எது வியாபாரம்? எவர் வியாபாரி? கி. ஆ. பெ. விசுவநாதம்

திருக்குரானில் வணிகம்

பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள் இவ்வுலகில் 62 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்கள். அதில் முன்னே 40 ஆண்டுகள் எல்லோரைப் போலவும் வணிகத் தொழில் நடத்தியும், பின்னைய 22 ஆண்டுகள் நபித்துவம் பெற்று, உலக மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள். என்றாலும் முன்னைய 40 ஆண்டுகளில் கூட நம்மில் பலரிடம் காண முடியாத அருங்குணங்களையும் பெருஞ்செயல்களையும் உலக மக்கள் அவரிடம் கண்டு களித்திருக்கிறார்கள். அவர் செய்து வந்த வணிகம் ‘ஒட்டக வணிகம்.’

வியாபாரி ஒருவர் அவரிடம் வந்து, ஒட்டகத்தின் விலைகளைக் கேட்டார். முதலில் ஒட்டகத்தைப் பார்த்து வாருங்கள்; விலை பேசலாம் என்றார் பெருமானார். வியாபாரியும் அப்படியே ஒட்டகத்தைப் போய்ப் பார்த்து வந்து பெருமானார் அவர்களிடம் ஒட்டகத்தின் விலையைக் கேட்டார். எத்தனை ஒட்டகங்கள் வேண்டுமென்று பெருமானார் கேட்க, ‘மந்தையிலுள்ள 40 ஒட்டகங்களையுமே எடுத்துக் கொள்ளுகிறேன். அத்தனைக்கும் விலையைக் கூறுங்கள்’ என்றார் வந்தவர்.

பெருமானார் புன்சிரிப்போடு சிரித்து, “40 ஒட்டகங்களில் ஒரு ஒட்டகம் நொண்டி ஆயிற்றே! அதனால் நடக்கமுடியாதே! அதுவுமா உங்களுக்குத் தேவை?” என்று திருப்பிக் கேட்டார். வந்தவர் அதிர்ச்சியடைந்து தான் அதை கவனிக்காததற்காக வெட்கப்பட்டுப் பெருமானார் அவர்களுடைய நாணயத்தைப் பார்த்துக் கதிகலங்கிச் சிறிது நேரம் பேச முடியாமலிருந்து பிறகு பெருமானாரை நோக்கி அந்த ஒட்டகத்தையும் சேர்த்தே எடுத்துக் கொள்கிறேன். அது மற்ற ஒட்டகங்களுடன் சேர்ந்தே இருக்கட்டும் அதற்கும் சேர்த்தே விலை கூறுங்கள்” என்றார்.

அதற்குப்பெருமானார், ‘அந்தநொண்டி ஒட்டகத்தைத் தவிர மற்ற 39 ஒட்டகங்களின் விலை இவ்வளவுதான். இதைக் கொடுத்தால் போதும். நீங்கள் விரும்பினால் அந்த நொண்டி ஒட்டகத்தை இலவசமாகக் கூட்டிப் போகலாம், அல்லது இங்கேயே விட்டுப் போகலாம். நான் அதற்குத் தீனி போட்டுட் பாதுகாப்பேன். நீங்கள் அதை அழைத்துப் போனால் எனக்கு செலவு இராது. ஆகவே அதற்கு விலை தேவையில்லை’ என்று கூறி முடித்தார்கள். அப்படியே நடந்து முடிந்தது.

அரிசியில் கல்லும், உளுந்தில் களிமண்ணும் நல்லெண்ணெயில் கடலை எண்ணெயும், கடலை எண்ணெயில் இலுப்பை எண்ணெயும், மண்ணெண்ணெயில் தண்ணீரும் கலந்து விற்கின்ற இந்தக் காலத்து வணிகத்தையும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பெருமானார் செய்த ஒட்டகவணிகத்தையும் ஒப்பு நோக்குவகள்.

இந்த வணிக முறையைத் திருக்குரானில் காணும் போது நமது உள்ளமெல்லாம் மகிழ்ச்சியடைகிறது. ஒரு நல்ல வணிக முறை எப்படியிருக்கும் என்பதை திருக்குரான் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. இதனை நம் வணிகர் ஒவ்வொருவரும் பின்பற்றி நடப்பதே நாட்டுக்கும் நமக்கும் பெருமையளிப்பதாக இருக்கும்.

திருக்குறளில் வணிகம்

ஆட்டுச் சண்டை, மாட்டுச் சண்டை, கோழிச் சண்டை முதலியவைகளைப் பார்ப்பதில் மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி. அதிலும் யானைப் போரைப் பார்ப்பதில் ஒருவனுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படும். அதிலும் யானை தன் பக்கம் திரும்பி விட்டால் தீங்கு விளையுமே என்ற அச்சமும் ஏற்படும். ஆனால் அவன் குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைப் பார்ப்பதில் அவனுக்கு அந்த அச்சம் ஏற்படாது. அது எப்படிப்பட்டது என்பதை வள்ளுவர் அடியிற்கண்டவாறு கூறுகிறார்.

அதிக மூலதனத்தை வைத்துத் தொழில் செய்யும் ஒரு வணிகன், தன் வணிகத்தை எவ்வித இழப்புமின்றி வெற்றியோடு செய்து மகிழ்கின்றானோ அதுபோன்று என்பதே. குறள் இதுதான் :

“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.” (758)

இது ஒவ்வொரு வணிகரும் தம் உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ளவேண்டிய ஒன்று.

மற்றொன்று :

வணிகத் தொழில் புரியும் அன்பர்களுக்கு வள்ளுவர், எல்லா வணிகமும் வணிகமல்ல; ஒரு உயர்ந்த வணிகம் செய்ய வேண்டுமென்று ஒரு புதிய வழியைக் காட்டுகின்றார். அது வணிகத் தொழில் புரிகின்றவர்கள் பிறர் பொருளையும் தம் பொருள் போல் கருதிச் செய்ய வேண்டும். அதுவே உயர்ந்த வணிகமுறையாகும் என்பது. குறள் இதுதான் : 

“வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்” (120)

வள்ளுவர் வணிகப்பெருமக்களுக்குக் கொடுத்திருக்கும் இடம் ஒர் உயர்ந்த இடமாகும். சான்றோர்களுக்கு அறம் சொல்ல வந்த வள்ளுவர் வணிகப் பெருமக்கள் கையாளுகின்ற தராசைச் சுட்டிக்காட்டி அதன் நடுமுள் எப்படி ஒரு பக்கமும் சாய்ந்து விடாமல் நிற்கிறதோ அப்படியே சான்றோர்கள் தங்கள் உள்ளத்தை நடுநிலைமை பிறழாமல் வைத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். குறள் இது :

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.” (118)

இது எவ்வளவு பெரிய உயர்ந்த இடம் என்பதை ஒவ்வொரு வணிகரும் எண்ணிப் பார்ப்பது நல்லது.

எப்படியும் தொழில் செய்யலாம், எந்த வகையிலும் பொருள் சேர்க்கலாம் என்பது வணிக முறையல்ல தீமையான செயல்களை நீக்கி, நல்ல வழிகளைக் கையாண்டு, நேர்மையான முறைகளில் பொருள் சேர்ப்பதே “சிறந்த வணிகம்” ஆகும். அது ஒன்றுதான் அறமும் இன்பமுமாகிய மகிழ்ச்சியைத் தரும் வணிகமாகும் என்று குறள் கூறுகிறது.

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.”

ஒரு வணிகன் தன் தொழிலில் வெற்றிபெறத் தேவையானவை என்னென்ன? என்பது ஒரு கேள்வி. ‘பொருள்’ என்பர் சிலர். ‘அனுபவம்’ என்பர் சிலர். ‘நண்பர்கள்’ என்பர் சிலர். ‘குடும்பம்’ என்பர் சிலர். ‘அரசாங்க உதவி’ என்பர் சிலர். ‘நல்ல விளைவு காலம்’ என்பர் சிலர். ‘நல்ல பஞ்ச காலம்’ என்பர் சிலர் வள்ளுவர் இத்தனையையும் ஒப்ப இல்லை. அவனுக்கு வேண்டியது ‘மன உறுதி’ ஒன்றே என்று கூறுகிறார்.குறள் இதுதான்:

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.” (661)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *