குசேலர் சரிதம்
சி. கணேசையர்

6. முயற்சி

கலைஞானங்கள் முழுவதையும் அறிந்த பண்டித சிரேஷ்டரே! தகைமையுற்று விளங்கும் எமது அருமை நாயகரே! நீர் சொல்லியது முழுவதும் உண்மையேயாயி னும், முயற்சியின்றிக் காரியங்கள் எப்படிக் கைகூடும்? கடவுள் இவ்வுடம்பைக் கன்மங்களை அனுபவிக்கும்படி எமக்குத் தந்திருக்கிறார் என்று நீரே முன்னர் கூறியுள்ளீர். அங்ஙனமாயின் முயற்சியின்றிக் கன்மங்களை எப்படி நாங்கள் அனுபவிக்கலாம்? ஆதலால் முயற்சியும் வேண்டும். முயற்சி செய்தாற்றான் பொருள் வரும். ஊழின்படி அமையுமெனின், அவ்வூழும் நாம் செய்த முயற்சிதானே. ஆகையால் இம்மையிலும் நாம் முயற்சி செய்தல் வேண்டும். அம் முயற்சிக்குத் தக்க பலனைத் தெய்வம் அளிக்கும். எறும்புகளுந் தம் உணவின் பொருட்டு நாடோறும் முயற்சி செய்கின்றன. விலங்கு களும் முயற்சி செய்கின்றன. பறவைகளும் முயற்சி செய்கின்றன. அவைபோல் நாமும் முயற்சி செய்தாற்றான் உணவைப் பெறலாம். “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பது பழமொழி. திருமால் எல்லாவற்றையும் தந்தளிப்பான் என்றீர். முயற்சி செய்யாதவருக்கு அவன் எங்ஙனம் கொடுப்பான். அரிசி உளதா யினும், சமைத்தலாகிய தொழிலின்றி அது எங்ஙனம் அன்னமாம். பாத்திரத்திற் படைத்த அன்னத்தையுங் கையால் எடுத்துண்ணாமல் எப்படிப் பசியை நீக்கலாம். முன்னாளிலே முதலையாற் பிடிக்கப்பட்ட யானையும், இரணியனால் வருந்திய பிரகலாதனனுந் திருமாலை அழைத்தலாகிய முயற்சியைத் செய்ததனாலன்றோ, அவன் வந்து அவர்கள் துயரைத் தணித்தான். கடவுளை அடைதற்கு நாம் முயற்சி செய்தல் வேண்டும்.

அக் கண்ணனது பாதங்களை யன்றி வேறு துணை யில்லை என்று அறிந்த நீர் அவனைச் சென்றிரப்பதனால், உமக்கு யாதுந் தாழ்வு வருமோ? கற்புடைய பெண்களுக்குக் கணவனே கடவுள் என்று வேதங்கள் சொல் லும். ஆதலால் எனது நாயகராகிய நீரே எனக்குக் கடவுள். என்னையும் என் மக்களையும் புரத்தல் நுங் கடனேயாம் என்றாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *