காதல் பிறந்த கதை
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

காதல் பிறந்த கதை

அறிவின் செல்வரே! அமைச்சரே! நீவிர்
அசிதமா முனிவன் அந்நா ளுரைத்ததும்
கனாநூல் கற்றவர் கணித்துச் சொன்னதும்
அறிவீ ரென்பதில் ஐயமொன் றில்லை.
என்னுயி ரனைய என்மகன் உலகில்
பகைக்குலம் வேரறப் பறித்துக் களைந்து
மன்னர் மன்னனாய் மணிமுடி சூடித்
தரணி முழுவதும் தனியர சாளுவான்;
(என்னுள் விருப்பமும் இதுவே யாகும்)

அன்றேல்,
ஆசையை அடியோ டகழ்ந்து நீக்கி
முற்றத் துறந்த முனிவ னா கி
நாடு விட்டு நகரும் வீட்டுக்
காட்டிற் சென்று கடுந்தவம் புரிவான்;
பெறுதற் கரிய பெருந்திரு வெல்லாம்
இகழ்ந்து தவத்தால் எய்திடும் அந்த
இன்பம் யாதோ? யானெதும் அறியேன்;
ஆயினும்,

என்மகன் நோக்கம் இதுவே யாகும்;
அரண்மனைச் செல்வம் அனைத்திலும் ஆசை
சிறிதும் அவன்றன் சிந்தையிலில்லை.
ஆதலின்,

நீணிலம் புரக்கும் நெறியின் மீதவன்
உள்ளம் திரும்ப உபாய மிதுவென
ஆய்ந்து நீவிர் அறைதல் வேண்டும்;
விரும்பிடில் இந்த மேதினி முழுதுமே
ஆளுவான் இவனென் றறிஞர் அந்நாள்
ஓதிய மொழியும் உண்மை மொழியாய்
நெடுநா ளிங்கு நிலைத்திடல் வேண்டும்.”
என்று மன்னன் இயம்பினன். அதுகேட்(டு)
அமைச்சர் நாயகன் அறமுது கிழவன் எழுந்து
நின்”றெம் இறைவனே! கேளாய்;
ஈதொரு சிறுநோய், இந்நோய் நீங்கிடக்
காதலைப் போலொரு கைகண்ட மருந்திம்
மேதினி மீது வேறெதும் இல்லை.

மைந்தன் உள்ளம் மங்கையர் மையலில்
திளைத்து மூழ்கச் செய்திடல் வேண்டும்;
அண்ணலே! நின்மகன் அறியாச் சிறுவன்
மங்கையர் மதிமுக வனப்பின் தன்மையும்
அவர், கருவிழி யாம்கூர்ங் கணையின்
கடுமையும் அவர், அதரத் தூறும் அமுதின் இனிமையும்
இந்நாள் வரையிலும் ஈதென அறியான்.
அதனால்,

மனத்துக் கினிய மனை விய ரோடு
தோழர் தோழியர் சூழ்ந்திட அவனை
வாழ வைப்பதே மாண்புறு செயலாம்;
இரும்புத் தொடரையும் எறிந்து செல்லும்
ஆடவர் மனமெனும் மத்த யானை ஓர்
மங்கை இட்ட மயிரிழை அதனுக்(கு)
அடங்கி நின்றிடும் ஐயமொன் றில்லை”
என்று கூறி இருந்தனன். இதனை
ஆமென் றனைவரும் ஆமோ தித்தனர்.
அப்பால்,

அரசர்க் கரசன் அமைச்சரை நோக்கி
“மைந்தனுக் குரிய மங்கையர் மணியினை
யாமே தேர்தல் இசைவில தாகும்;
காதலன் தன்னிரு கண்களால் கண்டு
தேர்ந்து தெளிவதே சீரிய முறையாம்;
மங்கைய ராகிய மலர்கள் நிரம்பிய
நந்த வனத்தின் நடுவே அவனை
நிறுத்தி ‘ஐய, நின் னுளம் விரும்பிய
பருவ மலரைப் பறித்துக் கொள்ளெனில்
அவன், இன்ப மறியா இளைஞன் ஆதலின்
புன்னகை புரிந்து புதுமல ரொன்றும்
தீண்டா தப்பால் சென்றிடில் என் செய்வோம்? ”
என்று கூறினன். இவ்வுரை கேட்ட
அமைச்சருள் ஒருவன் அறிவிற் சிறந்தோன்
“அம்புவி ஆளும் அரச! கேண்மோ!
தொடுசரம் உடலைத் துளைத்திடும் மட்டுமே
முடங்குளைச் சீயம் முழங்கித் திரியும்;

மங்கையர் அழகிய மதிமுகம் கண்டு
மயங்கா மனிதரிவ் வையகத் தில்லை;
உதய குமரியை ஒத்தஓர் கன்னியின்
மைவிழி கண்டு மயங்குவன் நின்மகன்;
ஐயம் இல்லை; ஆதலின் அடியேன்,
செப்பும் காரியம் செய்வது நலமாம்.
விரைவி லிங்கொரு விழாக்கொண் டாடுக.
விழாவுக் காகவிவ் வியனக ரத்துள
அழகிய கன்னியர்க் கழைப்பு விடுக்க.
அப்பால்,

சாக்கிய நாட்டுத் தனிச்சிறப் புடைய
ஆடல் பாடல் அனைத்திலும் அவர்கள்
கற்ற திறனெலாம் காட்டச் செய்க.
செய்தபின்,

அழகில் இளமையில் ஆடல் பாடலில்
சிறந்தவர் தமக்குச் சிற்சில பரிசுகள்
நின், மைந்தன் கையால் வழங்கிடச் சொல்க.
பரிசுகள் பெறஅவன் பக்கம் வந்துசெல்
அழகி எவளால் அவனது திருமுகம்
வாட்டம் நீங்கி மலர்ச்சி பெறுமோ,
அவளே ஐயநம் அரசிளங் குமரன்
வாழ்க்கைக் குரிய மனைவி யாவாள்.
காதல் கொண்டவன் காதற் கண்ணால்
கண்டு தெரிந்த காரிகை யோடு
வாழ விரும்புதல் வையகத் தியல்பாம்”
என்று கூறி இருந்தனன். இதுவே
நன்று நன்றென நவின்றனர் யாவரும்.
அப்பால்,

“திக்கெலாம் புகழும் திருவோ லக்க
மண்டபம் அதனில் மகிழ்ச்சி தரும்ஓர்
காட்சி காணக் கருதினன் மன்னவன்.
அதனால்,

“இந்நாட் டுள்ள எழில்மிகு கன்னியர்
அனைவரும் நாளை அரண்மனைக் கேகுமின்;
அழகிய கன்னியர்க் கரசிளங் குமரன்
பரிசுகள் பற்பல பரிவொடு வழங்குவன்;
வனப்பில் மிக்க மங்கையர் மணியிப்
பாரெலாம் புகழும் பரிசினைப் பெறுவள்;
ஈதெம் இறைவன் இட்ட கட்டளை”
என்று மன்னவன் ஏவலர் ஒருநாள்
பட்டண மெங்கும் பறைகள் சாற்றினர்.
அது கேட்டு,

அந்நக ரத்துள அழகிய கன்னியர்
வைகறை எழுந்து மஞ்சன மாடி
ஆடை அணிகள் அழகாய் அணிந்து
கூந்தல் வாரிக் கொண்டை முடித்து
மல்லிகை முல்லை மாலை சூடி
வடிவேல் விழிக்கு மையு மீட்டுத்
திருந்திய நெற்றியில் திலகமும் தொட்டுச்
சிற்றடி சிறந்திடச் செம்பஞ்சும் ஊட்டி
மணவறை ஏறும் மங்கையர் போல
மன்னவர் கோயில் முன்வந்து கூடினர்.
அந்நாள்,

பொற்சிங் காதனம் பொலிவுற அமர்ந்த
அரசிளங் குமரனை அஞ்சன விழிகள்
நிமிர்ந்து நோக்காது நிலத்தையே நோக்க
வரிசையாய் மங்கையர் வந்து வந்து
பரிசுகள் பெற்றுப் பணிந்துசெல் காட்சி
யாவரும் நோக்கி இன்புறற் குரியதாம்.
வந்து கண்ட மங்கையர் உள்ளமோர்
நிலையில் நில்லா தலையச் செய்தது
திருவளர் செல்வன் திருமுகப் பொலிவோ,
அப்பால் யாதோ, அறிபவர் யாரே?
மன்னர் மகனோ மனத்திற் சலனம்
யாது மின்றி இருந்தனன்; அவன்முகம்
சாந்தமும் அமைதியும் தண்ணிய அருளும்
தவழும் காட்சியே தந்த தாயினும்
அவன், கன்னனியர்க் கெட்டாக் கனியே யாயினன்.
கூடி நின்றவர் குமரி ஒருத்தியை
“இவள், அழகிற் சிறந்தவள்,ஐய மில்லை;
அரசிளங் குமரன் அனபிற் குரியாள்
இவளே யன் றிவே றியாவரு முளரோ?”
என்று புகழுரை இயம்பவே, அதனால்
மங்கை அவளும் மனந்தடு மாறி நடுக்க
முற்றஓர் நவ்வியே போல அரியா சனத்தின்
அருகில் சென்றும் வழங்கும் பரிசினை
வாங்கிடா தோடிச் சேடிய ரோடு
சேர்ந்து நின்றனள். அத்தனை ஜோதி,
அத்தனை மகிமை, அத்தனை தெய்வ
அருடகலை பொலிந்தது அரசிளங் குமரன்
அழகிய திருமுகம்! இவ்வா றந்நகர் எழிலுறு மங்கையர்
ஒருவர்பின் னொருவராய் உலகாள் மன்னவன்
மைந்தனைக் கண்டு வணங்கிச் சென்றனர்.

இருந்த பரிசுகள் யாவும் மீதி
ஒன்றுமே யில்லா துதவப் பட்டன.
அப்பால்,

அங்கயற் கண்ணி அழகின் செல்வி
திங்களைப் பழிக்கும் திருமுக விலாசினி
பங்கய மீதெழாப் பாக்கிய லட்சுமி
யசோதரை என்னும் யௌவன குமாரி
நேரெதி ராக நிமிர்ந்து நோக்கி
வருவது கண்டு மன்னர் மகனும்
திடுக்கிட் டுள்ளம் திகைப்புக் கொண்டனன்.
இதனை, பக்கம் நின்ற பலருங் கண்டனர்.
அவள், “எனக்குப் பரிசெதும் ஈவதற் கில்லையோ?”
என்று கூறி இன்னகை புரிந்தனள்.
“இருந்த பரிசுகள் யாவும் போயின;
ஆயினும்,

மா நகர் போற்றும் மங்கையர் மணியே!
இதனைப் பரிசாய் ஏற்றுக் கொள்” எனத்
தன், மார்பிற் கிடந்த மரகத மாலையைக்
கழற்றி யசோதரைக் கன்னியின் அழகிய
திருவரை சுற்றிச் சேர்த்துக் கட்டினன்;
கட்டவே,

கண்களும் கண்களும் கலந்து பேசின.
கண்களும் கண்களும் கலந்து
பேசின பேச்சில் பிறந்தது காதலே.

சித்தார்த்தன் துறவு

[பள்ளியறையில் யசோ தரை கனாக் கண்டு ‘காலம் வந்தது’ என்று வாய் புலம்புகிறாள். சித்தார்த்தன் அதைக் கேட்டு வெளியிலிறங்கி வானில் நட்சத்திரங்களைப்பார்க்கிறான் உரிய காலம் வந்ததென்றறிந் ததும் துறவு பூணத் துணிகிறான்.)

பள்ளி யறையில் பஞ்சணை மீதில்
அங்கயற் கண்ணி யசோதரை அயர்ந்து
கண்வளர் வேளை ஓர் கனவு கண்டு
வந்தது காலம் வந்தது’ எனவே
மயங்கிப் புலம்பினள்; வார்த்தை கேட்டு
விரைவின் எழுந்து வெளியில் இறங்கி
மன்னர் குமரன் வானை நோக்கினன்.
சந்திரன் கடகம் தங்கி யிருந்தனன்.
வானில்,

மற்றைக் கோள்களும் மற்றைய நிலைகளில்
ஒத்து நின்றங்கு உரிய காலம்
உதத்த தென்ன உணர்த்தின ; அவை எலாம்
அருள்வடி வாகிய அண்ணலை நோக்கி
இரவும் இதுவே, இரவும் இதுவே
பெருமை பெறும்வழி பேணுகின் றனையோ?
நன்மை தரும்வழி நாடுகின் றனையோ?
மணிமுடி தாங்கி மன்னர் மன்னனாய்
நீணிலம் புரக்க நினைக்கின் றனையோ?
உலகி லுள்ள உயிரெலாம் உய்ய
நாடும் இழந்து நகரும் இழந்து
வீடும் குடியும் விட்டவ னாகி
தன்னந் தனியே தரணியின் மீதோர்
ஆண்டி யாக அலைந்து திரிய
எண்ணுகின் றனையோ? யாது உன் விருப்பம்?
தெரிந்துநீ உள்ளம் தேறு வாய்” எனக்
கூறின; அவனும் குறிப்பின் உணர்ந்தனன்.
எங்கும் மூடி இருண்ட இருளில்
காற்றொடு முன்னம் கலந்து வந்த
தெய்வ கீதமும் செவியுறக் கேட் டனன்.
ஐயமில்லை, நம் ஐயன் தங்கிய
அரண்மனை யதனில் அந்நா ளிரவில்
தேவரும் நான்கு திசையும் சுற்றி
மறைந்து நின்று வாழ்த்தின ரம்மா!

“இதுவே காலம், இதுவே காலம்,
இமைப் பொழுதேனும் இனியான் இங்கிரேன்;
யா துந் தடையிலை ; இறங்கிச் செல்வேன்;
பிரியா நாம் இனிப் பிரிவோ மாயினுங்
குறை யொன் றதனாற் கூறுதற் கில்லை.
இரு நில முழுதும் இன்பம் அடையும்
அறநெறி ஈதென்று அறிந்து வா ‘ என
ஆணை யிடுவதை அழகின் செல்வி நீ
நித்திரை செய்யினும் நின் முகம் நோக்கித்
தெளிவுற யானும் தெரிந்து கொண்டனன்;
இனி யான் உலகில் இயற்றுதற் குரிய
அரும் பெருஞ் செயல்கள் அனைத்தும் அவ்வானில்
உடுக்க ளென்ன ஒளிவிடும் எழுத்தில்
எழுதி யிருப்பதை யின்றிங்கு என் இரு
கண்களாற் கண்டு களிப்படை கின்றேன்;
இறுதி யாக என்னுளங் கொண்ட
உண்மையும் ஈதாம் உறுதியும் ஈதாம்;
பற்பல ஆண்டுகள் பகலும் இரவும்
ஆராய்ந் தாராய்ந் தறிந்ததும் ஈதாம்;
படியில் எனக்குப் பரம்பரை யாய் வரும்
முடிமீது ஆசை முழுவதும் விட்டேன்.
வாழும் மன்னரை வாட்குஇரை யாக்கி,
நீணிலம் பற்றும் நினைப்பும் ஒழித்தேன்;
பூதல மெல்லாம் போர்க்களம் ஆக்கிய
பாதகன் என்றெனைப் பழித்து எவருஞ்
சொல, ஓடி ஒழுகும் உதிரப் பெருக்கில்
தேர்க்கால் புதையத் திசை தொறுஞ் சென்று
வெற்றி மேல் வெற்றி வென்று வீர
வெற்றி மாலை மிலைந்திட விருப்பம்
எள்ளள வேனும் என்உளத்து இல்லை.
சிறுமை தந்திடும் தீவினை புரியேன் ;
பொறுமை நிதமும் போற்றி ஒழுகுவேன்;
புழுதி நிறைந்த பூமி எனக்குப் பழுதி லாத
பஞ்சணை யாகும். பாழிட மான பாலையை
நல்ல வாழிட மாக மதித்து வாழ்வேன்;
ஏழைப் பிராணி எதனொடும் அன்பாய்த்
தோழமை பூண்டு துணைசெய் திடுவேன்;
பணி செய் பள்ளர் பறையர் அணியும்
துணியை அரையிற் சுற்றித் திரிவேன்;
தெருத் தெருவாகத் திரிந்து பெற்ற
பருக்கையை உண்டு பட்டினி போக்குவேன்;
குன்றும் குகையும் குத்துச் செடியும் அன்றி
வேறெதும் அண்டி ஒதுங்கேன்;
இரவும் பகலும் எவ்வெப் பொழுதும்
பாரில் உயிர்கள் படுந்துய ரெல்லாம்
புகுந்துஎன் உள்ளம் புண்படு கின்றது.
ஆதலின்,

இன்ப வாழ்வை இகழ்ந்து நீக்கினேன் ;
துன்ப வாழ்வைத் துணிந்து போற்றினேன்;
நீணில மீது நித்தியா னந்த
வாழ்வை யடையும் வழிஇது என்று
தீவிர மான தியாகத் தாலும்
ஓய்வி லாத உழைப்பிலும்
அறியலா மென்னில் அறிந்து வருவேன்;
வாடி வருந்தி மன்னுயி ரெல்லாம்
அடையுந் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன் “
என்று கூறி இரவில் இறங்கினன்
கன்று நாடிய ஞானிசித் தார்த்தனே.

கலைமகள் வாழ்த்து

வெள்ளைக் கலையுடுத்து
வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே
வீற்றிருப்பாள்- பிள்ளைமொழி
வெள்ளைக் கவிகண்டு
வெள்ளையென் றெண்ணாமல்
உள்ளத்திற் கொள்வாள்
உவந்து.

பொன்படைத்த பேரைப்
புகழ்ந்தபுலை நீங்கியினி
இன்படைய நாவேநீ
எண்ணுவையேல்-அன்பெழுந்து
செந்தமிழைக் காத்தருளுந்
தெய்வமென இந்நிலத்து
வந்த கலைமகளை
வாழ்த்து.

காலத்துக் கேற்றவுடை
காலத்துக் கேற்றநடை
காலத்துக் கேற்றவணி
கைக்கொண்டு-காலத்தில்
தப்பாது காட்சிதருந்
தாயாங் கலைமகளிங்
கெப்போதும் வாழ்க
இனிது.

இயற்கை

வானம் கறுத்தால் மழைபெய்யும்
மழை பெய்தால் மண்குளிரும்
மண் குளிர்ந்தால் புல்தழைக்கும்
புல் தழைத்தால் பசுமேயும்
பசு மேய்ந்தால் பால்சுரக்கும்
பால் சுரந்தால் கன்றுகுடிக்கும்
கன்று குடித்து மிஞ்சியதைக்
கறந்து கொண்டு வந்திடலாம்
காப்பியில் விட்டுக் குடித்திடலாம்.

வசந்தம்

மின்னி மேகம் பரவுது
மெல்ல மெல்லத் துளிக்குது
என்ன சொல்லித் துளிக்குதென்(று).
இயம்பு கின்றேன் கேளம்மா!

‘மண்ணில் கொஞ்ச நாட்களாய்
மறைந்து றங்கும் செடிகளே!
கண் மலர்ந்து வாருங்கள்;
காலை யாச்சு’ தென்குது.

“பட்டுடுத்து வாருங்கள்;
பணிகள் பூண்டு வாருங்கள்,
பொட்ட ணிந்து சீக்கிரம்
புறப் படுங்க’ ளென்குது.

‘வாசச் செப்பைத் திறவுங்கள்;
வாரி யெங்கும் வீசுங்கள்
ஈசன் பாத பூசனைக்
கெழுந்தி ருங்க’ ளென்குது.

‘வாட்ட மெல்லாம் நீங்கவே
வசந்த காலம் வந்தது
மீட்டும் நன்மை காணலாம்
விரைந்தெ ழுங்க’ ளென்குது

மலர்கள்

பூமகளின் புன்னகைபோல்
பூத்திடு வோமே! – கம்பன்
பாமணக்குந் தமிழினைப் போல்
பரிமளிப் போமே !

வண்ணவண்ணச் சேலைகட்டி,
மகிழ்ந்திருப் போமே! – இந்த
மண்ணகமும் விண்ணகமாய்
மாறச் செய்வோமே!

மங்கையர்க்கும் ஆடவர்க்கும்
மணமுடிப் போமே! – மன்னர்
தங்கமுடி மீதும் நாங்கள்
தங்கி வாழ்வோமே!3

கரும்பினிலு மினிய ரசம்
கருதி வைப்போமே – அதை
விரும்பி வரும் நண்பருக்கு
விருந்தளிப் போமே!

ஈசனருள் வேண்டிநிதம்
இணையடி போற்றி – நல்ல
வாசமெழு தூபதீபம்
வழங்கி நிற்போமே!

எதற்காவேன்?

புல்லும் பசுவிற்காம்
பூண்டும் மருந்திற்காம்
கல்லும் திருக்கோயில்
கட்டுதற்காம் – தொல்லுலகில்
ஏழை எளியேன்
எதற்காவேன் செந்தில்நகர்
வாழும் வடிவேல்
வா.

யாது சதம்?

முத்தையா வேலா
முருகா எனவோதும்
சொத்தையே தேடிச்
சுகமடைவீர் – நித்தமிவ்
வீடும் களமும்
விளைநிலமும் தோப்புகளும்
மாடும் சதமாகு
மா.

அரசே எழுந்திரு

அப்பா எழுந்திரையா!
அரசே எழுந்திரையா!
கொக் கொக்கோ என்று
கோழி அதோ கூவுதுபார்!

கா கா கா என்று
காகம் பறக்குது பார்!
கிழக்கு வெளுக்குது பார்
கிரணம் பரவுது பார்!

பூ மலர்ந்த ரோஜா
புதிய மணம் வீசுது பார்!
வந்து வந்து வண்டு
வட்டம் சுழலுது பார்!

கறவைப் பசுவை அதன்
கன்று சுற்றித் துள்ளுது பார்!
பால் குடிக்க வேண்டாமோ?
பழம் தின்ன வேண்டாமோ?

பாடங்க ளெல்லாம்
படித்திட வேண்டாமோ ?
சீக்கிரம் பள்ளிக்குச்
சென்றிட வேண்டாமோ?

காலையும் ஆச்சுதையா!
கண் விழித்துப் பாரையா!
அப்பா எழுந்திரையா!
அரசே எழுந்திரையா!

கூண்டுக் கிளி

சிறுவன் :

பாலைக் கொண்டு தருகின்றேன்.
பழமுந் தின்னத் தருகின்றேன்
சோலைக் கோடிப் போகவழி
சுற்றிப் பார்ப்பதேன் கிளியே?

காட்டி லென்றும் இரைதேடிக்
களைத்திடாயோ உனக் கிந்தக்
கூட்டில் வாழும் வாழ்வினிலே
குறைகளே தும் உண்டோ சொல்?

கிளி:

சிறையில் வாழும் வாழ்வுக்குச்
சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியாப் பாலகனோ
எண்ணி வினைகள் செய்யானோ?

பாலும் எனக்குத் தேவையில்லை
பழமும் எனக்குத் தேவையில்லை
சோலை எங்கும் கூவிநிதம்
சுற்றித் திரிதல் போதுமப்பா!

போதனை

உள்ள துணர வேண்டுமெனில்
உள்ளம் தெளிய வேண்டுமப்பா !
கள்ளங் கபடாகா தப்பா !
கருணை பெருக வேண்டுமப்பா !
அள்ளி உண்ணும் உணவுக்காய்
அருமை கெடலா காதப்பா !
எள்ளத் தனையும் மரணபயம்
இல்லா திருக்க வேண்டுமப்பா !

ஈச னிரங்கி அடியவருக்
கினிய காட்சி யளித்திடுநாள்
ஈச னடியார் யாவுமறந்து
ஈச னடியே கண்டிருப்பர் ;
ஈச னடியைக் கண்டவர்பின்
என்றும் மௌனம் கொண்டிருப்பர் ;
ஈச னடிகா ணாதவரே
எங்கும் முழங்கி அலைந்திடுவர் .

என்றும் ஈசன் திருவடிகள்
இதய கமலம் சேர்ப்பீரேல் ,
என்றும் கருணை ததும்பியெழும்
இனிய உரைகள் உரைப்பீரேல் ,
என்றும் ஏழை எளியவருக்கு
இயன்ற உதவி புரிவீரேல் ,
என்றும் என்றும் இவ்வுலகில்
இனிய வாழ்வு வாழ்வீரே !

தமிழ் கற்போம்


(வெண்பா)

தெய்வம் தொழுவோம்
திருந்தத் தமிழ்கற்போம் செய்
வினையும் நன்றாகச்
செய்திடுவோம்-ஐய மின்றி
எவ்வெவ் வறமும்
இனிது வளர்த்திங்குச்
செவ்வையுற வாழ்வோம்
தினம்.

தமிழிசை

வெந்தழல் நீராகும்
வெள்ளெலும்பு பெண்ணாகும்.
வந்தமத வேழம்
வணங்கிடுமே-சந்தமெழப்
பாடுவா ருள்ளுருகிப்
பாடும் தமிழிசைக்கு
நீடுலகி லுண்டோ
நிகர்?

ஒரு தொழிலாளியின் முறையீடு

பாடு படுபவர்க்கே – இந்தப்
பாரிடம் சொந்தமையா
காடு திருத்தி நல்ல- நாடு
காண்ப தவரல வோ?

மந்திர மோதுவதால்-எங்கும்
வயல்வி ளைவதுண்டோ?
தந்திரப் பேச்சாலே-
அரிசி சாத மாயிடுமோ?

கட்டும் ஆடையாகப்- பருத்தி
காய்த் தனிப்ப துண்டோ?
சட்டி பானையெலாம்-மண்ணில்
தாமே எழுவதுண்டோ?

உழுது பயிர் செய்வோன்-வயிற்றுக்
குணவு பற்றாமல்
அழுத ழுதுநிதம்-நிற்ப
தறி யீரோ? ஐயா!

ஆடை நெய்திடுவோன் – போர்க்கும்
ஆடை யில்லாமல்
வாடை கொண்டு நிதம்-கிடந்து
வருந்த லாமோ? ஐயா!

வீடு கட்டுமொரு-கொத்தன்
விடுதி யில் லாமல்
ஆடு மாடுகள் போல்–உலகில்
அலைய லாமோ? ஐயா!

கோடி கோடியாக-நீங்கள்
குவித்திடும் லாபம்
வாடும் எம் மக்கள்உண்ண
வயிற்றுச் சோறலவோ?

மனம் திரியாமல்- காலை
மாலை யெப் பொழுதும்
குனிந்து வேலை செய்வோர்-கும்பி
கொதிக்க லாமோ? ஐயா!

வாழ வேண்டுமெனில் – தொழில்கள்
வளர வேண்டு மையா
ஏழை என்றொருவன்- உலகில்
இரக்கலாகா தையா.

ஒத்துழைப்பு

இம்மை வாழ்வுக்கும் – மறுமைக்
கினிய வாழ்வுக்கும்
செம்மை வழிசொல்வோம்-சற்றே
செவி கொடுப் பீரையா.

எத்தனை ஜென் மங்களோ-முன்னம்
எடுத் தெடுத் தலுத்தோம்
எத்தனை ஜென் மங்களோ-இன்னும்
எடுக்கப் போகின்றோம்.

துன்பச் சுழியிலே- விழுந்து
சுழன்று ழலாமல்
இன்ப வாழ்வடையும்- வழியை
எண்ண வேண்டுமையா.

ஒருவர் வாழ்ந்திடலும் – உலகில்
ஒருவர் தாழ்ந்திடலும்
அரிய தெய்வத்தின்- செயலென்
றறைதல் வீணேயாம்.

வீடு கட்டி வைத்துத் – தந்தை
வேண்டும் பொருள் வைத்தார்
கூடி வாழாமல் மக்கள்
குத்திச் சாகின்றார்.

ஈசன் மீதிலே – பழியை
ஏற்ற லேனையா
நாச மாவதற்கு-மூலம்
நாமே தானையா.

வைய மெங்குமே – காணும்
வாழ்வு தாழ்வெல்லாம்
செய்வினைப் பயனாம்- இதிற்
சிறிதும் ஐயமில்லை.

உலகம் முழுவதும் – நோக்கின்
ஓருடம் பேயாம்
அலகில் ஜீவ ரெலாம்-அதன்
அவயவங் களேயாம்.

உடலுறுப்புகள் போல்-உலகில்
ஒத்துழைப்போமேல்
தடையி லாமலே-க்ஷேமம்
தழைத்து வருமையா.

வறுமை அண்டாது – கொடிய
வழக்கும் வாராது
சிறுமை தருஞ்செயல் – ஏதும்
தீண்ட மாட்டாது.

எமனை அஞ்சாமல்-தீமை
யாது மில்லாமல்
அமர வாழ்வுமிந்த-உலகில்
அடைய லாமையா.

உலக க்ஷேமத்தைத் – தரும்
உண்மை யிதுவையா
பல பல வேறு-சொல்லிப்
பயனொன் றில்லையையா.

மந்தாரை மலர்

தேரூரில் தேவியின் நண்பர் ஒருவருக்கு இளமையிலேயே திருமணம் ஆனது. வீட்டுக் கவலை அந்த நண் பரைப் பற்றிக் கொண்டது. மனைவி நீண்டநாள் பூப்பெய்தாக் குறை வேறு. வாலிபத் துடிப்பு மனைவியின் பூப்பை எதிர்பார்த்து ஏங்கி யேங்கித் தவித்தது. ஆள் விரக்தி யடைந்து மதுரைக்குப் போய்விட்டார்.

பிறகு தகவலில்லை. ஆண்டுகள் கழிந்தன. ஒருநாள் அவர் மனைவி பூப்பெய்திய செய்தி வந்தது. கவிஞர் பின் வரும் கவியை உடனே எழுதித் தமது நண்பருக்கு அனுப்பினார்.

“மந்தாரை மலர்ந்திருக்க
மதுவுண்ணும் வண்டெங்கே?
மாமுல்லைக் கொடிபடர
வளருங்கொள் கொம்பெங்கே?
சிந்தாத மணியிருக்க
வொளியெங்கே சென்றதெனத்
தேரூரிற் பலர் கூடித்
தெரிந்து கொளக் கேட்டதற்கு
நந்தாத பரஞான
வமுதுண்டு தெவிட்டெறியும்
நற்பரமா னந்தனருள்
பெறச்சென்ற, நண்பாநீ
வந்தாலே மறுமொழியும்
வகுப்பமெனச் சோதிட நூல்
வல்லாருங் கூறுகின்றார்;
வகையேதும் அறியேனே !”

இந்தப் பாட்டைக் கண்டதும் நண்பர் விரைந்து வந்தார் என்பது சொல்லவும் வேண்டுமோ!

“பேஷையா!”

தசாவதானி திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் திருவனந்தபுரம் ஹைக் கோர்ட் நீதிபதி பிரம்ம ஸ்ரீ K. G. சேஷையர் அவர்கள் தலைமையில் தசாவதானம் நடத்திக் காட்டினார். சபை வியந்து போற்றியது. தலைவர் சேஷையர், “சபாஷ், பேஷ்” என்று மெச்சி, தேசிக விநாயகம் பிள்ளையின் அபிப்பிராயத்தைக் கேட்டார். உடனே ஓர் அரிய கவி புறப்பட்டது. அன்புப் புலவர் அக் கணமே எழுந்து நின்று,

” ஆறுமுகம் பிள்ளை அவதானங் கண்டெளியேன்
வேறுமுக மன்கூற வேண்டுமோ? -தேறுமதிச்
சேஷையா மெச்சித் திருவாய் மலர்ந்து “ஸபாஷ்
பேஷையா என்ற பிறகு.”

என்று பாடினார்.

சபை இந்த அவதானத்தைக் கண்டு திகைத்து வியந்தது! என்ன பொருத்தமான பாட்டு! இப்படி அவர் பாடிய பாடல்கள் கணக்கற்றவையாகும்.

குமரா எனை யாண்டுகொள்

அமரவிளைப் புலவர் சுடலை முத்துப் பிள்ளை அவர்கள் திருச்செந்தூருக்குச் சென்று முருகனை தெரிசிக்கப்போகும் வழியில் நம் கவி மணியை வீட்டில் சென்று தெரிசித்து விட்டுச் செல்லலாம் என்று கருதி கவிமணி இல்லம் சென் றார். அப்பொழுது கவிமணி ஆஸ்த்மா வியாதியால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். சுடலை முத்துப் பிள்ளை முருகன்மேல் ஒரு பாடல் பாடுமாறு கேட்க கவிமணி பாடியது.

உன்னிடத்தி லன்றி
உலகில் எவரிடம் போய்
என்னுடைய சங்கடத்தை
யானுரைப்பேன்-பன்னிருகை
ஏந்து மெழில் செந்தில்
இறைவா உனையன்றி
ஆந்துணை வேறுண்டோ
வையா.

தண்டனை போதுமையா
தாங்க முடியாதையா
கொண்ட பிணி நீங்க
அருள் கூரையா- கண்டுனது
வாசலில் வந்து வணங்க
வலி இல்லை ஐயா
ஈசனே செந்திலிறை
வா.

பண்டிதரும் கைவிட்டார்
பத்தியமும் தீர்ந்தது யான்
உண்டமருந் தால் குணமோ
ஒன்றுமில்லை-அண்டர்
அமரா வதி காத்த
அண்ணலே செந்தில்
குமரா எனை
யாண்டு கொள்.

தாய் கண்ட கனவு

“நான் என் மகன் உமரை அவன் இறந்த ஒன்பதாம் நாள் இரவு கனவிற் கண்டேன். அப்பொழுது அவன் ஊக்கமும் உற்சாகமு முடையவனாகக் காணப் பட்டான். அவனைக் கண்டவுடன் முன் வழக்கம் போல் ‘கடவுளே உமரைக் காப்பாற்றுவாய்’ என்று பிரார்த்தனை செய்தேன், ஆனால் அது அப்பொழுது அவனுக்குப் பிடிக்கவில்லை. கோபம் கொண்டு பின் வருமாறு கூறினான்.”

தங்க ஒளி தந்தாய்-இன்று
சாம்பலாகி நின்றாய்.
மங்கி மாண்டவரை-எண்ணி
வருந்தலேனோ? அம்மா.

ஆழ்ந்த நரகொன்று-நீயே
அமைத்து வைத்துக் கொண்டாய்;
வீழ்ந்து வீழ்ந்து நிதம்-அதனில்
வெந்து சாகின்றாய்.

கர்த்தனே என்றன் – மகனைக்
காத்தருள்க வென
எத்தனை நாளாய்-நீயும்
இரங்கு கின்றாயம்மா.

பேசா வுயிர்களை-ஈசன்
பேண மாட்டானோ?
ஆசானும் நீயோ-அவனோ
ரறியாப் பாலகனோ ?

சிதைந்த எண்ணம்

(கட்டளைக் கலித்துறை)

“மூடிக் கவியு மிருட் பகை நீங்கும்; இம் மூதுலகைத்
தேடிக் கதிரு முதிக்கும்; கமலஞ் சிரிக்கும்’ எனக்
கூடிக் குவியு மலருறை வண்டுளங் கொண்டமைய
ஆடிக் குடைந்து மதவேழம் ஓடை யழித்ததுவே.

ஓர் இராணியின் சாபம்

இன்றைக்கு 260 வருடங் களுக்குமுன் திருவிதாங்கூர் இராச்சியத்தை உமையம்மை இராணி என்றொரு மகாராணி ஆண்டுவந்தார். அவருக்கு ஆறு ஆண்மக்கள் இருந்தனர். இராஜத்துரோ கிகளாகிய மாடம்பிமார், எட்டு வீட்டுப் பிள்ளைமார்- முதலியோர் அவருள் ஐந்து மக்களைச் சதியாக ஒருகுளத்துக்கு கொண்டுபோய் தண்ணீரில் அமிழ்த்திக் கொன்று விட்டார்கள். ஏக காலத்தில் ஐந்து குழைந்தைகளையும் பிரேதங்களாகக் கண்ட இராணி மனமெரிந்து அப் பாதகரைச் சபிக்கின்றாள். சாபம் பலித்த தென்பது திருவிதாங்கூர் சரித்திரத்தால் நன்கு விளங்கும். ஸ்ரீ பத்மநாபன் இராணியின் குல தெய்வமாம்.

மக்காள்! மக்காள்! வளர்த்த பைங் கிளிகாள்!
வஞ்சி நாடாள வந்த மகிபர்காள்!
பாவியென் மடியும் பக்கமும் இருந்தீர்
இக்கண மன்றோ இறங்கிச் சென்றீர்!
எமனும் இதற்குள் எங்கிருந் திறங்கினன்?
உயிரிழந்தீரோ? உறங்குகின் றீரோ?
ஐம்பொறி கெட்டென் அறிவும் ஓய்ந்திட
ஐவரும் குளத்தில் ஆழ்ந்து போனீரோ?
ஒரு குலைக் காயும் ஒன்றாய் உதிர்ந்ததோ?
வஞ்சனை! வஞ்சனை! மாடம் பிகளும்
எட்டு வீட்டாரும் இயற்றிய வஞ்சனை!
இரக்கம் சிறிதும் இல்லா அரக்கர்!
‘கொட்டாரம்’ தீக் கொளுத்திய நீசர்!
மாமன் ஆதித்த வர்மனை விஷத்தால்
மாளச் செய்தமா பாதகர்! ஐயோ!
நாடும் இவரால் காடாய் விட்டதே!
புலிசூழ் வனத்தொரு புல்வாய் ஆனேன்.
நாடிருந் தென்ன நகரிருந் தென்ன?
அணிதேர் புரவி ஆளிருந் தென்ன?

உண்மையில் உற்றார் ஒருவரும் இல்லை இன் (று)
எவரும் துணையிலா ஏழையாய் நின்றேன்.
எமன் வாய்த் தவறிய இவ்வொரு மகற்காய்
உயிர்கொண் டிருந்தேன்; உயிர் கொண்டிருந்தேன்.
கொடியர்! கொடியர்! அறவே கொடியர்!
ஏதும் ஒரு தயை இலாச் சண்டாளர்!
பச்சைப் பசலைகள் பாலகர் என்செய்தார்?
நினைக்கும் போதென் நெஞ்சில் மூள்தீ ஐயோ!
ஐயோ! அறையற் பாலதோ!
பதும நாபா, பாற்கடல் வாசா,
அரவணை மேல்கண் அயர்ந்தே போனையோ?
துரியோ தனர்க்கும் துணையாய் விட்டையோ?
எட்டு வீட்டாதி இராட்சசப் பேய்காள்,
என்மனம் சுடும் இவ் வெரிபோய் உங்கள்
சுற்றமும் குலமும் சுடும் சுடும்.மேலுமிவ்
வினைத்திரள் எல்லாம் வேல் திரளாய் உம்
மனத்தில் ஊடுருவி வாட்டுதல் திடமே.

தவயோகி வாழ்க!

கண்டும் கனியும்,
கரும்பும் களியமுதும்
தண்டமிழில் கொண்டுதரும்
தண்ணளியான்-மண்டுபுகழ்ப்
பண்டிதன்சுத் தானந்த
பாரதிசெய் பாவிருந்தை
உண்டறியார் உண்டோ?
உரை.

முற்றத் துறந்த
முனிவனை முத்தமிழும்
கற்றுத் தெளிந்த
கலைஞனை – உற்றநல்
அன்புருவ மானசுத்
தானந்த பாரதியை
மன்புவியில் வாழ்த்துகவென்
வாய்.

(வேறு)

கொண்டல் வண்ணா கோபாலா!
கும்பிட் டுன்னை வேண்டுகிறேன்
அண்டு மன்பால் தமிழன்னைக்(கு)
அல்லும் பகலும் அலுப்பின்றித்
தொண்டு செய்யும் தவயோகி
சுத்தா னந்தபாரதி யிம்
மண்ட லத்தில் என்றென்றும்
வாழ வரம்நீ வழங்குவையே!

டி.கே.சி.

அறுபதாவது ஆண்டு ஆசிச் செய்தி

கன்னித் தமிழேபோல்,
கம்பன் கவியேபோல்
மன்னும் பொதிகை
மலையேபோல் – பன்னுநம்
நாடு மகிழச் சிதம்பர
நாத நண்பா!
நீடு நீ வாழ்க
நிலைத்து.

அன்னை தமிழ்ச் செல்விக்கு
அருந்தொண்டு செய்தின்றும்
மன்னுலகில் பல்லாண்டு
வாழியவே – என் இனிய
நண்பா! சிதம்பர நாதா!
நம் மாமுருகன்
கண் பார்த் தருளக்
கனிந்து.

டி. கே. சி. வாழ்த்து

குற்றால நாதா
குழல் வாய் உமைபங்கா
பொற்றாள் பணிந்துன்னைப்
போற்றுகின்றேன் – கற்றார்தம்
சிந்தை மகிழச் சிதம்பர
நாத நண்பன்
சந்ததம் வாழவரம்
தா.

கீழ்வரும் கவிதை திரு.டி.கே.சி. அவர்கள் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதிய பாஸ்கரத் தொண்டைமான் அவர் கட்கு கவிமணி அனுப்பிய வாழ்த்து.

கூடி யிருக்கும் நண்பரெலாம்
குடித்து மகிழ்ந்து கூத்தாட
பாடிப் பாடிப் பாடலிலே
பாலும் தேனும் கறந்து தவும்
தாடி இல்லாத் தாகூர்செய்
ஜால வித்தை அத்தனையும்
தேடி யழகாய்ச் சொன்னதமிழ்ச்
செல்வா! வாழ்க! வாழ்கவே!!

நாமக்கல் பாவலன்

இற்றைத் தமிழன்
இதயத் துடிப்பினை இச்
சொற்றரு சித்திரத்தில்
தோன்ற வைத்தான்- கற்றறிந்த
ஓவிய நற் கலைஞன்
ஓது புகழ் நாமக்கல்
பாவலன் ராமலிங்கம்
பார் !

“ராமகிருஷ்ண விஜயம்”

வாழ்த்து

இனிய தமிழில் செந்தமிழில்
என்றும் தழைத்து வருந் தமிழில்
கனியும் பாலும் தேனும்கற்
கண்டும் அனைய கட்டுரைகள்
புனித கவிகள் கதைக ளெல்லாம்
பொலிய வரும் இப் பத்திரிகை
நனியிவ் வுலகில் வாழவரம்
நங்கை பாக நல்குகவே!

அளத்தற் கரிய பலசமய
ஆக மங்கள் அத்தனையும்
களக்கம் அறவே இரவுபகல்
கற்ற பெரியர் யாவருமே உளத்திற்
கண்டு தெளிந்தபொருள்
ஒன்றே என்னும் உண்மையினை
விளக்க வந்த ராமகிருஷ்ண
விஜயம் வாழ்க, வாழ்கவே!

கற்றுத் தேர்ந்த பண்டிதரும்
காணற் கரிய பரம்பொருளை
முற்றி முதிர்ந்த அன்பாலே
முழுதுங் கண்ட மாமுனிவன்
சொற்ற நெறியை மக்களுக்குத்
துலங்கச் செய்து நாடெங்கும்
வெற்றி காணும் ராமகிருஷ்ண
விஜயம் வாழ்க வாழ்கவே!

திருத்தம் உறவே மக்களெல்லாம்
செய்தற் குரிய பணிசெய்து
வருத்தம் இன்றி இருமையும் நல்
வாழ்வை அடையும் வழிகாணப்
பொருத்த மான உண்மைகளைப்
பொறுக்கி இனிய செந்தமிழில்
விரித்துக் கூறும் ராமகிருஷ்ண
விஜயம் வாழ்க வாழ்கவே!

(வேறு)

வேதா கமங்கள்
விரித்த பொருளையெலாம்
ஓதா துணர்ந்த
உரவோனை – மாதா என்(று)
இத்தலத்து மங்கையர்கள்
யாவரையுங் காண்போனை
நித்தமுமென் நெஞ்சே
நினை.

எங்கும் நிறைபொருளாய்
எப்பொருட்கும் மேற்பொருளாய்
தங்கும் தனிப்பொருளின்
தண்ணருளால் – பொங்கு புகழ்
மாதவன் ராமகிருஷ்ணன்
வாய்மலர்ந்த பொன்மொழியெப்
போதுமென் நெஞ்சேநீ
போற்று.

இராமகிருஷ்ண பரம ஹம்ஸரின் தேவி பிரார்த்தனை

உன்னரு ளல்லால் – வேறிங்
கொரு துணையுண்டோ?
என்னை ஆண்டிடநீ-உள்ளம்
இரங்க வேண்டுமம்மா.

மாசிலாத அன்பு – நெஞ்சில்
வளர வேண்டுமம்மா;
ஆசை வேரெல்லாம்- அடியோ
டய வேண்டுமம்மா.

உலக மாயை யிலே -சிக்கி
உழன்று நையாமல்
அலகிலாத வுன்றன்– அருளால்
ஆள வேண்டுமம்மா.

பொருளும் வேண்டாமம்மா- எனக்குப்
புகழும் வேண்டாமம்மா;
அருளே வேண்டுமம்மா- வேறோர்
ஆசை இல்லையம்மா.

கோயில் என்னெஞ்சாய் – என்றும்
குடியிருப்பாயம்மா;
தாயின் அருளல்லால்-எனக்கோர்
தஞ்சம் வேறுண்டோ?

சித்திகள் பெற்றரிய – செயல்கள்
செய்ய வேண்டாமம்மா;
பத்தியொடுன் பாதம் – நிதமும்
பணிதல் போதுமம்மா.

மாசிலாத அன்பை-உன்னை
மறக்க வொண்ணா அன்பை
தாசனாகும் அன்பை-எனக்குத்
தந்தருள் வாயம்மா.

காமம் அண்டாமல்-என்னைக்
காக்க வேண்டு மம்மா;
தீமை சாராமல்- உள்ளம்
தெளிய வேண்டு மம்மா.

ஆன துணையிங்கே-பிள்ளைக்
காரு மில்லையென
நானுரையாமல் – நீயே
நன்கறிவாயம்மா.

ஐம்புலச் சேட்டை-முற்றும்
அடங்க வேண்டு மம்மா;
நம்பியுன் பதமே- உள்ளம்
நாட வேண்டு மம்மா.

ஏடு கண்டறியேன்-ஏட்டில்
எழுத்தும் கற்றறியேன்;
பாடிப் பாடியுனைப் – போற்றிப்
பணிவ தெப்படியோ?

உண்மை அன்பில்லை-ஞான
ஒளியும் நெஞ்சிலில்லை;
அண்மையாக வந்துன் – பாதம்
அடைவ தெப்படியோ?

மண்ணில் உன்பிள்ளை – தனியே
வாடி நிற்பதை நீ
கண்ணி லெந்நாளும்- தாயே
கண்டறியாயோ?

மருளும் இவ்வுலகில் – ஏழை
வருந்தி வாடாமல்
அருட் பெருங்கடலே-உண்மை
அன்பளிப் பாயம்மா,

தமிழ் முனி

எவ்வேடு தேடிநீ எந்நாட்டில் எப்பதியில்
எவ்வீடு நோக்கியின் றேகினையோ- அவ்வான்
அமிழ்த மமிழ்தமென அள்ளியள்ளிச் சங்கத்
தமிழ்தந்த சாமிநா தா.

கண்ணுஞ் சடையாமல் கையுந் தளராமல்
உண்ணப் பசியெழுவ தோராமல்-எண்ணியெண்ணிச்
செந்தமிழ்த் தாய்க்குநீ செய்த திருத்தொண்டுக்
கிந்தநிலத் துண்டோ இணை.

சித்திரத்திற் பார்ப்போம் சிலைசெய்து கும்பிடுவோம் புத்தகத்திற் போற்றிப்புகழ்ந்திடுவோம் – இத்தரையில்
சந்தப் பொதிகைத் தமிழ்முனியென் றுன்னைநிதம்
சிந்தையிற் கொண்டு தெளிந்து.

தாகூர் இரங்கற்பா

அலை வளைத்த புவிமுழுதும் அளந்தபெரும்
புகழுடையான் அரசர் கண்டு
தலை வளைத்து வணங்குமொரு குருதேவன்
சலியாது தரணிமீது

கலை வளர்த்த கவியரசன் தாகூரின்
றெம்மையெல்லாம் கைவிட்டு, ஐயோ
மலை விளக்கு மறைந்ததென மறைந்திட்டான்
என்னே இம் மனித வாழ்க்கை.

கஸ்தூரிபாய் இரங்கற்பா

வையம் புகழும் காந்திமகான்
வாழ்க்கைத் துணையாய் வாழ்ந்துநிதம்
செய்யும் தொழில்கள் ஒவ்வொன்றும்
திருந்தச் செய்து கண்கண்ட
தெய்வம் கணவன் என்றுள்ளம்
தெளிந்த தாயே நீயெம்மை
வெய்ய துயரில் வீழ்த்தியின்று
விண்ணா டாளச் சென்றனையே.

கீர்த்தனங்கள்

தந்தி முகன்

இராகம் – ஹம்சத்வனி

தாளம் – ஆதி

பல்லவி

வந்தனை செய்வோமே-மலரடி
வாழ்த்தி வணங்கு வோமே (வந்தனை)

அநுபல்லவி

சிந்தனை செய்யு முன்னம்
வந்தெனக் கருள் செய்யும்
தந்தி முகனைச்சிவ
சங்கரன் மைந்தனை (வந்தனை)

சரணம்

இன்னமு தொழுகும் இசை-தமிழிசை
இந்நிலத் தோங்கிடவே
கன்னல் முக்கனி அவல் கடலை மோதகமெலாம்
சந்நிதி முன்படைத்துத் தாழ்ந்து தலைகுனிந்து (வந்தனை)

மாயன் மருகன்

இராகம் – தர்பார்

தாளம்–ஆதி

பல்லவி

ஐயாநீ அருள்செய்ய வேண்டும்-உன் றன்
அடியிணையன்றி வேறொரு துணையறியேன் (ஐயா)

அநுபல்லவி

ஒய்யார மாமயிலில் உல்லாசமாக வரும்
வையாபுரி முருகா மாயன் திருமருகா (ஐயா)

சரணம்

வஞ்சவினை மலியும் உலகில்- வாழும்
வழியறியாது நிதம் வருந்திடு மெளியேன்
அஞ்சிவந் துன்னையே அடைக்கலமாய்ப் புகுந்தேன்
அமரரைச் சிறைதவிர்த் தாண்ட குமரா என் (ஐயா)

தெள்ளத் தெளிந்ததையா

இராகம்–கமாஸ்

தாளம் – கண்டசாப்பு

பல்லவி

தெள்ளத் தெளிந்ததையா-உமது
கள்ளத் தனமெல்லாம் (தெள்ள

அனுபல்லவி

வள்ளிக் குறத்தியின்
மையலில் சிக்கினால்
எள்ளத்தனை அன்பும்
என்மீ திருக்குமோ? (தெள்ள

சரணம்

வேட்டைக் கெனஎழுவீர்–கையில்
வேலையும் ஏந்திச் செல்வீர்
காட்டினைச் சுற்றியக்
கள்ளியின் தினைப்புன
மேட்டுக்கே ஒருமானை
விரட்டிப் பின் ஓடுவீர்! (தெள்ள

கட்டிச் சிறை யிடுவார்- அந்தக்
காட்டுக் குறவரென்று
தட்டழிந் துள்ளம்
தடுமாறி யல்லவோ
வெட்டை வெளியிலோர்
வேங்கை மர மானீர்! (தெள்ள

ஆறணி வேணியன்

இராகம்–ஹம்சநாதம்

தாளம் – ஆதி

பல்லவி

வேறெதும் வேண்டேனே-கும்பிட்டு
வேறெதும் வேண்டேனே (வேறெ)

அநுபல்லவி

நீறணி மேனியன் நீலகண்டன் கங்கை
ஆறணி வேணியன்-ஆனந்தனைக் காணில் (வேறெ)

சரணம்

பூசை புரிந்திடவே-அவன்பதம்
போற்றிப் புகழ்ந்திடவே
ஆசைக் கடலைப் பெருக்கிடவேண்டுவேன்
ஆயுளும் கோடி அதற்காக வேண்டுவேன் (வேறெ)

தில்லையப்பன்

இராகம் — உதயரவிச்சந்திரிகா

தாளம்–ஆதி

பல்லவி

சொன்னதெல்லாம் மறந்தாரோ-என்னைச்
சோதனை செய்யத் துணிந்தாரோ (சொன்ன)

அநுபல்லவி

செந்நெற் கழனிசூழும் தில்லைப்பதியாரன்று
கன்னம் குழியமுத்தம் கனிந்து கனிந்தளித்துச் (சொன்ன)

சரணம்

வருவார் வருவாரென்று நித்தம் – வரும்
வழிமேல் விழியாய் நின்றேன் தோழி
ஒருவாரம் ஒருமாதம் ஒருவருஷமும் போச்சே
ஒருத்தி கிறுக்கி என்றிவ் வூரும் சிரிக்கலாச்சே (சொன்ன)

நல்ல சகுனம்

இராகம்–ஷண்முகப்ரியா

தாளம்–ஆதி

பல்லவி

நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி- சென்று
நான் படும்பா டவர்க்குச் சொல்லடி (நல்ல)

அநுபல்லவி

அல்லல் அகற்றி அன்பர்க்
கானந்தம் அருள் நேசர்
தில்லைப்பதி நடேசர்
திருவுள்ளம் அறிய நீ (நல்ல)

சரணம்

வண்ணமலர்க ளேதும் வாசம் தருவதில்லை
பண்ணில் இனிமையில்லை பாலிற் சுவையுமில்லை
கண்ணில் உறக்கமில்லை கருத்தோர் நிலையிலில்லை
எண்ணி அளப்பதேனோ எல்லாம் அறிவாயோடி
புண்ணியம் உண்டடி பொற்றொடியே இன்று (நல்ல)

பாதாரவிந்தம் பணிந்தேன்

இராகம் – மோஹனம்

தாளம் – ஆதி

பல்லவி

பாதார விந்தம் பணிந்தேன்- கடைக்கண் நீ
பாலிக்க வேண்டு மையா (பாதார)

அநுபல்லவி

சாதாரி பாடி வெற்றி
தமிழிசைக்கே அளித்த
நாதா லீலாவி னோதா
நங்கை உமையாள் பங்கா (பாதார)

சரணம்

புத்தகக்காடு முழுதும்–அலைந்தலைந்தென்
பொழுதெலாம் போக்கி விட்டேன்
சித்தம் மயங்கி உண்மை
தெளியாது திகைப்புற்றேன்
பத்தர்க் கருளும் ஈசா
பாபவி நாசா உன் (பாதார)

எங்கும் நிறைந்தவன்

இராகம் – லலிதாங்கி

தாளம் – ஆதி

பல்லவி

கூறா தறிந் திடாயோ–என்றன்
குறைக ளனைத்தையும் நான்
உன்பா லெடுத்துக் (கூறா)

அநுபல்லவி

தேறா உலக மதில்
சிந்தை கலங்கிக் கண்ணீர்
ஆறாய் ஒழுகி ஓட
அழுது தொழுது நிதம் (கூறா)

சரணம்

வல்லார்க்கு வல்லவன் நீ – தெய்வ
மறைகளுக் கரியவன் நீ
நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நடுநின்ற நாயகன் நீ
எல்லாம் அறிந்தவன் நீ
எங்கும் நிறைந்தவன் நீ (கூறா)

யாரிவன் அறிவாயோடீ?

இராகம்: கோபிகா திலகம்

தாளம்: சதுச்ரஜாதி திரிபுடை

பல்லவி

யாரிவன் அறிவாயோடி-இவனிடத்தில்
என்ன உறவுனக்கடி (யாரிவன்)

அநுபல்லவி

ஊருண்டோ பேருண்டோ
உற்றார் பெற்றாருண்டோ
சீருண்டோ சிறப்புண்டோ
தெரிந்தா ரெவருமுண்டோ (யாரிவன்)

சரணம்

பிச்சை யெடுத்தலைகின்றான்-சுடலையிலே
பேயுட னாடு கின்றான்
நச்சரவைக் கழுத்தில் – தொங்கவிட்டு
நல்லணி பூணுகின்றான்
அச்சந் தரும் புலித்தோல்
ஆடையாய் உடுக்கின்றான்.
இச்சகத்தில் பித்தன்
இவனைப் போலெங்கு முண்டோ (யாரிவன்)

திருவள்ளுவர்

இராகம்—சக்கரவாகம்

தாளம்—ரூபகம்

பல்லவி

ஆதிப் பொது மறையை—அனுதினம்
ஓதிப் பழகு வமே       (ஆதி)

அனுபல்லவி

ஜாதி மத பேதம் ஏது மிலா நடு
நீதியை எங்கும் நிலை நிறுத்த வந்த                      (ஆதி)

சரணம்

தெய்வப் பெரும்புலவன்—தமிழ்நிலம்
செய்தவத்தால் பிறந்தோன்
ஐயந் திரிபற உண்மை யறிந்தவன்
வையம் புகழ்திரு வள்ளுவன் பாடிய                    (ஆதி)

பள்ளிச் சிறுவரொடு—சிறுமியர்
பண்டிதர் பாமரரும்
உள்ளக் களிப்புடன் ஒன்றாகக் கூடியே
தெள்ளத்தெளிந்த குரலில் தெருவெல்லாம்            (ஆதி)

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!