திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

10. சிவனருள் பெற்ற சித்தர்

அருட்பிரகாச வள்ளலார் அறிவுறுத்திய மரணமிலாப் பெரு வாழ்வுக்கு உறுதுணையாவன அணிமா முதலிய எண்வகைச் சித்திகளாகும், அவற்றுள்,

1. அணிமா என்பது தன்னை அணுவாகச் சுருக்கிக் கொள்ளும் திறன்.

2. மகிமா என்பது தன்னை மலை போலப் பெருக்கிக் கொள்ளும் ஆற்றல்.

3. கரிமா என்பது அளவிடமுடியாத கனமுடையதாகச் செய்தல்.

4. லகிமா என்பது ஆகாயம் போல நொய்ம்மை யுடையதாகச் செய்தல்.

5. பிராப்தி என்பது எங்கும் தானாக விரிந்து எல்லா வற்றையும் தன்பால் தருவிக்கும் திறன்.

6. பிராகாமியம் என்பது விரும்பிய பொருள்களைப் படைத்து விரும்பிய வடிவில் சேர்ந்து நுதர்தல்.

7. ஈசத்துவம் என்பது தத்துவங்களை நீங்காது நின்று விரும்பிய படி நடத்துதல்.

8. வசித்துவம் என்பது தத்துவங்களில் கலந்து எங்கும் வியாபித்து எல்லாவற்றையும் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல்.

இங்குக் கூறப்பட்ட எண் வகை ஆற்றல்களும் கைவரப் பெற்றவர்களே சித்தர்களாவர். இச்சித்திகளனைத்தும் உலகத்தாரை வியக்கச் செய்யும் ஆற்றலுடையன. இறைவனருவளால் எண் வகைச் சித்திகளும் கைவரப் பெற்று இவ்வுலகியல் அளவில் நின்று விடாது எல்லாம் வல்ல இறைவனுக்குரிய எண்குணங்களிலும் திளைத்த நெஞ்சத்தினராக மன்னுயிர்களின் இன்னல்களைக் களைவதே தம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு அழியா உடம்புடன் வாழ்பவர்களே சிவசித்தர் எனப் போற்றப் பெறுவர்.

உலக உயிர்கள் மும்மலப்பிணிப்பால் உறும் அல்லல்களை நீக்குதற் பொருட்டு அருளே வாட்படையாகவும், நாதமே போர்ப் பறையாகவும், தந்நிலையில் தாழாமையாகிய மானமே பரியாகவும், நல்லறிவே வெண்குடையாகவும், திருநீறே கவசமாகவும் கொண்டு மாயப்படைகளை எதிர்க்கும் நிலையில் திருப்படை எழுச்சியினைச் செப்ப வந்த திருவாதவூரடிகள், மெய்த்தொண்டு புரியும் தொண்டர் களை முன்னே செல்லும் தூசிப்படை யாகவும், பத்திமை நெறியைப் பரப்பும் அடியார்களை இருபக்கங் களிலும் சென்று பகைப் படையினை வளைக்கும் கைகோட் படையாகவும், அறிவாற்றல் பெற்ற சிவயோகிகளை நடுவே செல்லும் பேரணிப் படையாகவும், மனத் திண்மையும் செயலாற்றலும் வாய்ந்த சித்தர்களை தம்சேனை எதிரிப் படைகளால் தாக்கிப் பின்னிடாதவாறு தடுத்துப் பின் நின்று செலுத்தும் கூழைப் படையாகவும் செல்லும் படி பணிப்பது,

தொண்டர்காள் தூசி செல்வீர்பத்தர்காள் சூழப்போகீர்ஒண் திறல் யோகிகளேபேரணி உந்தீர்கள்திண்திறற் சித்தர்களேகடைக் கூழை செல்மின்கள்அண்டர்நா டாள்வோம் நாம்அல்லற் படைவாராமே. (திருப்படை எழுச்சி 2)

எனவரும் திருவாசகமாகும்.

இங்குச் சொல்லப்பட்ட, தூசிப்படை, கைகோட்படை, பேரணிப்படை, கூழைப்படை என்னும் நால்வகைப் படைகளுள் கூழை என்பது முன்னே சென்ற மூவகைப் படைகளும் பின் வாங்காத படி அவற்றைப் பின்னின்று தாங்கிச் செலுத்தும் ஆற்றல் மிக்க படைப் பிரிவாகும். உலகில் அல்லற் படை உயிர்களைத் தாக்காதவாறு பேரின்ப நாட்டினை கைப்பற்றிக் கொள்ளும் ஞானப் போரில் கூழைப் படையாக நின்று தாங்கிச் செலுத்தும் திண்மையும், ஆற்றலும் வாய்ந்தவர்கள் சிவசித்தர்களே என்பது புலப்பட திண்திறல் சித்தர்களே கடைக் கூழை செல்மின்கள் எனத் திருவாதவூதரடிகள் பணித்தருளியுள்ளமை சித்தர்களின் சிறப்பினைப் புலப்படுத்துவதாகும். உலகமக்கள் அல்லற் படாதவாறு மன்னுயிர் களை உய்வித்தலே குறிக்கோளாகக் கொண்டு தன்னலங் கருதாது வாழும் திண்திறல் சித்தர்களில் ஒருவராக வைத்துப் போற்றுதற்குரியவரே நம் அருட்பிரகாச வள்ளலார் ஆவர். இந்நுட்பம் திருவருட்பாவினை ஊன்றிப் பயில்வார்க்கு இனிது புலனாகும். வள்ளலார் பெற்ற சித்திநெறி அவர்தம் ஆன்ம முயற்சியால் வந்தது அன்று. உயிரிரக்கமே தனது வடிவாகக் கொண்டு எல்லாவுயிர் களிடத்தும் அன்பு செலுத்தும் தூய நெஞ்சத்தினராகிய இராமலிங்க வள்ளலார் வடலூரில் தருமச்சாலையில் தங்கியிருந்தபோது எல்லாம் வல்ல சிவபெருமானே சித்தராக நள்ளிரவில் செம்பருக்கைக் கற்கள் வருத்த நடந்தருளி வள்ளலார்பால் எழுந்தருளித் திருக் கதவம் திறந்திடும் என்று சொல்லி உள்ளே புகுந்து தம்கையிலுள்ள திருநீற்றுப் பையிலிருந்து பெருவண்ணக் கொழுந்தாகிய பொற்பூப் போலும் ஞான விளக்கத்தினை நல்கிச் சித்தித் திறத்தை வழங்கியருளினார் என்பதும், அங்ஙனம் வழங்கிய இறைவன், மகனே வருந்தாதே இதனை வாங்கிக்கொள். இங்கு மகிழ்ந்து உறைக, உலகில் விளையாடி வாழ்க, மயக்கத்தை ஒழித்து மகிழ்க, துன்பமெலாம் நீங்குக. சீல நிலையுற வாழ்க, பண்பொடு வாழ்ந்திடுக, உரிமையொடு வாழ்க, மந்தவுருவாம் மனத்தால் மயக்க முறேல் அஞ்சேல், பெருமையிலே பிறங்குக நீ, கொலை ஒழிந்த நிலை தனியே பொருந்துக, நண்ணி நீ எண்ணியவாறு நடத்துக, தயவினொடு வாழ்க என வாழ்த்தி, தன்னுருவம் போன்றதொரு சத்தியினைத் தந்து இன்னும் நெடுங்காலம் புலவர் தொழ வாழ்க என வாழ்த்தி மறைந்தருளினாரென்பதும் ஆகிய செய்திகள் வள்ளலார் அருளிய அருட்பிரகாச மாலை என்னும் பனுவலில் பல முறையும் குறிக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு எல்லாம் வல்ல சிவபெருமான் நள்ளிரவில் வள்ளலார்பால் எழுந்தருளித் திருக்கதவந்திறப்பித்து எல்லாம் செய்யவல்ல சித்தித் திறத்தை அறிவுறுத்தியருளினார் என வள்ளலார் நெஞ்சம் நெக்குருகிப் பாடுதலால், அவர் நள்ளிரவில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த போது இறைவனருளால் சித்தி நிலை கைவரப் பெற்றமை நன்கு புலனாகும்.

உலக மக்களது ஆரவாரத்திற்கு இடமின்றி எல்லோரும் உறங்கும் நள்ளிரவிலே தனித்திருந்து செய்யும் சிவயோக நிலையே இறைவன் அடியார்கட்குத் தோன்றும் துணையாய் எழுந்தருளி அருள் வழங்கும் வாய்ப்பினை யுடையதாகும், இந்நுட்பம்,

தூங்கிருள் நடு நல்யாமத் தோர் மழலையாழ்சிலம்பவந்தகம் புகுந்தோன் மருவிடம் திருவிடை மருதே

(திருவிசைப்பா – 179)

என வரும் கருவூர்த் தேவர் அருளனுபவத்தால் இனிது எலனாதல் காணலாம்.

இங்ஙனம் யோகிகள் தனித்திருக்கும் நள்ளிரவில் அவர்கட்குக் கட்புலனாகத் தோன்றி யருள்புரிதலும் அவர்கள் மக்கள் பலரொடும் சூழ இருக்கும் நிலையிலே தோன்றாத் துணையாயிருந்து அருள்புரிதலும் இறைவனது இயல்பாகும். இவ்வியல்பினை,

நான்தனிக்கும் தருணத்தேதோன்றுகின்ற துணையாய்நான்தனியா விடத்தெனக்குத்தோன்றாத துணையாய் (3114)

எனவரும் பாடலில் அருட்பிரகாச வள்ளலார் தம் அநுபவ நிலையில் வைத்துப் புலப்படுத்தியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும்.

இறைவனருளால் சித்தித் திறம் பெற்ற அருட்பிரகாச வள்ளலார் தாம் ஒருவர் மட்டும் முத்தி நிலையாகிய பேரின்ப வாழ்வில் திளைத்தலைக் காட்டிலும் மன்னுயிர்களின் துன்பத்தைத் தம் சித்தித் திறத்தால் போக்கிப் பல்லுயிர்க்கும் நலம்புரிதலே இன்பம் பெருகுந் திருத்தொண்டாகவும், தமது வாழ்வின் கடமையாகவும் கொள்வாராயினர்.

இங்ஙனம் முத்தி நெறியைச் சாதனமாகவும் சித்தி நெறியை அதன் பயனாகவும் வள்ளலார் கொண்டமைக்குரிய காரணம் தந்நலம் கருதாது பிற உயிர்களின் நலங்கருதிச் செயற்படும் அவர்தம் பெருங்கருணைத் திறமேயாகும்.

பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசைமுத்தி பெற்றிடவும் பெற்றிலேன்உரியதோர் இச்சையெனக்கிலை என்றன்உள்ளம் நீ அறிந்ததே எந்தாய் (3399)

எனவரும் வள்ளலார் வாய்மொழி அவர் தமக்கென எதனையும் விரும்பாமையை நன்கு புலப்படுத்துதல் காணலாம்.

கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றிவீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

(பெரியபுராணம் திருக்கூட்டச் சிறப்பு 8)

என எவ்வுயிர்க்கும் அன்புடையராகிய அடியார்களின் இயல்பு குறித்து அருண்மொழித் தேவர் குறிக்கும் இலக்கணத்திற்கு நம் அருட்பிரகாசவள்ளலார் இலக்கியமாகத் திகழ்கின்றார் எனக் கூறுதல் பெரிதும் பொருத்தமுடையதாகும்.

வள்ளலார், உலக மக்கள் துன்பம் நீங்கி இன்பம் பெறுதற்குரிய வண்ணம் சன்மார்க்க நெறியை வளர்க்கவும், அந்நெறிக்குரிய ஒழுக்கமும் மெய் வாழ்க்கையும் பெற்றுச் சிற்சபை நடமும் பொற்சபை நடமும் நாள்தொறும் கண்டு பாடி நின்றாடி உலகத் துயிர்க்கெலாம் இன்பம் விளைத்தல் வேண்டுமெனவும் பிறருடைய துன்பங்களைப் போக்கி இறைவன் திருவடிக்கு அன்புடையவராகச் செய்தல் வேண்டுமெனவும், புலை, கொலை இரண்டும் நீக்கிய நெறியில் உலகெலாம் நடக்கத் தாமுயலுதல் வேண்டுமெனவும், மன்னுயிர்களின் வருத்தத்தினைத் தீர்க்கும் நல்வரத்தினைத் தமக்குத் தந்தருள வேண்டுமெனவும், தீமை இல்லாத இவ்விருப்பத்தை இறைவனாகிய நீயே அறிவிக்க அறிந்து இத்தகைய விண்ணப்பத்தை நின்பால் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அம்மையப்பனாகிய இறைவனை நோக்கிப் பாடிய பிள்ளைச் சிறு விண்ணப்பப் பாடல்கள் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனத் திருமூலர் அருளிய வண்ணம் வள்ளலார் கொண்ட அருள் வேட்கையினை நன்கு புலப்படுத்துவன ஆகும்.

சிவனருளால் தாம் சித்தி பெற்ற திறத்தைப் புலப்படுத்து வனவாக அமைந்தன,

திருப்பொதுவில் திருநடம் நான்சென்று கண்ட தருணம்சித்தி என்னும் பெண்ணரசிஎத்தி என்கைப் பிடித்தாள் (3381)

உலகிற் பெருந்திறற் சித்திகள் எல்லாம்சிறந்திட உனக்குத் தந்தனம் எனஎன்சென்னி தொட்டுரைத்தானைசாகாவரங் கொடுத் தென்றுந் தடைபடாச்சித்திகள் எல்லாம் அளித்தனை எனக்கு (3848)

பொன் செயல் வகையை உணர்த்தி என்னுளத்தேபொருந்திய மருந்தை… ….. (3969)

சபை எனதுளமெனத் தானமர்ந் தெனக்கேஅபய மளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி

(அகவல் 155-56)

வழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்ஆழியொன்றளித்த அருட்பெருஞ்ஜோதி

(அகவல் 1559-60)

அன்பையும் விளைவித் தருட்பேரொளியால்இன்பையும் நிறைவித் தென்னையும் நின்னையும்ஒருரு வாக்கியா னுன்னியபடியெலாம்சீருறச் செய்துயிர்த் திறம்பெற அறியாஅருளமு தளித்தனை யருணிலை யேற்றினைஅருளறி வளித்தனை யருட்பெருஞ்சோதி (1569-74)

உலகினுள் உயிர்களுக் குறுமிடையூ றெலாம்விலக நீயடைந்து விலக்குக மகிழ்கசுத்த சன்மார்க்க சுகநிலை பெறுகஉத்தமனாகுக ஓங்குக என்றனை (1589-1592)

மகனே பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்பெருந்திறல் சித்திகள் எல்லாம்சிறந்திட உனக்கே தந்தனம் …..

(திருவருட்பா – 3847)

உள்ளம் தளிர்த்திடச் சாகாவரங் கொடுத் தென்றும்தடைபடாச் சித்திகள் எல்லாம் அளித்தனை எனக்கே

(திருவருட்பா 3848)

குணம் அறியேன் செய்தபெருங் குற்றமெலாம் குணமாகக்கொண்டருளி என்னுடைய குறிப்பெலாம் முடித்துமணமுறு பேர் அருளின்ப அமுதமெனக்களித்துமணிமுடியுஞ் சூட்டி எனை வாழ்கஎன வாழ்த்தித்தணவலிலா தென்னுளத்தே தான்கலந்து நானுந்தானுமொ ருவடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தேஅணவுறுபேர் அருட்சோதி அரசு கொடுத்தருளிஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந்தருளே

(திருவருட்பா 4188)

எனவரும் திருவருட்பாப் பாடல்களாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *