திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்

11. மரணமிலாப் பெருவாழ்வு

இறைவனது திருவருட் சுதந்திரத்தை வேண்டிப் பெற்ற அருட்பிரகாச வள்ளலார் அழியும் தன்மையதாகிய ஊனுடம்பினை மாற்றி அழியா இயல்பினதாகிய அருளுடம்பினைப் பெற்று உலக மக்கள் எல்லோரும் எக்காலத்தும் இவ்வுலகில் நிலை பெற்று வாழ வேண்டும் என்னும் ஆராத பெரு வேட்கையுடன் சித்தாய வேடத்தாய் (6-62-1) என அப்பரடிகள் அருளியவாறு எல்லாம் வல்ல சித்தராய் எழுந்தருளிய இறைவனைச் செந்தமிழ்ப் பனுவலால் பரவிப் போற்றிய சித்தராவார்.

நாம் பெற்றுள்ள பூதவுடம்பு என்றாவது ஒரு நாள் அழியக் கூடியதே. நிலவாத அப் புலால் உடம்பினை மாற்றி அன்பும் அருளும் இன்பும் உருவாகிய தூய நல்ல உடம்பினை இறைவன் அருளால் இப்பிறப்பிலேயே பெற்ற, இவ்வுலகம் உள்ளளவும் இறைவனை அன்பினால் போற்றி ஆருயிர்கட்கெல்லாம் அன்புடையராய் வாழ்தல் என்பது இறைவனருளால் பெறுதற் குரிய திருவருள் வாழ்வாகும். இத்தகைய சித்தித் திறத்தால் பெறுதற்குரிய திருவருள் வாழ்வினையே மரணமிலாப் பெருவாழ்வு என வள்ளலார் தாம் பாடிய பனுவல் களில் பல இடங்களிலும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் பெற்றுள்ள யாக்கையும், இளமையும், செல்வமும் நிலையுடையன அல்ல என்னும் உண்மையை நிலையாமை என்னும் அதிகாரத்தில் வற்புறுத்திய திருவள்ளுவர், நம்முடைய உயிரை நாம் பெற்றுள்ள உடம்பினின்றும் பிரித்து மரணத்தை யுண்டாக்கும் கூற்றுவனையும் தவ வன்மையால் வெல்லுதல் கூடும் என்னும் உண்மையைக்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (-269)

எனவரும் திருக்குறளில் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

யாவராலும் தடுக்க வொண்ணாத நிலையில் உடம் பினின்றும் உயிரைப் பிரிக்கும் தெய்வ ஆற்றலே கூற்று என வழங்கப்படும் என்பார், மாற்றரும் கூற்றம் என்றார் தொல்காப்பியர். இவ்வாறு யாவராலும் தடுக்க வொண்ணாத கூற்றுவனது ஆற்றலையும் தவ வலியால் மாற்றிவிடுதல் கூடுமென்பதே மேற்காட்டிய திருக்குறளின் கருத்தாகும். எல்லா வகையாலும் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதவாய் மன்னுயிர்களை அவை நிலை பெற்றுள்ள உடம்பினின்றும் நீக்குதலாகிய கொலைத் தொழிலைச் செய்யாது கொல்லாமை என்னும் நல்லறத்தை மேற்கொண்டு ஒழுகுவாரது வாழ்நாளின் மேல் காலமறிந்து உயிருண்ணவரும் கூற்று செல்லமாட்டாது என அறிவுறுத்துவது,

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ் நான் மேல்செல்லா துயிருண்ணும் கூற்று (-326)

எனவரும் திருக்குறளாகும்.

கொல்லாமையை விரதமாக மேற்கொண்டொழுகுவானது வாழ்நாளின் மேல் உயிருண்ணும் கூற்று செல்லாது எனவே அவனுக்கு மரணமில்லை என்பதாம்.

மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவஞ் செய்தாரும் முறையானன்றி இம்மை தன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பரென்னும் அறநூற்றுணிபு பற்றி இப்பேரறஞ் செய்தான் தானும் கொல்லப்படான். படானாகவே அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி யெய்துமென்பார் வாழ்நாள் மேல் கூற்று செல்லா தென்றார். செல்லாதாகவே காலம் நீட்டிக்கும், நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறுமென்பது கருத்து எனப் பரிமேழகர் தரும் விளக்கம், கொல்லாமையை விரதமாகக் கொண்டொழுகுவார் இவ்வுலகில் மரணமின்றி நெடிது வாழ்ந்து பின்னர் வீடுபெறுவர் என்னும் உண்மையை வற்புறுத்தல் காணலாம். தன்னை வழிபடு வோரது நெஞ்சத் தாமரையிலே நிலைபெற வீற்றிருந்தருளும் இறைவனுடைய மாட்சிமை பொருந்திய திருவடிகளை இடை விடாது தியானிப்போர் இந்நிலவுலகின்கண் தம் உடம்பிற்கு அழிவின்றி நெடுங்காலம் வாழ்வார்கள் என்னும் உண்மையை அறிவுறுத்துவது,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். (-3)

எனவரும் திருக்குறளாகும்.

மலர்மிசை ஏகினான் – தன்னை அன்பால் நினைவாரது உள்ளத் தாமரையின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து எழுந்தருளியிருப்பவன். அடி சேர்தல் என்பது அம்முதல்வனுடைய திருவடியை இடைவிடாது தியானித்து அவனோடு ஒன்றுபட்டுச் சிவயோக நிலையில் இருத்தல். இவ்வாறு சிவயோக நிலையில் நின்று சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்களே முற்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களாவர். தாம் பெற்ற சித்தித்திறத்தால் தம் உடம்பினை அழியா நிலையுடையதாகச் செய்து உலகெங்கும் சென்று மன்னுயிர்களுக்கு நலம் செய்வதையே தமது கடமையாகக் கொண்டு இறவாமல் பிறவாமல் வாழ்பவர்களே சித்தர்களெனப் போற்றப் பெறுவர். தம்முள்ளத் தாமரையில் எழுந்தருளிய உயிர்க் குயிராகிய இறைவனை இடைவிடாது தியானித்துப் போற்றும் தவயோகிகளாகிய சித்தர்கள் தமது உடம்பிற்கு அழிவின்றி நீடுவாழ்வார்கள் என்பதே இத்திருக்குறளின் கருத்தாகும். இடம் வரையாது நீடுவாழ்வார் என்று கூறாமல், நிலமிசை நீடுவாழ்வார் என இடத்தினை வரைந்து கூறினமையால் இங்கு நீடுவாழ்தல் என்பது அழியா உடம்போடு நிலமிசை நிலைத்து வாழ்தலாகிய மரணமிலாப் பெருவாழ்வையே குறிக்கும் எனக் கொள்ளுதல் மிகவும் பொருத்தமுடையதாகும்.

உலகத்தில் உடம்புடன் கூடிப் பிறந்தவர்கள் இறத்தலும், அவ்வுடம்பை விட்டு இறந்தவர்கள் மற்றொரு உடம்பினைப் பெற்று மீளப் பிறத்தலும் புதுமையான செய்தி அன்று; தொன்று தொட்டு நடைபெற்று வரும் உயிர்களின் பொதுவாழ்க்கை முறையே ஆகும். இம் முறையினை ‘உயிர்போகு போதுநெறி’ என்பர் இளங்கோவடிகள். இவ் உண்மையினை, பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் புதுவதன்றே தொன்றியல் வாழ்க்கை (சிலப்பதிகாரம் 30-ஆம் காதை 139-140) என மாடல மறையோன் கூற்றாக இளங்கோவடிகள் புலப்படுத்தியுள்ளார்.

ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும் எனவும், அதன் பின்பு பிறப்பு வருதல் உறங்கி விழித்தலோடு ஒக்கும் எனவும் இவ்வாறு காரண காரியத் தொடர்ச்சியாய்ப் பிறப்பும் இறப்பும் கரையின்றித் தொடர்ந்து வருதலால் பிறவியைப் பெருங்கடல் எனவும் திருவள்ளுவர் குறித்துள்ளார். இவ்வாறு நிலையின்றி அழியக் கூடிய உடம்பினைப் பெற்றுப் பிறந்த மக்கள், தம் ஐம் பொறிகளை ஒருநெறிப் படுத்திச் செம்பொருளாகிய இறைவனைச் சிந்தித்துச் செய்யும் மிக்க தவவன்மையால் தம்முடைய தவ உடம்பை நிலத்தில் வீழ்ந்து அழிய விடாமல் என்றும் அழியா நிலை உடையதாகச் செய்து அவ்வுடம்புடன் கூடியே தவப் பயனைப் பெற்றுத் தாம் விரும்பிய இடங்களுக்கெல்லாம் விரைந்து செல்லும் பேராற்றல் உரையராகத் திகழ்வார்கள் என்பது சங்ககாலத் தமிழ் மக்களது வாழ்வியலிற் காணப்படும் பேருண்மையாகும். இந்நுட்பம்,

தவம்செய் மாக்கள் தம் உடம்பு இடாதுஅதன்பயன் எய்திய அளவை மான’ (பொருநர் – 95 – 96)

எனவரும் பொருநர் ஆற்றுப் படைத் தொடரால் நன்கு பயனாகும். மிக்க தவத்தைச் செய்கின்ற தவச்செல்வர்கள் தம்முடைய தவம் செய்த உடம்பை நிலத்தில் போடாது அழியா உடல்பெற்று அவ்வுடம்புடன் இருந்து தவத்தாற் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப என்பது மேற் காட்டிய தொடரின் பொருள் ஆகும். அழியா உடம்பினைப் பெற்ற இத்தவச் செல்வர்கள் அவ்வுடம்புடன் கூடிய வானுலகம் முதலிய எல்லா இடங்களுக்கும் சென்று வருவார்கள் என்பது.

உடம்பொடு சென்மார் உயர்ந்தோர் நாட்டே (புறம் – 392)

எனவரும் புறப்பாடலால் நன்கு புலனாகும்.

கற்புடைத் தெய்வமாகிய கண்ணகியார், தமது பழைய உடம்போடு கூடியே விண்ணுலகினின்றும் தெய்வவுருப் பெற்று வந்த கோவலனுடன் மலைவாழ் குறவர் கண் காண வானோர் உலகம் புக்கனர் என்ற செய்தி சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டது.

பாலைக்கவுதமனார் என்னும் புலவர்பெருமான் இமையவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்னும் சேர மன்னனைப் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தினால் பாடிய நிலையில், அம்மன்னன் பாடிப்பெறும் பரிசிலாக நீர் வேண்டிய பொருளைக் கொள்வீராக என்ற பொழுது, அவர் – யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புக வேண்டும் எனக் கேட்க, சேர மன்னனும் பார்ப்பாரிற் பெரியோரை அழைத்து ஒன்பது பெருவேள்விகளைச் செய்து பத்தாவது வேள்வியைத் தொடங்கிய நிலையில் புலவர் பெருமானாகிய பார்ப்பனியையும் யாவரும் காணாராயினர் என்ற செய்தி பதிற்றுப்பத்து மூன்றாம்பத்தின் பதிகத்தில் கூறப்பட்டுள்ளது.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கவுதமன் விரும்பியவாறு தக்க பார்ப்பனர்களைக் கொண்டு வேள்விகளைச் செய்து பாலைக் கவுதமனாரையும் அவர் தம் வாழ்க்கைத் துணைவியாகிய பார்ப்பனினையும் உடம்பொடு வானுலகத்திற்கு ஏற்றிய இச்செய்தியினை

வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்ததிண்டிறல் நெடு வேற் சேரலன்

(சிலப்பதி…… கட்டுரைகாதை 63-4)

எனவும்,

நான் மறையாளன் செய்யுட் கொண்டுமேனிலையுலகம் விடுத்தோன்.

(சிலப். 28 நடுநற் காதை 137-8)

எனவும், வரும் தொடர்களில் இளங்கோவடிகள் குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்குதற்குரியதாகும்.

மேற்குறித்த செய்திகள் யாவும் இவ்வுலகில் வாழும் மக்கள் தாம் பெற்ற பூதவுடம்போடு விண்ணுலகிற்குச் செல்ல முடியும் என முன்னோர் கொண்ட நம்பிக்கையைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தன.

இனி இவ்வுலகில் வாழும் பொழுதேயே தம் உடம்பினை நல்லொழுக்க நெறியாலும் அன்பு அருள் முதலிய உயர் பண்புகளாலும் நன்கு பாதுகாத்து வளர்த்தலினால் மரணமின்றி நெடுங்காலம் வாழமுடியும் என்பதனைத் தமிழ் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதும், அத்தகைய நிறைவுடைய வாழ்க்கையினால் நிறைந்த அறிவினைப் பெற்றுத் திகழ்ந்தனர் என்பதும் ‘பாண்டியன், மாகீர்த்தி இருபத்தி நாலாயிரம்யாண்டு அரசு வீற்றிருந்தானாதலின் அவனும் அவன் அவைலுள்ளோரும் அறிவு மிக்கிருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற்கெல்லாம் குற்றம் தீர விடை கூறுதலின் அரில்தப என்றார்’ (தொல் – எழுத்து – பாயிரம்) எனவரும் நச்சினார்க்கினியர் உரையால் உய்த்துணரப்படும்.

ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்து, காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்களை நீக்கி நல்லொழுக்க நெறியினை மேற்கொண்டு இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலமென்னும் முக்கால நிகழ்ச்சிகளையும் உணர வல்ல முழுதுணர்வுடைய அறிவர் என்னும் கூட்டத்தாரும், அவ்வறிவர் கூறிய நூல்நெறியில் நின்று வீடு பெறமுயலும் நிலையில் இமயம், நியமம், ஆசனம், வனிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி என்னும் எண்வகை யோக அமைப்பினையுடையராய் ஒழுகும் தவச்செல்வர்களும் தாம் தாம் மேற்கொண்டொழுகும் நிலையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரு மின்றி வென்றியுடையராய் விளங்கினார்கள். இச்செய்தி,

மறுவில் செய்தி மூவகைக் காலமும்நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும்

(தொல்- புறத்தினை – 15)

எனவரும் தொல்காப்பியத் தொடரால் இனிது விளங்கும் அகத்திய முனிவர் முதலியோர் அறிவர் என்னும் பக்கத்தவர். தாபதர் தவஞ்செய்வார் எனப்படுவோர். அவர்கள் – தவஞ் செய்வோரும், யோகஞ் செய்வோரும் என இருவகைப்படுவர். ஊண் நசையின்மை, நீர் நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய் வாளாமை என எட்டும் தவஞ் செய்வார்க்குரிய செயல் முறைகளாகும். முற்கூறிய இமயம் நியமம் முதலியன யோகம் செய்வார்க்குரியன. முக்காலமு முணர்ந்த அறிவரும், தவமும், யோகமும் செய்வாராகிய தாபதரும் சங்க காலத்தில் ‘வாழ்ந்திருந்தனர் என்பது மேற்குறித்த தொல்காப்பியத் தொடராலும், அறிவன் வாகை, தாபத வாகை என்னும் புறத்திணைத் துறைகளிலமைந்த சங்கச் செய்யுட்களாலும் உய்த்துணரப்படும்.

ஓவத்தன்ன விடனுடை வரைப்பிற்பாவையன்ன குறுந்தொடி மகளிர்இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிகும்கழைக்க ணெடுவரை யருவியாடிக்கான யானை தந்த விறகிற்கடுந்தெறற் செந்தீ வேட்டுப்புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே. (புறநானூறு – 215)

எனவரும் புறப்பாடல் தவத்தின் வெற்றியைக் குறித்த தாபத வாகை என்னும் துறையிலமைந்ததாகும்.

மூங்கிலிடத்தேயுடைய நெடிய மலையினின்று விழும் அருவி நீரிற் குளித்துக் காட்டுயானை கொணர்ந்த விறகினால் வேள்விக் குண்டத்தில் செந்தீயை வளர்த்து முதுகின் புறத்தே தாழ்ந்த தனது சடையைப் புலரும் படிசெய்து கொண்டிருக்கிற இத் தவச்செல்வன் முற்பருவத்தில் ஓவியம் போலும் அழகினையுடைய தன் வீட்டின் கண்ணே பாவை போலும் வளையணிந்த மகளிருடைய அணிகலன்கள் கழலுமாறு அன்பு மீதூர உபசரிக்கப்பட்டவன் என்பதனைக் கண்டுகொண்டேம் என்பது இப்பாடலின் பொருளாகும்.

இப்பொழுது மலையருவியில் நீராடிக் காட்டு யானை தந்த விறகினால் வேள்வி செய்து தன் புறத்தே தாழ்ந்த ஈரச்சடை புலரும்படி தவநிலையில் இருப்போனாகிய இவன், முன்பு தன் இல்லத்திலே காதல் மகளிர் காமுறப் பேரழகனாய் வாழ்ந்தவன் என்பதனை இப்பொழுது கண்டு கொண்டோம் என வியந்து போற்றுவதாக அமைந்தது மாற்பித்தியார் பாடிய இப்புறப் பாடலாகும்.

இம்மையின்பம் நல்கும் இவ்வுலகியல் வாழ்வையும் வீடு பேற்றின்பத்தை நல்கும் தவ வாழ்வையும் சீர் தூக்கிப் பார்த்தால் தவ வாழ்வை நோக்க இவ்வுலகியல் வாழ்வு வெண் சிறுகடுகின் அளவு கூட நிறையில் நில்லாது. ஆதலால் பேரின்பமாகிய வீடு பேற்றில் விருப்பமுடையோர் இவ்வுலகியல் வாழ்வைக் கைவிட்டுத் தவ வாழ்வை மேற் கொண்டனர். இவ்வாறு எல்லாப் பற்றுக்களையும் விட்டுத் துறவடைந்தவர்களை எல்லாச் செல்வத்துக்கும் தெய்வமாகிய திருமகள் விட்டுநீங்க மாட்டாள் எனத் தவத்தின் சிறப்பினை விளக்குவதாக அமைந்தது.

பருதி சூழ்ந்தவிப் பயங்கெழுமாநிலம்ஒரு பகலெழுவ ரெய்தி யற்றேவையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக்கையவி யனைத்து மாற்றா தாகலிற்கைவிட்டனரே காதல ரதனால்விட்டோரை விடாஅ டிருவேவிடாஅ தோரிவண் விடப்பட் டோரே (புறநானூறு – 358)

என வான்மீகியார் பாடிய பாடலாகும்.

இப்பாடற் பொருளை ஊன்றி நோக்குங்கால் உலக நிலையாமையையும், நிலையுடைய பெரும் பொருளையடையச் செய்யும் தவத்தின் ஆற்றலையும் உணர்ந்து தவநிலையில் சென்ற பெருமக்கள் தமிழகத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பது நன்கு தெளியப்படும்.

யோகிகளாய் உபாயங்களால் முக்காலமுணர்ந்த மாமூலர் முதலியோர், அறிவன் தேயத்து அனைநிலை வகையோராவர்; அவர்க்கு மாணாக்கராகித் தவஞ்செய்வோர் தாபதப் பக்கத்தராவர் என நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் பெருமை வாய்ந்த சிவயோகியராகிய திருமூல நாயனாரையும் அவர்தம் மாணாக்கர்களையும் குறித்தெனக் கருத வேண்டியுள்ளது.

யாப்பருங்கலம் செய்யுளியல் புறநடைச் சூத்திரவுரையில் “ஆரிடப்போலி” என்னும் செய்யுள் அமைப்பினை விளக்கக் கருதிய யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் “இலை நலவாகினும்” (204) என்னும் முதற் குறிப்புடைய திருமந்திரத்தினை மூலர் வாக்கு எனக் குறித்துள்ளார். எனவே திருமூலர், தமிழ் நாட்டு முனிக்கணத்தைச் சேர்ந்தவர் என்பது நன்கு தெளியப்படும்.

திருமூல நாயனார் இந்நிலவுலகில் மூலன் உடம்புடன் நெடுங்காலம் சிவ யோகத்திலமர்ந்திருந்தார் என்பது ‘ஒப்பில் எழுகோடியுக மிருந்தேனே’ (திருமந்திரம் 74) எனவும், இருந்தேன் இக்காயத்தே எண்ணில்கோடி (திரு – 80) எனவும், வரும், அவர்தம் வாய்மொழிகளால் நன்கு துணியப்படும் ‘இக்காயத்தே என்று திருமூலர்ச்சுட்டியது சிவயோகியாராகிய அவர், மூலன் என்னும் இடையன் உடம்பிற் புகுந்து நிலைபெற்ற பின்னராதலின் திருமூலனால் இக்காயம் எனச் சுட்டப்பட்ட உடம்பு மூலன் என்னும் ஆயனுடைய உடம்பு எனக் கொள்ளுதல் வேண்டும்.

திருமூலர் தம்முடன் நந்தியெம்பெருமான்பால் உபதேசம் பெற்றவர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்னும் நந்திகள் நால்வரையும், சிவயோக மாமுனி, மன்று தொழுத பதஞ்சலி, வியாக்ரமர் ஆகியவர்களையும் தம்மொடும் சேர்த்து எண்மராகக் குறித்துள்ளார். (திருமந்திரம் – 67)

திருமூலருடைய மாணாக்கர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயரினராகிய எழுவர் (திருமந்திரம் – 69)

இந்நிலவுலகில் தாம் நெடுங்காலம் தங்கியிருந்த காரணத்தை விளக்கக் கருதிய திருமூலர் தம்முடைய மாணாக்கர்களாகிய இந்திரன் – மாலாங்கன் முதலியோரை நோக்கிக் கூறும் முறையில்

இருந்தவக் காரணங் கேளிந் திரனேபொருந்திய செல்வப் புவனா பதியாம்அருந்தவச் செல்வியைச் சேவித்தடியேன்பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே (திரு-75)

மாலாங்கனே யிங்கு நான் வந்த காரணம்நீலாங்க மேனியள் நேரிழை யாளொடுமூலாங்கமாக மொழிந்த திருக் கூத்தின்சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே (திரு-77)

எனவரும் பாடல்களில் எடுத்துக் காட்டியுள்ளமை காணலாம்.

இந்நிலவுலகில் மூலனுடம்புடன் தாம் நெடுங்காலம் தங்கியிருத்தற்குரிய நோக்கம் சிவத்துடன் பிரிப்பின்றி விளங்கும் அருட்சத்தியாகிய புவனாபதியென்னும் அருந்தவச் செல்வியை வழிபட்டு அவ்வன்னையின் திருவருளால் இவ்வுலகில் பத்தி நெறியையும், யோக நெறியையும், ஞான நெறியையும் நிலைபெறச் செய்து இறைவனது அருட் கூத்தினை விளக்கும் தமிழ் வேதமாகிய திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தற் பொருட்டேயாம் எனத் திருமூல நாயனார் தம் மாணாக்கர்கட்கு அறிவுறுத்தும் நிலையில் அமைந்தன மேற் காட்டிய திருமந்திரப் பாடல்களாகும், மூலன் என்னும் ஆயன் இறந்த நிலையில் அவனால் மேய்க்கப் பெற்ற பசுக்கள் உற்ற துயரங் கண்டு அதனை நீக்குதற் பொருட்டு ஆயனாகிய மூலனுடலுட் புக்குத் திருமூலராயெழுந்தவர் சிவயோகியராகிய செந்தமிழ்ச் சித்தர். இவர் இறைவனருளால் சதாசிவமூர்த்தியை ஒத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தும் முற்றுணர்வும் தேவர்க் கெல்லாம் முதன்மையும் உடையவராக அழியா உடம்புடன் திகழ்ந்தார் என்பது வரலாறு இச்செய்தி;-

நந்தியருளாலே மூலனை நாடிப்பின்நந்தியருளாலே சதாசிவனாகினேன்நந்தியருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன்நந்தியருளாலே நானிருந்தேனே’ (திருமந்திரம் – 92)

எனவரும் இவரது வாய்மொழியால் நன்கு புலனாகும்.

திருமந்திரப் பனுவல்களை அருளிய சிவயோகியாராகிய திருமூலநாயனார் இறைவனருளால் தாம் பெற்ற எண்வகைச் சித்திகளால், இத்தமிழகத்தே பத்தி நெறியையும் ஞான யோக நெறிகளையும் பரப்பியருளிய திருவருட்சித்தர் ஆவர். அவர் வழியாகத் தமிழகத்தில் சித்தி நெறி தொடர்ந்து வளர்ந்து வந்தது, பிற்காலத்தில் வாழ்ந்த பதினெண் சித்தர்களிற் பலர் திருமூலர் அறிவுறுத்திய சித்தி நெறியினை மேற்கொண்டு வாழ்ந்தவர்களே. இவ்வகையில் திருமூலர் மரபு தாயுமான அடிகளாருக்குக் குருவாகிய மௌனகுரு என்னும் ஆசிரியர் காலம் வரை தொடர்ந்து நிலைபெற்று வந்துள்ளது. தாயுமானார் காலத்திலும் இத்தகைய சித்தர் கணத்தார் வாழ்ந்திருக்கிறார்கள். மூலன் மரபில் வரு மௌனகுருவே, எனவும், ‘வித்தகச் சித்தர்கணமே’ எனவும் தாயுமான அடிகளார் தம்முடைய குருவாகிய மௌனகுருவையும் தம் காலத்தில் வாழ்ந்த சித்தர் கணங்களையும் அழைத்துப் போற்றும் பாடல்களால் இச்செய்தி நன்கு புலனாதல் காணலாம்.

கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் நிலவிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமூலரைக் குருவாகக் கொண்டு சிவயோக நெறியினை மேற்கொண்டொழுகியவர் என்பது, ‘நம்பிரான் திருமூலனடி யார்க்குமடியேன்’ (7-39-6) எனவும் ‘நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால் விரல்’ (7-45-9) எனவும் வரும் அவர்தம் வாய்மொழியால் நன்கு விளங்கும்.

சுந்தரர் காலத்தில் வாழ்ந்த பெருமிழலைக் குறும்பர் என்னும் பரமயோகி சுந்தரமூர்த்தி சுவாமிகளையே குருவாகக் கொண்டு சிவயோகம் பயின்று அதன் பலனாகச் சுந்தரர் நாளை கயிலை செல்ல இருக்கின்றார் என்பதனை உணர்ந்து அதற்கு முதல் நாளிலேயே சிவயோக நெறியாற் கயிலாயத்தை அடைந்தார் என்ற செய்தி திருத்தொண்டர் புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது.

ஆன்மாக்கள் மும்மலப்பிணிப்பினின்றும் விடுபட்டு இறைவனது அருளால் பேரின்பப் பெரு வாழ்வினை அடைதற் பொருட்டு முத்தி நெறியை வகுத்தருளிய உமையொருபாகனாகிய இறைவனே உலக உயிர்களின் இன்னலைப் போக்க விரும்பும் அருளாளர்க்கெனச் சித்தி நெறியையும் வகுத்துக் காட்டியுள்ளான் என்னும் இவ்வுண்மையை,

முத்தா முத்திதரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்காசித்தா சித்தித்திறங் காட்டும் சிவனே தேவர் சிங்கமே (7-52-1)

என நம்பியாரூரர் நன்கு புலப்படுத்தியுள்ளார்.

சிவயோக நெறியில் ஒழுகுபவர்களாகிய சித்தர்கள் தாம் இவ்வுலகில் கொண்டுள்ள ஊனுடம்பினையே இறைவனின் திருவருளின் ஆற்றலால் என்றும் அழியாத ஒளியுடம்பாக்கி எவ்விடத்தும் எக்காலத்தும் தடையின்றிச் சென்று மன்னுயிர்களின் துன்பங்களைப் போக்கி யுய்விக்க வல்ல பேராற்றல் படைத்தோர் ஆவர். ஆகவே அவர்தம் ஒளியுடம்பு என்றும் அழியா நிலைமைத் தாகும் என்பர் பெரியோர்.

சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய சண்டேசர் தாம் செய்த சிவபூசையினைத் தடுத்த தந்தையின் கால்களைத் தடிந்த போது, இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சோதிப் பொருளாகிய சிவபெருமான் வெளிப்பட்டு நம் பொருட்டால் எடுத்த தாதையை விழ எறிந்தாய்; அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்றருளி, அவரையணைத்துத் தடவி அருள் செய்தான் என்றும், அங்ஙனம் இறைவனால் தீண்டப் பெற்றமையால் சண்டேசருடைய மாயா காரியமாகிய உடம்பு ஒளியுடம்பாக மாற அந்த உடம்புடன் அரனார்க்கு மகனார் ஆயினார் எனவும் கூறுவர் சேக்கிழார் பெருமான்.

செங்கண் விடையார் திருமலர்க்கைதீண்டப் பெற்ற சிறுவனார்அங்கண் மாயை யாக்கையின்மேல்அளவின் றுயர்ந்த சிவமயமாய்ப்பொங்கி எழுந்த திருவருளின்மூழ்கிப் பூமேல் அயன்முதலாம்துங்க அமரர் துதி செய்யச்சூழ்ந்த ஒளியில் தோன்றினார். (பெரிய – 1265)

எனவரும் பெரிய புராணப் பாடலை ஊன்றி நோக்குங்கால் நாம் பெற்றுள்ள மாயா காரியமாகிய ஊனுடம்பு எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் நோக்கத்தால் மாயையின் அசுத்தம் நீங்கிச் சிவமயமாய்த் தூய ஒளியுடம்பாகத் திகழும் என்பது சேக்கிழார் பெருமான் கருத்தாதல் நன்கு தெளியப்படும். பரிச வேதியானது, தான் தீண்டிய பொருளைப் பொன்னாக மாற்றுதல் போல, இறைவனது அருளாகிய கை தீண்டப் பெற்றமையால் சேய்ஞலூர்ப் பிள்ளையாருடைய மாயா காரியமாகிய உடம்பும் கரணங்களும் தூய சிவ உடம்பும் சிவ கரணங்களும் ஆக மாற்றப்பெற்ற திறத்தை விளக்குவார், செங்கண் விடையார் திருமலர்க்கை தீண்டப்பெற்ற சிறுவனார், அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவின்றுயர்ந்த சிவமயம் ஆயினாரென்றார்.

இறைவனது திருவருளில் மூழ்கித் திளைத்த சண்டேசப் பிள்ளையாரது திருமேனி சிவத்துவ விளக்க மாகிய பேரொளியினைப் பெற்று விளங்கியது என்பார் சூழ்ந்த ஒளியில் தோன்றினார் என்றார்.

சிவ அபராதம் செய்தமையால் தன்தாதை எச்சதத்தனுடைய கால்களை மழுப்படையால் வெட்டி வீழ்த்திய சிறிய பெருந் தோன்றலாகிய விசாரசர்மர், தாம் முன் பெற்றிருந்த மாயா காரியமாகிய உடம்பு அதன் தன்மை திரிந்து சிவமயமாய் ஒளியுடன் தோன்றிய நிலையில் சிவனார்க்கு மகனார் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறும் நற்பேற்றினைப் பெற்றார் என்பார்,

வந்து மிகைசெய் தாதைதாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர்அந்த உடம்பு தன்னுடனேஅரசனார் மகனார் ஆயினார்

என்றார் சேக்கிழாரடிகள்.

அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனார் ஆயினார் என்றது, மாயை உடம்பு அதன் தன்மை திரிந்து சிவமயமாய்ப் பொங்கி எழுந்து திருவருளில் மூழ்கிச் சிவவொளியில் தோன்றிய தாதலின் அவ்வுடம்புடனேயே சிவனார் மகனாராவதற்கு ஏதுவாயிற்று. ஊனுயிர்வேறு செய்தான் – யானையின் மேல் என்னுடல் காட்டுவித்ததான் மானவ யாக்கையொடு என்பன இத்தன்மையை விளக்குவனவாம் – (பெரிய – சண்டேசர் – சிவக்கவிமணி உரை) என இப்பாடலுக்குச் சிவக்கவிமணி அவர்கள் தரும் விளக்கம் இங்கு மனங் கொள்ளத்தகுவதாகும்.

சேரமான் பெருமான் நாயனாரும் அவர் தம் சோழராகிய நம்பியாரூரரும் இவ்வுலகில் தாம் பெற்ற மனித உடம்புடனேயே திருக்கயிலாயத்தை அடைந்தனர் என்பது வரலாறு.

களையா உடலோடு சேரமான் ஆரூரன்விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள

(திருவிசைப்பா – 189)

எனப் பூந்துருத்தி நம்பிகாடநம்பியும்.

ஞான ஆரூரரைச் சேரரை அல்லது நாம் அறியோம்மானவ ஆக்கையொடும்புக் கவரை வளரொளிப்பூண்வானவ ராலும் மருவற் கரிய வட கயிலைக்கோனவன் கோயில் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே

(திருத்தொண்டர் திருஅந்தாதி – 86)

என நம்பியாண்டார் நம்பியும் அருளிய பொருளுரைகளால் இவ்வரலாறு வலியுறுத்தப் பெற்றமை காணலாம். இதற்கு அகச் சான்றாக அமைந்தது, சுந்தரர் திருக்கயிலை சென்றபோது பாடியருளிய

தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கேநானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்துவானெனை வந்தெதிர் கொள்ள மத்தயானை அருள்புரிந்துஊனுயிர்வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே

தேவாரம் (7-100-1)

எனத் தொடங்கும் திருப்பதிகமாகும்.

இதன் முதற்பாடலில் வரும் ஊன் உயிர் வேறு செய்தான் என்ற தொடருக்குச் சிவக்கவிமணி அவர்கள் பின்வருமாறு தரும் விளக்கம் இங்கு நினைவு கூரத்தகுவதாகும்.

ஊன் உயிர் வேறு செய்தான் ஊன் = கருவி கரணங்களோடு கூடிய உடல், உயிர் = ஆன்மா. இவற்றை வேறு செய்தலாவது, அவை இவ்வுலகிற் சரித்த நிலையினின்றும் வேறு தன்மையாகச் செய்தல்.

ஊன் வேறு செய்தல் – பசு கரணங்கள் பதி கரணங்களாகச் செய்தல் பகல் விளக்குப் போல அருளொளியில் அடங்கச் செய்தல். உயிர் வேறு செய்தல் – மாயா கருவிகளால் அறிந்து ஏகதேவப் படாமல் அருளொளியில் அடங்கி வியாபகமாக அறியச் செய்தல்.

முடியேன் இனிப் பிறவேன் பெறின் மூவேன்முக்கண்மூர்த்தி (7-1-4)

என நம்பியாரூரர் அருட்டுறையிறைவரை நோக்கிப் போற்று கின்றார். இத்திருப்பாடல் தொடரில் நினக்குத் தொண்டு பட்ட அடியேன் இனி இறக்கமாட்டேன், பிறக்க மாட்டேன் உடம்பு முதுமையடைய மாட்டேன் எனத் தெளிவாகக் குறிப்பிடுதலால் அவர் இறைவனருளாற் பெற்ற பேறுசாவா மூவாப் பெருவாழ்வு என்பது நன்கு தெளியப்படும்.

உலகிற் சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்மூவாதபன் முனிவர் தொழும் முதுகுன்று (1-12-6)

என ஆளுடைய பிள்ளையார் திருமுதுகுன்றத்தில் இறைவனை வழிபட்டு வாழும் பெருந்தவச் செல்வர்களாகிய சித்தர்களைச் சிறப்பித்துரைக்கின்றார். இத்தலத்தில் வாழும் முனிவர்கள் சாவாமையையும் பிறவாமையையும் உடையராய் முதுமையடையாத திருமேனியுடன் கூடி முதுகுன்றப் பெருமானை வழிபட்டு மரணமிலாப் பெருவாழ்வு வாழ்கின்றார்கள் என்பது மேற்குறித்த சம்பந்தர் தேவாரத்தால் நன்கு புலனாகின்றது.

விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் மூவராய முதல் ஒருவானகிய இறைவன், திருமுதுகுன்றத்தில் தேவராயும், அசுரராயும், சித்தராயும் செழுமறை சேர் நாவராயும் நில முதல் ஐம்பூதங்களாகியும் கலந்து நின்று அருள் புரியும் திறத்தினை விளக்குவது,

தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்நாவராயும் நண்ணு பாரும், விண், எரி, கால், நீரும்மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்மூவராயமுத லொருவன் மேயதுமுதுகுன்றே (1-53-1)

எனவரும் ஆளுடையபிள்ளையார் அருளிய பாடலாகும்.

மூவா உடம்பினராகிய முனிவர்கள் திருமுதுகுன்றப் பெருமானை அன்பினால் நெஞ்சம் நெகிழ்ந்துருகிப் போற்றுந் திறத்தினையும், ஐம்புலன் செற்ற அவர்கள் மோனிகளாய்த் தனித்திருந்து தவம்புரியும் இயல்பினையும்,

தேவாசிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனேஆவா என்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்ஓவா வுவரி கொள்ள வுயர்ந்தா யென்றேத்திமூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே, (2-64-1)

எனவும்

ஞானிகளாயுள்ளார்கள் நான்மறையைமுழுதுணர்ந்தைம் புலன்கள் செற்றுமோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்துதவம் புரியும் முதுகுன்றமே. (1-131-10)

எனவும் வரும் திருப்பாடல்களில் ஆளுடையபிள்ளையார் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளமை இங்கு நினைத்தற்குரியதாகும்.

இங்ஙனம் முனிவர்கள் விரும்பிப் போற்றும் முழு முதற் பொருளாகிய முதுகுன்றப் பெருமான் தன்னை வழிபடும் மார்க்கண்டேயர் முதலிய முனிவர்கட்கு, என்றும் இறவாத பெருவாழ்வினராய் நிலமிசை நீடு வாழ்தல் வேண்டி அவர்தம் வாழ்நாள் மேல்வரும் கூற்றின் ஆற்றலை மாற்றித் தடுக்கும் அருட்செயலை,

முனிவர்க்கு அருங்கூற்றைக் குமைத்த நம்பி

(நம்பி என்ற திருப்பதிகம் -5)

என நம்பி ஆரூரர் குறித்துள்ளமை திருமுதுகுன்றத்தில் சாவாதவர் பிறவாதவர் தவமே மிகவுடையார் மூவாதபன் முனிவர்கள் வாழ்ந்த செய்தியினை வலியுறுத்தல் காணலாம்.

உடம்போடு கூடிவாழும் உயிர்கட்கு அவ்வுடம்பை விட்டு இறத்தலாகிய சாதலைக் காட்டிலும் துன்பந் தருவது பிறிதொன்று மில்லை என்பார்,

சாதலின் இன்னாதது இல்லை (குறள் – 230)

என்றார் திருவள்ளுவர். இவ்வாறு சாதலால் வருந் துன்பத்தினை மனவுணர்வு படைத்த மாந்தர்கள் தாம் மேற்கொண்டு செய்யும் தவத்தின் ஆற்றலால் மாற்றி இவ்வுலகில் இறவாநிலையை அடைதல் கூடும் என்னும் உண்மையினை,

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (குறள். 269)

எனவரும் திருக்குறளில் தெய்வப் புலவர் வற்புறுத்திக் கூறியுள்ளமை காணலாம்.

உலகமக்கள் தாம் செய்யும் தவமுயற்சியால் ஊழையும் வென்று இவ்வுலகில் அழியாது நிலை பேறுடைய உடம்பினராய் நெடுங்காலம் வாழ்தற்குரிய வண்ணம் எண்வகைச் சித்திகளும் கைவரப்பெற்று நிலமிசை நீடுவாழும் நெறியினை உலகினர்க்கு அறிவுறுத்திய பெருமை தமிழ் நாட்டுச் சித்தர் கணத்தார்க்குரிய தனிச் சிறப்பாகும். இத்தகைய சித்தர் கணத்தாருள் குருவாகத் திகழ்ந்தவர் திருமூலதேவர் என்பது அறிஞர் பலரும் நன்கறிந்த செய்தியாகும்.

சித்தர்கணத் தலைவராகிய திருமூலர் சிவபெருமானைப் போற்றி அம்முதல்வன் திருவருளால் எண்வகைச் சித்திகளும் கைவரப் பெற்ற சிவயோகிகளாகிய சித்தர்கள் பெற்ற மரணமிலாப் பெருவாழ்வாகிய இறவாப் பெருநிலையினைப் பெறுதற்குரிய நெறி முறையினையும் அந் நெறியாற் பெறுதற்குரிய பயனையும்,

பெற்றார் உலகிற் பிறியாப் பெருநெறிபெற்றார் உலகிற் பிறவாப் பெரும் பயன்

(திருமந்திரம் – 132)

எனவும்

ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரித்துக்காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லைகாற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக்கூற்றை யுதைக்கும் குறியது வாமே. (திருமந்திரம் 571)

எனவும்

இக்கை வலக்கை இரண்டையும் மாற்றிதுதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்உறக்கத்தை நீக்கி உணரவல்லார்கட்குஇறக்கவும் வேண்டாம் இருக்கலுமாமே.

(திருமந்திரம் – 801)

எனவும்

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்சாவதுமில்லை சதகோடியூனே. (திருமந்திரம் – 803)

எனவும் வரும் திருமந்திரப் பாடல்களில் விரித்து அருளிச் செய்துள்ளமை காணலாம். இங்கு எடுத்துக் காட்டப் பெற்ற திருமந்திரப் பாடல்கள் மக்கள் மரணமிலாப் பெரு வாழ்வினைப் பெறுதற்கு இன்றியமையாத சாகாக் கல்வியின் விளக்கமாக அமைந்துள்ளமை அறிஞர்களால் ஊன்றி நோக்கற் பாலதாகும்.

சைவ சமயகுரவர் நால்வரும் தாம் பெற்றிருந்த ஊனுடம்பு இறைவன் திருவருளால் மாயா காரியமாகிய தன்மையினின்றும் நீங்கித் தூய ஒளியுடம்பாய் மாறிய நிலையில் வீடுபேற்றினை அடைந்தார்கள் என்பது அவர்களது வரலாறுகளால் இனிது புலனாகும். திருநல்லூர்ப் பெருமணப்பதியில் (ஆச்சாள்புரம் என வழக்கும் ஊரில்) நம்பியாண்டார் நம்பியின் திருமகளை மணந்த ஆளுடைய பிள்ளையார், தம் திருமணங்காண வந்தோர் அனைவரும் தாம் பெற்றுள்ள ஊனுடம்புடனே நல்லூர்ப் பெருமணத் திருக் கோயிலில் தோன்றிய இறைவனது அருட்பெருஞ் சோதியிற்புகத், தம் மனைவியாரோடும் அதனை வலம் வந்து அச்சோதியில் புகுகின்றவர், ஆன்மபோதம் ஒடுங்கிய நிலையில் இறைவனுடன் ஒன்றியுடனாகும் வீடுபேற்றினை அடைந்தார் என்ற செய்தியினை,

காதலியைக் கைப்பற்றிக்கொண்டு வலஞ்செய்தருளித்தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்நாதன்எழில் வளர்சோதி நண்ணியத னுட்புகுவார்போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி யுடனானார்.

(பெரிய – சம்பந்தர் – 1253)

எனவரும் திருப்பாடலில் சேக்கிழார் பெருமான் தெளிவாகக் குறித்துள்ளார்.

ஆண்ட – அரசாகிய அப்பரடிகளார் திருப்புகலூரில் உழவாரத் திருப்பணி செய்துகொண்டிருக்குங்கால் தம்முடைய மன முதலிய அகக் கருவிகள் உலகியற்பொருள் களிற்புறத்தே செல்லுதலை ஒழிந்து தம் வசம் அடங்கிய நிலையில் ‘எண்ணுகேன் என் சொல்லி யெண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால் எனத் தொடங்கும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிப் ‘புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று தம்முடைய உடம்பு நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி ஒளியுருப்பெற்ற நிலையில் திருப்புகலூர் அண்ணலார் சேவடிக்கீழ் அமர்ந்தருளினார் என்பதனை,

மண்முதலாம் உலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப்புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் எனப்புகன்றுநண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகிஅண்ணலார் சேவடிக் கீழ் ஆண்டவர சமர்ந்திருந்தார்.

(பெரிய – திருநாவு – 427)

எனவரும் திருப்பாடலில் அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம். இத்திருப்பாடலில் குறிக்கப்பட்ட திருநாவுக்கரசரது முத்தி நிலையைச் சிவக்கவி மணியவர்கள் பின்வருமாறு விளக்குவர்;

அஞ்ஞான்று தூயவெண்ணீறுதுதைந்த பொன் மேனி முதலியனவாக உலகர் கண்டு கொண்டிருந்த நாயனாரது திருவுருவம் என்னவாயிற்று எனின், கருப்பூரச் சோதி போலக் கரைந்து இறைவனது அருள்ஒளி நிறைவினுக்குள் கலந்ததென்க.

நந்தனார் : ‘உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால் என்றதும் (பெரிய – திருநாளைப்போவார் – 35)

மணிவாசகனார் – இத்திருவாசகத்துக்குப் பொருளாவர் இவரே என்று ஆனந்தப் பெருங் கூத்தரைக் கை காட்டித் தம் முருவங் காட்டாமல் மறைந்தார் என்றதும் இங்கு வைத்து நோக்கத்தக்கன. பூம்புகலூர் மேவிய புண்ணியனே உன்னடிக்கே போதுகின்றேன் என்று சொல்லிக் கொண்டு புகலூர்ப் பெருமானது அருள் நிறைவுக்குள் உலகர் காணாவகை (அப்பர்) உருக்கரத்து மறைந்தனர் என்பதாம் என்பது சிவக்கவிமணியவர்கள் தரும் விளக்கமாகும். இனி நம்பியாரூரராகிய சுந்தரரும் அவர்தம் தோழர் சேரமான் பெருமாளும் தம்முடம்பினைக் களையாமல் அவ்வுடம் புடனேயே திருக்கயிலாயத்தை யடைந்தார்கள் என்ற செய்தி முன்னர் விளக்கப்பெற்றது. அறிவினாற் சிவனேயாகிய மணிவாசகப் பெருந்தகையார் தாம் பாடிய திருவாசகத்துக்குப் பொருள் வினவிய தில்லை வாழ் அந்தணர் முதலிய அன்பர்களுக்கு, திருவாசகத்துக்குப் பொருளாவார் தில்லைச் சிற்றம்பலவராகிய இவரே எனக் கையாற்சுட்டித் தம்முடைய பசுகரணங்கள் எல்லாம் பதிகரணங் களாக மாறிய நிலையில் தமது உடம்புடன் தில்லைச் சிற்றம் பலமாகிய ஞானவெளியில் கலந்து மறைந்தருளினார் என்பதும், தில்லைப் பெருமான் திருவாதவூரடிகளைப் பாலுடன் விரவிய நீர்போலத் தமது திருவருள் விளக்கத்துள் அடக்கிக் கொண்டருளினார் என்பதும் அடிகளது முத்திப்பேறு பற்றிய வரலாறாகும். இச் செய்தி,

செய்காட்டும் கமுகடவித் தில்லையுளார் பொருள் கேட்கக்கைகாட்டித் தம்முருவங் காட்டாமல் மறைந்தாரைப்பைகாட்டும் பேரரவப் பணியுடையார் தமக்கன்புமெய்காட்டிப் பாலுடனே மேவியநீ ராக்கினார்

(திருவாதவூரடிகள் புராணம் திருவடி பெற்ற சருக்கம் – 29)

எனவரும் திருவாதவூரடிகள் புராணத்தால் நன்கு தெளியப்படும். எனவே சைவ சமய குரவர் நால்வரும் செம்பு இரத குளிகையினாற் செழும் பொன்னாக மாறியது போன்று தாம் இவ்வுலகிற் பெற்றிருந்த ஊனுடம்பு இறைவனது அருளால் தூய ஒளியுடம்பாய் மாறிய நிலையில் இறைவனது திருவருள் ஒளியிற்கலந்து வீடு பெற்றார்கள் என்பது நன்கு தெளியப்படும்.

சிவயோக நெறியில் ஒழுகியவர் ஔவையார். அவர் அருளிய குறள், வீடு பேற்று நெறியினை விளக்கும் முறையில் அமைந்த ஞான நூலாகும். துரிய நிலையில் நின்று சுடரொளிப் பிழம்பாகிய சோதிப் பொருளைக் காணலுற்றார்க்கு, இறம்பும் பிறப்பும் அற்ற பேரின்ப நிலை வந்து எய்தும் எனவும், சிவயோக நிலையில் நின்று ஐம்பொறி வழிகளையடைத்துச் செம்பொருளை இடைவிடாது தியானிக்கும் தவச்செல்வர்கள் நரைதிரையின்றித் துஞ்சலில்லா நல்லவுடம்புடன் திகழ்வார்கள் எனவும், அவர்களது உடம்புக்குச் சாவில்லை எனவும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தன.

துரியங்கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு. (218)

உரைசெயும் ஓசை உரைசெய் பவர்க்கு
நரைதிரை யில்லை நமன். (224)

வாக்கு மனமு மிறந்த பொருள்காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம். (226)

அஞ்சு புலனின் வழியறிந்தார் பின்னை
துஞ்சுவ தில்லை யுடம்பு. (232)

நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு. (233)

எனவரும் ஔவை குறளாகும்.

இங்ஙனம் யோகநெறியில் செம்பொருளைச் சிந்தித் துணரும் பயிற்சியினால் இறவாப் பெருநிலையை அடைவேத சாகாக் கல்வியாகும் என்பது,

சாகாதிருப்பதற்குத் தான் கற்ற கல்வியன்றோவாகான மெய்க்கல்வி வருத்த நீ கல்மனமே’

எனவரும் இடைக்காட்டுச் சித்தர் பாடலால் இனிது புலனாகும்.

பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டால்இறவாதிருக்க மருந்துண்டுகாண் இது எப்படியோஅறமார் புகழ்த்தில்லை யம்பல வாணர் அடிக்கமலம்மறவாதிருமனமே அதுதான் நன் மருந்துனக்கே.

எனப்பட்டினத்தாரும்,

இறவாமல் பிறவாமல் எனையாள் சற்குருவாகி

(திருப்புகழ் – 228)

மரணப்ரமாதம் நமக்கில்லையாம்’

(கந்தரலங்காரம் – 21)

என அருணகிரிநாதரும் அருளிய பொருளுரைகள் இறைவனரு ளால் இவ்வுலகில் மரணமிலாப் பெருவாழ்வினை யடைந்தவர்கள் பெற்ற அநுபவநிலையைப் புலப்படுத்துவனவாகும்.

திருமூலர் வழிமரபில் வந்த மௌனகுருவின் அருளுபதேசம் பெற்றுச் சித்தர் கணங்களைக் கண்டு வழிபடும் பேறு பெற்ற தாயுமானப் பெருந்தகையார், சித்தர் நெறியின்படி, முத்தியிலும் மூவகைத்தேக சித்திகள் உண்டு எனவும், அத்தகைய சித்தியினைப் பெற்ற சித்தர்கள் எண்ணற்றவர்களாய் உள்ளார்கள் எனவும் கூறும் முறையில் அமைந்தது

முக்தியிலும் தேகம் இசை மூவிதமாம் சித்தி பெற்றோர்எத்தனை பேர் என்றுரைப்ப தெந்தாய் பராபரமே’

(பராபரக்கண்ணி 209)

எனவரும் பராபரக் கண்ணியாகும். இதன்கண் மூவிதமாம் சித்தி என்பதற்கு, ‘அருவசித்தி, உருவசித்தி, அருவுருவ சித்தி ஆகிய மூன்று விதமாகிய சித்தி என விளக்கந்தருவர் அட்டாவதானம் பூவை கலியாண சுந்தரமுதலியார், மேற்குறித்த மூவகைச் சித்திகளுள்,

வெளியாய அருளில் விரவும் அன்பர் தேகம்ஒளியாய்ப் பிறங்கியதும் உண்டோ பராபரமே

(பராபரக்கண்ணி 190)

என அருவுருவ சித்தியின் இயல்பினையும்,

சத்தாகி நின்றோர் சடங்கள் இலிங்கமெனவைத்தாரும் உண்டோ! என் வாழ்வேபராபரமே

(பராபரக்கண்ணி 244)

என அருவுருவ சித்தியின் இயல்பினையும்,

சித்த நிருவிகற்பஞ் சேர்ந்தார் உடல் தீபம்வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும் பராபரமே

(பராபரக்கண்ணி 245)

என அருவசித்தியின் இயல்பினையும் தாயுமான அடிகள் விளக்கி யுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். இங்கு குறிப்பிடப் பெற்ற மூவகைச் சித்திகளுள் நம்பியாரூரர் முத்திநிலை உருவசித்தியையும், நாவுக்கரசர் முத்திநிலை அருவுருவசித்தி யினையும், மாணிக்க வாசகரது முத்திநிலை அருவசித்தியினையும் குறிக்கும் எனக் கூறுதல் மரபு.

அருட்பிரகாச வள்ளலார் உலகில் பரப்ப எண்ணிய சமரச சுத்த சன்மார்க்க நெறியானது சைவ சமயத்திற் கால்கொண்டு வளர்ந்தது என்பது திருவருட்பாவில் தோய்வுள்ள அனைவருக்கும் ஒத்த முடிவாகும்.

சைவ சமயமானது எல்லாப் பாசங்களையும் அறுத்து இறைவனுடைய திருவடியில் பிரிவற ஒன்றியிருத்தலாகிய ஈறிலாப் பேரின்பமாகிய முத்தி நெறியையும் உயிர்க்குயிராகிய இறைவனைச் சிவயோக நெறியில் நின்று வழிபட்டு எண்வகைச் சித்திகளும் கைவரப் பெற்று இப் பிறவியில் பெற்றுள்ள உடம்பினை அழியாத ஒளியுடம்பாமாற்றிக் கொண்டு உலகில் எல்லா இடங்களுக்கும் நினைத்த அளவிலே விரைந்து சென்று மன்னுயிர்களின் துன்பம் துடைத்து இன்பம் நல்குதற்குரிய சித்திநெறியையும் தன்பாற் கொண்டதாகும். எனவே தேவர், முனிவர், சித்தர், வேந்தர் முதலிய பல திறத்தவர்களும் இச்சமயத்தினை மேற்கொண்டு சித்தியையும், முத்தியையும் பெறுவாராயினர். இவ்வுண்மை,

விண்ணவர் இந்திரன் முதலோர் நாரதாதிவிளங்கு சப்தரிஷிகள் கன வீணைவல்லோர்எண்ணரிய சித்தர் மனுவாதி வேந்தர்இருக்காதி மறைமுனிவர் எல்லாம் இந்தக்கண்ணகல் ஞாலம் மதிக்கத்தானே உள்ளங்கையில் நெல்லிக்கனிபோலக் காட்சியாகத்திண்ணியநல் லறிவாலிச் சமயத்தன்றோசெப்பரிய சித்தி முத்தி சேர்ந்தாரென்றும்

(தாயுமா – ஆகா – சிதம்பரரகசியம் -8)

எனவரும் தாயுமான அடிகளார் வாழ்மொழியால் இனிது புலனாகும்.

உலகில் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று மன்னுயிர் களுக்கு நலஞ்செய்தலையே தமது வாழ்க்கை நோக்கமாகக் கொள்ளும் சித்தி நெறியாளர்க்கும், எய்த்தேன், நாயேன் இனி இங்கிருக்கில்லேன் இல்வாழ்க்கை வைத்தாய், வாங்காய் வானோரறியா, மலர்ச் சேவடியானே. (திருவாசகம்) என உலக வாழ்வினை வெறுத்து இறைவன் திருவடியையே விரும்பிய முத்தி நெறியார்க்கும் சைவ சமயமே சார்பாக உள்ளதென்பது மேற்குறித்த தாயுமானார் பாடலால் நன்கு விளங்கும்.

அக அனுபவமே உண்மை, உபயவகையாகிய அபர மார்க்கம் தேகபூஷணாதி காமிய சித்தியைத் தரும் உண்மை, நீக்கமற்ற சொரூபஞானத்தைத் தருமென்றறிக. மேற்படி உபாயங்களை ஒருவாறு தெரிவிப்பதும் சைவ சமயம் தவிர வேறு எவ்வித சமயங்களிலும் இல்லை. இந்த வேதாகமங்களில் மாத்திரம்தான் ஏமசித்தி, ஞான சித்தி முதலிய சித்திகளைச் சொல்லி இருக்கின்றது. மற்றைய எந்தச் சமயங்களிலும் மேற்படி சித்திகளையும், சாகாக் கல்வியையும், சொல்லவில்லை என வள்ளலார் கூறியிருப்பதும் இக்கருத்தை வலியுறுத்தல் காணலாம். சைவசமயத்துள் விரித்துரைக்கப்படும் முத்திநெறி, சித்திநெறி, என்னும் இருவகை நெறிகளுள், முத்திநெறியினைச் சாதனமாகவும், சித்திநெறியினை அதனாற் பெறத்தக்க முடிந்த பயனாகவும், மேற்கொண்டவர் அருட்பிரகாச வள்ளலார் ஆவர். இவ்வாறு தாம் மேற்கொள்ளு தற்கேற்ற உள்ளுணர்வைத் தூண்டியவர், அருட்பெருஞ்சோதி ஆண்டவரே என்பதனை,

முத்தி என்பது முன்னுறு சாதனம்,
அத்தக வென்ற அருட்பெருஞ்சோதி. (அகவல் 249-250)

எனவும்

சித்திஎன்பது நிலை சேர்ந்த அனுபவம்அத்திறம் என்ற என் அருட் பெருஞ்சோதி (அகவல் 251-252)

எனவும் வரும் தொடர்களில் வள்ளலார் குறித்துள்ளமை இங்கு நோக்கத் தகுவதாகும்.

தமிழ்ச் சான்றோர்களால் நெடுங்காலமாக மேற்கொள்ளப் பெற்று வரும் சன்மார்க்க நெறியினை இவ்வுலகில் என்றும் இறவாப் பெருநெறியாகிய சாகாக் கலையுடன் தொடர்புபடுத்தியதன் மூலம் உலகமக்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வை அறிவுறுத்த வந்த அருளாளர் வடலூர் வள்ளலார் எனக் கூறுதல் மிகவும் பொருத்தமுடையதாகும்.

திருமூலர் திருமந்திரத்திலும், ஆளுடைய பிள்ளையார் ஆளுடைய அரசு, ஆளுடைய நம்பி பாடியருளிய தேவாரத் திருமுறைகளிலும் சிறப்பாக ஆளுடைய அடிகளாகிய மாணிக்க வாசகர் அருளிய திருவாசகப் பனுவலிலும் தோய்ந்த உள்ளமுடைய இராமலிங்க அடிகளாருக்கு அப்பெருமக்கள் அறிவுறுத்திய சன்மார்க்க நெறியின் பயனாகிய சிவானுபவமும் அருளனுபவமும் உயிரிரக்கமும் இயல்பாகத் தோன்றுவன ஆயின. இவற்றின் பயனாக இவ்வுலக வாழ்வில் மக்கட்குலத்தார்க்கு உளவாகிய பசி, பிணி, பகை ஆகிய துன்பங்களையும், மக்களது அறியாமையினால் விலங்கு பறவை முதலிய சிற்றுயிர்கள்படும் துன்பங்களையும் அகற்றுதற்குரிய ஆற்றலைத் தமக்கு வழங்குமாறு இறைவனை வேண்டி நெஞ்சம் நெக்குருகிப் போற்றினார். உயிர் இரக்கமே உருவாகிய இராமலிங்க அடிகளார், உலக நலங்கருதி வேண்டிய விண்ணப்பத்தினை உளங் கொண்ட எல்லாம் வல்ல சிவபெருமான் அடிகளாருக்குக் கனவிலும், நனவிலும், ஒளி நினைவிலும் நாளும் தோன்றி முத்தி நெறியின் உண்மையை உணர்த்தி மன்னுயிர்க்கு நலஞ்செய்யும் சித்திநெறியை வழங்கி யருளினார் என்னும் செய்தி அடிகளார் பாடியருளிய திருவருட்பா விலுள்ள அகச்சான்றுகளால் வலியுறுத்தப் பெறுகிறது.

சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவுடைய மக்கள், உடம்பின் நிலையாமையையுணர்ந்து தம் உடம்பு மூவாமலும் சாவாமலு மிருத்தற்குரிய வழிமுறைகளை மேற்கொண்டொழுகுதல் வேண்டும். உடம்பு இவ்வுலகில் நிலை பெற வாழும் வன்மையைப் பெற்றால் அதன் பயனாக அவ்வுடம்பில் நிலைபெற்றுள்ள உயிரின் அறிவும் அன்பு முதலிய பண்புகளும் வளம் பெற்று நிறைவடைதல் இயலும். எனவே இவ்வுடம்பு பசிபிணி முதலியவற்றால் மெலிவடைந்து இறவாதபடி இதனை நிலைபெறச் செய்வது சன்மார்க்க நெறியினை மேற்கொண்ட சித்தர்களின் தலையாய கடமையாயிற்று.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞ் ஞானம் சேரவுமாட்டார்உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தேஉடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

(திருமந்திரம் – 472)

எனவரும் திருமூலர் வாய்மொழி உடம்பினை அழியாது காக்க வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்துவதாகும்.

எனவே சன்மார்க்க நெறியில் நின்றோர் கற்கத்தக்க கல்வி சாகாக்கலை என்பது நன்கு பெறப்படும். உடம்பு நெடுங்காலம் நிலை பெறுதற்கு ஐம்புலனடக்கம் இன்றியமையாததாகும்.

சாகாக்கல்வியை விரும்பும் சன்மார்க்கருக்கு எல்லா உயிர் களிடத்தும் எப்பொருள்களிலும் கலந்து விளங்குவது சிவபரம் பொருள் ஒன்றேயென எங்கும் சிவமாகக்காணும் ஒருமையுணர்வு மிகவும் இன்றியமையாததாகும். ஐம்புலன்களையும் அடக்கியாளும் உரன் என்னும் திண்மை வேண்டும். பிறர் இட்ட பணியைச் செய்யும் அடிமையுணர்வின் நீங்கிச் சீவசுந்தர முடையராய்த் தம் உழைப்பால் வரும் தூய உணவே அவர் உண்ணத் தக்க பொருந்திய உணவாகும். இவ்வுண்மையினை அறிவுறுத்துவது,

ஒன்றாகக் காண்பதே காட்சி; புலனைந்தும்வென்றான்தன் வீரமே வீரம் என்றானும்சாவாமற் கற்பதே கல்வி; தனைப்பிறர்ஏவாமல் உண்பதே ஊண். (ஔவையார் – தனிப்பாடல்)

எனவரும் ஔவையார் பாடலாகும்.

வள்ளலார் அறிவுறுத்திய சன்மார்க்க நெறியிலும் ஔவையார் பாடலில் கண்டவாறு நால்வகைக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அவையாவன (1) சாகாக் கல்வி (2) ஒன்றே சிவம் என அறியும் அறிவு, (3) ஐந்துமலங்களையும் வென்றவர்களது வல்லபம், (4) வேகாக்கால், போகாப்புனல், சாகாத்தலை ஆகியவற்றின் நுட்பத் தினை யுணர்ந்து, எல்லாவற்றையும் விளைவித்தலாகிய சித்தித் திறம் என்னும் நான்குமாகும். இந் நால்வகைப் பொருள்களையும் எல்லாம் வல்ல இறைவனே குருவாக எழுந்தருளி வந்து உபதேசித்து இதுவே நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபாகுமென வள்ளலார்க்கு அறிவுறுத்தி யருளினான். இச்செய்தியினை

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்தான் என அறிந்த அறிவேதகும் அறிவும் மலம் ஐந்தும் வென்றவல்லபமேதனித்த பூரண வல்லபம்வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்விளைய விளைவித்த தொழிலேமெய்த் தொழிலதாகும் இந்நான்கையும் ஒருங்கேவியந்தடைந் துலக மெல்லாம்மாகாதலுற எலாம் வல்ல சித்தாகி நிறைவானவரமே இன்பமாம்மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்மரபென்றுரைத்த குருவேதேகாதிமூன்றும் நான் தருமுன் அருள்செய்தெனைத்தேற்றி அருள் செய்த சிவமேசிற்சபையில் நடுநின்ற ஒன்றான கடவுளேதெய்வ நடராச பதியே.

(திருவருட்பா – 3678)

எனவரும் பாடலால் வள்ளலார் விளக்கியுள்ளமை காணலாம்.

சாகாத்தலை என்பது – சிவாக்கினி
வேகாக்கால் என்பது – காரணவாயு
போகாப்புனல் என்பது – காரணோதகம்

இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும் என்பதும் அடிகளார் தரும் பொருள் விளக்கம்.

நாம் பெற்ற உடம்பு இறவாதிருக்க வேண்டுமானால் சிவயோகத்தால் மூலாக்கினியை உள்ளிருந்தெழுப்பி உள்ளே மதி மண்டபத்தின் அமுதம் உருகி ஒழுக அதனைப் பருகி, குண்டலினி சத்தியாகிய அம்மையால் வளர்க்கப் பட்டு நரை திரையின்றி வளரும் அழியாத உடம்பினைப் பெறுதலே சாகாக் கல்வி எனப்படும்.

இன்னம் பிறப்பதற்கிடமெல்லில் இவ்வுடலம்இறவாதிருப்ப மூலத்தெழுமங்கி அமிர்தொழுக மதி மண்டலத்திலுறஎன்னம்மை குண்டலினிபால்பின்னம் பிறக்காது சேயென வளர்ந்திடப்பேயேனை நல்க வேண்டும் (தாயு-சச்சிதா -9)

எனவும்

கால்பிடித்து மூலக்கனலை மதிமண்டலத்தின்மெலெழுப்பில் தேகம் விழுமோ பராபரமே (-தாயு பராப – 156)

எனவும்

வரும் தாயுமானார் வாய்மொழிகள் மேற்குறித்த சாகாக் கல்வியின் பயனை விரித்துரைப்பனவாகும்.

மதிமண்டலத்தமுதம் வாயார உண்டே (திருவருட் – 3832)

இந்தார் அருளமுதம் யானருத்தல் (திருவருட் 3833)

சாகா அருளமுதம் நான் அருந்தி(திருவருட் – 3834)

அருளோங்கு தண்ணமுதம்(திருவருட் – 3835)

வானோர்க்கினிதெனவே மாமறைகள்சாற்றுகின்ற ஞானோதய அமுதம் (திருவருட். 3836)

எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளும்சொல் நல்லார் அமுதமது (திருவருட் 3837)

ஏழ்நிலைக்கு மேற்பால் இருக்கின்றதண்ணமுதம் (திருவருட். 3838)

ஈன உலகத்திடர் நீங்கி இன்புறச்செய்ஞான அமுதம்(திருவருட் 3839)

திரையோதசத்தே திகழ்கின்ற ஒன்றேவரையோது தண்ணமுதம் (திருவருட் 3840)

சோதிமலை வீட்டில் தூயதிரு அமுதம் (திருவருட். 3841)

இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே
விது அமுதொடு சிவ அமுதமும் அளித்தேமேனிலைக் கேற்றிய மெய்ந்நிலைச் சுடரேபொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே!
புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தேசதுமறை முடிகளின் முடியுறு சிவமேதனிநட ராசஎன் சற்குரு மணியே! (திருவருட் – 3693)

எனவரும் வள்ளலார் வாய்மொழிகள் தாயுமானவர் பாடலிற் குறிக்கப்பட்ட மதியமுதத்தின் இயல்பினை விளக்குவதோடு அதற்கு மேலான சிவ அமுதத்தின் சிறப்பினையும் விளக்குதல் அறிந்தின்புறத் தக்கதாகும்.

உலக மக்களில் கற்றார் கல்லாதார் ஆகிய எல்லோரும் ஊழ்வயத்தால் மரணமுறுதல் கண்டு ஆற்றாவள்ளலார், சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவினராகிய மக்கள் நோயற்ற வாழ்வும், நிறைந்த பேரறிவும் உடையவராய்த் தாம் இறைவன்பால் பெற்ற சித்தி நெறியின் ஆற்றல் கொண்டு இறவாமல் பிறவாமல் என்றும் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்வதற்குரிய சாகாக் கல்வியினைச் சன்மார்க்க நெறியில் நின்று பரப்புதலையே தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டருளினார் என்பது அடிகள் பாடியருளிய திருவருட்பாப் பாடல்களினால் நன்கு புலனாகிறது.

நோயுற்றாரையும், இறந்தாரையும் கண்டு ஆற்றாத கௌதம புத்தர் இரக்க உணர்வுடையராய் மக்களது துன்பம் துடைத்தற்குரிய வழிமுறைகளைக் காணுதல் வேண்டித் தமது அரச பதவியை ஒதுக்கித் துறவு பூண்டாரென்பது நம் நாட்டின் பழைய வரலாறாகும். புத்தர் பெருமானைப் போலவே நோய்களினாலும், சாதலினாலும் மக்கள் படும் துயரத்தை மாற்றத் திருவுளங் கொண்ட இராமலிங்க வள்ளலார் எவ்வுயிர்க்குஞ் சார்பாய் அன்பலத்திலே அருள் நடம் புரியும் செம்பொருளாகிய இறைவனது திருவருளைப் பெற்று அரியவற்றையெல்லாம் எளிதில் செய்து முடிக்கும் சித்தித் திறமுடையராய் உறக்கத்திலும், சாவிலும் தோய்ந்து கிடக்கின்ற மக்களை விழித்தெழச் செய்து மரணமிலாப் பெருவாழ்வில் வாழும் நெறிமுறைகளை அறிவுறுத்தியருளினமை சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த புதிய வரலாறாகும்.

உயிர்க்குயிராகிய முழுமுதற் பொருளை உள்ளம் உருகி வழிபட்டால் எல்லாச் சித்திகளையும் பெற்று எல்லா உயிர்களுக்கும் நன்மைதரும் அரிய செயல்களை எளிதிற் செய்து முடிக்கலாம் என வள்ளலார் இறைவன் அருளால் பெற்ற சித்தித் திறத்தை மக்கள் எல்லோரும் பெறுதல் வேண்டும் எனத் தம்மேல் ஆணையிட்டுக் கூறும் முறையில் அமைந்தது,

எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தேஎல்லாம் வல்லான் றனையே ஏத்து. (திருவருட்பா – 3267)

எனவரும் வள்ளலார் வாய்மொழியாகும்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவன் இவ் ஒரு பிறவியிலேயே தம்மைப் படிப்படியாகத் திருத்தச் சன்மார்க்க நெறியில் உயர்த்தி இறவா இன்பப் பெருவாழ்வு பெறுதற்குரிய தேக மாற்றத்தையும் சித்தித்திறங்களையும் அன்பு, அருள், இன்ப அநுபவங்களையும் அருளிய செய்தியை அருட்பெருஞ்சோதி வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பப் பகுதியில் விரித்து விளக்கியுள்ளார்.

உலகியற்கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என்னறிவை ஓர் அணுத்துணையும் பற்று விக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டும் என்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் சுத்த சன்மார்க்கத் தனிநெறி யொன்றையே பற்றுவித்து எக்காலத்திலும் நாசமடையாத சுத்ததேகம், பிரணவ தேகம் ஞானதேகம் என்னும் சாகாக் கலானுபவ தேகங்களும், தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப் பெருவல்லபமும், கடவுள் ஒருவரேயென்றறிகின்றவுண்மை ஞானமும், தரும சித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப் பதற்குத் திருவுளங் கொண்டு அருட்பெருஞ் சோதியாகி நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை யறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைக் காட்சிகளைக் காட்டு வித்தும் நான் எவ்விதத்திலும் செய்வதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும் நான் எவ்விதத்தும் அடைவதற்கரிய உண்மைப் பெரு நன்மைகளை அடைவித்தும், நான் எவ்விதத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது அகத்திலும், புறத்திலும் இடை விடாது காத்தருளியெனது உள்ளத்திலிருந்து உயிரிற்கலந்து பெருந்தயவாற் றிரு நடஞ்செய்வித் தருளுகின்றீர் என அருட் பெருஞ்சோதி ஆண்டவரை நோக்கி வள்ளலார் கூறியற இப் பெருவிண்ணப்பத்தில் இறைவன் தமது ஊன் உடம்பினைச் சுத்ததேகம், பிரணவதேகம், ஞானதேகங்களாக முறையே மாற்றி, தத்துவங்கள் எல்லாவற்றையும் தன் சுதந்திரத்தால் நடத்துகின்ற வல்லபத்தையும், கடவுள் ஒருவரே என்ற உண்மை ஞானத்தையும் கரும சித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளையும் அவற்றால் அடைதற்குரிய உண்மைப் பேரனுபவங்களையும் வழங்கியருளிய அருள் திறத்தினை நம்மனோர் உணர்ந்து தெளியும்படி விரித்து விளக்கியுள்ளமை காணலாம்.

காற்றாலே புவியாலே ககனமத னாலேகனலாலே புனலாலே கதிராதி யாலேகூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலேகோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்களாலேவேற்றாலே யெஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்மெய்யளிக்கவேண்டு மென்றேன் விரைந்தளித் தான் எனக்கேஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்எந்தையருட் பெருஞ்சோதி யிறைவனைச்சார்வீரே

(திருவருட்பா – 5450)

ஆராலும் அறிந்து கொளற்கரிய பெரும் பொருளேஅம்மே என் அப்பா, என் ஐயா, என் அரசேகாராலும் கனலாலும் காற்றாலும் ககனக்கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்படுதலிலாத் தனி வடிவம் எனக்களித்த பதியேசீராலும், குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞானசித்திபுரத் தமுதே என்நித்திரை தீர்ந்துதவே.

(திருவருட்பா – 4636)

மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும்வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்துபண்புற என் அகம்புறமும் விளங்குகின்ற பதியேஉன்னுகின்ற தோறும் எனக்குள்ளம் எலாம் இனித்தேஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப் பேர்ஒளியேமின்னுகின்ற மணிமன்றில் விளங்கு நடத்தரசேமெய்யும் அணிந்தருள்வோய் என் பொய்யும் அணித்தருளே

(திருவருட்பா – 4150)

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கிநிற்கஞான அமுதெனக்கு நல்கியதே வானப்பொருட்பெருஞ் சோதி பொதுவில் விளங்கும்அருட்பெருஞ் சோதியது. (4823)

சுத்த வடிவும், சுகவடிவும் ஓங்காரநித்த வடிவும் நிறைந்தோங்கு சித்தெனுமோர்ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்தானவிளை யாட்டியற்றத் தான். (5503)

நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்நானே அருட்சித்தி நாடடைந்தேன் நானேஅழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்இழியாமல் ஆடுகின்றேன் இங்கு. (513)

கூகாஎன அடுத்தோர் கூடிஅழாத வண்ணம்சாகா வரம்எனக்கே தந்திட்டான் ஏகாவனேகா எனமறைகள் ஏத்தும்சிற் றம்பலத்தான்மாகா தலனாய் மகிழ்ந்து. (5510)

உலகமெல்லாம் போற்ற ஒளிவடிவனாகிஇலக அருள் செய்தான் இசைந்தே திலகன்எனநானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்தானே எனக்குத் தனித்து. (5391)

விரைந்து விரைந்து விரைந்து படிகடந்தேன்மேற்பால் அமுதம் வியந்துண்டேன்கரைந்து கரைந்து மனம் உருகக்கண்ணீர் பெருகக் கருத்தயர்ந்தேவிரைந்து ஞான மணம் பொங்கமணி மன்றரசைக் கண்டு கொண்டேன்திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும்செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே. (5482)

எனவரும் வள்ளலார் வாய்மொழிகள் அவர் இறைவரரு ளால் பெற்ற இறவாப் பெருநிலையின் இயல்பினை இனிது புலப்படுத்தல் காணலாம். இராமலிங்க வள்ளலார் தம் இளமைப் பருவத்திலேயே ஆளுடைய பிள்ளையாரைக் குருவாகக் கொண்டு திருவருள் ஞானம் பெற்றவரென்பது,

உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும்உற்றிலாச் சிறிய ஓர் பருவத்திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில்ஏற்றவுந் தரமிலா மையினான்விலகுறுங் காலத்தடிக்கடி ஏற விடுத்துப்பின்விலகுறா தளித்தாய்திலக நற்காழி ஞானசம்பந்தத் தெள்ளமுதாம் சிவகுருவே.

(திருவருட்பா. 3226)

எனவரும் பாடலால் விளங்கும்.

தாம் உலகியல் உணர்வு சிறிதும் பெற்றிராத இளம் பருவத்திலே தமக்குக் குருவாகிய சம்பந்தப் பிள்ளையார் தம் உள்ளத்தி லிருந்து தம்மை அருள் நெறியில் ஒழுகப் பணித்ததும் தமக்குப் போதிய பக்குவ மில்லாமையால் அந்நெறியில் விலக நேர்ந்தபோது விலகாதபடி அடிக்கடி உடனிருந்து நன்னெறிப் படுத்தியதும் ஆகிய செய்திகளை வள்ளலார் இப்பாடலில் குறித்துள்ளமை காணலாம்.

இறைவன் அருளால் உயிர்கள் பெறுதற்குரிய அனுபவம் உயிர் அனுபவம், அருளனுபவம், சிவஅனுபவம் என மூன்று வகைப்படும் என்றும், இம்மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர் புடையன வென்றும் ஞானசம்பந்தப் பிள்ளையார் வள்ளலார் உள்ளத்திலிருந்து அறிவுறுத்தி யருளினார் என்னும் இச்செய்தி,

உயிரனுபவம் உற்றிடில் அதனிடத்தேஓங்கரு ளனுபவம் உற்றிடும் அச்செயிரில் நல் அநுபவத்திலே சுத்தசிவவனுபவம் உறும் என்றாய்பயிலுமூவாண்டில் சிவைதரு ஞானப்பால் மகிழ்ந்துண்டு மெய்ந்நெறியாம்பயிர் தழைத்துறவைத் தருளிய ஞானசம்பந்தன் என்றோங்கு சற்குருவே. (3227)

எனவரும் பாடலால் புலனாகும்.

தத்துவப்படிகளை முறையே ஏறிக் கடந்து தத்துவங் கடந்த மேல் நிலையாகிய தூய நாதமாம் இடத்திலே சார்ந்ததன் வண்ணமா மியல்பினை உடைய ஆன்மாவாகிய நினது இயல்பினை நீ என்னும் உணர்வின்றிப் பொருந்தி நுகர்தல் உயிரனுபவமாகும் என்று இவ்வளவு வெளிப்படையாக ஆன்மாவாகிய எனது இயல்பினை என்னிடத்தே யிருந்தபடி விளக்கி என்னை எனக்குரிய அநுபவப் பொருளாக அளித்தனையல்லவா? மூவாண்டில் உமையம்மையார் அளித்த ஞானப்பாலைப் பருகி மெய்நெறியை விளக்கிய ஞானசம்பந்தன் என்னும் உயர்வுடைய குருவே எனப்போற்றும் நிலையிலமைந்தது;

தத்துவநிலைகள் தனித்தனி ஏறித்தனிப்பர நாதமாந் தலத்தேஒத்ததன்மயமாம் நின்னை நீயின்றிஉற்றிடல் உயிரனுபவம் என்றித்துணை வெளியில் என்னை என்னிடத்தேஇருந்த வாறளித்தனையன்றோசித்தநற்காழி ஞான சம்பந்தச்செல்வமே எனது சற்குருவே (3228)

எனவரும் திருப்பாடலாகும்.

ஒப்பற்ற மேலான தூயநாத வெளியின் மேலே நினது உயிரியல்பை அருளின் வண்ணமாக்கிப் பிறவாற்றால் துளக்க மின்றி எக்காலத்து முள்ளதாய்த் தோன்றி மேலான பரம் பொரு ளின் உள்ளும் புறமுமாகி இனிமையே விளங்க ஒருவாற்றாலும் வெளிப்படுத்த வொண்ணாத இயல்புடையதாக இருந்ததே அருளனுபவமாகு மென்று அடியேனுக்கு அறிவுறுத் தருளினாய் ஞான சம்பந்தன் என்னும் குருமணியே! எனப் போற்றுமுகமாக அருளனுபவத்தின் இயல்பினை விரித்துரைப்பது,

தனிப்பரநாத வெளியின் மேல்நினதுதன்மயம் தன்மயமாக்கிபனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப்பரம்பரத் துட்புறமாகிஇனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய்இருந்ததே அருளனுபவம் என்றனக்கருள் புரிந்தாய் ஞான சம்பந்தன்என்னும் என் சற்குரு மணியே. (3229)

எனவரும் திருவருட்பாவாகும்.

என்றும் அழிவின்றி உள்ளதாய் விளங்கும் ஞானப் பெரு வெளியின் மேலே என்றும் உள்ள பொருளாய் உலகுயிர்கள் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளதுவாய், எப்பொருட்கும் நடுவாய் ஆன்மாவாகிய எனக்கு உரிமை யுடையதாய் நானேயாய்க் கலந்திருப்பதாய் என்னைத் தனக்கு அடிமையாகவுடையதாய், உயிர் உணர்வினால் சுட்டிக் கூறுதற்கரிய சித்தாகிய சத்துப் பொருளாய் இன்ன தன்மைய தென்று வெளியிட்டுச் சொல்ல வொண்ணாத நிலையில் அப்பாலுக் கப்பாலதாய்த் தூய வெட்ட வெளியில் விளங்கும் சிவ பரம் பொருளோடு இரண்டறக் கலந்து இன்புறுவதே சிவ அனுபவம் ஆகுமென்று யான் உள்ளங் கொள்ள அவ்வநுபவத்தைத்தந்தருருளிய உயர்வற உயர்ந்த குருவே என்று ஞானசம்பந்தப் பிள்ளையாரை அழைத்துப் போற்றும் முறையில் அமைந்தது.

உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளியில்உள்ளதாய் முற்றும் உள்ளதுவாய்நள்ளதாய் எனதாய் நானதாய்த் தனதாய்நவிற்றருந் தானதாய் இன்னவிள்ளொணா அப்பால் இப்படிக்கப்பால்பெருவெளிசிவ அனுபவம் என்றுள்ளுற அளித்த ஞான சம்பந்தஉத்தம சுத்த சற்குருவே! (3230)

எனவரும் திருப்பாடலாகும்.

இச்சிவானுபவத்தின் இயல்பினை விளங்க விரித்துரைப்பதாக அமைந்தது,

தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்றசான்றோர் தம் உள்ளம் தணவாதாய் மான்றமலத்தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் தருவொழிந்துவாக்கொழிந்து மாணா மனமொழிந்து ஏக்கமுறவாய்க்கும் சுகமொழிந்து மண்ணொழிந்து விண்ணொழிந்துசாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து நீக்கொழிந்துநானுமொழியா தொழிந்து ஞான மொழியா தொழிந்துதானு மொழியா மற் றானொழிந்து மோனநிலைநிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய்நிற்கும் பரம நிருத்தனெவன்? (திருவரு…… 52 – 56)

என்னும் திருவருட்பாவில் உள்ள நெஞ்சறிவுறுதல் பகுதியாகும்.

உயிர்கட்கு மலப்பிணிப்பினை அகற்றிப் பேரின்பம் நல்கி யருளும்சிவமும், அவ்வின்பத்தினை நுகரும் ஆன்மாவும், நுகர்தற் கருவியாகிய உயிர் அறிவும் தனித்து வெளிப்பட்டுத் தோன்றுதலன்றி நுகர்ச்சியளவில் ஓர் அளவு புலப்பட அமைந்ததே சிவானுபவ மென்னும் உண்மை இத்தொடரிற் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம்.

மேற்குறித்த மூவகை யனுபவங்களுள் முடிந்த அநுபவ மாகிய சிவானுபவத்திற்குப் படிநிலையாயமைந்தன, அருளனு பவமும், உயிரனுபவமுமாகும். ஆன்மாவின் அறிவிச்சை, செயல்களை மூடிமறைத்துள்ள ஆணவப் பிடிப்பை அகற்றுதற் குரிய சிவஞானமே அருளனுபவமாகும். அவ்வநுபவத்தை அடைதற்குரிய மருந்துணவாக அமைந்தது உயிரனுபவமாகும். இவ்வுண்மையை யான் எனது என்னும் இருவகைப் பற்றும் அறும்படி உறுதியாகப் பற்றிக் கொள்வாயாக; இதுவே சத்தியம் என அடியேனுக்குக் குருவாய் வந்து அறிவுறுத்தருளிய பெருங் கருணைத் திறத்தை எங்ஙனம் எடுத்துரைக்க வல்லேன் இறைவனால் அளிக்கப் பெற்ற முத்துச்சிவிகையில் ஏறி அமர்ந்து அருளாட்சி புரிந்த எனது தலைவனே! என ஞானசம்பந்தப் பிள்ளையாரைப் போற்றுவதாக அமைந்தது,

பொத்தியமூ மலப்பிணி தவிர்க்கும்பொருள் அருளனுபவம் அதற்குப்பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப்பற்றறப் பற்றுதி இதுவேசத்தியம் என என்தனக்கு அருள்புரிந்ததனிப் பெருங்கருணை என் புகல்வேன்முத்தியற் சிவிகை இவர்ந்தருள் நெறியில்முதலர சியற்றிய துரையே! (3231)

எனவரும் திருவருட்பாவாகும்.

மேற்குறித்த வண்ணம் திருஞானசம்பந்தப் பெருமான் குருவாய்த் தோன்றி வள்ளலாருக்கு அறிவுறுத் தருளிய உயிரனுபவம், அருளனுபவம், சிவஅனுபவம் ஆகிய மூவகை அனுபவங்களும் ஒருங்கே பெற்ற செம்புலச் செல்வர் மாணிக்க வாசகர் என்பதனை வள்ளலார் உள்ளவாறு உணரப் பெற்றார். வான்கலந்த மாணிக்கவாசகர் பெற்ற பேரின்ப நிலையினையே தமக்குரிய சித்தி நிலையாகப் பெறுதல் வேண்டும் என விரும்பியவர் வடலூர் வள்ளலார். இம்மூவகை அனுபவங்களையும் வழங்கும் திருவருளிலக்கியமாகிய திருவாசகத்தை இடைவிடாது ஓதி நெஞ்சம் நெக்குருகினார். திருவாதவூரடிகள் திருவாய் மலர்ந் தருளிய திருவண்டப் பகுதித் திருவகவலைப் பல முறையும் ஓதி அதன் பொருளை மணிவாசகராகிய குருவருளால் நன்குணரப் பெற்றார். அதன் பயனாக வள்ளலார் உள்ளத்தே தோன்றி வளர்ந்த திருவருட் கல்வியே மரணமிலாப் பெருவாழ்வை நல்கும் சாகாக்கலை எனக்கருத வேண்டியுள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் உலகப் பெரும் பரப்பின் திரட்சிகளாகிய அண்டங்களெல்லாம் இல்நுழை கதிராகிய வெயில் ஒளியில் விளங்கித் தோன்றும் நுண்ணிய அணுக்களைப் போன்று மிகச் சிறியனவாகத் தோன்றத் தான் அவற்றினும் மிகமிகப் பெரும் பொருளாகி, எல்லா அண்டங்களுக்கும் அப்பாற்பட்டு விளங்கு தலாகிய பருமை நிலையினையும் உயிர்க்குயிராய் உள் நின்று எவ்வகைப் பொருள்களையும் ஊடுருவி இயக்கி அருளும் நுண்மை நிலையினையும் ஒருங்குடையவன். மேற்குறித்த இறை இயல்பினை அவன் திருவருளாலே உணரப் பெற்ற மணிவாசகப் பெருமான் அம்முதல்வனது பருமையும் நுண்மையுமாகிய இருவகை நிலையினையும் வியந்து போற்றுவதாக அமைந்தது, திருவண்டப் பகுதி என்னும் திரு அகவலாகும். இது அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம் எனத் தொடங்கி அண்டங்களின் உள்ளும், புறமும் திகழும் இறைவனது பேராற்றலை விரித்துக் கூறுவதாதலின் திருவண்டப்பகுதி என வழங்கப் பெறுவதாயிற்று. இறைவன் செய்தருளும் ஐந்தொழில்களில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் என்னும் நான்கினைப் பற்றிப் பொதுவாகவும், இறைவன் தன்பால் அன்புடைய அடியார்கட்கு அருளுதலாகிய பேரின்ப நிலையினைக் குறித்துச் சிறப்பாகவும் தெரிந்து கொள்ளுதற்கேற்ற அரும் பொருள்கள் இதன்கண் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. சொற்பதங் கடந்த தொல்லோனான இறைவன், தம் பொருட்டுக் குருவாக எழுந்தருளி, அழியும் நிலைமைத்தாகிய ஊன் உடம்பை ஒழியச் செய்து அன்பினால் கசிந்து அருள் ஊற்றெடுக்கும் நிலைத்த யாக்கையினைத் தந்தருளிய திறத்தையும், மறையோர் கோலம் காட்டியருளிய குருவின் அருளுபதேசத்தால் தாம் அன்பும் தூரப் பெற்ற திறத்தையும், அந்நிலையில் இறைவன் அருளால் பெற்ற பேரின்பம், தாம் உடம்போடிருந்து பொறுத்தற் கியலாதபடி தமது அங்கங்களையெல்லாம் கொம்புத்தேன் கொண்டு உருவாக்கினன் என்று சொல்லுமாறு முழுவதும் தம்மைத் தன்னகத்தே அகத்தில் இயல்பினதாகிய உள்ளத்தைக் கொண்டு ஓர் உவத்தைச் செய்தாற் போன்று இன்பம் ஊற்றெடுத்துப் பாயும் உடம்பினைத் தமக்கு அருளிய இறைவன் கற்கண்டினை யொத்துச் சுவைதரும் விளாங்கனியை அப்படியே விழுங்கிய யானை போன்று உலக முள்ளளவும் தாமும் நிலை பெற்றிருக்குமாறு செய்தருளிய திறத்தினையும் விரித்துரைப்பதாக அமைந்தது,

காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்கநச்சர வாட்டிய நம்பன் போற்றிபிச்செமை யேற்றிய பெரியோன் போற்றிநீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசைநடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்நிற்பன நிறீஇச்சொற்பதங் கடந்த தொல்லோன்உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும்ஒழிவற நிறைந்து மேவிய பெருமைஇன்றெனக் கெளிவந் தருளிஅழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்இன்றென;க கெளிவந் திருந்தனன் போற்றிஅளிதரும் ஆக்கை செய்தோன் போற்றிஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றிஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத்திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்துற்றவர் வருந்த உரைப்பவர்க் கொளித்தும்மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும்இத்தந்திரத்திற் காண்டு மென்றிருந்தோர்க்கத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்முனிவற நோக்கி நனிவரக் கௌவிஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்துவாள்நுதற் பெண்ணென ஒளித்துஞ் சேண்வயின்ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்துற்றவை துறந்த வெற்றுயி ராக்கைஅருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலின்தாள்தளை யிடுமின்சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்துந்தன்னே ரில்லோன் தானேயான தன்மைஎன்னே ரனையோர் கேட்க வந்தியம்பிஅறைகூவி ஆட் கொண்டருளிமறையோர் கோலங் காட்டி யருளலும்உளையா அன்பென் புருக வோலமிட்டலைகடற் றிரையின் ஆர்த்தார்த் தோங்கித்தலைதடு மாறா வீழ்ந்து புலண்டலறிப்பித்தரின் மயங்கி மத்தரின் மதித்துநாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங்கடக்களி றேற்றாத் தடப் பெரு மதத்தின்ஆற்றேனாக அவயவஞ் சுவைதருகோற்றேன் கொண்டு செய்தனன்ஏற்றா மூதூர் எழில் நகை யெரியின்வீழ்வித்தாங்கன்றருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில்ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்சொல்லுவ தறியேன் வாழி முறையோதரியேன் நாயேன் தானெனைச் செய்ததுதெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கருளிய தறியேன் பருகியு மாரேன்விழுங்கியும் ஒல்ல கில்லேன்செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்துவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்பவாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறுந்தேக்கிடச் செய்தனன், கொடியேன் ஊன்தழைகுரம்பை தோறும் நாயுட லகத்தேகுரம்பை கொண்டின் தேன்பாய்த்தி நிரம்பியஅற்புற மான அமுத தாரைகள்எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவதுள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்கள்ளு றாக்கை யமைத்தனன் ஒள்ளியகன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறைஎன்னையும் இருப்ப தாக்கினன், என்னிற்கருணை வான்தேன் கலக்கஅருளொடு பராவமு தாக்கினன்பிரமன் மாலறியாப் பெற்றியோனே.

(திருவாசகம். திரு அண்டப்பகுதி 105-182)

எனவரும் திருவண்டப் பகுதியாகும்.

இதன்கண் காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு, பிச்செமை ஏற்றிய பெரியோன் உளையா அன்பு என்புருக எனவரும் தொடர்களால் அன்புருவமும், அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில், ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன் அளிதரும்யாக்கை செய்தோன், கருணை வான்தேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன், எனவரும் தொடர்களால் அருளுருவமும், ஆற்றா இன்பம், அலர்ந்தலை செய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் கடக்களிறு ஏற்றாத் தடப் பெருமதத்தின் ஆற்றேனாக அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் வாக்கிறந் தமுத மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் அற்புதமான அமுததாரைகள் எற்புத்துளை தொறும் ஏற்றினன், அள்ளூறாக்கை யமைத்தனன் என்னும் தொடர்களால் இன்புருவமும் மணிவாசகப் பெருமான் பெற்றமையும், கன்னல் கனிதேர்களி றெனக் கடைமுறை என்னையும் இருப்பதாக்கினன் என்ற தொடரால், வாதவூரடிகள் மரணமிலாப் பெரு வாழ்வு பெற்றதிறமும் திருவண்டப்பகுதியாகிய இவ்வகவலில் தெளிய உணர்த்தப் பெற்றன என்பது இராமலிங்க வள்ளலார் துணிபாகும். இறைவன் திருவருளால் திருவண்டப் பகுதியின் தெளிந்தசாரமாகத் தாம் தெளிந்து உணர்ந்துகொண்ட இவ்வுண்மையினை,

உரு அண்டப் பெருமறை என்றுலகமெலாம் புகழ்கின்றதிரு அண்டப் பகுதிஎனும் திரு அகவல் வாய் மலர்ந்தகுரு என்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவே நீஇரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கியம் புதியே.

(திருவருட்பா – 2309)

மன்புருவநடு முதலாமனம் புதைத்து நெடுங்காலம்என்புருவாய் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்கஅன்புருவம் பெற் றதன்பின் அருளுருவம் அடைந்து பின்னும்இன்புருவம் ஆயினைநீ எழில் வாதவூர் இறையே.

(திருவருட்பா 3259)

எனவரும் திருப்பாடல்களில் திருவாதவூரடிகளாகிய குருவைத் தாம் வினவி உணர்ந்து கொண்ட நிலையில் அப்பெருமானை நோக்கி அன்புருவம், அருளுருவம் இன்புருவம் ஆகிய மூவகை உருவங் களையும் பெற்ற சிறப்பினை வியந்து போற்றிய திறம் இங்குக் கூர்ந்துணர்ந்து மகிழத்தக்கதாகும்.

வள்ளலார் இறைவனருளால் தாம் பெற்றனவாகக் கூறும் சுத்த தேகம், பிரணவதேகம், ஞானதேகம் ஆகிய மூவகை உடம்புகளின் தன்மையினை,

எளிய வாது செய்வாரெங்கள் ஈசனைஒளியை யுன்னி யுருகு மனத்தராய்த்தெளிய வோதிச் சிவாயநம வென்னுங்குளிகை யிட்டுப் பொன்னாக்குவன கூட்டையே.

(திருமந்திரம் – 2709)

எனவும்,

ஆமவரிற்சிவனாரருள் பெற்றுளோர்போமலந்தன்னாற் புகழ் விந்து நாதம் விட்டோமயமாகி யொடுங்கலி னின்மலந்தோமறு சுத்தா வவத்தைத் தொழிலே

(திருமந்திரம் 2233)

எனவும்,

ஞானிக்குக் காயம் சிவமே தனுவாம்ஞானிக்குக் காயம் உடம்பே யதுவாகும்மேனிற்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்மோனிக்குக் காயம் முப்பாழ் கெட்ட முத்தியே.

(திருமந்திரம் 2135)

எனவும் வரும் திருமந்திரப் பாடல்களால் திருமூலநாயனார் விளக்கியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.

இவ்வாறு இறைவனது திருவருட் சுதந்திரத்தை வேண்டி, அழியும் தன்மையதாய புலாலுடம்பினை மாற்றி அழியா வியல்பின தாய அருளுடம்பினைப் பெற்று உலக மக்கள் நெடுங்காலம் இவ்வுலகில் நிலைபெற்று வாழ்தல் வேண்டும் என்னும் ஆராத பெருவேட்கையுடன் இறைவனைப் போற்றிய அருளாளர் இராமலிங்க அடிகளாவார்.

நாம் பெற்றுள்ள பூத உடம்பு அழியும் தன்மையதாதலின் அதனை மாற்றி அன்பும், அருளும், இன்பும் உருவாகிய தூய நல்லுடம்பினை இறைவனருளால் பெற்று இவ்வுலகமுள்ளவும் இறைவனை அன்பினால் போற்றி ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செய்தலே இறைவனது திருவருளாற் கிடைத்தற்குரிய திருவருள் வாழ்வாகும்.

இங்ஙனம் பொல்லாப் புலாலுடம்பின் பசுகரங்களை யெல்லாம், பதிகரணங்களாக மாற்றி இறைவன் எழுந்தருளியமையால் பல்லுயிர்க்கும் அருள் சுரப்பதாகிய அன்புடைய அடியார்களது துய உடம்பின் நிலை பேற்றினையே அட்பிரகாச வள்ளலார் மரண மிலாப் பெருவாழ்வு எனக் குறித்தருளுகின்றார் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

மரணமிலாப் பெருவாழ்வாகிய இக்குறிக்கோளினை வற்புறுத்தும் நோக்குடனேயே சன்மார்க்கநெறி நிற்போரது நல்லுடம்பினைத் தீயிலிட் டெரிக்காமல் சமாதி செய்யும் முறையினை வள்ளலார் வற்புறுத்தியுள்ளமை இங்கு நோக்கத் தகுவதாகும்.

மக்கள் இறந்தவழி அவர்தம் உடம்பினைப் புதைத்தலும் எரித்தலும் ஆகிய இருவகை ஈமச்சடங்கு முறைகளும் சங்ககாலத் தமிழகத்தில் இருந்தன. இறந்தோர் உடலைப் பள்ளமாகிய இடங்களில் புதைத்தலும் அறவாற்றி மூத்த அறிவுடைய பெரியோர்கள், அரசர்கள் போரில் வெற்றிவிளைத்த தறுகண் மறவர்கள் ஆகியோர் உடம்பினை வேட்கோவரால் வனையப்பட்ட பெருஞ் சால்களாகியதாழியினாற்கவித்து மூடிச் சமாதிசெய்தலும் அக்கால வழக்கமாயிருந்தன. இச்செய்தி,

கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
…. …. …. …..
….
கொடிநுடங்கு யானை நெடுமாவளவன்தேவ ருலகம் எய்தின னாகலின்அன்னோற் கவிக்கும் கண்ணகன் தாழிவனைதல் வேட்டனை யாயின் எனையதூஉம்இருநிலந் திகிரியாப் பெருமலைமண்ணாவனைதல் ஒல்லுமோ நினக்கே (புறம் – 228)

எனவும்

ஈமத்தாழி அகலிதாக வனைமே (புறம் – 256)

எனவும் வரும் புறநானூற்றுப் பாடல்களால் இனிது விளங்கும். இவ்வாறு மக்களது உயிர்நீங்கிய உடம்பினை உள்ளே வைத்து மூடுதற்குரிய சால்கள் முதுமக்கள் தாழி என வழங்கப் பெற்றன. இத்தகைய தாழிகள் தென்னாட்டிற் பலவிடங்களிற் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. தமிழ் முனனோர்கள் இறந்தோர் உடம்பினைச் சுட்டெரித்தலின்றித் தாழியில் வைத்துப் புதைக்கும் பழக்கத் தினையும் கொண்டிருந்தார்கள் என்பது புதைபொருளாய்வினால் நன்கு புலனாகும்.

துறவிகளாகிய தவச் செல்வர்கள் இறந்த நிலையில் அவர்தம் உடம்பினைச் சமாதியில் வைத்து வழிபட்டுப் போற்றும் ஆரவாரமும் உலகியல் வாழ்வில் வாழ்ந்து உயிர்துறந்தோர் உடம்பினை அடக்கம் செய்யும் நிலையில் அவர்தம் சுற்றத்தார் அழுது புலம்பும் ஆரவாரமும் இடுகாட்டில் நிகழ்தலை,

துறவோர் இறந்த தொழுவிளிப்பூசலும்பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்

(மணிமேகலை 6 : 72, 73)

எனவரும் தொடரிற் சாத்தனார் குறித்துள்ளமை காணலாம். அரசர்கள் இறந்தால் அவர்தம் உடம்பினைச் சமாதி வைத்துக் கோயில் கட்டி வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. இவ்வுண்மை,

அரசர்க் கமைந்தன ஆயிரங் கோட்டம்

(மணிமேகலை 6-166)

எனவரும் மணிமேகலைத் தொடராலும், சோழமன்னர்களுக்கு அமைந்த சமாதிக் கோயில் களாலும் நன்கு புலனாகும். இத்தகைய சமாதிக் கோயில்கள் ‘பள்ளிப் படை’ என வழங்கப்பட்டுள்ளமை கல்வெட்டுக்களாற் புலனாகும்.

மெய்யுணர்வு பெற்ற பெரியோர்கள் உயிர்துறந்தால் அவர்தம் உடம்பினை எரித்தல் கூடாது என்றும் அவ்வுடம்பினைச் சிறந்த இடத்திற் புதைத்துச் சமாதி செய்தல் வேண்டும் என்றும், சிவஞானிகளாகிய அவர்தம் உடம்பினைத் தீயிலிட்டு எரித்தால் நாட்டு மக்கள் வெப்பு நோயினால் வருந்துவர் என்றும், அவர்தம் உடம்பினைப் புதையாது நாய் நரி தின்னும்படிப் புறக்கணித்தால் நாட்டில் போருண்டாகி நாட்டு மக்கள் அழிவர் என்றும், ஞானிகள் உடம்பில் தீப்பற்றி எரியுமானால் அது இறைவனுறையுந் திருகோயிலைத் தீயிட்டதனை ஒக்குமென்றும் மழையின்றி நாட்டிற் பஞ்முண்டாகுமென்றும் ஆகவே ஞானிகள் உடம்பினைப் பாதுகாத்துச் சமாதியில் வைத்து வழிபட்டால் நாடாள்வேந்தரும் குடிமக்களும் இறைவனது அருளால் இனிய நல்வாழ்வினைப் பெற்று மகிழ்வார்கள் என்றும் திருமூல நாயனார் தெளிவாக அறிவுறுத்தி யருள்கின்றார்.

அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்வெந்திடில் நாடெலாம் வெப்புத் தீயினில்நொந்தது, நாய்நரி நுகரின் நுண்செருவந்துநாய் நரிக்குண வாகும் வையமே

(திருமந்திரம் – 1910)

எண்ணிலா ஞானி யுடல் எரிதாவிடில்அண்ணல்தம் கோயில் அழலிட்டது ஒக்குமால்மண்ணின் மழைவிழா வையகம் பஞ்சமாம்எண்ணரு மன்னர் இழப்பர் அரசே

(திருமந்திரம் – 1911)

அந்தமில் ஞானி அருளை யடைந்தக்கால்அந்த வுடல்தான் குகைசெய் திருத்திடில்சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்அந்தமில் இன்ப அருள்பெறு வாரே

(திருமந்திரம் 1916)

எனவரும் திருமந்திரப் பாடல்கள் சிவஞானிகளது உடம்பினை எரியிலிடாது புதைத்துச் சமாதிவைத்துப் போற்றுதலின் இன்றியமையாமையினை வற்புறுத்துவனவாகும்.

இவ்வாறு சிவஞானிகளுக்கு வற்புறுத்திய சமாதிக் கிரியையைச் சன்மார்க்கநெறி நிற்போர் அனைவர்க்கும் உரிய கிரியையாக இராமலிங்க வள்ளலார் வற்புறுத்தியுள்ளார். இறைவனை நினைப்பவர் யாவராயிலும் அவர் தம் உள்ளத்தையும் உடம்பினையும் இறைவன் தனக்குரிய கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளான் என்பது;

நினைப்பவர்மனம் கோயிலாக்கொண்டவன் (தேவாரம் -5-2-1)

எனவும்,

இறைவனே நீயென் னுடலிடங்கொண்டாய் (திருவாசகம் – 392)

எனவும்,

வினைபடுமுடல் நீ புகுந்து நின்றமையால்

விழுமியவிமானமாயினதே (திருவிசைப்பா – 117)

எனவும் வரும் ஆன்றோர் அருளிச் செயல்களால் நன்கு புலனாம்.

எல்லோருடைய உள்ளங்களையும் இறைவன் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளான் என்னும் மெய்ம்மையினை உள்ள வாறுணர்ந்து வழிபடும் நெறி சன்மார்க்கமாதலின், அந்நெறியினைக் கடைப்பிடித் தொழுகுவோரது உடம்பினைத் தீயிலிட்டு எரித்தல் கூடாதென்பதும் புதைத்து அடக்கஞ் செய்தலே முறையென்பதும் அருட் பிரகாச வள்ளலார் அறிவுறுத்திய அறிவுரையாகும் இதனைச் சமாதிவற்புறுத்தல் என்னுந்தலைப்பில் அமைந்த பத்துப்பாடல்களில் வள்ளலார் விரித்துக் கூறியுள்ளமை காணலாம்.

ஆன்மா உயிரைவிட்டுப் போயிற்று என்பதனைத் தெளிவாக அறிந்து கொள்ளாத நிலையிலேயே மூச்சடங்கியவுடனே இறந்து போயினார் எனக்கொண்டு அவர்தம் உடம்பினைச் சுட்டெரிக்குந் தவறான நிகழ்ச்சியும் சிலவிடங்களில் நேர்ந்து விடுகின்றது, இறப்பு என்பது உறங்குவது போன்றது. உயிர்ப்படக்கி யோகநிலையில் இருப்போரது உடம்பு செத்தாருடம்பினைப் போலக் காணப் படுவதும் உண்டு. அஃது எவ்வா றாயினும் அன்புடையார் உடம்பினைச் சுட்டெரிப்பது பண்புடைமையாகாதென்பதும் உலகவாழ்க்கையில் மெய்ம்மை வுணர்ந்தோரது உடம்புக்கு மதிப் பளித்து அதனைத் தீக்கு இரையாக்காது சமாதிசெய்தலே அன் புடையவர் செயலாம் என்பதும் வள்ளலார் திருவுள்ளக் குறிப்பாகும்.

பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்திடுகின்றீர் பேயரே நீர்இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்மதித்தீரோ இரவில் தூங்கிமறந்தவரைத் தீ மூட்ட வல்லீரால்நும்மனத்தை வயிரம் ஆனசிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்ஏன் பிறந்து திரிகின்றீரே, (5608)

குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டது சுட்டால் அதுதான் கொலையாம் என்றேவணம்புதைக்க வேண்டும் என வாய்தடிக்கச்சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்பிணம் புதைக்கச் சம்மதியீர் பணம் புதைக்கச்சம்மதிக்கும் பேயரேநீர்எணம் புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்கஞ்சுவரே இழுதையீரே.

எனவரும் திருவருட்பாப் பாடல்களால் வள்ளலார் சமாதிக் கிரியையினை நன்கு வலியுறுத்தி யுள்ளமை அறியத்தகுவதாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *