

குமரிக்கோட்டம்
கா. ந. அண்ணாதுரை
காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே, நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்து விடுகின்றன.
‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம்.
இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை, ரோஷம் நிரம்பிய அண்ணன், இவர்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் காணலாம். பெயர்கள், குழந்தைவேலர் என்றிராது; குமரி என்று இருக்காது. ஆனால், இவ்விதமான நிலைமையிலுள்ளவர் களை, நாட்டிலே காண முடியும்.
மகன் தலைகால் தெரியாமல் ஆடுகிறான் , ஜாதி ஆச்சாரத்தைக் கெடுக்கிறான் என்று சீறுகிறார் தந்தை. அவரால், காதல், ஜாதிக் கட்டுப்பாடுகளை மீறக்கூடிய சக்தி என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடிய வில்லை மகன் அழுதபோதும் சரி, அவன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகுங்கூட நெடுநாட்கள் வரை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை – ஒரு களங்க மற்ற கன்னியின் புன்னகையைக் காணும் நாள்வரை.
அந்த நாளோ, அவருக்கு அபூர்வமான ஆசிரியன் கிடைத்துவிட்டான். பல திங்கள் படித்துப் பெற வேண்டிய பாடத்தை அவர், ஒரே ஒரு பார்வையின் மூலம் பெற்றார். மகனது மனத்தின் தன்மை அவருக்குப் புரிந்தது. ஆனால் தம் மனத்திலே கிளம்பிய ‘காதலை’ என்ன செய்வது என்று புரியாமல் சில நாட்கள் இருந்தார். அவர் மட்டுமா – யாருந்தானே ! பிறகு அதற்கும் வழி கண்டார். ஆனால் குறுக்குவழி !
அந்தக் குறுக்குவழி , பெண்களை விபசாரப் பகுதியில் தள்ளும், பயங்கரப் பாதை. குமரிக்கு, அந்த வழியில் நடக்கும் நுழைவுச் சீட்டுதான் கிடைத்தது. ஆனால், அவளுடைய அண்ணனும், இலட்சிய வீரனான் , வைதீகரின் மகனும் அவளைக் காப்பாற்றினர். திருப்பணி புரியக் கிளம்பிய வைதீகர், பிறகு நேர்வழி நடந்தார், குமரியுடன்.
அவர்களைப் பற்றிய கதை இது. அவர்கள் வேறு யாருமல்ல, இன்றைய சமுதாய அமைப்பு முறையிலே நாம் காணக்கூடிய. ஒரு சராசரிக் குடும்பம். இனி அவர் களைச் சந்தியுங்கள்.
சி. என். அண்ணாதுரை
குமரிக்கோட்டம்
கா. ந. அண்ணாதுரை
1
“ஸ்ரீமான் குழந்தைவேல் செட்டியார்வாள், மகா உத்தமர். அவருடைய திவ்ய குணத்தைத் தேசம் பூராவும் போற்றுகிறது. இப்படிப்பட்டவா, ஒரு சிலராவது இருப்பதாலேதான், காலம் கலிகாலமா இருந்தாலும், மழை பெய்யறது, பூலோகத்தைச் சமுத்திராதி உற்பாதங்களால் அழிக்க முடியவில்லை” என்று கூறலாம்.
“உலகமே தலைகீழாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே, பெரியவாளுடைய காரியங்களை நாசம் செய்யறதை, பிரமாதமான சீர்திருத்தம்னு பேசிண்டிருக்கு, ஒரு ராட்சசக் கூட்டம். அப்படிப் பட்டவாளெல்லாம், நம்ம செட்டியாரின் சர்வ பரித தியாகத்தைக் கேட்டாளானா, நடுநடுங்கிப் போவாள். லோகத்திலே , எல்லா விதமான பாசத்தையும் ஒருவர்
அடக்கலாம். ஆனா, இந்தப் புத்ரபாசம் இருக்கே, அதனைச் சாமான்யமா அடக்க முடியாது. சக்கரவர்த்தி தசரதனாலே கூடப் புத்ரசோகத்தைத் தாங்கமுடியவில்லை என்பது லோகப் பிரசித்தமான விஷயம். நம்ம செட்டியார், தமது குமாரன், ஒரே மகன் , ஆச்சார அனுஷ்டானாதிகளுக்கு விரோதமான காரியம் செய்யத் துணிந்தபோது, எவ்வளவோ இதோபதேசம் செய்து பார்த்தும், அவன் பிடிவாதமாக இருக்கக் கண்டு என்ன செய்தார்? மகன் என்ற பாசத்தைக் கூட , உதறித் தள்ளிவிட்டார். அவ்விதமான தவச் சிரேஷ்டராக்கும், நமது செட்டியார்வாள். தமது ஒரே புதரன் ஏகோ கால வித்தியாசத்தாலும். கெட்டவா சகவாசத்தினாலும், பொதுவாகவே லோகத்திலே இப்போது தலைவிரித்து ஆடுகிற அதர்மக் கோட்பாடுகளை நம்பிய தனால், உத்தமமான வைசிய பரம்பரையிலே உதித்ததையும் மறந்து, கேவலமான காமாதி பாசத்திற்குப் பலியாகி , குலதர்மத்தைக் கைவிட்டு, வேறுகுல ஸ்திரீயை மணம் செய்து கொள்ள வேண்டுமென்று, பிடிவாதம் செய்தது கண்டு, சோகம் கொண்டு, தம் மகனுக்குச் சாஸ்திராதிகளைச் சாங்கோபாங்கமாக எடுத்துத் கூறித் தடுத்துப்பார்த்தும், முடியாததால், பெரியவா காலந்தொட்டு இருந்து வரும் புராதன ஏற்பாட்டுக்கு விரோதமாக நடந்து கொள்வதைக் கைவிட்டு விடாத பட்சத்தில், இனித் தம் கிருஹத்தில் காலடி எடுத்து வைக்கவே கூடாது என்று கூறிவிட்டார். உன் முகாலோபனமும் செய்யப்போவதில்லை என்று சொல்லிவிட்டார். அவனும் வீட்டைவிட்டுப் போய்விட்டான்.
புத்ரசோகம் மகா கொடுமை அதனை நமது செட்டியார் தாங்கிக்கொண்டது நமக்கெல்லாம் , ஆச்சிரியமாக இருக்கு. ஆனா, ராஜரிஷிகளின் மனம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். அவருடைய தர்ம மார்க்கத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். அவருடைய புகழ் பாரதவர்ஷத்துக்கே ஒரு புகழ் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட தன்யரை, வரவேற்கும் பாக்யம் நமக்குக் கிடைத்தது பற்றி நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். பகவான், கீதையில் சுதர்மத்தை நிலைநாட்டத் தமது சொந்த மகனையும் விட்டுப் பிரியத் துணிந்த, மகானைத் தரிசித்தும், அவருடைய மன உறுதியைப் பாராட்டியும், மகாஜனங்கள் சீரும் சிறப்பும் பெறுவார்கள். இவருடைய புத்ரனும், கெட்ட கிரஹம் மாறி நல்லகிரஹம் உதித்ததும், குலத்தைக் கெடுத்து, உத்தமமான தகப்பனாரின் மனத்தைப் புண்படுத்திய பாபத்தை எண்ணி வருத்தமடைந்து பிறகு தானாக வீடு வந்து சேர்ந்து, தகப்பனார் காலில் விழுந்து சேவிக்கத்தான் போகிறான். சத்யம் ஜெயிக்கும் என்பது சாமான்யாளுடைய வாசகமோ ! ஆகவே உத்த மோத்தமரான சீமான் செட்டியாரை, நான் ஆசீர்வதித்து, இந்த ஊர் சத்சங்கத்தார் சார்பில், அவருக்கு இந்த மாலையைச் சூட்டுகிறேன். ஜே, சீத்தாராம்! ஜே, ஜே!
ரோஜாமாலை, சாதாரணமாகக் கோயில்களில் மூலவருக்குப் போடுவதுபோல, மிகப் பெரிதாகத்தான் இருந்தது. நெற்றியிலே விபூதி தரித்துக்கொண்டு மார்பிலே நூலுடன், விலையுயர்ந்த பட்டுக்கரை வேட்டி உத்தரியம் அணிந்து கொண்டு, அந்த ரோஜா மாலையுடன் நின்று, சபையோரை நோக்கிக் குழந்தை வேலச் செட்டியார் கும்பிட்டுக்கொண்டு நின்றபோது, நாயன் மார்போலவே இருந்தது. தாழையூர் சத்சங்கம் சனாதன மார்க்கத்தைப் பாதுகாக்க ஏற்பட்டது. அந்தச் சங்கத் தார் வெளியூரிலிருந்து வரவழைத்திருந்த வக்கீல் வாசு தேவசர்மா, உருக்கமான அந்தப் பிரசங்கத்தை செய்து விட்டுரோஜாமாலையைச் செட்டியாருக்குப் போட்டதும், அவர் அடைந்த ஆனந்தம், இவ்வளவு என்று அளவிட முடியாது. வார்த்தைகள் சந்தோஷத்தால், சரியாக வெளி வரவில்லை .
“பிராமணோத்தமர்களே ! பிரம்ம, ஷத்திரிய , வைசிய, சூத்ர , என்று பெரியவர்கள் ஏற்பாடு செய்திருக் கும் ஜாதி ஆச்சார முறைப்படி, அடியேன்வைசிய குலம். இந்தப் பாபியின் மகனாகப் பிறந்தவன், அந்த ஆச்சாரத்தைக் கெடுக்கத் துணிந்தான். பிரபஞ்சத்துக்கே நாசம் சம்பவிக்கக் கூடியது அதர்மம். அந்த அதர்மத்தைச் செய்ய, ஒரு மகன் எனக்குப் பிறந்தான்; நான் என்ன பாபம் செய்தேனோ, பூர்வத்தில். அவள் என்ன ஜாதியோ, என்ன குலமோ, ஒரு பெண், அவளைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்றான் , தடுத்தேன்; எவ்வளவோ புத்தி சொல்லிப் பார்த்தேன், கேட்கவில்லை. கடைசியில், இந்த பாபக் கிருத்யத்துக்கு உடந்தையாக இருக்கும் மகாபாபம் நமக்குச் சம்பவிக்கக் கூடாது என்று தோன்றிற்று. நமது சர்மா அவர்கள் சொன்னது சத்யவாக்கு. எனக்குப் புத்ர சோகம் தாங்கமுடியவில்லை. ஆனாலும், மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, அவனை வீட்டை விட்டு போய் விடச் சொல்லி விட்டேன். இனி அவன் எக்கேடு கெட்டாலும், உலகம் என்னைத் தூற்றாது. அவனுடைய முகாலோபனமும் செய்யப் போவதில்லை என்று சங்கற்பம் செய்து கொண்டது மட்டுமல்ல, என் சொத்திலே ஒரு பைசாகூட அந்த நீசன் அடையப் போவதில்லை.
ஏதோ பகவத் சங்கற்பத்தால், நான் கொஞ்சம் சம்பத்து அடைந்திருக்கிறேன். அதை இனிச் சத் காரியங்களுக்கு உபயோகித்து, போகிற கதிக்கு நல்லது தேடிக்கொள்வது என்று முடிவு செய்து விட்டேன். என் சொத்து, சுயார்ஜிதம். ஆகவே அந்தத் துஷ்டன், என்னிடம் வரமுடியாது. என்னைப் பிரமாதமாகப் புகழ்ந்த சத்சங்கத்தாருக்கு என் நமஸ்காரத்தைக் கூறிக்கொண்டு, இனி உங்களுடைய ஆசீர்வாத பலத்தால் அடியேன் தன்யனாவேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன். சிலாக்யமான சேவை செய்து வரும் சத்சங்கத்தாருக்கு என் சக்தியானுசாரம். ஏதாகிலும் தர வேண்டும் என்று ஆசை. ஆகவே ஆயிரம் ரூபாய் கொண்ட இந்தப் பணமுடிப்பை சத் சங்கத்தாருக்குத் தருகிறேன்’ என்று கூறி, பணமுடிப்பையும் தந்தார். அந்தப் பரம பாகவதரை, மறுபடி ஒருமுறை ஆசீர்வதித்தார் வாசுதேவ சர்மா. அன்று தாழையூர் மகாஜனங்கள் செட்டியாரைப் புகழ்ந்தனர்; சத்சங்கத்திலிருந்து அவர் மேளதாளத்துடன் ஊர்வலமாக வீடுவரை அழைத்துச் செல்லப்பட்டார்.
தாழையூர் சத் சங்கத்தின் விசேஷச் கூட்டம் அன்று விமரிசையாக நடைபெற்றது. உள்ளூர் வெளியூர்ப் பிராமணத் தலைவர்களும், சனாதனிகளான மற்ற வகுப்புப் பெரியவர்களும், இலட்சாதிகாரியும் வைதிகப் பிரியருமான ஸ்ரீமான் குழந்தைவேல் செட்டியாரைப் பாராட்டக் கூடினர். செட்டியார் மீது சத்சங்கத்தின் ஆசீர்வாதம் விழுந்ததற்குக் காரணம், அவர் சனாதனக் கோட்பாட்டைச் செயல் முறையிலே நிலை நாட்டத் தம் ஒரே மகனை வீட்டை விட்டு வெளியேற்றியது தான். மகன் பரமசாது, ஆனால் சீர்திருத்தவாதி. வேறொர் குலப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்றான் ; செட்டியார் தடுத்தார், மகன் கேட்க வில்லை ; ஜாதி ஆசாரத்தைக் கெடுக்கும் பிள்ளை என் வீட்டுக்குத் தேவையில்லை என்று துரத்திவிட்டார்.
தாழையூர்.
அன்புள்ள அம்சாவுக்கு,
உனக்குக்கடிதம் எழுதவேண்டும் என்று பலநாட்களாக யோசித்து யோசித்து, கடைசியில் இன்று எழுத உட்கார்ந்தேன். “உனக்காவது கலியாணம் நடக்கப் போவதாவது. உன்னுடைய கொள்கைகளைக் கட்டிக் கொண்டு நீ அழவேண்டியவளே தவிர, ஊரிலே நாலு பேரைப் போலக் காலா காலத்தில் கலியாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கப் போவதில்லை. நீ தான், எந்த ஜாதியானாக இருந்தாலும் சரி, காதலித்தவனைத்தான் கலியாணம் செய்து கொள்வது, அதிலேயும். ஐயர் இல்லாமல் செய்துகொள்வது, என்று கூட்டங்களிலே பேசுகிறாயே ! அது எப்படியடி நடக்கும் என்று என்னைக் கேலி செய்தபடி இருப்பாயல்லவா? அடி முட்டாளே ! கேள்! உனக்குக் காதலைப் பற்றிக் கடுகுப் பிரமாணமும் தெரியாது.
இப்போதாவது தெரிந்துகொள், என் சபதம் நிறைவேறிவிட் டது. அடுத்த வெள்ளிக்கிழமை எனக்குக் கலியாணம்! ஐயர் நுழையவே முடியாத இடத்தில், சிங்காரபுரிச் சேரியிலே உள்ள சீர்திருத்தச் சங்கத்திலே கலியாணம்! யார் தெரியுமா? என் மாமனாரைப் பார்த்தால், பக்தையான நீ கீழே விழுந்து விழுந்து கும்பிடுவாய்; அவ்வளவு சிவப்பழமாக இருப்பார். தாழையூர் தனவணிகர் குழந்தைவேல் செட்டியார் என்றால் எந்தக் கோயில், அர்ச்சகரும், “மகா பக்திமானல்லவா” என்று ஸ்தோத் தரிப்பார்கள். அப்படிப்பட்டவர் தவம் செய்து பெற்ற பிள்ளைதாண்டி, என் கணவர் ; பெயர், பழனி!
அவர், என்னை வெற்றி கொள்ள அதிகக் கஷ்டப் படவில்லை. எப்போதாவது ஒரு தடவை, சீர்திருத்தச் சங்கத்துக்கு வருவார் அதிகம் பேசமாட்டார் : மற்றவர்கள் பேசும் போது, மிகக் கவனமாகக் கேட்பார்; அதிலும் நான் பேசும்போது, ஆனந்தம் அவருக்கு. மெள்ள மெள்ள நான் அவரைச் சீர்திருத்தக்கார-ராக்கினேன். ஆரம்பத்தில் அவர் ஜாதிச் சண்டை, குலச் சண்டை கூடாது; வேறு வேறு ஜாதியாக இருந்தாலும், சண்டை சச்சரவு இல்லாமல் வாழவேண்டும் என்று மட்டுமே கூறி வந்தார். நாளாக நாளாக, தீவிர வாதியானார். நான் என் பேச்சினால், அவரை வென்று விட்டேன் : அந்தப் பெருமையும் சந்தோஷமும் எனக்கு ! அவரோ, தம் பார்வையாலேயே, என்னை வென்றுவிட்டார். குழந்தை போன்ற உள்ளம் அவருக்கு. சாதாரணமாகப் பல ஆடவருக்கு உள்ள குறும்புப் பார்வை, குத்தலான பேச்சு இவை கிடையா. “மிஸ்டர் பழனி” என்று நான் தைரியமாக அவரைக் கூப்பிடுவேன். அவரோ நாகவல்லி என்று கூடத் தைரியமாக என்னைக் கூப்பிட மாட்டார். புன்சிரிப்புடன் என் அருகே வருவார். அவ்வளவு சங்கோஜம். ஆனால், அவருடைய காதலைக் கண்கள் நன்றாக எடுத்துக் காட்டியபடி இருந்தன.
துணிந்து ஒரு தினம் கேட்டார், நான் திடுக்கிட்டேன் ; அவர் கேட்டாரே என்பதால் அல்ல. அந்தக் கேள்வி என் மனத்திலே எழுப்பிய களிப்பைக் கண்டு! “நான் என்ன ஜாதி? நீங்கள் சைவச் செட்டிமார் குலம்!” என்று நான் கூறினேன். அவர், நான் அடிக்கடி சங்கத்திலே ஜாதியைக் கண்டித்துப் பேசுவேனே, அந்த வாதங்களை அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அன்று மாலை மணி ஆறு இருக்கும். அம்சா! என்ன இருந்தாலும் இந்த ஆண்களே கொஞ்சம் அவசரக்காரர்கள் தான். பேச்சு நடந்து கொண்டே இருக்கையில் அவர், திடீரென்று என்னை ஆரத்தழுவிக் கொண்டார். எதிர்ப்பவர்களின் வாதங்களைத் தவிடு பொடியாக்கும் திறமை கொண்ட நான், பைத்தியம் போல ‘ஐயோ ! விடுங்கள் ! யாராவது வந்துவிட்டால் !’ என்று குழைந்து கூறினேன். நல்லவேளை , பழனி, என் பேச்சைக் கேட்கவில்லை ! எமது அதரங்கள் ………………… சகஜந்தானடி !
பிறகு அவர் ஒவ்வொரு மாலையும் வர ஆரம்பித்தார். காலையிலே நான் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதெல்லாம் அன்று மாலை அவர் என்ன பேசுவார், என்னென்ன விதமாக விளையாடுவார் என்று நினைத்தபடியே இருப்பேன்.
வங்காளத்துக்குத் தலை நகரம் எது என்று கேட்க வேண்டும்; நானோ கல்கத்தாவுக்குத் தலைநகரம் எது என்று கேட்பேன். என் வகுப்பிலேயே புத்திசாலி வனிதா; அவள் எழுந்திருந்து “கேள்வியே தவறு” என்றாள். எனக்குக் கோபம் பிரமாதமாக வந்தது. பிறகு, என் தவற்றை உணர்ந்து நானே சிரித்துவிட்டேன். சிரித்ததும் எனக்கு அவருடைய கவனம் தான் வந்ததது. ஏன் தெரியுமா? நீ குறும்புக்காரி, உன்னிடம் கூறமுடியாது!
எங்கள் காதல் வளர வளர, அவர் வீட்டிலே சச்சரவு வளர்ந்தது. ஜாதி குல ஆச்சாரத்திலே, ஐயர்மார்கள் தவறிவிட்டதாலேயே காலா காலத்தில் மழை பெய்வதில்லை என்று எண்ணுபவர் என் மாமனார்; அதற்குப் பரிகாரமாக , மற்ற ஜாதியார் தத்தம் ஜாதியாச் சாரத்தைச் சரியாகக் கவனிக்கவேண்டும் என்று கூறுபவர், அப்படிப்பட்ட கைலாய பரம்பரைக்காரர், சிலுவையின் தயவால் கிருஸ்தவச்சியான சேரிப் பெண்ணைத் தம் மகன் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிப்பாரா? வீட்டிலே புயல் அடித்தது. அவர், என் காதலர் தகப்பனார் போடும் கோட்டைத் தாண்டுபவரல்ல. ஆனால் காதல் ராஜ்யத்திலே, என் மாமனாருக்குக் கோடு போடும் அதிகாரம் ஏது? தமக்குச் சம்பந்தமில்லாத இலாக்கா என்பதை அவர் மறந்து விட்டார் அதன் விளைவு என்ன தெரியுமா? தந்தை – மகன் என்ற சம்பந்தமே அறுபட்டுப் போய்விட்டது. அந்தக் கிருஸ்தவச் சிறுக்கியைக் கல்யாணம் செய்து கொள்வதானால் என் முகாலோபனம் செய்யக்கூடாது. இனி நீ என் மகன் அல்ல . நட வீட்டைவிட்டு,’ என்று கூறிவிட்டாராம்.
பழனி எங்கள் கிராமத்துக்கே வந்து விட்டார். இரண்டு மைல்தான் இருக்கும் தாழையூருக்கும் சிங்காரபுரிக்கும். ஆனால் இரண்டு மைலை அவர் தாண்டும் போது, ஒரு உலகத்தை விட்டு மற்றோர் உலகுக்கே வந்து சேர்ந்தார் என்றுதான் பொருள். அடி அம்சா ! அந்த உலகிலே, என் காதலருக்கு மாளிகை இருக்கிறது. வைரக்கடுக்கண் இருக்கிறது. தங்க அரைஞாண் இருக்கிறது, இரும்புப் பெட்டியிலே இலட்சக் கணக்கிலே கொடுக்கல் வாங்கல் பட்டி இருக்கிறது, இரட்டைக் குதிரைச்சாரட்டும். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் ஆட்களும் உள்ளனர். இரண்டே மைல் தாண்டி இங்கே வந்தார்; என்ன இருக்கிறது? என்னுடைய பழைய வீடு ! தோட்டத்திலே பூசினிக்கொடி ! தெருக்கோடியில் ஒரு வெறி நாய், இவ்வளவு தான்!
‘கண்ணாளா! என் பொருட்டு ஏனோ இந்தக் கஷ்டம்?’ என்று நான் கனிவுடன் கேட்டேன். அவரோ, ‘ஒருவருடன் வாதாடிப் பாதி உயிர்போயிற்று, இனி உன்னிடமும் வாதாட வேண்டுமா?’ என்று கேட்டார். எவ்வளவோ செல்வத்தை என் பொருட்டுத் தியாகம் செய்த அந்தத் தீரரை நான் என்ன போற்றினாலும் தகும். என் அன்புக்கு ஈடாகாது அந்த ஐஸ்வரியம் என்றார்; என் கண்ணொளி முன்வைரம் என்ன செய்யும் என்று கேட்டார்; உன் ஒரு புன் சிரிப்புரிக்கு ஈடோ, என் தகப்பனாரின் பெட்டியிலே கிடக்கும் பவுன்கள் என்றார்; ஒவ்வொரு வாசகத் துக்கும் முத்தமே முற்றுப்புள்ளி! காதலர் இலக்கணம் அலாதி அல்லவா ! உன்னிடம் சொல்கிறேனே நான். நீயோ, மரக்கட்டை !
கடைசியில், சிங்காரபுரியிலேயே அடுத்த வெள்ளிக் கிழமை கல்யாணம் என்று நிச்சயமாகி விட்டது. யாராரோ தடுத்துப் பார்த்தார்கள் அவரை. முடியவில்லை. தாழையூர் கொதிக்கிறது. என் மாமனார் தற்கொலை செய்து கொள்ளக் கூட நினைத்தாராம் : ஆனால் ஏதோ ஒரு சிவபுராணத்திலே, ஆண்டவன் கொடுத்த உயிரை அவராகப் பார்த்து அழைக்கு முன்னம் போக்கிக் கொள்வது மகாபாபம் என்று எழுதியிருக்கிறதாம். இல்லையானால் இந்நேரம் எனக்கு மாமனாரும் இருந்திருக்க மாட்டார். மாமி காலமாகி ஏறக்குறைய 5 வருஷங்களாகின்றனவாம். பழனிக்கு வயது 22: அதாவது என்னைவிட 3 வயது பெரியவர் (என் வயது 19 என்று அவரிடம் சொல்லி வைத்திருக்கிறேன்!). வெள்ளிக்கிழமை நீ அவசியம் வரவேண்டும். அதற் காகத்தான் இவ்வளவு நீண்ட கடிதம். இன்னும் கூட ஏதாவது எழுதலாமா என்று தோன்றுகிறது. முடியாது! அதோ அவர்!
உன் அன்புள்ள, நாகவல்லி.
“என்னைச் சித்திரவதை செய்வது, அதற்குப் பெயர், காதல் – ஏண்டா தம்பீ! காதல் தானே ! பெற்றெடுத்த தகப்பனைக்கூட எதிர்க்கச் சொல்கிறதடா அந்தக் காதல்! ஊரிலே, உலகத்திலே, எவனுக்கும் ஏற்பட்டதில்லை காதல் ; உனக்குத்தானே முதலிலே உதித்தது அந்தக் காதல், என் உயிருக்கு உலைவைக்க.”
“நான் தங்கள் வார்த்தையை எப்போதாவது மீறி நடந்ததுண்டா ?”
“மீறி நடப்பவன் மகனாவானா?”
“இது எனக்கு உயிர்ப்பிரச்னையப்பா!”
“படித்ததை உளறுகிறாயா? இல்லை அந்தக் கள்ளி கற்றுக்கொடுத்த பாடத்தை ஒப்புவிக்கிறாயா? எனக்குக் கூடத் தெரியுமடா, அழுவதற்கு ! தலைதலை என்று அடித்துக்கொண்டு, ஒரு திருஓட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு எங்காவது தேசாந்திரம் போகிறேன். நீ திருப்தியாக வாழ்ந்து கொண்டிரு அந்தத் திருட்டுச் சிறுக்கியுடன். ஈஸ்வரா ! எனக்கு இப்படி ஒரு மகன் பிறக்க வேணுமா, மானம் போகிறதே ! தாழையூரிலே தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லையே. அடே ! நீ அவளைக் கலியாணம் செய்துகொள்ளத்தான் வேண் டுமா? ஒரே பேச்சு, சொல்லிவிடு ; என் சொல்லைக் கேட்கப்போகிறாயா, இல்லை, அவளைத்தான் கலியாணம் செய்தாக வேண்டும் என்று கூறுகிறாயா? இரண்டில் ஒன்று சொல்லிவிடு .”
“நான், நாகவல்லியைத் தவிர வேறோர் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள முடியாதப்பா.”
“செய்து கொண்டால் அவளைக் கலியாணம் செய்து கொள்வது, இல்லையானால் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடப் போகிறாயா? சரி! நீ பிரம்மச்சாரியாகவே இருந்து தொலை. உனக்கே எப்போது பித்தம் குறைகிறதோ, அப்போது பார்த்துக்கொள்வோம்……..”
“அப்பா ! நான் நாகவல்லிக்கு வாக்களித்துவிட் டேன்.”
“தகப்பன் உயிரை வாட்டுகிறேன் என்றா”
“இன்னும் ஒரு வாரத்தில் அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக.”
“பழனி ! நட, இந்த வீட்டை விட்டு; என்னை, இதுவரை, சம்மதம் தரவேண்டு மென்று ஏன் கேட்டுக் கொண்டிருந்தாய்? அவளுக்கு வாக்குக் கொடுத்த போது, உன் புத்தி எங்கே போயிற்று? நான் ஒருவன் இருக்கிறேன் என்ற நினைப்புக்கூட இல்லை உனக்கு. இனி நீ என் மகன் அல்ல, நான் உனக்குத் தகப்பனல்ல. அடே பாவி! துரோகி ! முத்தைக் கெடுக்கப் பிறந்த கோடாரிக்காம்பே! என்னை ஏன் உயிருடன் வதைக்கிறாய்? நான் தூங்கும் போது பெரிய பாராங்கல்லை என் தலைமீது போட்டுச் சாகடித்துவிடக் கூடாதா? என் சாப்பாட்டிலே பாஷாணத்தைக் கலந்துவிடக் கூடாதா? என் பிணம் வெந்த பிறகு நீ அந்தக் கிருஸ்தவச்சியை மணம் செய்து கொள்ளடா, மகராஜனாக!
“அப்பா ! நான் இதுவரை தங்களிடம் இப்படிப்பட்ட கடுமையான பேச்சைக் கேட்டதில்லையே!”
” அடே ! பேசுவது நீ அல்ல! போதையிலே பேசுகிறாய். நாகத்தைத் தீண்டியதால் மோகம் என்ற போதை உன் தலைக்கு ஏறிவிட்டது.”
“மோகமல்ல அப்பா ! காதல் ! உண்மைக் காதல்!”
“நாடகமா ஆடுகிறாய்?” “என் உயிர் ஊசலாடுகிறதப்பா ?”
இப்படிப்பட்ட கடுமையான உரையாடலுக்குப் பிறகுதான், பழனி, வீட்டை விட்டு வெளிக்கிளம்பினான், தகப்பனாரையும் அவருடைய தனத்தையும் துறந்து. நாகவல்லி, தன் சினேகிதை அம்சாவுக்கு, தனக்கு ஏற்பட்ட காதல் வெற்றியைப் பற்றிக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது, பழனி நைடதம் படித்துக் கொண்டிருந்தான். நளனும் தமயந்தியும் காதல் விளையாட்டிலே ஈடுபட்ட கட்டத்தைப் படித்த போது, அவனுக்குச் செய்யுளின் சுவையை நாகவல்லிக்குக் கூறவேண்டுமென்று எண்ணம் பிறந்தது. உள்ளே நுழைந்தான், கடிதத்தை எடுத்தான், படித்தான், களித்தான், பரிசும் தந்தான். வழக்கமான பரிசுதான்! அவனிடம் வேறு என்ன உண்டு தர? குழந்தைவேல் செட்டியார் கலியாணத்துக்குச் சம்மதித்திருந்தால், வைரமாலை என்ன, விதவிதமான கைவளையல்கள் என்ன, என்னென்னமோ தந்திருப்பான். இப்போது தரக்கூடிய தெல்லாம் ! மணப் பெண்ணுக்கு மாப்பிள்ளை முத்தாரமின்றி வேறோர் ஆபரணம் தரவில்லை; அது போதும் என்றாள் அந்தச் சாசி !! வயோதிகக் கணவன் தரும் வைரமாலை, இதற்கு எந்த விதத்திலே ஈடு?
நாகவல்லியின் கடிதம் முடிகிற நேரத்திலேதான், ஒரே மகளைக்கூட வீட்டைவிட்டு வெளியேற்றிவிடும் அளவுக்கு வைராக்கியம் கொண்ட சனாதனச் சீலர் குழந்தைவேல் செட்டியாரைத் தாழையூர் சத் சங்கம் பாராட்டிக் கொண்டிருந்தது. ஊர்வலமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருடைய எதிரிலே, நாகவல்லியும் பழனியும் கைகோத்துக் கொண்டு நின்று கேலியாகச் சிரிப்பது போலத் தோன்றிற்று. திடசித்தத்துடன், மகனை வீட்டை விட்டுத் துரத்திவிட்டாரே தவிர, மனம் கொந்தளித்தபடி இருந்தது; அவரையும் அறியாது அழுதார். ஆனந்த பாஷ்பம் என்றனர் அன்பர்கள் !
“நாடகமா ஆடுகிறாய்?” “என் உயிர் ஊசலாடுகிறதப்பா ?”
வெள்ளிக்கிழமை, பழனி – நாகவல்லி வாழ்க்கை ஒப்பந்தம் பத்தே ரூபாய்ச் செலவில் விமரிசையாக நடை பெற்றது. ஜில்லா ஜட்ஜு ஜமதக்னி தலைமை வகித்தார்.
பச்சை, சிகப்பு, ஊதா, நீலம் முதலிய பல வர்ணங்களிலே பூ உதிர்வது போன்ற வாண வேடிக்கை ! அதிர் வேட்டு, தாழையூரையே ஆட்டி விடும் அளவுக்கு. அழகான தங்கநாயனத்தை அம்மையப்பனூர் ஆறுமுகம் பிள்ளை, வைரமோதிரங்கள் பூண்ட கரத்திலே ஏந்திக் கொண்டு, தம்பிரான் கொடுத்த தகட்டியை, ஜெமீன்தார் ஜகவீரர் பரிசாகத் தந்த வெண்பட்டின் மீது அழகாகக் கட்டி விட்டு, ரசிகர்களைக் கண்டு ரசித்து நிற்க, துந்துபிகான துரைசாமிப்பிள்ளை, “விட்டேனா பார்” என்ற வீரக் கோலத்துடன் தவுலை வெளுத்துக் கொண்டிருந்தார், பவமறுத்தீஸ்வரர் பிரம்மோத்சவத்தின் ஆறாம் திரு விழாவன்று. அன்று, உபயம், ஒரே மகனையும் துறந்து விடத் துணிந்த உத்தமர் குழந்தைவேல் செட்டியார் உடையது. அன்று மட்டுமல்ல, செட்டியார் ஒவ்வோர் நாளும் அது போன்ற ஏதாவதோர் பகவத் சேவா” காரியத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணமும், பகவானுடைய சேவையினால் மளமளவென்று பெட்டியை விட்டுக் கிளம்பியபடி இருந்தது. ஊரெங்கும் செட்டியாரின் தர்மகுணம், பகவத்சேவை இவை பற்றியே பேச்சு . “இருந்தால் அப்படி இருக்க வேண்டும் மகனென்று கூடக் கவனிக்கவில்லை. ஜாதியைக் கெடுக்கத் துணிந்தான் பழனி, போ வெளியே என்று கூறி விட்டார். இருக்கிற சொத்து அவ்வளவும் இனிப் பகவானுக்குத்தான் என்று சங்கல்பம் செய்து கொண்டார் ” என ஊர் புகழ்ந்தது. பழனியின் நிலைமையோ!
“உன் தகப்பனார் பெரிய வைதிகப்பிச்சு அல்லவா? அவரைத் திருத்த முடியாத நீ ஊரைத் திருத்த வந்து விட்டாயே, அது சரியா?”
“தகப்பனார் பேச்சைக் கேட்காதவனுக்குத் தறுதலை என்று பெயர் உண்டல்லவா? நீ ஏன் பழனி என்று பெயர் வைத்துக் கொண்டாய்? தறுதலை என்ற பெயர்தானே பொருத்தம்?”
இப்படிப்பட்ட கேள்விகள்; அவற்றுக்கு எவ்வளவு சாந்தமான முறையிலே பதில் கூறினாலும், கலவரம், கல்லடி, இவைதான் பழனி பெற்றுவந்த பரிசுகள். பல இலட்சத்தைக் கால் தூசுக்குச் சமானமாகக் கருதித் தன் கொள்கைக்காக, காதலுக்காக, தியாகம் செய்த அந்தத் தீரன், சீர்த்திருத்தப் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊரூராகச் சென்று, சொற்பொழிவு செய்வதை மேற்கொண்டான், ஒரு வேலைக்கும் போகாமல், அவனுக்கு “மகாஜனங்கள்” தந்த பரிசுகள் இவை. காதலின் மேம்பாட்டை உணர் மறுத்துக் கலியாணம் என்பது, கட்டளையாக இருக்கக் கூடாது, நிர்ப்பந்தமாக இருத்தலாகாது, பரஸ்பர அன்பும் சம்மதமும் இருக்கவேண்டும், காதலர் கருத்து ஒருமித்து வாழ்வதே இன்பம் என்பன போன்ற கொள்கைகளை ஏற்க மறுத்து, ஜாதிப் பீடையை ஆண்டவன் ஏற்பாடு என்று விடாப் பிடியாகக் கொண்டு, ஒரே மகனை உலகில் பராரியாக்கிவிட்டு, பகவத் கைங்கர்யம் என்ற பெயரால் சொத்தை விரயம் ஆக்கிக் கொண்டிருந்த குழந்தைவேல் செட்டியார், “தர்மிஷ்டர், சனாதன சீலர், பக்திமான்,” என்று கொண்டாடப்பட்டார். கோயில் மாலை அவருடைய மார்பில் ! ஊர்க் கோடியில் உலவும் உலுத்தர்கள் வீசும் கற்கள், பழனியின் மண்டையில் ! பழனி மனம் உடையவில்லை நாகவல்லியின் அன்பு அவனுக்கு, எந்தக் கஷ்டத்தையும் விநாடியிலே போக்கிவிடும் அபூர்வ மருந்தாக இருந்தது.
“இன்று எத்தனை கற்கள்?” என்று தான் வேடிக் கையாகக் கேட்பாள் நாகவல்லி.
“பெரிய கூட்டம். வாலிபர்கள் ஏராளம். நாகு! பெண்கள் கூட வந்திருந்தார்கள் ” என்று கூட்டத்தின் சிறப்பைக் கூறுவான் பழனி. இவ்விதமாக வாழ்க்கை ஒரே ஊரில் அல்ல ! நாகவல்லி ஆறு மாதத்துக்குள் ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு மாற்றப்படுவது வழக்க மாகி விட்டது. அவள் மேல் குற்றம் கண்டுபிடித்ததால் அல்ல கணவன் சூனாமானாவாமே என்ற காரணத்தால், கஷ்ட ஜீவனந்தான். ஆனால், மற்றக் குடும்பங்கள், வீடு வாங்கினோம், நிலம் வாங்கினோம், இரட்டைப் பட்டைச் செயின் செய்தோம், இரண்டு படி கறக்கும் நெல்லூர்ப் பசு வாங்கினோம் என்று பெருமை பேசினவே தவிர, வாங்கின வீட்டுக்கு மாடி இல்லையே, நிலம் ஆற்றுக்கால் பாய்ச்சலில் இல்லையே, செயின் எட்டுச் சவரன் தானே,
பசு வயதானதாயிற்றே என்ற கவலையுடனேயே இருந் தன் . நாகவல்லி பழனி குடும்பத்துக்கு அத்தகைய பெருமையும் கவலையும் கிடையாது.
“நாகு ! தெரியுமா விசேஷம்?”
“என்ன ? எந்தக் கோட்டையைப் பிடித்து விட்டீர்கள்?”
” இடித்து விட்டேன், கண்ணே !” “எதை ?”
“மருங்கூர் மிராசுதாரின் மனக் கோட்டையை. அவர் தன்னுடைய கராமத்திலே எவனாவது சீர்திருத்தம், சுயமரியாதை என்று பேசினால் மண்டையைப் பிளந்து விடுவேன் என்று ஜம்பமடித்துக் கொண்டிருந்தாரல்லவா? நேற்று, அந்த மனக்கோட்டையை இடித்துத் தூள் தூளாக்கி விட்டேன். பெரிய கூட்டம்! பிரமித்துப் போய்விட்டார்.”
“டேஷ்! சரியான வெற்றி. எப்படி முடிந்தது?”
“ஒரு சின்னத் தந்திரம் ! மிராசுதார் மருமகன் இருக்கிறானே அவனுக்கும் மிராசுதாரருக்கும் மனஸ் தாபமாம். யுக்தி செய்தேன். அந்த மருமகனைத் தலைவராகப் போட்டுக் கூட்டத்தை நடத்தினேன். மிராசுதாரர் ‘கப்சிப்’ பெட்டிப் பாம்பாகிவிட்டார்.”
“அவன் நமது இயக்கத்தை ஆதரிக்கிறானா?”
இயக்கமாவது, அவன் ஆதரிப்பதாவது ! அவ னுக்கு என்ன தெரியும் ஒப்புக்கு உட்கார வைத்தேன்?
” என்னதான் பேசினான்?”
“அவனா? நாகா, நீ வரவில்லையே ! வந்திருந்தால் வயிறு வெடிக்கச் சிரித்துவிட்டிருப்பாய் அவன் பேச்சைக் கேட்டு.”
“ரொம்ப காமிக் பேர்வழியோ?”
“காமிக்குமில்லை, கத்தரிக்காயுமில்லை; அவன் உலகமறியாதவன். ஆரம்பமே, எப்படித் தெரியுமோ? ஏலே! யார்டா அவன் காத்தானா, உட்காரு கீழே இப்ப, பிரசங்கம் நடக்கப்போவுது, கப்சிப்ன்னு சத்தம் செய்யாமே கேட்க வேணும். எவனாவது எதாச்சும் சேஷ்டை செய்தா தோலை உரிச்சுப்போடுவேன். ஆமாம்!’ இதுதான், நாகு! அவன் பிரசங்கம்.”
“அட இழவே! இந்தமாதிரி ஆட்களைச் சேர்த்தால் இயக்கம் கெட்டுத்தானே போகும்.”
“சேர்க்கறதாவது ! நடக்கறதாவது ! கூட்டம் நடத்த வேறு வழி கிடைக்காமே இருந்தது, அதற்காக அந்த ஆளை இழுத்துப்போட்டேன். கூட்டம் முடிந்ததும், பத்துப் பேருக்கு மேலே, மிகத் தீவிரமாகி விட்டார்கள். இனி, யார் தயவும் வேண்டாம் : நாமே கூட்டம் போடலாம் என்று சொன்னார்கள்.”
இப்படிப்பட்ட பேச்சுத்தான், பழனி – நாகவல்லிக்கு! வேறு என்ன பேசமுடியும், புதிய பங்களாவைப் பற்றியா, பவள மாலையைப் பற்றியா?
“எங்கே நாகு ! செயின்?” “பள்ளிக்கூடத்தில்!”
“என்ன விளையாட்டு இது? கழுத்தே அழகு குன்றிவிட்டது அந்தச் செயின் இல்லாமல், எங்கே செயின்?”
“சேட் லீலாராமிடம் 25-க்கு அடகு வைத்திருக் கிறேன்.”
“ஏன்? “
“சும்மா, தமாஷக்கு! அந்த மிராசுதாரனின் மருமகனைச் சொல்லிவிட்டீர், உலகமறியாதவன் என்று. இன்னும் மூன்று மாதத்திலே தகப்பனாராகப்போகிற விஷயம் கூட உங்களுக்குத் தெரியவில்லை. இருபத்து ஐந்து ரூபாய் வாங்கித்தான், இரண்டு மாத டாக்டர் பில் கொடுத்தேன், மிச்சமிருந்த பத்து ரூபாய்க்கு, பெர்னாட்ஷா வாங்கினேன்.”
பழனியின் குடும்பக் கணக்கு இவ்விதம் இருந்தது. அதே கோத்தில், குழந்தை வேலச் செட்டியார் தம் குமாஸ்தாவிடம் சொல்லிக்கொண்டிருப்பார், கணக்கு :
வட்டி வரவு: ரூ அ . ப .
வடிவேல் பிள்ளை மூலம். 65000
வாடகை வரவு : வில்வசாமி மூலம். 40000
நெல் விற்ற வகையில் வரவு. 260000
நேத்திரானந்தர் மடத்துக் கைங்கரியச் செலவு 600 00
பிக்ஷாண்டார் கோயில் வாகன கைங்கரியச் செலவு 126000
பிடில் சுந்தரேச ஐயர் மகள் கலியாணச் செலவுக்காக 30200
வாணக் கடைக்கு 4600
பூப்பல்லக்கு ஜோடிக்க 26000
என்று இவ்விதம். செட்டியார் வீட்டிலே, சூடிக் கொள்ள ஆளில்லாததால் மூலையில் குவிந்தன மலர் மாலைகள். பழனியின் மடியில் மலர்ந்த தாமரை போன்ற முகம், அதிலே ரோஜா போன்ற கன்னம், முத்துப் பற்கள், அவைகளைப் பாதுகாக்கும் பவள இதழ், பவுன் நிற மேனி,………….. ஏழ்மை . ஆனால், கொள்கையின் படி வாழ்வு அமைந்ததால் இன்பம் அங்கே. செல்வம், ஆனால் மனம் பாலைவனம், செட்டியார் வீட்டில்.



