புதச் செயலும் பேரறிவும் பேராற்றலும் பெற்று விளங்கினாலும் அன்னார் மெய் யுணர்வுடைய ஞானிகளாக மதிக்கத்தக்கார் அல்லர் என்பது அருட்பிரகாச வள்ளலாரது திருவுள்ளக் கருத்தாகும். இக்கருத்தினை அடிகளார் தம் குருவின் மேலும், தம்மை ஆட்கொண்டருளிய இறைவன் மேலும் ஆணை யிட்டுக் கூறுகின்றார்,

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்திற்கண்விழித்து வயங்கும் அப்பெண்உருவாணை யுருவாக்கி இறந்தவரைஎழுப்புகின்ற உறுவ னேனும்கருவாணை யுற இரங்காது உயிருடம்பைக்கடிந்துண்ணுங் கருத்தனேல் எம்குருவாணை எமது சிவக் கொழுந்தாணைஞானியெனக் கூறொணாதே (திருவருட்பா. 3027)

என்பது அடிகளார் கூறும் ஆணைமொழியாகும். தன்னிடத்தில் வந்த ஆண்மகனைப் பெண்ணாக மாற்றிக் கன்மூடித் திறப்பதற்குள் அப்பெண்ணை அழகிய ஆணுருவாக மாற்றவும், இறந்தோர்களை உயிர் பெற்றெழுமாறு செய்யவும் வல்ல அற்புதச் சித்தித் திறம் பெற்ற முனிவனாயினும், உயிரின்பால் சிறிதும் இரக்கமின்றிக் கரிய இரும்பினாலாகிய வாளினால் நையும்படி அவ்வுயிரின் உடம்பைத் தடிந்து உண்ணுங் கருத்துடையனாயின் அத்தகைய இரக்கமற்ற கொடிய நெஞ்சினனாகிய அவனை ஞானியெனக் கூறுதல் ஒண்ணாது என்பதனை எனது குருவின் மேலும் என்னுயிர்க்குயிராந் தெய்வமாகிய சிவபரம்பொருளின் மேலும் ஆணையிட்டு உறுதி கூறுகிறேன் என்பது மேற்குறித்த திருப்பாடலின் பொருளாகும்.

மக்களிற் பெரும்பாலோர் புலால் உண்ணும் பழக்கத்தினை எளிதிற் கைவிட்டு நீங்கும் ஆற்றலற்றவராயினும் இருவகைப் பற்றுக்களையும் துறந்து மெய்யுணர்வுடைய ஞானிகளாவார். அத்தீய செயலினைத் தாம் உள்ளுதலும் தீதாகும் என்பதனை வலியுறுத்தும் நிலையில் அமைந்தது இத்திருவருட்பாவாகும்.

இதுபற்றியே தெய்வப்புலவர் திருவள்ளுவரும் புலால் மறுத்தலாகிய இவ்வறத்தினைத் துறவறவியலில் அருளுடைமை யதிகாரத்தின் பின்னும், தவம் என்ற அதிகாரத்தின் முன்னும் வைத்தருளினார் எனக் கருத வேண்டியுளது. எனவே புலால் மறுத்தலாகிய விரதம் அருளுடைமையின் காரியமாகவும் தவத்தின் காரணமாகவும் அமைந்தது என்பது இங்கு உளங் கொளத் தகுவதாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *