

குசேலர் சரிதம்
சி. கணேசையர்
குசேலர் சரிதம் என்னும் இந்நூற்கு முதனூல் தமிழிலே, வல்லூர்த் தேவராச பிள்ளையால் இயற்றப் பட்ட குசேலோபாக்கியானம் என்னும் நூலாகும். அஃது செய்யுள் நடையில் இயற்றப்பட்டதாதலின் கற்றோ ரன்றி மற்றோரால் எளிதிலுணர்ந்து பயன்பெற முடியாததாகும். அதனால் அதனை, ஓர் உரை நடை நூலாக எழுதின் யாவர்க்கும் பயன்படுமென்று கருதி, அவ்வாறே இதனை எழுதினாம். எழுதியபின், இதனை ஈழகேசரிப் பத்திராதிபர் நா. பொன்னையா அவர்கட்கும் காண்பித்தாம். அவர்கள் இதனைப் படித்துப் பார்த்து மிகமகிழ்ந்து தாமே இதனைப் பதித்து உலகிற்குப் பயன்படுத்துவதாகக் கூறித் தம்பால் அளிக்கு மாறு வேண்டினார்கள். அவ்வாறே யாமும் அளித்தனம்.
இச் சரித்திரத்தால், பிரமச்சரியம், இல்லறம், துறவு, கடவுண் மாட்டமைந்துள்ள திடபக்தி முதலியவாகக் குசேல முனிவர் பாலமைந்துகிடந்த நற்குண நற்செயல்களையும், கணவற்பேணும் கற்பொழுக்கம், கொடிய வறுமையையும் தாங்கும் மனவுறுதி, பொறுமை முதலியவாக அவர் மனைவி சுசீலா பாலமைந்து கிடந்த நற்குண நற்செய்கைகளையும் நாம் நன்குணர்ந்து கொள்ளலாம்.
மேலும், இதனைத் தாமே பதித்துதவிய ‘ஈழ கேசரி’ப் பத்திராதிபாவர்களுடைய நன்றி, எம்மாலன்றித் தமிழுலகத்தானும் மறக்கற்பால தன்று.
இஃது என்றும் நின்று நிலவு மாறு எல்லாம் வல்ல இறைவனடிகளைச் சிந்தித்துத் துதித்து வணங்குதும்.
சி. கணேசையர்



