குசேலர் சரிதம்
சி. கணேசையர்

13. துவாரபாலகர் கண்ணபிரானுக்கு முனிவர் வரவுரைத்தல்

சென்ற அக் காவலர்கள், வாயில்கள் யாவற்றையுங் கடந்து அரசிருக்கை மண்டபத்தை அடைந்து கண்ண பிரானை அங்கே காணாதவர்களாய் அங்கு நின்ற சிலரை வினாவினார்கள். அவர்கள் கண்ணபிரான் அந்தப்புரம் புக்கனன் என்று கூற; அதனைக்கேட்டு அங்கே ஓடிச் சென்று, மகளிர் காக்கும் அதன் வாயிலை அடைந்தார்கள். அடைந்து தம் வரவைக் கண்ணபிரானுக்கு அறிவிக்கும் படி அம் மகளிரை வேண்டினார்கள். அவர்களும் கண்ண பிரானுக்கு அறிவித்து அவன் உத்தரவைக் காவலருக்கு அறிவித்தனர். காவலரும் உட்சென்று, கண்ணன் கழலடி பணிந்து, எழுந்து, வாய்புதைத்து, நின்றார்கள். நின்ற வர்களைக் கண்ணபிரான் நோக்கி, வந்த காரியம் யாது என்று வினாவினர். அவர்கள் மன்னர் மன்னனே! துவாரகை நாதனே! போற்றி போற்றி என்று புகல்வா ராயினர்.

மாமறைத் தலைவ போற்றி மதிக்குல விளக்கே போற்றி
காமரிந் திரன் முன் னானோர் காண்பதற் கரியாய் போற்றி
தாமரைக் கண்ணாய் போற்றி தரியல ரேறே போற்றி
தோமறு செல்வம் வாய்ந்த துவாரகைக் கிறைவா போற்றி.

முன்னாளில் உன்னுடன் பல்கலையும் பயின்றவனாம். அந்நாளில் பிரியாநண்பு பூண்டவனாம். தன் பெயர் குசேலனாம். அவன் தூய குணன். என்பு தோன்றிய யாக்கையன். கந்தையுடையன். நின்மேல் வைத்த அன்பே வடிவானவன். இப்பொழுது வாயிலின் புறத்தன். இதுவே விண்ணப்பம் என்றார்கள். அவ் வார்த்தையைக் கேட்ட போழ்தே கண்ணனுக்கு, மனம் மகிழ்ந்தது. முகமும் மலர்ந்தது. உள்ளங் கருணை பூத்தது. விரைவில் அருந்தவனை இங்கே அழைத்து வாருங்கள் என்றான். அப்பொழுது துவாரபாலகர்கள் மகிழ்ந்த மனத்தர்களாய் ஓட்டமாக ஓடிச் சென்று பல வாயில்களையும் கடந்து தம் வாயிலை அடைந்து அங்கு நின்ற முனிவரை வணங்கிப் பல துதிகள் கூறி அவரை நோக்கிக் கூறுவாராயினர். மாதவரேறே! அந்தப்புரத்திலிருந்த கண்ணனை அணுகி உம்முடைய வரவை நாங்கள் சொன்னபொழுது, கண்ணன் கொண்ட  களிபேருவகைக்கு ஓரளவுண்டோ ? அங்கே அனுபவித்திருந்த எல்லா இன்பமும் மறைந்தன. நல்லார் நட்பிலுஞ் சிறந்ததுண்டோ ? நின் வரவைக் கேட்ட மாத்திரத்தே அன்பு மிக்கவனாய் அழைத்து வம்மின்! அழைத்து வம்மின்!! என்றான். ஆதலால் தாமதியாது விரைந்து வருக என்றார்கள். அதனைக் கேட்ட குசேலர் விரைந்து எழுந்து சென்று வாயில்கள் எல்லாவற்றை யுங் கடந்து, அந்தப்புர வாயிலை அடைந்தார். அப்பொழுது கண்ணனும், மங்குலின் வரவுபார்க்கும் மஞ்ஞை போல முனிவன் வரவையே நோக்கி இருந்தான். வாயிலை அடைந்த குசேலரும் உட்புகுந்து தன் வருகையையே நோக்கியிருந்த கண்ணனைக் கண்ணிற் கண்டார்.

எண்ணனைக் கிலங்கு மார்ப மீத்தருள் பிரானை நீல
வண்ணனைத் திகிரி சங்கம் வலமிட முறக்கொண் டானை மண்ணனைத் தும்பு ரக்கும் வாசுதே வனைம ணக்குங்
கண்ணனைத் துளவத்தாமக் கண்ணனைக்கண்ணிற்கண்டான்.

காண்டலுங் கடுகி நடந்தார். முனிவர் வரவைக் கண்ட முகுந்தனும் படுக்கையை விட்டெழுந்து ஓடிவந்து, அவர் அடிகளைத் தொழுதான். பின் எழுந்து உடம்பிற் புளக முண்டாகக் கட்டித்தழுவினான். நண்பின் முறையைப் பாராட்டினான். தவசிரேட்டனே! நீ வருவதால், யான் செய்த அறங்கள் பலித்தன ; என் மனையும் பாக்கியமுற்றது; இந்நாளும் பாக்கியமுற்றது என்று கூறி, முனிவனைக் கொண்டாடினான்.

அப்பால் கண்ணன், அங்குள்ள மாடமொன்றிலே குசேலரை அழைத்துச் சென்று அரதன பீடத்தில் அமரச் செய்தான். பொற்குடத்திற் பூரித்த புதிய நீர் கொண்டு ஆட்டினான். ஈரம் புலர்த்தினான். பட்டாடை சாத்தினான். சாந்தம் பூசினான். பூமாலை புனைந்தான். பின்பு இன்சுவை உணவுகளை உண்பித்தனன். கையும் வாயும் பூசினன். அடைகாயுதவி அமளியேற்றினான். அருகிருந்து முதுகு தைவந்தான். கவரி யிரட்டினான். இம் மலரடி கள் வழிநடந் திளைத்தனவா? என்று அம் மலரடிகளை வருடினான். இங்ஙனம் பல உபசாரங்களைக் கண்ணன் செய்யவும், அவற்றைச் சற்றேனும் விரும்பாது குசேலர் அக் கண்ணன் கழலடியையே கருதிக் கொண்டு, மௌனமாய் அசைவற்றிருந்தார்.

நீருறு மூப்புப் போலு நெருப்புறு பளிதம் போலும்
ஏருறு வடிவத் தண்ண லிடத்துத்தன் மனங்க லப்பப்
பேருறு பவஞ்ச வாழ்க்கைப் பிணிப்பொழிந் தகலக் கஞ்சத்
தாருறு மார்பத் தையன் றன்னையு மறந்திருந்தான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *