
களவழி நாற்பது மூலமும் உரையும்
1. நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய்
குருதி களிறுழக்கத் – தாண்மாய்ந்து முன்பக
லெல்லாங் குழம்பாகிப் பின்பகல் துப்பத் துகளிற்
கெழூஉம் புனனாடன் தப்பியா ரட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர்நாட்டையுடைய செங்கட் சோழன், தப்பியார் – பிழைசெய்தவரை, அட்ட – கொன்ற, களத்து- போர்க்களத்தில், நாள் ஞாயிறு – ஞாயிறு தோன்றிய காலைப்பொழுதில், உற்ற – வந்தடைந்த, செருவிற்கு – போரில், வீழ்ந்தவர் – பட்டவருடைய, வாள்மாய் – வாளழுந்துதலா லொழுகும், குருதி – உதிரத்தை, களிறு உழக்க – யானைகள் கலக்க, தாள் – (அவற்றின்) காலாலே, மாய்ந்து – சுருங்கி, முன்பகல் எல்லாம் – முற்பகற் பொழுதெல்லாம், குழம்பு ஆகி – சேறாகி, பின்பகல் – பிற்பகற்பொழுதில், துப்பு துகளில் – பவளத் துகள்போல, கெழூஉம் – (விசும்பெங்கும்) பரந்து செறியாநிற்கும் எ – று.
நாள் என்பது பசுவின் முற்கூறாகிய காலைப் பொழுதைக் குறிக்கும். இதனை, நாணிழல், நாளங்காடி என்பவற்றால் அறிக. குருதிமாய்ந்து குழம்பாகியக் கெழூஉம் என முடிக்க. செருவிற்கு – வேற்றுமை மயக்கம். வாண்மாய் – மறைதல் என்னும் பொருட்டாய மாய்தல் என்பதன் முதனிலை அழுந்தும் என்னும் பொருளில் வந்தது. கெழூஉம் – செய்யுளிசை கெட்டவழி வந்த அளபெடை, தப்பியார் – வினையாலணையும் பெயர்; தப்பு – பகுதி, இன் இடைநிலை ஈறு கொண்டது. (1)
2. ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்ப்
போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி கார்ப்பெயல்
பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ் நீர்த்தூம்பு நீருமிழ்வ
போன்ற புனனாடன் ஆர்த்தம ரட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், ஆர்த்து – குணலையிட்டு, அமர் – போரில், அட்ட – கொன்ற, களத்து – போர்க்களத்தில், ஞாட்பின்உள் – படையின் கண், எஞ்சிய – ஒழிந்த, ஞாலஞ்சேர் – நிலத்திற்சேர்ந்த, யானை கீழ் – யானைகளின்கீழ் (கிடந்த), போர்ப்பு இல் – மேற் போர்வை இல்லாத, இடி – இடிபோன் றொலிக்கும், முரசின் ஊடுபோம் – முரசத்தினூடு செல்லும், ஒள் குருதி – ஒள்ளிய உதிரம், கார்பெயல் பெய்தபின் – கார்காலத்து மழைபெய்த பின்பு, செங்குளம் – செங்குளத்தினது, கோடுகீழ் -கரையின் கீழுள்ள, நீர்தூம்பு – மதகுகள், நீர் உமிழ்வ – நீருமிழ்தலை, போன்ற – ஒத்தன எ- று.
செங்குளம் – செம்மண்ணாற் சிவந்த நீரையுடைய குளம். பொருளின்கண் உள்ள குருதி யென்னும் பெயருக்கேற்ப உவமைக் கண் உமிழ்தலையுடைய நீர் என மாற்றுக. கார் – பருவத்திற்கு இருமடியாகுபெயர். போன்ற – போல் என்னும் இடைச் சொல்லடியாகப் பிறந்த வினைமுற்று. (2)
3. ஒழுக்குங் குருதி யுழக்கித் தளர்வார் இழுக்குங்
களிற்றுக் கோடூன்றி யெழுவர் மழைக்குரன்
மாமுரசின் மல்குநீர் நாடான் பிழைத்தாரை
யட்ட களத்து.
பதவுரை: மழைக் குரல் – மேகத்தின் முழக்கம் போலும் முழக்கத்தையுடைய, மா முரசின் – பெரிய முரசினையுடைய , மல்குநீர் நாடன் – நிறைந்த நீரினையுடையனாகிய செங்கட் சோழன், பிழைத்தாரை -தப்பினவரை, அட்ட – கொன்ற, களத்து- போர்க் களத்தில், ஒழுக்கும் குருதி – புக்காரை ஒழுகச்செய்யுங் குருதியை, உழக்கி – கலக்கி, தளர்வார் – (அதனைக் கடக்க லாற்றாது) தளர்ச்சி யுறுவார், இழுக்கம் – மறிந்துகிடக்கின்ற, களிற்றுக்கோடு – யானையின் கொம்புகளை, ஊன்றி எழுவர் – ஊன்றுகோலாகக் கொண்டு எழாநிற்பர் எ-று.
ஒழுக்கும்- ஒழுகும் என்பதன் பிறவினை; ஒழுகல் – கால் தளர்ந்து செல்லுதல்; இதனை, ‘பரங்குன்றினிற் பாய்புனல் யாமொழுக’ என்னும் கோவையாரால் உணர்க. இழுக்குதல் – தவறுதல்; ஆவது வெட்டுண்டு கிடத்தல். முரசினையுடைய நாடன் என்றும், தளர்வார் ஊன்றி யெழுவர் என்றுங் கூட்டுக. (3)
4. உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப் பரிதி
சுமந்தெழுந்த யானை – யிருவிசும்பிற் செல்சுடர்
சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால்
புல்லாரை யட்ட களத்து.
பதவுரை: செங்கண்மால் – செங்கட்சோழன், புல்லாரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், உருவக் கடுந்தேர் – அஞ்சத்தக்க கடிய தேரை, முருக்கி – சிதைத்து, அ தேர் பரிதி – அந்தத் தேரினுருளினை, சுமந்து எழுந்த யானை – சுமந் தெழுந்த யானைகள், இருவிசும்பு இல் – பெரிய வானத்தில், செல்சுடர் – செல்லுகின்ற ஞாயிறு, சேர்ந்த மலை போன்ற – அடைந்த மலையை யொத்தன எ-று.
உரு என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. இஃது அச்சம் என்னும் பொருட்டாதலை ‘ உருவுட்காகும்’ என்பதனால் அறிக. மற்று – அசைநிலை, பரிதி – இது பருதியெனவும் வழங்கும். பருதி – வட்டம்; தேருருளை வட்டமுடைமையின் பருதியெனப்பட்டது; ‘சுரம்பல கடவும் சுரைவாய்ப் பருதி’ என்னும் பதிற்றுப்பத்தும் அதன் உரையும் நோக்குக. சுடர் – ஆகுபெயர். போன்ற – அன்பெறாத அகரவீற்றுப் பலவறிசொல். திருமாலின் வழியில் வந்தமையால் சோழனுக்கு ‘மால்’ என்பது ஒரு பெயர்; பெரும்பாணாற்றில் ‘முந்நீர்வண்ணன் புறங்கடை’ என வருவது காண்க. (4)
5. தெரிகணை யெஃகந் திறந்தவா யெல்லாங்
குருதி படிந்துண்ட காகம் – உருவிழந்து
குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால்
தப்பியா ரட்ட களத்து.
பதவுரை: செங்கண்மால் – செங்கட்சோழன், தப்பியார் – பிழைத்தாரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், தெரி கணை – ஆராய்ந்த அம்புகளாலும், எஃகம் – வேல்களாலும், திறந்த- திறக்கப்பட்ட, எல்லாவாய் (உம்) – எல்லாப் புண்களின் வாய்களினின்றும் , குருதி படிந்து – (ஒழுகும்) உதிரத்திற் படிந்து, உண்ட காகம் – (அவ்வுதிரத்தை) உண்ட காகங்கள், உரு இழந்து – (தம்முடைய) நிறத்தை இழந்து, குக்கில் புறத்த – செம்போத்தின் புறத்தையுடையவாகி, சிரல்வாய் – சிச்சிலிக் குருவிபோன்ற வாயையுடையவாயின எ-று.
வாயெல்லாம் என்பதனை எல்லாவாயும் என மாற்றுக. உண்ட என்பது பொதுவினையாதலை ‘உண்ணு நீ ரூட்டிவா’ என்னும் குறிஞ்சிக்கலியானும் அறிக. குக்கில் – செம்போத்தாதலை ‘குக்கில் செம்போத்துச் சகோரமு மதற்கே’ என்னும் பிங்கலந்தையான் அறிக. சிரல் – சிச்சிலி, மீன்கொத்துக் குருவி; ‘புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்’ என்பது சிறுபாண். (5)
6. நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை யடுக்குபு
வேற்றிக் கிடந்த – இடித்துரறி யங்கண் விசும்பி னுருமெறிந்
தெங்கும் பெருமலைத் தூறெறிந் தற்றே யருமணிப் பூணேந்
தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன்தெவ்
வேந்தரை யட்ட களத்து.
பதவுரை: அரு மணி – (பெறுதற்கு) அரிய மணிகள் (அழுத்திய), பூண் ஏந்து – அணிகலத்தை ஏந்திய, எழில் – எழுச்சியையுடைய, மார்பு – மார்பையும், இயல் – நடத்தலையுடைய, திண் தேர் – வலிய தேரையுமுடைய, செம்பியன் – செங்கட்சோழன், தெவ்வேந்தரை – பகையரசரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், நால் நால் திசையும் – பல திசைகளிலும், பிணம் பிறங்க – பிணங்கள் மிக, யானை அடுக்குபு – யானைகளடுக்கப்பட்டு, ஏற்றிக்கிடந்த – உயர்ந்து கிடந்தன, இடித்து உரறி – இடித்து முழங்கி, அம் கண் – அழகிய இடத்தையுடைய, விசும்பின் -வானத்தினின்று, உரும் எறிந்து – இடிவீழ்ந்து, எங்கும் – எவ்விடத்துமுள்ள, பெரு மலை – பெரிய மலைகளை, தூறு – தொடக்கு (அற), எறிந்தால் அற்று – எறிந்தாற்போலும் எ-று.
நானால் – பன்மை குறித்தது; எட்டு எனினும் அமையும். அடுக்குபு வேற்றி – உயிர்வர உகரம் கெடாது நின்றது; ‘அடித்தடித்து வக்காரம்’ என்புழிப்போல. இயல்திண்டேர் என்புழி இயல் இப் பொருட்டாதலை ‘இயறேர்க்குட்டுவன்’ என்னும் சிறுபாண் உரையாலறிக. (6)
7. அஞ்சனக் குன்றேய்க்கும் யானை யமருழக்கி
இங்கு லிகக்குன்றே போற்றோன்றுஞ் -செங்கண்
வரிவரான் முன்பிறழுங் காவிரி நாடன் பொருநரை
யட்ட களத்து.
பதவுரை: செம் கண் – சிவந்த கண்களையும், வரி – வரிகளையு முடைய, வரால்மீன் பிறழும் – வரால் மீன்கள் பிறழா நிற்கும், காவிரிநாடன் – காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், பொருநரை – (தன்னோடு) போர் செய்வாரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், அஞ்சனம்குன்று – நீலமலையை, எய்க்கும் – ஒத்துத்தோன்றும், யானை – யானைகள், அமர் உழக்கி- போரின்கட் கலக்கி, இங்குலிகம் குன்றுபோல் – சாதிலிங்க மலையைப் போல, தோன்றும் – சிவந்து தோன்றாநிற்கும் எ-று.
ஏய்க்கும் – உவமச்சொல். மீன் – இத் தமிழ்ச் சொல்லை வட நூலார் மீனம் எனத் திரித்து வழங்குவர். (7)
8. யானைமேல் யானை நெரிதர வானாது கண்ணேர்
கடுங்கணை மெய்ம்மாய்ப்ப – எவ்வாயும் எண்ணருங்
குன்றிற் குரீஇயினம் போன்றவே பண்ணா ரிடிமுரசிற்
பாய்புன னீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து.
பதவுரை: பண்ஆர் – ஒப்பனையமைந்த, இடிமுரசு இன் – இடிக்கும் முரசினையுடைய, பாய் புனல் – பாய்ந்துசெல்லும் நீரினையுடைய, நீர்நாடன் – காவிரிநாட்டை யுடையோன், நண்ணாரை- பகைவரை, அட்டகளத்து – கொன்ற போர்க்களத்தில், யானை மேல் யானை நெரிதர- யானைகள் மேல் யானைகள் சாய, ஆனாது – நீங்காமல், கண் நேர் – (மகளிரின்) கண்களை யொக்கும், கடுங்கணை – கடிய அம்புகள், எ வாய் உம் – எவ்விடத்தும் (பாய்ந்து), மெய் மாய்ப்ப – (அவற்றின்) உடலை மறைத்தலால்(அவை), எண் அரு -அளவில்லாத, குன்றில் – மலைகளில், குரீஇ இனம் – குருவியின் கூட்டங்கள் மொய்த்திருப்பவற்றை, போன்ற – ஒத்தன எ-று.
மாய்ப்ப – மறைக்க; இஃது இப்பொருட்டாதலை ‘களிறு மாய்க்குங் கதிர்க்கழனி’ என்னும் மதுரைக் காஞ்சியடி உரையானறிக. குரீஇ – இயற்கை யளபெடை, முரசினை யொக்கும் பாய்புனல் என உவமையாக்கலும் ஒன்று. (8)
9. மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட
காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல்
ஊணில் சுறபிறழ்வ போன்ற புனனாடன்
நேரரரை யட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை – பகைவரை, அட்டகளத்து – கொன்ற போர்க்களத்தில், மேலோரை – (குதிரை முதலாயினவற்றின்) மேலிருந்தவரை, கீழோர்- கீழ்நின்ற காலாட்கள், குறுகி – சென்று சார்ந்து, குறைத்திட்ட – துணித்த, கால் ஆர் சோடு – காற்கிட்ட அரணத்தோடு, அற்ற – அறுபட்ட, கழல் கால் – வீரக்கழலணிந்த கால்கள், இருங்கடல் – பெரிய கடலுள், ஊண் இல் – இரையில்லாத, சுறபிறழ்வ போன்ற – சுறாமீன்கள் பிறழ்வனவற்றை யொத்தன எ -று.
சோடு – சுவடு என்பதன் மருஉ : அரணம் என்பது பொருள். அரணம் – செருப்பு. சுற – இது ‘குறியதனிறுதிச் சினைகெட’ என்னுஞ் சூத்திரத்து இலேசானே ஆகாரங் குறுகி உகரம் பெறாது நின்றது. நீலச்சுறா என்னும் பாடத்திற்குக் கரிய சுறா மீன்கள் என்று பொருள் கொள்க. (9)
10. பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா
தொல்கி யுயங்குங் களிறெல்லாந் – தொல்சிறப்பிற்
செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன்
தெவ்வரை யட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், பல் கணை – பல அம்புகளும், எவாய் உம் – எவ்வுறுப்பிலும், பாய்தல் இன் – பாய்தலால், செல்கலாது – செல்ல மாட்டாது, ஒல்கி – தளர்ந்து, உயங்கும் – வருந்தும், களிறு எல்லாம் – யானைகளெல்லாம், தொல் சிறப்பு இன் – தொன்றுதொட்டு வருஞ் சிறப்பினை யுடைய, செவ்வல் குன்றம் போல் – தாதுமலை போல ,தோன்றும் – தோன்றா நிற்கும் எ-று.
செல்கலாது – வினையெச்சம்; குவ்வும் அல்லும் சாரியைகள். செவ்வல் – பண்புப்பெயர். அம் – சாரியை. தாதுமலை – சிந்தூர மலை. ‘இங்குலிகக் குன்றேபோற் றோன்றும்’ என முன் வந்தமையும் காண்க. (10)
11. கழுமிய ஞாட்பினுண் மைந்திகாந்தா ரிட்ட ஒழிமுரச
மொண்குருதி யாடித் – தொழின்மடிந்து கண்காணா
யானை யுதைப்ப விழுமென மங்குன் மழையி னதிரு
மதிராப்போர்ச் செங்கண்மா லட்ட களத்து.
பதவுரை: அதிரா போர் – கலங்குதலில்லாத போரையுடைய, செங்கண்மால் – செங்கட்சோழன், அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், கழுமிய – நெருங்கிய, ஞாட்பின்உள் – போரில், மைந்து இகந்தார் – வலியிழந்தவர்கள், இட்ட – போகவிட்ட, ஒழி முரசம் – ஒழிந்த முரசம், ஒள் குருதி – ஒள்ளிய உதிரத்தில், ஆடி – படிந்து, தொழில் மடிந்து – (தம்) தொழிலைத் தவிர்த்து, கண்காணா- (படைகளாலூறுபட்டு) கட்புலனிழந்த, யானை உதைப்ப – யானைகளுதைத்தலால், மங்குல் மழையின் – மேகம்போல, இழும் என அதிரும்- இழுமென முழங்காநிற்கும் எ-று.
முரசம் ஆடிமடிந்து முழங்கும் என வினiடிவு செய்க. மங்குல் மழை – ‘ஒரு பொரு ளிருசொற்பிரிவில் வரையார்’ என்பதனால் ஒரு பொருண்மேல் வந்தன. அதிரா – கலங்காத, நடுங்காத; ‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்’ என்பது காண்க. (11)
12. ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப் பூவலங்
குன்றம் புயற்கேற்ற போன்றவே காவிரி நாடன்
கடாஅய்க் கடிதாகக் கூடாரை யட்ட களத்து.
பதவுரை: காவிரி நாடன் – காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கடாய் – படையைச் செலுத்தி, கடிதுஆக – விரைந்து, கூடாரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், ஓவா – இடை விடாமல், கணைபாய – அம்புகள் தைக்க, எழில்வேழம்- எழுச்சியுடைய யானைகள், ஒல்கி – தளர்ந்து, தீவாய் – தீயின் நிறம்பொருந்திய, குருதி இழிதலால் – உதிரத்தை யொழுக்குதலால், செம் தலை – சிவந்த இடத்தை யுடைய, பூவல் குன்றம் – செம்மண் மலைகள், புயற்கு ஏற்ற போன்ற – மழைக்கு எதிர்ந்தன ஒத்தன எ -று.
செம்மண்மலையிற் பெய்த மழை செந்நீரா யொழுகுமாதலின், உடல்முழுதும் குருதியை யொழுகவிடும் யானைகள் அம்மலை களை யொக்கும் என்றார். தீவாய் என்பதனைக் கணையோடு இயைப்பினும் அமையும். இழிதல் பிறவினையாயிற்று. பூவல் – செம்மண்; “பூவலூட்டிய புனை மாண்பந்தர்க் – காவற்சிற்றிற் கடிமனைப் படுத்து” எனச் சிலப்பதிகாரத்து வருவது காண்க. அம் – சாரியை. (12)
13. நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர் வரைபுரை
யானைக்கை நூற – வரைமேல் உருமெறி பாம்பிற்
புரளுஞ் செருமொய்ம்பிற் சேஎய்பொரு
தட்ட களத்து.
பதவுரை: செரு மொய்ம்புஇன் – போர்வலிமை யுடைய, சேய் – செங்கோட்சோழன், பொருது அட்ட – போர்செய்து கொன்ற, களத்து – போர்க்களத்தில், நிரைகதிர் – நிரைத்தவொளி யினையுடைய, நீள் எஃகம் – நீண்ட வாளை, நீட்டி – பின்னே வாங்கி, வயவர் – வீரர்கள், வரை புரை – மலையையொத்த, யானை கை – யானைகளின் கைகளை, நூற – துணிக்க, வரைமேல் – மலையின் மேல், உரும் எறி – இடிவிழுந்த, பாம்புஇன் – பாம்பைப்போல, புரளும் – புரளாநிற்கும். – எ-று.
பாம்பு உருமெறியப்பட்டு மலைமேனின்றும் விழுந்து புரளு மாறுபோலக் கையும் வாளெறியப்பட்டு யானையினின்றும் விழுந்து புரளாநிற்கும் என்க. எஃகம் வாளினையும், நீட்டல் பின் வாங்கலையுங் குறித்து நின்றன. எறி – என்னும் பெயரெச்ச முதனிலை பாம்பென்னும் செயப்படுபொருட்பெயர் கொண்டது. (13)
14. கவளங்கொள் யானையின் கைதுணிக்கப்
பட்டுப் பவளஞ் சொரிதரு பைபோற் – றிவளொளிய
வொண்செங் குருதி யுமிழும் புனனாடன்
கொங்கரை யட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், கொங்கரை – கொங்குநாட்டவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், கவளம் கொள் -கவளத்தைக் கொள்ளும், யானை கை – யானைகள் (தம்) துதிக்கைகள், துணிக்கப்பட்டு – துண்டு படுத்தப்பட்டு, பவளம் சொரிதரு – பவளத்தைச் சொரியாநின்ற, பைபோல் – பையைப்போல, திவள் ஒளிய – விளங்கும் ஒளியை யுடைய, ஒள் – ஒள்ளிய, செம் குருதி – சிவந்த உதிரத்தை, உமிழும் – உமிழாநிற்கும் எ-று.
கவளம் – யானையுணவு; ‘கல்லாவிளைஞர் கவளங்கைப்ப’ ‘வாங்குங்கவளத்து’ என்பன காண்க. இன் – சாரியை. (14)
15. கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் – தச்சன்
வினைபடு பள்ளியிற் றோன்றுமே செங்கட் சினமால்
பொருத களத்து.
பதவுரை: சினம் – கோபத்தையுடைய, செங்கண்மால் – செங்கட் சோழன், பொருத களத்து -போர்செய்த களத்தில், எ வாய் உம் – எவ்விடத்தும், குடை முருக்கி – குடைகளையழித்து, கொல் யானை- கொல்லும் யானைகள், பாய – பாய்தலால், புக்க வாய் எல்லாம் – அவ் யானைகள் புகுந்த இடமெல்லாம், பிணம் பிறங்க – பிணங்கள் விளங்க, தச்சன் – தச்சனால், வினைபடு – வினைசெய்யப்படும், பள்ளியில் – இடங்கள்போல, தோன்றும் – தோன்றாநிற்கும். எ-று.
பள்ளி – இடமென்னும் பொருளாதலைத் தொல்காப்பியத்தே ‘சொல்லிய பள்ளி’ என வருதலானறிக. தச்சன் – மரவினைஞன்; ‘மரங்கொல் தச்சர்’, ‘தச்சச்சிறார்’ என்பன காண்க. (15)
16. பரும வினமாக் கடவித் தெரிமறவர் ஊக்கி யெடுத்த
வரவத்தி னார்ப்பஞ்சாக் குஞ்சரக் கும்பத்துப் பாய்வன
குன்றிவரும் வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன்
வேந்தரை யட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், வேந்தரை – பகை மன்னரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், பருமம் – கல்லணையையுடைய, இனம் மா – திரண்ட குதிரைகள், தெரி மறவர் – விளங்கிய வீரத்தினை யுடையரால், கடவி- நடத்தப்பட்டு, ஊக்கி – மனவெழுச்சி மிக்கு, எடுத்த – எழுப்பப் பட்ட, அரவத்தின் ஆர்ப்பு – மிக்க ஆரவாரத்தை, அஞ்சா – அஞ்சாத, குஞ்சரம் – யானைகளின், கும்பத்து – மத்தகத்தில், பாய்வன – பாய்கின்றவை, குன்று – மலையின்கண், இவரும் – பாய்கின்ற, இரு – பெரிய, வேங்கை புலி – வேங்கை யாகிய புலியை, போன்ற – ஒத்தன எ-று.
பருமம், பண், கல்லணை என்பன ஒரு பொருட் சொற்கள். கடவி – செயப்பாட்டு வினையெச்சம். மறவர் கடவி என மாற்றுக. கடவப்பட்டு ஊக்கிப் பாய்வன என்க; யானைக்கு அடையாக்கி அஞ்சா என்பதனோடு முடிப்பினும் அமையும். (16)
17. ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித்
தாக்கி யெறிதர வீழ்தரு மொண்குருதி கார்த்திகைச்
சாற்றிற் கழிவிளக்கைப் போன்றனவே போர்க்கொடித்
தானைப் பொருபுன னீர்நாடன் ஆர்த்தம ரட்ட களத்து.
பதவுரை: போர் – போர்க்குரிய, கொடி – கொடி யினையுடைய, தானை – படையினை உடையனான, பொரு – மோதுகின்ற, புனல்- நீரினையுடைய, நீர் நாடன் – காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், ஆர்த்து – ஆரவாரித்து, அமர் – போரில், அட்ட – (பகைவரைக்)கொன்ற, களத்து – களத்தில், ஆர்ப்பு எழுந்த – ஆரவாரகுருந்த, ஞாட்பின் உள் – போரின்கண், ஆள்ஆள் – ஆளும் ஆளும், எதிர்த்து ஓடி – எதிர்சென்றோடி, தாக்கி – பொருது, எறிதர- (படைகளை) வீசுதலால், வீழ்தரும் – சொரியா நின்ற, ஒள் குருதி – ஒள்ளிய உதிரம், கார்த்திகை சாறுஇல் – கார்த்திகை விழாவில் , கழிவிளக்கை – மிக்க விளக்கினை, போன்றன – ஒத்தன எ-று.
சாறு -விழா: இதனைச் ‘சாறுதலைக் கொண்டென’ என்னும் புறப்பாட்டானும், ‘சாறயர்களத்து’ என்னும் முருகாற்றுப் படையானும் அறிக. கார்த்திகை நாளில் நிரைநிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் மிக்கிருந்தது. இதனை ‘குறுமுயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேரும் அகலிருள் நடுநாள், மறுகுவிளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவுட னயர வருகதி லம்ம’ என்னும் அகப்பாட்டா னறிக. ‘துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் . . . விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’ என்பது திருநெறித் தமிழ்மறை. கார்த்திகைக்கு மலையில் விளக்கிடுவது ‘குன்றிற் கார்த்திகை விளக்கிட் டன்ன’ என்று சிந்தாமணியிற் கூறப் பெற்றுளது. (17)
18. நளிந்த கடலுட் டிமிறிரை போலெங்கும்
விளிந்தார் பிணங்குருதி யீர்க்குந் – தெளிந்து
தடற்றிடங் கொள்வாட் டளையவிழுந் தார்ச்சே(ய்) உடற்றியா
ரட்ட களத்து.
பதவுரை: தெளிந்து -விளக்கி, தடறு – உறையினது, இடம் கொள் – இடத்தினைக்கொண்ட, வாள் – வாளையும், தளை அவிழும் – கட்டவிழ்ந்த, தார்- மாலையையுமுடைய, சேய் -செங்கட் சோழன், உடற்றியார் -சினமூட்டிய பகைவரை, அட்ட – கொன்ற, களத்து -போர்க்களத்தில், நளிந்த – நீர்செறிந்த, கடல்உள் – கடலில், திமில்- தோணியையும், திரை – அலையையும், போல் – போல, எங்கும் – எவ்விடத்தும், விளிந்தார் – பட்டாருடைய ,பிணம் – பிணக்குப்பையை, குருதி ஈர்க்கும் – உதிரவெள்ளம் இழாநிற்கும் எ-று.
‘தடற்றிலங்கொள்வாள்’ என்னும் பாடத்திற்கு உறையில் விளங்குகின்ற ‘ஒள்ளியவாள்’ என்று பொருளுரைக்க. நளிந்து – நளியென்னும் உரிச் சொல்லடியாக வந்த பெயரெச்சம்; நீர்மிக்க எனினுமாம்; நளியென்பது பெருமையும், செறிவுமாதல் தொல் காப்பியத்தா னறிக. (18)
19. இடைமருப்பின் விட்டெறிந்த வெஃகங்கான்
மூழ்கிக் கடைமணி கான்வரத் தோற்றி – நடைமெலிந்து
முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன்
புக்கம ரட்ட களத்து.
பதவுரை: நீர் நாடன் – நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், அமர் புக்கு – போரிற்புகுந்து; அட்ட களத்து – (பகைவரைக்) கொன்ற போர்க்களத்தில், மருப்பின் இடை – (யானைகளின்) கொம்பினடுவே, விட்டு எறிந்த எஃகம் – விட்டெறிந்த வேல், கால்மூழ்கி – காம்பு குளித்தலால், கடைமணி – (அவ்வேலின்) கடைமணி, காண்வர – விளங்க, களிறு எல்லாம் – யானை களெல்லாம், தோற்றி -தோன்றி, நடைமெலிந்து – நடைதளர்ந்து, முக்கோட்ட போன்ற – மூன்று கொம்புகளையுடைய யானைகளை யொத்தன (எ-று.)
காழ் என்பதே சிறந்த பாடம். காழ் – காம்பு, மூழ்கலான் என்பது மூழ்கியெனத் திரிந்து நின்றது. முக்கோட்ட இது குறிப்பு வினைப்பெயர். (19)
20. இருசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை குருதி
பிணங்கவருந் தோற்றம் – அதிர்விலாச் சீர்முழாப்
பண்ணமைப்பான் போன்ற புனனாடன்
நேராரை யட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன்- நீர்நாட்டையுடைய செங்கட் சோழன், நேராரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், எருவை – கழுகுகள், இரு சிறகர் – இரண்டு சிறகின் கண்ணுமுள்ள, ஈர்க்கு பரப்பி – ஈர்க்குகளைப் பரப்பி, குருதி – உதிரத்தோடு, பிணம் கவரும் -பிணங்களைக் கொள்ளை கொள்ளும், தோற்றம் – காட்சி, அதிர்வு இலா – கலக்க மில்லாத, சீர் – ஓசையையுடைய, முழா – முழவினை, பண் அமைப்பான் – பண்ணமைப்பவனை, போன்ற – ஒத்தன எ-று.
சிறகர் – ஈற்றுப்போலி. (20)
21. இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து
கணையலைக் கொல்கிய யானை – துணையிலவாய்த்
தொல்வலி யாற்றித் துளங்கினவாய் மெல்ல நிலங்கால்
கவரு மலைபோன்ற செங்கட் சினமால் பொருத களத்து.
பதவுரை: சினம் – கோபத்தையுடைய, செங்கண்மால் -செங்கட்சோழன், பொருத களத்து – போர் செய்த களத்தில், இணை வேல் – இணைத்த வேல்கள், எழில் மருமத்து -அழகிய மார்பில், இங்க – அழுந்துதலால், புண்கூர்ந்து – புண்மிகுத்து, கணை அலைக்கு – அம்பின் அலைப்புகளால், ஒல்கிய யானை – தளர்ந்த யானைகள், துணை இலவாய் – (தம்மேற்கொண்ட) துணைவரை யிலவாய், தொல் வலி – பண்டை வலியினின்று, ஆற்றி – நீங்கி, துளங்கின ஆய் – நடுங்கி, மெல்ல – மெல்ல, நிலம் – நிலத்தை, கால் கவரும் – காலாலே அகப்படுக்கும், மலைபோன்ற – மலையை யொத்தன எ-று.
இங்கல் -அழுந்தல், அலை – முதனிலைத் தொழிற் பெயர். அலைக்கு – வேற்றுமை மயக்கம். (21)
22. இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல் ஆடியல்
யானைத் தடக்கை யொளிறுவாள் ஓடா மறவர் துணிப்பத்
துணிந்தவை கோடுகொ ளொண்மதியை நக்கும்பாம்
பொக்குமே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து.
பதவுரை: பாடுஆர் – ஒலிநிறைந்த, இடி – இடிபோன்ற, முரசின் – முரசினையுடைய, பாய் புனல் – பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர் நாடன் – காவிரிநாட்டை யுடையவனாகிய செங்கட் சோழன், கூடாரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், ஒளிறு வாள் – விளங்கும் வாளையேந்திய, ஓடா மறவர் – புறங்கொடாத வீரர்கள், வரி நுதல் – வரிபொருந்திய நெற்றியையுடைய, ஆடு இயல் – வெற்றி சேர்ந்த, யானை தட கை – யானையின் நீண்ட கைகளை, துணிப்ப – துண்டுபடுத்த, துணிந்தவை – துண்டிக்கப்பட்ட அவைகள், இருநிலம் சேர்ந்த – பெரிய நிலத்தில் விழுந்துகிடக்கும், குடைகீழ் – குடைகளின் அருகே. (கிடப்பன), கோடுகோள் – கலை நிறைந்த, ஒள் மதியை – ஒள்ளிய சந்திரனை, நக்கும் பாம்பு – தீண்டுகின்ற பாம்பினை, ஒக்கும் – ஒத்திருக்கும் எ-று.
குடைக்கீழ்க் கிடப்பன என ஒரு சொல் வருவிக்க. ஆடு – வென்றி; அசைதலும் ஆம். கோடு – பக்கம்; ஈண்டுக் கலையை யுணர்த்திற்று. ‘கோடுதிரள் கொண்மூ’ என்பது காண்க. நீர்நாடு – பெயர்; நீர் – ஆகுபெயரும் ஆம். (22)
23. எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து நெய்த்தோர்ப்
புனலு ணிவந்தகளிற் றுடம்பு செக்கர்கொள் வானிற்
கருங்கொண்மூப் போன்றவே கொற்றவேற் றானைக்
கொடித்திண்டேர்ச் செம்பியன் செற்றாரை யட்ட களத்து.
பதவுரை: கொற்றம் – வெற்றியையுடைய, வேல் – வேலை யேந்திய, தானை – சேனையையும், கொடி திண் தேர் – கொடி கட்டிய வலிய தேரையுமுடைய, செம்பியன் – செங்கட்சோழன், செற்றாரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், வயவர் எற்றி எறிய – வீரர்கள் (படைக்கலங்களை) எடுத்து எறிய, நுதல் பிளந்து – நெற்றி பிளத்தலால், நெய்த்தோர் புனல்உள் – உதிர நீருள், நிவந்த – மூழ்கியெழுந்த, களிறு உடம்பு – யானைகளின் உடம்புகள், செக்கர் கொள் வான் இல் – செக்கர் வானத்தில், கரும் கொண்மூ – கரிய மேகத்தை, போன்ற – ஒத்தன எ-று.
பிளத்தலால் என்பது பிளந்தெனத் திரிந்து நின்றது. நெய்த்தோர் -குருதி. செக்கர் – செந்நிறம். (23)
24. திண்டோண் மறவ ரெறியத் திசைதோறும் பைந்தலை
பாரிற் புரள்பவை நன்கெனைத்தும் பெண்ணையந்
தோட்டம் பெருவளி புக்கற்றே கண்ணார் கமழ்தெரியற்
காவிரி நீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து.
பதவுரை: கண்ஆர் – கண்ணுக்கு நிறைந்த (காட்சியையுடைய), கமழ் தெரியல் – மணக்கின்ற மாலையை (அணிந்த), காவிரி நீர் நாடன் – காவிரிநீர் நாட்டையுடைய செங்கட்சோழன், நண்ணாரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், திண்தோள் – வலிய தோளையுடைய, மறவர் – வீரர்கள், எறிய – (வாளால்) எறிதலால், திசைதோறும் – திசைகள் தோறும், பார் இல் – பூமியில், பைந்தலை – கரிய தலைகள், புரள்பவை – புரளுவன, நன்கு எனைத்து உம் – மிகவும், பெண்ணை தோட்டம் – பனங்காட்டில், பெருவளி – பெருங்காற்று, புக்கது அற்று – புக்க செயலை யொத்தன எ-று.
பசுமை – கருமைமேல் நின்றது. அம் – சாரியை. புக்கதற்று என்பது புக்கற்று என்றாயது. பனந் தோட்டத்திற் பெருவளி புக்கால் காய்கள் உதிர்ந்து புரளுமாறு போலத் தலைகள் புரண்டன என்க. (24)
25. மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக்
குஞ்சரம் பாயக் கொடியெழுந்து – பொங்குபு
வானந் துடைப்பன போன்ற புனனாடன் மேவாரை
யட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், மேவாரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், மலை கலங்க – மலைகள் கலங்க, பாயும் – பாயாநின்ற, மலைபோல் – மலைகள்போல், கொடி – (அவற்றின் மிசை கட்டப் பெற்ற) கொடிகள், எழுந்து – மேல் எழுந்து ,பொங்குபு – விளங்கா நின்று, வானம் – வானத்தை, துடைப்பன போன்ற – துடைப்பனவற்றை யொத்திருந்தன எ-று.
மலைகலங்கப் பாயுமலைபோல் என்றது இல் பொருளுவமம். கொடி துடைப்பனபோன்ற என்க. (25)
26. எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட கைவாயிற்
கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல் ஐவாய் வயநாகங்
கவ்வி விசும்பிவருஞ் செல்வா யுவணத்திற் றோன்றும்
புனனாடன் தெவ்வரை யட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை – பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், எ வாய் உம் ஓடி -எவ்விடத்தும் சென்று, வயவர் – வீரர்கள், துணித்திட்ட – துணித்த, கை – கைகளை, வாய்இல் – (தமது) வாயில், கொண்டு எழுந்த – கவ்விக் கொண்டு மேலெழுந்த, செம்செவி – சிவந்த செவிகளையுடைய, புல் சேவல் – புல்லிய பருந்தின் சேவல்கள், ஐ வாய் – ஐந்து வாயையுடைய, வயம் நாகம் – வலியையுடைய பாம்பை, கவ்வி – கவ்விக்கொண்டு, விசும்பு இவரும் – வானிலே பறந்து செல்லும், செம் வாய் – சிவந்த வாயையுடைய, உவணத்தில் – கருடனைப்போல, தோன்றும் – தோன்றாநிற்கும் எ-று.
புன்மை – புற்கென்ற நிறம். உவணத்தில் என்புழி இல் ஒப்புப் பொருட்டு. (26)
27. செஞ்சேற்றுட் செல்யானை சீறி மிதித்தலால்
ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை பூநீர்
வியன்றமிடாப் போன்ற புனனாடன் மேவாரை
யட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், மேவாரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், செம் சேறு உள் – (உதிரத்தாற் சேறுபட்ட) செஞ்சேற்றில், செல் யானை – செல்லுகின்ற யானைகள், சீறி மிதித்தலால் – வெகுண்டு மிதித்தலால் (குழிந்த இடங்களில்), தொக்கு ஈண்டி நின்றவை – ஒருங்கு தொக்குநின்ற, ஒள் – ஒள்ளிய, செம் குருதிகள் – சிவந்த உதிரங்கள், பூ வியன்ற – செம் பூக்களை யாக்கிய, நீர்மிடா – நீர்மிடாவை, போன்ற – ஒத்தன எ-று.
குழிந்த இடங்களில் என்னுஞ் சொற்கள் அவாய்நிலையான் வந்தன. பூநீர் வியன்ற மிடா – செம்பூக்களையுடைய நீரினையுடைய அகன்றமிடா எனினும் ஒக்கும். தொக்கு ஈண்டி- ஒரு பொருளன. (27)
28. ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப் பீடுடை வாளார்
பிறங்கிய ஞாட்பினுட் கேடகத்தோ டற்ற தடக்கைகொண்
டோடி இகலன்வாய்த் துற்றிய தோற்ற மயலார்க்குக்
கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன் நண்ணாரை யட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நண்ணாரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க் களத்தில், ஓடா மறவர் – புறங்கொடாத வீரர்கள், உருத்து – கோபித்து, மதம் செருக்கி – களிப்பால் மிகுந்து, பீடு உடை – பெருமையையுடைய, வாளார் – வாளேந்தினவராய், பிறங்கிய – போர் செய்த, ஞாட்பின்உள் – போரின்கண், கேடகத்தோடு அற்ற- கேடகத்தோடறுபட்ட, தட கை – நீண்ட கைகளை ,கொண்டு ஓடி – கொண்டு சென்று, இகலன் – ஓரிகள், வாய் துற்றிய – (தமது) வாயிற் கவ்விய, தோற்றம் – காட்சி, அயலார்க்கு – அயலில் நின்றவர்க்கு, கண்ணாடி காண்பார் இல் – கண்ணாடி காண்பாரைப் போல, தோன்றும் – தோன்றாநிற்கும் எ-று.
பிறங்குதல் போர்செய்தலை யுணர்த்திற்று. அயலார்க்குத் தோன்றும் என்க. (28)
29. கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபட்டு
வீற்றுவீற் றோடு மயிலினம்போல் – நாற்றிசையும்
கேளி ரிழந்தா ரலறுபவே செங்கட் சினமால்
பொருத களத்து.
பதவுரை: செம் கண் – சிவந்த கண்களையும், சினம்- வெகுளியையு முடைய, மால் – செங்கோட்சோழன், பொருத களத்து – போர் செய்த களத்தில் , கடிகா இல் -மரங்கள் செறிந்த சோலையில், காற்று உற்று எறிய – காற்று மிக்கு எறிதலால், வெடிபட்டு – அஞ்சி, வீற்று வீற்று ஓடும் – வேறு வேறாக ஓடும், மயில் இனம்போல் – மயிலின் கூட்டம் போல், நால் திசைஉம் – நான்கு திசையிலும், கேளிர் இழந்தார் – கொழுநரை யிழந்த மகளிர், அலறுப – அலறாநிற்பர் எ-று.
வீறு – வேறு; ‘சோறுடைக் கையர் வீற்று வீற் றியங்கும்’ எனப் புறத்தில் வருவது காண்க. செங்கண் மால் என இயைத்துப் பெயராக்குதலும் ஆம். நாற்றிசையும் அலறுப என்க. அலறுப – பலர்பால் முற்று (29).
30. மடங்கா வெறிந்து மலையுருட்டு நீர்போல்
தடங்கொண்ட வொண்குருதி கொல்களி றீர்க்கு
மடங்கா மறமொய்ம்பிற் செங்கட் சினமால்
அடங்காரை யட்ட களத்து.
பதவுரை: மடங்கா – மங்குதலில்லாத, மறம் – மறத்தினை யுடைய, மொய்ம்பு இன் – மார்பினையும், செம் கண் -சிவந்த கண்ணினையும், சினம் – கோபத்தையும் உடைய, மால் – செங்கட்சோழன், அடங்காரை – பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மலை மடங்கா எறிந்து – மலைகள் மறிய எறிந்து, உருட்டும் நீர்போல் – (அம்மலைகள்) உருட்டுகின்ற வெள்ளத்தைப்போல, தடம்கொண்ட – பரந்த, ஒள் குருதி – ஒள்ளிய உதிர வெள்ளம், கொல் களிறு – கொல்லப்பட்ட யானைகளை, ஈர்க்கும் – இழுத்துச் செல்லாநிற்கும் எ-று.
மறம் மொய்ம்பு – முறையே வீரமும் வலியும் எனினும் பொருந்தும். மடங்கல் என்னும் பாடத்திற்குச் சிங்கம்போல என்றும், மடங்குதல் அல்லாத என்றும் பொருள் கொள்ளலாகும். கொல் களிறு – கொலைத் தொழிலையுடைய யானை எனினும் அமையும். செங்கண் என்பதற்கு மேலுரைத்தமை காண்க. (30)
31. ஓடா மறவ ரெறிய நுதல் பிளந்த கோடேந்து
கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை
மின்னுக் கொடியின் மிளிரும் புனனாடன் ஒன்னாரை
யட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் -நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், ஒன்னாரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், ஓடா மறவர் – புறங்கொடாத வீரர்கள், எறிய – வேலினை யெறிதலால், நுதல் பிளந்த – நெற்றி பிளந்த, கோடு ஏந்து – கொம்பினை யேந்திய, கொல் களிறு – கொல்லும் யானையின், கும்பத்து – மத்தகத்தில்(கட்டிய), எழில் ஓடை – அழகிய பட்டம், மின்னுகொடி இல் – (முகிலின்கண்) மின்னற் கொடிபோல, மிளிரும் – விளங்கா நிற்கும் எ-று.
பிளந்தகளிறு, ஏந்துகளிறு எனத் தனித்தனி முடிக்க. பிளந்த – பிளக்கப்பட்ட. மின்னுக்கொடி – ‘தொழிற் பெயரில்’ என்பதனான் உகரம் பெற்றது. (31)
32. மையின்மா மேனி நிலமென்னும் நல்லவள்
செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள் – பொய்
பூந்தார் முரசிற் பொருபுன னீர்நாடன் காய்ந்தாரை
யட்ட களத்து.
பதவுரை: பூ தார் – பூமாலையினையும், முரசு இன் – வெற்றி முரசினையுமுடைய, பொய்தீர்ந்த – வறத்த லில்லாத, பொரு – (கரையொடு) மோதும், புனல் – நீரினையுடைய, நீர்நாடன் – காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், காய்ந்தாரை – வெகுண்ட பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மை இல் – குற்றமில்லாத, மாமேனி -அழகிய மேனியையுடைய, நிலம் என்னும் நல்லவள்- பூமி என்னு மாது, செய்யது – சிவந்த போர்வையை, போர்த்தாள்போல் – போர்த்தவள் போல, செவ்வந்தாள் – செந்நிற மெய்தினாள் எ-று.
நிலத்தை மகடூஉவாகக் கூறுதல் மரபு. “செல்லான் கிழவனிருப்பி னிலம்புலந், தில்லாளி னூடி விடும்” என்பதும் சிந்திக்கற்பாலது. செய்யது – குறிப்பு வினைப்பெயர். செவ்வந்தாள் – செவ்வரல் பகுதி. செவ்வென்றாள் எனின் செவ்வென் பகுதி. முரசினையுடைய நாடன் என்க. பொய் தீர்ந்த என்பதனை ‘வானம் பொய்யாது’ என்புழிப்போலக் கொள்க. காவிரியின் பொய்யாமையை ‘கரியவன் புகையினும்………………ஓவிறந் தொலிக்கும்’ என்னும் நாடுகாண்காதை யடிகளா னறிக. (32)
33. பொய்கை யடைந்து புனல்பாய்ந்த வாயெல்லா
நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோல் ஐதிலங்
கெஃகி னவிரொளிவா டாயினவே கொய்சுவன் மாவிற்
கொடித்திண்டேர்ச் செம்பியன் தெவ்வரை யட்ட களத்து.
பதவுரை: கொய் – கத்திரித்த, சுவல் – புறமயிரையுடைய, மாஇன் – குதிரையினையும், கொடி – கொடிகட்டிய, திண்தேர் – வலிய தேரினையுமுடைய, செம்பியன் – செங்கட்சோழன், தெவ்வரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க் களத்தில், பொய்கை உடைந்து – பொய்கைக் கரையுடைதலால், புனல் பாய்ந்த – (அதன்கண்ணுள்ள) நீர்பரந்த, வாய் எல்லாம் – இடமெல்லாம், நெய்தல் – (மலர்ந்த) நெய்தற் பூக்களின், இடை இடை – நடுவே நடுவே, வாளை பிறழ்வனபோல் – வாளை மீன்கள் பிறழ்தல்போல, ஐது இலங்கு – அழகியதாய் விளங்காநின்ற, எஃகுஇன் – வேலொடு, அவிர் ஒளி – விளங்கும் ஒளியையுடைய, வாள் தாயின – வாள் பறந்தன எ-று.
ஐது அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினை முற்று எச்சமாய் இலங்கு என்னும் காலங்கரந்த பெயரெச்சங் கொண்டது. ஐ பகுதி, து ஒன்றன்பால் விகுதி. தாயின அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை இறந்தகால வினைமுற்று; தாவு பகுதி, இன் இடைநிலை, வகரம் யகரமாய்த் திரிந்தது. (33)
34. இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர் சுடரிலங்
கெஃக மெறியச்சோர்ந் துக்க குடர்கொண்டு
வாங்குங் குறுநரி கந்தில் தொடரொடு கோணாய்
புரையு மடர்பைம்பூட் சேய்பொரு தட்ட களத்து.
பதவுரை: அடர் – தகட்டுவடிவமாகிய, பைம் – பூண் – பசிய அணி கலத்தினையுடைய, சேய் – செங்கட்சோழன், பொருது அட்ட – போர்செய்து கொன்ற, களத்து- களத்தின்கண், இணரிய ஞாட்பின் உள்- தொடர்ந்து நெருங்கிய போரில், ஏற்று எழுந்த – எதிர்த்தெழுந்த, மைந்தர் – வீரர்கள், சுடர் இலங்கு – ஒளிவிளங்கா நின்ற, எஃகம் – வேல்களை, எறிய – எறிதலால், சோர்ந்து உக்க – சரிந்து சிந்திய, குடர்கொண்டு – (வீரர்களின்) குடர்களைக் கவ்விக் கொண்டு, வாங்கும் – இழுக்கும், குறுநரி -குறுநரிகள், கந்துஇல் – தூணிலே (கட்டப்பட்ட), தொடர் ஒடு – சங்கிலியோடு (நின்ற), கோணாய் புரையும் – கோணாய்களை யொக்கும் எ-று.
இணரிய – இணர் பகுதி, இன் இடைநிலை கடைகுறைந்து நின்றது. கோணாய் வேட்டமாடும் நாய். குறு நரி – நரியின் ஓர் வகை; ‘குறுநரி பட்டற்றால்’ என்பது கலி. அடர் – தகடு. (34)
35. செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை ஒல்கி
யுருமிற் குடைந்தற்றான் – மல்கிக் கரைகொன் றிழிதரூஉங்
காவிரி நாடன் உரைசா னுடம்பிடி மூழ்க வரசோ(டு)
அரசுவா வீழ்ந்த களத்து.
பதவுரை: மல்கி – மிகுந்து, கரை கொன்று – கரைகளை யழித்து, இழிதரும் – செல்லும், காவிரிநாடன் – காவிரி நாட்டையுடைய செங்கட்சோழனது, உரைசால் – புகழமைந்த, உடம்பிடி மூழ்க – வேல்கள் குளிப்ப, அரசுஓடு – அரசரோடு, அரசுஉவா – (பட்டம் பெற்ற) யானைகள், வீழ்ந்த களத்து – மறிந்துவீழ்ந்த களத்தின்கண் (அங்ஙனம் விழுந்தமை), செம் வரை – செவ்விய மலையின், சென்னி – உச்சியிலுள்ள, அரிமான் ஓடு – சிங்கத்துடன், அவரை – அந்த மலை, ஒல்கி – தளர்ந்து, உருமிற்கு – இடி யேற்றிற்கு, உடைந்தற்று – அழிந்தாற்போலும் எ-று.
அரசர்க்கு அரிமானும், யானைக்கு மலையும் உவமம். உடைந்தால் என்பது உடைந்து என நின்றது. (35)
36. ஓஒ உவம னுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன்
கழுமலங் கொண்டநாள் மாவுதை மாற்றார் குடையெலாங்
கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து.
பதவுரை: காவிரி நாடன் – காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கழுமலம் – கழுமலமென்னும் ஊரினை, கொண்ட நாள் – கைக்கொண்ட நாளில், புனல் நாடன் – அவன், மேவாரை – பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மா உதைப்ப- குதிரைக ளுதைத்தலால், மாற்றார் – பகைவரின், குடையெல்லாம் – குடைகளெல்லாம், கீழ்மேல் ஆய் – கீழ்மேலாகி, ஆ, உதை – ஆணிரைகளா லுதைக்கப்பட்ட, காளாம்பி போன்ற – காளாம்பியை யொத்தன, உவமன் – அவ்வுவமை, உறழ்வு இன்றி – மாறுபா டில்லாமல், ஒத்தது – பொருந்தியது எ-று.
முதலடி முற்றுமோனை, ஓ வென்பது சிறப்புணர்த்திற்று. புனனாடன் என்பது சுட்டு. உவமன் என்புழிச் சுட்டு வருவிக்க, கழுமலம் ‘சேர நாட்டகத்ததோர் ஊராதல் வேண்டும். ‘நற்றேர்க் குட்டுவன் கழுமலம்’ என்பதும் காண்க. (36)
37. அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு
முத்துடைக் கோட்ட களிறீர்ப்ப – எத்திசையும்
பௌவம் புணரம்பி போன்ற புனனாடன் தெவ்வரை
யட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை – பகைவரை, அட்ட களத்து – கொன்ற போர்க்களத்தில், அரசர் பிணம் – அரசர் பிணங்கள், கான்ற – சிந்திய, நெய்த்தோர் – உதிரவெள்ளங்கள், எத்திசை உம் – எல்லாத் திசைகளிலும், முரசு ஒடு – முரசினோடு, முத்து உடை – முத்தினையுடைய, கோட்ட – கொம்புகளையுடைய, களிறு – யானைகளை, ஈர்ப்ப – இழுப்ப (அவைகள்), பௌவம் – கடலையும், புணர் – (அக்கடலைச்) சேர்ந்த, அம்பி – மரக்கலன்களையும், போன்ற – ஒத்தன எ-று.
அரசரின் உடல் மறிந்து கிடப்பதனை அரசர் பிணம் என்றார். முரசினையும் களிற்றினையும் ஈர்ப்ப என்க. அவையெனச் சுட்டு வருவிக்க. கோட்ட – குறிப்புப் பெயரெச்சம். (37)
38. பருமப் பணையெருத்திற் பல்யானை
புண்கூர்ந்(து) உருமெறி பாம்பிற் புரளுஞ் – செருமொய்ம்பிற்
பொன்னார மார்பிற் புனைகழற்காற் செம்பியன்
துன்னாரை யட்ட களத்து.
பதவுரை: செரு மொய்ம்பு இன் – போர் வலியினையும், பொன் ஆரம் -பொன்னாற் செய்த ஆரத்தை யணிந்த, மார்பு இன் – மார்பினையும், புனைகழல்கால் – கட்டிய வீரக்கழலினையுடைய காலினையுமுடைய, செம்பியன் -செங்கட்சோழன், துன்னாரை – பகைவரை, அட்டகளத்து – கொன்ற போர்க்களத்தில், பருமம் – பண்ணினையும், பணை – பருத்த, எருத்து ,ன் – பிடரினையு முடைய, பல் யானை – பல யானைகள், புண்கூர்ந்து -(படைகளால்) புண் மிகுதலால், உரும் எறி – இடியேற்ற லெறியப் பட்ட, பாம்பு இன் – பாம்பு போல, புரளும் – புரளாநிற்கும் எ-று.
பருமம் – ஒப்பனை. பாம்பின் – ஐந்தனுருபு ஒப்புப் பொருட்டு. எருத்தின் முதலியவற்றில் சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையாது வருதலை ‘மெல் லெழுத்து மிகுவழி’ என்னுஞ் சூத்திரத்து ‘மெய்பெற’ என்பதனாற் கொள்ப. (38)
39. மைந்துகால் யாத்து மயங்கிய ஞாட்பினுட்
புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன் வஞ்சிக்கோ
வட்ட களத்து.
பதவுரை: புனல் நாடன் – நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், வஞ்சி கோ – வஞ்சி யரசனாகிய சேரனை, அட்டகளத்து – கொன்ற போர்க்களத்தில், மைந்து – (வீரர்கள் தங்கள்) மறவலிகள், கால் யாத்து – காலைத் தளை செய்தலால், மயங்கிய – போகாது மிடைந்த, ஞாட்பின் உள் – போரின்கண், கால் புய்ந்து போகி – காம்பு பறிந்து போகப்பட்டு, புலால் முகந்த – செந்தசையை முகந்த, வெண்குடை – வெள்ளைக் குடைகள், பஞ்சிபெய் – செம் பஞ்சுக் குழம்பு பெய்த, தாலம் ஏ போன்ற – தாலத்தையே யொத்தன எ-று.
தாலம் – வட்டில், புய்ந்து – புய் பகுதி, ‘புய்த்தெறி நெடுங்கழை’ என்பது புறம். (39)
40. வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால
முழுவனபோல் எல்லாக் களிறு நிலஞ்சேர்ந்த – பல்வேற்
பணைமுழங்கு போர்த்தானைச் செங்கட் சினமால்
கணைமாரி பெய்த களத்து.
பதவுரை: பல்வேல் – பல வேலினையும், பணை முழங்கு – முரசு முழங்காநின்ற, போர் தானை – போர்ச்சேனையையும், சினம் – கோபத்தையு முடைய, செங்கண்மால் – செங்கட்சோழன், கணை மாரி – அம்பு மழை, பெய்த களத்து – பெய்த போர்க்களத்தில், வெள்ளி – வெள்ளியாற் செய்த, வெள்நாஞ்சிலால் – வெள்ளிய கலப்பையால், ஞாலம் உழுவனபோல் – நிலத்தை யுழுதல்போல, களிறு எல்லாம் – யானை களெல்லாம், நிலம் சேர்ந்த – (முகங்க விழ்ந்து) நிலத்தைச் சேர்ந்தன எ-று.
யானையின் வெண்கோடுகள் வெள்ளிநாஞ்சில் போன்றன. மாரி பெய்தவழி நிலம் உழுதலாகிய செயல் நிணைப்பிக்கப் பட்டது. (40)
41. வேனிறத் திங்க வயவரா லேறுண்டு கானிலங்
கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து மாநிலங் கூறு
மறைகேட்ப போன்றவே பாடா ரிடிமுரசிற் பாய்புன
னீர்நாடன் கூடாரை யட்ட களத்து.
பதவுரை: பாடு ஆர் – ஒலி நிறைந்த, இடி – இடிபோன்ற, முரசு இன் – முரசினையுடைய, பாய் புனல் – பாய்ந்து செல்லும் நீரினை யுடைய, நீர்நாடன் – காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், கூடாரை – பகைவரை, அட்டகளத்து – கொன்ற போர்க்களத்தில், வேல் – வேலானது, நிறத்து இங்க – மார்பிலழுந்த, வயவரால் – வீரரால், ஏறுண்டு – குத்துப்பட்டு, கால் நிலம் கொள்ளாது – கால்கள் தளர்ந்து, கலங்கி – வீழ்ந்து, செவிசாய்த்து – செவிகளைச் சாய்த்து, (யானைகள் கிடத்தல்), மா நிலம் -பெரிய நிலமகள், கூறும் – உபதேசிக்கும், மறை – உபதேச மொழியை, கேட்ப போன்ற – கேட்டலை யொத்தன எ-று.
மறை – மந்திரம், மறைந்த பொருளுடையது. செவி சாய்த்து என்பதனால் அது கேட்கு முறைமை யுணர்த்தப்பட்டது,
அவாய் நிலையாற் சில சொற்கள் வருவிக்கப்பட்டன. (41)
களவழி நாற்பது மூலமும் உரையும் முற்றிற்று.



