குசேலர் சரிதம்
சி. கணேசையர்

1. பிறப்பும் ஒழுக்கமும்

மாமகளும் நாமகளும் மகிழ்ந்து வீற்றிருக்கும் வட மதுரையின் பாங்கர் அவந்தி என்றோர் அணிநகர் உளது. அந்நகரின் கண் நெடுமால் போல நீண்டதாகிய ஒரு மலை நிற்கின்றது அம் மலைமேல் அருந்தவமுனிவர் சேரி ஒன் றிருந்தது. அச் சேரியகத்தே, சரியைவழி ஒழுகுவோர் ஒருபாலிருப்பர். கிரியைவழி ஒழுகுவோர் ஒருபாலிருப்பர். யோகஞ் செய்வோர் ஒருபாலிருப்பர். நிட்டைகூடும் ஞானிகள் ஒருபாலிருப்பர். ஞான நூல்களை ஓதுவோர் ஒருபாலிருப்பர். தத்துவ விசாரஞ் செய்வோர் ஒருபா லிருப்பர். அன்றியும், அங்கே அந்தணரோதும் வேத ஒலி ஒருபால் முழங்கும் யாகஞ் செய்வோர் ஒலி ஒருபால் முழங்கும். அவியேற்க வரும் தேவர்கள் ஒலி ஒருபான் முழங்கும். அத் தேவர்கள் அவியேற்று ஆசிகூறும் ஒலி ஒருபான் முழங்கும்.

இத்தகைமை பொருந்திய அச் சேரியினிடத்தே சுதாமா என்றொரு முனிவர் இருந்தார். அவர் அந்தணர் குலத்து உதித்தவர். திருமால் அடிகளைத் தினமும் தியா னிப்பவர். அடக்கம், பொறை, வாய்மை, அன்பு முதலிய குணங்களிற் சிறந்தவர். ஐம்பொறிகளையும் அடக்கியவர்.

வேத முதலிய கலைகளை யெல்லாம் கண்ணபிரானோடு கூடச் சாந்தீபமுனிவர்பால் ஐயந்திரிபறக் கற்றவர். புலரிக் காலத்திலே நித்திரை வீட்டெழுந்து, அவசிய கருமம் முடித்து ஸ்நானஞ் செய்து, சந்தியாவந்தனம் முதலிய நியமங்களைத் தவறாது செய்பவர். உச்சிக்கடன், மாலைக் கடன் முதலியவைகளையும் தவறாது செய்பவர். கிழிந்த துணிகளை இயைத்துத் தைத்த சீரையை உடுப்பவர். அதனை உடுப்பதனாற் குசேலர் என்னும் பெயரையும் பெற்றுக் கொண்டவர். பிரமசரிய ஒழுக்க முடையவர். அவர் தமது பிரமசரிய ஒழுக்கத்திற்கேற்பச் சாந்திராயண முதலிய விரதங்களை அநுட்டித்து வந்தனர். அதனால் தசைவற்றி என் பும் நரம்புந் தோன்றிய உடலினராய் விளங்கினர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *