
திருவருட்பாச் சிந்தனை
க. வெள்ளைவாரணனார்
8. சன்மார்க்க நெறி வளர்த்த தவச் செல்வர்
மெய், வாய், கண், மூக்கு, செவி யென்னும் ஐம்பொறிகளின் வழியாக உலக நுகர்ச்சிகளில் ஊற்றுணர்வு, சுவையுணர்வு, ஒளியுணர்வு, நாற்றவுணர்வு, ஓசையுணர்வு என்னும், ஐம்புல ஆசைகளிலும் தன்னை மறந்து தாழும் தன்மை மக்களது மனத்தியல் பாகும். இவ்வாறு உலக நுகர்பொருள்களில் ஈர்த்துச் செல்லும் ஐம்பொறி உணர்வுகளையும் அடக்கும் வன்மையின்றி ஐயுணர்வின் வழியே செல்லும் மனத்தினைத் திருத்தி அவ்வைந்தையும் அடக்கியாள வல்ல ஆற்றலை உயிர்கட்கு வழங்குதல் இறைவனது அருளியல்பாகும். நல்லொழுக்க நெறி நிற்பார்க்கு இன்றியமையாத புலனடக்கத்தையும் பொய்மையே பெருக்கும் பாசங்களின் நீக்கத்தையும் தந்து நல்வழிப்படுத்தற் பொருட்டு எல்லாம் வல்ல இறைவன் உயிர்க்குயிராய் உள் நின்றுணர்த்திய ஒழுக்க நெறியே உண்மையான சமய நெறியாம். இவ்வுண்மை.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடு வாழ்வார். (குறள் -6)
எனவரும் திருக்குறளால் அறிவுறுத்தப்பட்டது.
இங்கு பொறிவாயில் ஐந்தவித்தான் என இறைவனைக் குறித்தது, இறைவன் தனக்கு ஐம்பொறி வாயிலாக நிகழும் ஐம்புல ஆசைகளைத் தன் ஞானத்தால் அடக்கிவென்றான் என்ற கருத்திற் கூறியதன்று. இறைவனுக்கு ஞானமே திருமேனி யென்பது திருக்குறள் முதலதிகாரத்து இரண்டாம் குறளில் வாலறிவன் என்ற தொடரால் உணர்த்தப்பட்டது. ஐம்புல ஆசைகளால் உந்தப்பட்டு எத்தகைய பொருள்களையும் விரும்புதலும் வெறுத்தலுமாகிய தன்மை இறைவனுக்கு இல்லையென்பது, வேண்டுதல் வேண்டாமையிலான் (குறள்-4) என்பதனால் இவ்வதிகாரத்தில் முன்னமே அறிவுறுத்தப் பட்டது. எனவே ஐம்பொறிவாயிலாகச் செல்லும் ஐம்புலவுணர்வு இறைவனுக்கு இல்லாமையும் அவை இல்லையாகவே அவற்றை அடக்குதல் வேண்டாமையும் தானே பெறப்படும். அப்படியானால் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்ற தொடரின் பொருள்தான் யாது? என்ற வினா எழுதல் இயல்பு. விருப்பு வெறுப்புடைய உயிர்கள் ஐம்புல உணர்வுகளால் மயங்கி அவற்றை அடக்கும் வலியின்றி அல்லற்படும் துன்ப நிலையிலே அருளாளனாகிய இறைவன் ஐம்புலவுணர்வுகளையும் ஒருங்கே அடக்கியாளும் ஆற்றலைத் தந்து மெய்ம்மையான ஒழுக்க நெறியினை மக்களுக்கு அறிவுறுத்தி யருள்கின்றான் என்பதே இதன் பொருளாகும். ஐம்பொறிகளை அடக்க வல்ல பேராற்றல் இயல்பாகவே பாசங்களின் நீங்கிய இறைவனுக்கு அன்றி ஏனைய வுயிர்கட்கு இல்லை என்பதும், எனவே புலனுணர்வினராகிய மாந்தர்களால் வகுத்துரைக்கப் பெறும் நெறிகள் அவர்தம் விருப்பு வெறுப்புகளின் வழியமைந்த குறுகிய நெறிகளாவதன்றி எல்லாவுயிர்களும் இகலின்றிச் செல்லும் மெய்ம்மை வாய்ந்த பெருநெறியாக அமைதல் இயலாதென்பதும் இத்திருக்குறளால் அறிவுறுத்தப்படும் அரிய வுண்மைளாகும்.
வேண்டில் ஐம்புலன் என் வசமல்ல (திருமுறை -7-60-7)
எனவும்,
வறிதே நிலையாத விம் மண்ணுலகின்நரனாக வகுத்தனை நானிலையேன்பொவாயிலிவ் வைந்தினையுமவியப்பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே (திருமுறை -7-3-3)
எனவும் நம்பியாரூரர் அருளிய தேவாரத் தொடர்கள் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ எனவரும் திருக்குறட் பொருளைப் புலப்படுத்தி நிற்றல் காணலாம். ‘பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்’ என்ற தொடரை
பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் (2-42-1)
என விரித்துப் பொருள் கொள்வர் ஆளுடைய பிள்ளையார். எல்லாம் வல்ல இறைவனே உலகமக்கள் உய்தி பெறுதல் வேண்டி மெய்ந் நெறியாகிய ஒழுக்க நெறியினை வகுத்து அருளினான் என்பது,
மேவிய வெந் நரகத்தில் அழுந்தாமை நமக்குமெய்ந்நெறியைத் தான் காட்டும் வேத முதலானை (7-40-10)
எனவரும் சுந்தரர் வாய்மொழியால் நன்கு புலனாகும்.
இறைவனால் வகுத்தருளப் பெற்ற மெய்ந்நெறியாகிய இச்சமய நெறியினைத் திருநெறி எனவும், பெருநெறி எனவும் சன்மார்க்க மெனவும் திருமுறை ஆரியர்கள் தாம் அருளிய திருப்பாடல்களில் வழங்கியுள்ளமை இங்குக் குறிப்பிடத் தகுவதாகும்.
உயிர்கள் உய்தி பெறுதற் பொருட்டு இறைவனால் வகுத்தளிக்கப் பெற்ற ஒழுக்க நெறியே சமயம் ஆகும். உயிர்கள் தம் முயற்சியால் சென்றடைய வொண்ணாத வீடுபேற் றின்பமாகிய ‘திரு வினை வழங்கும் சிறப்புடைய தாகலின் இதனைத் திருநெறி’ யெனவும், சாதி மத வேறுபாடின்றி உலக மக்கள் எல்லோரும் அன்பினால் ஒருங்கு கூடிச் செல்லுதற்குரிய விரிவுடைய வழியாதலின் பெருநெறி எனவும், சத்து (உள்ளது) என்னும் முழுமுதற் பொருளாகிய இறைவன்பாற் கொண்டு செலுத்தும் நன்னெறியாதலின் சன்மார்க்க மெனவும் வழங்கப் பெறுவதாயிற்று. சத் + மார்க்கம் = சன்மார்க்க மெனத்திரிந்து வழங்குதல் தமிழ்மரபு. சத்து = உள்ளது – என்றது என்றும் மாறாதுள்ளதாகிய முழுமுதற் கடவுளை.
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. (திருக்குறள் – 357)
எனவரும் திருக்குறளில் எல்லாம் வல்ல இறைவனை உள்ளது என்ற சொல்லால் திருவள்ளுவர் குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். தத்தம் உணர்வு கொண்டு மக்களால் வகுத்துரைக்கப்படும் சமயங்கள் யாவும் அவரவர்தம் விருப்பு வெறுப்புகட்கேற்ப மாறுபடுதல் இயல்பு. வேண்டுதல் வேண்டாமை இல்லானாகிய இறைவனால் எல்லாவுயிர்களும் அன்பினால் ஒருங்கு கூடி உய்திபெறுதல் வேண்டுமென்னும் பொதுநோக்குடன் வகுத்தருளிய ஒழுக்கநெறியே உண்மை நெறியாகிய சன்மார்க்கமாகும்.
இறைவனை ஆண்டவனாகவும் உயிராகிய தன்னை அம் முதல்வனது அடிமையாகவும் எண்ணி அன்பினால் வழிபடும் நெறியினைத் தாச மார்க்கம் எனவும், எல்லாம் வல்ல ஆண்டவனைத் தந்தையாகவும் தன்னை அம்முதல்வனது மைந்தனாகவும் கருதி அன்பு செலுத்தும் நெறியினைச் சற்புத்திர மார்க்கமெனவும், இறைவனை ஆருயிர்த் தோழனாகக் கொண்டு வழிபடும் முறையினைச் சகமார்க்கமெனவும், இறைவனை ஆருயிர்க் காதலனாகவும், அவனது அருளார் இன்பத்தினை விரும்பி நிற்கும் ஆன்மாவாகிய தன்னைக் காதலியாகவும் கொண்டு போற்றும் முறையினைச் சன்மார்க்கமெனவும் வழங்குதல் சைவ சமய மரபு, இந்நெறிகள் நான்கினையும் முறையே, தொண்டு நெறி, மகன்மை நெறி, தோழமை நெறி, அகத்திணை நெறி எனத் தமிழில் வழங்குதல் ஏற்புடையதாகும். மேற் குறித்த நால்வகை மார்க்கங்களையும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பெயர்களால் வழங்குதலே பெரு வழக்கமாகும்.
சரியை முதலாக மேற் கூறப்பட்ட நால்வகை நெறிகளும், ஒன்றின் ஒன்று தொடர்புடையனவாய்ச் சத்தாகிய முழுமுதற் பொருளிடத்தே உயிர்களைச் சேர்ப்பிக்கும் நெறிகளாதலின் இந்நான்கினையுமே சன்மார்க்கமென்ற சொல்லால் வழங்குதல் திருமூல நாயனார், தாயுமானார் அருட்பிரகாச வள்ளலார் ஆகிய திருவருட் என்றோர் அனைவருக்கும் ஒத்த முடிபாகும்.
விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்அரும்பு மலர் காய் கனிபோல் அன்றோ பராபரமே. (தாயு-பா-157)
எனவரும் பாடலில் நால்வகை நெறிகளையும் மெய்ஞ்ஞானம் நான்கும் எனத் தாயுமான அடிகள் குறித்துள்ளமையால் ஞானத்தில் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்னும் நால்வகை நெறிகளையும் குறித்ததே சன்மார்க்கம் என்ற இச்சொல் என்பது நன்கு புலனாகும்.
இத்தகைய சன்மார்க்க நெறியானது எல்லாம் வல்ல சிவபெருமானால் உயிர்கள் உய்தற் பொருடடு வகுத்தருளிச் செய்யப்பட்டது என்றும், இறைவனே குருவாய் எழுந்தருளி முனிவர் பெருமக்களுக்கு அருளிச் செய்ய அவர்கள் வழியே ஆசிரியர் – மாணவர் என்னும் வழிமுறையில் நாட்டில் தொடர்ந்து நிலை பெற்று வருவதாதலின் இதனைக் குறிநெறி என்றும், சிவபரம் பொருளால் அருளிச் செய்யப் பெற்றமையின் சிவநெறி என்றும் வழங்குவர் திருமூலத்தேவர், இவ்வுண்மை,
சைவப் பெருமைத் தனிநாயகன் நந்திஉய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டுதெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்யவையத்துள் ளர்க்கு வகுத்து வைத்தானே. (திருமந். 1478)
எனவரும் திருமந்திரத்தால் புலனாதல் காணலாம்.
உயிர்களைச் சிவத்துடன் ஒன்றுமாறு உணர்த்தும் சிவ சமயத்தின் தனி முதல்வனாகிய இறைவன் ஆன்மாக்கள் பாசப் பிணிப்பினின்று விடுபட்டு உய்தி பெற வகுத்தருளிய உபதேச நெறியாகிய குருநெறி ஒன்றுள்ளது. அதுதான் சிவமாந்தன்மைப் பெருவாழ்வை நல்கும் சிவநெறியாகும். சன்மார்க்கமாகிய அதனைச் சேர்ந்து உய்திபெற உலகில் வாழ்வார்க்கு வகைபெற விளக்கி வைத்தருளினான் நந்தியாகிய இறைவன் என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும். சத் + மார்க்கம் என்னும் வடமொழித் தொடரில் சத் = என்றது உள்ளது; என்றது, எக்காலத்தும் மாறாது உள்ள முழு முதற் பொருளாகிய இறைவனை. மார்க்கம் – நெறி. இறைவன் அருளிய ஞான நன்னெறியாகிய இந்நெறி குருவழியாக உபதேச முறையிற் பெறுதற்குரியது என்பார்; உய்ய வகுத்த குருநெறி என்றார். சன்மார்க்கமாகிய சிவநெறி, வையத்து வாழ்வார் வானுறை யும் தெய்வத்துள் வைக்கப்படுதலாகிய சிவமாந்தன்மைப் பெரு வாழ்வைப் பெற்று இன்புறுதற் பொருட்டு இறைவனால் வகுத்தருளிச் செய்யப்பெற்றது என்பார், தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்துள்ளார்க்கு வகுத்து வைத்தானே என்றார் திருமூலர். ‘வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும். (50) எனவரும் திருக்குறள் இங்கு நினைத்தற்குரியது.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி எனத் திருவள்ளுவர் கூறிய ஒழுக்க நெறியினையே ‘குருநெறி’ எனவும், சிவநெறி எனவும் சன்மார்க்கம் எனவும் திருமூலர் குறித்துள்ளமை காணலாம். சிவநெறிச் செல்வர்களால் மேற்கொள்ளப் பெற்றுவரும் சன்மார்க்க நெறியானது சமயாதீதப் பழம் பொருளாகிய சிவத்தையே வழிபடும் உறுதிப்பாடுடையது ஆதலின் எல்லாச் சமயத் தாராலும் வழிபடப் பெறும் முழுமுதற் பொருள் ஒன்றே என்னும் பொதுமை யுணர்வு இந்நெறியிலே உருப்பெற்று வளர்வதாயிற்று.
சைவ சமயத்தார் மேற்கொண்ட சன்மார்க்க நெறியின் பயனாக எல்லாச் சமயங்களையும் ஒப்ப நோக்கும் பொதுமை யுணர்வு தமிழகத்தில் உருப் பெற்று நிலவுவதாயிற்று.
சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி உலகம் உய்ய வகுத்த தெய்வச் சிவநெறியாகிய சன்மார்க்க நெறியில் நின்ற திருமூலர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (2104) என்ற திருமந்திரப் பாடலில் இத்தகைய சமயப் பொதுமையைப் புலப்படுத்தியுள்ளார்.
சிவயோகியாராகிய திருமூலதேவரைத் தொடர்ந்து பின்வந்த தமிழ் நாட்டுச் சித்தர்கள் சமயங்கட்கிடையே ஒற்றுமையுணர்வை வளர்க்கும் நோக்கும், சமயப் பொதுமையுணர்வாகிய சமரச வுணர்வினைத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தி வந்துள்ளார்கள். இவ்வாறு தமிழகச் சித்தர்களால் அறிவுறுத்தப் பெற்ற சமரச நெறியினை ‘வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை (சித்தர் கணம் -1-10) எனவும், ‘சமயங்கடந்த’ மோன சமரசம். (சின்ம யானந்த குரு -4) எனவும் தாயுமானார் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.
உலகாயத முதல் சைவ சித்தாந்தம் முடிவாக, மக்களால் மேற்கொள்ளப் பெற்றுவரும் எல்லாச் சமயங்களும், உலக முதல்வனாகிய இறைவனால் மன்னுயிர்கள் உய்தற் பொருட்டு அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்பப் படிப்படியாகத் தோற்றுவிக்கப் பெற்றனவே என்பர் பெரியோர்.
இவ்வாறு மக்களது பக்குவ நிலைக்கேற்பக் கொள்கைகளால் வேறுபட்ட பல்வேறு சமயங்களையும் படைத்தருளிய இறைவனே, மக்கள் தம்முள் முரண்பட்டு இகல் கொள்ளாதபடி இச்சமயங்கள் எல்லாவற்றையும் ஒப்பு நோக்கும் நல்லுணர்வினை மக்களுக்கு உணர்த்தவல்ல சமயங்கடந்த சமரசநெறியினையும் வகுத்தருளினால் இவ்வுண்மை,
வைகை யெனும் பூதமாதியை வகுத்ததனுள்அசரசர பேதமானயாவையும் வகுத்து நல்லறிவையும் வகுத்துமறையாதி நூலையும் வகுத்துச்சைவமுதலாம் அளவில் சமயமும் வகுத்துமேற்சமயங் கடந்த மோன சமரசம் வகுத்த நீ.
(சின்மயானந்த குரு -4)
எனத் தாயுமான அடிகள் ஆலமர் செல்வனாகிய குருமூர்த்தியைப் பரவிப் போற்றும் பாடலால் இனிது புலனாம்.
இங்ஙனம் எல்லாச் சமயங்களையும் இகலின்றி ஒப்பமதித்து ஏணிப்படி நெறிகளாகத் தழுவிக் கொள்ளும் பொதுமையுணர்வு சைவ சமயத்தார் மேற்கொண்டுள்ள சன்மார்க்க நெறியிலேயே தொன்று தொட்டு நிலைபெற்று வந்துள்ளது. இந்நுட்பம் சைவத் திருமுறை களையும் சைவசித்தாந்த சாத்திரங்களையும் சைவ இலக்கியங்கள் பிறவற்றையும் கூர்ந்து நோக்குவார்க்கு இனிது புலனாகும்.
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்குஇங்கேஎன் றருள்புரியும் எம்பெருமான் (2-4-06)
என ஆளுடைய பிள்ளையாரும்,
ஆறுசமயத்து அவரவரைத்தேற்றும் தகையன….
…. ….. ….. இன்னம்பரான் இணையடியே (4-100-7)
ஏணிப்படி நெறி இட்டுக் கொடுப்பன (4-92-16)
என ஆளுடைய அரசரும்,
அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்துஅவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து (7-55-9)
என ஆளுடைய நம்பியும்,
அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர்பொருளால்
(சிவஞானசித்தியார் சுபக் – 1)
மனமது நினைய வர்க்கு வழுத்த மந்திரங்கள் சொல்லஇனமலர் கையிற் கொண்டங்கு இச்சித்த தெய்வம் போற்றிசினமுதலகற்றி வாழுஞ் செயலற மானால் யார்க்கும்முனமொரு தெய்வம் வந்து செயற்கு முன்னிலையாய் அன்றே
(சிவஞானசித்தியார் 113)
என அருள்நந்தி சிவனாரும் அருளிய பொருளுரைகள் இத்தகைய சமரச உணர்வினை நன்கு வலியுறுத்தல் காணலாம்.
உலக மக்கள் உய்தற் பொருட்டே உலகிற் பல்வேறு சமயங்களும் தோற்றுவிக்கப் பெற்ற நிலையில் அவற்றுள் யாம் மேற்கொண்ட இச்சமய ஒழுகலாறே சிறந்தது ஏனையோர் மேற்கொண்ட பிறசமய ஒழுகலாறுகள் அத்துணைச் சிறப் புடையன அல்ல எனச் சமய வாதத்தினை மேற்கொண்டு மக்களிடையே வேற்றுமை, உணர்வினைத் தோற்றுவிக்கும் வித்துணர்வுடையோர் செயலைக் கண்டால், எங்கள் பெருமானாகிய இறைவன், அவர்தம் பேதைமையை எண்ணிச் சிரிப்பான். மக்கள் மேற்கொண்ட தவநெறியாகிய சமயம் எதுவாயிருந்தால் என்ன? அவர்கள் எந்த நாட்டில் எந்த நிறத்தினராய்ப் பிறந்தால் என்ன? எல்லாச் சமய நெறிகளும் இறைவனை அடைந்து உய்தி பெறுதற்கு அமைக்கப் பெற்றனவே என்னும் உண்மையை உடன்பட்டுப் பிணக்கின்றி இறைவனை யுணர்ந்து போற்றுவார்க்குச் சிவமாநகராகிய வீடு பேற்றினை விரைவில் அடைதல் எளிதாகும் என அறிவுறுத்துவது,
இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்திஎத்தவம் ஆகிலென் எங்குப் பிறக்கிலென்ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புகலாமே. (திரு. 156)
எனவரும் திருமந்திரமாகும். இதன்கண் ஒத்துணர்வார் என்து, சமயவேறுபாட்டினைக் கருதாமல் இறைவனால் அருளிச் செய்யப் பட்ட சமயங்கடந்த மேல்நிலையாகிய சமரசத்தினை உடன்பட்டு ஒழுகுவோராகிய சன்மார்க்கச் செல்வர்களை. இத்தகைய சமரச சன்மார்க்க நெறியே இறைவனது திருவருளைக் கூடுதற்குரிய நல்ல உபாயமாகும் என்பது,
‘ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும்உபாயம தறியாமே’ (திருவாசி 43)
எனவரும் வாதவூரடிகள் வாய்மொழியால் நன்கு புலனாகும்.
அறுவகைச் சமயங்களும் இறைவனையடைதற்கு வகுத்த நெறிகளே என்பதனை அறிவுறுத்துவது
ஒன்றது பேரூர் வழி யாறதற்குள்என்றது போல இருமுச் சமயமும்நன்றிது தீதிது வென்றுரை யாளர்கள்குன்று குரைத்தெழு நாயை யொத்தார்களே
(திருமந்திரம் -598)
எனவரும் திருமந்திரமாகும்.
சென்றடைதற்குரிய பெரிய ஊர் ஒன்றே, அதனையடையும் வழிகள் ஆறு உள்ளன, என்றாற் போன்று அறுவகைச் சமயங்களும், முழுமுதற் பொருள் ஒன்றையே யடைவதற்குச் சாதனமாக உள்ளன. அவ்வாறாகவும் யாம் கூறும் இதுவே நன்று; பிறர் கூறும் அது தீது என்று சொல்லித் தம்முட் பிணங்கி வாதிடும் சமய வாதிகள், மலையைப் பார்த்துக் குரைத்து ஓடும் இழிந்த நாயினை ஒத்தவராவர். என்பது இதன் பொருள். எல்லாச் சமயங்களும் மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அறிஞர்களால் வகுத்துரைக்கப் பட்டன என்றும், அவற்றிடையே அமைந்த ஒருமையுணர்வினைக் காணமுயலாது அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர் மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஓடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்துவார். குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே என்றார் திருமூலர். ஞானமே திருமேனி யாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பார், ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்குள என்றார்.
சுத்த வடிவியல்பாக வுடைய சோதிசொல்லிய ஆகமங்க ளெல்லாம் சூழப்போயும்ஒத்து முடியும் கூட ஓரிடத்தேஒருபதிக்குப் பல நெறிகள் உளவானாற்போல்பித்தர்குண மதுபோல ஒருகா லுண்டாய்ப்பின்னொருகா லறிவின்றிப் பேதையோராய்க்கத்திடும் ஆன்மாக்க ளுரைக் கட்டிற்பட்டோர்கனகவரை குறித்துப் போய்க் கடற்கேவீழ்வர்;
(சித்தியார் பரபக்கம் – 9)
எனவரும் அருள்நந்திசிவனார் பாடல் மேற்குறித்த திருமந்திரத் திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கற் பாலதாகும்.
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்எல்லையின் மறைகளாலும் இயல்பரும் பொருளிதென்னத்தொல்லையி னொன்றே யாகித் துறைதொறும் பரந்தசூழ்ச்சிப்பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும் போற் பரந்த அன்றே
(கம்பர். பால-ஆற்றுப் – 19)
எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பரும்.
வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கில்விளங்குவரம் பொருளேநின் விளையாட்டல்லால்மாறுபடும் கருத்தில்லை முடிவில்மோனவாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா
(தாயுமான – கல்லாலின் – 25)
எனத் தாயுமானாரும் எல்லாச் சமயங்களையும் சமரச உணர்வுடன் ஒப்பமதித்தல் வேண்டும் என அறிவுறுத்தி யுள்ளார்கள். இவ் வுண்மையினையே வள்ளலாரும்,
பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கு ஓங்கும்கங்குகரை காணாத கடலே எங்கும்கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச்செங்குமுத மலரவரு மதியே எல்லாம்செய்யவல்ல கடவுளே தேவதேவே (திருவருட்பா 2118)
எனவரும் திருவருட்பாவில் வெளியிட்டுள்ளது இங்கு ஒப்பு நோக்குதற்குரிய தாகும்.
சொல்லால் விரித்துரைத்தற்கு அரிய நுண்ணிய தத்துவ வுண்மைகளைத் தம்பாற்கொண்ட சமய நெறிகள் யாவும் தத்தம் தெய்வமே தெய்வமென்று வற்புறுத்துவன. அச்சமயங்களை மேற்கொண்டொழுகுவோர்களும் அக் கொள்கையினையே உறுதியாகப் பற்றிக் கொண்டு தத்தம் சமயக் கொள்கைகளை நிலைநாட்ட அச்சமய நூற் பொருள்களைக் கருதலளவை முதலிய அளவைகளால் யாவரும் ஒத்துக் கொள்ளும் முறையில் விரித்துரைப் பார்கள். அவர் கூறுவனவற்றுள், பொய் இது, மெய் இது என அவற்றுள் ஒன்றினை இல்லை என்றோ உண்டென்றோ பார்த்து ஒரு முடிவுக்கு வருதல் எத்துணை அறிவுடை யோர்க்கும் இயலாத செயலாயுள்ளது. இத்தகைய சமயங்களாகியும், இவற்றின் வேறாயும் எல்லாச் சமயங்களும் ஏற்றுக் கொள்ளும் பொது வுண்மைகளை யுடையதாகியும், தன்னியல்பில் எக்காலும் திரிபடையாமல் விளங்குவது சைவம். இது இயமம் முதலிய எண்வகைக் குணங்களையும் புலப்படுத்தி உயிர்கட்கு இன்பத்தை நல்கி நற்பயன்களை அருளுதற் கேற்ற பிரிவுடைய சூழலை யுடையதாய் மயக்கமற்ற சிக்ஷை, சோதிட முதலிய ஆறங்கங்களும் தன் கண் அடங்க படிமுறையே நற்பொருள்களை யறிவுறுத்தி ஞானவடிவமாகிய மோனமுடியைச் சொன்னியிற் சூட்டி அரசிருக்கையில் அமர்ந்திருப்பாகும். இத்தகைய வைதிக சைவம், ஐயோ? மிகவும் அழகியதாகும்.
சைவசமயச் சான்றோர்களால் ஞான நன்னெறியாக வகுத்துரைக்கப் பெற்றது, எல்லாச் சமய நெறிகளையும் தனக்க அங்கமாகக் கொண்ட சமயங்கடந்த மோன நிலையாகிய சன்மார்க்க நெறியாகும். இந்நெறி அணிமா முதலிய எண்வகைச் சித்திகள் கைவரப் பெற்ற சித்தர்கட்கும், பேசா அநுபூதி பெற்ற மாதவச் செல்வர்களுக்கும், இந்திரன் முதலிய பதவிகளை வேண்டிப் பெற்றவர்கட்கும் தாயகமாகத் திகழுந் தன்மையது. இங்ஙனம் இம்மை, மறுமை, வீடு என்னும் மும்மை நலங்களையும் வேண்டி யோர்க்கு வழிவழி நின்று உதவும் திறத்தில் கற்பகத்தருப் போன்று இறைவனது திருவருளின் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுதற்குப் பொருந்திய நெறியே இச் சன்மார்க்கநெறியாதலின் இதுபோன்று அதிசயம் விளைப்பதொரு சமயநெறி பிறிதொன்று மில்லை.
இத்தகைய சன்மார்க்க மென்னும் ஞானநெறியின் பொருளும் எல்லாச் சமயங்களிலும் மேம்பட்டு விளங்கும் சைவசமயத்து உண்மைகளாகிய குறியீட்டுப் பொருளும் பிரிவற ஒரு பொருளேயாகித் தோன்றுவதால் சமயநெறியும் சமயநெறியில் அடையும் பயனும், இச்சமயத்தில் இயைந்து தோன்றுவது போன்றதொரு ஒற்றுமைத் தன்மை பல்வேறு சமயநெறிகளில் எதினிலும் யாம் கண்டதில்லை. சொல்லால் வெளியிட்டுக் கூறுதற்கு அரிய தில்லையம்பலத்தில் நாம் பார்த்தபோது, அங்கு எந்தச் சமயத்திற்குரிய அடையாளம் இருக்கிறது? (ஒன்றுமில்லை) எல்லாம் ஞான வெளியே என உணர்ந்து எல்லாச் சமயத்தோர்களும் தில்லைப் பொதுமன்றினை வணங்கிப் போற்றுகின்றார்கள். கல்லின் தன்மையதாகிய நெஞ்சத்தையுடைய எனக்குக் கூட அம்மன்றினைக் கண்டவுடன் வீடுபேற்றின்பமாகிய பேரானந்தத்தினை நுகரும் நிலையுண்டாகிறது எனத் தாயுமான வடிகள் சைவ சமயத்திலுள்ள ஞான நன்னெறியாகிய சன்மார்க்கத்தின் சிறப்பினையும் அந்நெறியின் பயனாக எல்லாச் சமயத்தாரும் தம்முள் இகலின்றி ஆன்மநேய ஒருமைப் பாட்டுணர்வினராய்ச் சமயங்கடந்த தனிமுதற் பொருளை வணங்குதற்குரிய பொதுமை வாய்ந்த திருக்கோயிலாகத் தில்லையம்பலம் – திகழவும், இதனாற் பயன் கொள்ள முயலாத ஏனையோரின் இரங்கத்தக்க நிலையினையும் எண்ணி வியந்து கூறும் முறையில் அமைந்தன:-
செப்பரிய சமயநெறி யெல்லாந் தந்தம்தெய்வமே தெய்வமென்னும் செயற்கை யானஅப்பரி சாளரும் அஃதே பிடித்தாலிப்பால்அடுத்த அந்நூல்களும் விரிந்தே அநுமானாதிஒப்பவிரித் துரைப்பர் இங்ஙன் பொய் மெய் யென்னஒன்றிலை ஒன்றெனப் பார்ப்ப தொவ்வா தார்க்கும்இப்பரிசாஞ் சமயமுமாய் அல்லவாகியாது சமயமும் வணங்கும் இயல்பதாகி
(தாயுமானவர் – ஆகார புவனம் – சிதம்பர ரகசியம்-9)
இயல்பென்றுந் திரியாமல் இயம மாதிஎண்குணமும் காட்டியன்பால் இன்பமாகிப்பயனருளப் பொருள்கள் பரிவாரமாகிப்பண்புறவும் சௌபான பக்ஷங்காட்டிமயலறு மந்திர சிக்ஷை சோதிடாதிமற்றங்க நூல் வணங்க மௌனமோலிஅயர்வறச் சென்னியில் வைத்து ராசாங்கத்தில்அமர்ந்தது வைதிக சைவம் அழகிதந்தோ
(தாயுமானவர் – ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம் 10)
அந்தோ ஈததிசயமிச் சமயம் போலின்றறிஞர்எலாம் நடு அறிய அணிமா ஆதிவந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும்மற்றும்இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும்இதுவன்றித் தாயகம் வேறில்லை யில்லைசந்தான கற்பகம் போல் அருளைக் காட்டத்தக்கநெறி இந்நெறியே தான் சன்மார்க்கம்
(தாயுமானவர் – ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம் – 11)
சன்மார்க்க ஞானமதின் பொருளும் வீறு
சமய சங்கேதப் பொருளுந் தானொன்றாகப்
பன்மார்க்க நெறியினிலுங் கண்டதில்லை
பகர்வரிய தில்லைமன்றுள் பார்த்தபோதங்
கென்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன
எச்சமயத் தவர்களும்வந் திறைஞ்சா நிற்பர்
சன்மார்க்க நெஞ்சமுள எனக்குந் தானே
கண்டவுடன் ஆனந்தங் காண்ட லாகும்
(தாயுமானவர் – ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம் -12)
எனவரும் பாடல்களாகும்.
எல்லாம் வெளியே என்றது, சிதாகாசம் எனப்படும் ஞான ஆகாயத்தை. இப்பெருவெளியே திருச்சிற்றம்பலமெனப் போற்றப் பெறுகிறது. மெய்ஞ்ஞானமயமான இவ்வம்பலத்திலே எல்லாம் வல்ல இறைவன் உலகுயிர்கள் உய்யும் வண்ணம் ஒரு பெரும் தனிக்கூத்து இயற்றியருள்கின்றான், என மெய்ந் நூல்கள் கூறுகின்றன. மெய்யுணர்விற்குப் புலனாகும் சிவபோகமாகிய பேரின்பத்தை அன்புடைய அடியார்கள் தம் ஐம்பொறி அளவாலும் எளிதிற் பெற்று இன்புறும் வண்ணம் எல்லாம் வல்ல இறைவன் பேரொளிப் பிழம்பாய் நின்று ஆடல் புரிகின்றான். இவ்வெட்ட வெளியில் நிகழும் இறைவனது திருக்கூத்தினை ஆளுடை பிள்ளையார் கண்டு வணங்கி மகிழ்ந்ததிறத்தினை
அண்ணலார் தமக்களித்த மெய்ஞ்ஞானமேயான அம்பல முந்தம்உண்ணிறைந்த ஞானத் தெழுமானந்தஒருபெருந் தனிக் கூத்தும்கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டெழும்களிப்பொடுங் கடற்காழிப்புண்ணியக் கொழுந்தனையவர் போற்றுவார்புனிதராடிய பொற்பு.
(பெரியபுராணம் திருஞான – 160)
உணர்வின் நேர்பெற வருஞ்சிவ போகத்தைஒழிவின்றி உருவின்கண்அணையும் ஐம்பொறி அளவினும் எளிவரஅருளினை எனப் போற்றிஇணையில் வண் பெருங் கருணையே ஏந்திமுன்எடுத்த சொற் பதிகத்தில்புணரு மின்னிசை பாடினர் ஆடினர்பொழிந்தனர் விழிமாரி.
(பெரியபுராணம் திருஞான – 161)
எனவும்
விண்ணாயகன் கூத்து வெட்டவெளியே திளைத்துக்கண்ணா ரமுதுண்டார் காலம்பெற அழுதார் (-163)
எனவும் வரும் திருப்பாடல்களில் சேக்கிழாரடிகள் தெளிவாக விளக்கியுள்ளார்.
தில்லைப் பொன்னம்பலத்திலே சோதிப்பொருளாகிய இறைவன் தனது அருளாகிய பேரொளி அண்டத்திலும் ஆருயிர்களின் அகத்திலும் அண்டத்து அப்புறத்திலும் எவ்வுலகத்திலும் விளங்கா நிற்ப ஆடியருளும் திறத்தினை அரியானை எனத் தொடங்கும் பெரிய திருத்தாண்டகததில் ‘தொல்லைத் திகழ் ஒளி எனவும், ‘சிந்தைதனை மயக்கம் தீர்க்கும் ஏரொளி யெனவும், ‘அண்டத்து அப்பால் நின்ற பேரொளி யெனவும் வரும் தொடர்களால், திருநாவுக்கரசர் விளக்கியருளி யுள்ளார். இத்திருத்தாண்டகம், தில்லையம்பலத்திலே இறைவன் அருட்சோதித் தெய்வமாக ஆடல்புரியும் திறத்தினை விரித்துரைத் துள்ளமை காணலாம். இக்கருத்திலேயே,
அளவா ஒளிவளர் தில்லை ஒருவன்
என வாதவூரடிகளும்
(திருச்சிற்றம்பலக்கோவை — 16)
ஒளிவளர் விளக்கே எனத் திருமாளிகைத் தேவரும்,
திருவளர் திருச்சிற்றம்பலம் எனக் கருவூர்த் தேவரும்,
‘அலகில் சோதியன் எனச் சேக்கிழாரடிகளும் அம்பலக் கூத்தனை ஒளியுருவினனாகப் போற்றியுள்ளமை காணலாம்.
தில்லைச் சிற்றம்பலத்தில் திருவம்பலச்சக்கரத்தில் வைத்துப் போற்றப்பெறும் சிதம்பர ரகசிய வழிபாடு ‘எல்லாம் வெளியே’ எனத் தாயுமானாரும் விண்ணாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்து எனச் சேக்கிழாரடிகளும் கூறிய பொருளுரைகளுக்கு இலக்கியமாகத் திகழ்தல் காணலாம்.
இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றால் தில்லைப் பொதுவினில் நிகழும் திருச்சிற்றம்பல வழிபாடு சைவ சமயத்தார் மட்டுமின்றி எல்லாச் சமயத்தாரும், ஆன்மநேய ஒருமைப் பாடுடையராய்ச் சமயாதீதப் பழம்பொருளாய சிவபரம் பொருளை அறிவுப்பெரு வெளியில் ஒளிப் பிழம்பாகக் கண்டு போற்றும், சமயங்கடந்த சமரச சன்மார்க்க வழிபாடாக அமைந்துள்ளமை நன்கு துணியப்படும்.
திருமூலநாயனார் முதல் தாயுமானார் ஈறாக உள்ள செந்தமிழ்ச் சான்றோர் பலரும் அறிவுறுத்திய சமரச சன்மார்க்க ஒளிவழி பாட்டினை உலகமுழுதும் பரப்புதல் வேண்டும் எனத் திருவுளங் கொண்ட அருட்பிரகாச வள்ளலார், சாதிமத வேறுபாடின்றி மக்களனைவரும் ஒருங்கு சென்று வழிபடுதற்குரிய பொதுமைத் திருவருள் நிலையமாகப் பார்வதிபுரம் என்னும் வடலூரில் சத்திய ஞானசபையைக் கி.பி. 1872 இல் தோற்றுவித்தருளினார் .
வடலூரில் அருட்பிரகாச வள்ளலாரால் நிறுவப் பெற்ற சத்தியஞானசபையானது சிதம்பரத்தில் ஞான ஆகாசமாகத்திகழும் திருச்சிற்றம்பலமாகிய சிற்சபையின் அமைப்பினை யுடையதாகும்.
தில்லையம்பலத்தில் கூத்தப் பெருமான் எழுந்தருளிய பீடத்திற்கு மேற்கே சிதாகாசப் பெருவெளியாகிய அருவத்தானமாகத் திகழ்வது சிதம்பர ரகசியம். இது ஞானவெளியென்பதனை அன்பர் பலரும் நன்குணர்வர். இராமலிங்கர் ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போதே அவர்தம் பெற்றோர்கள் தில்லையில் கூத்தப்பெருமானை வழிபட வந்தனர். தில்லை வாழ் அந்தணர் சிதம்பர ரகசியத்தின் திரையினைத் தூக்கிக் கற்பூரம் காட்டித் தரிசனம் செய்வித்தார். அப்போது பெற்றோர் கையிலிருந்த கைக் குழந்தையாகிய இராமலிங்கரும் அத்தரிசனத்தைக் கண்டு கூத்தப் பெருமான் திருவருளால் அவ்விரகசியத்தின் தத்துவ விளக்கத் தினை உணர்ந்து கொண்டார் என்பது வரலாறு. இச்செய்தி,
தாய்முதலோரொடு சிறிய பருவமதில் தில்லைத்தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போதுவேய்வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்வெளியாகக் காட்டிய என்மெய்யுறவாம் பொருளே (4:33)
எனவரும் வள்ளலார் வாய்மொழியால் இனிது புலனாகின்றது. இவ்வாறு வள்ளலார் தம் குழந்தைப் பருவத்திலே தில்லைப் பெருங்கோயிலில் கூத்தப் பெருமான் உணர்த்த உணர்ந்து கொண்ட எல்லாம் வெளியே (தாயுமானார்) என்னும் அநுபவ உண்மையினைத் தமது நாற்பத்தொன்பதாம் வயதில் உத்தரஞான சிதம்பரம் என்னும் வடலூரிலே ஏழு திரைகளை நீக்கி அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் கண்டுபோற்றும் சோதிதரிசன அமைப்பினை அமைத்துக் காட்டியருளினார் எனக் கருத வேண்டியுள்ளது.
தில்லைப் பெருங்கோயிலில் சிதம்பர ரகசியத்தினை மறைக்கும் நிலையில் அமைக்கப் பெற்றுள்ள திரை ஒன்றே என்பதனை யாவரும் அறிவர். அங்ஙனமாகவும் வடலூரில் வள்ளலார் அமைத்துள்ள திரைகள் ஏழாகும். சுடர் விட்டுளன் எங்கள் சோதி என ஆளுடையபிள்ளையாரும் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏரொளி என அப்பரடிகளும் இரந்திரந்துருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே என மணிவாசகப் பெருமானும் அருளிய வண்ணம் ஆன்மாக்களின் அகத்தே தோன்றும் உள்ளொளியைக் கண்டு மகிழ்தலாகிய அருளநுபவத்தை எல்லோரும் உணர்ந்து உய்திபெறுதல் வேண்டும் என்னும் பெருங் கருணைத் திறத்தால் புறத்தே பாவனையாகக் காட்டுவதே வள்ளலார் அமைத்த சத்திய ஞான சபையின் அருட் பெருஞ்சோதி வழிபாடாகும். தோற்றமில் காலமாகத் தம்மை பிணித்துள்ள ஆணவமலப் பிணிப்பின் காரணமாக ஆன்ம அறிவினை மறைத்துள்ள தத்துவப் படலங்களாகிய திரைகள் ஏழெனவும், அவை நீங்கப் பெற்றால் அருட்பெருஞ் சோதியாண்டவரைத் தரிசித்துப் பிறவிப் பிணிப்பகலப் பேரின்ப வாழ்வை அடைந்து இன்புறலாம் எனவும் அறிவுறுத்துவதே வடலூர் சத்தியஞான சபையின் வழிபாட்டு முறையாகும்.
ஆன்மாவை அநாதியே பற்றியுள்ள ஆணவமலமானது ஆன்மாவின் அறிவு, விழைவு, செயல் ஆகியவற்றை மறைத்து நிற்கும் எனவும், இறைவனது அருட்சத்தியானது மறைப்பாற்றலாய் ஆன்மாவுடன் கூடி நின்று ஆன்மாவை விட்டு ஆணவமலம் கழலும் பக்குவத்தை யுண்டாக்கி, அங்ஙனம் மலபரிபாகம் பெற்ற ஆன்மாக்களுக்கு மீளவும் பழைய அருட்சத்தியாய்த் தோன்றிச் சிவனுடைய திருவருளிலே கூட்டுவிக்கும் (சிவப்பிரகாசம் 30) எனவும் சைவ சித்தாந்த நூல்கள் கூறும். பெற்ற தாயானவள் பிள்ளைகளின் நோயினை நீக்குதல் வேண்டிக் கசப்புடைய மருந்தினை மறைத்துக் கொடுக்கும்போது சினமுடையவள் போல் தோன்றி நோய் நீங்கிய நிலையிற் பழைய பேரன்பினை யுடையளாய் இனிய உணவினைப் பிள்ளைக்கு நல்குவது போலவே, இறைவனது திருவருளாகிய சத்தியும் ஆன்மாக்களின் ஆணவப் பிணிப்பாகிய மலம் கழலுதல் வேண்டிச் சினமுடைய திரோதாயியாக நின்று உயிர்கட்கு வினைப் பயன்களாகிய மருந்தினை மறைத்து உண்பித்து அம்மலநோய் நீங்கிய நிலையிலே ‘பழைய திருவருட் சத்தியாகத் தோன்றிச் சிவபரம் பொருளைக் கண்டு மகிழும் பெற்றியை அளித்தருளும். இவ்வுண்மையினை, ‘முற் சினமருவு திரோதாயி கருணையாகித் திருந்திய சத்திநிபாதம் திகழுமன்றே’ (சிவப்பிரகாசம் – 48) என வரும் திருவிருத்தத்தில் உமாபதி சிவாச்சாரியார் விளக்கி யுள்ளார்.
இவ்விளக்கத்தினை யுளங்கொண்ட இராமலிங்க வள்ளலார், சோதி வழிபாட்டில் எழு திரைகளை அமைத்துள்ளார். தில்லைச் சிற்றம்பலத்தில் சிதம்பர ரகசியத்தினை மறைத்துள்ள திரையானது, தில்லையம்பலத்தில் ஒளியுரு வாய்த்திகழும் பரம்பொருளை ஆன்மா காணுதற்குத் தடையாயுள்ள ஆதிசத்தியினைக் குறிப்பதாகும். ஆதி சத்தி பராசத்தி முதலிய சத்திகளாய் ஒன்றன் பின் ஒன்றாய் அமைந்து ஆன்மாவை மறைத்துள்ள திரைகள் ஒன்றன் பின் ஒன்றாகவிலக ஆன்மாவானது அப்பாலுக்கப்பாலானாகிய பரம்பொருளை முறையே கண்டு தெளியும் முறையில் இரக சியத்தின் முன்னுள்ள திரையானது தூக்கிக் காட்டப்படுகின்றது. இவ்வுண்மையினை,
பரைதூக்கிக் காட்டியகாலே – ஆதிபரை இவர்க்கப்பால் அப்பால் என்றுமேலேதிரைதூக்கிக் காட்டுதல் பாரீர் – திருச்சிற்றம்பலத்தே திருநடஜோதி
(திருவருட்பா 4594)
எனவரும் கண்ணியில் இராமலிங்க வள்ளலார் விளக்கிய நுட்பம் கூர்ந்துணரத் தகுவதாகும். தில்லைச் சிற்றம்பலத்தில் அமைக்கப் பெற்றுள்ள திரையானது ஒன்றேயாயினும் அதன் முன்பக்கம் கறுப்பாகவும் பின்பக்கம் சிவப்பாகவும் அமைந்துள்ளது. இத் திறத்தினைக் கூர்ந்து நோக்குங்கால் திரையின் முன்பக்கமுள்ள கருமைநிறம் ஆதிசத்தியாகிய மறைப்புச் சத்தியையும் பின்பக்க முள்ள சிவப்பு நிறம் ஆன்மாக்கள் சிவனையடைதற்குத் துணை புரிவதாகிய திருவருட்சத்தியையும் குறித்துள்ளமை நன்கு புலனாதல் அறியலாம்.
மேற்குறித்த கறுப்பும் சிவப்புமாகிய இருவகை நிறங்களுக் குள்ளேயே எழுவகை நிறங்களும் அடங்கும் என்பதனை உணர்த்த எண்ணிய அருட்பிரகாச வள்ளலார், ஆன்மாவின் அறிவினை மறைந்துள்ள மறைப்பு நிலைகளை வகைப்படுத்தி உணர்த்தும் முறையில் 1. கரும்பெருந்திரை 2. நீலப் பெருந்திரை, 3. பச்சைத் திரை 4. செம்மைத் திரை, 5. பொன்மைத்திரை, 6. வெண்மைத்திரை, 7. கலப்புத்திரை என ஏழுதிரைகளாகப் பகுத்துக் கூறியுள்ளார் எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். அருட் பெருஞ்சோதியை ஆன்மா காணவொண்ணாதபடி மறைத்து நிற்கும் மேற்குறித்த ஏழு திரைகளேயன்றி விடயநிலைகளையும் தத்துவ நிலைகளையும் ஆன்மா உள்ளவாறு காண வொண்ணாத படி தனித்தனி மறைக்கும் வெவ்வேறு திரைகளும் உளவென்பதும் அவையனைத்தும் முற்குறித்த ஏழு பெருந்திரைகளிலேயே அடங்கிவிடும் என்பதும் வள்ளலார் கருத்தாகும். இந்நுட்பம்,
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்அடர்புற மறைக்கும் அருட்பெருஞ்சோதி
(அகவல் 827 -8)
என்பது முதல்
மறைக்குந் தலைவர்கள் வகை பல கோடியைஅறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ்சோதி
(அகவல் 859 -60)
என்பதீறாகவுள்ள அருட்பெருஞ் சோதியகவற் பகுதியால் உய்த் துணரப்படும்.
இவ்வாறு ஆன்மா, தலைவனாகிய இறைவனையும் உயிராகிய தன்னையும் தனக்குத் தநுகரண புவனே போகங்களாகப் பயன்படும் தத்துவத் தொகுதிகளையும் மறைத்து நிற்கும் யாவும் மறைப் பாற்றலாகிய திரோதான சத்தியின் தொடர்புடையனவே யென்பது,
ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயாசக்திகளாகிய ஏழு திரைகளுண்டு. அவையாவன;
கறுப்புத் திரை மாயாசத்தி
நீலத்திரை கிரியா சத்தி
பச்சைத் திரை பராசத்தி
சிவப்புத்திரை இச்சசத்தி
பொன்மைத் திரை ஞான சத்தி
வெண்மைத்திரை ஆதிசத்தி
கலப்புத்திரை சிற்சத்தி
என அருட்பிரகாச வள்ளலார் தரும் விளக்கத்தால் உய்த் துணரப்படும்.
நிலம், நீர், நெருப்பு, வளி, வான், மகத், அகங்காரம் என்னும் ஏழு திரைகளாகக் கூடிய தத்துவத்துள் ஒளிரும் ஞானசைபயிலே உலக நடனமும் அதற்கு மேற்பட்ட நடனமுமாம் பரம நடனத்தைக் குகேசன் ஆடியருள்கின்றான். (தகராலய – ரகசியம் 14) நில முதல் நாகமீறாகிய முப்பத்தாறு தத்துவங்களும் சகத் (பிருதிவி) முதல் மகத் இறுவாய்க் கிடந்த ஏழிலும் அடங்குதலின் அவை பூ, (நிலம்) உதகம் (நீர்) ஆரல், (நெருப்பு) உயிர் (வளி) வியோமம், (ஆகாயம்) அகந்தை (அகங்காரம்) மகத் (பிரகிருதி) என்னும் ஆவரணங்கள் (மறைப்புத் திரைகள்) ஆகக் கூறப்பட்டன பூத தன்மாத்திரை ஐந்தும், அகங்காரம், மகத் என்னும் இரண்டுமாகிய ஏழு கிரந்திகட்கு (முடிச்சுகட்கு) ஆதாரமாயுள்ள குணதத்துவ காரணத்தை எனவரும் மிருகேந்திர வுரை சத்தாவரண விவரத்தை யுணர்த்துகின்றது. ஆவணம் – மறைவு, அதுவே திரையெனவும் படும்.
சத்திய சங்கற்பன் குணசொரூபமான திரைச்சீலையினால் தன்னை மறைத்துக் கொண்டு கன்ம பலனை அனுபவிப்பவன் போலிருக்கின்றனன் – என மைத்திராயணிய வுபநிடதமும், இவன் எல்லாப் பூதங்களகளகத்து மறைந்து பிரகாசியாதிருக்கின்றனன் எனக் கடோபநிடதமும் கூறுகின்றன.
விறகிற் றீயினன் பாலிற்படு நெய்போல்மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
என்பது அப்பர் அருளிச் செயல்.
முன்னர்க் கூறப்பட்ட ஆவரணங்களாகிய ஏழு திரைகளையும் நீக்கித் தூய்மை மிகுந்தமெய்ஞ்ஞானப் பார்வை கெடாதாருடைய ஞான நேத்திரமே ஆகாசங்களின் மேற்பட்ட சிதம்பர குகேசனது நடனத்தை தரிசிக்கும் எனவும் ஆணவ விருளின் மறைப்புண்டு கிடப்பாருடைய கண்கள் அவ்வா காசத்துடன் கலந்து நின்று காணுந்தன்மைய அல்ல (தகராலய ரகசியம் –16)
எனவும் தவத்திரு பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் இறைவனை ஆன்மா காண வொண்ணாதவாறு மறைத்து நிற்கும் ஏழு திரைகளைப் பற்றித் தந்துள்ள பிறிதொரு விளக்கம் இங்குச் சிந்தித்து உணர்தற் குரியதாகும்.
இச்சபையைத் தோற்றுவித்ததற்கு நிலைக்களமாகிய சமரச சன்மார்க்கம் என்னும் பொதுநெறி சைவசமயச் சான்றோர்களால் வளர்க்கப் பெற்று வந்ததாயினும், அதனைத் தோற்றுவித்து வளர்த்த பெருமக்கள் விரிந்த மனமும் நிறைந்த அருட்குணமும் உடையவர் களாதலால் தாம் மேற்கொண்டு ஒழுகிய சன்மார்க்க நெறி சைவ சமயத் துக்கே உரியது என்ற எல்லையில் அமைந்து விடாது எல்லாச் சமயத்தார்களையும் அன்பினால் தழுவிக் கொள்வதாய் உலகமக்கள் எல்லோரும் உய்தி பெறுதற்கேற்ற விதியுடைய பெருநெறியாய் விளங்குதல் வேண்டும் என்ற குறிக்கோளுடன் அந்நெறியினை எல்லா மக்களும் பின்பற்றி ஒழுகுதற்கேற்ற பொது நெறியாக (சமயங் கடந்த மோன சமரச நெறியாக) அமைத்து உதவினார்கள்.
19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருட்பிரகாச வள்ளலார், தம் காலத்தில் சாதிசமய வேறுபாடுகளால் மக்கள், பல்வேறு பிரிவினராய் ஒற்றுமையின்றி அயலவர் ஆட்சியுட்பட்டு உரிமை யிழந்தும், பசி, பிணி, பகை என்பனவற்றால் அல்லற்பட்டும் வருந்திய அவல நிலையைக் கண்டு பெரிதும் வருந்தினார். இரக்கமே உருவாகிய அவர் இறைவனது திருவருளை இடை விடாது போற்றி அதன் துணைக்கொண்டு உலக மக்களின் துன்பத்தைத் துடைக்க உறுதி கொண்டார்.
தன்னலம் கருதாது உலக நலங்கருதித் தம் முன்னோர் கண்ட சமரச சன்மார்க்க நெறியினையே தமக்கு உறுதுணையாகக் கொண்டார்.
தமிழ் முன்னோர் கண்ட மெய்ந்நெறியினை இக் காலத்து மக்கள் நன்கு புரிந்து மேற்கொள்ளும்படி, எளிய இனிய இயல் இசைத் தமிழ் நடையில் உரையும் பாட்டுமாக எல்லார்க்கும் விளங்க விளக்கியருளினார். தாம் அறிவுறுத்தும் சன்மார்க்கமாகிய பொது நெறி சைவ முதலான சமயங்களின் எல்லையுட்பட் டடங்கிய தன்று; எல்லாச் சமயங்களையும் கடந்து அப்பாற் பட்டது என்னும் உண்மையை உலகமக்கள் தெளிவாக உணரும்படி சமரச சன்மார்க்கம் என்ற பெயரளவில் அமையாது சமரச சுத்த சன்மார்க்கம் என அடைமொழி தந்து பெயர் விளக்கம் செய்தார். இந்நெறி என்றும் மாறாத முழுமுதற் பொருளாகிய சங்கம், சாலை, சபை ஆகிய மூன்றும், முறையே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனவும், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை எனவும் வழங்கப் பெறுவனவாயின. சன்மார்க்க நெறிக்கு வித்திட்ட சைவ சமயத்தார், முழுமுதற் கடவுளைச் ‘சிவம்’ என்ற பெயரால் வழங்குதல் மரபு. பொதுமறையருளிய திருவள்ளுவர் இறைவனைச் செம்பொருள் என்ற சொல்லாற் குறிப்பிடுவர். இரண்டும் ஒன்றே என்னுங் கருத்தில் ‘செம்பொருளான சிவமெனலாமே’ என்றார் திருமூலர். இறைவனைக் குறித்து வழங்கும் ‘சிவம்’ என்ற இச்சொல் ‘சிவகதிநாயகன்’ (சிலப் -10-180) என்றாற் போன்று சமணர் முதலிய பிற சமயத்தவராலும் இறைவனுக்குரிய பொதுமை வாய்ந்த திருப்பெயராக ஏற்று வழங்கப் பெற்றுள்ளது. இந் நுட்பத்தினைக் கூர்ந்துணர்ந்த வள்ளலார், சாதிமத வேறுபாடின்றி எல்லோராலும் வழிபடப் பெறும் பரம்பொருளைச் சமய எல்லைக்கு அப்பாற் பட்ட நிலையில் ‘சுத்த சிவம்’ என அடைமொழி கொடுத்துப் போற்றியுள்ளமை சமயச் சூழலுக்குள் அகப்படாத அவர்தம் பொதுமை யுணர்வை நன்கு புலப்படுத்துவதாகும்.
தூய மெய்யுணர்வும் அன்புமே தனக்குரிய திருமேனியாகக் கொண்டு திகழ்பவன் இறைவன் என்பது, வாலறிவன் எனத் தெய்வப்புலவரும், ‘அன்பே சிவம்’ எனத் திருமூலரும் அருளிய பொருள் மொழிகளால் புலனாதல் காணலாம்.
உலகெலாம் போற்றும் முழுமுதற் கடவுளாகிய பரம் பொருள் ஒருவரே என்பதும், அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய அவ்விறை வரையே மெய்யன்புடையராய், மாந்தர் தம் அகத்தும் புறத்தும் ஒளிவடிவில் வழிபட வேண்டு மென்பதும், சிறு தெய்வங்களின் பெயரால் ஆடு, கோழி முதலிய சிற்றுயிர்களைப் பலியிடுதல் கூடாதென்பதும், சாதி சமய வேறுபாடுகளிலும் சாத்திர கோத்திரச் சண்டைகளிலும் பொருளற்ற சடங்குகளிலும் உலக மக்கள் ஈடுபட்டுத் தம்முட் பிணங்கித் தம்வாழ்வின் பயனை வீணாக்குதல் கூடாதென்பதும், எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உயிரிரக்க முடையவராய் வாழும் ஆன்மநேய ஒருமைப்பாட் டுரிமையினைக் கடைப்பிடித்தல் வேண்டு மென்பதும், உயிர்க் கொலையும், புலாலுணவும் நீக்கி, ஏழை எளியவர்களின் பசிப்பிணியினைப் போக்கும் சீவகாருணிய ஒழுக்கமே மக்கள் மரணமிலாப் பெருவாழ்வாகிய பேரின்ப நிலையைப் பிரகாச அடிகளார் கண்ட சமரச சுத்த சன்மார்க்கத்தின் தலைசிறந்த கொள்கைகளாகும். இக்கொள்கைகள் வடலூர் வள்ளலார் அருளிய திருவருட்பா ஐந்து திருமுறைகளிலும் பொதுவாகவும், ஆறாம் திருமுறையிலும், சன்மார்க்க சங்க விண்ணப்பங்கள், சீவகாருண்ய ஒழுக்கம் முதலிய உரைநடை நூல்களிலும் சிறப்பாகவும் விளக்கப் பெற்றுள்ளன:
அருள்நிலை விளங்கு சிற்றம்பலம் எனுஞ்சிவசுகாதீத வெளி நடுவிலேஅண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம்அனைத்தும் அவை ஆக்கல் முதலாம்பொருள் நிலைச் சத்தரொடு சத்திக ளநந்தமும்பொற்பொடு விளங்கி ஓங்கப்புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்பூரணா கார மாகித்தெருள் நிலைச் சச்சிதானந்த கிரணாதிகள்சிறப்ப முதல் அந்தம் இன்றித்திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அநுபவநிலைதெளிந்திட வயங்கு சுடரேசுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவசுந்தரிக் கினிய துணையேசுத்த சிவ சன்மார்க்க நீதியே அருட்பெருஞ்சோதி நடராச பதியே.
(திருவருட்பா – 3651)
எனவரும் திருவருட்பா, சமய வேறுபாடின்றி உலக மக்கள் எல்லோராலும் வழிபடப் பெறும் திருச்சிற்றம்பலமென்னும் சிதாகாசப் பெரு வெளியினடுவே அருட்பெருஞ் சோதியாண்டவர் திருநடம் புரியும் இயல்பினை விரித்துப் போற்றுவதாகும்.
உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்உற்றகரு வாகி முதலாய்உயிராய் உயிருக்குள் உறும் உயிராகி உணர்வாகிஉணர்வுள் உணர்வாகி உணர்வுள்பற்றியலும் ஒளியாகி ஒளியின் ஒளியாகிஅம்பரமாய்ச் சிதம்பரமும் ஆய்ப்பண்புறு சிதம்பரப் பொற்சபையும் ஆய்அதன்பாங்கோங்கு சிற்சபையும் ஆய்த்தெற்றியலும் அச்சபையின் நடுவில் நடம் இடுகின்றசிவமாய் விளங்கு பொருளேசித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்தேற்றிஅருள் செய்த குருவேமற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞானவாழ்வேஎன் வாழ்வின் வரமேமணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வமே எலாம்வல்ல நடராசபதியே
(திருவருட்பா – 3665)
இத்திருவருட்பா ஒளியின் ஒளியாகிய இறைவன் பெரு வெளியாய் ஞானவெளியாய்த் திகழும் சிதம்பரத் திருத்தலத்தே பொன்னம் பலமும், சிற்றம்பலமுமாய் இணைந்து விளங்கும் தெய்வசபையிலே திருக்கூத்தாடியருளும் திறத்தினை எடுத் துரைத்துப் போற்றுவதாகும்.
பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்பருதியும் காலம் முதலாப்பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்தபரமாதி நாதம் வரையும்சீராய பரவிந்து பரநாத முந்தனதுதிகழங்கம் என்று ரைப்பத்திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடுதெய்வமே என்றும் அழியாஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையேஉயர் தந்தையே என் உள்ளேஉற்றதுணையே என்றன் உறவேஎன் அன்பேஉவப்பே என்னுடைய உயிரேஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்தஅரசேஅருட்சோதியேஅகரநிலை முழுதுமாய் அப்பாலும் ஆகிநிறைஅமுத நடராச பதியே.
(திரு- 3670)
இத்திருவருட்பா,
நிலம்முதல் நாதம் ஈறான தத்துவங்கள் அனைத்தும் தன் திருமேனியின் அங்கங்கள் என்று சொல்லுமாறு எல்லாம் வல்ல இறைவன் திருச்சிற்றம்பலமாகிய திருவருட் பெருவெளியில் ஆனந்தத் திருக்கூத்து இயற்றும் திறத்தினை எடுத்துரைத்துப் போற்றுவதாகும்.
உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலைஉறுமவுன வெளிவெளியின் மேல்ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்ஒருங்க நிறை உண்மை வெளியேதிரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்சித்தே எனக்கு வாய்த்ததெய்வமே ஒன்றான தெய்வமே உய்வகைதெரித்தெனை வளர்த்த சிவமேபரைநடு விளங்குமொரு சோதியே எல்லாம்படைத்திடுக என்றெ னக்கேபண்புற உரைத்தருட் பேரமு தளித்தமெய்ப்பரமமே பரம ஞானவரைநடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்தவண்ணநடம் இடு வள்ளலேமாறாத சன்மார்க்க நிலைநீதியே யெலாம்வல்லநட ராச பதியே.
(திருவருட்பா – 3621)
இத்திருவருட்பா,
உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கியும், உயிர்கட்கு மன அமைதி தந்தும், மோன மென்னும் ஞான வரம்பைத் தன்னகத்தே கொண்டும் பேசா அநுபூதியாகிய அநுபவம் ஒருங்கே நிறைந்த உண்மைப் பெருவெளியிலே விளங்கும் சிற்றம்பலத்திலே இன்ப நடம்புரியும் வள்ளல் என்றும் மாறாத சன்மார்க்க நெறியில் நிலைத்துள்ள நீதியே யுருவாகிய கூத்தப்பிரான் என்பதனை விளக்குவதாகும்.
பூதமுதலாய பல கருவிகள் அனைத்தும் என்புகல்வழிப் பணிகள் கேட்பப்பொய்படாச் சத்திகள் அனந்த கோடிகளுமெய்ப்பொருள் கண்டசத்தர் பலரும்ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்கிசைந்தெடுத் துதவ என்றும்இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்றிருக்கஎனை வைத்த குருவே!
நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்நலம்பெறச் சன்மார்க்க மாம்ஞானநெறி ஓங்க ஓர் திருவருட் செங்கோல்நடத்திவரு நல்ல அரசேவாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரியமாமதியின் அமுத நிறைவேமணிமன்றின் நடுநின்ற ஒரு தெய்வமே எலாம்வல்ல நடராச பதியே.
(3673)
தத்துவ நெறிகளாகிய ஆறந்தங்களுக்கும் உரிய நலன்கள் பலவற்றையும் தருவது சன்மார்க்க ஞானநெறி யென்பதும், அத்தகைய பெருநெறி உலகில் ஓங்கும்படி எல்லாம் வல்ல இறைவன் திருவருட் செங்கோல் நடத்தி வருகின்றான் என்பதும், அம்முதல்வன், தன்முன் முரணிவாதிடும் மதிமயக்கமுடைய மதவாதிகளால் பெற்று அநுபவித்தற்கரிய அமிழ்தத்தின் நிறைவாக அழகிய சபையிலே அருள் நடம்புரியும் ஒரு பெருந்தெய்வமாகத் திகழ்கின்றான் என்பதும் அம் முதல்வனே தன்னை வழிபடும் அடியார்கள் நினைத்த நற்செயல்களை யெல்லாம் அவர்கள் நினைந்த வண்ணமே இனிது நிறைவேற்றி அவர்களை இறவாத பெருநிலையில் இன்புற்றிருக்க வைக்கும் குருவாகவும் விளங்குகின்றான் என்பதும் ஆகிய உண்மைகளை விளக்குவது இத்திருவருட்பா.
சமயவாதிகள் தத்தம் மதங்களே சிறந்தன என்ற உரை அளவில் நின்று விடாமல் மதவெறி பிடித்து ஒரு மதத்தாரை மற்றொரு மதத்தார் வருத்தித் துன்புறுத்தும் நிலையில் மதப் போர்களால் மக்கள் உற்ற அல்லல்களை எல்லாம் எண்ணி வருந்திய இராமலிங்க வள்ளலார், தம் வழிபடு கடவுளாகிய முருகப் பெருமானை நோக்கித் தம் இளம்பருவத்தே பாடிய கந்த கோட்டப் பதிகத்தில் ஒருமையுடன் நினது எனத் தொடங்கும் பாடலில் பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என இரந்து வேண்டியுள்ளார். இளமைப் பருவத்திலேயே அவர்கள் வேண்டிய இவ் விண்ணப்பத்தை ஏற்றருளிய இறைவன், பிற்காலத்தில் அடிகளார் தம் உள்ளத்தே குருமுதல்வனாகத் தோன்றி நீ என் பிள்ளை, உலகத்தில் உள்ள சமயநெறி மதநெறிகளெல்லாம் பேயால் பிடியுண்டு பித்தேறிய பிள்ளைகளின் விளையாட்டு என்பதனை உள்ளவாறு உணர்ந்து கொள்ள மாட்டாத மக்கள், சாதி மத பேதங்களாலும் சாத்திர சோத்திரங்களாலும் பல்வேறு வகையினராய் வேறுபட்டுத் தம்முட் போர் செய்து உலக வாழ்க்கையில் ஒருபயனும் பெறாது வீணே இறந்தொழிந்தார்கள். இனிமேலும் உலகமக்கள் இவ்வாறு கெட்டொழியாதபடி என் அன்புக்குரிய பிள்ளையாகிய, நீ தூய்மையுற்ற சுத்த சன்மார்க்க நெறியினை உலகத்தார்க்கு எடுத்துக்காட்டி, இந்நெறியால் அடைதற்குரியதே மெய்ப் பொருள் என்பதை அவர்களுக்கு விளங்க உணர்த்தி எல்லா உயிர்களும் அழகிய இன்ப நிலையினைப் பெறும்படி செய்வாயாக! என் அன்புக்குரிய பிள்ளை நீயே யாதலால் அவ்வுரிமை பற்றி இப்பணியை விரைந்து செய்க என உனக்குக் கட்டளையிட்டோம். இப்பெரும் பணியினைச் செய்தல் என்னால் இயலுமோ இயலாதோ என்று நின் மனத்தில் ஐயுறாதே என அறிவுறுத்தியருளினான். இவ்வாறு குரு முதல்வனாகிய இறைவன் அருளிய கட்டளையை ஏற்றுக் கொண்ட அருட்பிரகாச வள்ளலார் உலக மக்கள் உய்தி பெறச் சமரச சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்புதலையே தமது வாழ்வின் கடமையாகக் கொள்வாராயினர். இச் செய்தி,
பேருற்ற உலகிலுறு சமய மதநெறி எலாம்பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்பிள்ளைவிளையாட்டென உணர்ந்திடா துயிர்கள் பலபேதமுற் றங்கு மிங்கும்போருற் றிறந்து வீண்போயினார் இன்னும்வீண்போகாத படி விரைந்தேபுனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டிமெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம்ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீஎன் பிள்ளை யாதலாலேஇவ்வேலை புரிக என்றிட்டனம் மனத்தில்வேறெண்ணற் என்ற குருவேநீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்நிறைந்திருள் அகற்றும் ஒளியேநிர்க்குணா னந்தபர நாதாந்த வரை ஓங்குநீதி நடராசபதியே.
(6377)
எனவும்
பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும்ஓர்பவநெறி இதுவரை பரவிய திதனால்சென்னெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீபுன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்தன்னெறி செலுத்துக என்றஎன் அரசேதனிநடராச என் சற்குரு மணியே.
(3696)
எனவும் வரும் திருவருட்பா பாடல்களால் நன்கு புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம்.
எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்சோதி ஆகிய திருவருள் ஒளியினை வள்ளலாருக்கு அன்புடன் அளித்து எத்தகைய சமயநெறிகளையும் தனக்கு அங்கமாக ஏற்றுக் கொள்ளும் ஒருமை யுணர்வை நல்கும் சிவநெறி நிலை பெறச் செய்து அவர் உள்ளத்தில் கலந்திருந்து, என் அன்புமகனே, எமன் எனும் அவன் இனி நின்னை அணுகுதல் இல்லை. ஆகவே இறவாத பெருநெறியில் இளைப்பற வாழ்வாயாக எனத் தன் அருட் சார்பினை நல்கி அருளினான் என்பதும், அவனது திருவருளைச் சார்பாகக் கொண்டே சமரச சுத்தசன்மார்க்க சங்கம் என்னும் திருவருட் சமுதாய அமைப்பு வள்ளலாரால் நிறுவப் பெற்றதென்பதும் ஆகியவற்றைப் புலப் படுத்தும் நிலையில் அமைந்தது:
அமரரும் முனிவரும் அதிசயித்திடவேஅருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தேகமமுறு சிவநெறிக் கேற்றி என்றனையேகாத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியேஎமன் எனும் அவன்இனி இலைஇலை மகனேஎய்ப்பற வாழ்க என்றியம்பிய அரசேசமரச சன்மார்க்க சங்கத்தின் முதலேதனிநட ராசஎன் சற்குரு மணியே. (3702)
எனவரும் திருவருட்பாவாகும்.
சமரச சன்மார்க்க நெறியினை மேற்கொண்டு எல்லாம் வல்ல இறைவனே தன் ஆருயிர்த் தலைவனாகவும், தம்மை அவனது அருளாரின்பத்தினை வேண்டி நிற்கும் காதலியாகவும் கொண்டு போற்றும் அடிகளார், நாயகனால் தாம்பெற்ற பேரின்பப் பெருவாழ்வை வெளியிட்டுரைப்பதாக அமைந்தது,
பொய்பிடித்தார் எல்லோரும் புறத்திருக்க நான்போய்ப்பொது நடங்கண் டுளங்களிக்கும் போது மணவாளர்மெய்பிடித்தாய் வாழியநீ சமரச சன்மார்க்கம்விளங்க உலகத்திடையே விளங்குக என்றெனதுகைபிடித்தார் நானும் அவர் கால்பிடித்துக் கொண்டேன்களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்மைபிடித்த விழியுலகர் எல்லாரும் காணமாலையிட்டோம் என்றெனக்கு மாலை யணிந்தாரே.
(5769)
எனவரும் திருவருட்பாவாகும்.
இறைவனது திருவருட் குறிப்பின் வண்ணம் சமரச சுத்தசன்மார்க்க நெறியினை மேற்கொண்டு பார்வதிபுரம் என்ற வடலூரில் சத்தியஞானசபையை நிறுவினார் அருட் பிரகாச வள்ளலார். எல்லாம் வல்ல இறைவன் ஒளி நடம் புரியும் திருப் பொதுவாகிய மன்றினிடத்தே உலக மக்கள் எல்லோரும் ஒருமைப் பாடுடையராய் வந்து வழிபாடு செய்து எல்லா நலன்களையும் பெற்று உய்திபெறுதல் வேண்டும் எனவும், இத்தகைய பொது மக்றமாகிய தெய்வத் திருச்சபைக்கு உலக மக்கள் எல்லோரும் அறிவு திரு, ஆற்றல், காரணமாக, ஒத்தார், உயர்ந்தார், தாழ்ந்தார் என்னும் வேற்றுமையின்றி ஊக்கமுடையராய்ச் சமுதாய வாழ்விலும் அரசியல் வாழ்விலும் தம்முள் ஒத்த உரிமையினைப் பெற்று உலகியலை நடத்துதல் வேண்டும் எனவும், இராமலிங்க வள்ளலார் அருட்பெருஞ்சோதி யாண்டவரை வேண்டிப் போற்றுச் சுத்தசன் மார்க்க வேண்டுகோளாக அமைந்தன,
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்பு செயல்வேண்டும்எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான்சென்றேஎந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல்வேண்டும்தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.
-(4079)
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல்வேண்டும்அருட்பெருஞ்சோதியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்திருச்சபைக்கே அடிமைகளாய்ச் செய்வித்தல் வேண்டும்த்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்ஒருமையுளராகி உலகியல் நடத்தல் வேண்டும்எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்எந்தாயும் ஒன்றாக இனிதுறல் வேண்டுவனே.
(4082)
எனவரும் திருவருட்பாப் பாடல்களாகும்.
முன்னைத் தமிழ்ச் சான்றோர் தோற்றுவித்து வளர்த்த சன்மார்க்க நெறியினைச் சமயங்கடந்த மோன நிலைக்கு உரியதாக விரிவு செய்து வளர்க்கத் திருவுளங் கொண்ட அருட்பிரகாச வள்ளலார், சமரச சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்புதற்குரிய திருவருள் நிலையமாக வடலூரிலே உத்தரஞான சிதம்பரம் சத்திய ஞானசபை தோன்றுதற்கும், அது நிலைபெற்று வளர்வதற்கும் உயிர்க்குயிராய் உடனிருந்து அருள் புரிந்து வரும் அருட்பெருஞ் சோதி ஆண்டவரின் கருணைத் திறத்தை எண்ணி நெஞ்சம் நெக்குருகி அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வேண்டுவதாக அமைந்தது,
சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
திருச்சிற்றம்பலம்
இயற்கை உண்மையர் என்றும், இயற்கை அறிவினர் என்றும், இயற்கை இன்பினர் என்றும், நிர்க்குணர் என்றும் சிற்குணர் என்றும் நித்தியர் என்றும், சத்தியர் என்றும், ஏகர் என்றும். அநேகர் என்றும், ஆதியர் என்றும், அனாதியர் என்றும், அமலர் என்றும், அருட்பெருஞ்சோதியார் என்றும். அற்புதர் என்றும் நிரதிசயர் என்றும், நிரதிசயர் என்றும், எல்லாம் ஆனவர் என்றும், எல்லாம் உடையவர் என்றும், எல்லாம் வல்லவர் என்றும் குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்பு திரு வார்த்தைகளால், சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும் உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற தனித்தலைமைப் பெரும்பதியாகிய பெருங் கருணைக் கடவுளே; தேவரீர் திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியேமாகிய யாங்கள் சிற்றறிவால் செய்து கொள்ளும் சிறு விண்ணப்பங்களைத் திருச் செவிக்கு ஏற்பித்தருளி எங்களை இரஷித்தருளல் வேண்டும்.
எல்லாச் சத்திகளும், எல்லாச் சத்தர்களும் எல்லாத் தலைவர் களும் அறிந்து கொள்ளுதற்கு மிகவும் அரியதாய் எல்லாத் தத்துவங்களுக்கும், தத்துவிகளுக்கும் அப்பால் அப்பாலாய் விளங்கும் ஒரு சுத்தமுள்ள வெளியில் தமக்கு ஒருவிதத்தாலும் ஒப்புயர்வு சிறிதும் குறிக்கப்படாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் ஜோதியராகி விளங்குகின்ற தேவரீரது தனிப்பெருந் தன்மைக்கு, மெய்யறி வுடையோரால் விதிக்கப்பட்ட வேதாகமங்களும், பெருந்தகை வாசகத்தைப் பெறாது சிறுதகைவாசகங் களைப் பெற்றுத் திகைப் படைகின்றன என்றால், மலத்திற் புழுத்த புழுவினும் சிறியேமாகிய யாங்கள் திருச்சமூகத்தில் விண்ணப் பித்தற்கு உரிய பெருந்தகை வாசகத்தை எவ்வாறு அறிவோம்; எங்ஙனம் செய்வோம்; ஆதலின் கருணாநிதியாகிய கடவுளே; யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி எங்களைக் காத்தருளல் வேண்டும்.
தாயினும் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே அஞ்ஞான இருளில், அஞ்ஞான உருவில் அஞ்ஞானிகளாய் அஞ்ஞானத்தில் பயின்று ஏதும் தெரியாது கிடந்த எங்களைத் தேவரீர் பெருங் கருணையால் பவுதிக உடம்பில் சிறிது அறிவு தோற்றிவிடுத்த அஞ்ஞான்று தொட்டு இஞ்ஞான்று வரையும் அது கொண்டு அறிவே வடிவமாய், அறிவே உருவாய் அறிவே பொறியாய், அறிவே மனமாய், அறிவே அறிவாய் அறிவே அனுபவமாய் அனுபவிக்கத் தெரிந்து கொள்ளாது, குற்றமே வடிவாய்க், குற்றமே அறிவாய், குற்றவே அனுபவமாய் அனுபவிக்கின்ற சிறியேங்கள் திருச்சமூகத்தின் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும் குற்றமே வடிவாய் குற்றமே குறிக்கும் என்று அறிந்தோமாயினும் குற்றங் குறியாதவகை விண்ணப்பம் செய்வதற்கு ஒருவாற்றானும் உணர்ச்சி யில்லோ மாதலில், துணிவு கொண்டு விண்ணப்பிக்கின்றோம். குற்றங்களையே குணங்களாகக் கொள்ளுதல் தேவரீர் திருவருட் பெருமைக்கு இயற்கையாதலின் இவ்விண்ணப்பங்களில் குற்றங் குறியாது கடைக்கணித்தருளிக் கருணை செய்தல் வேண்டும்.
அஞ்ஞான இருளில் ஒன்றும் தெரியாது உணர்ச்சியின்றிக் கிடந்த காலம்போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே இவ்வுலகினிடத்து புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று, முதலியவாகவும் பிறந்து, களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல், கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல், வெடிப்புண்டல் முதலிய பல்வேறு அவத்தை களால் இறந்து இறந்து அத்தாபரயோனி வர்க்கங்களெல்லாம் சென்று சென்று உழன்று உழன்று அலுப்படைந்தோம். பின்னர் எறும்பு, செல், புழு, பாம்பு, உடும்பு, பல்லி முதலியவாகவும், தவளை, சிறுமீன், முதலை சுறா, திமிங்கிலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து தேய்ப்புண்டல் நசுக்குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து, இறந்து அவ்வூர்வன, நீர் வாழ்வன யோனிவர்க்கங்களெல்லாம் சென்று சென்று உழன்று, உழன்று அலுப்படைந்தோம். பின்னர் ஈ, வண்டு. தும்பி குருவி, காக்கை, பருந்து, கழுகு முதலியவாகப் பிறந்துபிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல் உலைப்புண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அப்பறவை யோனி வர்க்கங் களெல்லாம் சென்று சென்று உழன்று உழன்று அலுப்படைந்தோம். பின்னர் அணில், குரங்கு, நாய், பன்றி, பூனை, ஆடு, மாடு யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிடியுண்டல் அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அவ்விலங்கு யோனிவர்க் கங்ளெல்லாம் சென்று சென்று உழன்று உழன்று அலுப்படைந் தோம். பின்னர் பசாசர், பூதர், இராக்கதர், அசுரர் முதலியராகப் பிறந்து பிறந்து அலைப்படுதல் அகப்படுதல், அகங்கரித்தல் அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல் திகைப்புறுதல், போரிடுதல். கொலைப்படுதல், முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத் தேவ யோனி வர்க்கங்களெல்லாம் சென்று சென்று உழன்று உழன்று அலுப்படைந்தோம். பின்னர் காட்டகத்தார் கரவு செய்வார் கொலை செய்வார் முதலியவராகப் பிறந்து பிறந்து பயப்படல் சிறைப்படல், சிதைப்படல் முதலிய அவத்தைகளால் இறந்து இறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாம் சென்று சென்று உழன்று உழன்று அலுப்படைந்தோம்.
அங்ஙனம் யாங்கள் அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும், அச்சமும், அவலமும் களைப்பும் துன்பமும் திருவுளத்தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங் கருணைக்கு யாங்கள் செய்யும் கைம்மாறு ஒன்று தெரிந்தோமில்லை.
உயிர்கள் அகத்தும், புறத்தும், அகப்புறத்தும் புறப் புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே!
இம்மனித தேகத்தில் செலுத்திய காலத்திலும் தாய் வயிற்றிலும், சிசுப்பருவத்திலும் குமாரப்பருவத்திலும் பல்வேறு அவத்தைகளால் அறிவின்றி இருந்தோமாகலின் தேவரீர் பெருங்கருணைத் திறத்தை அறிந்துகொள்ளாமல் வீண்பொழுது கழித்தோம். அப்பருவம் கழிய இப்பருவத் தினிடத்தே எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும் எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும் மற்ற எல்லாவற்றையும், தோற்றுவித்தும் விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும் பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணமாகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பால் கருதி வழிபாடு செய்யின் அக் கடவுள் திருவருள் நம் கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்கு மென்றும், அத் திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்திலும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடை படாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைதல் கூடுமென்றும் எங்கள் அறிவில்தேவரீர் திருவருளால் உண்மைப்பட உணர்த்தியருளப் பெற்றோம். அவ்வுணர்ச்சியைப் பெற்றது தொடங்கி கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம்? மரணம் பிணி, மூப்பு, முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும்? என்றும் அழியாத பேரின்ப சித்தி எக்காலங் கிடைக்கும் என்று எண்ணியெண்ணி வழிதுறை தெரியாமல் வருந்தி நின்ற தருணத்தே,
களைப்பறிந்து உதவும் கருணைக் கடலாகிய கடவுளே! தேவரீர் நெடுங்காலம் மரணம் முதலிய அவத்தைகளால் துன்புற்றுக் களைப்படைந்த உங்களை அவ்வவத்தைகளின்றும் நீக்கிக் களைப்புறு கலக்கமும் தவிர்த்து, அழியாத பேரின்ப சித்தியை அடைவித்தற் பொருட்டாகவே பூர்வஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதிபுரம் என்று குறிக்கப்படுகின்ற உத்தரஞான சித்திபுரத்தில் யாம் அளவு கடந்த நெடுங்காலம் சித்தியெலாம் விளங்கத் திருவருள் நடஞ்செய்வோம் என்றும் அதுதருணம் மிகவும் அடுத்து சமீபித்த தருணம் என்றும், அப் பதியினிடத்தே யாம் அருள் நடம்புரிவதற்கு அடையாளமாக ஒரு ஞானசபை காணுதல் வேண்டும் என்றும் திருவருட் குறிப்பால் அறிவித்ததுமன்றி அருளுருவாகி எங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாதொரு தடையுமின்றி அத்திரு ஞானசபையும் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருணையைக் கருதும் தோறும் பெருங்களிப் படைகின்றோம். இனி, அத்திரு ஞானசபையை அலங்கரித்தல் வேண்டுமெனக் குறிப்பித்த வண்ணம் அலங்கரிக்கத் தொடங்குகின்றோம். அருட் பெருஞ்சோதி ஆண்டவரே! தேவரீர் அருளுருவாகி எங்கள் அகத்தும், புறத்தும் அமர்ந்தருளி யாங்கள் செய்யும் இவ்வலங்காரத் திருப்பணியில் எவ்விதத்தாலும் யாதொரு தடையும் வாராத வண்ணம் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்று வித்தருளல் வேண்டும்.
சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே! அத்திரு வலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி, உண்மையறிவை விளக்கி, உண்மை இன்பத்தை அளித்துச் சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை அடைவித்து நித்தியர் களாக்கி வாழ்வித்தல் வேண்டும். எல்லாம் உடைய அருட் பெருஞ்சோதி அற்புதக் கடவுளே. இது தொடங்கி எக் காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் தடையாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்வளவும் எவ்விதத்தும், விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
எல்லாமாகிய தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் சோதி ஆண்டவரே, தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம், வந்தனம் என அருட்பிரகாச வள்ளலார் இறைவனை, நோக்கி வேண்டிய இவ்விண்ணப்பம் வள்ளலார் கண்டுணர்த்திய சமரச சன்மார்க்கத் திருநெறிக்குரிய இலக்கணமாகவும் இலக்கியமாகவும் அமைந்துள்ளமை உணர்ந்து இன்புறுதற்குரியதாகும்.



