குசேலர் சரிதம்
சி. கணேசையர்

15. கண்ணன் அவலுண்டல்

அப்பொழுது, குசேலரும் பால் உண்பவனுக்குப் புளிங்காடி கொடுத்தது போலும், இவ் வவலை யான் கண்ணனுக்குக் கொடுப்பதென்று ஒன்றும் பேசாதிருந் தனர். அவர் உள்ளக்கருத்தை அறிந்த கண்ணன்,

திருந்தவிங் களித்தி யென்று
செங்கர
மலர்த்தி நீட்டப்
பொருந்தவின் பாலுண் பான்பாற்
புளித்தகா
டியைக்கொடுத்திட்
டருந்திடென் றுரைத்தல் போலிவ்
வவற்கொடை
யென்று வாளா
விருந்தனன் குசேல மேலோ
னிவனுள
மறிந்த கண்ணன்.

அவர் போர்த்திருந்த கந்தையைச் சுருக்கி எடுத்துத் தன் பக்கத்தில் வைத்து நன்கு ஆராய்ந்து பார்த்து, அவர் மனைவி முடிந்துவைத்த சிறு முடிச்சைக் கண்டு கொண் டான். பின் அதனை அன்போடு அவிழ்த்து அதிலிருந்த அவலை நோக்கி, இதுவே எனக்கு மிகவும் பிரியமான தென்று, அதனுள் ஒருபிடி அள்ளி வாயிற்போட்டு மென்று மென்று கொண்டு சொல்லுகின்றான். இது அமிழ்தினுஞ் சுவையுடையது. இல்லில் அமைந்தது. பழையதுமன்று. முனை முரிந்ததுவு மன்று. விலைக்கு வாங்குவது இவ்வளவு சுவையுடையதும் நல்லதுமாயிராது. எனக்கு அவலில் அதிகம் விருப்பம் உண்டு என்று எப்படி அறிந்தாய்? என்று கூறி அதனைத்தின்று, அதன் சுவை நோக்கிப் பின்னும் ஒருபிடி அவலை உண்ணும்படி எடுத்தான். அப்பொழுது அவனுடைய தேவி உருக்குமணி ஓடிவந்து அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு, இனி உண்ண விடேன் என்றாள். [கையைப் பிடித்து ஏன் தடுத்தாள் என்றால், கண்ணன் முதற்பிடியை உண்ணும்பொழுது முனிவனுக்குப் பெருஞ் செல்வம் உண்டாகுக என்று தின்றான். இன்னும் ஒருபிடி தின்றால் அவனுக்கு அடிமையாய் விடுவான் என்று உள்ளத்திற் கருதியே.] அப்பொழுது கண்ணன் அவ்வவலை மீளவும் கந்தையில் முடிந்து வைத்து விட்டு, முனிவரைத் துதித்துப் பல உபசார வார்த்தைகளையுங் கூறி, அன்றிரவு முனிவருக்குப் படுக்கை யுதவித் துயிலவிடுத்துத் தானுந் துயிலப் போயினன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *