
ஜம்பரும் வேஷ்டியும்
ந. பிச்சமூர்த்தி
செவ்வாம்பல்
குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்தவன் இளைஞன்: பத்தொன்பது வயதிற்கு மேல் இராது. ஆண் குயிலைப் போன்ற கருப்பு நிறம். மலையின் மேலுள்ள காட்டைப் போன்ற அடர்ந்த புருவத்தின் அடியில் குண்டூசியைப் போல் மின்னும் இரண்டு கண்கள். தேளின் விஷ ஊசியைப் போல் வாயருகில் வளைந்திருந்த இரு மீசைகள். சிங்கத்தின் கட்டுக்கொண்ட உடல்.
இவன் தான் ரகுநாத ராஜாளி. ‘வாதி தரப்பு சாட்சிகள் சொல்வதைக் கேட்டாயே, நீ குற்றவாளியா அல்லவா?’ என்றார் நீதிபதி.
‘நான் கொன்றது உண்மை ஆனால் அது குற்றமல்ல. என் வரலாற்றை எழுதி வைத்திருக்கிறேன். அதைப் படித்துப் பார்த்தால் விளங்கும்.’
‘நீயே படி’
ராஜாளி, பஞ்சாயத்தார் உட்கார்ந்திருந்த பக்கம் திரும்பிக் கொண்டு தெளிவான குரலில் படிக்க ஆரம்பித்தான்.
‘நான் கொன்றேனே அந்த ஆள் எங்களூர் கிராம முன்சீப். நில புலம் கொஞ்சம் உண்டு. ஆனால் வரவுக்கு மிஞ்சிய செலவுக் காரர். குஷால் பேர் வழி. பெண்கள் விஷயத்தில் பணத்தைச் செலவு செய்து கொண்டே இருந்தால் எவ்வளவு பெரிய பண்ணையாயிருந்தாலும் என்ன?”
மார்ச்சு மாதத்திய வாய்தாப் பணம் கையில் துள்ளும் சமயம். வழக்கமான செலவொன்று முளைத்து அவரை நெருக்கிற்று. ஆத்திரத்தில் பணத்தைச் சூறைவிட்டுத் தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார்.
அந்தக் காலத்தில் நான் அவருடைய கையாள். கிராம முன்சீப் என்றால் எப்பொழுதுமே கிராமத்தில் யாராவது பகை இருக்கத்தான் செய்வார்கள். யாரோ ஒருவன், இவர் கிஸ்திப் பணத்தைக் கையாடியதைப் பற்றி தாசில்தாருக்குப் பொய்ப் பெயர் வைத்துக்கொண்டு எழுதி விட்டான் போலும்! வரும் சேவகன் வசம் தண்டல் கணக்கை அனுப்புவதுடன் உடனே கஜானாவில் பணம் செலுத்த வேண்டுமென்று தாசில்தாரிடமிருந்த தாக்கீது வந்தது.
அது வரையில் எனக்குத் தெரியும். அதற்குப் பிறகு நான் ஊருக்குப் போக நேரிட்டது. எனக்குத் தாயாரும், தகப்பனாரும், இரண்டு அண்ணன்மார்களும் இருக்கிறார்கள்.
இந்த சமயத்தில் கோர்ட்டிலிருந்த கூட்டத்தின் ஒரு மூலையில் ஏதோ பரபரப்பு உண்டாயிற்று. படிப்பதை நிறுத்தினான். பிறகு அது அடங்கி விட்டதென்று தெரிந்ததும் மேலே படித்தான்.
‘எங்களுக்குத் தோல் வியாபாரம் கொஞ்சம் உண்டு. நிலக்கடலை நாட்களில் அதிலும் வியாபாரம் செய்வதுண்டு.’
அன்றைய தினம் என் அண்ணன் ஒரு வேலை இட்டார். இரண்டு வண்டி கடலை பதினைந்து மைல் தூரத்திலுள்ள கம்பெனிக்கு உடனே போக வேண்டியிருந்தது. வண்டியுடன் போய் கடலையை இறக்கிவிட்டு, முன்பனம் போக பாக்கிப் பணத்தை வாங்கி கொண்டு வரும்படி என்னை அண்ணன் அனுப்பினார்.
கடலையைப் போட்டுவிட்டு பணத்தைப் பெற்றுக் கொண்ட பொழுதுதான் முன்னிருட்டும் பின் நிலவும் என்ற ஞாபகம் வந்தது. எனவே ஒரு தூக்கம் போட்டுவிட்டு மற்றொரு ஆளுடன் நிலவு புறப்பட்ட ஒரு நாழிகைக்குத் திரும்பினேன்.
பின் நிலா மங்கலாக மூடிக் கொண்டிருந்தது. எட்டாவது மைல்கல் வரையில் வந்து விட்டோம். அங்கே ஒரு பர்லாங்கு வரையில் ரோட்டின் இரு புறமும் மரங்கள் செழிப்பாய் வளர்ந்து, தலைக்கு மேலே ஒன்றையொன்று தழுவி நின்றன. அதனால் அங்கே இந்த மங்கலான ஒளி கூட இல்லை. மைல் கல்லுக்கும் அடுத்த பர்லாங்குக் கல்லுக்கும் இடையில் ஒரு சிறிய பாலம். அதைத் தாண்டும் சமயம் திடீரென நான்கு நிழல்கள் குறுக்கிட்டன. நாங்கள் திகிலடைந்து நின்றோம்.
‘கழட்டு-இருக்கிறதெல்லாம்’ என்றது ஒரு கீச்சுக் குரல். என் கூட வந்த ஆள் ஓடி விட்டான். அதற்குள் என் கைகளை இருவர் பின்புறமாக இழுத்துப் பிடித்துக் கொண்டார்கள். திமிறி என்ன பயன்? கையை விட்டாலல்லவா பணத்தை எடுக்கலாம் என்றேன்.
‘கள்ளனை நம்பாதே’ என்றது மற்றொரு குரல், அடிவானத்தில் குமுறிப் புரளும் இடிபோலிருந்தது அக் குரல்.
கீச்சுக் குரல்காரன் என்னை சோதித்துப் பணத்தைப் பிடுங்கிக் கொண்டான். அத்துடன் நில்லாமல், ‘ஓடு’ என்றான். ஜாதிக் கள்ளனல்லவா? முறண்டிக் கொண்டு நின்றேன்.
‘ஓடு என்றால் நிற்கிறாயா?’ என்று யாரோ பின்புறத்திலிருந்து உதைத்தான்.
நான் பிறகு நிற்கவில்லை; நடையைக் கட்டினேன். அப்பொழு தெல்லாம் ஒரே நினைப்பு. ‘கள்ளனை நம்பாதே’ என்று சொன்ன குரல் எப்பொழுதோ அறிமுகமானது போலத் தோன்றிற்று. எங்களூர் பிள்ளையார் கோவில் வரையில் வந்துங் கூட அது நினைவுக்கு வரவில்லை.
ஆனால் என் அண்ணனும் ஓடின ஆளும் எதிரே வந்தார்கள். விஷயம் பரவிவிட்ட தென்பது உறுதியாகி விட்டது. இனி என்ன செய்வது என்று நினைத்துப் பலிக்கிடா போல் தலையை நட்டுக் கொண்டேன்.
‘போகட்டும் போ, கிரகம் போதாது’ என்று அண்ணன் சமாதானப் படுத்தினார்.
மறுநாள் போலீசுக்குப் புகார் செய்தார்கள். ஒரு மாதம் கழித்து, புலன் தெரியவில்லை என்று பதில் வந்தது. அதற்குப் பிறகு என் தகப்பனாரும் குடும்பத்தாரும் இதை சுத்தமாக மறந்து விட்டார்கள்.
ஆனால் நான் மட்டும் மறக்கவில்லை. மறக்க முடியவுமில்லை. கள்ளனை வழிப்பறி செய்து விட்டார்கள். அத்துடன் நிற்கவில்லை. ஒரு உதையும் கொடுத்தனுப்பி விட்டார்கள். கள்ள பிள்ளைக்கு வீரத்தை விட பெரிதென்ன இருக்கிறது? அடிபடுவதை விட என்ன அவமானமிருக்கிறது?
எப்படியோ ஒரு சந்தேகம் உண்டாயிற்று. இரண்டு மாதம் கழித்து, தாலுகா ஆபிசுக்குப் போய் முன்சீப் பணம் கட்டிய தேதியைப் பரிசோதித்தேன். நான் நினைத்தபடியே இருந்தது. அதாவது பணம் போன மறுநாள், சந்தேகம் வேரூன்றியது. இருந்தாலும் முன்சீப் பக்கத்தில் கடன் வாங்கிக் கொண்டிருக்கக் கூடுமல்லவா? விசாரித்துப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. சந்தேகம் சுணை மழுங்கிக் கொண்டிருந்த சமயம் என் தகப்பனார் என்னை ஒரு கேள்வி கேட்டார். ‘ஏன் தம்பி! முன்சீப்தார் மேலே நீ ஏதேனும் தாசில்தாருக்குப் புகார் செய்ததுண்டா?’
எனக்கு திடுக்கென்றது.
‘மதுரையான் சாட்சியாய் இல்லை. நான் கூட இருட்டிலே வழிப்பறி பண்ணுகிறவனா என்ன…. யார் சொன்னது?’
‘யார் சொன்னால் என்ன’ என்று தகப்பனார் பேச்சை விட்டு விட்டார். சந்தேகம் மறுபடி கிளைத்தது. அதற்காக முன்சீப் வீட்டுக்குப் போவதை நிறுத்தவில்லை. சொல்லப் போனால் இன்னும் அதிகமாகவே போக ஆரம்பித்தேன். முன்சீப் மட்டும் என்மீது சந்தேகப்படாதவர் போலவே நடந்து வந்தார்.
இந்த நிலையில் முன்சீப் மகனுக்கு பக்கத்துக் கிராமத்தில் கலியாணம் நடந்தது. நான் போயிருந்தேன்.
எனக்கு வியப்பாக இருந்தது.
முகூர்த்தம் முடிந்தது. அவன் மணப் பந்தலின் முன் வந்து நின்றுகொண்டு ‘கால் கட்டு மாட்டிவிட்டால் கள்ளன் கூட கருத்தாயிருப்பான்; என்ன முன்சீப்தாரே’ என்று பரிகாசம் கலந்த வாழ்த்தைக் கூறினான்.
அந்ந நிமிஷத்தில் ஒரு மின்னல் என் நெஞ்சிற் பாய்ந்தது. ஒரு இருள் திரை அறுந்து விழுந்தது. பணம் போன இரவில் ‘கள்ளனை நம்பாதே’ என்று சொன்ன குரல் இதுவே, சந்தேகமில்லை.
தாசில்தாருக்கு நான் ஏதோ புகார் செய்து விட்டதாக நினைத்து, முன்சீப்தார் பழி வாங்கிக் கொண்டான் என்று முடிவுக்கு வந்தேன். அவ்வளவு தான். அதற்குமேல் அரை நிமிஷம் கூட அங்கே தங்கவில்லை. ஊருக்குத் திரும்பி விட்டேன்.
அந்திமயங்கும் வேளை. ஊர் ஓரமாக, சாலை வழியாக வந்து கொண்டிருந்தேன். ஒரு புறத்தில் ஒரு குட்டை. அதில் செவ்வல்லி ரத்தத்தைப் போல் திட்டு திட்டாக முளைத்திருந்தது. மனத்திலிருந்த பளுவின் காரணமாக குட்டையின் கரையில் உட்கார்ந்து ஜலத்தில் காலைப் போட்டுத் துளாவிக் கொண்டிருந்தேன். அந்த வேகத்தில் ஒரு பூ ஒடிந்து நீரில் மிதந்தது. அலைகள் அதைச் சுற்றி விம்முவது போல் அசைந்தன.
மனதிலிருந்த பாரம் சட்டென பறந்துவிட்டது. வேறொரு தெளிவான எண்ணம் புகுந்தது.
அந்தி விளக்குகள் அங்கங்கு மின்னின. நான் வீட்டை அடைந்தேன்.
இரண்டு நாளுக்குப் பிறகு வீட்டில் என் கலியாணப் பேச்சாய் இருந்தது. யாரோ பெண் வீட்டார் வரப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வருவதற்கு முன்பே ஒரு காரியம் செய்தேன், தாயிடம் எனக்கு இப்பொழுது கலியாணம் வேண்டாம் என்று கண்டிப்பாக சொன்னேன். அவள் ஆசேஷபித்து காரணம் கேட்டாள். என்னென்னவோ சொன்னாள். நான் காரணம் சொல்லாமல் பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.
பிறகு எங்கள் ஐயா சொல்லிப்பார்த்தார். அவருக்கும் மறுத்து விட்டேன்.
அன்று முதல் ஒரே நினைப்பு, ஒரே சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக ஒரு வருஷத்திற்குப் பிறகு அந்த சந்தர்ப்பம் வாய்த்தது.
அதே கிஸ்திக்காலம், மணி மத்தியானம் மூன்றிருக்கலாம். ஊரின் ஓரமாக உள்ள சாலை. அதில் வீடுகளே இல்லை. ஒருபுறம் முழுவதும் நஞ்சை வயல்கள், எதிர்புறத்தில், நடுவில் ஒரே ஒரு மாணவர் விடுதியும் அதன் இருபுறங்களிலும் வாழைத் தோட்டம். ஒரு வாழைத் தோட்டத்திற்குக் கிழக்கில் பள்ளிக்கூடம், மாணவர் விடுதிக்கு எதிர்த்தாப் போல் பழைய குட்டை. அதில் கோரையும் செவ்வல்லியும் மண்டிக் கிடந்தன.
வழக்கமாக முன்சீப் அந்த வழியாகத்தான் வீடு திரும்புவார். அன்று வாழைத் தோட்டத்தில் ஒளிந்து கொண்டிருந்தேன்.
மணியக்காரர் காதில் வெள்ளைக் கடுக்கன் மின்ன, மீசையில் ஒரு கையைப் போட்டுக்கொண்டு ஒய்யாரமாக வீதியில் நடந்து வந்தார். தெரு மற்றபடி காலியாயிருந்தது. குட்டை அண்டை வந்ததும் ஒரே பாய்ச்சல் பாய்ந்தேன். ‘கள்ளனுக்குக் கள்ளன் உண்டா’ என்று கூவிக் கொண்டே கத்தியால் ஓங்கி குத்தினேன். ‘பாவி, என்று சொல்லிக்கொண்டே கீழே விழுந்தான். அதற்குள் கிராம வெட்டியான் வருவது தெரிந்தது.
நான் மாணவர் விடுதி வழியாக ஓடிப்போய், அதற்குப் பின்னிருந்த நாணல் புதர்களில் ஒளிந்து கொண்டேன்.
அந்த இடத்துக்கு வந்ததும் வெட்டியான் பெரிய கூச்சல் போட்டிருக்க வேண்டும். ஒளிந்து கொண்டிருந்ததினால் என் காதில் விழவில்லை. ஆனால் மாணவர் விடுதி சமையலறையில் இருந்து சமையல்காரர்கள் ரோட்டுப் புறம் ஓடியது மட்டும் என் கண்ணில் பட்டது. பின்னும் சில நிமிஷத்திற்குள் பெரிய கும்பல் சேர்ந்துவிட்ட சத்தம் எழுந்தது. சிறிது நேரம் வரை சத்தம் அங்கேயே கேட்டது. பிறகு கும்பலாக நாணல் புதரையும் வாழைத் தோட்டத்தையும் நோக்கி வருவது தெரிந்தது; அதாவது என்னை தேடுகிறார்கள் என்று பொருள். நான் நாணல் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கே நகர்ந்து சென்று பள்ளிக்கூடத்தை நோக்கிச் சென்றேன்.
பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருந்தபடியால் வெளியே ஒருவருமில்லை.
மேற்கிலிருந்து வந்த ஜனங்களின் ஆரவாரம் மட்டும் ஓயவில்லை. நான் உடனே பள்ளிக்கூடத்துக்கு அருகிலிருந்த தூங்கு மூஞ்சி மரத்தில் கத்தியும் கையுமாக அப்படியே ஏறி ஒரு கிளையில் படுத்துக் கொண்டேன்.
அரை மணியாயிற்று. கும்பல் சுற்றித் திரிந்துவிட்டு பள்ளிக் கூடத்திற்குள் நுழைந்தது. ஏராளமான கும்பல். பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூட ஒவ்வொருவராக வகுப்பைவிட்டு வெளியே வந்தார்கள். வாத்யார்களும் வந்துவிட்டார்கள். பள்ளிக்கூடத்தில் எல்லா இடத்தையும் தேடினார்கள். நான் தட்டுப்படவில்லை.
‘ஆள் எங்கேயோ ஓடிப் போய்விட்டான்.’ என்ற குரல்கள். ‘இங்கேதான் இருப்பான்’ என்றன வேறு குரல்கள்.
சிறிது நேரம் திகைப்படைந்து நின்றுவிட்டு கும்பல் கலைந்தது. இருபது முப்பது பேர் மட்டும் பள்ளிக்கூடத்தின் முன்புறம் நின்று கொண்டிருந்தார்கள்.
பையன்களெல்லாம் வகுப்புக்குள் திரும்பப் போய்விட்டார்கள். சேமக்கலத்தில் நாலு மணி அடித்தது. அப்பொழுது யாரோ ஒரு வாத்யார் நான் இருந்த மரத்தின் கீழ் போய்க் கொண்டிருந்தார்.
‘ஐயா’ என்று கூப்பிட்டேன். அவர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு யாரையும் காணோம் என்று நடந்தார்.
‘ஐயா இங்கே மரத்துமேலே’ என்றேன். அப்பொழுது தான் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தார். அவருக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘போலீஸ் ஸ்டேஷனுக்குச் சொல்லி அனுப்புங்கள்’ என்றேன்.
ஒரே ஓட்டமாய் பள்ளிக் கூடத்துக்குள் போய்விட்டார். உள்ளே போனவர் ஐந்து நிமிஷத்துக்குள் முன்புறம் வந்து, அந்தக் கும்பலில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். உடனே அந்தக் கும்பல் நான் இருந்த மரத்தின் கீழ் வந்து கூடிவிட்டது.
‘வாடா கீழே உரித்துவிடுகிறேன்’ என்று கூச்சலிட்டது.
நான் பேசவில்லை. நான் இறங்கும் வழியாகத் தெரியவில்லை என்று நினைத்து ஒருவன் மரத்தில் ஏறினான்.
‘கையில் என்ன, பார்’ என்று அரிவாளைக் காட்டியதும் அவன் இறங்கி விட்டான்.
இன்னது செய்வதென்று தெரியாமல் கும்பல் கீழே நின்று கொண்டிருந்த சமயம் ஒரு ஐட்கா வந்தது. சப் இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீஸ்காரரும் துப்பாக்கி சகிதம் இறங்கினார்கள். கும்பல் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. சப் இன்ஸ்பெக்டர் மரத்தின் கீழ் வந்து நிமிர்ந்து பார்த்தார். ஒருக்கால் அவருக்கும் பயமோ என்னவோ!
‘ஏய், முதல்லே கீழே கத்தியைப் போடு’ என்றார்.
‘நானே இறங்கி வரத்தான் போறேன்’
இதற்குள் சப் இன்ஸ்பெக்டர் வருவதைப் பார்த்துக் கொண்டு, போன கும்பலில் பாதிக்கு மேல் திரும்பிவிட்டது. ஒரே சத்தம்; வசவு. கும்பலைக் கண்டதும் அப்படியே இருந்தேன்.
‘இறங்கேன்’
‘இறங்குகிறேன். அந்தக் கும்பலை அப்பாலே போகச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் நான் கீழே வந்ததும் சுள்ளான் மாதிரி என்னை அது மொய்க்கும்’
சப் இன்ஸ்பெக்டர் கும்பலை ஒதுங்கச் சொன்னார். பள்ளிக்கூடத்து வாசலண்டை கும்பல் போய் விட்டது. அவரும் கான்ஸ்டேபிள்களும் மரத்துக்குப் பத்தடி தள்ளி நின்றார்கள். போலீஸ்காரர்கள கீழே குத்திட்டுப் பிடித்திருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். சப் இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு என்ன உத்தரவு இட்டாரோ!
நான் விறு விறு என்று இறங்கி வந்து கத்தியை சப் இன்ஸ்பெக்டரிடம் நீட்டினேன்.
‘நீ என்ன ரொம்ப நல்ல பிள்ளையாய் இருக்கிறாயே’ என்றார்.
‘நான் நல்ல பிள்ளைதான், இந்த முனிசீப்தான் கெட்டவன் ஆக்கிவிட்டார்.’
அதற்குள் ஒரு போலீஸ்காரன் வந்து எனக்குக் கை விலங்கு போட்டான். ‘இது தேவையில்லை. நான் போக்கிரியா? கேடியா?’ என்றேன்.
அவ்வளவுதான். பிறகு என்னை வண்டியிலேயே அழைத்துக் கொண்டு போனார்கள். சிவப்பு அல்லி மாதிரி தெருவில் சிந்திக் கிடந்த ரத்தம் எவ்வளவு அழகாயிருந்தது, தெரியுமா?
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம்தான் சாட்சிகள் சொன்னார்கள். அதற்கு முந்தி நடந்தது அவர்களுக்கென்ன தெரியும்?
தெரியும்? கள்ளன் கோபம் பொல்லாததுதான்.
வாக்குமூலம் முடிந்தது. ராஜாளியைக் கோர்ட்டிலிருந்த அவ்வளவு பேரும் ஏற இறங்கப் பார்த்தார்கள்.
நீதிபதியின் வேலை இப்பொழுது எளிதாகிவிட்டது. சுருக்கமாகக் குற்றத்தையும் சாட்சிகளையும் சட்டத்தையும் பற்றி பஞ்சாயத்தாரர்களுக்கு விளக்கிக் கூறிவிட்டு, அவர்களுடைய முடிவைக்கோரினார்.
பஞ்சாயத்தார் எழுந்திருந்து பக்கத்தறையில் நுழையும் சமயத்தில் கோர்ட்டில் நிறைந்திருந்த கும்பலில் ஒரு மூலையில் அமளி ஏற்பட்டது. போலீஸ் சார்ஜெண்ட் அதை சமாளித்து விட்டான்.
ஐந்து நிஷத்திற்குள் பஞ்சாயத்தார் திரும்பி வந்து தங்கள் இடத்தில் அமர்ந்தார்கள்.
‘என்ன அபிப்பிராயம்?’
‘ராஜாளி கொலை செய்ததாகவே ஏகமனதாக அபிப்பிராயம்’
உடனே நீதிபதி தன் தீர்ப்பைக் கூற ஆரம்பித்தார். சுறுக் கெழுத்துக்காரர் எழுதிக் கொண்டே வந்தார். கோர்ட்டிலிருந்த கும்பல் பரபரப்டைந்தது. தீர்ப்பு முடியும் தருணம்.
‘இந்த நிலையில் நீ கொலைக் குற்றம் செய்ததாகவே நான் தீர்மானிக்கிறேன். பழி வாங்குவது ஒரு லக்ஷியமாகாது. ஆகையால் சட்டப்படிக்கு ஏற்பட்டுள்ள தூக்குமரத் தண்டனை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அந்த தண்டனை விதிக்கிறேன்’ என்று முடித்தார். வெள்ளம் மிகுந்த ஆற்றின் கரை உடைந்து தண்ணீர் ஆரவாரத்தோடு வருவது போல் யாரோ ஒரு கிழவி திமிறிக் கொண்டு குற்றவாளிக் கூட்டண்டை வந்து ஓலமிட்டாள், சார்ஜெண்டும் போலீஸ்காரர்களும் அவளை வந்து வலிய இழுத்துச் சென்றார்கள்.
‘ஐயோ! இதை நெனச்சா கலியாணம் வேண்டாமின்னே பாவி’ என்று புலம்பினாள் அவள்.
‘அவன் ஆயாளாமல்ல’ என்று கும்பலில் பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜாளி எவ்வித கலக்கமும் அடையவில்லை, புன்னகையுடன் போலீஸ்காரனைத் தொடர்ந்து கோர்ட்டுக்கு வெளியே சென்றான்.
★ ★ ★



