தமிழ் மருந்துகள்
கி.ஆ.பெ. விசுவநாதம்

தமிழ் மருந்துகள்
கி.ஆ.பெ. விசுவநாதம்

மதிப்புரை

‘மருந்து’ என்ற சொல்லுக்குப் பண்டைய மருத்துவப் புலவர்களான சித்தர்கள் மிக உயர்ந்த பொருள் கொடுத்திருந்தனர்.

மறுப்பதுடல்நோய் மருந்தென லாகும்மறுப்ப துளகோய் மருந்தெனல் சாலும்மறுப்ப திணிநோய் வாரா திருக்கமறுப்பது சாவை மருந்தென லாமே

எனும் செய்யுள் இதனை வலியுறுத்துகிறது. மக்களின் உணவு செயல்கள் ஒவ்வாமையாலே உடலிலுள்ள வளி, தீ, நீர், (வாத, பித்த, கபம்) ஆகிய மூன்றும் தத்தம் இயற்கையளவில் மிகுந்தும் குறைந்தும் நோய் உண்டான காலத்து, நமது முன்னோர் அந்நோய்களை வெயிலிற் காய்தல், எண்ணெய் முழுக்கு, பட்டினியிருத்தல், உணவு முறைகளில் மாற்றம் செய்தல் போன்ற, இயற்கையானதும் எளிதானதுமான பக்குவங்களால் அவற்றைத் தீர்த்து வந்தனர். இவை போதாதெனில் பச்சிலை,கொடி, வேர், கிழங்கு, பூ, காய், கனி, வித்து முதலானவற்றாலாகிய சாறு, குடிநீர், எண்ணெய், இலேகியம் போன்ற மருந்துகளைக் கொடுத்தனர். இதனாலும் தீர்க்கவியலாத, நோய்களுக்கு, உப்புகள், ரசகந்தக பாடாணங்கள் போன்றவற்றால், நீறு, செந்தூரம் போன்ற மருந்துகள் செய்தனர். அறுவை, குறுதி (இரத்தம்) வாங்கல் போன்ற பல முறைகளும் இருந்து வந்ததை நூல்களிலிருந்து அறிகிறோம். முன்னர்க் கூறிய செடி கொடிகளை மருந்துகளாய்ப் பயன்படுத்தும் முறைகளை வீட்டிலிருக்கும் பெண்கள், வயதான பாட்டிகள் எல்லோரும் அறிந்திருந்தனர்.இதனை, வீட்டு வைத்தியம்’, ‘பாட்டி வைத்தியம்’ என்றெல்லாம் அழைக்கிறோம். இந்த அருமையான முறையான முறைகளெல்லாம் கையாளாத காரணத்தால், எடுத்துச் சொல்வாரின்மையால், நாள்தோறும் மறைந்து அழிந்து வருகின்றமையாலும், மக்கள் நோய் அணுகா நெறியினைக் கடைப்பிடிக்காததாலுமே, இன்று நாட்டில் நோய்கள் மிகுந்து வருகின்றன. இந்நிலையில் எளிய மருத்துவ முறைகளை எல்லோரும் அறியும்படி செய்ய தமிழ் மருந்துகள்’ போன்ற நூல்கள் பல தேவை.

ஆசிரியர் அறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களைத் தமிழ் மக்களுக்கு நான் அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அவரைப் போன்ற நாட்டு நலனுக்காக உழைக் கிறவர்கள், பொதுமக்களுக்குப் பயன்படும் தமிழ் சித்த மருத்துவ முறைகளைப் போற்றிக் காக்க முன்வந்துள்ளது நம்மக்களுக்கு நல்ல காலமேயாகும். இச்சிறிய நூலிற் கூறப்பட்டுள்ள முறைகளைக் கையாளுவதில் அதிக முயற்சி தேவை இல்லை. பொருட் செலவோ குறைவு, உட்கொண்டால் என்ன நேருமோவென அஞ்சும்படியான நச்சுப் பொருட்கள் இல்லை, ஆதலின் இதனை ஒவ்வொரு வீட்டாரும் வாங்கிப் பயன்படுத்தி நலமடைவாரென எண்ணுகின்றேன்.

தங்களன்பிற்குரிய,
பண்டித எஸ்.எஸ்.ஆனந்தம்
(அகில இந்திய சித்த வைத்திய சங்கத் தலைவர்)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *