
பதினெட்டாம் பெருக்கு
ந. பிச்சமூர்த்தி
மீனி
காந்திமதிப் பாட்டியின் வீட்டிற்கு முதல்நாள் இரவுதான் மீனி வந்திருக்க வேண்டும். ஏனெனில் அன்று இரவு முழுவதும் அலமாரியின் மேல் ‘தொப் தொப்’ என்று ஏதோ விழும் சப்தமும், சமையலறையில் பாத்திரங்களும் கரண்டிகளும் உருளும் ஓசையுமாயிருந்தன. கிழவிக்கு இன்னதென்று புரியவில்லை. அர்த்த ராத்திரி யில் எழுந்திருந்து போய்ப் பார்க்கவும் அலுப்பு. எலியாயிருக்கும் என்று சபித்துக்கொண்டே மறுபடியும் கண்ணயர்ந்தாள்.
மறுநாள் அதிகாலையில் கிழவி திருப்பள்ளி எழுச்சிகளும் சிவத் தோத்திரங்களும் சொல்லி முடித்துவிட்டு எழுந்த பொழுது மீனி குறுக்கே ஓடிற்று.
‘அட தரித்திரமே! நீதானா ராத்ரி முழுதும் கொட்டம் அடித்தாய்? போதாக்குறைக்கு முதல் முதல் உன் தரிசனம் தானா?…என்ன ஆபத்து வரப்போகிறதோ?’ என்று நொந்து கொண்டாள்.
அதற்குப் பிறகு பகல் முழுதும் மீனி கண்ணில் படவில்லை. அன்று கிழவிக்குக் கறி காய் நறுக்கும் பொழுது அரிவாள் மணை கூடக் கையில் படவில்லை. இப்படி சாஸ்திரம் பொய்யாகுமா என்று கிழவி யோசித்துக் கொண்டிருந்தாள்.
இரவு வந்தது. பலகாரத்திற்கு பால்கொழுக் கட்டை செய்து ஜாக்ரதையாய் மூடிவைத்து விட்டு சுவாமி தரிசனத்திற்குச் சென்றாள். பலகாரத்திற்குக் காவலாகப் பேரன் சூரிய நாராயணமூர்த்தியையும் அவன் தங்கை கௌரியையும் நியமித்தாள்.
சிறிது நேரம் சென்றது. சூரியநாராயணமூர்த்தி ‘ராமசப்தம்’ சொல்லிக் கொண்டிருந்த சிரமத்தில் ஈடுபட்டிருந்தான். அண்ணனுடைய உத்யோகத்தையும் சேர்த்துப் பார்த்துவந்த கெளரி அப்படியே கூடத்தில் தூங்கிப் போய் விட்டாள்.
உள்ளே தாம்பாளம் உருண்டு விழுந்தது. அந்தச் சப்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுச் சூரி உள்ளே ஓடினான். பூனைக்குட்டி அந்தர்த்தியானமாய் விட்டது. பாத்திரத்தில் கொஞ்சம் பால் குறைந்திருந்தது. கிழவி வந்து தொண தொணக்கப் போகிறாளே எனப் பயந்து, தாம்பாளத்தை மறுபடியும் மூடிவைத்து விடலாமென்று கையிலெடுத்தான். சமயத்தில் கிழவி திரும்பி வந்துவிட் டாள். ஒரு வினாடிக்குள் விஷயம் விளங்கிவிட்டது. பாட்டியின் அம்பறாத் தூணியிலுள்ள அவ்வளவு வசவுகளும் அழகாய்ப் புறப்பட்டன. அப்புறம் சூரிக்கு இரண்டு அறை; தூங்கு மூஞ்சி கௌரிக்கு நான்கு. வாரிச் சுருட்டிக்கொண்டு கௌரி எழுந்தபொழுது வீட்டு விட்டத்தின் மீது மியா, மியா என்று பிரலாபித்துக் கொண்டிருந்த பூனைக்குட்டியைப் பார்த்தாள். தன் நிலைமையைப் பார்த்து இரங்குவது போல் கூவிய பூனைக்குட்டிக்கு மீனி என்ற அன்புப் பெயர் சூட்டினாள்.
அன்றுமுதல் அண்ணனுக்கும் தங்கைக்கும் மனஸ்தாபம். இரவு எட்டு மணிக்குத் தூங்க கௌரிக்கு யாதொரு நியாயமுமில்லையென்றும், படிப்பவனைச் சுயேச்சையாய் விட வேண்டியது ஸ்திரீ தர்மமென்றும் அதையெல்லாம் மறந்து தூங்கிப் போன கெளரி கணவன் வீட்டிற்குப் போய் நல்ல பெயர் வாங்கப் போவதில்லை யென்றும் சூரி எண்ணிக் கொண்டிருந்தான். கௌரி நினைத்தாள்: ‘எனக்குத்தான் தூக்கம் தலைசுற்றியடித்ததை இவன் பார்த்தானே; நானும் சொன்னேனே. கை சொடுக்கும் நேரத்தில் நெட்டுருச் செய்ய வேண்டியதை ஒரு யுகம் வரையில் செய்தால் யார் ஜவாப்? மக்குப் பையன்! சமையலறையிலாவது விளக்கை வைத்துக் கொண்டு வாசிக்கலாகாதா? அதையெல்லாம் விட்டு விட்டுக் கிழவிக்குத் தூபம் போட்டு எனக்கு அடிவாங்கி வைத்தானே. களிமண்! பிரும்மஹத்தி!! இவனுக்குப் படிப்பு வருமா?’
மீனியும் அன்றுமுதற்கொண்டு அங்கேயே ஸ்திர வாசமாகிவிட்டது. ருசிகண்ட பூனை விடுமா? அங்கே இங்கே பாட்டி போயிருக்கையில் நெய்யைத் தின்றுவிடு பாலைக் குடித்து விடுவது, நைவேத்தியத்தைத் தொட்டு விடுவது, நூற்கண்டைச் சிடுக்கடித்து விடுவது- இப்படியெல்லாம் பூனைக்குட்டிக்குத் தெரிந்த அவ்வளவு விஷமமும் செய்தது.
ஒருநாள் சமையல் அடுப்பிற்குள் மீனி தூங்கிக் கொண்டிருந்தது. காந்திமதிப் பாட்டி அதைப் பார்க்க ‘இந்தாடா காபி’ என்று காபியை வைத்து விட்டுக் காசித் தும்பைப்பூ பறித்து வரச் சென்றாள். சூரி மசிக்கூடு, நோட் புஸ்தகங்கள் இவைகளை ஒழுங்கு படுத்திவிட்டு வருமுன் காபியில் பாதிக்குமேல் காணாமல் போய்விட்டது. பாட்டியிடம் போய்ச் சொன்னான். ‘உனக்கு நன்றாய் வேண்டும்!’ என்று கிழவி ஆசீர்வதித்தாள். சூரிக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவில்லை. அங்கிருந்த சுடுதண்ணீரை எடுத்துப் பூனையின்மேல் கொட்டினான். மியாவூவென்று நீளமாக அழுதுகொண்டே அது ஓடிவிட்டது.
இதைப் பார்த்திருந்த கௌரிக்குக் கண்ணில் ஜலம் வந்தது; தன்மீது சுடுதண்ணீர் விழுந்த எரிச்சல் உண்டாயிற்று. அதிலிருந்து மீனியின் மீது கௌரிக்குப் பின்னும் அதிகமான ஆசையும் நேசமும் உண்டாயின. கிழவிக்கும் சூரிக்கும் தெரியாமல் நெய்யுடன் கலந்த சாதத்தைக் கொல்லையில் கொண்டு போய் மீனிக்குப் போடுவாள் ; தன் காபியில் கடைசியில் பாக்கி வைத்து, கிணற்றங் கரையில் பாத்திரம் தேய்க்கும் பாவனையாய் மீனிக்குக் காபியைக் கொடுப்பாள்; மத்தியான வேளைகளில், பாட்டி தூங்கும் போதோ, பஞ்சீகர்ணம் போடும் போதோ மீனியுடன் கொல்லையில் விளையாடப் போவாள்.
நாளாக நாளாக ரகசியம் அம்பலமாகிவிட்டது. இருவருக்கும் வெட்கம் கெட்டுப் போயிற்று. கௌரி காபி குடிக்கும் பொழுதும், சாதம் அல்லது பக்ஷணம் சாப்பிடும்பொழுதும் பகிரங்கமாய் அவளிடம் வந்து மீனி கத்தும். அவள் பரிவுடன் தன்னுடையதை அதற்குப் பகிர்ந்து கொடுப்பாள். இதர வேளைகளில் வெறுமனே கௌரியின் மீது அன்புடன் மீனி உராயும்.
பூனையைப் பற்றிக் கிழவியின் உணர்ச்சிகள் ஒரு விதம். எவ்வளவு ஜாக்கிரதையாய்க் கிழவி வீட்டுக் காரியங்களைச் செய்த போதிலும் முடிவில் எதிலாவது ஏமாறாமல் இருக்க மாட்டாள். தவிர, தினசரி காலையில் பூனை தரிசனம் . கண்ணாடிக் குப்பியில் அடைத்து வைத்திருக்கும் அக்கினித் திராவகத்தைப் போல் மீனியின் மீதுள்ள கோபத்தை அடைத்து வைத்திருந்தாள். அப்படிச் செய்யாவிட்டால் தங்கப் பூனைகளாய்ச் செய்து தானம் செய்ய அவளிடம் ஐவேஜி ஏது? எனவே கிழவியின் ஆத்திரத் திற்கு இலக்கு கௌரிதான்!
சூரியின் உணர்ச்சி மற்றொருவிதம். என்றைய தினம் மீனியின் சாக்கிட்டுத் தனக்கு அடிவிழுந்ததோ அது முதல் அதை எப்படியாவது தொலைத்து விடவேண்டு மென்று அவன் நினைத்தான். அதற்குக் குறுக்கே நின்றாள் கௌரி, இல்லையா? தவிர அவனைப் பார்த்ததும் மீனி தாவிப் பாய்ந்து ஓடிப்போய் விடுவதும், கௌரியைக் கண்டால் கொஞ்சிக் குலாவுவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ‘ஒரு பூனைகூட என்னைப் பார்த்து அலக்ஷியம் செய்யும்படி ஆகிவிட்டதா?’ என்ற துயரம். இவ்வளவு எண்ணங்களும் சேர்ந்து, மீனியையும் கௌரியையும் ஏககாலத்தில் கர்வ பங்கப்படுத்தி விடு என்று சூரிக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தன.
ஒருநாள் காலை வெயிலில், குட்டிச்சுவருக்குப் பின்னால் மீனி கால்களை நீட்டிக் கொண்டு சுகமாய்ப் படுத்துக் கிடந்தது. சூரி பார்த்தான். ஒரு பெரிய சாக்கைக் கொண்டு வந்து, ‘திடும்’ என்று பூனையின் மீது போர்த்திச் சாக்கையும் பூனையையும் அப்படியே தூக்கிக் கொண்டு வந்தான். கிழவி பார்த்து, ‘அடே! பூனை ஹத்தி செய்யாதே. பிராயச்சித்தம் செய்யப் பணமில்லை!’ என்று கூப்பாடு போட்டாள்.
ஒன்றும் செய்யவில்லை. பயப்படாதே என்று சொல்லிக் கொண்டே ஒரு கம்பிக் கூட்டில் கொண்டு போய் அதை அவன் அடைத்து விட்டான். சர்க்கஸில் சிங்கம் புலிகளைப் பழக்கவில்லையா? அதற்குப் பிறகு, இப்படிச் செய், அப்படிச் செய் என்று ஆட்டி வைத்தபடியெல்லாம் அவைகள் ஆடவில்லையா? அதைப்போல், புலிக்குப் பதிலாகப் பூனையை வைத்துக் கௌரியைக் கண்டால் ஓடிப்போகும் படி பழக்கவேண்டுமென்ற உத்தேசம் போலும் சூரிக்கு! மீனி சிறிது நேரம் கத்திப் பார்த்தது. பிறகு கூண்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கம்பி இடுக்குகளில் முகத்தை விட்டுப் பார்த்தது. அப்பால் கம்பிகளை முன் கால்களால் பிறாண்டிப் பார்த்தது. ஒன்றும் பலிக்கவில்லை. திரும்பவும் முன் போல் அலையத் தொடங்கிற்று. சிறிது நேரம் சென்று சூரி பூனைக்குப் பால் கொண்டு போய் வைத்தான். என்ன காரணத்தாலோ மீனி பால் சாப்பிட மறுத்தது. கண்களை மூடிக்கொண்டு ஏதோ குருட்டு யோசனை செய்தது.
நடந்தது அவ்வளவும் கௌரிக்குத் தெரியும். இருந்தாலும் அவ்வளவு வெளிப்படையாய்ச் சூரியின் விரோதி ஆவதற்குக் கௌரிக்குத் துணிவில்லை. இருந்தாலும் மீனியின் நிலைமைக்காக வருந்தாமல் இருக்கவில்லை. அன்று கௌரிக்கு சாப்பாடுகூடச் சரியாகச் செல்லவில்லை. இரவு எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருந்தாள்.
இரவு ஒன்பது மணியிருக்கும். எங்கே கூட்டில் பூனை செத்துப் போய்விடப் போகிறதோ என்று பயந்து மெதுவாய் ஒருவருக்கும் தெரியாமல் கூட்டை அப்படியே வெளியே எடுத்துக் கொண்டு போய்ப் பூனையை விட்டு விடுவோம் என்ற எண்ணத்துடன் கிழவி அக்கூட்டண்டை வந்து சேர்ந்தாள். அங்கே கொஞ்சம் இருட்டு; அவ்விருட்டில் மற்றோர் உருவம் தோன்றிற்று. ‘யாரது?’ என்றாள். ‘நான்தான்’ என்றாள் தூங்கிப்போய் விட்டதாக கருதப்பட்ட அந்த கௌரி.
இருட்டில் இங்கே என்ன செய்கிறாய்?’ என்றாள் கிழவி.
‘ நீ என்ன செய்யப்போகிறாய் பாட்டி?’ என்று பதில் கேள்வி கேட்டாள் கௌரி
‘பயப்படாதே; உன் பூனைக்குட்டியைச் சந்தில் கொண்டு போய் விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் இந்தச் சூரி அதைக் கொன்றுவிடுவான்…நீ என்ன செய்கிறாய் இருட்டில்?’
ஒன்றுமில்லை என்று கௌரி சொன்னது பொய். உண்மையில் சாயங்காலம் தனக்குக் கிடைத்த காபியில் கொஞ்சம் ரகசியமாய் மிகுத்து வைத்திருந்ததை அப்பொழுதுதான் மீனிக்குக் கொடுத்து முடிந்திருந்தது.
‘ஆனால், சரி, நீ இங்கேயே இரு ; நான் கொண்டு போய் விட்டு விடுகிறேன்’ என்றாள் கிழவி.
கௌரிக்கு மீனியை இழக்கவும் இஷ்டமில்லை; குற்றவாளியைப் போல் கூட்டில் பார்க்கவும் இஷ்டமில்லை. முடிவில் எங்கேயாவது பிழைத்துக் கிடக்கட்டும் என்று தானும் சந்து வரையில் போய்விட்டு வந்தாள். சனி ஒழிந்தது என்று கிழவி அகமகிழ்ந்து கொண்டிருந்தாள். கௌரிக்கோ துக்கம் நெஞ்சை அடைத்தது. அவரவர்கள் படுக்கப் போய் விட்டார்கள்.
நல்ல நிசிவேளை. பின்னும் ஓர் உருவம் பூனையைப் பார்க்க வந்தது ஆஜர் பார்க்க ! சந்தேகமென்ன? சூரி தான் ! இருட்டில் குனிந்து பார்த்த பொழுது கூடுமட்டும் இருந்தது; பூனையைக் காணோம். வடவாக்கினி போலக் கோபம் சீறியெழுந்தது; அந்தக் கௌரியை ஒரு கை பார்க்கிறேன். ராத்திரி பூனையை விரட்டி விட்டால் எனக்குத் தெரியாமல் போய்விடுமா?-இருக்கட்டும் என்று சபதம் செய்தான்.
மறுநாள் பொழுது விடிந்தது. கிழவி படுக்கையை விட்டு எழுந்ததும் மீனி முகத்தில் விழித்தாள்; சிவ சிவ! போன சனியன் திரும்பிவந்து விட்டதா என்று தலையில் அடித்துக் கொண்டாள். ஆனால் கௌரியின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. கொல்லைப் பக்கம் பல் துலக்கப்போனாள். வெந்நீர் அடுப்புக் கூரைமேல் பூனைக்குட்டி பதுங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள்.
‘அட மீனி!’ என்றாள் கௌரி.
‘மியாவ், மியாவ்’ என்று கத்திக்கொண்டே அவளருகில் வந்தது பூனை.
‘என்னை விட்டுப் போகமாட்டியோ? நல்ல மீனி! தங்கக் கம்பி; கண்ணு!’
‘மியாவ் மியாவ்’.
‘சூரி பார்த்தால் ஓடிப்போன திருடன் என்று உன்னைக் கொன்றுவிடுவானே- என்ன செய்கிறது?’
‘மியாவ் மியாவ்’.
இப்படி கௌரியும் மீனியும் பிரேமா பாஷையில் பேசிக் கொண்டிருந்த பொழுதே சூரி வந்துவிட்டான்.
‘ஏண்டி கௌரி! பூனைக்குச் செப்பிடுவித்தை தெரியும் போலிருக்கிறது. கூட்டிலே இருந்து தானே வெளியிலே வந்துவிட்டதே’ என்று கண்ணைச் சிமிட்டினான்.
“போடா குரங்கு! எனக்கென்னடா தெரியும் அதெல்லாம்?’ என்று சீறினாள் கௌரி.
மீனி நாயைக் கண்டது போல் எங்கேயோ நடுங்கிப் பதுங்கி விட்டது.
சூரிக்கு அவமானம் தாங்கவில்லை. ‘நான் கௌரிக்கு அண்ணன்’ என்று உணரும்படி செய்யாவிட்டால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்’ என்று சங்கல்பம் செய்து கொண்டான். ஆனால் பதட்டமாய் ஒன்றும் செய்யவில்லை. தந்திரத்தைக் கையாண்டான்.
கௌரி! உன்மேல் எவ்வளவு ஆசை பார்த்தாயா மீனிக்கு! போன ஜன்மத்திலே அது உனக்குத் தங்கை அதுதான் அவ்வளவு கொஞ்சுகிறது. அப்போது நான் ஓர் எலி. அதுதான் உங்கள் இரண்டு பேருக்கும் என் மேல் கோபம் வருகிறது. பழயதெல்லாம் போகட்டும். இனி மேல் எல்லாரும் சேர்த்தியாய் இருப்போம். சரிதானா?’ என்று அழகாய் உருக்கமாய்ப் பேசினான்.
கௌரி வெகுளிதானே! பேச்சு அவள் மனதைக் கரைத்தது. அண்ணாவுக்கு நல்ல புத்தி வந்துவிட்டதென்ற சந்தோஷத்தால் தன் பக்ஷணத்தில் ஒரு பங்கு அண்ணனுக்கு வழங்கினாள்.
மணி பத்தடிக்கவே சூரி காலைப் பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டுத் திரும்பினான். இரண்டாம் தரம் சாப்பிட்டான பிறகு ஒரு அழுக்குக் கடுதாசியை எடுத்து எழுதினான்.
‘சார் அவர்களுக்கு,
எனக்கு ரொம்ப ரொம்பத் தலைவலி. பாட்டி மத்யானமாய்ப் பள்ளிக்கூடம் போகாதே இன்னூட்டாள். எனக்குப் பொட்டில் மொளகு அறச்சுப்போட்டிருக்கு. எனக்கு லீவ் வேணும்.
டி. சூர்யநாராயணமூர்த்தி.
இக்கடிதத்தை அடுத்த வீட்டுப் பையனிடம் கொடுத்தனுப்பி விட்டான். வயிற்றுவலி ; பள்ளிக்கூடம் போக முடியாது என்று பாட்டியிடம் சொல்லிவிட்டு ஒரு பாயை எடுத்துப் போட்டுக் கொண்டு நான்கு தரம் அங்கப் பிரதக்ஷிணம் செய்தான். பாட்டி குழந்தைக்கு ஓமமும் வெற்றிலையும் கொடுத்துவிட்டு, மூக்குக்கண்ணாடியை மாட்டிக் கொண்டு மெய்மறந்து ஞானவாசிஷ்டம் படிக்க ஆரம்பித்து விட்டாள்.
சமயம் வாய்த்ததென்று பாயை விட்டுச் சூரி மெதுவாய் நழுவினான். வீட்டின் இரண்டு கட்டிலும் கௌரியைக் காணோம். திருடர்கள் கொல்லையிலிருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டே குதிருக்குப் பின் வைத்திருந்த சிட்டுப் புள் கழியை முதுகுக்குப் பின்னால் ஒளித்து எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் போனான்.
கௌரி ஒரு காலை நீட்டிக்கொண்டு ஆனந்த சாகரத்தில் மூழ்கியபடி உட்கார்ந்திருந்தாள். எதிரே அம்மானைக் காய்கள் கிடந்தன. மீனி அவைகளைக் கடித்துக் கொண்டிருந்தது. சூரிக்கு மீனியைக் கொல்ல வேண்டுமென்ற எண்ணமல்ல. பள்ளிக்கூடத்து வாத்தியார் ரூல் கழியால் லேசாகத் தலையில் தட்டுகிறாரே அதைப்போல் மீனிக்கு இரண்டு தட்டுப் போட்டால் அது வழிக்குவந்து விடும் என்ற யோசனை; மெதுவாய் கௌரிக்குத் தெரியாமல் அவளுக்குப்பின் போய் நின்று, ஓர் அடி போட்டான். அது இவ்வளவு பலமாய் விழும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அடிப்பதற்கு முந்தி கெளரி பார்த்து விடப் போகிறாளே என்ற பயத்தாலேயே அடி அவனை யறியாமலே பலமாய் விழுந்துவிட்டது.
மீனி பிரமாதமாய் அழுதவண்ணம் ஒடிந்துபோன இடுப்பை இழுத்துக்கொண்டு ஒரு புதருக்குள் மறைந்தது.
சூரிக்குக் குலை நடுங்கிற்று. அதைப் பொய்க் கேள்வியால் மறைக்கப் பார்த்தான். ‘ஏண்டி கௌரி! நான் விளையாட்டுக்குத் தானே மெதுவாய்த் தட்டினேன். உன்னைப் போலவே உன் பூனையும் மாமாலம் பண்ணுகிறதே.’
கௌரி பதில் சொல்லவில்லை. முகம் கடுகு போலாகி விட்டது. பூனைகிட்டப் போனாள் தடவிக் கொடுப்பதற்காக. மீனி பழய மீனியாகவே இல்லை. நல்லபாம்பு போல் புதருக்குள்ளிருந்தபடியே சீறிற்று. ‘மீனி! மீனி!! நான் கௌரிதானே? ஒன்னோடே சேத்திதானே. கோவிச் சுக்கறயே? கொலைகாரன் சூரி இன்னா அடிச்சான்’ என்று அழுகையுடன் கெஞ்சினாள். மீனி புஸ் புஸ் என்று கீறியதுமல்லாமல் கௌரியின் கைகளைப் பிறாண்டிவிட்டது. அவ்வளவு துன்பம் போலும்! கௌரிக்குப் பிறாண்டினது கூடப் பெரிதாய்த் தோன்றவில்லை. தன்னையும் பார்த்து மீனி நடுங்கலாச்சே என்ற துக்கம். துக்கத்தால் அழுகை பலத்தது; தாரை தாரையாய்க் கண்களில் நீர் வடிந்தது.
கௌரி அழுவதைப் பார்த்த சூரிக்கு என்றும் அறியாதவாறு கண்ணீர் ததும்பிற்று. அண்ணனும் தங்கையும் ஒருவரைப் பார்த்து ஒருவர் தேம்பித் தேம்பி அழுதார்கள். அழுகை ஓய்ந்ததும் சூரி போய் மீனிக்கு வைத்தியம் செய்ய முயன்றான். பிரயோஜனப்படவில்லை. பிறகு இருவரும் கைகோத்துக்கொண்டு உள்ளே போய் விட்டார்கள்.
இரவு வந்தது. கிழவி கௌரியைப் பார்த்து ‘எங்கே என் பிரதிவாதி உன் மீனி?’ என்றாள். கௌரி கண்களில் வரும் ஜலத்தைக் கசக்கிக்கொண்டு, போ பாட்டி, உனக்கு வேறே வேலையில்லையா?’ என்றாள்.
அன்றிரவு பத்துமணிக்கு மேல் மழை பிடித்துக் கொண்டது. ஒரே பாயில் படுத்துக் கொண்டிருந்த சூரியும் கௌரியும் மீனியை உத்தேசித்து மழையைத் திரும்பிப் போகும்படி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
மறுநாள் அதிகாலையில் கரீச்சான் குருவியும், சேவலும், பச்சைக் குழந்தைகளும் எழுந்திருக்கும் நேரத்தில் இருவரும் எழுந்திருந்து கொல்லைப் புதரில் போய்ப் பார்த்தார்கள். பூனை கண்ணில் படவில்லை. எங்கேணும் போய் இருக்கும் என்று திருப்தியடைந்தார்கள்.
அந்திப்பொழுது பலமாய்க் காற்று கிளம்பிவிட்டது. மரங்களெல்லாம் பேயாடின. தெருக்களில் தென்னை மட்டையும் உதிர்ந்த இலைகளும் விழுந்தன. இலைச்சருகுகள் சுழன்றன. வடகிழக்கிலிருந்து சமுத்திரமே புரண்டு வருவது போல் கருமேகக் கூட்டங்கள் வானில் வந்து நிரம்பின. ஓஹோ, மழைகாலத் துவக்கம்!
பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவந்த சூரிக்கு ஒரு குடைச்சல், சந்தேகம்- ஒருவேளை தாங்கள் காலை இருட்டில் பூனையைச் சரியாகத் தேடவில்லையோவென்று. அப்படி இருந்து விட்டால் இரண்டாவது நாளும் மீனி மழையில் நனைந்து விடுமே என்று நினைத்து கௌரியையும் அழைத்துக் கொண்டு கொல்லைப்புறம் போனான்.
காலையில் பழய பத்திரிகையோ இலைச்சருகோ என்று அலக்ஷியம் செய்தது இப்பொழுது மீனியென்று தெரிந்தது.குழந்தைகள் நெஞ்சம் இளகி நீராகிவிட்டது. பரபரப்பாய் இருவரும் உள்ளே சென்று ஆளுக்கொரு பிடி நெய்யும் சாதமுமாய்க் கொண்டு வந்து மீனியின் முன் வைத்தார்கள். அது ஆவலின்றிக் கொஞ்சம் தின்றது. அன்றாவது மழையில் நனையாமல் உள்ளே இருக்கட்டும் என்று அவர்கள் மீனியைப் பிடிக்க முயன்றும் பயன் படவில்லை. வலி பொறுக்க மாட்டாமல் இருவர் கையிலும் கீறி ரத்தக் காயம் அடித்துவிட்டது. கௌரி கண் கொட்டாமல் சூரியைப் பார்த்தாள். அவன் தலைகவிழ்ந்து கால் கட்டை விரலால் மண்ணைத் தோண்டினான். மழை வந்ததும் குழந்தைகள் உள்ளே போய்விட்டார்கள்.
அன்றுமுதல் எட்டுத்திக்கும் கரைந்துவிடும் படியாக மழை பொழிந்தது. ஜலப்பிரளயம். வெளியே தலைநீட்ட முடியாது. அப்படியும் குழந்தைகள் ஒவ்வொரு தினமும் புதரடியில் மீனிக்குக் கொண்டு போய் ஏதேனும் ஆகாரம் வைப்பார்கள். மூன்றாவது நாள் போன பொழுது மீனி விறைத்துக் கிடந்தது. பாவம், இருகுழந்தைகளும் அதைப்பார்த்து விம்மி விம்மி அழுதார்கள். அவர்களுக்குத் தேறுதல் சொல்லிய கிழவியின் வார்த்தைகள் அவ்வளவும் புதுக்கோட்டை அம்மன் காசு கூடப் பெற வில்லை.



