

வேதாந்த சித்தாந்தம் மறைமலை அடிகள்
“ஆரணமார்க்கத் தாகமவாசி யற்புதமாய் நடந்தருளுங்
காரணமுணர்த்துங் கையுநின் மெய்யுங் கண்கண்
மூன்றுடைய வென்கண்ணே
பூரணவறிவிற் கண்டிலமதனாற்போற்றியிப் புந்தியோடிருந்து
தாரணியுள்ள மட்டுமே வணங்கத் தமியனேன்
வேண்டிடத்தகுமே”
சிவான்மாக்கள் உய்யும்பொருட்டுத் தனுகரண புவன போகங்களைப் படைத்துக் கொடுத்தருளிய சிவபெருமான் அவர் அறிவை இனிது விளங்கச் செய்யும் பொருட்டு,
ருஷிபுங்கவரையுஞ் சீகண்ட பரமேசுரரையும் அதிட்டித்து வெளியிட்டருளிய பிரமாண நூல்கள் வேதமும் சிவாகமங்களுமாம். அதிபரிபக்குவ முடையார்க்கு இன்றியமையா து
வேண்டப்படும் முடிபொருளை யுணர்த்தும் வேதத்தின் ஞானகாண்டப் பகுதியே வேதாந்த மெனவும், அதிதீவிர பரிபக்குவமுடையார்க்கு அங்ஙனமே முதன்மையாகப் பெறக்
கிடந்த சிவப் பேற்றை உணர்த்தும் சிவாகமப் பகுதியே சித்தாந்தம் எனவும் அறிவுடையோரால் வழங்கப்பட்டு வருகின்றன.
இனி இவ்வேதாந்த சித்தாந்தம் இரண்டும் சுத்த அனுபவ சாஸ்திரங்களாகும். வெறும் வாசாகயிங்கரியமாக விவரிக்கப்படு கின்ற தர்க்கம் மீமாம்ஸம் முதலிய சாஸ்திரங்
களைப்போலாது, சுத்த ஞான மயமாய்ச் சுத்த ஆனந்த மயமாய்ச் சுத்த அருள் மயமாய் அருவாய் விளங்கும் பரப்பிரமமான சிவத்தை வாக்கு மனங் கடந்து நின்றனுபவிக்கும்
முடிந்த நிலையை அறிவிக்கும் ஞானசாஸ்திரங்களான இவை விசேஷ அறிவோ டிருந்து விசாரிக்கற் பாலனவாம். இந்த மெய்யனுபவ வுண்மை,
“அத்துவிதவத்துவைச் சொப்ரகாசத்தனியை யருமறைகண்முரசறையவே
அறிவினுக்க நிவாகியானந்த மயமானவா தியையநா தியேக
தத்துவசொரூபத்தை மதசம்மதம் பெறாச்சாலம் பரகிதமான
சாசவதபுட்கலநி ராலம்பவாலம்பசாந்த பதவ்யோம நிலையை
நித்தநிர்மலசகி தநிஷ்ப்ரபஞ்சப் பொருளை நிர்விஷயசத்தமான
நிர்விகாரத்தைத்தடத்த மாய்நின்றொளிர்நிரஞ்சன நிராமயத்தைச்
சித்தமறியாதபடி சித்தத்தினின் றிலகுதிவ்யதேசோ மயத்தைச்
சிற்பரவெளிக்குள்வளர் தற்பரமதான பரதேவதையை
யஞ்சலிசெய்வாம்”
என்ற அருமைத் திருவாக்கால் வலியுறுத்தப்பட்டமை காண்க.
இவ்விரண்டும் அதி விசிட்ட பக்குவமுடையார்க்குப் பயன்படு முகத்தால் எழுந்த முதல் நூல்களாம். அற்றேல், இவை இரண்டு நூல்களாய்க் கொள்ளப்படுவதென்னை? ஒன்றே
அமையுமாலோ வெனின்; விசிட்ட பக்குவத்திலும் தவிர பக்குவம், தீவிரதரபக்குவம் என இருவகைப் பாகு பாடு உளதாகலின் அப்பாகுபாட்டிற்கேற்ப வேதாந்தமுஞ் சித்தாந்த
முமென இரண்டெழுந்தன. தீவிர பக்குவமுடை யார்க்கு வேதாந்தமும் தீவிரதரபக்குவமுடையார்க்குச் சித்தாந்தமும் பயன்படுதலுடையவாம். மந்ததரம், மந்தம், தீவிரம் என்னும் பக்குவமுடைய மூவர் பொருட்டு வேதம் கன்மகாண்டம்,உபாசனாகாண்டம், ஞானகாண்டம் எனப் பகுக்கப்பட்டுக் கிடந்த வாறுபோல, தீவிரம் தீவிரதரம் என்னும் விசிட்ட பக்குவமுடையார் பொருட்டும் வேதாந்தம் சித்தாந்தம் என்னும் பாகுபாடு பிறந்த தென்க. மந்ததர பக்குவமுடையார் அறிவு மிக மழுங்கி மலினமேறிக் கிடத்தலால் அவர்க்குச் சிறிதறிவு விளங்கும் வண்ணம் சோதிட்டோமம் அசுவமேதம் அஜமேதம் முதலிய யாக கன்மங்களை வகுத்தெடுத்துக் கூறிய வேதத்தின் கன்ம காண்டப்பகுதி அவ்வகையால் அவரறிவைச் சிறிது முறுகு வித்து மந்தபக்குவமாக்கி உபாசனா காண்டப் பகுதிக்கு அதிகாரமுடையராக்கி விடுத்தொழியும். பின்னர் உபாசனா காண்டப் பகுதி மந்த பக்குவமுடையார்க்கு மேலும் அறிவு விளங்குதற் பொருட்டு ஒன்றினொன் றேற்றமுடைய பல வேறு வகைப்பட்ட தேவோ பாசனைகளை விதத் தெடுத்துக் கூறி அவ்வகையால் அவரறிவை முதிரச்செய்து ஞான காண்டப் பகுதியினைப் பயிலுதற்குரிய தீவிர பக்குவ
முடையராக்கி விடுத்தொழியும். இனி ஞானகாண்டப் பகுதியும் தீவிரபக்குவ முடையானுக்கு வேண்டற் பாலதாய் நின்று அவனறிவை விரிவு செய்யும் ஜகத்ஜீவ பரங்களினியல் புணர்த்திச் சீவன் தன்னைச் சிவனாய்க் காணுமாறு வலியுறுத்தி அவ்வாற்றால் அவனறிவை வரம்பின்றி முதிரச் செய்து தீவிரதரபக்குவ முடையனாக்கிச் சிவாகமங்களைப் பயின்றனுட்டித்தற்கு அதிகாரியாக்கி விடுத்தொழியும். இனிச்
சுத்த சிவத்தையேயுணர்த்தும் சிவாகம ஞானப்பகுதி தீவிரதர பக்குவ முடையான் கருவிகரணங்க ளெல்லாங் கழன்று சிவனருளிற்றோய்ந்து சிவனாயே நிற்குமாறுணர்த்தி முடிந்த சித்தாந்தமாய் நிற்ப தொன்றாம். வேதத்திற் கன்ம காண்ட உபாசனாகாண்டப் பகுதிகள் அதன் ஞான காண்டத்திற் பக்குவ முடையாரைச்செலுத்தும் அம் மாத்திரைக்கே பயன் படுமல்லது, அந்த ஞானகாண்டப் பொருளோடு ஒற்றுமை யுற்று நிற்பன வல்லவாம். இனி வேதத்தின் ஞானகாண்டப் பொருளோ அவைபோலாது, சிவாகம ஞானகாண்டப்
பொருளோடு முழு தொத்து நிற்கும் அந்தரங்க உரிமைஉடைத்தாம். ஆகையால், வேதாந்தமான உபநிடதங்கள் பொதுவென்றும் சித்தாந்த மான சிவாகமங்கள் சிறப்பென்றும் மகா யோகிகளான திருமூலரால்
வேதமொ டாகமம் மெய்யா மிறைவனூல்
ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன
நாத னுரையிவை நாடிலிரண் டந்தம்
பேதம தென்னிற் பெரியோர்க் கபேதமே
என்று அவை அவ்வாறு அருளிச் செய்யப்பட்டன.
எனவே, வேதாந்தமும் சித்தாந்தமும் பரிபாகிகள் பேதத்தால் இரண்டாகச் சொல்லப்பட்டனவே யன்றி, அவை யிரண்டுந் தம்முட் சிறிதும் முரணாவென்பது இனிது
பெறப்படும் என்க.
அற்றேல், இனி வேதாந்தமாவது யாதெனின்:-
அனாதி சீவனைம் மலமற்றப் பாலாய்
அனாதி யடக்கித் தனைக்கண் டரனாய்த்
தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதால் வேதாந்த வுண்மையே
என்ற அருட் டிருவாக்கால் வேதாந்த மிது வென்பது
தெள்ளிதி லுணர்த்தப்பட்டது. இதன் பொருள்: “அனாதி
யாயுள்ள ஆன்மாக்கள் ஐந்து மலபந்தங்களுமறுத்து அவற்
றிற்கும் அப்பாற்பட்ட சிவனையே ஆதாரமாய்க் கொண்டு,
அனாதியாயுள்ள ஆணவ வலியைஅடக்கித் தன்னை
அரனுருவாய்க் கண்டு, அங்ஙனங் காணப் பெறுமாற்றால்
தன்னைப் பொதிந்த மலம் தானே வலிகெட்டொழியத்
தத்துவங்களின் புறம்பே பாலோடனளாய நீர்போலச்
சிவசத்தியோ டியைந்து நிற்றலே நீ கேட்ட வேதாந்த
உண்மையாம்
“அனாதி சீவன்” என்றமையால் பிரமமே ஒரு காலத்து
மாயையாற் பற்றப்பட்டுச் சீவனாயிற் றென்னும் மாயாவாதம்
வேதாந்த மாகாமை பெறப்பட்டது. அங்ஙனம் அனாதியா
யுள்ள சீவனும் ஒன்றல்ல பலவுள்ளன என்று ஆசிரியர்,
“பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாச மூன்றுண்டு
பசுத்தன்மை நீக்கியப் பாச மறுத்தாற்
பசுக்க டலைவளைப் பற்றி விடாவே”
என்று வேறிடத்தும் ஓதியவாற்றால் ஆன்மா ஒன்றே
யென்னும் ஏகான்ம வாதமும் மறுக்கப்பட்டது. இனி
“அனாதி சிவரூபமாகிய ஆன்மா” என்னும் ஏதோ ஒரு
விடுதிப்பாட்டுத் திருமந்திரத்திலுள்ளதாகப் பிறழ உணர்ந்து,
சிவமே “ஏதோ காரணத்தால் மலத்தாற் பற்றப்பட்டுச்
சீவனாயிற்று” என்று ஆன்றோருரை வழக்கோடும் அனுபவ
வழக்கோடும் முரணிக் கூறினாருமுளர். அப்போலிப் பாட்டுத்
திருமந் திரத்திருவாக்கன்றாகலானும், பிரமாணமன்றாய் யாரோ
கட்டிவிட்ட அதுகொண்டு ஏனையனுபவ சாத்திரங்
களுக்கெல்லாம் பொருந்தாவாறாய்ப் புதிதொன்று உரைத்தல்
இழுக்காமாகலானும் அவருரைக் கூற்றுப் பொருந்தாதென
மறுக்க.
“ஐம்மலம்” என்றமையால் ஆணவம், கன்மம்,
சுத்தமாயை அசுத்தமாயை, திரோதாயி என்னும் ஐந்து
மலங்களுண் டென்பதும், “அனாதி யடக்கி” என்றமையால்
அவையைந்தும் அநாதி நித்தியமா மென்பதும் வலியுறுத்தப்
பட்டன. இதனால் “மலம்” சூனியமென்னும் மாயாவாதம்
மறுக்கப்பட்டதூஉங் காண்க. இன்னும் ஆணவமின்று,
கன்மமும் மாயையுமே உள்ளன வென்பாரும், சுத்தமாயை
அசுத்தமாயை யென இருவேறு மாயைகளில்லை சுத்த
மாயையே அசுத்த மாயையா மென்பாரும் மறுக்கப்பட்டனர்.
“அப்பாலாய்” என்றது இறைவன் ஆன்மாக்களோடும்
ஐந்து மலங்களோடும் அனாதி தொட்டே ஒற்றித்து நிற்பினும்,
அவனியல்பு சேதனம், அசேதனம் என்னும் இவ்விரு பொரு
ளியல்புக்கும் அப்பாற்பட்ட தொன்றென்பது அறிவித்தது.
ஆன்மாக்கள் மலத்தான் மறைக்கப்பட்ட சேதன ரூபிகள்.
இறைவனோ அங்ஙனம் அதனாற் பற்றப்படாது அனாதியே
சொயம்பிரகாச விளக்காய்ப் பொலியும் சேதன ரூபியாம்,
மலங்களோ அசுத்தமான அசேதன ரூபமாம். இறைவனோ
சுத்தமான சேதன ரூபியாய் நிற்கும். இங்ஙனம் சேதனா சேதனப்
பிரபஞ்சங்களை யெல்லாங் கடந்து நிற்கும் இயல்புடைய
னாதல் பற்றி யன்றே,
“அளவையெலாங் கடந்து மனங்கடந்து மற்றைய றிவையெலாங்
கடந்து கடந்தமலயோக
ருளவையெலாங்கடந்து பதங்கடந்து மேலையொன்று
கடந்திரண்டு
கடந்துணரச் சூழ்ந்த
களவையெலாங் கடந்தண்டபிண்ட மெல்லாங் கடந்து நிறைவான
சுகக்கடலேயன்பர்
வளவையெலாமிருள கற்றுமொளியே மோனவாழ்வேயென்
னுயிர்க்குயிராய்வதியுந்தேவே”
என்னுந் திருவாக்கு மெழுந்தது.
இனித் “அனாதி யடக்கி” என்றது தொன்று தொட்டுத்
தன்னுடனாய் நின்று தன்னறிவை மறைத்துத் தன்னை
ஏகதேசப்படுத்தி வந்த ஆணவமல வலியை உயிர்தா
னிறைவனை ஆதரவாய்க்கொண்ட வாற்றால் ஒடுக்கிக்
கொள்ளும் என் றுணர்த்திய தென்க.
இனி “தனைக் கண்டரனாய்” என்றது அங்ஙனம்
இறைவனை ஆதரவாய்க்கொண்டு ஆணவமல வலியை
ஒடுக்கிநின்ற ஆன்மாவானது பின் அவ்வியல்பினின்று
சிறிதும் பிறழாமைப்பொருட்டு அவ்விறைவனது அருளு ருவைத்
தன்னுருவாய்க் கண்டு நிற்குமென அறிவித்தது. இதனால்
ஆன்மாத் தன்னைப்பந்தித்த மலசேட்டை ஒடுக்குதலே
வேதாந்த முடிபா மென்க. இறைவனியல்பு தானே யாய்
நிற்குந் தகைமையது; ஆன்மாவி னியல்பு தான்சார்ந்த
பொருள் வயமாய் நிற்குந் தகைமையது. பளிங்கானது
தன்னைச் சார்ந்த வண்ணங்களைத் தன்கட் பிரதிபலனமாய்க்
கொண்டு தான் அவ்வண்ணமே தன்னுருவாய்க் கொண்டு
நிற்குமாறுபோல, ஆணவம் மாயை கன்மங்களைச் சார்ந்து
நின்ற வழித் தன் குணங் குறி செய்கைக ளெல்லாம்
அவற்றியல்பாய் நிற்கும். மன்னவ குமாரன் ஒருவன் தன்
குழந்தைப் பருவத்திலேயே வேடர் களால் அபகரிக்கப்பட்டுக்
காட்டிலே அவரோடு உடன் வளர்ந்து அவர்க்குள்ள
குணங்குறி செய்கைகளெல்லாம் தன் மாட்டுத் தோன்றத்
தான் மன்னவ குமாரன் என்பதைச் சிறிது முணராமல்
இருந்தான். பின்னர் அவன் தந்தையான வேந்தன் அவனைத்
தலைப்பட்டு “நீ வேடர் மகன் அல்லை, என் மகனாவை”
என்றுணர்த்திய வழி அவன் தன் பெருமையை யுணர்ந்து தன்
தந்தையின் அரசுரிமைச் செல்வமெல்லாம் பெற்றுக் களித்தான்.
இதுபோலவே, பஞ்சமலக்கொத்தின் வயப்பட்டு உழன்ற
ஆன்மாக்களை இறைவன் குருவுருவாய் வெளிப்பட்டு நின்று
அனுக்கிரகித்து அவற்றைத் தன்னுருவாக்கிக் கொள்வன்.
இவ்வுண்மை,
“மன்னவன் றன்மகன்வேட ரிடத்தேதங்கி வளர்ந்த வனையறியாது
மயங்கிநிற்பப்
பின்னவனுமென்மகனீ யென்றவரிற் பிரித்துப் பெருமையொடுந்
தானாகப்பேணுமாபோற்
றுன்னியவைம்புல வேடர் சுழலிற்பட்டுத் துணைவனையு மறியாது
துயருந்தொல்லுயிரை
மன்னுமருட் குருவாகி வந்தவரினீக்கி மலமகற்றித் தானாக்கி
மலரடிக்கீழ்வைப்பன்”
என்ற சிவஞான சித்தித் திருவாக்கானுணர்த்தப்பட்டது.
ஸ்ரீமந் மாணிக்கவாசகப்பெருமானும்,
“வினையிலேகிடந்தேனைப்புகுந்து நின்றுபோது நான்வினைக்கேட ளென்பாய்போல
இனையனானென் றுன்னையறிவித் தென்னையாட் கொண்டெம்
பிரானானாய்க்கிரும்பின் பாவை
அனையநான்பாடேனின்றா டேனந்தோ அலறிடே னுலறி
டேனாவிசோரேன்
முனைவனே முறையோ நானானவாறு முடிவறியேன் முதலந்த
மாயினானே”
என்றருளிய அருமைத் திருவாக்கை நினைக்க நினைக்க என்
நெஞ்சம் நெகிழுகின்றது. தாயுமானச் செல்வரும்,
“வந்தெனுடல் பொருளாவி மூன்றுந்தன் கைவசமென
வேயத்து வாமார்க்கநோக்கி,
யைந்துபுலனைம்பூதங் கரண மாதியடுத்தகுணமத்
தனையுமல்லையல்லை,
யிந்தவுடலறி வறியாமையு நீயல்லையா தொன்று பற்றின
தனியல்பாய் நின்று,
பந்தமறும்பளிங்கனையசித்து நீயுன் பக்குவங்கண்ட
றிவிக்கும்பான்மை யேம்யாம்”
என்றருளிய திருவாக்கும் இதனோ டொப்பிட்டுணரற்
பாலதாம் என்ச. எனவே, காலைப் போதிலெல்லாம் தன்னருகே
யிருந்த வண்ணங் களைப் பிரதிபலித்த பளிங்கானது, சூரியன்
உச்சியிலேறிய நண்பகற் பொழுதில் அவ்வண்ணங்களைப்
பிரதி பலித்த லொழிந்து, அச்சூரியனொளி மாத்திரமே தன்
கண் விளங்கக் கொண்டு பெரும் பிரகாசமாய் நின்றவாறு
போல, ஐந்துமலக் கொத்தின் வயப்பட்டுப் பெத்த தசையில்
அவற்றின் சொரூப மாய் நின்ற ஆன்மாவானது, முத்தி
தசையில் அவற்றினின்று முழுவதுங் கழன்று சிவசூரிய
சந்நிதானத்தினின்று அச்சிவசூரிய அருளொளிவயமாயே
நிற்கு மென்றுணர்க.
இனித் “தனாதிமலங்கெட” என்றது மேற் சொன்ன
வாறு ஆன்மாத்தானவனாய் நிற்பவே தன் வலிமடங்கி நின்ற
ஆணவ மலமானது பின் தலை யெடாமலே யொழியுமென்
றறிவித்தது. ஆன்மா முத்தி யடைந்த பின் அதனைப் பந்தித்த
ஆணவ முதலிய மலங்கள் சூனியமாமோவெனின்; – அங்ஙனங்
கூறுதல் சற்காரிய வாதங் கொண்ட சைவசித்தாந்தத்திற்கு
ஏலாமையின், எல்லாப் பொருளுக்குந் தாரகமாய் நின்ற
இறைவனே ஆண்டு ஆணவ மலத்திற்குங்களை கணா
யிருப்பனென்ச. அற்றேல், அதனால் அவன் துடக்குறுவனோ
வெனின்; – துடக்குறுவானுமல்லன். ஒருவன் வயிற்றகத்தே
கிடந்த புழுக்களுக்கு உண்டாகுங் குணங் குறி வேறுபாடுகள்
அவனைச் சென்று தாக்காமைபோல ஆணவவலி யிறை
வனைத் துடக்கமாட்டா தென்க; இஃது
“உன்னுதரத்தேகிடந்த கீடமுறுவதெல்லா
முன்னுடைய தென்னாநீ யுற்றனையோ – மன்னுயிர்க
ளவ்வகையே காணிங் கழிவதுவு மாவதுவுஞ்
செவ்வகையே நின்ற சிவன்பால்”
என்னுந் திருக்களிற்றுப்படி, யாரினுங்காண்க..
இனித் “தத்துவாதீதம் வினாவு நீர் பாலாதல் வேதாந்த
வுண்மையே” என்றது தத்துவங்களுக்கு அப்பாற் பட்டதாய்த்
தானவனாய் நிற்கும் நிலையை உணர்த்தியது. நீர் பாலோடு
கூடிய வழி அப்பாலி னுருவாய்த் தன்னுருவு சிறிதுங்
காட்டாமல் அப்பாலோ டொருமைப்பட்டு நிற்றல் போல
உயிர் முதல்வ னருளோடு ஒருமைப்பட்டுத் தானது வாய்
நின்ற வழித் தனக்கென வேறோ ருருவின்றி அவ்வரு ஞருவே
தன்னுருவாய் வயங்கத் தானொரு பொருளுண் டென்பதூஉம்
அறியப்படா வாறு நிற்கும் என்க.
எனவே, சீவன் தன்னைப் பொதிந்த ஆணவ மல வலியை
அடக்கித் தன்னைத் தத்துவங்களின் வேறாய்க் கண்டு சிவனே
தானாய் நிற்றலே வேதாந்த முடிபா மென்பது சிவானந்
தானுபவ சிரேட்ட குரு மணியான திருமூலர் திருவாக்கால்
இனிது பெறக் கிடக்கின்றது. உபநிடதங்களின் முடிபாய்
வலியுறுத்து உரைக்கப்பட்ட “அகம்ப்ரஹ் மாஸ்மி”
“தத்துவமஸி” என்றற் றொடக்கத்து மகா வாக்கியங்களும்
இதனையே வற்புறுத்துகின்றன. இன்னு மிதனை.
“அதுவிதுவென்று மவனானே யென்று
மதுநீயே யாகின்றா யென்றும் – அதுவானே
னென்றுந் தமை யுணர்ந்தா ரெல்லா மிரண்டாக
வொன்றாகச் சொல்வரோ வுற்று”
என்னுந் திருக்களிற்றுப் படியார் திருவாக்காற் காண்க.
இங்ஙனம் மகா வாக்கியங்களாற் சிவோகம் பாவனை
உணர்த்திய உபநிடத முடிபையே வேதாந்த மென்று
மெய்ப்பொருளறிந்தார் உரையாநிற்ப, இம்மெய்ப்பொரு
ளறியமாட்டாத பொய்ப்பொருளுடைய ஒருசாரார் இம்மா
வாக்கிய மெய்ப்பொருளைப் பிறழ வைத்து “நான்
அவனானேன்” என்றமையானே பிரமம் என்றும் நான் என்றும்
இரண்டு பொருளில்லை, அப்பிரமமே நான், கட்புலனாய்த்
தோன்றும் இவ்வுலகமும் மற்றையவும் இல்லாத சூனியப்
பொருள்களே யாமென்று தாமறிந்த வாறெல்லாம் போய்ப்
போலி வேதாந்த மொன்றுகட்டினார். இவர் கூறும் இப்போலி
வேதாந்தம் வேதாகம புராணேதிகாச சிஷ்டாசார
முழுவதற்கும் முற்றும் விருத்தமாமென்பதனை யாமுணர்த்தல்
அவசிய மன்றாயினும் ஒருசிறிது காட்டுதும் சுவேதாசுவ
தரோப நிடதத்து.
அவ்விருவகைச் சைதன்னிய இருப்போடு சிவான்மாக்கள் அனந்தமுள்ளன வென்பதும்,என்னும் மந்திரத்தாற்சத்துவ இராசத தாமதகுண ஸ்வரூபமானமாயை என்று முள்ள தென்பதும் வலியுறுத்தப்பட்டமை காண்க.
“இங்கு மூன் ஏதொரு பொருளு மிருந்ததில்லை; ஈதுண்மையே சுருக்கு மியல்புடைய மிருத்யுவால் விழுங்கப்பட்டி ருந்தது”. என்று சிருஷ்டியாரம்பத்திற்கு முன் ஆன்மா ஆணவ சையோரக முற்றுக் கிடந்த அனாதி நிலையை இனிது விளக்கிற்று. இதில்
“இங்குமுன் ஏதொரு பொருளு மிருந்ததில்லை.” என்றது
அனாதியில் தூலகாரியமாக விளங்கும் இப் பிரபஞ்சம்
இருந்ததில்லையென அறிவிப்பதாயிற்று. அப்போது
ஆன்மாவின் வியாபக ஞானத்தைச் சுருக்குமியல் புடைய
ஆணவம் அதனை விழுங்கி யிருந்தது. அவ்வாணவம் ஆன்ம
அறிவை இறக்கச்செய்யும் அல்லது விளங்க வொட்டாது
செய்யும் இயல்புடைத்தாதல் பற்றி “ம்ருத்யு” என்னும்
பெயராற் சொல்லப்பட்டது. இன்னும் இவ்வாறே
உபநிடதங்களில் ஆண்டாண்டு இவ்வுண்மைகளை இனிது
நிறுவி விளக்கிய மந்திரங்களை எடுத்துக் காட்டலுறின்
இவ்வுபந்நியாசம் மிக விரியுமென வஞ்சி விடுக்கின்றாம்.
ஆகையால், போலி வேதாந்திகள் சொல்லும் பொருளுக்குப்
பிரமாணம் உபநிடதங்களில் பெறப்படாமையால், அவர்
கொள்கை வேதாந்த பாகியம் என ஒழித்து மேலே செல்வாம்
என்க.
இனிச் சித்தாந்தமாவது என்னையோவெனின்;
அதனையும் மெய்ப்பொருட் குரவரான திருமூலர்,
“நித்தம் பரனோ டுயிருற்று நீண்மனஞ்
சத்த முதலைந்துந் தத்துவந் தானீங்கிச்
சுத்த மசுத்தந் தொடரா வகைநினைந்
தத்தன் பரன்பா லடைதல் சித்தாந்தமே”
என்றருளிய திருவாக்காற் றுணியலாம். “மனம், சித்தம்
புத்தி, அகங்காரம் முதலிய அந்தக் கரணங்களும் சத்தப் பரிச
ரூபரஸ கந்தம் முதலிய தன் மாத்திரைகளும் மூலப்
பிரகிருதியி லுண்டான ஏனைத் தத்துவங்களும் சுத்த மாயை
அசுத்த மாயை முதலியனவு மெல்லாம் பற்றறக் கழித்து
ஆணவ வலியை ஒடுக்கி ஒழிப்பதற் கேதுவான மேற்சொல்லிய
சோகம் பாவனை வழி நின்று நித்தப் பொருளான
சிவபெருமானுட ஸிரண்டறக் கலந்து ஒன்றா யொழிதலே
சித்தாந்தமாகும்” என்பது இதன்கண் வலியுறுக்கப்பட்டமை
காண்க. இச்செய்யுளில் “நினைந்து” என்றது மேற்செய்யுளிற்
கூறிய சோகம் பாவனையேயாம். இதனால், சித்தாந்தம்
என்பது வேதாந்தத்திற்கும் அப்பாற் சென்ற முடிபாம்.
வேதாந்தம், சிவோகம், பாவனை வரையிற் சென்றது.
சித்தாந்தம் அதற்கு மேலும் போய் நின்றது. சிவோகம்
பாவனை வலியுறுத்தும் மாவாக்கிய உபநிடத முடிபால்
அச்சிவோகம் பாவனையுள்ளும் ஆன்மாவில் நான் என்னும்
உணர்வு நின்ற தென்பது தெற்றெனப் புலப்படும். நான்
என்னும் உணர்வு மிடைநிகழச் சிவகோம்பாவனை செய்து
நின்ற விடமே வேதாந்தமாம். அவ்வுணர்வுங் கெட்டுச்
சிவமாய் நின்ற விடமே சித்தாந்தமாம். இவ்வியல்பை
இன்னும் விளக்கமாக வைத்துத் திருமூலயோகிகள்
“தானான வேதாந்தந் தானென்னுஞ் சித்தாந்த
மானா துரியத் தணுவன் றனைக்கண்டு
தேனார் பராபரஞ் சேர்சிவ யோகமா
யானா மலமற் றருஞ்சித்தி யாதலே”
என்றருளிச் செய்த பெருங்கருணைத் திறத்தை
யாதெனமொழிவேம்! “தானானவேதாந்தம்” என்பதனால்
சிவவுணர்வும் தன்னுணர்வும் ஒருங்குபட்டு நின்ற சிவோகம்
பாவனாநிலை அறிவிக்கப்பட்டதாயிற்று. “தான் என்னுஞ்
சித்தாந்தம்” என்பதனால் தன்னுணர்வின்றிச் சிவ வுணர்வு
மாத்திரமாய் நின்றநிலை அறிவிக்கப்பட்டதாயிற்று. ஸ்ரீமந்
மாணிக்கவாசக சுவாமிகள் அடைந்த முத்தியே முடிவான
தென்று நூல்வழக்கானும் ஆன்றோர் வழக்கானும் துணியப்
பட்டுக் கடத்தலின் அப்பெருமான் இச்சித்தாந்த நுண்முடிபு
தேற்றிய
“அவமாய தேவரவகதியிலழுந்தாமே
பவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர் நல்குதலு நாமொழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ”
“வான்கெட்டு மாருதமாய்ந் தழனீர் மண்கெடினுந்
தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்
கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டெ னுள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ”
“இன்றெனக்கருளி யிருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே
போன்று
நின்றநின்றன்மை நினைப்பற நினைந்தே னீயலாற்பிறிது
மற்றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாந்
திருப்பெருந்துறையுறை சிவனே
ஒன்றுநீயல்லை யன்றியொன்றில்லை யாருன்னை
யறியகிற்பாரே”
என்ற சித்தாந்த அருட் செம்பாடல்கள் திருமூலர்
திருவாக்கோ டொற்றுமை யுறுதல் காண்க.
இனி இவ்வேதாந்த சித்தாந்த மென்னும் இரண்டனுள்
ஒன்று ஏனையொன்றற்கு உபகாரமாய் நிற்றலால் இவை
யிரண்டும் மெய்ப்பொருள் நந்தாமணி விளக்காய்த் திகழும்
சிவஞானபோதத்து ஒருங்குணர்த்தப்பட்டன.
“அவனே தானேயாகிய வந்நெறி
யேகனாகி யிறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினையின்றே”
என்னும் பத்தாஞ் சூத்திரம் வேதாந்தப் பொருளான சிவோகம்
பாவனை உணர்த்துவதாம். வேதாந்தத்தின் பயன் பாக்ஷயம்
பண்ணுதலே யாமென்பது மேலே விரித்துக் காட்டப்
பட்டமையின், பதினோராஞ் சூத்திரத்தி லுணர்த்தப்படும்
சித்தாந்த முத்தி முடிவுக்கு முன்னதாகப் பாக்ஷயம் பண்ணுதற்
கண் நிகழும் வேதாந்த வழியை ஆசிரியர் மெய்கண்டதேவர்
பத்தாஞ் சூத்திரத் தோதியருளினார் என்க. பின்னர்க்,
“காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போற்
காண வுள்ளத்தைக் கண்டு காட்டலி
னயரா வன்பி னான்கழல் செலுமே”
என்னும் பதினோராஞ் சூத்திரத்தில் சித்தாந்த முத்திமுடிபு
நிலையிட்டருளினார் என்க. இங்ஙனம் வேதாந்தமுஞ்
சித்தாந்தமும் ஒன்றுக் கொன்றணுக்கமாய் நிற்றலினாலன்றே,
“வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை
பெற்றவித்தகச்சித் தர்கணமே”
“வேதாந்த சித்தாந்தமே பிறவாவீடென்றான்
ஓதாமல் வேதமுணர்ந்தோன்”
“ஒரும்வேதாந்த மென்னுச் சியிற்பழுத்த
ஆராவின்பவருங்கனிபிழிந்து
சாரங்கொண்ட சைவசித்தாந்தத்
தேனமுதருந்தினர்சிலரே”
என்றற் றொடக்கத்துத் திருவாக்குக ளெழுந்தன..
இனி, இங்ஙனம் வேதாந்த சித்தாந்தம் என்னும்
இரண்டனுள் வேதாந்தம் சித்தாந்தத்திற்கு வழியாய் நிற்றல்
பற்றியன்றே பிரதமத்தில் எடுத்துக் கொண்ட திருவாக்கில்
“ஆரணம்” மார்க்கமாம் என்றும், “ஆகமம்” அம்மார்க்கத்திற்
செல்லுங் குதிரையா மென்றும் சொல்லப்பட்டன. வேதாந்த
முடிபான ‘சோகம் பாவனை”: தலைப்படுதலின்றிச் சித்தாந்தத்
துட்புகுதல் ஒருவாற்றானுங் கூடாமையின், அச்சோகம்
பாவனை வழியே செல்லுவதாகிய சித்தாந்த முத்தியினைக்
குதிரை யென்றுவமித்தது பெரிதும் பொருத்த முடைத்தாதல்
காண்க.
இன்னும் தாயுமானச் செல்வனார் தாமுணர்த்தப்
புகுந்த வேதாந்த சித்தாந்த முடிபு பொள்ளெனப் புலப்படுதற்
பொருட்டுப் பூரண அறிவிற் கண்டிலம்” என்றும் அதனால்
போற்றி யிப்புந்தி யோடிருந்து தாரணியுள்ள மட்டுமே
வணங்க” என்றும்அறிவுறுத்தருளினார். இவற்றுட் “பூரண
வறிவிற் கண்டிலம்” என்பது சித்தாந்த முடிபையும்,
மற்றையது வேதாந்த முடிபையும் இனிது அறிவுறுக்கின்றன.
சிவனது அருட்பரிபூரணம் உயிராற் பெறப்பட்ட விடத்து
உயிர்க்கொரு செயலுமின்றி ஆன்ம வியற்கை யெல்லாம்
முழுதுங் கெட்டுச் சிவமே யெங்குமாய் நிற்கு மாகலின்
ஆண்டு ஞாதுருஞான நேயப் பாகுபாடு சிறிதுங்
காணப்படுவதில்லை யென்றார். பிறாண்டும் ஆசிரியர் அச்
சித்தாந்த முத்தியி னியல்பு விளங்கத் தெரிப்பான் வேண்டித்,
“தானான தன்மயமேயல்லா லொன்றைத் தலையெடுக்க வொட்டாது தலைப்பட்டாங்கே
போனாலுங் கர்ப்பூர தீபம்போலப் போயொளிப்பதல்லாது புலம்வேறின்றாம்
ஞானாகாரத்தினொடு நேயமற்ற ஞாதுருவு நழுவாமனமுவி நிற்கும்
ஆனாலு மிதன் பெருமை யெவர்க்கார் சொல்வா ரதுவானா
லதுவாவரதுவே சொல்லும்”
““அதுவென்றா லெதுவெனவொன் றடுக்குஞ் சங்கையாதலினா லதுவெளலு மறவேவிட்டு
மதுவுண்ட வண்டெனவுஞ் சனகனாதி மன்னவர்கள் சுகர் முதலோர்
வாழ்ந்தாரென்றும்
பதியிந்த நிலையெனவு மென்னையாண்டபடிக்கு நிருவிகற்பத்தாற் பரமானந்தக்
கதி கண்டு கொள்ளவு நின்னருள் கூரிந்தக் கதியன்றி யுறங்கேன்மேற்
கருமம்பாரேன்”
என்றருளிச்செய்த திருவாக்குகளின் அருமை பெருமையை
என்னென்பேம்! “அதனாற் போற்றி யிப் புந்தியோடி ருந்து
தாரணி யுள்ளமட்டுமே வணங்க” என்றது சீவன் முத்தர்
தம்மருமைச்சரீரத் தோடிருக்குங் காறும் “நான்” என்னும்
உணர்வு இடையிடை நிகழச் சிவோகம் பாவனை
செய்திருக்குமாறு வகுத்துணர்த்தியது. “இப்புந்தி” என்பது
“நான்” என்னும் உணர்வை, இவ்வுட லொழிந்தபின்
இச்சிவோகம் பாவனையினின்று முறுகிய அவர் “கர்ப்பூர
தபம்” போலச் சிவனருளாய்க் கரைந்து போவர் என்க.
அற்றேல், ஆத்மா முத்தியில் இல்லாத சூனியப்
பொருளாயொழியும் போலுமெனின் – அற்றன்று. ஆணவ
மல சம்பந்த முற்றிருக்குங்காறும் பசு” வென்னும் பெயர்
பெற்ற உயிரானது அதன் சம்பந்த மறுத்துச் சிவசம்பந்த
முற்றுச் சிவமாய் நின்றவழி அதனை அப்பெயரிட்டு
வழங்கலாகா தென்றதே யன்றிப்பொருளுண்மை ஆண்டும்
மறுக்கப்படா தவாறேயா மென்க. இம்முடிந்த வுண்மை.
“கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை
வல்லாளனாய் வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம்
பல்லோருங் காண பென்றன் பசுபாச மறுத்தானை
எல்லோரு மிறைஞ்சு தில்லை யம்பலத்தே கண்டேனே”
என்னும் ஸ்ரீமந் மாணிக்கவாசக சுவாமிகள் திருவாக்கிற்
காண்க. ஆயினும் அவாங்மனகோசரமான அந்த முத்தி
நிலையைப்பற்றித் தாயுமான சுவாமிகளே “ஆனாலு மிதன்
பெருமை யெவர்க்கார் சொல்வார்” என்று சொல்லக்
கூடாமையைத் தெரிவித்தருளினர்களாயின் ஒன்றுக்கும்
பற்றாத சிறியேன் எங்ஙனம் அதனை உரைக்க வல்லேன்?
அம்முத்தி நிலையை அதனை உண்மையா ஸனூணர்ந்த
சித்தாந்தச் செல்வர்,
முத்திதனின் மூன்று முதலு மொழியக்கேள்
சுத்த வனுபோகத்தைத் துய்த்தலணு – மெத்தவே
இன்பங் கொடுத்தலிறை யிந்தைவிளைவித்தன் மலம்
அன்புடனே கண்டு கொளப்பா
என்றருளிய திருவாக்கான் உணர்ந்துகொள்க.
இனி, “ஆரண மார்க்கத் தாகமவாசி” என்னுந்
திருவாக்கிற் சோகம் பாவனை செய்தற்கு இன்றியமையாத
மெய்ப்பொருள் முறையும் உபதேசிக்கப்பட்டிருக்கின்றது.
அது பக்குவமுடைய சீடனியல்பறிந்து மெய்க் குருவால்
உணர்த்தற்பாலதன்றி, வேறொரு வாற்றானும் வெளியிடற்
பாலதன்றாகலானும், வெளியிடிற் பெரியோர் சாபம்வந்
தெய்துமாகலானும் அதனைப் பற்றிச் சிறிது முரையாது
விடுக்கின்றாம்.
வேதாந்த சித்தாந்தம் முற்றும்.



