
குசேலர் சரிதம்
சி. கணேசையர்
அணிந்துரை
இவ்வுரை நூலை இயற்றிய பண்டிதர் பிரமஸ்ரீ கணேசையர் அவர்கள் இக்காலத்திற் தமிழ்ப்புலமையிற் சிறந்து விளங்கும் வித்துவான்கள் வரிசையில் வைத்தெண்ணுதற் குரியவர்கள், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாகிய செந்தமிழ்ப் பத்திரிகை யில் தமிழ் இலக்கண இலக்கியப் பொருள் பற்றி இவர்கள் அவ்வப்போது எழுதியுள்ள கட்டுரைகள் இவர்களது நுண்மாண் நுழைபுலத்தை விளக்கிப் பெரும் புகழை நாட்டுவன. இவர்களது கட்டுரைகள் தெள்ளிய தமிழுரை நடைக்கு எடுத்துக்காட்டாவன. இலகுவானதும், பொருட்செறி வுடையதும், வனப்புடையதுமான உரைநடை எழுதுவதில் இவ்வாசிரியர்க்குள்ள ஆற்றல், பள்ளிக்கூட மாணவர்களுக்காக எழுதப்பட்ட இந்நூலினின்றும் நன்கு புலப் படும். சிறிய வாக்கியங்களால் ஆகிய மிகவினிய ஓசைநயம் அமைந் தொழுகுகின்றது. கருணை ரசம் பொருந்திய குசேலோபாக்கியானம் என்ற சரிதத்தை ஆசிரியர் ஈண்டு தந்துள்ளார்கள். இச் சரிதத்தில் ஓர் அந்தண இருடியின் வறுமையும், அவரது பத்தினியின் கற்புறுதியும், கண்ணபிரான் பழைய நண்பர்கள் பாற் கொண்ட கனிந்த அன்பும் காட்டப்படுவன. படிப்பவரது மன முருக இச் சரிதத்தை இவ்வாசிரியர் கூறியுள்ளார்கள் ; அநேக விழுமிய உண்மைகளையும், சற்போதனைகளையும் சாதுரியமாகச் சரிதத் திடையிற் சேர்த்துள்ளார்கள். இந் நூலைத் தமிழகத்துச் சிறுவர்களும், சிறுமிகளும் படித்தல் வேண்டும், அவர்கள் இதனைப் படித் தற்கும் நனி விரும்புவார்கள்.
சு. நடேசபிள்ளை



