
குசேலர் சரிதம்
சி. கணேசையர்
18. முனிவன் கண்ணன்பால் மீளவும் வறுமை வேண்டலும் வைகுந்தம் பெறலும்
பொருளை ஈட்டுவோர்க்கு இம்மையிலும் பல வகைத் துன்பங்கள் உண்டாம். பாவத்தால் மறுமையில் நரகத் துன்பம் உண்டாம். சீச்சீ! இப்பொருளை மறந்தும் அறிஞர் விரும்புவாரா? ஊழான் பெருஞ்செல்வம் வரினும், நரை வருமென்று கருதிக் காலம்பெறத் துறப்பர் அறிவுடையோர். துன்பத்தைத் தரும் பிறவித் தொடர்ச்சியை நீக்க விரும்பிய அறிஞர்கள் தம் உடம்பையும் மிகையென்று கருதுவார்களேயானால், அவர்களுக்கு, மற்றும் பொருண்மேலுள்ள நினைவைச் சொல்லுவ தென்னை! யான் என்னும் அகப்பற்றையும், எனது என்னும் புறப்பற்றையும் துறந்தவனே தேவரும் அடைதற்கரிய வீட்டின்பத்தை அடைவானென்று வேதங்கள் சொல்லும். உலகப்பொருளை விரும்பாமை என்கின்ற பெருஞ் செல்லத்திலும் பார்க்க எமக்கு இம்மையிற் பெறுஞ் செல்வம் வேறுண்டா? துறவி என்று சொல்லப்படுபவன் ஆசையை மறந்தவனே. அல்லாதான் துறவியாவானா? அவன் பிறவியைத் துறப்பானா? ஒரு போதுந் துறக்கமாட்டான். அவன் வீட்டின்பத்தையும் பெறமாட்டான். ஆதலால், ஆசையினுங் கொடியது பிறிதில்லை. கடவுளை வணங்கிப் பேரின்பத்தைப் பெறுதற்குரிய மானுட தேகத்தைப் பெற்றும், நிலையில்லாத சிற்றின்பத்தைக் கருதிப் பொருளீட்ட விரும்புதல் கானற் சலத்தை விரும்புதல் போலும் இச் செல்வமயக்கத்தால் தெய்வ சிந்தனை ஒழியும். அஃது ஒழிய அறம் நீங்கும். அது நீங்கப் பாவம் வளரும். அது வளரப் பிறவித் துன்பம் உண்டாம். இத்துன்பத்தை அனுபவிக்க யாரால் முடியும். இதனை நினைக்கவும் மனம் அஞ்சுகின்றது. ஆதலால் இச்செல்வம் நீங்கும்படி எம்பெருமானைத் தியா னிப்பேன் என்று தன் மனதிற் சிந்தித்தார். சிந்தித்துக் கண்ணீ ரரும்ப இரு கைகளையும் சிரசிற் குவித்து, மனம் நெக்குருக, கண்ண ன் திருவடிகளை மனதில் நன்கு அமுத்தித் தியானித்துப் பலவகையாகப் புகழ்ந்து தோத் திரஞ் செய்வாராயினர்.
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
1. எழுதரு மறையைக் கவர்ந்தன னாகி
யெறி திரைக் கடல்புகுந் தொளித்த
முழுவலிச் சோம காசுர னுயிரை
முனைகெழு மீன மாய்ச் சவட்டிப்
பழுதிலம் மறையை யுவகிடை விரித்துப்
பளகறுத் துயிரெலாம் புரந்தாய்
கொழுதிவண் டுழக்கு நறுந்து ழாய்ப் படலைக்
கொற்றவ நின்னடி போற்றி.
2. எறிசெறி தரங்கப் பாற்கட னடுவ
ணெறுழ்வரை மத்தெனக் கூட்டித்
தறியென மதியை நாட்டிவெண் பிறைப்பற்
மழல்விழி யரவநாண் பூட்டி
மறிதொழின் மறியச் சுரர்கடை காலம்
மந்தரங் கடலமுந் தாது
முறிவின் மோட் டாமை யுருக்கொடு பரித்த
முன்னவ நின்னடி போற்றி.
3. மலர் தலைப் புவியைப் பாயலாச் சுருட்டி
மயங்குபா தலத்திடைக் கரந்த
விலகுபொற் கண்ண னுயிர்குடிப் பதற்கு
மிமைப்பினப் புவிவிரிப் பதற்கு
நிலவுவெண் பிறைக்கோட் டடல்வலிக் கேழ
னிமிருருக் கொண்டவெம் பெரும
அலர்மகள் குடிகொண் டுறைமறு மார்பத்
தச்சுத நின்னடி போற்றி.
4. மலைத்தட நிறத்து முன்னவ னுயிரை
மாட்டிய பழிகொளக் கருதி
யலைத்தட றொலைத்துச் சுரர்முதல் யார்க்கு
மச்சுறுத் திட்டது. மன்றிப்
புலைத்தொழி லுணர்வாற் றன் பெயர் வழுத்திப்
போற்றவும் புரிந்தபொல் லானைக்
கொலைத்தொழில் புரியத் தூண்கிழித் தெழுந்த
கோளரி நின்னடி போற்றி.
5. பெருகிய தவத்துக் காசிப ன திதி
பிறங்குறு தந்தைதா யாகத் திருகறத்
தோன்றி மமதையிற் படிந்த
திறல்கெழு மாவலி பாற்சென்
றுருகிய மனத்தின் மூவடி மண்கொண்
டோரடிக் கிடம்பெறா மையினான்
மருவவன் சிரத்தில் வைத்துயிர் புரந்த
வாமன நின்னடி போற்றி,
6. மாணுடைச் சமதக் கினியிரே ணுகைக்கு
மகனெனத் தோன் றிமா மறையோர்ப்
பேணுடைத் துலக நடைநெறி யிகந்து
பெயர்ப்பருஞ் செருக்கினின் மூழ்குங்
கோணுடைக் குரிசிற் குலமறச் சவட்டிக்
குலவுமம் மறையவர்ப் புரந்த
ஏணுடைப் பரசு ராமவைம் படைக்கை
யிறையவ நின்னடி போற்றி.
7. இலங்கையுட் புகுந்து தசமுக னவனுக்
கிளவல்விண் ணிறையவன் பகைமுற்
பொலங்கழல் மைந்தர் மற்றையோ ரையும்வெம்
போர்க்களத் தவித்துவீ டணற்கு
நலங்கெழு முரிமை யரசளித் துலகி
னாட்டுகற் பரசியை மீட்டு
நிலம்புக ழயோத்தி யடைந்தர சளித்த
விராகவ நின்னடி போற்றி.
8. மல்லலம் புவனம் புகழ்வசு தேவன்
மயிலியற் றேவகி பிறருக் கொல்லரும்
வனப்பி னுரோகணி யிவர்கட்
கொருமக வாவவ தரித்துக் கொல்லுமா
குறித்த பிரலம்பன் முதலோர்க்
கூற்றுணக் கொடுத்துயிர் புரக்குஞ்
சொல்லருஞ் சீர்த்திப் பளிக்குரு வமைந்த
தூயவ நின்னடி போற்றி.
9. விறன்மிகு விசயன் வாவுமான் றடந்தேர்ப்
பாகனாய் நடத்திவீ டுமன் முற்
றிறன்மிகு வேந்த ரைவரான் மடியச்
செய்து பூ பாரமுங் கழிப்பி யறன் மகற்
கரசு நல்கியென் கந்தை
யகம்பொதி யவலுந்தின் றளித்த
நிறன்மிகு கமலக் கண்ணுடைக் கண்ண
நின்மல நின்னடி போற்றி.
10. இமையவர் துதிக்கப் படியிடைப் பரியா
யினிவரு மெம்பிரான் போற்றி
யமைதரு மறையுங் காணொணாப் பொருளா
யகிலமு மாயவ போற்றி
யிமையள வினிற்கை வரைமுறை யிடச்சென்
றினிதருள் சுரந்தவ போற்றி
கமைதரு மன்ப ரெண்ணியாங் களிக்குங்
கமலைநா யகவடி போற்றி.
என்று மனமுருகிக் குசேலர் தோத்திரஞ் செய்தபோது, நெக்குநெக்கு நினைப்பவருடைய மனத்தினுள்ளே புக்கு நிற்குங் கண்ணன் தோன்றாது நிற்பானா? உடனே தோன்றினான்.
வயங்கெழுதுந் துபியைந்துங் காருநெடுங்
கடலுமென வாய்விட் டார்ப்ப
நயங்கெழுபூ மழையமரர் பொழி தரவிண்
ணர மகளிர் நடியா நிற்க மயங்கெழுநல்
லறந்தழைப்ப வுலகுகுது
கலிப்பவெளி வந்து நின்றான் பயங்கெழுமா
மறைப்பொருளா யம்மறைக்கு
மெட்டாத படிவத் தண்ணல்.
தோன்றிய கண்ணனைக் கண்டவுடனே, முனிவர், மகிழ்ந்து எழுந்து, கரையை உடைத்தெழுந்த வெள்ளம் போலவும், தாயைக்கண்ட கன்றுபோலவும், மனமும் பிந்தும்படி ஓடிச்சென்று, அக்கண்ணன் பாதங்களை அன்போடு வணங்கினார். வணங்கி எழுந்து கண்ணீர் சொரிய, ஆனந்தக் கூத்தாடினார். பூசனை செய்தார். எம்பெரு மான் எனியேன் இல்லிற் கெழுந்தருளியது, கங்கையானது முடவன் இருக்குமிடத்திற்கு வந்ததை ஒத்தது என்று முகமன் கூறினார். பின் வாய்புதைத்து நின்று சொல்வாராயினர். எம்பெருமானே! எனக்குத் தந்த இச் செல்வம் துக்கத்தைத் தருவதன்றி, இன்பத்தைச் சிறிதுந் தரமாட்டாது. திரிகரணங்களையும் உனக்கே செலுத்தி,வழிபட்டு மகிழும் நான், கனவு போன்ற இச்செல்வத்தைத் தாழ்ந்து களிக்கிற் கொண்ட விரதத்தை அழித்தவனாவேன். நல்ல நீரில் முழுகுவோன் சேற்றிற் குளிப்பது போலும், உன்னருளிற் குளிக்கும் யான் இச் செல்வத் திற்குளிப்பது. ஆதலால் நிலையில்லாத இச் செல்வத்தை விரும்பேன். முன்னுள்ள வறுமையே எனக்கு வேண்டும். அடியார்க்கருளும் பெருமானே! என் உள்ளக் கருத்தை நிரப்புக என்றார். அவ்வார்த்தையைக் கேட்டுக் கண்ண பிரான் புன்சிரிப்புக்கொண்டு, முன் செல்வத்தை விரும்பி என்பால்வந்த நீ இப்போது வறுமையைத் தருதி என்று கேட்கலாமா? என்றார். அதற்கு முனிவர் தேவரீருடைய தியானத்தை மறந்து, இச் செல்வத்தைப் போற்றி, பிரபஞ்ச வாழ்விற் காலங்கழித்தல் நன்றாகுமா? ஆதலால் இதனை நீக்கியருளுக என்றேன் என்று கூறிப் பின்னும் இச் செல்வத்தை நீக்கியருளுக என்று வேண்டி வணங்கினார்.
எம்பிரான் கருணை செய்க வென்றிரந் தடியில் வீழ்ந்தான் வெம்புறேல் கவலை யெல்லாம் விடுதியென் றுடலந் தைவந் தும்பரார்க் கரிய வின்ப முறுவையென் றுரைக்க லுற்றான்
தும்பிகா லுழக்க மட்டுத் துளித்திடுந் துளபத் தாரான்.
அப்பொழுது கண்ணபிரான் கருணை பூத்து, முனிவ னைத் தழுவிச் சொல்லுகின்றார். முனிவனே! கவலையுறல் வேண்டாம் யான் உனக்குச் செல்வந் தந்தது, உன்னைச் சேர்ந்தவர்களின் பொருட்டே. உன் உள்ளம் போல அவர் கள் மனமுந் துறவுடையதா? இன்றே . ஆதலால் “முனி வனே! அதனை நினைத்து நீ வருந்தல் வேண்டாம். உன்னை அச் செல்வம் என்ன செய்யும்! மாந்திரிகனைப் பாம்பின் விடம் என்ன செய்யும்? ஞாயிற்றை இருள் என்ன செய்யும்? மெய்ஞ்ஞானிகள் இப் பிரபஞ்ச வாழ்க்கைக்குரிய தொழிலைச் செய்தாலும் தாமரையிலையில் நீர் போலப் பற்றற்று நிற்பர். ஆதலால் உன்னை இப் பிரபஞ்சம் பற்றமாட்டாது. நீ பலநாள் இவ்வுலகில் எம்மைத் தியானித்து வாழ்ந்திருந்து முடிவில் என்னுலகை அடைந் தின்புற வரந்தந்தோம்” என்று, அவர் மறாதபடி பல வார்த்தைகளையும் கூறி, அருள் செய்து, கண்ணபிரான் மறைந்தனர். அப்பொழுது குசேலர் எம்பெருமான் திருவருள் இப்படியோ என்று, கண்ணபிரானை அஞ்சலித்த கையினராய் மகிழ்ந்திருந்தார். இப்படி முனிவர் கண்ண பிரான் அருள்பெற்று, அவன் அடியையே இடைவிடாது தியானித்துக்கொண்டு, வாழ்ந்திருந்து, பின், ஒரு நாள் வைகுந்த உலகையடைந்து கண்ணன் சேவை செய்து கொண்டு பேரின்பமுற் றிருந்தனர்.
ஒப்பிலா முனிவன் பின்ன ரொரு தினம் வான நாடர்
வெப்பிலாக் கற்ப கப்பூ விரைகெழு மாரி பெய்ய
வைப்பின் மெய் யடியார்க் காய வைகுந்த வுலகஞ் சார்ந்து
திப்பிய வுருவ மாயன் சேவைசெய் தின்புற் றானே.
முற்றிற்று.
★ ★ ★



