

காதல் பிறந்த கதை
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
எனது அருமை நண்பர் கவிமணி ஸ்ரீ தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் இயற்றிய பாக்களிற் சில இந்நூலில் வெளிவருகின்றன. இவைகள் கலைமகள் முதலிய பத்திரிகைகளுக்குச் சமீப காலத்தில் உதவப்பட்டன. இவைகளைத் திரட்டி, ஒரு கவிதை நூலாக வெளியிட முன்வந்த அருள் – நிலையத்தார்க்குத் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.
கவிதையின் இயல்பை வரையறை செய்வதற்குச் சில நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கான இலக்கிய ஆராய்ச் சியாளர்கள் முயன்று வந்திருக்கிறார் கள். ஆனால், ஒருவரது முயற்சியேனும் இதுவரையில் முற்றும் திருப்திகரமாய் முடிந்துள்ளது என்று சொல்வதற் கில்லை. சிவபெருமான் தன்மையைத் தான் கவிதையும் கொண்டிருக்கிறது. அவரது அடியையும் முடியையும் மாலும் அயனுங் காண முடியவில்லை யல்லவா? அதுபோலவே கவிதையின் இயல்பையும் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், இம் முயற்சிகளெல்லாம் பயன் அற்றனவா? இல்லை; இல்லவே யில்லை.
கவிதையின் இயல்புகள் மிகப்பல. அவைகளும் காலந்தோறும் இடந் தோறும் சூழ்நிலைகளுக்குத் தக்கபடி வேறுபடுகின்றன. அவற்றுள் ஒரு சில அம்சங்களையே ஒவ்வோர் ஆராய்ச்சி யாளரும் அறிய முயல்வது. எனினும், தாம் கூறுவதே எல்லா வகையாலும் முற்றமுடிந்த உண்மையெனத் தாமும் நம்பி வாசகர்களையும் மயங்கச் செய்து விடுகிறார்கள். இக் குறையினால் இன் னோரது நூல்கள் பயனற்றுப் போக வில்லை. நூற்பொருள்களின் முக்கியத்துவம் நன்றாக நம் மனத்தில் ஆழ்ந்து பதிந்துவிடுவதற்கு இவ்வகை நூல்கள் உதவுகின்றன. அன்றியும் இந்நூல்களை நாம் கற்குந்தோறும் நமது அறிவு விசாலம் அடைகிறது. கவிதை அனுபவம் மேன்மேலும் முதிர்வதற்கு இடமேற் படுகிறது. ஆகவே, இவ் ஆராய்ச்சி யுரைகள் பயனுடையனவேயாம்.
ஆனால், ஆராய்ச்சியாளர்க ளெல்லாரும் உண்மைக் கவிதை பற்றிய ஒரு விஷயத்தில் ஒற்றுமை மனம் உடையரா யிருக்கிறார்கள்; உண்மையான கவிதை யைப் படித்த அளவிலே நம் மனத்திலே விவரிக்கமுடியாத ஓர் இன்பம் உண் டாகி விடுகிறது என்கிறார்கள். இந் நூலில் முதலாவதாய் அமைந்துள்ள ‘காதல் பிறந்த கதை’ இத் தகுதிவாய்ந்த உண்மைக்கவிதையாகும். இதை நின்று புகழ்ந்துவிட்டுப் பின் இதைக் கற்று நுகர்வோம் என்று நாம் எண்ண முடியாது. கவிபாரதி!
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்–சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் – தம்முள்
பன்னியுபசரணை பண்ணுவதுண்டோ?
நீட்டுங் கதிர்களொடு நிலவுவந்தே- விண்ணை
நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினையச் சோதி கவ்வுங்கால் – அவை
முன்னுபசாரவகை மொழிந்திடுமோ?
என்று பாடுகின்றார். இது போலத்தான் நாமும் உண்மைக் கவிதையனுபவத்தில் விரைந்து மூழ்கித் திளைக்கின்றோம்.
இதுபோன்ற கவிதையை ஒரு முறை நுகர்ந்து இன்புற்றதோடு நமது மனம் முற்றும் திருப்தியடைந்து விடுவதில்லை. மீண்டும் மீண்டும் அதனை நுகர வேண்டும் என்னும் அவா நம் மனத்தில் வேரூன்றி விடுகிறது. நுகர நுகரத் தெவிட்டுவதில்லை. என்றும் மாறாத இளமைத் தன்மையோடு நின்று நம் மனத்தைக் கவர்கின்றது. இவ் இயல்பினையும் கவிஞரும் ஆராய்ச்சியாளருமாகிய ஒர் மேல் நாட்டு ஆசிரியர் வற் புறுத்தியிருக்கிறார். தேவியின் கவிதைகளிற் பல இவ் இயல்புடையன என்பது தமிழ்மக்கள் நன்கு அறிந்ததே.
இவ் வகைக் கவிதைகள் தோன்றும் முறையைக் குறித்தும் ஆராய்ச்சி யாளர்கள் ஒரு முகமாய்ப் பேசுகிறார்கள். உண்மையுள்ளத்தின் அடி நிலத்தி லிருந்துதான் உண்மைக் கவிதைகள் தோன்றும். எவ்வாறு உண்மை யுள் ளத்தை அறிவது? பாரதியின் கவிதை யொன்று ஞாபகத்தில் தோன்றுகிறது.
சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் -பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால்-பிற
வாஞ்சை யுண்டோ? வயதங் ஙனமே இரு
பத்திரண் டாமளவும் – வெள்ளை
பண்மகள் காதலைப் பற்றி நின்றேன், அம்மா!
என்ற கவிதையை அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். இக் கவிதையிற் கூறியுள்ளது தே.வி. அவர்களைப் பற்றிய அளவில் முற்றும் உண்மை, உண்மை. ஆனால், இருபத்திரண்டு வயதளவுமட்டு மல்ல; இன்றுவரை அப்படித்தான். ஸ்ரீ தே.வி. அவர்கள் நீடூழி வாழ்ந்து கவிதா உபசரணையில் உயிர் தளிர்த்து நின்று தமிழன்னைக்குத் தொண்டு புரியுமாறு இறைவன் அருள் புரிக.
உண்மைக் கவிதை இன்பத்தை தமிழ் மக்களுக்கு ஊட்டி இச்சிறு வெளியீடு நீடுநிலவும் என்று உறுதி யாய் நம்புகிறேன்.
எஸ். வையாபுரிப் பிள்ளை



