மோகினி
ந. பிச்சமூர்த்தி

குடும்ப வாழ்க்கை

1

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள், தேச சேவையை உத்தேசித்துத் தங்கள் வாழ்நாட்களைப் பிரம்மசாரியாகவே கழிப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்ளும் வழக்கத்தை ஒட்டி, ஸ்ரீ சைலபதியும் சங்கல்பம் செய்து கொண்டான். பிறகு காலேஜுக்கு வந்ததும் மற்றப் பையன்களைப் போல் முதல் சங்கல்பத்தை ரத்துசெய்து தானும் விவாகம் செய்துகொள்வ தென்ற இயற்கையான முடிவுக்கு வந்தான். வந்ததும் இல்லறத்தின் இன்பக் கனவையே – ஏழடுக்கு மாளிகையையே – எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

பி.ஏ. தேறிய மறு வருஷம் மணம் முடிந்தது. மணம் முடிந்த மறு வருஷம் அவன் மனைவி லலிதா வீட்டுக்கு வந்துவிட்டாள். பானை பிடித்தவள் பாக்கியத்தினால் ஸ்ரீ சைலபதி, ஸ்ரீசைலபதி ஐயர் ஆனான்; அதாவது நாற்பத்திரண்டு ரூபாய்க்குத் தாலுக்கா போர்டு ஆபீசில் பேனா ஒட்டும் உத்தியோகம் பெற்றான்.

ஒன்று கிடைத்தால் மற்றொன்று போய்விடும் என்பது உலக தத்துவத்தின் ரகசியம். உத்தியோகமும் மனைவியும் கிடைத்த பிறகு இல்லறத்தில் எதிர்பார்த்த இன்பம் ஒரு டிகிரி குறைய ஆரம்பித்தது. காரணம் தாயார். அவள் கெட்டவளென்று சொல்வதற்குச் சிறிதேனும் இடமில்லை. ஆனால் வெறும் கர்நாடகம். வெகு ஆசாரக்காரி. ரஸம் என்பது லவலேசங்கூடத் தெரியாது. ஆகையால் தம்பதிகள் இளமையின் இன்பத்தைச் சுயேச்சையாக அருந்தக்கூடவில்லை. எனவே தாயார் மீது அபாரப் பிரேமை வைத்திருந்த ஒரே பிள்ளைகூடத் தன் காரியம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சமாதானம் முன்னதாகவே தயார் செய்ய வேண்டிய ஸ்திதி வந்துவிட்டது. மனைவிக்கென்று மூன்று காத தூரம் வாசனை வீசும் கதம்பம் வாங்கிக் கொண்டு வருவதில்லையாம்; சுவாமி பூஜைக்காகவாம்! கிளப்பிலிருந்து வீட்டுக்குப் பட்சணங்கள் வரவழைத்துச் சாப்பிடுவானேனென்றால், கிளப்புகள் அசங்கியமாக இருக்கின்றனவாம்!

இவ்விதமாக இல்லறத்தின் ஏழடுக்கு மாளிகையின் தலையடுக்கு முதலில் மறைந்தது. பிறகு மாமியாருக்கும் நாட்டுப்பெண்ணுக்கும் அல்ப விஷயங்கள் காரணமாக இரண்டு இலை விட்ட தகராறுகள் முளைத்தன; “வெறும் பறக்குட்டி, மடியும் கிடையாது; விழுப்பும் கிடையாது. ஒரு எழவும் தெரியல்லே. வேலைக்காரி தேச்சு வெக்கற பத்துப் பாத்திரத்தைப் பத்தில்லாமெ அலம்பி எடுக்கச் சொறணை இல்லை. நாணல் கோணல் இல்லாமே, மொட்டுப் போல அவனுக்கு எதுத்தாப்பலே நிக்கறதைப் பார்!” என்பவை போன்ற பாணங்கள் பறந்தன.

பிள்ளை இவ்விஷயங்களில் தலையிடுவதில்லை; புருஷனுக்குச் சம்பந்தப்பட்டவை அல்ல என்று தள்ளிவிடுவான். இப்படிப்பட்ட மனோபாவம் தாயாருக்கு அதிருப்தியை உண்டாக்கிற்று. தன்னுடன் சேர்ந்து மனைவியைக் காய்தா செய்யாததால், ‘தலையணை மந்திரோபதேசம்’என்று எப்போதாவது முணுமுணுப்பாள். ஆனால் பெரும்பாலும் பிள்ளையின் நடவடிக்கையை ஜாடை மாடையாகவே மௌனமாகக் கவனிப்பாள்.

மாமியாரின் மனோபாவம் வடக்குக் கோடி என்றால் நாட்டுப் பெண்ணுடையது தெற்குக் கோடி. தன் கட்சியை ஆதரித்து வேண்டாம் விளக்கியாவது தாயாரிடத்தில் ஏன் சொல்லக்கூடாது? அல்லது தன்னிடம் அந்தரங்கமாகவாவது தாயாரின் செய்கைகளைத் தான் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லி ஏன் ஆறுதல் அளிக்கக் கூடாது? இப்படி அவள் இரண்டொரு சமயங்களில் நினைத்தது உண்டு. ஆனால் யௌவனப் பெருக்கில் இந்த எண்ணங்களெல்லாம் நாய்க்குடைபோல் பலமற்றவை தாமே?

2

லலிதா வீட்டுக்கு வந்து இரண்டு வருஷங்கள் ஆயின. முதலில் பிறந்த குழந்தை சீமந்த புத்திரன்; குல தீபம் அல்லவா? எல்லோருக்கும் எல்லையற்ற சந்தோஷம். ஸ்ரீ சைலபதி ஐயருக்கு ஆபீஸ் தொல்லைகள் அவ்வளவும் வீட்டுக்கு வந்ததும் மறந்து போகும்.

பிள்ளை பெற்றதில் லலிதாவுக்கு ஆரம்பத்தில் செருக்கும் சந்தோஷமுந்தான். ஆனால் ஆண்டு நிறைவு வருவதற்குள்ளாகவே சிற்சில சமயங்களில் குழந்தையின் மேல் கோபம் பிறக்கத் தொடங்கிவிட்டது. சமையல் அவசரத்தில் குழந்தை அடுப்பு விறகை இழுத்துச் சமையலைத் தவக்கப்படுத்திவிட்டால், எண்ணெய் நெய் முதலியவற்றைக் கை சொடுக்கும் நேரத்தில் கொட்டிவிட்டால், தொட்டி முற்றத்தில் தடாரென்று விழுந்து விட்டால், அவ்வளவுக்கும் ஜவாப்தாரி லலிதாதான். எனவே குழந்தையின் மேல் கோபம் வருவது சகஜந்தானே?

அப்படிப்பட்ட சமயங்களில் ஸ்ரீ சைலபதி ஐயருக்கு மனைவியின் மேல் கொஞ்சம் தாபம் உண்டாகும். “ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டில் உள்ளவர்களுக்கு யோக்கியதை இல்லையென்றால், ஆள் வைக்க ஐவேஜி எந்த நல்ல மாமனார் கொடுக்கப்போகிறார்?” என்று கத்துவார்.

மாமியார்க்காரி குழந்தையைப் பார்த்துக் கொள்ளக் கூடாதோ வெனில், எவ்வளவு நாழிகைதான் எடுத்துக் கொள்ளுவாள்? தவிர, பிராதஸ்நானம், ஜபம், சாப்பாடு, மத்தியான்ன வம்பர் மகாசபை, கோவில், குளம் இவ்வளவுக்கும் கண்டு அவகாசம் மிஞ்சுவதில்லை.

இவைகளின் பயனாக ஆண்டு நிறைவுக்குப் பிறகு குழந்தை தீர்மானமாக அப்பாபிள்ளை ஆகிவிட்டான். இராக் காலத்தில் படுக்கை தகப்பனாருடன்; பாட்டியிடமாவது தாயாரிடமாவது போவதில்லை. ஆபீசுக்கு வருகிறேனென்று பிடிவாதம் செய்யும் சக்தி மட்டும் வரவில்லை.

பையனுக்கு இரண்டு வருஷங்கள் முடிவதற்குள் ஐயரவர்களுக்கு இல்லற இன்பத்தின் புதுமை தேய்ந்துவிட்டது; ஏழடுக்கு மாளிகையில் ஆறடுக்குக் கீழே விழுந்து மண்ணைக் கவ்வின.

நாளாவட்டத்தில், கடைத் தெருவிலிருந்து புஷ்பம் வாங்கி வரும் வழக்கம் அவரை அறியாமலே நழுவிப் போய்விட்டது; காபிக் கிளப்புகளெல்லாம் சுத்தமான இடங்களாக மாறிவிட்டன.

லலிதாவுக்குக் கணவனுடைய உணர்ச்சிகளின் கூர் மழுங்கிப் போய்விட்டது என்னும் விஷயம் தனக்கு இரண்டாவது குழந்தை – ஒரு பெண் பிறந்த பிறகுதான் தெரிய வந்தது. இரண்டாவது பிரசவத்துக்கப்பால் அவளுக்குச் சரீரம் வெகு துர்ப்பலமாகி விட்டது; நல்ல ரத்தம் செத்துப்போய்ப் பாலும் சுமாராக வறண்டு போயிற்று. பாலுக்காகக் குழந்தை சதா அழுது கொண்டிருக்கும். மாவுப் புட்டி இருந்தாலாவது சற்றுச் சௌகரியமாக இருந் திருக்கும். ஆனால் கணவன் சம்பளத்திலும் சிக்கனத்தின் வாள் பாய்ந்து விட்டதால் மாவுப் புட்டி வாங்குவது நின்று போய் விட்டது.

குழந்தை அழும்போதெல்லாம், “சத்தம் தாங்கவில்லை; காது குத்தல் எடுக்கிறது”என்று மாமியார் கூச்சல் போடுவாள். ஐயரவர்களும் ஆமோதிப்பார்; மனைவியை வெறித்துப் பார்ப்பார்; “குழந்தைகளை வளர்க்கத் தெரியாத முட்டாள்களுக்கு எவ்வளவு சுலபமாகக் குழந்தைகளைக் கடவுள் கொடுக்கிறார்!”என்று ஆச்சரியப்படுவார். இந்த வார்த்தைகள் லலிதாவின் உள்ளத்தை ரம்பம் போல் அறுக்கும். கண்ணில் ஜலம் குவியும். ‘பெண்களின் கஷ்ட நிஷ்டுரங்களை அறியாத அறிய முடியாத கல் மனத்தைக் கடவுள் கனவர்களுக்குக் கொடுத்தாரே!’என்று ஏங்குவாள். தனக்குப் பாலில்லாமல் போனதைப் பற்றித் தனிமையில் அழுவாள். அதைப்போன்ற சமயங்களில் தான் தனக்கும் கணவருக்கும் மணமாகிக் குழந்தைகள் இருந்தும், உண்மையான மணம், ஆத்ம நட்பு கொஞ்ச மேனும் ஏற்படவில்லையே என்று ஏங்குவாள்.

3

ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் ஒரு வண்டி கச்சேரிக் கடுதாசைப் பரப்பி ஏதோ திணறிக் கொண்டிருந்தார் ஐயர். மூடியிருந்த சமையல் அறையிலிருந்து இரண்டு குழந்தைகளும் இரட்டை நாயனம் வாசித்தன. ஐயருடைய தொல்லைப்பட்ட மனத்துக்கு அது சகிக்கக் கூடவில்லை; ரௌத்திராம்சம் கிளம்பிற்று.

“என்ன இழவு பிசாசுகளடா பெண்சாதிகள்! இப்படி வீட்டில் அழவிட்டால் ஆபீஸ் காரியம் செய்து கிழித்தது போலத்தான்! கையாலாகாத கபோதிகள்”என்று உறுமிவிட்டு மறுபடியும் கடுதாசுகளைப் புரட்டத் துவக்கினார்.

மறுகணம் சமையல் அறை உள்பக்கத்திலிருந்து திறக்கப் பட்டது. “போடாப்பா ஒங்க அப்பா கிட்ட” என்று லலிதா பிள்ளையைத் தள்ளிவிட்டாள். மணிக்கட்டால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பையன் அழுகைக்கு முற்றுப்புள்ளி போட்டான்; தகப்பனார் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். அதை அவர் கண்ணால் பார்த்தாரே அன்றி மனத்தால் அறியவில்லை.

சில நிமிஷங்கள் சென்றிருக்கலாம். பர்ரென்று கடுதாசு கிழியும் சப்தம் கேட்டுத் தகப்பனார் திடுக்கிட்டுப் பார்த்தார். ஆபீஸ் தஸ்தாவேஜு ஒன்று, இரண்டு தஸ்தாவேஜாகிப் பாவட்டாக்களைப் போல் பிள்ளையின் கையில் தொங்கின. வந்த கோபத்தில் பளார் என்று அருமைக் குழந்தை கன்னத்தில் ஓர் அறை விட்டார்; மனைவியைச் சரமாரியாகத் திட்டிவிட்டு, “பச்சைக் குழந்தைகளை வைத்துப் பரிபாலிக்கத் தெரியாத முட்டாள் பிணங்களுக்கெல்லாம் பதினெட்டு முழம் பட்டுப் புடவையும், மாங்காய் ஜரிகைச் சேலையும் இல்லாமல் அழுகிறதாம்! தரித்திரப் பிணங்கள்! இதைவிடச் சிவனே என்று சந்நியாசம் வாங்கிக் கொள்ளலாம். ஒரு தொல்லையும் இல்லை” என்று அத்தியாயத்தை மோக் ஷதர்மத்துடன் முடித்தார்.

லலிதாவுக்குக் கோபம் தன்னை மீறிக்கொண்டு வந்து விட்டது. கணவர் கச்சேரி வேலை பார்க்கும் வேளையில், பையன் கூடத்தில் போகாவண்ணம் சமையல் அறையை உள்பக்கம் சார்த்திக்கொண்டதும், பையன் பிடிவாதம் செய்து அழுததும், பையன் அழுததால் கைக் குழந்தை அழுததும், பிறகு பையன் கடுதாசைக் கிழித்ததும், மொத்தத்தில் இரண்டுமாகச் சேர்ந்து தன்னைக் கணவர் வாய்ப்படுத்தியதும் லலிதாவுக்கு வெறுப்பை உண்டாக்கின.

“இந்தாங்கோ. இந்தக் குழந்தையையும் பாத்துக்கோங்கோ”என்று கைக்குழந்தையையும் தொப்பென்று கணவர் முன்னால் கொண்டு வந்து உட்கார்த்தினாள். அப்போது லலிதாவின் மையிட்ட கண்கள் ரத்தம் சோர்ந்த வேல் போல் ஜ்வலித்தன; உதடுகள் துடித்தன.

“இந்த வீட்டுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆச்சு. மூணு ரூபாய்க்குப் புடைவை வாங்கினேன்னு விரலை மடக்குங்கோ” என்றாள்.

கணவர் முகம் சிவந்தது. மாமியின் முகத்தில் ஆவேசம் தலைவிரித்து ஆடிற்று. ஆவேசம் என்னவோ நாட்டுப் பெண்ணைப் பற்றித்தான். ஆனால் அது பாய்ந்தது மகன் பேரில்:

“அப்பா! அப்பவே புடுச்சுக் கிளிப்புள்ளைக்குச் சொல்றாப்பலெ சொன்னேன்; எடத்தைக் குடுக்காதே; மடத்தைப் பிடுங்கும் இன்னு… ஊம்! இப்போ தலையிலே தூக்கி வச்சுக் கோடா; இல்லியோ”என்று பேய்ச் சிரிப்புச் சிரித்தாள்.

ஐயருக்கு ரோசமும் கோபமும் பொத்துக் கொண்டு வந்தன. ஆனால் கோபத்தின் மூட இயல்பை ஒட்டி அது மனைவி பேரில் பாய்ந்தது. “அவளுக்குப் பணத் திமிர்; அதனால் வாய்க்கொழுப்பு. ஒரு நிமிஷத்தில் அடக்கி விடுகிறேன்” என்று வீரம் பேசினார்.

மனைவியாவது சும்மா இருந்திருக்கக் கூடாதா?

“அப்படி ஒண்ணும் சொல்லல்லே; எண்ணவும் இல்லே. பணம் வாங்கினது மனசு உறுத்தராப்பலெ இருந்தால், திருப்பி வேணாக் குடுத்தூடறதுதானே? இல்லாததும் பொல்லாததும் சொல்றேளே; நியாயமா?” என்று கபடமற்ற மனத்துடன் அவள் சொன்னாள்.

அவள் நினைத்ததற்கு நேர் விரோதமாக இந்தப் பேச்சு நெருப்புக்கு நெய்யாயிற்று. தம்மை ஏழையென்று மனைவி குத்திக் காட்டுவதாகக் கணவர் எண்ணினார்; சுயப்பிரக்ஞையை இழந்து இரண்டடி பாய்ந்தார். “என்ன சொன்னாய்?” என்று கையை ஓங்கினார்; ‘பணத்திமிர்’என்று உதடுகள் முணு முணுத்தன.

லலிதாவின் கண்களில் நீர் தாரையாகப் பெருகிற்று. “என்னை அடியுங்கள்; வேண்டாம்ங்கவில்லை. உங்களை நம்பி வந்ததுக்குப் பிசகு இன்னதூன்னூட்டுச் சொல்லிட்டு அடியுங்கோ” என்று அழுதாள்.

ஓங்கிய கை அப்படியே நின்றுவிட்டது. முகம் அசட்டு வெளுப்புத் தட்டியது.

“அப்படியா சமாசாரம்? புத்தி வரும்படி செய்கிறேன். நான் சொல்வதற்கு எதிர்ப் பேச்சா? இருக்கட்டும்” என்று சொல்லிய படியே கச்சேரித் தாள்களை யெல்லாம் கீரைபோல்  பெட்டியில் வாரிப் போட்டுவிட்டு வேகமாக வெளியே போய்விட்டார் ஸ்ரீ சைலபதி ஐயர்.

வெளியே போனபிறகு இன்னது செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. பிக்காரியைப் போல் குறிப்பின்றி நடந்து சென்றார். முடிவில் ஊர்க்கோடியில் இருக்கும் ஆலமரச் சந்துக்கு வந்து சேர்ந்தார். ஒதுக்குப் புறமாகக் கிடந்த ஓர் ஆலங் கட்டையின் மேல் உட்கார்ந்தார்.

சுற்றிலும் இயற்கையின் கோலாகலம். எதிரே மரக்கிளையில் காகங்கள் தம்பதி சமேதர்களாக உட்கார்ந்து கொண்டு தலை மயிரைக் கோதிக் கொண்டிருந்தன. புல்தரையின் மீது, வெண்கலக் குரலில் மைனாக்குருவிகள் ஆரவாரித்து நின்றன. அணில்கள் வெயில் துணுக்குப்போல் மரங்களில் பாய்ந்து விளையாடின. சிறு காற்றில், காலண்டை ஆலஞ்சருகுகள் ஒன்றை ஒன்று காதல் வேகத்தில் விரட்டுவது போல் பறந்தன. மேலே வானுச்சியில் காகிதக் கப்பல் போல் மேகங்கள் மிதந்து போயின.

இயற்கையின் மெய்ம்மறந்த அமைதிக்கும் அவர் உள்ளத்தின் குழப்பத்துக்கும் பொருத்தம் கழுத்துக்குக் கத்தி போல் இருந்தது. பார்க்கப் பார்க்க, நெஞ்சில் குரோதம் தீப்பற்றி எரிந்தது. இப்படியே பொழுது சென்றது.

சூரிய வெப்பம் அதிகப்படவே ஸ்ரீ சைலபதி ஐயர் களைப்பினால் கண்ணயர்ந்தார்.

4

அதே நாள் அந்திப்பொழுது; மேய்ச்சலிலிருந்து திரும்பிவரும் மாட்டு மந்தைகளின் மணியோசை கேட்கும் நேரம்; தாய் மாடு ‘ஹம்மா’என்று தயங்கி நிற்கும் கன்றை அன்புக் குரலில் அழைக்கும் நேரம்; குருவிகளும் காகங்களும் மடையான்களும் மரங்களில் வந்து அடையும் நேரம்; எட்டிய குடிசைகளிலும் எட்டிய வானத்திலும் விளக்குகள் மின்னும் நேரம்.

தூங்கியவர் கண்விழித்து எழுந்தார்; மார்பின்மீது கைகளைக் கட்டிக்கொண்டு மெதுவாக வீட்டுக்குக் கிளம்பினார். வீட்டுக்குப் போனதும் சண்டையை மறந்து மனைவியிடம் பேசலாமா? அதுவும் தாமாகப் பேசலாமா? வெட்கக் கேடில்லையா? தாயார் ஏளனம் செய்யமாட்டாளா? வழி நெடுகிலும் இப்படிச் சிந்தனை செய்து கொண்டு சென்றார்.

வீட்டுக்கு வந்த சமயத்தில் தாயாரைக் காணவில்லை பையனையும் காணவில்லை. மனைவி மட்டும் கோடரி. முடிச்சுப் போட்ட தலைமயிருடன் அசிரத்தையாகச் சுவரின்மேல் சாய்ந்து கொண்டு குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். பால் இல்லாததால் குழந்தை சிணுங்கிக் கொண்டிருந்தது.

ஐயர், மனைவியைக் கவனிக்காதவர் போல் கிணற்றங் கரைக்குப் போய்க் கால்களைச் சுத்தி செய்துகொண்டு நடுக் கூடத்துக்குத் திரும்பி வந்தார். முற்றத்தின் ஓரத்தில் வழக்கம் போல் சந்தியாவந்தனத்துக்கு விபூதியும் ஜலமும் லலிதா கொண்டுவந்து வைத்தாள். ஆனால் வழக்கத்துக்கு விரோதமாக ஒரு டம்ளர் ஜலத்தையும் அன்று ஒரேயடியாகக் கொட்டிவிட்டு, சந்தியாவந்தனத்தைக் குறுக்கிவிட்டார் கணவர். எதிலாவது ருசி இருந்தால்தானே?

அதற்குள் தாயாரும் பையனும் வந்தார்கள். ஒருதரம் அலங்கமலங்க விழித்துவிட்டு, “ஏண்டாப்பா? ஆம்படையாளோடெ சண்டேன்னா நான் சாதம் எடுத்துப் போடமாட்டேனோ? கண்ணெல்லாம் குழி விழுந்து போச்சே. இப்பிடிப் பகலெல்லாம் பட்டினி கடந்து சாறயே; நன்னா இருக்கா? உக்காரு; சாதம் போடறேன்” என்று பரிவுடன் தாயார் சொன்னாள்.

பிள்ளை பதில் பேசவில்லை. தாயாருக்கோ தன்னால் சண்டை முற்றி, பிள்ளை பட்டினியாகக் கிடக்கும்படி ஆகிவிட்டதே என்ற துக்கம். “இல்லாதபோனா அவளையே போடச் சொல்றேன். லலிதா, இந்தா, எலையைப்போடு” என்று உருகிப்போய் உத்தரவிட்டாள்.

லலிதா இலைபோட்டுத் தண்ணீர் எடுத்து வைத்தாள்.

“எனக்கு வேண்டாம்”என்றார் ஐயர். தாயார் மன்றாடி மன்றாடிப் பார்த்தாள்; பிரயோஜனப்படவில்லை.

“நீதான் சொல்லிப் பாரேன். வாயிலெ கொழக் கட்டை அடச்சிருக்கா? நீயும் பட்னி” என்று லலிதாவைப் பார்த்துத் தாயார் சொன்னாள்.

லலிதா உடனே வணக்கமாகவும் அன்பாகவும் சாப்பாட்டுக்கு அழைத்தாள்.

“வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தம் மெத்தையை எடுத்துக் கொண்டு திறந்த மாடிக்குச் சென்றார், ஸ்ரீசைலபதி ஐயர். படுக்கையை விரித்து வானத்தைப் பார்த்தவண்ணம் படுத்துக் கொண்டார்.

பகலில் நடந்த சம்பவத்தைப் பற்றித் தொடர்ச்சியாக அவர் எண்ணிப் பார்த்தார். ‘சண்டை மூண்டது மனைவியாலா? தாயாராலா? அல்லது நாம் கணவன், லலிதா வெறும் மனைவி என்ற புருஷ அகங்காரத்தாலா?’என்று ஆராய்ந்தார். ஒன்றும் விளங்கவில்லை. சிறிது நேரத்துக்குள் சித்தம் ஓய்ந்து போய் விட்டது. தென்ன ஓலையின் ஓசை மயக்க மருந்து ஊட்டிற்று.

நள்ளிரவு; திடீரென்று கண் விழித்து எழுந்து உட்கார்ந்தார். மேலே நக்ஷத்திரங்கள் மாமூல் போல் பாராக் கொடுத்துக் கொண்டிருந்தன. சுற்றிலும் மரங்கள் அநாதிப் பொருளுக்கு வெண்சாமரம் வீசி நின்றன. இடை விட்டுவிட்டு நரிகளின் ஊளை காற்றில் கலந்தது. அதனுடன் சமீபத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல். ‘பக்கத்து வீட்டில்போல் இருக்கிறது’என்று மறுபடியும் ஸ்ரீசைலபதி ஐயர் படுத்துக் கொண்டார். தூக்கம் பிடிக்கவில்லை. பகல் கலகம் அகத்தினுள் முன்னும் பின்னுமாகப் போயிற்று.

அழுகை நெருங்கி வந்தது. மறுகணத்தில், பையனை எடுத்துக் கொண்டு மனைவி எதிரில் வந்து நின்றாள். வாய் மட்டும் திறக்கவில்லை. ஸ்ரீசைலபதி ஐயரின் உள்ளத்தில், கூட்டில் அடைத்த புனுகு பூனையைப் போல் ஒரு குடைச்சல் உண்டாயிற்று. அழுகையுடன் அழுகையாகப் பையன், “ஏப்பா ஒங்கிட்ட என்னெத் தூங்கவச்சுக் கல்லெ?” என்றான்.

பாதி ராத்திரியில் திறந்த மாடியில் பதில் சொன்னால் குடும்பக் கலகத்தை உலகத்துக்குத் தண்டோராப் போட்டது போல் ஆகுமோ என்னவோ என்ற அசட்டுப் பயம்; சும்மா இருந்தார் ஐயர்.

“ஏன் அப்பா வச்சிக்கல்லேங்கறேன்? இப்போ முழிச்சுண்டு பாத்தேன். காணும். மாடீலே இருக்கியோன்னு வந்தேன். இருட்டு, கறுப்பா பயமாயிருந்தது. அழுதேன். அம்மா இங்கே எடுத்துக்கிண்டு வந்தா. அம்மா நல்லவ, ஏப்பா!” என்று மேலே அடுக்கினான் பையன்.

அப்போதும் சும்மா இருந்தார். லலிதாவுக்கோ துயரம் தாங்கக் கூடவில்லை. தன் பேரில் இன்ன குற்றமென்று சொல்லி விட்டால் எவ்வளவு வைதாலும் தாங்கத் தயார் என்பது போன்ற உணர்ச்சி அவள் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது; “ஒங்கப்பா சந்நியாசம் வாங்கிக்கப் போரா. என் மேலே கோபம். இம்மே தொடமாட்டார் ஒன்னை” என்று பையனைப் பார்த்துச் சொன்னாள். ‘தொடமாட்டார்’என்று சொன்னதைக் கேட்டதும் ஒரே தாவாகத் தாவிப் பையன் தகப்பனாருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, “கோபம்ன்னா என்னப்பா?” என்று கேட்டான்.

தகப்பனார் பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.

“அது ஏனப்பா வரணும் அம்மாபேரில்?” என்று பின்னும் பாணம் தொடுத்தான் பையன்.

“இப்போதாவது சொல்லுங்கோ; அப்பா, அம்மா, அண்ணன், தம்பி எல்லாரையும் விட்டுவிட்டு, எல்லாம் நீங்க தான்னூட்டு இருக்கேனே. இன்னிக்கி நான் பண்ணின பெசகென்ன? என் பேரில் பெசகுன்னா என்ன வேணா சிட்சியுங்கோ; வீணாப் பட்ணி கிடக்கிறேளே” என்று அழாத தோஷமாகக் கெஞ்சினாள் லலிதா.

கணவரின் மனம் தளர்ந்தது. அகக்கண்ணுக்கு முன்பு பகல் வேளைச் சம்பவம் வரிசையாக எழுந்தது. குற்றம் தன்னைச் சார்ந்ததென்று மனச்சாட்சி தெளிவாகச் சொல்லிற்று. அதைப் பளிச்சென்று ஒப்புக்கொண்டு விடலாம் அல்லவா? அப்படிச் செய்யாமல் கணவர்கள் வழக்கத்தை ஒட்டி, “பிசகு யார் பேரில் இருந்தால் என்ன? கச்சேரிக் கடுதாசு போய்விட்டது” என்று மழுப்பினார்.

“பாவம் குழந்தைக்கு என்ன தெரியும்?” என்றாள் லலிதா. “தெரிந்தவள் நீ என்ன செய்தாய் என்று நான் கேட்கிறேன்?” “கோவிச்சுக்காதிங்கோ. சமையல் கட்டுலே இருந்தவ கவனிக்காதது பிசகுதான். கடுதாசுக் கிட்ட நீங்க இருந்தேளே….”

“சரி, சரி, சும்மா இரு. போனது போகட்டும். இரண்டாம் சண்டையைக் கிளப்பாதே” என்று சமரசப்படுத்தினார் ஐயர்.

கீழே இருந்து கைக்குழந்தையின் குரல் இரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு கிளம்பியது. ஒரு நிமிஷம் லலிதா தயங்கினாள்.

“கீழே குழந்தை அழுகிறதே” என்றார் கணவர்.

“ஆனால் இன்னிக்கு வந்த கோபம் அர்த்தமில்லாத முன் கோபம்ன்னு ஆம்படையா கிட்ட ஒப்புக்கிண்டா அகௌரவ மாக்கும்” என்று சொல்லிக் கொண்டே லலிதா கீழே இறங்கினாள்.

ஸ்ரீ சைலபதி ஐயரின் மனம் முற்றும் இளகிவிட்டது. மனச்சாட்சி உறுத்திற்று.

“ஏண்டீ!” என்பதற்குள் மாடிப்படியில் கால் மெட்டியின் ஓசை கேட்டது. பையனை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.

“ஏதாவது சாப்பிட்டியோ, இல்லையோ?”என்று பரிவோடு போய்க் கேட்டார் மனைவியை.

“ஆயிடுத்தே.”

தன்னைச் சமாதானப்படுத்த வேண்டிச் சொல்லிய முழுப் பொய் அது என்று அவருக்குத் தெரியும்.

“போகட்டும். இன்னொரு தரம் சாப்பிடு.”

“அகாலத்திலே இரண்டாம் தரம் வேண்டாம். நீங்க கீழே வாங்கோ. ஒங்களுக்குப் பால் வச்சிருக்கேன். சாப்பிடுங்கோ. எனக்கு ஒரு நாள் ஏகாதசியாகத்தான் இருக்கட்டுமே.”

ஸ்ரீசைலபதி ஐயர் தமாஷாக லலிதாவின் தோள் பட்டையில் தட்டினார்.

“இப்போ இவ்வளவு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசற ஆளுக்குப் புத்தி அப்பொ எங்கே போச்சு? இந்த ஊட்டுலே யாரு எஜமாண்டா? நானா நீயா? இந்த மாடு வேண்டாமின்னு நாலு நாளா அடிச்சுக் கிண்டேனே….” என்று கிழவனார் வெடித்துப் பேசினார்.

“நீங்க மாடு பிடிச்சான்னீங்களேன்னூட்டு…”

“ஆமாங். மாடு பிடிச்சான்னூட்டுச் சொன்னேன். இந்த மாடு வேண்டாமின்னூட்டும் சொல்லல்லே?”

“கவலைக்கு இதே போல மாடு இந்த டில்லி எங்கேயும் கிடையாது. வேலை செய்யற தோதுக்குத் தகுந்தாப்பலே கொணாந்தேன்.’

கிழவனாருக்கு உண்மையிலே மாட்டைப் பற்றி அவ்வளவு ஆசேஷபம் இல்லை. மாட்டை முதல் முதல் சேர்வைகாரரே போய்ப் பொறுக்கி வந்ததுதான் குற்றம். நாலைந்து ஜோடி மாடுகளைக் குறிப்பிட்டு விட்டுக் கிழவனாரை எது பிடிக்கலாம் என்று கேட்டிருக்க வேண்டியது முறை. சேர்வைகாரர் முறை தவறியதன் பலன் இது! நல்ல மாட்டைவிட எஜமானத்துவம் என்னும் அதிகாரம் முக்கிய மல்லவா? அதை இழக்கக் கிழவனார் தயாராக இல்லை. அநாதையாகக் கிடந்த அக்கா பிள்ளையைக் கொணர்ந்து வளர்த்து ஆளாக்கி, வீடு விளங்க அவனுக்குப் பெண்ணெடுத்துப் பட்ட பாடெல்லாம் அடிவேரில் அரிவாள் வெட்டைப் போல் விழுந்தால் எப்படிச் சகிக்க முடியும்? கவலை அடிக்கிறானாம் கவலை! யார் அப்பன் வீட்டு நிலம்!

இந்த மாதிரியான நினைப்பிலே தத்தளித்துக் கொண்டே கிழவனார் பதில் சொன்னார்: ‘இந்தா, நானும் எங்க நாளிலே கவலை அடிச்சிருக்கிறேன். எங்க ஐயா நிழல் என் மேலே பட்டதில்லே. அவர் பேச்சுக்குப் பதிலும் சொல்றதில்லே. இத்தினிக்கும் ஊசி குத்தற இடங்கூட அவர் சம்பாரிச்சுக் கொடுக்கல்லே. நீ நன்னிகெட்டமாதிரி…”

“அப்பொ மாட்டைத் திருப்பி ஓட்டிவிட்டுடட்டா?” என்று பணிந்தார் சேர்வைகாரர்.

“என்னைக் கேட்டா ஓட்டிக்கிட்டு வந்தே? எதை வேணாச் செய்!”என்று வெற்றிலை இடிக்க ஆரம்பித்தார் கிழவனார்.

மிகவும் தர்மசங்கடமான நிலைமை. சேர்வைகாரர் யோசித்தார். அன்றாவது கவலை போட்டுத் தண்ணீர் பாய்ச்சா விட்டால் கனவில் கூட வயல் விளையும் என்று எண்ண வேண்டியதில்லை. பயிர் காய்ந்து அவ்வளவு சருகாய் விட்டது. பிறகு வயலில் காலத்தில் பாடுபட வில்லை என்று கிழவனார் திண்ணையில் உட்கார்ந்து பாடுவார்! எது பொறுக்கக் கூடியது? வயலைக் கெடுக்கக் கூடாதென்று நினைத்து மாட்டைச் சேர்வைகாரர் வயல் பக்கம் ஓட்டிக் கொண்டு போனார்.

இரவு ஆறரை மணி இருக்கும். வயலிலிருந்து எருதுகளைச் சேர்வைகாரர் ஓட்டிக்கொண்டு வந்தார். தெருவிலே ஒரு மொட்டை வண்டி கிடந்தது. கிழவனார் அதில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் வெளியூர் ஆள் ஒருவன் நாற்றமடித்த சுருட்டு ஒன்றைப் பிடித்துக் கொண் டிருந்தான். வண்டியைப் பூட்ட வேண்டியதுதான் பாக்கி. சேர்வைகாரர் மனைவி பெரு நடையாக ஓடி வந்து கொண்டிருந்தாள். சேர்வைகாரருக்கு விஷயம் விளங்காமல் இல்லை. இருந்தாலும் ஒதுங்கியே நின்றார்.

கிழவனாருக்கும் சேர்வைகாரர் மனைவிக்கும் எப்போதுமே நல்ல ராசி. ஏனென்றால் உலகத்தை ஆட்டி வைக்கும் வயிறு, இந்த இடத்தில் சேர்வைகாரர் மனைவியை எதிர்பார்த்துத்தான் நின்றது. ஆகவே சேர்வைகாரரைப் பற்றிக் கிழவர் எவ்வளவு முணுமுணுப்பாரோ அவ்வளவு அவர் மனைவியைப் பற்றிப் புகழ்வது வழக்கம். அவளுக்கும் கிழவனார் குணம் வீட்டுக்கு வந்த புதிதில் எளிதிலே பிடிபட்டுவிட்டது. எக்கச்சக்கமான சந்தர்ப்பங்களில் அவரை மடக்கும் தந்திரத்தையும் அவள் அறிந்து விட்டாள். மூக்கிலும் கண்ணிலும் பொக்கை வாயிலும் நெருப்புப் பொறி பறக்க, “அந்த வைக்கோலை இன்னும் ஏன் போர் போடவில்லை?”என்று அநாவசியமாகக் கிழவனார் சாட்டை வாங்கிக் கொண்டிருக்கும்போது, மிகவும் நயமாக வெல்லம் போட்டுப் பிசைந்த கம்புமா ஒரு தட்டைக் கொண்டு வந்து வைத்து விடுவாள். தன் மனத்தை அவள் எப்படி அறிந்தாள் என்று வியந்து கொண்டே கிழவனார் கம்புமாவை அள்ளி வாயில் போட்டுக்கொள்வார். அதோடு வைக்கோல் காற்றிலே போய்விடும். ஆகையினால் அவளைக் கண்டால் வாலைக் குழைக்கும் நாய்போல் அவர் முகத்தில் அன்பும் அடக்கமும் தவழும்.

கிழவனார் மொட்டை வண்டியில் ஏறப் போவதைப் பார்த்து ஓடிவந்தாள். அவருடன் நேரே பேசவில்லை. ஆனால் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “ஏன் ஐயா! மாமாவை எங்கே கூட்டிப் போறே?”என்றாள்.

“ஊருக்கு வரேன்னாரு.”

“ஏன் மாமா? ஊட்டுக்காரரோடே சண்டேன்னா உங்க ஊட்டை விட்டுப் போவானேன்?” என்று அவள் கிழவனார் பக்கம் திரும்பினாள்.

அவளைப் பார்த்ததுமே கிழவனாருக்கு நாடி தளர்ந்து விட்டது; அவள் கேள்வி காதில் பட்டதும் அவருடைய வேகம் குடத்தில் அடையும் பாம்பைப் போல ஒடுங்கிப் போயிற்று. நரைத்த மீசையைக் கீழ்ப்புறமாக இழுத்து விட்டுக்கொண்டே, “இல்லே, வண்டியை விலை பேசலாமின்னு யோசனை. எரு கிரு அடிக்கலாம். வண்டி உட்கார்ந்து ஓட்ட எப்படி இருக்குன்னு பாத்தேன்” என்று புளுகினார். அப்படிப் புளுகிக் கொண்டே வண்டியை விட்டுக் கிழவனார் கீழே இறங்கினார்.

அவர் இறங்கினாரே ஒழிய அவர் மனம் இறங்கவில்லை. தாம் ஆளாக்கிவிட்ட சேர்வைகாரருக்கு அவ்வளவு வல்லாண்மை இருக்கும்போது தாம் மட்டும் புருவமயிர் முதற்கொண்டு நரைத்துப்போன பத்து ஏக்கர் நிலத்துக்காரர் மட்டும் – இளிச்சவாயனா? ‘அந்த மாட்டை மட்டும் அவன் விற்காமல் இருக்கட்டும். அந்தப் பெண்ணுக்காகக் கூடப் பார்க்கப் போவ தில்லை”என்று வண்டியண்டை நின்று கொண்டே கிழவனார் தமக்குத் தாமே பேசிக் கொண்டார்.

“வண்டிகிட்டே நிற்பானேன்? மாட்டைக் காலையிலே வித்தூட்டு மறு காரியம் பார்க்கச் சொல்றேன் – இந்தாலே அவருகூட வந்தூட்டாரு. நாளைக்கு விடியறத்துக்குள்ளார மாட்டை வித்தூடணும், தெரியுதா?”

கிழவனார் தயங்கித் தயங்கித் திண்ணையில் வந்து உட்காரப் போனவர், ஏதோ சமாதானமாகாமல் அடுத்த வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தார்.

பக்கத்து வீட்டுக் கிழவனாருக்கு ‘லா பாயிண்டு’க் கவுண்டர் என்று பெயர். அந்தப் பக்கங்களிலே முடிச்சுப் போடுவதும் அவிழ்ப்பதுமே அவர் உத்தியோகம். இந்த உத்தியோகத்துக்குச் சம்பளமில்லையே ஒழியச் சம்பாத்தியம் உண்டு. அபூர்வமாக அடுத்த வீட்டுக் கிழவனார் தம் வீட்டுத் திண்ணைக்கு வந்ததும், ‘பாயிண்டு’க்கு நாக்கில் ஜலம் ஊறிற்று.

“அண்ணே, ஒரு யோசனை சொல்லு. நான் பண்ணினேனே உயிலு….”

‘ஆமாங். அந்தச் சிங்கம்பட்டிச் சேர்வைகாரனுக்கு எளுதிவச்சியே, அப்பவே எனக்கு யோசனைதான்.”

“அதை இப்பொ மாத்தணும். சட்டம் அதுக்கு என்னா சொல்லுது?”

“சட்டம் என்னா சொல்லுது? சரியாத்தான் சொல்லுது. எளுதி வச்சவனுக்கு உயிர் இருந்தால் உயில் செத்துக் கிடக்கும். எழுதிவச்சவன் செத்தால் உயில் எழுந்திருச்சுடும். அவ்வளவு தான்.”

கிழவனார் சமாதானமடைந்து சொந்த வீட்டுத் திண்ணையில் வந்து சாய்ந்து கொண்டார்.

சேர்வைகாரருக்குக் கிழவனார் குணம் தெரியாமல் இல்லை. உயிலைப் பற்றிய நினைப்பும் இல்லாமல் இல்லை.

ஆகையினால் மறுநாள் காலை தம் ஜமாக்களில் நாலு பேரை அழைத்து வந்தார். கிழவனார் திண்ணையில் வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தார்.

“எங்கே இருக்குது எருது?” என்று இரைந்தான் ஓர் ஆள்.

“மாட்டைப் பார்க்க வேணாம். நான் சொல்றேன். விலையைப் பேசுங்க” என்று கிழவனார் காது செவிடுபடும் படி சொன்னார் தரகுகாரர்.

“மாடு விக்கறதுன்னூட்டு எந்த மூளி சொன்னான்?” என்று சீறி விழுந்தார் கிழவனார்.

“சேர்வைகாரரு.”

“இந்த ஊட்டுலே யாரு எசமான்னு இன்னுமா உனக்குத் தெரியல்லே? தரகு வியாபாரம் செய்ய வந்தூட்டியே. அவனா மாட்டை வாங்கறது? அவனா மாட்டை விக்கறது? ரொம்ப மோசமாப் போச்சே!”

“நான் கண்டபடி;”என்று கிழவனாருக்குத் தெரியாமல் கண்ணைச் சிமிட்டினார் தரகர்.

“மாடு விக்கறதில்லை; தெரிஞ்சுக்கிட்டீங்களா?”

“நீங்க நேத்துக் கோவிச்சுக்கிட்டீங்களேன்னுட்டு இவுங்களை அளைச்சாந்தேன். நீங்க எப்படிச் சொல்றீங்களோ அப்படி” என்று எரிகிற நெருப்பில் நெய்யை விட்டார் சேர்வைகாரர்.

“இந்த ஊட்டிலே நான்தான் எசமான்; தெரியுமா? நீ இல்லே. மாட்டை நான் விக்கறதில்லை” என்று கிழவனார் உரலில் ஓங்கி இடித்தார்.

ஏமாந்துபோனவர்களைப் போன்ற பாவனையுடன் தெருக்கோடிப் பிள்ளையார் கோயிலண்டை எல்லோரும் திரும்பிப் போய்விட்டார்கள். அப்போதுதான் சேர்வைகாரர் கையிலிருந்து தரகன் கைக்குப் பணம் மாறிற்று.

“இந்தத் தந்திரம் பண்ணாட்டி மாட்டை ஊட்டிலே கட்ட விடுவாரா கிழவனார்?” என்று தம்மையே புகழ்ந்து கொண்டார் சேர்வைகாரர்.

வீட்டுத் திண்ணையிலே வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கைத் தின்றுகொண்டிருந்த கிழவனாருக்குப் பிள்ளையார் கோயிலில் நடப்பது தெரியப்போகிறதா?

“என்கிட்டே ஒம் புருசனை வாலாட்டச் சொல்லாதே, தெரியுதா?” என்று சேர்வைகாரர் மனைவியை வீறாப்போடு கிழவனார் எச்சரித்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !