தமிழ் மருந்துகள்
கி.ஆ.பெ. விசுவநாதம்

ஞாயிற்றின் தோற்றம்
கடலின் அலை
வாணத்தின் வண்ணம்
திங்களின் ஒளி
மலையின் உச்சி
அருவியின் வீழ்ச்சி
செடியின் பசுமை
மலரின் வனப்பு

முதலியவைகளைப் பார்; அவற்றை உற்று நோக்கு; அதன் இயற்கை அழகுகளையெல்லாம் அள்ளிப் பருகு. அதனால் உனக்கு மகிழ்ச்சி தோன்றும். அதைவிட உன் கொடிய உள்ளத்தைத் திருத்தி, பண்படுத்தும் மருந்து இவ்வுலகில் எதுவும் இல்லை.

எச்சரிக்கை

சீசாவைத் திறந்ததும் முகர்ந்து பாராதே! அதில் நஞ்சு மருந்து இல்லை; நஞ்சு மருந்து இருந்த சீசாவும் அதுவல்ல. ஆனால், அதில் நெடுநாளாக அடைப்பட்டு இருக்கிற காற்று நஞ்சாக இருக்கிறது. மக்களின் உடல் நலத்தைக் கெடுப்பதற்கு இந்த நஞ்சுக் காற்றே போதுமானது. ஆகவே எச்சரிக்கையாக இரு உன் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் இதைச் சொல்லிவை.

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி என்பது ஒருவகைக் கீரையின் பெயர். அதை அருந்தினால் உடல் “பொன்னாம் காண் நீ” என்பது கருத்து. தனியாகவும் பருப்புடனும், சமைத் துண்ணலாம். வாய்க்கும் உருசியானது. 12 நாள் தொடர்ச்சியாகச் சாப்பிடப் பலன் அதிகமாகத் தெரியும். எப்போதும் சாப்பிட்டு உடம்பை, இரும்பாக்குங்கள். அது அயச்சத்து நிறைந்த அருமையான பொருள். எங்கும். கிடைக்கும்.

அஸ்தி ஜூரத்துக்கு

விஷ்ணுகிராந்தி இலைகளைப் பசும்பால் விட்டு அரைத்துக் கலக்கி குடித்தால் எலும்புக்குள்ளே உள்ள காங்கை நீங்கும். தினந்தோறும் காலையில் மட்டும் ஒரு வேளை போதும். மூன்று நாளைக்குமேல் மருத்து தேவை இராது.

கணைச் சூட்டுக்கு

காய்ச்சிய பசுவின் பாலில் வில்வப் பழச்சதையைக் கலந்து, சக்கையை நீக்கி உட்கொண்டால் கணைச்சூடும் கடுமையான வெக்கை நோயும் நீங்கும். தொடர்ச்சியாக இருபத்து நான்கு நாள் அருந்தலாம். எவ்விதப்பத்தியமும் இல்லை.

வெட்டை நோய்க்கு
  1. காட்டுக்கொத்தவரை இலைச்சாற்றை நல்லெண்ணைய்யில் கலந்து உட்கொள்ள, வெட்டைநோய் விரைவாகத் தீரும். காலையில் மட்டும் மருந்து அருந்த வேண்டும். மூன்றே நாட்களுக்கு மருந்து போதுமானது.
  2. சிறு அம்மாம் பச்சரிசிப் பூண்டைக் கொண்டுவந்து வேர் உட்பட அப்படியே அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்துப் பசும்பாலிற் கரைத்து காலை மாலை குடித்துவர, மூன்றே நாட்களில் வெட்டைநோய் நீங்கும். பத்தியம், கண்டிப்பாய்ப் புளி கூடாது. வெட்டை சூட்டுக்கு
  3. ஆலம் விழுதுத் தளிரையும் அதன் விதையையும் அரைத்துப் பசும்பாலிற் கலந்து உட்கொண்டால், வெட்டை, மேகம், உடல் எரிச்சல் முதலிய யாவும் நீங்கும்.
  4. ஒரு இரஸ்தாளி, வாழைப்பூவை, மட்டையை நீக்கி எடுத்து, நரம்போடு போட்டு அரைக்காற்படி பசும்பால் விட்டு இடித்து வடிகட்டி, பனங்கற்கண்டு கலந்து குடிக்க வெட்டைச் சூடு வியக்கத்தக்க முறையில் விலகும். காலை நேரத்தில் மட்டும் 3 நாள் மருந்து போதுமானது. புளி, காரம் கூடாது. மூல நோய்க்கு
  5. கோரைக்கிழங்கு ஒரு பங்கும், வெள்ளைப்பூண்டு இரண்டு பங்குமாக வைத்து நசுக்கி, எலுமிச்சம் பழ அளவு எடுத்து, பாலிற் போட்டுக் காய்ச்சி காலை மாலை சாப்பிடவும். கண்டிப்பாய்ப் புளி கூடாது.
  6. மூலப் புண் ஆறுவதற்கு பாவட்டை இலையை அவித்துக் கட்டுவதே போதுமானது. இரண்டே வேளையில் குணம் காணலாம்.
  7. மூலநோய் உள்ளவர்கள் இப்போது காப்பிக் குடியர்களாயிருந்தால் அதை உடனே நிறுத்திவிட்டு, காலையிற் குளித்தவுடன் பழைய சோறு, தயிர், சுண்டை வற்றல், ஈர வெங்காயம், நீராகாரம் ஆகியவைகளைச் சாப்பிட வேண்டும். மருந்துமில்லை; அலுப்பும் இல்லை; பத்தியமுமில்லை; பணச் செலவுமில்லை; ஐந்தே நாட்களில் அருமையான குணத்தைக் காணலாம்.
  8. ஊமத்தை இலையைச்சாறு பிழிந்து 5 முதல் 8 சொட்டுகள்வரை அரைக்காற்படி எருமைத் தயிரில் விட்டுக் கலக்கிக் குடிக்க, மூலக்கடுப்பும் இரத்த மூலமும் தீரும். 8 சொட்டுக்குமேல் கண்டிப்பாய்க்கூடாது, தினந்தோறும் காலை வேளைகளில் மட்டும் 3 நாள் மருந்து போதுமானது.

(இது நச்சு மருந்து: எச்சரிக்கை!)

  1. நெல்லி முள்ளியும், வெந்தயமும் வறுத்துப் பொடி செய்து தயிரிற் கலக்கி உண்டால், மூலக் கடுப்பு உடனே விலகும்.

இரண்டு வேளைக்குமேல் மருந்து தேவையிராது, காலை நேரத்தில் மட்டும் அருந்தவும்.

  1. அறுகம் புல்லைத் தளிராக மூன்று அல்லது ஐந்து இலையுள்ளதாக எடுத்து வந்து அரைத்துப் பசுவின் பாலிற் கரைத்துக் குடிக்க மூலக்கடுப்பு, இரத்தம் விழுதல், மூல முளை, தேகக் காங்கை முதலியவை தீரும். ஐந்து நாளைக்குமேல் சாப்பிட வேண்டியதில்லை. காலையில் ஒரு வேளையே போதுமானது.
    நல்லெண்ணெய், புகையிலை, புளி, மிளகாய் கூடாது.
  2. பால்துத்தி இலையைக் கொண்டு வந்து பசுவின் பாலைத் தெளித்து வதக்கிக் கட்ட மூலக் கடுப்பு உடனே தீரும்
  3. துத்தி இலையைக் கொண்டு வந்து, ஆமணக்கு எண்ணெய் ஊற்றி இரும்புக் கரண்டியில் வதக்கிக் கட்ட மூலநோய் நீங்கும். கட்டி, ரணம் முளைகளும் நீங்கும். இரத்த மூலத்திற்கு

பிரண்டையை நெய் விட்டு வறுத்து அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு காலை மாலை இருநேரமும் சாப்பிட, இரத்த மூலம் நீங்கும். 3 நாள் மருந்து போதுமானது.

வயிற்றுக் கடுப்புக்கு

சப்பாத்திக் கள்ளிப் பழச்சாறும் சீனியும் கலந்து மூன்று நாள் மாலை நேரத்தில் சாப்பிட, வயிற்று உழைச்சல் தீரும். மூன்று நாட்களும் கண்டிப்பாய் மிளகாய். காரம் கூடாது.

வயிற்று உப்புசத்திற்கு

பெரிய மஞ்சட் கிழங்கை அடுப்பிற் போட்டுச் சுட்டுக் கரியாக்கி நன்றாகப் பொடி செய்து, இரண்டு விரல்களால் எடுக்கும் தூளை பாலிற் கலந்து குடிக்க, வயிற்று உப்புசம், மூச்சுத் திணறல் முதலியன நீங்கும்.

வயிற்று வலிக்கு

சுக்கு, மிளகு, அரிசித் திப்பிலி மூன்றையும் சமமாக எடுத்துத் தனித்தனியாகச் சட்டியில ஏற்றி வறுத்து, பொடி செய்து, துணியில் வடிகட்டி, சுண்டைக்காயளவு எடுத்து பசு நெய்யிற் கலந்து சாப்பிடவும். பத்தியம் புளி, மிளகாய் கூடாது.

சீதபேதிக்கு

சீதக்கடுப்பு நோயால் இனி துன்பமடைய வேண்டியதில்லை. அது வியக்கத்தகுந்த விதமாக நீங்குவதற்குரிய மருந்து இது.

  1. அரைக்காற்படி அளவு நெற்பொரியை மென்று தின்று தண்ணீர் குடிக்கவும். குழந்தைகளானால் தின்னும் அளவுக்குக் கொடுக்கவும். இரண்டே வேளை போதுமானது.
  2. கால் வீசம்படி வெந்தயத்தை ஒரு வீசம்படி தண்ணிரில் இரவில் ஊறவைத்து, மறுநாட் காலையில் வெந்தயத்தையும், அதன் சாற்றையும் அருந்தினால், வயிற்று உழைவு, சீதக்கட்டு, சீதக்கடுப்பு முதலிய நோய்கள் இரண்டே வேளையில் தீரும்.

பத்தியம்: காரம் கண்டிப்பாய்க் கூடாது.

மூன்று வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த இரண்டாவது மருந்து உதவும்.

சீதக்கடுப்புக்கு

முற்றின கடுக்காய் ஒன்றைப் பழைய துணியிற் சுற்றி நன்றாக எறியவிட்டு, எரிந்த தோலை (கொட்டையை நீக்கிவிட்டு) மட்டும், நன்றாகப் பொடி செய்து விளக்கெண்ணெயிற் குழைத்துக் கொடுக்க, வயிற்றுக் கடுப்பு, சீதம், வெண்சீதம், இரத்தப்போக்கு, கடுப்பு முதலியன உடனே விலகும். பெரியவர்களுக்கு 3 விரலால் எடுக்குந் தூளும், குழந்தைகளுக்கு 2 விரலால் எடுக்குந் துளும் அளவு. 3 வேளை மருந்து போதும். காரம் கூடாது.

மேகப் பித்தத்திற்கு

பேயம் பழத்தில் சர்க்கரையும், சீரகமும் கூட்டிச் சிறிது பசுநெய்யுங் கலந்து பிசைந்து, காலை வேளைகளில் அருந்த மேகப் பித்தம் தீரும்.

மேக நோய்க்கு

அவரை இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு காலையும் மாலையும் மூன்று நாட்கள் சாப்பிட, மேக வியாதிகள் பலவும் தீரும். மூன்று நாட்களும் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும்.

சிறுநீர் எரிச்சலுக்கு

ஓரிலைத் தாமரையை அப்படியே உலர்த்தி இடித்துத் துணியால் வடிகட்டிப் பசுநெய்யிற் கலந்து உட்கொண்டால், சிறுநீர் எரிச்சல் உடனே விலகிவிடும் மூன்று வேளை மருந்து போதுமானது. பத்தியம் இல்லை.

நீர்ச் சுருக்குக்கு

வாழைக்கிழங்கை அரைத்து, எலுமிச்சங்காய் அளவு எடுத்து, துணி சுட்டுக் கருக்கிய சாம்பல் 2 வராகனிடை சேர்த்து, விளக்கெண்ணெயில் குழப்பிச் சாப்பிட, நீர் அடைப்பு, நீர்ச் சுருக்கு, நீர்க் குத்தல் நீங்கும். எந்த நேரமும் அருந்தலாம். இரண்டே வேளை மருந்து போதுமானது. பத்தியமில்லை.

சிறுநீரில் தித்திப்பு இருந்தால்

எள்ளுப் புண்ணாக்கை இடித்து மண் இல்லாமல் சலித்து எடுத்து, நாட்டுச் சர்க்கரை சிறிது கலந்து சாப்பிட, சிறுநீரில் உள்ள தித்திப்பு தொடக்க நிலையிலிருந்தால் மாறும். பாகற்காய் சூப்பும் பயன் தரும்.

மூத்திரப்பை சுத்தி அடைய

எலுமிச்சம் பழச்சாறு கலந்த ரசம், சர்பத், மோர் இவைகளைச் சாப்பிட, மூத்திரப் பைக் கோளாறுகள் அனைத்தும் விலகும். இது நீர் எரிச்சலை உடனே நிறுத்தும்.

நீர் பிரிய

வெள்ளரி விதையை அரைத்து, வயிற்று உப்புசத்தின் மீது பற்றுப் போட்டால் உடனே நீர் பிரியும்.

வாய் வேக்காளத்திற்கு
  1. திருநீற்றுப் பச்சிலையை வாய்கொண்ட மட்டும் போட்டுத் தினந்தோறும் அதிகாலையில் மட்டும் மென்று தின்ன, வாய் வேக்காளம் தீரும். ஐந்து நாள் தின்பது போதுமானது.
  2. வெதுப்படக்கி இலையைக் கொண்டுவந்து கீழும் மேலும் வைத்து நடுவில் ஒமத்தை வைத்து, சிறிதளவு தண்ணிர் விட்டு வேடுகட்டி வேகவையுங்கள். பிறகு அதை அப்படியே இடித்துச் சாறு பிழிந்து கொடுங்கள். குழந்தைகளின் உட்புண், மாந்தம், வாய் வேக்காளம் முதலியவை தீரும். வாய்வுப் பிடிப்புக்கு

தழுதாளை இலையைக் கொண்டு வந்து தண்ணிரிற் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். கொதிப்பு ஆறி இளஞ்சூடாக இருக்கும்போது வாய்வுப் பிடிப்பு உள்ள இடத்தைத் தேய்த்துத் கழுவுங்கள். பிடிப்பு உடனே விலகுவதைக் காண்பீர்கள்.

வாய்வு வலிகளுக்கு

சித்திரமூல வேரின் பட்டையில் கால் வராகன் எடை பாலில் போட்டுக் காய்ச்சி, இராக்காலத்தில் ஒருவேளை மட்டும் அருந்த வேண்டும். கீல்வலி, அண்டவலி, வாய்வு வலி முதலியவை நீங்கும். மூன்று இரவுக்குமேல் அருந்த வேண்டியதில்லை. சித்திர மூலவேரின் பட்டை கால் வராகன் எடைக்குச் சிறிதும் அதிகப்படக் கூடாது.

பத்தியம்: நல்லெண்ணையும் கடுகும்.

க்ஷயத்திற்கு

விஷ்ணுகாந்திச் செடியை அப்படியே அரைத்துப் பசும் பாலில் கலந்து கொடுத்தால், க்ஷயரோகம் விலகும். காசம் இருமல் தீரவும், கண்ணொளி உண்டாகவும். இதே மருந்துதான் காலை வேளைகளில் மட்டும் அருந்தவும்.

ஆஸ்துமாவுக்கு

ஆஸ்துமா என்ற காச நோய்க்கு, வெள்ளை எருக்கம் பூவிலுள்ள மூடு இதழ்களை விலக்கி, உள்ளே தேர் போன்ற நரம்பு ஒன்றை மட்டும் கிள்ளி எடுத்து, ஒரு நரம்பும் ஒரு கிராம்பும் ஒரு வெற்றிலையில் வைத்துக் கொடுத்து மென்று தின்னச் செய்யுங்கள். தினந்தோறும் காலையில் ஒரு வேளை. இம் மருந்து தொடக்க நோயுள்ளவர்களுக்கு முழுக் குணத்தைத் தருகிறது. நாள் மருந்து போதுமானது. அதிகமாகக் காசநோயால் கஷ்டப்படுகிறவர்கள். அப்போதைக்கப்போது சாந்தியாக, இம்மருந்தை எளிதில் கையாளலாம். ஒரேவேளை மருந்து, 5 நிமிடத்தில் குணங்காணலாம்.

காசத்திற்கு

கடல் நுரையை இரண்டு விராட்டிகளுக்கு இடையில் வைத்துத் தீ வைத்துவிட்டால் பஸ்பமாகிவிடும். அதை இரண்டு விரல்களால் எடுத்துத் தேனிற் குழைத்துக் கொடுத்தால், கஷயம், காசம், இழுப்பு முதலியன விலகும். மூன்றே வேளை மருந்து போதும், புகை பிடித்தல், புளி, காரம் கூடாது.

நெஞ்சுச் சளிக்கு

விரலி மஞ்சளை விளக்கிற் காட்டிச் சுட்டு, அதன் புகையை மூக்கின் வழியாக உறிஞ்ச, நெஞ்சுச் சளி, தலை வலி முதலியன நீங்கும்.

கக்குவான் நோய்க்கு
  1. இந்நோய் வந்த பிள்ளைகள் அதிகமாக வருந்தித் துன்பமடைவர். இது ஒர் ஒட்டுவாரொட்டி நோயாகும். இருமும் பிள்ளைகளின் காற்று வாடையிலிருந்தாலும் இந்நோய் ஒட்டிக்கொள்ளும். இந்நோய்க்கு மருந்தாக முதலை உப்புக் கண்டத்தைச் சுட்டுத் தின்னச்செய்வது நமது நாட்டு வழக்கம். இது ஒரு நல்ல மருந்துதான். என்றாலும், இந்நோய்க்கு அறுபதுநாள் அதிகாரம் செய்யும் ஆற்றல் இருக்கிறது.
  2. காதறுந்த மிகப்பழைய செருப்பின் தோலைச் சுட்டுச் சாம்பலாக்கிக் கொள்ளுங்கள். அதேபோல, முற்றின வேப்பமரத்துப் பட்டையிலுள்ள மேல் தோலை மட்டும் சுட்டுச் சாம்பலாக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சரி பங்காக எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வேளை ஒன்றுக்குக் காசளவு எடுத்துத் தேனிற் குழைத்து உட்கொள்ளச் செய்யுங்கள். காலையும் மாலையும் மூன்று நாள் மட்டும் கொடுக்கவும், இடையில் ஒரு வாரம் விட்டு மறுபடியும் மூன்றுநாள் கொடுக்கவும். பதினைந்தாம் நாளிலேயே குணங்காணலாம். குழந்தைகளுக்குப் பத்தியம் ஏதும் இல்லை.
  3. மூன்று அவுன்ஸ் தூதுவளைச் சாற்றில், 1 அவுன்ஸ் பசுநெய் சேர்த்து 1/2 விராகனிடை கோஷ்டத்தைத் தட்டிப் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடித்துக் கொண்டு. காலை மாலை ஒரு தேக்கரண்டி வடித்துக் கொடுக்கவும். விரைவிற் குணப்படும். பத்தியமில்லை.
  4. ஆமை ஓட்டையும், வீட்டு மிளகையும், மயில் இறகையும் தனித்தனியே சுட்டுச் சாம்பலாக்கிக் கலந்து காசு அளவு தேனில் குழைத்துக் கொடுக்கவும். பத்தியம் இல்லை. கவம் விலக
  5. தும்பைப் பூ சிலவற்றையும், வேப்பங் குச்சியை பூப்போலச் சீவிக்கொஞ்சம் சேர்த்தும் ஒரு பொட்டலமாகக் கட்டி ஊறப்போட்ட பிள்ளைப்பாலைச் சொட்டுச் சொட்டாகக் கொடுக்க, தொண்டையிற் கட்டியுள்ள கவக்கட்டு, நீங்கிக் குணமாகும். கவம் விலக இதைவிடச் சிறந்த மருந்து வேறில்லை.
  6. வெள்ளைக் காகரணம் விதையைக் கொண்டு வந்து ஒரு விதையிற் பாதியை மட்டும் எடுத்து வெந்நீர் விட்டுச் சந்தனக்கல்லில் இழைத்துக் கொடுக்க, குழந்தைகளின் கோழை, கவக்கட்டு, மலக்கட்டு முதலியவை நீங்கும். அன்று தாய்க்குப் புளி யாகாது. கண் வலி
  7. நந்தியாவட்டப் பூவைக் கொண்டு வந்து கசக்கிக் கண்களுக்கு இரண்டு சொட்டுச் சாறுவிடக் கண்களிலுள்ள பிணிகள் நீங்கும்.
  8. கண்வலி உள்ளவர்கள் பூவை மட்டும் கண்களில் ஒத்திக்கொண்டிருந்தால் போதுமானது.
  9. ஈர வெங்காயம், நற்சீரகம், ஓரிதழ்த் தாமரை இம்மூன்றும் சமமாக வைத்து நசுக்கி, மெல்லிய துணிக்குள் வைத்துக் கண்ணில் பிழிய, கண்களிலுள்ள முப்படலமும் தீரும்.

காலை வேளைகளில் மட்டும் மூன்று சொட்டுகள் வீதம் மூன்று நாள் மருந்து போதுமானது.

கண்களில் இரத்தக்கட்டு

கருவேலங் கொழுந்தைப் பிள்ளைப்பால் விட்டு இறுகலாக நன்றாக அரைத்துச் சிறிது வெண்ணெய் கூட்டிப் பிசைந்து வில்லை தட்டி, இரவில் படுக்குமுன் மூடிய கண்களின் மேல் வைத்து, அதன்மேல் ஓர் இலையை வைத்து மூடித் துணிகொண்டு கட்டிப் படுத்துக் கொள்ளவும்.

காலையில் அவிழ்த்து எடுத்து விடவும். கண்களில் உண்டான இரத்தக்கட்டுக் குறைந்து, உடனே குணப்படும். இரண்டு நாளைக்குமேல் மருந்து வேண்டிய தில்லை.

இதே மருந்தைப் படுக்கும்போது உள்ளங் கால்களில் அல்லது தலை உச்சியில் வைத்துக் கட்டிக்கொண்டு படுத்தால், அது உஷ்ணத்தைத் தணித்துக் குளிர்ச்சியைத் தரும்.

காமாலை
  1. கரிசலாங்கண்ணி இலைகளைக் கொண்டு வந்து கசக்கிச் சாற்றை வேளை ஒன்றுக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலையும் மாலையும் சாப்பிடவும். மூன்றே நாட்களில் குணமாகும். கீழாநெல்லிச் சாறும் நல்லது.
  2. நாட்டுக் காட்டாமணக்கு இலைகளை அரைத்து, சரிக்குச்சரி எருமைவெண்ணெயில் குழைத்துக் காலையும் மாலையும் கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட மூன்று நாட்களில் குணமாகிவிடும். மஞ்சட் காமாலை

நோய்களில் மிகப் பொல்லாதவற்றுள் மஞ்சட் காமாலையும் ஒன்று. இந்நோயை முற்றவிடுவதன் மூலம் உயிருக்கே ஆபத்து நேரிடக்கூடும். இந்த நோய்க்குக் கை கண்ட மருந்து அடியிற்கண்ட ஒன்றுதான்:

சங்கம் வேர்ப்பட்டை 1 வராகன் எடை
அதிமதுரம் 1/2 பலம் ,,
வெங்காயம் 1/2 பலம் ,,
சீரகம் 1/8 பலம் ,,

இந்நான்கையும் அரைத்து, பசுந்தயிரில் கிடைக்காவிடில் எருமைத் தயிரில் கலக்கி உண்ணவும். மூன்று நாள் காலையில் மட்டும் உண்ண மஞ்சட் காமாலை நோய் நீங்கும். இச்சா பத்தியம்.

நல்ல பாம்பு கடித்தால்

உடனே வாழைமரம் இருக்குமிடத்திற்கு அரிவாளுடன் ஓடுங்கள் அடியில் ஒரு வெட்டு, நுனியில் ஒரு வெட்டுப் போட்டு துண்டத்தை எடுத்து வாருங்கள். பட்டையாக உரித்து மண் சட்டியில் அல்லது பீங்கான் கோப்பைகளில் சாறு பிழியுங்கள். காற்படி சாற்றைக் கடிபட்டவனுக்குக் கொடுங்கள். நல்லபாம்பின் நஞ்சு ஒன்றும் பண்ணாது. ஆள் கட்டாயம் பிழைத்துக் கொள்வான்.

உங்களுக்குச் செய்தி வர நேரம் ஆகிவிட்டாலும், வாழைமரம் கொண்டுவர நேரம் ஆகிவிட்டாலும், கடி பட்டவன் பல் கிட்டிவிடும். வாழைப் பட்டைச் சாற்றை இவன் குடிக்க முடியாது. ஆகவே பற்றுக் குறடால் பல்லை விலக்கி மருந்தை விடச் செய்யாதீர்கள். இதை விட அறியாமை வேறில்லை. பல்லை விலக்கினாலும் தொண்டையை விலக்க முடியாது.
பாம்பு கடிபட்டவன் பற்கள் கிட்டியிருந்தால், சில வாழைப் பட்டைகளை முதலில் உரித்து, கீழே சரியாக விரித்து, அதன்மேல் அவனைப் படுக்கவைத்து விடுங்கள்: பிறகு சாறு பிழியுங்கள். சாறு பிழியவும் அவன் வாய் திறக்கவும் நேரம் சரியாக இருக்கும். பிறகு சாற்றைக் குடிப்பான்; எழுந்து நடப்பான்.

இந்தச் சஞ்சீவிச் சாறு நல்ல பாம்புக் கடிக்கு 10-க்கு 10-ம், பிற பாம்புக் கடிகளுக்கு 10-க்கு 7-ம் உயிர் கொடுத்து குணப்படுத்தி வந்திருக்கிறது. இச் செய்தியை உங்கள் ஊரிலுள்ள அனைவருக்கும் சொல்லி வையுங்கள்.

பாம்புக் கடிக்கு

பெரியா நங்கை இலையை அரைத்துச் சிறு சுண்டைக் காய் அளவு சாப்பிட, உடனே குணம் தெரியும். அன்று முழுதும் உப்பில்லாப் பத்தியம் இருந்து தீரவேண்டும்.

விஷம் ஏறாமல் இருக்க

பாம்பு, நட்டுவாக்காலி, தேள், சிலந்தி முதலிய எது கடித்தாலும், உடனே பெருமருந்து வேரை வாயில் அடக்கிக்கொள்ளுங்கள். இச்சிகிச்சையால் விஷம் ஏறாது. பிறகு விஷக்கடிக்குச் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

நட்டுவாக்காலி கடிக்கு

நட்டுவாக்காலி கடித்துவிட்டால் பயப்பட வேண்டிய தில்லை. உடனே ஒரு கொப்பரைத் தேங்காயை மென்று தின்னச் செய்யுங்கள். கிடைக்காவிட்டால் முற்றிய தேங்காயை மென்று தின்னச் செய்யுங்கள். பல்லில்லாக் குழந்தைகளாகவோ, வயது முதிர்ந்த பெரியவர்களாகவோ இருந்தால், தேங்காய்ப் பாலைப் பிழிந்து குடிக்கச் செய்யுங்கள். நிமிடக் கணக்கில் குணந்தெரியும். மனக் கவலை, பணச் செலவு, மந்திரம், மருந்து எதுவும் வேண்டியதில்லை.

தேள் கடிக்கு

நாயுருவி வேரைப் பச்சையாக மென்று, சாற்றை மட்டும் உட்கொள்ள, உடனே நெறி இறங்கும்.

நாய் கடிக்கு

கடிச்சா செடிப் பட்டையை நசுக்கி வைத்துக் கடித்த விடத்திற் கட்டினால் அதன் நச்சு நீங்கிவிடும்.

பூரான் கடிக்கு

பனை வெல்லத்தை உடனே உட்கொண்டால் அதன் நச்சு நீங்கும்.

சிலந்தி கடிக்கு

ஆடாதொடை மூலிகையைப் பச்சை மஞ்சளுடனும் மிளகுடனும் அரைத்து, கடித்தவிடத்தில் வைத்துக் கட்ட, உடனே குணமாகும்.

மேகப் படைக்கு

பேயாவாரை என்றும், பொன்னாவாரை என்றும் சொல்லப்படுகிற ஒரு செடியை, வேரோடு கொண்டுவந்து அரைத்து மேலே பற்றுப்போட, நமைச்சல், சொரிந்தால் தூள் சிந்துதல், மேகப்படை முதலியன நீங்கும்.

படை சிரங்குக்கு

படை, சிரங்கு முதலிய புண்களுக்கு ரச கற்பூரம் 1 பங்கும், வெண்ணெய் 3 பங்கும் கலந்து கல்வத்திவிட்டு அரைமணி நேரம் நன்றாக அரைத்துத் தடவக் குணமாகும். இருமலைக் காட்சி என்றும் பிரமலைக் காட்சி, என்றும் சொல்லப்படுகிற முட்செடி கிடைக்குமிடங்களில், அதை எடுத்து அதன் சாம்பலில் சம பங்கு இவற்றுடன் சேர்த்துத் தடவினால், மூன்றே வேளையில் குணம் தெரியும். மருந்தைப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் மருந்து நச்சுத் (விஷம்) தன்மை உடையதாகும்.

சொரி சிரங்குக்கு

சென்னைப் பக்கங்களில் அழவணம் என்றும், தென் நாடுகளில் மருதெண்ணை என்றும் சொல்லப்படுகிற மருதோன்றி இலையைச் சிறிது பச்சை மஞ்சள் கூட்டி அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து, தேங்காய் எண்ணெய் 6 அவுன்சில் கலக்கி நீர் சுண்ட எரித்து வடித்துக்கொண்டு கோழி இறகால் தடவவும்.

சிலந்திப் புண்ணுக்கு
  1. நாயுருவி சமூலங் கொண்டு வந்து இடித்து, சாறு பிழிந்து, ஈயவெள்ளையைச் சிறிது கலந்து தடவிவர ஆறாத புண் ஆறும்.
  2. வேலிப் பருத்திச் சாற்றை வெள்ளைத் துணியில் ஊற்றி உடைந்த பெருஞ்சிலந்திகளின் வாயில் வைத்துக் கட்டவும். மூன்றே வேளையில் ஆணி முளை வெளிப் பட்டுக் குணமடைந்துவிடும். தீப்பட்ட புண் ஆற

கோவை இலைச் சாறு 2 அவுன்ஸ், எள் எண்ணெய் 2 அவுன்ஸ் தனித்தனியாக வைத்துக்கொண்டு, ஒரு இரும்பு மரக்காலில் முக்கால் மரக்கால் தண்ணிர் விட்டு, எலுமிச்சம்பழ அளவு கிளிஞ்சற் சுண்ணாம்பை அதிற்கலக்கி, ஒரு குச்சியால் வேகமாகத் தண்ணிரைச் சுற்றினால் ஒரு சுழல் ஏற்பட்டு நடுவிற் குழி விழும். அந்தக் குழி மாறுவதற்கு முன்னதாக மிகத் துரிதமாய் அச்சாற்றையும் எண்ணெயையும் தனித்தனியாக இரு கைகளிலிருந்து அந்தக் குழியில் சமமாகவிட, சுழல் நின்று வெண்ணெய் மிதந்து வரும். அதை எடுத்து வைத்துக்கொண்டு, தீப்பட்ட இடத்தில் தடவ, நோய். நீங்கும்; புண்ணும் ஆறும்; தழும்பும் உண்டாகாது. இது ஒரு அதிசய மருந்து.

வெட்டுக் காயம் ஆற

பால்கத்தி இலையைத் தண்ணிர் விடாமல் அரைத்து, வெட்டுக் காயத்திலும் அடிபட்ட காயத்திலும் வைத்துக் கட்ட, உடனே குணம் ஆகும். ஒரே வேளைக்கட்டு போது மானது. பால்கத்தி இலைக்கு அடையாளம், அதன் காய் தண்ணிர் பட்டதும் வெடிக்குத் தன்மையுடையது. பிள்ளைகளும் அக்காயை நெற்றியில் வெடிக்கவைத்து விளையாடுவதுண்டு.

கிரந்தி நோய்க்கு

சில குழந்தைகளுக்கு பிறக்கும் பொழுதே கிரந்தி நோய் கண்டிருக்கும். அப்போது அதன் மேனி ஊதா நிற மாகக் காணப்படும்; அவ்வாறு இருந்தால், சமுத்திராப் பச்சிலை ஒன்றைக் கொண்டுவந்து, அதன் நடுமட்டையை எடுத்துவிட்டு, இலையில் விளக்கெண்ணெயைத் தடவி, வெது வெதுப்பர்க அனலிற் காட்டி, குழந்தையை அந்த இலையிற் போட்டுவிடவும். இயன்றவரையில் அதன் உடம்பெல்லாம் இலையிற் படும்படி உருட்டிவிடவும் 15 நிமிடத்திற்குமேல் இலையில் கண்டிப்பாக இருக்கக் கூடாது. ஒருவேளை செய்வது போதுமானது. வியக்கத் தக்க முறையில் குணங்காணும்.

சமுத்திராப் பச்சிலை என்பது சேம இலைபோல மிகவும் பெரியதாயிருக்கும். பெரிய இடத்துப் பங்களாக்களில் தொட்டிகளில் வைத்து வளர்ப்பதுண்டு.

கட்டிகள் உடைய

சப்பாத்திப் பூவைக் கழுவி அம்மியில் வைத்து அரைத்துப் பூசினால், கட்டிகள் உடைந்துவிடும்; அல்லது கரைந்து போய்விடும். வியக்கத்தக்க முறையில் குணத்தை காணலாம்.

கருந்தேமலுக்கு

மருதோன்றி இலையுடன் சவுக்காரம் சேர்த்து, அரைத்துப் பூசிவந்தால் கருந்தேமல் ஒழியும். படை, சொரி சிரங்கு, நரம்பு இழுப்பு, கால் வலி முதலியவைகளுக்கும் மருந்து இதுவேதான்.

கால் கடுவானுக்கு

இரச கற்பூரத்தையும் வெண்ணெயையும் கலந்து கல்வத்திலிட்டு நீண்ட நேரம் அரைத்துத் தடவ, கால் கடுவான் நீங்கும் அது நஞ்சு ஆதலின் நாவில் படாதபடி பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும். தொண்டை வலிக்கு சுண்ணாம்பும் விளக்கெண்ணெயும் கலந்து அடுப்பில் காய்ச்சிப் பொறுக்கும் அளவு சூட்டோடு வெளியில் தடவ தொண்டைவலி, தொண்டைக்கட்டு முதலியவை நீங்கும்.

மயக்கத்திற்கு

சீந்தில் தண்டுச் சாற்றைப் பசும்பாலிற் கலந்து உட்கொண்டால், அடிக்கடி வருகிற தலை மயக்கம், கிறு கிறுப்பு முதலியவைகள் உடனே நீங்கும்.

முகம் அழகு பெற

வெள்ளைச் சாரட்டணை மூலிகையின் வேரையும், தோல் நீக்கிய மஞ்சளையுஞ் சேர்த்து, எருமைப்பால் விட்டு அரைத்து. முகத்தில் தடவிக் குளிப்பதால் முக அழகு உண்டாகும். கருப்பு நிறம் மாறவும், வெடிப்பு நாற்றந் தீரவும் உடம்பில் தடவிக் குளிக்கலாம்.

உடல் அழகு பெற

இரவில் உறங்குமுன் பசும்பாலில் தேனும், குங்குமப் பூவும் கலந்து சாப்பிட, உடலில் மினுமினுப்புத் தோன்றும்.

நரம்புத் தளர்ச்சிக்கு

விளாம் பிசினைக் கொண்டுவந்து பசும்பாலில் ஊற வைத்து, சிறிது சர்க்கரை கலந்து கொட்டைப்பாக்களவு நாள்தோறும் சாப்பிட்டு வர, பலக்குறைவு, களைப்பு, நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் விலகி, இரத்த ஒட்டமும் வலிவும் உண்டாகும்.

இரத்த வாந்திக்கு

ஆலம் விதையையும் அரசவிதையையும் அரைத்துப் பசும்பாலிற் கலந்து உட்கொண்டால் இரத்தங் கக்குதல் உடனே நிற்கும்.

மலம் கழிய

சோவிக் கீரையைக் கொண்டுவந்து இரசம் வைத்து இரவிற் குடிக்க, காலையில் கட்டு மலம் கழிந்து, உடம்பு வலி தீர்ந்து, உடல் கலகலப்பாக இருக்கும்.

கொசுத் தொல்லைக்கு

பால் சாம்பிராணி 1 1/2 பலம்
செஞ்சந்தனம் 1/2 “
மான்கொப்பு 1/2 “
சந்தனத் துாள் 1/2 “
வசம்பு 1/2 “
அதிமதுரம் 1/2 “
கடுகு ரோகிணி 1/2 “
ஜடாமஞ்சரி 1/2 “
கருங்குங்கிலியம் 1/2 “
பூண்டுத்தோல் 1/2 “
தேவாரம் 1/2 “
கோஷ்டம் 1/2 “

இவைகளைத் தனித்தனியாக இடித்துத் தூள் செய்து, பிறகு ஒன்றாய்க் கலந்து, தகரப் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். மழைக் காலத்திலும் பனிக் காலத்திலும் நெருப்பில் சாம்பிராணி போடுவதுபோலப் போட்டு வீட்டில் புகையடையச் செய்யுங்கள். சுவரிலுள்ள ஈர வாடை, கொசு, கிருமி முதலிய விஷப்பூச்சிகள் ஒழியும். இப்புகையின் வாடை இக்காலத்தில் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் தேவை. இவை எல்லாத் தமிழ் மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கொசு கடிக்காது

வேப்பிலையையும் மஞ்சளையும் வைத்து அரைத்து தண்ணிர் கலந்து இலேசாக உடம்பில் தடவிக் கொண்டு படுத்தால் கொசு கடிக்காது

கொசு வலை இல்லாத போதும், மலேரியாக் கொசுக் கடி உள்ள இடத்தும் இது பெரிதும் பயன்படும்.

எறும்புத் தொல்லைக்கு

உண்ணும் பொருள் வைத்திருக்கும் பாத்திரங்களில் அல்லது பெட்டி அடிப்புறத்தில் சிறிது விளக்கெண்ணெயைத் தடவி வைத்துவிட்டால், அப்பொருள்களை எறும்புகள் அணுகாது. தேன், நெய், பிஸ்கட், சர்க்கரை முதலியவைகளை எறும்புகளிடமிருந்து காப்பாற்ற இது பெரிதும் பயன்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை தடவினாற் போதும். விளக்கெண்ணெயின் வாடை எறும்புக்குக் கொடியது.

பிள்ளைப் பேற்றுக்குமுன் வாந்தி வந்தால்

ஏலக்காய், பருத்தி விதை, நெற்பொரி வகைக்குக் கால்பலம் சேர்த்து, தேன் விட்டு அரைத்து 9 பங்கு செய்து கொண்டு, காலை மாலை 3 நாட்கள் சாப்பிடக் குணம் ஆகும். பத்தியமில்லை.

பிள்ளைப் பேறு எளிதாக

துளசி, தாமரை வளையம், கருத்தாளி இம்மூன்றையும் சமமாகச் சேர்த்து ஒரு கைப்பிடி எடுத்து, காடி வார்த்து அரைத்து, தொப்புகளுக்குக் கீழே அடி வயிற்றில் தடவ, எளிதாகப் பிள்ளை பிறக்கும்.

பிள்ளைப் பேறு நேராக வர

காட்டுமல்லிகை சமூலம் கொண்டுவந்து, விளக்கெண்ணெய் விட்டு அரைத்து, தொப்புளில் தடவ, பிரசவச் சிக்கல் தீர்ந்து நேரான பிள்ளைப்பேறு உண்டாகும்.

பிள்ளை குறுக்கிட்டுக் கொண்டால்

நாட்டு இலவமரத்தின் வடக்கே போகும் வேரைக் கொண்டு வந்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து, புளித்த மோரிற் கலக்கிக் கொடுக்க, விலகிய பிள்ளையும் குறுக்கான பிள்ளையும் சரியாக வந்து பிறக்கும்.

இறந்த பிள்ளை பிறக்க
  1. ஓரிலைத்தாமரைச் செடியை வேரொடு கொண்டு வந்து காடிவிட்டு அப்படியே அரைத்து முலைகளுக்குக் கீழே தடவ, வயிற்றில் இறந்த பிள்ளை, பிறந்துவிடும். இதற்கு கால் அளவு 1 1/2 மணி நேரம்.
  2. நிலக் குமிழ் வேரை அரைத்துத் தண்ணீரிற் கரைத்து உடனே குடிக்க, மரித்த பிள்ளை வெளிப்படும். இதற்குக் கால அளவு 1 மணி நேரம், பத்தியமில்லை. பிள்ளை பெற்ற நஞ்சு விழ

எள் இலையைக் கொண்டுவந்து தண்ணிரிற் கையால் பிசைந்து வடிகட்டிக் குடிக்க, நஞ்சு விழும்.

பிள்ளை பெற்றபின் மருந்து

குழந்தை பிறந்ததும் வேப்ப எண்ணெய் வீசம்படி உள்ளுக்குக் கொடுத்துவிடவும் அரைமணிக்குப் பிறகு 3 வெற்றிலையில் 2குண்டுமணி எடை கஸ்துரியை வைத்து உள்ளுக்குக் கொடுத்து விடவும். இதைவிடச் சிறந்த மருந்து எதுவுமில்லை. பின்பு கடைகளிற் கேட்டு பிரசவ மருந்துகளை வாங்கிப் பச்சையாக அரைத்து 10 நாளும் கொடுக்கலாம். பிறகு, அதே மருந்துகளை வறுத்துச் சலித்து இலேகியமாக்கி 2 மாதம் கொடுக்கலாம்.

பிள்ளை பெற்றபின் கழிச்சலுக்கு

ஊறின இளநீர் மட்டையில் அரை வீசம்படி சாறு எடுத்து அரைக்காற்படி பசும்பால் விட்டு காசுக்கட்டி 1 1/4 வாராகனிடையும் பொடி செய்து அதில் போட்டுக் கலக்கிச் சாப்பிடவும். காலைப்பொழுது மட்டும் 3 நாள் மருந்து போதுமானது; பத்தியம்: காரம் கூடாது.

பிள்ளைப்பால் பெருக

ஆலம் விழுதுத் தளிரையும், ஆலின் விதையையும் அரைத்துப் பசும்பாலிற் கலந்து உட்கொள்ளப் பெண்களுக்குப் பிள்ளைப் பால் பெருகும்.

பால் சுரக்க

கீழ்க்காய்நெல்லி வேரை அரைத்துப் பசும்பாலிற் கலந்து குடிக்க, பால் சுரக்கும். 4 நாள் சாப்பிடவும், பத்தியமில்லை.

பால் சுரப்பைத் தடுக்க

வாழைப்பிஞ்சை அரைத்து முலையில் பற்றுப் போடப் பால்சுரப்பது நிற்கும். அல்லது மல்லிகைப் பூவை நிறைய வைத்துக் கட்டினாலும் பால் சுரப்பது நின்று விடும்.

முலைக் குத்தலுக்கு

நீர்ப்பூரா இலை, ஈரவெங்காயம், ஆமணக்கு எண்ணெய் இம்மூன்றையும் கலந்து அரைத்துப் பற்றுப்போட குத்தல் உடனே நீங்கும்.

மாதத் தீட்டு வெளிவராவிட்டால்

வேலிப்பருத்தி இலையை இடித்து, இதன் சாற்றில் தேக்கரண்டி அளவு கொடுக்கவும். மூன்றுநாள் காலையில் மட்டும் அருந்துவது போதுமானது. பத்தியம் புளி கூடாது.

பெண் குழந்தைகள் பூப்பு அடைய

உத்தாமணி என்கின்ற வேலிப்பருத்தியின் இலை 7-ம் மிளகு 11-ம் கூட்டி அரைத்து காலைப்பொழுதில் மட்டும் சாப்பிடச் செய்யவும். 5 வேளை மருந்து போதுமானது. புளி, மீன், புகையிலை பத்தியம், பூப்பு அடையாவிட்டால் 15 நாள் கழித்து மறுபடியும் 5 வேளை கொடுக்கவும்.

சூலைக் கட்டுக்கு

பச்சைக் குத்துக் கடலையை வெந்நீர்விட்டு அரைத்து கணுவுக்குக்கணு வலியுள்ள இடத்திலெல்லாம் பத்துப் போடவும். மூன்றே வேளை போதும்.

விக்கலுக்கு

அரிசித் திப்பிலி வராகனிடை 5, சீரகம் வராகனிடை 18 தனித்தனியாக வறுத்துத் துாள் செய்து, சுண்டைக்காய் அளவு எடுத்து தேனிற் குழைத்துக் கொடுக்கவும். ஊற்றின விளக்கெண்ணெயை நெஞ்சில் தடவவும். உடனே குணங்காணும். பத்தியமில்லை.

தலை வலிக்கு

பச்சைக் குத்துக் கடலையை வெந்நீர்விட்டு அரைத்து நெற்றிப் பொட்டுக்களில் தடவ, தலைவலி உடனே நீங்கும். பிள்ளைப்பாலையும் நெற்றியில் தடவலாம்.

அம்மை பூரிக்காமல் உள்ளே காந்திவிட்டால்

இளநீரை மேற்பட்டை சீவி வெந்நீரில் அப்படியே அவித்து எடுத்து, கண் திறந்து, அந்த நீரில் கோரைக் கிழங்கையும், தோற்றான் விதையையும் வகைக்கு 5 வாரகனிடை அரைத்துக் கலக்கி, காலைப்பொழுதில் மட்டும் 3 நாள் குடிக்கச் செய்யலாம் அப் பொருள்கள் அகப்படாவிட்டால் அதே நீரில் சீரகம் வராகனிடை 5 மட்டும் கலக்கிக் கொடுக்கலாம். பத்தியமில்லை.

எண்ணெய் தங்கலுக்கு

ஒரு பலம் சீயக்காயைத் தட்டித் தண்ணிரில் ஊறவைத்து, அந்தத் தண்ணிரில் ஒரு சங்கு கொடுக்க, குழந்தைக்கு எண்ணெய் தங்கல் வெளிவந்துவிடும்.

பைத்தியம் தணிய

அகத்திக் கீரையை, அரிசி களைந்த நீரில், உப்பு சீரகம் சேர்த்துக் குழைய வேகவைத்து உண்டும், நீரைப் பருகியும் வந்தால், பைத்தியம் முதலிய மூளைக் கோளாறுகள் நீங்கும்.

பல்வலிக்கு ஒத்தடம்

காட்டாமணக்குச்செடியின் பட்டையைக் கொண்டு வந்து பச்சையாகவே பொடிப் பொடியாய் தறுக்கி அடுப்பில் சட்டியை வைத்து வதக்கி, ஒரு துணியில் பொட்டணம் கட்டி, பொறுக்கும் அளவு சூட்டோடு வலியுள்ள இடத்தில் கன்னத்தின்மீது ஒத்தடம் கொடுக்க வலி உடனே நீங்கும். இருமுறை கொடுக்க வீக்கமும் நீங்கும்.

பல் வலிக்குக் கியாழம்

நன்னாரி வேர்க் கியாழத்தில் காடி கொஞ்சம் கலந்து வாய் கொப்புளிக்க, தீராத பல்வலி தீரும்.

பல்வலிக்கு மருந்து

வேளை வேரும் அருகம்புல்லும் கசக்கித் துணியில் வைத்துப் பல்வலி இடதுபுறமிருந்தால் வலது காதிலும், வலதுபுறமிருந்தால் இடது காதிலும் 3 சொட்டு மட்டும் பிழிய, வலி உடனே நீங்கும்.

பிரளிக்கு

குழந்தைகளுக்கு வயிற்றில் பிரளி நோய் வந்தால், பிரண்டை இலை இரண்டை ஒரு சங்கு விளக்கெண்ணெய்யிற் போட்டு, கரண்டியில் வைத்துச் சிவக்கக் காய்ச்சி, இலையை எடுத்து எறிந்துவிட்டு, எண்ணெயை ஆற்றிக் குழந்தைகளுக்குக் கொடுக்கவும். ஒரே வேளையில் குணம் தெரியும். நோய் நீங்காவிடில், வாரம் ஒரு தடவையாக 3 வாரம் கொடுக்கலாம். தாய்க்குப் பத்திய மில்லை.

அஜீரணத்திற்கு

ஓமத்தைத் தேய்த்து உமியைப் போக்கி அரைத்து பிள்ளைப்பால் அல்லது பசும்பாலிற் கலக்கிக் குடிக்க, அஜீரணம், மாந்தம், வயிற்றுப்போக்கு முதலியன நீங்கும். பெரியவர்களுக்கு 3 தம்பிடி எடை ஓமமும், குழந்தைகளுக்கு தம்பிடி எடை ஓமமும் போதும். பத்தியமில்லை. உணவு அரிசிக் கஞ்சி.

கிராணிக்கு

தும்பைப்பூ, சீரகம், சிறு நெருஞ்சிமுள் இம்மூன்றும் சம எடையாக எடுத்துத் தனியாக வறுத்து, பொன் நிறம் கண்ட பிறகு எடுத்து கல்வத்திலிட்டுப் பொடி செய்து, நாட்டுச் சர்க்கரையிற் கலந்து கொடுத்தால், 6 மாதமாக இருக்கும் கிராணிக் கழிச்சல்கூட உடனே நிற்கும். ஒரு வேளை அளவு 3 விரல்களால் அள்ளும் தூளும், அதே அளவு சர்க்கரையும் 3 நாள் காலை மாலை 6 வேளை மருந்து போதுமானது. புளி, காரம் கூடாது.

பலக் குறைவுக்கு

காற்பலம் சாலாமிசிரியைப் பசும்பாலில் 4 மணி நேரம் ஊறவைத்து சீனாக் கற்கண்டைப் பொடி செய்து போட்டு அப்படியே சாப்பிடவும். பல நாள் தொடர்ந்து சாப்பிட, பலக்குறைவு நீங்கி, உடலுக்கு வலுவும் இரத்த விருத்தியும் உண்டாகும். 40 நாட்கள் போதுமானது.

இரத்தம் உண்டாக

காலையில் தூங்கி எழுந்ததும், பல்துலக்கிய உடனே, கால் அவுன்ஸ் சுத்தமான தேனும், அரை அவுன்ஸ் நல்ல தண்ணிரும் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடித்துவர உடலில் இரத்தம் வளரும்.

உடல் வலுவுக்கு

நன்றாகப் பழுத்த வில்வப் பழத்தின் விதையை நீக்கி சதையை மட்டும் சீனாக் கற்கண்டில் கலந்து, இலந்தைப் பழ அளவு காலை நேரத்தில் மட்டும் சாப்பிட்டுவர, உடலுக்கு நல்ல வலுவு ஏற்படும். 20 வேளையிலேயே குணம் நன்றாகத் தெரியும். புளி, காரம் குறைக்கவும்.

உள் காங்கைக்கு

வில்வ இலையிற் கொழுந்து இலையாக காலை நேரத்தில் மட்டும் 10 இலைகள் வாயிற்போட்டு மென்று தின்று, பாலைக் குடிக்க, உள் காங்கை நீங்கி உடல் பெருக்கும். சில நாட்களிலேயே பலன் காணலாம்; 40 நாள் மருந்து போதுமானது. காரம், புளி சிறிது குறைப்பது நல்லது.

சோவை நோக்காடுக்கு

பசு மாட்டின் சிறுநீரை துணியில் வடிகட்டி, சூடு ஆறு முன் ஒரு அவுன்ஸ் அளவு காலை நேரத்தில் 7 நாள் மட்டும் குடிக்கக் கொடுத்துவர, சோவை நோக்காடு நீங்கும். 10 நாள் விட்டு மறுபடியும் 7 நாள் கொடுக்கவும். இப்படி 3 தடவைகள் போதுமானது. பத்தியம், மீன், கருவாடு, அகத்திக்கீரை, வாழைத்தண்டு, பாகற்காய், தட்டைப் பயறு, மொச்சை முதலிய வாய்வுப்பொருள்கள்கண்டிப்பாய் இம் மூன்று மாதமும் கூடாது. எண்ணெய் முழுக்கு மருந்து சாப்பிடும் நாட்களில் மட்டும் கூடாது.

விதர் வீக்கத்திற்கு
  1. கழற்சிக் கொட்டைகளை உடைத்து அதன் உள்ளிருக்கும் பருப்பில் 5 எடுத்து அரைத்துத் தடவினால் விதர் வீக்கம் மூன்றே நிமிடத்தில் வடியும்
  2. புறா மலத்தையும், தேங்காய் திருவிய பூவையும் கலந்து இரும்புக் கடாயிற் போட்டு வறுத்து ஒத்தடம் கொடுக்க உடனே வீக்கம் வடியும்.
  3. தேங்காய்ப் பூவில் புறா முட்டையை உடைத்து ஊற்றி வறுத்து ஒத்தடம் கொடுத்தால், 15 நிமிடத்திற்குள் குணத்தைக் காணலாம். பிரமித் தைலம்

கஸ்தூரி மஞ்சள், பச்சிலை, பூலாங் கிழங்கு, கார் போக அரிசி, ரோஜா மொட்டு, சண்பகப்பூ மொட்டு, மருக்கொழுந்து செந்தாமரை, வெட்டிவேர், விலாமிச்சைவேர், வெளலா, சந்தனத்தூள், இவை 12-ம் வகைக்கு கால் பலம் வாங்கி, நன்றாக, வெயிலில் உலர்த்தி, ஒன்றாக கலந்து இடித்து, சல்லடையிற் சலித்து, 1 1/2 படி நல்லெண்ணெயிற் கலந்துவிடவும்.

பிரமி இலை, கையாந்துறை பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி, வல்லாரை ஆகிய ஐந்து மூலிகைகளையும் தண்ணிரில் அலசி எடுத்து, தனித்தனியே இடித்து, வகைக்கு வீசம்படிச்சாறு எடுத்து ஏற்கெனவே கலந்துள்ள எண்ணெய்யில் ஊற்றி நன்றாகக் கலக்கி, அடுப்பில் ஏற்றிச் சிறு அனலில் சொட சொடப்பு அடங்கக் காய்ச்சி எடுத்துப் புட்டியில் வைத்துக் கொள்ள வேண்டியது.

காலையில் எழுந்ததும், உச்சியில் வைத்து முழுக பிரமை பிடித்தவர்கள் தெளிவடைவார்கள், மூளைக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும். உஷ்ணத்தைப் போக்கிக் குளிர்ச்சியை உண்டாக்க இது தவிர வேறு தைலம் இல்லை.

அளவு: குழந்தைகளுக்கு 1 டிஸ்பூன்
பள்ளிப் பிள்ளைகளுக்கு 2 “
பெரியவர்களுக்கு 3 “

மாந்தம் எதனால் வருகிறது?

செல்லம்: பாட்டி, குழந்தையைப் பார் பாட்டி. சும்மா அழுதுகொண்டே இருக்கிறது.

பாட்டி: மாந்தம் போல் இருக்கிறது. கவனிக்க வேண்டும்.

செல்லம்: பாட்டி மாந்தம் எதனால் வருகிறது?

பாட்டி: கணவனோடு கலந்திருந்து, பிறகு பால் கொடுப்பதால்தான் பிள்ளைகளுக்கு மாந்தம் வருகிறது?

செல்லம்: அது எப்படி?

பாட்டி: குழந்தைகளின் அணைப்பினால் பால் சுரப்பது போல கணவனது அணைப்பினால் காமநீர் சுரக்கிறது. அந்த நீர் பிள்ளைகளின் வயிற்றில் செரிப்பதில்லை.

செல்லம்: அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பாட்டி: குழந்தைகளுக்கு முன்னதாகவே பால் கொடுத்துவிட வேண்டும். பின்னே கொடுக்க நேர்ந்தால், அவ்விஷ நீரைக் கழுநீரிற் கறந்து ஊற்றிவிட்டு, பிறகு சிறிது நேரங்கழித்துப் பால் கொடுக்க வேண்டும்.

செல்லம்: குழந்தைகளுக்கு மாந்தம் வருகிறது இதனால்தானா பாட்டி.

பாட்டி: ஆம், பெரும்பாலும் இதனால்தான் வருகிறது.

செல்லம்: மாந்தம் என்றால் அது எதைக்குறிக்கும்?

பாட்டி: மந்தம் என்பதைத்தான் குறிக்கும்.

செல்லம்: மாந்தத்தில் பலவகை உண்டா பாட்டி?

பாட்டி: ஆம். எட்டு வகை மாந்தங்கள். அவற்றுள் வாய் மாந்தம் போர் மாந்தம் என இருவகை மாந்தங்களே பிள்ளைகளுக்குப் பெரும்பாலும் வருகின்றன.

செல்லம்: இவற்றை எப்படிக் கண்டு பிடிப்பது? பாட்டி குடித்த பால் அடிக்கடி வாந்தியாகிக் கொண்டிருந்தால், அது வாய் மாந்தம் எனப்படும். செரிக்காமல் வயிற்றுப் போக்குப் போய் கொண்டிருந்தால் அது போர் மாந்தம் எனப்படும்.

செல்லம்: குழந்தைகளுக்கு மாந்தம் வந்தவுடனேயே டாக்டரிடம் கொண்டு போய்க் காட்டுவது நல்லதல்லவா பாட்டி.

பாட்டி: மாந்தம் ஒரு கொடிய நோயாக இருந்தாலும், அதற்கு டாக்டர்கள் தேவையில்லை. ஆங்கில வைத்தியமும் கூடாது. ஊசி போடுவது உயிர் போக்கும் செயலாகும்.

செல்லம்: பின் என்ன செய்ய வேண்டும்?

பாட்டி: வேப்பெண்ணெய்யை ஊற்றி ஒருவிளக்கை ஏற்றிக்கொள். மாந்தக் கட்டையின் ஒரு முனையை அதே எண்ணெய்யில் நனைத்து அதே விளக்கில் காட்டு கட்டையின் நுனி தீப்பற்றி எரியும். அதிலிருந்து எரிந்து விழுகிற 5 அல்லது 4 சொட்டு எண்ணெய்யை ஒரு சிறு சந்தனக் கல்லில் தாங்கி, எரியும் மாந்தக் கட்டையாலேயே அதைத் தேய்க்க வேண்டும். அவ்வளவுதான். அந்த எண்ணெய்யை ஒரே விரலில் வழித்துப் பிள்ளையின் நாக்கில் 3 தடவைகள் தடவி, பிறகு பால் கொடுக்க வேண்டும். மீதி எண்ணெய்யை கைக்குழற்சியிலும் காற்குழற்சியிலும் தடவவேண்டும். இருவகை மாந்தமும் உடனே விலகும்.

செல்லம்: கைக் குழற்சி, காற் குழற்சி என்பது எது பாட்டி?

பாட்டி: முழங்கை முழங்கால்களில் உட்புறம் நரம்புகள் உள்ள மெல்லிய இடம்.

செல்லம்: மாந்தக் கட்டை எங்கே கிடைக்கும்:

பாட்டி: எது எல்லா மலைகளிலும் விளைகிறது. என்றாலும், அது திருச்சிக்கு தெற்கே உள்ள சிறு மலையிலும், வடக்கேயுள்ள கொல்லிமலையிலும் அதிகமாக விளைகிறது. நம் நாட்டில் ஒவ்வொரு பெரிய குடும்பங்களிலும் அது இருக்கும். சில மருந்துக் கடைகளிலும் விலைக்குக் கிடைக்கும். விலை 0-12 காசுக்கு மேலிராது.

செல்லம்: அக் கட்டை எப்படி இருக்கும் பாட்டி?

பாட்டி: சந்தன மரத்தின் வேரைப் போல இருக்கும். ஆனால் சிவந்த நிறமாக இருக்காது. அதன் மேற்பட்டையைச் சீவிப்பார்த்தால், தூய வெள்ளைநிறமாக இருக்கும். பார்வைக்கு அது ஒரு வேரைப் போலவும், மரவள்ளிக் கிழங்கைப் போல வளைவு நெளிவாகவும் இருக்கும்.

செல்லம்: மாந்தக் கட்டையைவிட நல்லது ஒன்று மில்லையா, பாட்டி?

பாட்டி: இருக்கிறது. குழந்தைகளின் அணைப்பிலிருக்கிற உன்னைப்போன்ற பெண்கள், கணவனது அணைப்பிலிருந்து சிறிது விலகி இருப்பதே அதைவிட நல்லது. இன்னும் உன்னைப் போன்ற பெண்கள் மாம்பழம், கொய்யா, பலாச்சுளை, நிலக்கடலை முதலியவைகளை வெறுத்துவிடுவது நல்லது.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *