திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

9. சமுதாயச் சீர்திருத்தச் சான்றோர்

தமிழ் நாட்டில் தொன்மைக் காலத்தில் மக்களை நிலத்தாலும் தொழிலாலும் சுட்டுவதன்றி நிறத்தாற் பகுத்துரைக்கும் சாதி வேறுபாடு இடம் பெறவில்லை. தமிழகத்தில் வடவாரியர் குடி புகுந்தபடியால் நால்வகை வருணமாகிய சாதிப் பாகுபாடும் அதன்வழி வந்த கோத் திரமும் குலப்பிரிவும் மெல்ல மெல்லப் புகுத்து நிலை கொள்வனவாயின. இப்பிரிவுகள் தமிழ்நாட்டில் நிலை பெற்றகாலம் கடைச் சங்க காலத்தினை ஒட்டியதாகும். அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்மக்கள் வருணப் பிரிவின் உயர்வு தாழ்வுகளை உடன்படாது கல்வி ஒழுக்கம் முதலியவற்றிற்கே முதலிடம் தந்தனர். இச்செய்தி,

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்கீழ்ப்பா லொருவன் கற்பின்மேற்பா லொருவனும் அவன்கட் படுமே (புறம் – 183)

எனப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூறுதலால் உய்த்துணரப்படும்.

தெய்வப் புலவர் திருவள்ளுவர் எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் எனவும், ஒழுக்கம் உடைமையே குடிமையெனவும், ஒழுக்கத்திலிருந்து வழுவுதல் மக்களிலும் தாழ்ந்த பிறப்பாய்க் கருதப்படும் எனவும், வேதம் ஓதுதலால் பார்ப்பனர் உயர்ந்தோர் என, ஒரு சிலரால் உயர்த்திக் கூறப்படினும் ஒழுக்கத்தில் வழுவு வராயின் இழிந்த பிறப்பினராகவே கருதப்படுவரெனவும் கல்லாதார், உயர்ந்த சாதியெனக் கருதப்படும் குடியிற் பிறந்தாராயினும் அவர்களால் தாழ்ந்தகுலம் எனக் கருதப்படும் குடியிற்பிறந்து கல்வியினாற் சிறப்படைந்த மக்களது பெருமையை ஒருசிறிதும் பெற்றாரல்லரெனவும் மக்கள் வாழ்விற்பெறும் பெருமை யென்பது அவர்கள் பிறந்த குடிப்பிறப்பாலும் செல்வ அளவாலும் வருவதன்று எனவும் தாமியற்றிய உலகப் பொதுமறையில் தெளிவாக வற்புறுத்திக் கூறியுள்ளார். திருவள்ளுவர் காலத்தில் சமுதாய வாழ்வில் சாதிப் பிரிவு வேரூன்றத் தொடங்கியமையும் அதற்குத் திருவள்ளுவர் முதலிய சான்றோர்கள் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது என வற்புறுத்தினமையும் மேலெடுத்துக் காட்டிய திருக்குறட் கருத்துக்களால் நன்கு துணியப்படும்.

இதற்குரிய குறட்பாக்கள்:

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும். 133

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்(பு) ஒழுக்கம்குன்றக் கெடும். 134

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றாரனைத்திலர் பாடு. 409

மேலிருந்தும் மேல்லார் மேல்லர் கீழிருந்தும்கீழல்லா கீழல் லவர். 973

என்பனவாகும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கணியன்பூங்குன்றனார் பாடிய புறநானூற்றுப் பாடல், அன்பினால் ஒன்றுபட்டு வாழ்தற்குரிய மக்களினத்தை நிற வேற்றுமை காரணமாகப் பல்வேறு சாதிகளாகப் பகுத்து அவர்தம் ஒற்றுமையைச் சிதைக்கும் இத்தீய பழக்கத்தினை அறவே ஒழித்து, எல்லா மக்களும் ஒரு குலத்தவரே என்னும் மெய்ம்மையை அறிவுறுத்துவதாகும். மக்கள் அனைவரும் ஒரு குலத்தவரேயென்னும் இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு எல்லோராலும் வழிபடப்படும் தெய்வமும் ஒன்றே என்னும் சமய ஒருமைப்பாட்டினையும் இணைத்துக் கூறும் நெறியிலமைந்தது,

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (2104)

என்னும் திரு மந்திரமாகும்.

சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரும் திருமூல தேவ நாயனாரும் வற்புறுத்திய வண்ணம் உலகிற் பல்வேறு இடங்களில் பல்வேறு நிலையினராக வாழும் எல்லா மக்களையும் ஒரே குடும்பத்தினராக மதித்து அன்பு செய்யும் மெய்யுணர்வுக் கொள்கை யானது சைவத் திருமுறை ஆசிரியர்கள் எல்லோரிடத்தும் சிறப்பாக அமைந்திருந்தது என்பது அவர்கள் பாடியருளிய திருப்பாடல்களால் நன்கு புலனாகும்.

குலச்சிறைநாயனார் சிவனடிக்குத் தொண்டுபட்ட அடியார் களைச் சாதி வேறுபாடு கருதாமல் ஒரே குலத்தினராக மதித்துப் போற்றிய செய்தியினை,

நாடவர் நாடறிகின்ற குலமிலராகக் குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை 3-(20-6)

எனவரும் தொடரில் திருஞான சம்பந்தப் பிள்ளையார் உவமுவந்து பாராட்டுகின்றார்.

குறியில் நான்கு குலத்தின ராயினும்நெறியில் அக்குலம் நீங்கினராயினும்அறிவு சங்கரற் கன்ப ரெனப்பெறின்செறிவுறப் பணிந்தேத்திய செய்கையார்

(பெரிய – குலச்சிறை -4)

என வரும் பாடலில் மேற்காட்டிய தொடர்ப் பொருளைச் சேக்கிழார் பெருமான் விரித்துக் காட்டியமை இங்குக் கருதத் தகுவதாகும்.

திருஞானசம்பந்தப் பிள்ளையார், திருநீலகண்ட யாழ்ப் பாணருடன் திருச்சாத்தமங்கையை வழிபடச் சென்ற போது அப்பதியிலுள்ள திருநீல நக்கராகிய அந்தணர் ஆளுடைய பிள்ளை யாரையும், அடியார்களையும் வரவேற்று விருந்து செய்து உபசரித்தனர் எனவும், இரவுப் பொழுதாகிய நிலையில் ஞானசம்பந்தர், நீலநக்கரை நோக்கி, நீலகண்ட யாழ்ப்பாணருக்கு இங்குத் தக்க ஓர் இடம் கொடுத்தருளுவீர் எனக் கூறியருளினர் எனவும், அவ்வுரை கேட்ட நீலநக்கர் பெருமகிழ்ச்சியடைந்து தம் வீட்டின் நடுவே அமைந்த வேள்விச் சாலையின் பக்கத்திலே உள்ள கூடத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் அன்றிரவு துயில் கொள்ள இடங் கொடுத்தாரெனவும், அந்நிலையில் நீல நக்கரால் வளர்க்கப்பெறும் வேள்விக் குண்டத்தின் தீ வலஞ்சுழித்து ஓங்கியது எனவும், அவ்வேள்வித் துயின் ஒளி முன்னைய நிலையைக் காட்டிலும் மிக்கு ஒளிர்ந்தது எனவும் சேக்கிழார் பெருமான் திரு நீலநக்க நாயனார் புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பாணர், பறையர் முதலியோர் மரபு இழிந்த குலமாகக் கருதப்பட்டு வந்தது என்பதும் அன்புடைய அடியார்களது பிறந்த குலத்தின் தாழ்வினை மனங்கொள்ளாது அவர்தம் பத்தித் திறத்தின் பெருமையைப் போற்றித் தம்மோடு ஒத்த குலத்தவராகவே மதித்துப் போற்றுதல் வேண்டுமென்பது திருஞான சம்பந்தப் பிள்ளையாரது கொள்கையென்பதும் அக்கொள்கையை வரவேற்று அதன்படி நடந்தவர் திருநீலநக்கர் என்பதும், இவ்வாறு பண்டைக் குலத்தின் அமைப்பினைப் பொருட்படுத்தாது தொண்டர்களைப் பேரன்பின் திறத்தால் நன்கு மதித்துப் பேணுதலே மெய்யுணர்ந்தாரது கடமையாகுமெனக் கொண்டவர் திருத்தொண்டர் புராண ஆசிரியர் சேக்கிழார் நாயனாரென்பதும் மேற்குறித்த செய்தியால் நன்கு தெளியப்படும்.

தமிழகத்தில் தம்காலத்தில் வேரூன்றியிருந்த சாதி வேறு பாட்டின் தீமையை உணர்ந்து அதனைக் கண்டித்த அருளாளர்களுள் திருநாவுக்கரசரும் ஒருவர். கேட்டினை விளைவிப்பதாகிய சாதி உயர்வும் சுற்றத்தொடர்பும் ஏனைய பாசங்களும் ஒழிந்து மிகவும் மேலான பேரின்ப வாழ்வினையடைய வேண்டுமென்ற விருப்புடையார்க்குத் திருவானைக்காவில் எழுந்தருளியுள்ள பெருமான் தானே எதிர்ப்பட்டு அருள்புரிவார். ஆகவே, இளமை பொருந்திய நெஞ்சமே! அம்முதல்வனைப் பேரன்பினால் நினைந்து போற்றுவாயாக என நெஞ்சிற்கு அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது,

நேசமாகி நினைமட நெஞ்சமேநாசமாய குலநலஞ் சுற்றங்கள்பாசமற்றுப் பராபர ஆனந்தஆசையுற்றிடும் ஆனைக்கா அண்ணலே.

(அப்பர் 5-31-9)

எனவரும் திருக்குறுந்தொகையாகும்.

மக்களினம் உயர்வடைதற்குரிய கல்வியறிவு ஒழுக்கங்களைப் பாராட்டாது போலியாகிய தம் சாதியின் உயர்ச்சியையே பாராட்டிக் கொண்டு ஏனையோரை இகழ்தல் மக்களது அன்பின் வழிபட்ட ஒற்றுமையினைச் சிதைத்துக் கேடு சூழ்வதாம் என்பதனை அறிவுறுத்துவார், மேற் குறித்த பாடலில் நாசமாய குல நலமெனச் சுட்டினார்.

தம்முடைய சாதிவழிப் பட்ட கோத்திர்த்தையும் அதன் கிளை வழியாகிய குலத்தையும் உயர்ந்தனவாகக் கொண்டு அதனை மக்கட் சமுதாயத்திலேயே நாட்டுதல் கருதித் தம் வருணாசிரமக் கொள்கைக்கு ஆதாரமாகப் பேசித் திரியும் குற்றமுடையவர்களும் திருநாவுக்கரசர் காலத்தில் வாழ்ந்தனர். அன்னோர் தம்முடைய சாதிப் பெருமையையும் சாத்திரப் புலமையையும் பேசும் அளவிலேயே நின்று விட்டனர். எத்தகைய வேறுபாடுமின்றி எல்லா மக்களாலும் அன்பு செலுத்துவதற்குரிய கொள்கலமாகத் திகழ்பவன் எல்லாம்வல்ல சிவபெருமானே என்னும் உண்மையினை அன்னோர் தெளியமாட்டாராயினர். அத்தகையவர்களை நோக்கி அறிவுறுத்து வதாக அமைந்தது,

சாத்திரம் பல பேசுஞ் சழக்கர்கள்!
கோத்திரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல்மாத்திரைக்குள் அருளுமாற்பேறரே (5-60-3)

எனவரும் திருகுறுந்தொகையாகும். கோத்திரம் – சாதிப் பிரிவு, குலம் – பண்பின் வழிபட்ட குடிப்பிறப்பின் வகை.

அக்காலத்தில் வேதியர்களிற்சிலர் ஒருகையில் தண்டமாகிய கோலும், புல்லால் முடைந்த ஆசனமும், மற்றொரு கையில் தர்ப்பையும் மார்பில் மான்தோலும் பூண்டு வெறும் விரதமே யுடையவராய் வருந்திய நிலையினையுளங்கொண்ட நாவுக்கரசர், யாவராலும் வழிபடுதற்குரிய முழுமுதற் கடவுளாகிய மயிலாடு துறைப் பெருமானை நோக்கித் ‘தம் உள்ளத்தே நுண்ணிய பொருளை யுணர்ந்தோர்க்கு உடலின் பறத்தே முப்புரி நூல் அணிதலும் இன்றியமையாத ஒன்றோ’ என வினவுவதாக அமைந்தது,

கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும்தோலும்பூண்டு துயரமுற் றென்பயன்நீலமாமயி லாடு துறையனேநூலும்வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே (5039-9)

எனவரும் திருக்குறுந்தொகையாகும்.

இத்திருப்பாடலில், உயிர்க்குயிராகிய நுண்ணிய மெய்ப் பொருளை உணர்ந்து வழிபடும் நிலையில் தம் உள்ளத்தைச் செலுத்தாது தண்டமும் தருப்பையும் முப்புரிநூலும் தாங்கிய புறவேடங்களையுடைய விரதியராயொழுகும் வேதியர் செயல் முடிந்த பயனாகிய வீடு பேற்றின்பத்தினை நல்காது என்னும் குறிப்பு இடம் பெற்றுள்ளமை காணலாம்.

விரதமே பரமாக வேதியரும்சரதமாகவே சாத்திரங் காட்டினர்.

(போற்றி – வரி 5051)

எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியும்,

ஆதி மறையோதி அதன்பயன் ஒன்றுமறியாவேதியர்சொல் மெய்என்று மேவாதே

(நெஞ்சுவிடுதூது)

எனவரும் உமாபதி சிவனார் அறிவுரையும் இங்கு ஒப்பு நோக்கி யுணரத் தக்கனவாகும்.

எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய இறைவனை அன்பினால் நினைந்து போற்றும் மெய்யடியார்கள் சாதியின் போலித் தன்மையை உணராத மக்களால் உயர்வாகவும், தாழ்வாகவும் பேசப்படும் எந்தக் குலத்திற் பிறந்தவராயினும் அவர்களின் நெற்றியிலேயிடப்பட்ட திருநீறும் அவர்களால் பூணப் பெற்ற சிவமணி மாலையும் முதலிய திரு அடையாளங்களைக் கொண்ட திருவேடத்தினைக் காணப்பெற்றால் இதுவே இறைவனுடைய திருவுருவமாம் எனத் தெளிந்து, அவர் பிறந்த சாதி புறத் தோற்றம் முதலியவற்றை எண்ணி வெறுப்படையாமல் அவ்வடியார்களைக் கண்டபொழுதே, இவர்கட்கு நாம் அடிமைத் தொண்டு செய்ய வேணுமென்ற விருப்புடையராய் அவர்களை உவப்புடன் நோக்கி, இங்கு நம் முன்தோன்றுமிவர், தெய்வத் தன்மையுடைய அடியார், மாற்றம் மனங்கடந்த நிலையில் உள்ள அம்முதற் பொருளே இவரையாட்கொண்ட கடவுள் என்றுகூறி அடியாரையும் இறைவனையும் இரண்டுபடப் பேசுகின்ற பேதவுணர்வின் நீங்கி, இவரே நாம் வழிபடுங் கடவுள் எனத் தெளிந்த உணர்வுடையராய் அடியாரைச் சிவனாகவே கருதி வழி பட்டொழுகும் தொண்டர் களது தூய நெஞ்சத்தினுள்ளே கன்றாப் பூரில் புறத்தே நடுதறியாகக் காட்சியளிக்கும் இறைவனை அகத்தே கண்டு மகிழவாய் என அறிவுறுத்தும் நிலையிலமைந்தது,

எவரேனுந் தாமாக விலாடத்திட்டதிருநீறும் சாதனமும் கண்டா லுள்கிஉவராதே யவரவரைக் கண்டபோதுஉகந்தடிமைத் திறநினைந்தங் குவந்துநோக்கிஇவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லிஇரண்டாட்டாதொழிந்து ஈசன் திறமே பேணிக்கவராதே தொழுமடியர் நெஞ்சினுள்ளேகன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. (6-61-3)

எனவரும் திருத்தாண்டகமாகும்.

ஆதிசைவ அந்தணராகிய சுந்தரர் தமக்குமுன் வாழ்ந்த அருளாசிரியர்களாகிய திருநாவுக்கரசரையும், திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், தமக்குக் குருவாகக் கொண்டு அவ்விருவருடைய திருப்பதிகங்களையும் இறைவன் திருமுன் அன்பினால் ஓதி அடியார்க்கடியராம் பெரும் பேற்றினைப் பெற்றவர் என்பது,

நாவின்மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம்பந்தன்யாவர் சிவனடியார்களுக்கடியானடித் தொண்டன்

(7-78-9)

எனவும்,

நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ்மாலைசொல்லியவே சொல்லி யேத்துகப்பானை (7-67-5)

எனவும் வரும் அவருடைய வாய்மொழியால் நன்கு விளங்கும்.

இந்நாட்டில் இடைக்காலத்தில் வந்து புகுந்து பெருந்தீமை யாகிய சாதி வேற்றுமையினைக் களைதற் பொருட்டு நம்பியாரூர ரால் அருளிச் செய்யப் பெற்ற திருப்பதிகம் திருத்தொண்டத் தொகையாகும். மாதவம் செய்த தென்திசை வாழவும் மக்கள் படும் எல்லாக் கேட்டிற்கும் காரணமாய் யான், எனது, என்னும் ஆணவத்தின் விளைவாய் இந்நாட்டில் வேரூன்றிய தீமையாகிய சாதிவேற்றுமை யொழியத் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை அருளிச் செய்யவும் இறைவன் திருவருளால் திருக்கயிலாயத்தினின்றும் தமிழகத்தில் திருவவதாரம் செய்தவர் நம்பியாரூரர் ஆவர். இவ்வுண்மையினை,

மாதவம் செய்த தென்றிசை வாழ்ந்திடத்தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப் போதுவார்

(பெரிய-திருமலைச்-25)

எனவரும் பாடலில் சேக்கிழாரடிகள் குறிப்பிட்டுள்ளமை காணலாம். ஆணவத்தின் விளைவாகிய சாதி வேறு பாட்டினால் வரும் தீமையை இல்லையாகச் செய்யும் ஆற்றல் வாய்ந்த செந்தமிழ்ப் பதிகம் சுந்தரர் பாடிய இத்திருத் தொண்டத் தொகை என்பதனை அறிவுறுத்துவது ‘தீதிலாத் திருத்தொண்டத்தொகை’ யென்னும் சேக்கிழார் வாய்மொழியாகும்.

மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் ஆதிசைவ வேதியர் குலத்துள் தோன்றிய நம்பியாரூரர், திருவெண்ணெய் நல்லூர்ச் சபையிலே ‘இவன் என் அடியான் என இறைவனால் ஆளோலையினைக் காட்டி வழக்குரைத்து அடிமை கொண்ட செய்தியினைத் தாம் பாடிய திருப்பதிகங்களிற் பலவிடங்களிலும் நெஞ்சம் நெகிழ்ந்துருகிப் போற்றியுள்ளார். இவ்வாறு எல்லாம் வல்ல இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று அம்முதல்வனுக்குத் தாம் தொண்டுபட்ட உரிமைத் திறமாகிய சாதனத்தின் பயனாகத் தாம் பெற்ற பெரும் பயனே அடியார்க்கடியன் ஆகிய தம்மை என்பதனை,

ஆள்தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டு’

(7-121-2)

எனவரும் அடியில் நம்பியாரூரர் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம்.

உலகியலிற் பேசப்படும் சாதி குலம் முதலிய வேற்றுமைக்கு இடமின்றி இறைவனுக்குத் தொண்டு பட்டார் அனைவரையும் அன்பினாற் போற்றிவழிபடுதலே சிவநெறிச் செல்வர்கள் அனைவருக்கும் உரிய தலையாய கடமை என்பதனை வற்புறுத்துவது தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு மடியேன் எனத் தொடங்கும் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிமாகும்.

சாதி மத வேறுபாட்டுக்கு இடமில்லாத பண்டைத் தமிழர் நெறியாகிய சிவநெறியின் தொன்மைச் சிறப்பினை அறிவுறுத்துவது இத்திருத்தொண்டத் தொகையாதலின் இதனைத் தொன்று சீர்த்திருத் தொண்டத்தொகை யெனவும், தென்தமிழ்ப் பயனாய் வந்த திருத்தொண்டத் தொகை யெனவும் சேக்கிழார் அடிகள் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.

நம்பியாரூரர் அருளிய இத்திருப்பதிகத்தில் தில்லை வாழ் அந்தணர் முதலாகத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஈறாகப் பல்வேறு குடும்பங்களில் தோன்றிப் பல்வேறு தொழில்களையுடையாராய் வாழ்ந்த அடியார்கள் அனைவரும் ஒத்த நிலையில் சிறப்பித்துப் போற்றப் பெற்றுள்ளமை காணலாம்.

திருவெண்ணெய்நல்லூர்ப் பெருமான் வேதியர் உருவில் தோன்றி வெண்ணெய் நல்லூர்ச் சபையில் – ஆரூரன் என் அடியான் என ஆளோலை காட்டி வழக்குரைத்த போது, ஆதிசைவராகிய தாம் அவ்வேதியர்க்கு அடிமையாதல் பொருந்துமோ என அவை முன் தம்நிலைமையைப் புலப்படுத்தினார். அத்தகைய நம்பியாரூரரே, திரு ஆரூர்ப்பெருமான் திருவருளால் அந்தணர், குயவர், பாணர் முதலிய வேற்றுமைகளை அறவே களைந்து அடியார் எல்லார்க்கும் அடியேன் எனப் போற்றிப்பாடிய பதிகமாதலால் இத்திருப்பதிகம் உலகியலில் இடம் பெற்றசாதி வேற்றுமையென்னும் தீமையினை அறவே களையும் ஆற்றல் வாய்ந்த அருமருந்தாயிற்று. இவ்வாறு சாதியென்னும் தீமையை இல்லையாக்கி அறவே களைந்த இத்திருப் பதிகத்தைத் ‘தீதிலாத் திருத்தொண்டத் தொகை’ என அருண் மொழித்தேவர் சிறப்பித்து பெரிதும் பொருத்தமுடையதேயாம்.

சாதி வேறுபாடாகிய இத்தீமை அருளியல் வாழ்விலன்றிச் சமுதாய வாழ்விலும் இடம் பெறுதல் கூடாது என்னும் மெய்மையை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது வன்தொண்டராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளது வரலாறாகும். ஆதிசைவ அந்தணராகிய ஆரூரர், உருத்திர கணிகையர் குலத்தில் தோன்றிய நங்கை பரவை யாரையும், வேளாண்குடியில் தோன்றிய சங்கிலி யாரையும் திருமணம் செய்து கொண்டு பல்வேறு அடியார்களுக்கு அமுதளித்து வாழ்ந்தமையும், அந்தணராகிய சோமாசி மாறர், அரசராகிய சேரமான் பெருமாள் குறுநில மன்னரான பெருமிழலைக் குறும்பர், வேளாண் குடியினராகிய கோட்புலியார், ஏயர்கோன் கலிக்காயர் முதலிய பல்வேறு குடும்பத்தினராகிய அடியார்கள் பலரோடும் அன்பினாற் கலந்து அளவளாவின்மையும், கோட்புலியார், வனப்பகை சிங்கடி என்னும் தன் பெண் மக்கள் இருவரையும் அடிமைப் பெண்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, அவ்விரு பெண்களையும் தம்முடைய இரு குழந்தைகளாக ஏற்றுக் கொண்டு வளர்த்தமையும், தாம் பாடிய திருப்பதிகத் திருக்கடைகாப்பில் வனப்பகை சிங்கடி என்னும் அவ்விரு பெண்களுக்குத் தந்தையாகத் தம்மைக் குறிப்பிட்டுள்ள மையும் ஆகிய செய்திகள் சமய வாழ்வில் மட்டுமின்றிச் சமுதாய வாழ்விலும் சாதி வேற்றுமையை அறவே களைந்தவர் நம்பியாரூரர் என்னும் மெய்ம்மையினை நன்கு வற்புறுத்தும் நிகழ்ச்சிகளாகும்.

நுண்ணறிவு வாய்க்கப்பெறாத மக்கள், எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்குமென நம் தமிழ் முன்னோர் கூறிய பொருளுரையினை உணராது, இடைக் காலத்தில் வந்து புகுந்த சாதி குலம் என்னும் போலி வேற்றுமைகளையே மெய்யென்றெண்ணித் தடுமாற்றம் அடைவாராயினர், அந்நிலையில் அருளாளர் பலர் தோன்றி இவ்வேற்றுமைகள் உண்மையாவன அல்ல எனவும் மக்களது வாழ்க்கைப் புணையினைக் கீழ்மேலாக ஈர்த்து அலைக்கும் இச்சுழியில் அகப்பட்டுத் தடுமாறாது இறைவனருளால் யான் எனது, என்னும் செருக்கின்றி எவ்வுயிர்களையும் ஒப்பமதித்து உய்தலே சான்றோர் கடனாமெனவும் அறிவுறுத்துவாராயினர். சாதி வேற்றுமையினைக்களைதல் வேண்டும் என அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதை குணம், பிறருருவம், யானெனதென்னுரை மாய்த்துக்கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே

(திருவா. கண்ட)

எனவரும் மாணிக்கவாசக சுவாமிகளின் மணிமொழியாகும்.

அன்பினால் அளவளாவி மகிழவேண்டிய மக்கட் குலத்தாரைப் பிறப்பினால் மேல் கீழ் என்னும் வேற்றுமைக்கு உட்படுத்தி அல்லல் விளைவிக்கும். சாதி வேற்றுமையைப் போலவே பிற்காலத்தில் சமய வேற்றுமைகளும் பலவாகத் தோன்றி மக்களது ஒற்றுமையைச் சிதைப்பன ஆயின.

ஆகவே பொருளற்ற சாதி வேற்றுமையைப் போலவே பயனற்ற சமயவேற்றுமைகளும், மக்களது ஒற்றுமை வாழ்வுக்கு ஒவ்வாதனவாகிய பல்வேறு சமய சாத்திரங்களும் கண்டித்து ஒதுக்கத் தக்கன என்பதும், இத்தகைய வேற்றுமைகளுள் அகப் பட்டோர் தம்மைப் பேணுவாரின்றிப் பிறவிக் கடலில் வீழ்ந்து எண்ணில்லாத காலம் துன்புறுவர் என்பதும், இங்ஙனம் அவலக் கடலுட் கிடந்து அல்லற்படாதவாறு தம்மை ஆண்டு கொண்டருளியவன் எல்லாம் வல்ல இறைவன் என்பதும் ஆகிய உண்மைகளை அறிவுறுத்தி மகிழும் நிலையில் திருவாதவூரடிகள் அருளியது,

உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும்கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளுஞ்செயலைப் பரவி நாம் தெள்ளேணங் கொட்டாமோ

(தெள்ளேணம் 17)

எனவரும் திருவாசகமாகும்.

இங்ஙனம் தமிழ் முன்னோராகிய சான்றோரனைவரும் மக்களது அன்பின் வழிப்பட்ட நல்வாழ்வுக்குத் தடையாகவுள்ள சாதி சமய சாத்திர வேறுபாடுகளைக் காலந்தோறும் கண்டித்து ஒதுக்கி வந்திருப்பினும் இவ்வேற்றுமைகள் யாவும் நீர்ப்பாசி போல் மீண்டும் மீண்டும் நாட்டில் நிலைபெற்று வருவனவாயின. இவ் வேற்றுமைகளால் ஒற்றுமையிழந்த மக்கள் பல்வேறு வகையினராகப் பிரிந்து தம்மில் முரண்டுபட்டுத் தமது அறிவு, ஆண்மை, பொருள் என்னும் மூவகையாற்றல்களையும் இழந்து அயல் நாட்டார்க்கு அடிமைப்படும் அவல நிலைக்கு உள்ளாயினர். உலகியல் வாழ்விலும் அருளியலாகிய தெய்வ வழிபாட்டு நெறியிலும் ஒற்றுமையின்றி இழிநிலையுற்ற இந்நாட்டு மக்களை அடிமை நிலையினின்றும் விடுவித்து உரிமையுணர்வினராகச் செய்து ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ எனத் திருமூலர் அருளியவாறு நன்றே நினைந்து நமனில்லை என அச்சமின்றி வாழலாம் எனவும் அறிவுறுத்திய பெருமை அருட்பிரகாச வள்ளலார்க்கேயுரிய தனிச் சிறப்பாகும். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி மக்களது ஒற்றுமையுணர்வுக்குத் தடையாகவுள்ள சாதி சமய சாத்திர வேற்றுமைகளைத் தம்முடைய செழுந்தமிழ்ப் பாடல்களாலும், சீவகாருண்ய வொழுக்கத்தின் வழிப்பட்ட செயல்முறைகளாலும் வேரறக்களைந்த அருளாளர் இராமலிங்க வள்ளலார் ஒருவரே எனக் கூறுதல் மிகவும் பொருத்தமுடையதாகும்.

பார்ப்பனர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என வட நூல்களிற் கூறப்படும் நால்வகை வருணங்களும் பிரம்மச்சரியம், கிருஹதம், வானப்பிரதம் சந்நியாஸம் எனப்படும் நால்வகை ஆசிரமப் பகுப்புக்களும் இவற்றுக்கு உரியவாக நியமித்துரைக்கப்படும் உலகியல் நடைமுறைகளும் முதலாக வடமொழி மிருதி நூல்களிற் கூறப்படுவனயாவும் அறிவாற்றல்களிற் குறைந்த சிறுபிள்ளைகள் தம் விளையாட்டுக்களில் வரையறை செய்து கொள்ளும் விளையாட்டு விதிகளைப் போல்வனவேயன்றி மெய்ந் நெறிக்குரிய நடைமுறைகளாகமாட்டா. மக்களுடம்பின் மேற் போர்க்கப் பெற்றுள்ள தோலின் நிறங்களைக் கொண்டு அவர்களது கல்வி நலம் பண்புநலம் முதலியவற்றைக் கண்டறிவார் ஒருவருமில்லை. வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலிய இவற்றின் பொய்ம்மையினை நீ அறிவுக் கண்ணைத் திறந்துகண்டு தெளி வாயாக என உயிர்க்கு உயிராகிய இறைவனே உள்நின்று உணர்த்தத உணர்ந்த அருளாளர் இராமலிங்க வள்ளலாராவார். இவ்வுண்மை,

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலாநவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டேமேல்வருணம் தோல் வருணம் கண்டறிவார் இலை நீவிழித்திதுபார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே

(4174)

எனவரும் வள்ளலார் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என அன்பினால் ஒரு குடும்பத்தவராக ஒன்றிவாழ்தற்குரிய மக்கட் குலத்தாரை, இவர் இன்ன மதத்தினர் இன்னசாதியினர் எனப் பல்வேறு வகையினராகப் பிரித்து வேறுபடுத்தற்குக் காரணமாயுள்ள சாதி மதங்கள் யாவும் பின் வந்தோராற் கற்பனைசெய் துரைக்கப்பட்டனவேயன்றி மெய்ம்மையாவன அல்ல என்னும் இவ்வுண்மையை இறைவனருளால் இளம் பருவத்திலேயேயுணரப் பெற்வர் அருட்பிரகாச வள்ளலார், இந்நுட்பம்,

சாதியும் மதமும் சமயமும் பொய்யெனஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி (அகவல்)

எனவரும் அவரது வாய்மொழியால் இனிது புலனாதல் காணலாம்.

சாதி சமய சாத்திர வேற்றுமைகளை யெல்லாம் அறவே தவிர்த்து மக்களனைவரையும் ஒருகுலத்தவராகக் காணும் பொதுமை நெறியே சன்மார்க்க நெறியாகும் என்பதனை உள்ளவாறு உணர்ந்து மக்களெல்லாம் சன்மார்க்க நெறியில் ஒழுகி உய்தி பெறுதல் வேண்டும் என உலக மக்களை அறைகூவி யழைத்தவர் இராமலிங்க வள்ளலார். இவ்வுண்மை

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்சாத்திரக் குப்பையுந் தணந்தேன் (4075)

இச்சாதி சமய விகற்பங்களெலாந் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும் (4086)

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலேசாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே யபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர்தாமேவீதியிலே அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணமிது கூவுகின்றேன் உமையே (5566)

கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போகமலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெறமெய் உலகம்வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என்றனக்கே

(3768)

சாதி மதம் சமயமுதற் சங்கற்ப விகற்பமெலாந் தவிர்ந்து போகஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக் களித்தான் (4508)

எனவரும் வள்ளலார் அருண்மொழிகளால் நன்கு புலனாகும்.

மேற்குறித்த சாதி மத விகற்பங்கள் யாவும் மெய்ம்மையாவன அல்ல என்பதும், இவ்வேற்றுமைகள் யாவும் மக்களினத்தாரை அறியாமையென்னும் இருட்குழியில் தள்ளுவன ஆதலால் இவற்றை இருந்த இடந்தெரியாமல் அறவேயகற்றி மக்களைத் தெளிவுடையராய்த் திகழ்ந்தின் புறச் செய்யும் சுத்த சன்மார்க்க நெறியே உலகிற் சிறந்து ஓங்குதல் வேண்டும் என்பதும் இறைவனது அருள் விளக்கம் பெற்ற இராமலிங்க வள்ளலாரது பெரு வேட்கையாகும். எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கும் தமது பெருவேட்கையினையும், இதுவரை உலகிற் பசியும் பிணியும் பகையும் காரணமாகக் கொதிப்புற்ற மக்கள் அக்கொதிப்படங்கிக் கொலைகளவு முதலிய குற்றங்களை விட்டொழித்து இவ்வுலகில் என்றும் இன்பம் பெருக வாழ்வார் என்பதனையும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தன,

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பைஇருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப்போட்டுமருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரமவழக்கெலாம் குழிக்கொட்மூடி மண்மூடிப்போட்டுதெருட்சாருஞ் சுத்த சன்மார்க்க நன்னீதிசிறந்து விளங்க ஓர்சிற்சபை காட்டும்அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர்நீரே

(4654)

மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்ததுவருணாச் சிரமமெனு மயக்கமும் சாய்ந்ததுகொதித்த வேலாகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழித்துகொலையும் களவும் மற்றைப் புலையும் அழிந்தது

(4503)

எனவரும் திருவருட்பாப் பாடல்களாகும். வள்ளலார் வற்புறுத்திய இக்கருத்தினையே துறவுப்பெருஞ் செல்வராகிய பாம்பன் குமரகுரு தாச சுவாமிகளும் தள்ளற் பாலது சாதிவிகற்பமே (தகராலய ரகசியம் – பாயிரம் 3) என உறுதிப்படுத்தியருளினர். சாதிப்பெருமை சிறுமைகள் பாராட்டுதலாலுறும் அகங்காரமும் அசட்டையும் வருண ஆச்சிரம தரும கருவசங்கற்பம் பந்தம் என்பது எசுர்வேத சிராலம்போபநிடதம் கூறுகின்றபடி வீடு பேற்றிற்கு விக்கின மாதலின், தள்ளற்பாலது சாதி விகற்பமே என்றார். வேதமுடிகளிற் போதரும் தகராலய ரகசியத்தைக் கேட்டலும் அறிதலும் எல்லாச் சாதியார்க்கும் பொருந்தா என மறுப்பார் மாற்றத்தை மறுத்துப் பக்குவமுடையார் எம் மரபின ராயினும் உரியார் என நிறுவியவாறு எனவரும் அதன் உரையால் இனிது விளங்கும்.

மக்களைப் பிரித்து வேற்றுமைப்படுத்தும் சாதி என்னும் பகுப்பு வெறுங்கற்பனையேயன்றி நிலையானது அன்று என்பதையும், மக்களை ஈகை முதலிய நற்செயல்களால் வகைப்படுத்துப் போற்றும் சிறப்புடைய பகுப்பே என்றும் நிலையுடைய தென்பதனையும்,

சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்பட்டாங்கி லுள்ள படி

எனவரும் பாடலில் ஔவையார் தெளிவாகக் குறித்துள்ளார்.

கொலையும் புலையுந் தவிர்ந்த நன்மக்களை அகவினத்தார் என்றும், கொலையும் புலையும் முதலான குற்றம் புரிவோரைப் புறவினத்தார் என்றும் இருதிறத்தினராக வள்ளலார் பிரித்துக் கூறிய பகுப்பும் மக்களது உயிர்ப்பண்பு பற்றியமைந்த உயர்வு தாழ்வு பற்றியதே யன்றி வினைவயத்தால் வரும் பிறப்பு வேற்றுமை பற்றிய தன்றென வுணர்தல் வேண்டும்.

இவ்வாறு தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருமூலர் முதலிய அருளாசிரியர் முதல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய அருட்பிரகாச வள்ளலார் வரை வாழையடி வாழையாக வந்த செந்தமிழ்ச் சான்றோர் அனைவரும் சாதிப் பகுப்பின் பொருளற்ற தன்மையினை எடுத்துரைத்து விளக்கியிருக்கவும், அதனை உளங்கொள்ளாமல் உலக மக்களிற் பெரும்பாலார் சாதி இன வேற்றுமையினை உண்மையென நம்பி உலக மக்களது ஒருமைப் பாட்டுணர்வுக்குத் தடையாக அறியாமையிருளில் அகப்பட்டு அவலமுறுகின்றார்களே என வருந்திய பாவேந்தர் பாரதிதாசனார், அறிவியற்கலைகள் பல வளர்ந்த இக்காலத்திலும் இவ்வுலகம் இருட்டறையில்தான் இருக்கின்றது என்னுங்கருத்தில்,

இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதிஇருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே

என இரங்கிப் பாடியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவ தாகும். இக்காலத்தில் இந்திய நாட்டின் ஒற்றுமையுணர்வு நிலைபெறுதல் வேண்டும் என்னும் நோக்குடன் சாதி மதத்தின் வேறுபாடற்ற தேசிய ஒருமைப் பாட்டினை வற்புறுத்தி வரும் அரசியல் வாதிகளும், சமூகச் சீர்திருத்தவாதிகளும் அருட்பிரகாச வள்ளலார் அறிவுறுத்திய சமரச சுத்த சன்மார்க்கநெறியின் மேன்மையினை நாட்டு மக்களுக்கு நன்கு புலப்படுத்தும் கடமையினை மேற்கொள்வராயின் சாதி சமய இன வேற்றுமை கருதாத உலக ஒருமைப்பாட்டுணர்வினை உண்மையாக நிலை நாட்டிய பெருமைக்கு உரியவராவர் என்பது உறுதி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *